in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 11) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9    பகுதி 10

“சொல்லு விக்னேஷ், என்ன சொல்ல வேண்டும்? ஏன் தயங்குகிறாய்?”

“அம்மா, நான் சியாமளாவைத் திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன்”

“சியாமளா அன்று ஒரு நாள் அவள் மாமாவிடம் கூறியதை வைத்து சொல்கிறாயா என்ன? அவள் ரொம்ப வசதியாக வாழ்ந்த பெண். அவ்வளவு வசதியில்லையென்றாலும் சுமாரான இடம் பார்த்துத் திருமணம் செய்து அவளை அனுப்ப வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இந்த குட்டையிலேயே அவள் ஊற வேண்டுமா?  உனக்கு மட்டும் விருப்பம் இருந்தால் போதுமா?” என்றாள் கொஞ்சம் கோபமாக.

“இல்லையம்மா, சியாமளா தான் முதலில் தன் விருப்பத்தைக் கூறினாள். நீ வேண்டுமானால் அவளையேக் கேட்டுப் பாரேன்” என்றான் விக்னேஷ்.

“சியாமளா” என்று அழைத்தாள் அத்தை.

“இதோ வந்து விட்டேன் அத்தை” என்றவள், தன் ஈர்க்கைகளைப் புடவையில் துடைத்தவாறு வந்தாள்.

“சியாமளா , விக்னேஷ்  உன்னை விரும்புகிறேன் என்கிறான். உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறான், என்னம்மா இதெல்லாம்?”

“ஏன் அத்தை, என்னை உங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?”

“இதென்ன கேள்வி?  இந்த முரட்டுக் கோபக்காரப் பயலுக்கு இத்தனை அதிர்ஷ்டமா?” என்று வியந்தாள் அத்தை.

“எனக்குத் தான் அத்தை அதிர்ஷ்டம். அவர் முரடர் தான் கோபக்காரர் தான், ஆனால் நியாயமானவர். ரொம்ப நல்லவர், கண்ணியமானவர்”  என்றாள் உணர்ச்சிப் பெருக்குடன்.

அவள் வர்ணனை விக்னேஷை எங்கோ வானில் பறக்க வைத்தது.

“எங்களுக்கு இந்த ஓட்டை வீடும் ஆட்டோ ரிக்ஷாவும் தவிர வேறு ஏதும் சொத்து இல்லையம்மா . நான் உனக்காக கொஞ்சம் சுமாரான இடம் தேடச் சொல்லி ஜோஸியக்காரரிடம் கூட உன் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். நீ என்னடாவென்றால் இந்த ஆட்டோக்காரப் பயலை விரும்புகிறேன் என்கிறாயே” என்ற அத்தை, சிரித்துக் கொண்டே சந்தோஷமாகக் கூறினாள்.

“இந்த ஆட்டோக்காரர் தான் அத்தை, நாங்கள் மூன்று பேர் உங்கள் சாப்பாட்டில் பங்கிற்கு வரும்போது முணுமுணுக்காமல் ஏற்றுக் கொண்டார். நான் அன்று என் மாமா குடும்பத்தாரிடம் என் அத்தையின் இந்த மகன் அதன் கணவராக வரப் போகிறவர் என்று கூறியது பொய்யில்லை. நான் திருமணம் என்ற ஒன்று செய்து கொண்டால் அது மாமாவைத்தான்”

“வக்கீலாகப் பாஸ் செய்தானே தவிர இன்னும் கோர்ட் வாசற்படி கூட மிதிக்கவில்லையே அம்மா”

“மாமா பொறுப்பானவர் அத்தை. அவரே தானே பார்ட்-டைமாகக் கல்லூரியில் சேர்ந்தார், இரவு பகல் என்று பாராமல் படித்துப் பாஸ் செய்தார். பணம் என்ன அத்தை பணம், அது இன்று வரும் நாளை போகும். ஆனால் அந்தப் பணம் நம்மை விட்டுப்  போகும் போது நமக்குப் பிரியமாளவர்களையும் சேர்த்து அடித்துச் சென்று விடுகிறது. அளவிற்கு மீறிய பணம் என்றாலே வெறுப்பாக இருக்கிறது. வேறு ஏதாவது சந்தேகமா அத்தை?”

