in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7

“ப்ளீஸ், கொஞ்சம் அமைதியாக உட்காருங்கள். அம்மாவை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு எப்படி அம்மாவோ அதே போலத் தானே வத்சலாவிற்கும். தன் மகள்… கையில் குழந்தையோடு கஷ்டப்படுவதைப் பார்த்தால் தாயின் மனம் வேதனை அடையாதா? எங்களுக்கெல்லாம் இந்த வீட்டில் இடம் இருக்கும்போது, அவர்கள் பெற்ற பெண்ணிற்கு இடம் இல்லையென்றால் தாயுள்ளம் தாங்குமா? அத்தை தன் மனவேதனையை வெளியே சொல்லவில்லையே தவிர, உள்ளுக்குள் மகளை ஆதரிக்க வேண்டும், பேரக்குழந்தையை சீராட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கமல்லவா. மனதில் அடக்கிய ஆசைகளும், கவலைகளும் கூட அவர்கள் உடல்நல பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம். இயற்கை அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையே போதும், நாம் வேறு தண்டிக்க வேண்டுமா?”  என்று முடித்தாள் சியாமளா.

“தப்பு செய்தவள் அவள்… அவமானத்தைத் தேடித் தந்தாள் அவள், ஆனால் பாடம் எனக்கு” என்றான். ஆனால் அவன் குரலில் கொஞ்சம் கோபம் தணிந்தாற் போல் இருந்தது.

“அது இறந்த காலம், நாம் நிகழ்காலம் பற்றித்தான் யோசிக்க வேண்டும்”

“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?”

“நீங்கள் தனியாய் இருப்பதால் பிளாக்மெயில் செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் எல்லாச் செயல்களிலும் சாகும்வரை துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களால் யாருக்கும் மனதளவில் கூட வருத்தம் நேரக்கூடாதென்று விருப்பப்படுகிறேன்” என்றவள் தலைகுனிந்து கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

சியாமளா சொன்ன வார்த்தைகளில் அவன் உறைந்து சிலையாக நின்றான். “சியாமளா, நீ என்ன சொன்னாய் என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே” என்றான்.

கீழே உட்கார்ந்திருந்தவள், கண்களில் வழிகின்ற கண்ணீரோடு நின்று கொண்டிருந்த அவனை நிமிர்ந்துப் பார்த்து சிரித்தாள். மழை பொழியும் வானத்தில் நிலவைப் பார்த்தாற் போல் இருந்தது.

“இதை விட வெளிப்படையாக என்னால் சொல்ல முடியாது. நெஞ்சையா அனுமார் மாதிரி திறந்து காட்ட முடியும்? சரி, வத்சலா விஷயத்திற்கு என்ன சொல்கிறீர்கள்?”

“நான் அவளோடு பேச மாட்டேன் சியாமளா”

“பேச வேண்டாம், ஆனால் அவர் உங்கள் அக்கா என்பதை மறக்காதீர்கள். நீங்களே அவர்களை மதிக்காவிட்டால் யார் மதிப்பார்கள்? நான் வத்சலாவிடம் பேசி அம்மாவின் உடல் நிலையைக் கூறட்டுமா? வத்சலா வந்தால் அவமரியாதை செய்யக் கூடாது, சரியா?” என்று கேட்டாள்.

“எப்படியோ போங்கள் சியாமளா, அழுது உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டீர்கள்”

“வத்சலா வந்தாலே  உங்கள் அம்மா உடல் வேகமாக பழைய நிலைக்குத் திரும்பும் என்று நினைக்கிறேன். அன்று பீச்சில் வத்சலாவைப் பார்த்ததில் இருந்தே அத்தையின் மனநிலை ஓரளவு எனக்கு தெரியும்” என்றவள், எழுந்து கொள்வதற்காகக் அவனிடம் கையை நீட்டினாள். கையைப் பிடித்துத் தூக்கி விட்டான், ஆனால் பிடித்த கையை விடவில்லை விக்னேஷ்.