“கல்யாணம் எப்போது  எங்கே  வைத்துக் கொள்வது?”

“அதிக செலவில்லாமல் கோயிலில் வைத்துக் கொள்ளலாம். நமக்குத் தெரிந்தவர்கள் சொந்தக்காரர்கள் எல்லோரையும் அழைத்து வீட்டிலேயே  சாப்பாடு செய்து போட்டு விடலாம்”

“இரண்டு பேரும் ரொம்ப வேகமாகத்தான் இருக்கிறீர்கள்” என்ற அத்தை, படுக்கையிலிருந்து  எழுந்து உட்கார்ந்தாள்.

“நீ எங்கே அம்மா எழுந்து  கொள்கிறாய் ?”  என விக்னேஷ் கேட்க

“மனம் திறந்து நீங்கள் உங்கள் விருப்பத்தைச் சொன்ன பின்னர் எப்படிப் படுத்தக்கொண்டு இருக்க முடியும்? கல்யாண ஏற்பாடுகளை கவனிக்க வேண்டாமா?” என்றார் அத்தை.

“அத்தை, இப்போது மணி இரவு எட்டு. சாப்பிட்டு விட்டு அமைதியாகப் படுங்கள்” என்ற சியாமளா,  கலகலவென்று சிரித்தாள்.

அடுத்த நாள் காலை சியாமளாவை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, “சியாமளா, உனக்கு இரண்டு தேங்க்ஸ்” என்றான் விக்னேஷ்.

“அது என்ன மாமா இரண்டு தேங்க்ஸ்?”

“ஒன்று, நீ  என்னைப் பற்றி மனதில் கொண்டிருக்கும் நல்ல அபிப்பிராயத்திற்கு” என்று நிறுத்தினான் உணரச்சிவசப்பட்டு.

“ஏன் மாமா உணர்ச்சி வசப்படுகிறீர்கள்? உண்மையைத் தானே சொன்னேன். கொம்பிற்குப் புடவையைச் சுற்றினாலே ஜொள்ளுவிடும் இந்தக் காலத்தில், எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறீர்கள். தவறாக பார்த்ததில்லை. விரல் நுனி கூட பட்டதில்லை. உங்களைத்தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று முதலில் சொன்னவள் கூட நான் தானே. அடைக்கலமாக வந்தவர்களிடம் யார் மாமா இவ்வளவு நேர்மையாக நடந்து கொள்கிறார்கள்? இரண்டாவது தேங்க்ஸ் எதற்காக ?”

“கோவிலில்  திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்றாயே அதற்கு. நேற்று மாலை உன்னை வீட்டில் விட்டு ஆட்டோ ஸ்டேண்ட் சென்றேன். அப்போது சரவணனும் முருகேசனும் நமது திருமணத்தைப் பற்றிப் பேசினர். அவர்கள் கூட காலம் தாழ்த்தாமல் திருமணம் முடிக்க வேண்டும் என்று தான் சொன்னார்கள். கையில் நிறைய காசிருந்தால் மண்டபத்தில் இல்லையென்றால் கோயிலில்  கல்யாணம், ஆனால் காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்றார்கள். என் நிதிவசதிக்கு கோயிலில் தான் முடியும் என்றேன். சொன்னேனே தவிர, உனக்கு எவ்வளவு கனவு இருக்கும், எவ்வளவு ஆசை இருக்கும், இதெல்லாம் யோசிக்கவில்லையே என்று பயந்தேன். ஆனால் நல்லவேளையாக நீயும் அவ்வாறே  கூறினாய். அதற்குத் தான் இரண்டாவது தேங்க்ஸ்” என்றான்.

“மிக சிம்பிளானத் திருமணம் என்றால் கூட ஒரு லட்சம் ரூபாய் ஆகிவிடும் இல்லையா மாமா?”

“எதற்கு ஒரு லட்சம்?”

“திருமாங்கல்யம், மெட்டி, டிரஸ் வாங்க வேண்டுமல்லவா?”

“உனக்கும் எனக்கும் மட்டும்  டிரஸ் வாங்கினால் போதாதா?”

“அது எப்படி? முக்கியமாக அம்மாவிற்கு நல்ல புடவையாக வாங்க வேண்டும். வத்சலாவிற்கும், அவள் கணவருக்கும் , குழந்தைக்கும்  டிரஸ் எடுக்க வேண்டும். தர்ஷணாவிற்கு நிறைய டிரஸ் எடுத்து விட்டீர்கள். மெடிகல் காலேஜிற்குப் போகிறாள் என்று ரொம்ப காஸ்ட்லியாகவே எடுத்து விட்டீர்கள். விஷ்ணுவிற்கு மட்டும் ஒரு செட் எடுத்தால் போதும்”

“சரிதான், எல்லோருக்கும் எடுத்து விட்டு தர்ஷணாவை மட்டும் விட முடியுமா? உன்னையும் என்னையும் உண்டு  இல்லையென்று பண்ணி விடுவாள்” என்று சிரித்தான்

“நீங்கள் அவளுக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீர்கள் மாமா, அதனால் தான் அவளுக்கு ரொம்ப தைரியம்?”

“சியாமளா, நீங்கள் மூன்று பேருமே ரொம்ப கிரேட். அவ்வளவு பெரிய கஷ்டத்திலிருந்து பீனிக்ஸ் பறவை மாதிரி தைரியமாக நிமிர்ந்து நிற்கிறீர்கள். விஷ்ணு எவ்வளவு சிறிய குழந்தை, அவனே இருக்கும் இடத்திற்கு ஏற்றாற் போல் பொருத்திக் கொண்டு மிகப் பொறுமையாக இருக்கிறானே. ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது சியாமளா. உன்னுடைய தைரியத்தில் தான் அவர்கள் இருவரும் நிமிர்ந்து நிற்கிறார்கள். அன்று கமலாவின் வீட்டிற்குப் போய் வந்த பிறகு தான் உங்களுக்கு ஏற்பட்ட மனக்கஷ்டமும் பணக்கஷ்டமும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நீங்களும் அதே போல் பெரிய வீடு, பிஸினஸ், கார்கள் என்று செல்வாக்காக இருந்தவர்கள் தானே. கமலாவிற்காவது அம்மா இருக்கிறார், உங்களுக்கு அம்மாவும் இல்லை” என்றான் பரிதாபத்தோடு பெருமூச்சு விட்டுக் கொண்டு.

“எங்களுக்கு அம்மாவைவிட அன்பான  ஒரு அத்தையையும், எங்களைக் கைத்தூக்கி விட்டு நாங்கள் தைரியமாகப் பற்றி எழுந்து நிற்க ஒரு மாமாவையும் கடவுள் கொடுத்திருக்கிறார். அதனால் நாம் மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பார்க்கலாம்” என்றவளைப் பெருமையுடன் பார்த்தான் விக்னேஷ்.

“உங்களிடம் சேமிப்பில் எவ்வளவு இருக்கும் மாமா?” என்று கேட்டாள் சியாமளா.

“ஒரு இருபதாயிரம் தான் இருக்கும்” என்றான் விக்னேஷ்.

“என்னிடம் ஒரு முப்பதாயிரம் இருக்கும். பி.எப்.லோன் போட்டு ஒரு பத்தாயிரம் எடுக்கலாம்”

“போதாத்தற்கு  நண்பர்களிடம்  கொஞ்சம் கடன் வாங்கிக் கொள்ளலாம் சியாமளா”

“வாழ்க்கைத் தொடங்கும் போதே மற்றவர்களிடம் கடன் வாங்கித் தொடங்க வேண்டாம். என்னிடம் வளைந்து நெளிந்து போன தங்க நகைகள் கொஞ்சம் இருக்கின்றன, அவற்றை விற்று விடலாம்”

“சாப்பாட்டுச் செலவு தான் கையைக் கொஞ்சம் கடிக்கும், பார்த்துக் கொள்ளலாம்”

வத்சலாவிடம்  விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற ஆவலில், சியாமளாவை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் விக்னேஷ்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 9) – கவிஞர் இரஜகை நிலவன்

    பசியின் காதடைப்பு (சிறுகதை) – முகில் தினகரன், கோயம்புத்தூர்