“இப்போதே வத்சலாவிடம் பேசட்டுமா?” என சியாமளா கேட்க

“அம்மாவிடம் கேட்க வேண்டாமா?” என்றான் விக்னேஷ்.

“பெற்ற பிள்ளைகள் எத்தனை தவறு செய்தாலும்  தாய் மன்னிக்கத்தான் செய்வாள். இப்போது ஒன்றும் சொல்ல வேண்டாம், வத்சலா வந்த பிறகு அவர்களே பேசி சமாதானம் செய்து கொள்ளட்டும். என்ன சொல்கிறீர்கள்?”

“எதுவுமே என் கையில் இல்லை என்று நினைக்கிறேன் சியாமளா” என்றான் விக்னேஷ் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு. அவனுடைய நடிப்பைப் பார்த்து சியாமளா சிரித்து விட்டாள். வீடு நெருங்கும் போது அவன் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டாள்.

“அக்கா, மாமாவிடம் என்ன பேசினாய் ?” என்றாள் தர்ஷணா.

“போடி முந்திரிக் கொட்டை, பெரியவர்கள் விஷயத்தில் தலையிடாதே” என்றவள் சமையலறைக்கு சென்று விட்டாள்.

வத்சலாவிற்குப் போன் செய்து சிறிது நேரம் நலம் விசாரித்து விட்டு, “அத்தைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போய் விட்டது, மருத்துவமனையில் இருந்து இன்று தான் வீட்டிற்க்கு அழைத்து வந்தோம்” என்றாள் சியாமளா.

“விக்னேஷ் வீட்டில் இல்லாத போது எனக்கு சொல்கிறாயா சியாமளா? நான் வந்து பார்த்து விட்டு உடனே திரும்பி விடுகிறேன்” என்றாள் வத்சலா .

“நீங்கள் உடனே வாருங்கள், ஆனால் அம்மாவிடம் உணர்ச்சி வசப்பட்டு ஏதும் பேசக்கூடாது, அழக்கூடாது. குழந்தையையும் எடுத்துக் கொண்டு வாருங்கள். உங்கள் தம்பி ஏதும் சொல்ல மாட்டார், அப்படியே ஏதாவது சொன்னாலும் கோபிக்காதீர்கள். சரியா?” என்றவள் போனை வைத்து விட்டாள்.

கொஞ்சம் பால் பாயசம் செய்து சிம்பிளான சமையலும் செய்து விட்டாள். ஒரு மணி நேரத்திற்குள் ஒரு ஆட்டோவில் குழந்தையுடன் வந்து இறங்கினாள் வத்சலா. இதற்குள் அத்தையோடும் பேசி சமாதானம் செய்து வைத்திருந்தாள் சியாமளா.

ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும், கொஞ்சம் பழங்களும் வாங்கி வந்திருந்தாள் வத்சலா. அதை அவள் அம்மாவிடம் கொடுத்தாள். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொள்ளட்டும் என்று தனியே விலகிப் போயிருந்தாள் சியாமளா. விக்னேஷ் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“என்னையே முறைத்துக் கொண்டு இருந்தால் எப்படி? போய் உங்கள் அக்காவுடன் பேசலாமில்லையா?”

அப்போது வெளியே வந்த வத்சலா, “அவன் கோப்படுவதிலும் அர்த்தம் இருக்கிறது சியாமளா. என்னால் அவர்கள் அவ்வளவு அவமானப்பட்டு விட்டார்கள், நான் அவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்” என்று கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

“வத்சலா அக்கா, உங்களை அக்கா என்று கூப்பிடலாமா? தவறு செய்யாதவர்கள் யார்? அவரவர் வயதிற்கு ஏற்றாற்போல் தவறுகள் நடக்கின்றன. போனது போகட்டும் அக்கா, இனிமேல் நீங்கள் அழக்கூடாது” என்றாள் சியாமளா.

“வீட்டை காலி செய்து விட்டு இங்கேயே வந்து விடு அக்கா. குழந்தையோடு ஏன் கஷ்டப்பட வேண்டும்?” என்றான் விக்னேஷ்.

“இருக்கட்டும் விக்னேஷ். ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் உன் மாமா என்னைத் தேடி வருவார் என்று நினைக்கிறேன், அதனால் தான் அந்த வீட்டிலேயே இருக்கிறேன்” என்றாள் வத்சலா.

“அண்ணா வரும்போது வரட்டுமே. அதுவரையில் அங்கே தனியாக நீங்கள் ஏன் இருந்து கஷ்டப்பட வேண்டும்? உடனே இங்கு வந்து விடுங்கள்” என்றாள் சியாமளா.

“அப்படியா சொல்கிறாய்? நான் இங்கு வரவேண்டுமானால் நீயும், தர்ஷணா விஷ்ணுவுடன் இங்கேயே வந்து இருக்க வேண்டும் சியாமளா. அப்படியானால் நான் வருகிறேன்” என்றாள் வத்சலா.

“சபாஷ், சரியான போட்டி” என்றான் விக்னேஷ்.

“அப்பாடி… ஒரு வழியாக எங்கள் பிரச்சினையும் தீர்ந்தது. இனிமேல் ஜாலியாக ஊர் சுற்றலாம், மாமா என்னை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்” என்று சந்தோஷத்துடன் குதித்தான் விஷ்ணு .

“அம்மா, இப்படி எல்லோரும் ஒன்றாகச் சேர வேண்டும் என்று தான் நீ படுத்து விட்டாய் போலிருக்கிறது” என்றாள் வத்சலா.

“அப்படியில்லை வத்சலா’க்கா. யாருக்கும் தெரியாமல் அத்தை உங்களை நினைத்து அழுவார்கள். முதலில் நான் சரியாக கவனிக்கவில்லை, பிறகு கவனித்து மாமாவிடம் உங்களைப் பற்றிப் பேசினேன். உடனே அவருக்குக் கோபம் வந்து விட்டது” என்றாள் சியாமளா.

“கோபம் வந்து எங்களை வீட்டை விட்டே விரட்டி விட்டார்” என்று முறையிட்டாள் தர்ஷணா.

“என்ன பண்ணாலும் மாமா நல்லவர் தாண்டி” என்று வக்காலத்து வாங்கினான் விஷ்ணு.

“அம்மாவிற்காக நீ உடனே இங்கே வந்து விடு சியாமளா. என் கணவருக்கு நான் ஆறு மாதம் தான் டைம் கொடுத்திருக்கிறேன் . அதற்குள் திரும்பி விட்டால் மணவாழ்க்கை, இல்லையென்றால் மனம் நொந்த வாழ்க்கை தான்”

“ஏனக்கா அப்படிச் சொல்கிறீர்கள்? அவர் பொருள் தேடி சினிமாவைத் துணையாகக் கொண்டு போயிருக்கிறார். அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? வாருங்கள், அத்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு மருந்து கொடுக்க வேண்டும்” என்று அவசரமாக எழுந்தாள் சியாமளா.

“விக்னேஷிற்கும் இது ஃபைனல் எக்ஸாம். நம் தர்ஷணாவிற்கும் பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை. இன்னும் பரீட்சைக்கு மூன்று, நான்கு மாதங்கள் தான் இருக்கின்றன. இருவருக்கும் இது சவாலான எக்ஸாம். நாங்கள் இங்கு வருவதற்குள் எக்ஸாம் எல்லாம் முடிந்து விடும், அதுவும் நல்லது தான் “ என்றாள் வத்சலா. எல்லோரும் சந்தோஷமாக டின்னர் சாப்பிட்டு முடித்தனர்.

வழக்கம் போல் தர்ஷணாவிற்கும் விஷ்ணுவிற்கும்  பள்ளிக்கூட பஸ் ஏற்பாடு செய்து விட்டான் விக்னேஷ். சியாமளாவை ஆட்டோவில் அவள் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, நீண்ட நேரம் மௌனமாகவே வந்த விக்னேஷ்… திடீரென்று, “எனக்கு ஒன்றும் புரியவில்லை “ என்றான்.

“என்ன புரியவில்லை?” சியாமளா சின்னப் புன்னகையுடன் கேட்டாள்.

“எல்லா நல்ல செயல்களிலும் துணையாக இருக்க விரும்புகிறேன் என்று நேற்று நீங்கள் கோயிலில் சொன்னீர்கள் இல்லையா? அப்படியென்றால் ?” என்று கேட்டான் விக்னேஷ்.

“இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா விக்னேஷ்?” உணர்ச்சிப் பெருக்கில் அவள் உதடுகள் துடித்தன, கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது .

“உன் உள்ளத்தில் எனக்கு இடம் இருப்பது உண்மையா சியாமளா?” விக்னேஷ் ஆட்டோவை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டுக் கேட்டான். உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் குழறின .

“வாழ்ந்தால் உங்களோடு மட்டும் தான், உங்கள் ஒருவருக்கு மட்டும் தான் உயிருள்ள வரை உள்ளத்திலும், வாழ்க்கையிலும் இடம்” உணர்ச்சிமிகுதியால் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

விக்னேஷ் எழுந்து வந்து பின் ஸீட்டில் அவளருகில் அமர்ந்து கொண்டான். அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு, அவள் இரண்டு கைகளையும் எடுத்துத் தன் கைகளில் அடக்கிக் கொண்டான். சியாமளாவின் முகம் மலர்ந்து செவ்வானமாகச் சிவந்தது. “விக்னேஷ், இது நடுவீதி. எனக்கும் பள்ளிக்கு நேரமாகிறது. வேறு ஏதாவது விளக்கம் வேண்டுமா?” என்றாள் சியாமளா முகமெல்லாம் சிரிப்பாக.

“நம் திருமணம் எப்போது என்பதையும் முடிவு செய்து வைத்திருப்பாயே, அதையும் சொல்லி விட்டால் நான் உண்டு  என் ஆட்டோ உண்டு என்று இருந்து விடுவேன்“ என்றான் உள்ளத்தின் மகிழ்ச்சியில் முகத்தில் சிரிப்பு கூத்தாட.

“உங்கள் பைனல் செமஸ்டர் எக்ஸாமும் தர்ஷணாவின் பிளஸ்டூ எக்ஸாமும் முடிய வேண்டும். தர்ஷணா மாநிலத்தில் முதல் மாணவியாக வரவில்லையென்றால், அவள் மெடிகல் காலேஜ் கனவை மூடி வைத்து விட்டு வேறு கோர்ஸில் சேர்க்க அவளை தயார் செய்ய வேண்டும். நீங்களும் பரீட்சையில் பாஸ் செய்த பிறகு  வக்கீலாகப் பதிவு செய்து  கொள்ள வேண்டும். ஜூனியராக நல்ல ஸீனியர் வக்கீலிடம் போய்ச் சேர வேண்டும். இவ்வளவு வேலைகளும் முடிய ஒரு ஆறு மாதமாவது ஆகுமில்லையா?”  என்றாள் சியாமளா சிரித்துக் கொண்டே.

“உன்னுடைய இந்த மனம் திறந்த பேச்சு எனக்குப் போதும். என் சியாமளாவிற்காக எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் காத்திருப்பேன்” என்றான் விக்னேஷ்.

“என்னால் அப்படியெல்லாம் காத்திருக்க முடியாது மாமா. அதிகபட்சம் ஆறு மாதம் தான், அதன் பிறகு அத்தையிடம் சொல்லி நீங்கள் தான் எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்“ என்றாள் சியாமளா, வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன் ❤ (சிறுகதை) – ரேவதி செல்வம்

    நினைவெல்லாம் நித்யா ❤ (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி.