in ,

மீட்சி (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

மாடிப்படிக்குக் கீழ் இருந்த, கதவு போடப்பட்டிருந்த‌ ஒரு சந்தைக் காட்டி ‘இதுதான் உன் ரூம்.  நல்லா பாத்துக்க’ என்றார் சைக்கிள் கடைக்காரர்.

அடிமைப் பெண் எம்.ஜி.ஆர். போல் குனிந்துதான் உள்ளே செல்ல வேண்டும். ஒரு ஆள் புரண்டு படுக்கலாம். இரண்டு பேர் புரளாமல் படுக்கலாம். தலைக்குப் பின்புறம் டிரங்க் பெட்டியை வைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் இடம்.

‘இதுக்குப் பெயர் ரூமா?’ என்றான் கதிர் நக்கலாக.

‘நீ கொடுக்கப்போற நூத்தம்பது ரூபாய்க்கு வேணும்னா தாஜ் ஹோட்டல்ல ரூம் கேட்டுப் பாக்கட்டா?’ என்றார் சைக்கிள் கடைக்காரர் அதே நக்கல் தொனியில்.

ஒரு பிரைவேட் கம்பெனியில் டைப் மிசினைத் தட்டிக் கொண்டிருக்கும் கதிருக்குக் கிடைக்கும் சம்பளத்தில், கிட்டத்தட்ட பாதியை சைக்கிள் கடைக்காரர் வாடகையாகப் பிடுங்கிக் கொள்ளும்போது எரிச்சல் வராமலா இருக்கும் கதிருக்கு?.

அதுவும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில் நூற்றைம்பது என்பது ஒரு மதிப்புள்ள தொகை. அவரது சைக்கிள் கடையும், அந்த ரூமும் ரோட்டை நோக்கி அமைந்திருந்தன. பக்கத்தில் உள்ள வேறொரு கதவு வழியாக வீட்டு உரிமையாளரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் வீட்டுக்குள் சென்று வருவார்கள்.

சைக்கிள் கடையை வாடகைக்கு எடுக்கும்போதே, சைக்கிள் கடைக்காரர் இந்த ரூமையும் சேர்த்து வாடகைக்கு எடுத்துக் கொண்டார். இப்போது கதிர் கொடுக்கும் வாடகை, சைக்கிள் கடைக்காரருக்கே சேரும். இது வீட்டு ஓனருக்கும் தெரியும்.

‘இதுதான் வாடகைக்குள் வாடகையோ?’ என்று நினைத்துக் கொண்டான் கதிர்.

‘சரி.. இது, இதுக்கெல்லாம் எங்கே போறது?’ என்றான் கதிர் தன் ஒரு விரலையும், இரண்டு விரல்களையும் காட்டி.

‘இங்கே வா’ என்று அவனை அழைத்துக்கொண்டு ஓனர் வீட்டுக்குள் நுழையும் கதவின் வழியாக உள்ளே நுழைந்தார்.

வலதுபுறம் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு இருந்தது. அதை ஒட்டி ஒரு குளியலறையும், கழிவறையும் இருந்தன. ‘இதை நீ உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிவரைதான் வாசல் கதவு திறந்திருக்கும். உன்னைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன். சரியா?’ என்றார் சைக்கிள் கடைக்காரர்.

‘அதெல்லாம் சரி.. இரவு பத்துமணிக்கு மேல் ஆறு மணிக்குள் அவசரமாக வந்து விட்டால் என்ன செய்வது?’ என்றான் கதிர்.

‘உங்க கிராமத்தில‌ சொம்ப தூக்கிக்கிட்டு ராத்திரில ஓடுவாயில்லயா? அப்படி எங்காச்சும் போ’ என்றார் சைக்கிள் கடைக்காரர் எரிச்சலுடன்.  மேலும், ‘வேண்டாம்னா இப்பவே சொல்லிடு. இன்னும் இரண்டு பேர் இந்த ரூமுக்கு வெயிட்டிங்ல இருக்காங்க. இருநூறு ரூபாய் வாடகை கொடுக்கவும் தயார்’ என்று அவனை பிளாக்மெயில் செய்தார்.

அந்த அறை கதிர் வேலை செய்யும் கம்பெனிக்கும், அவன் சேர்ந்திருக்கும் டைப்பிங் இன்ஸ்ட்டியூட்டுக்கும் இடையில், நடக்கும் தூரத்தில் இருந்ததால், ஒரு மாத வாடகையை அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டு, ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த ரூமுக்கு குடி புகுந்தான்.

டைப்பிங் ஜூனியர் பாஸ் செய்துவிட்டு தற்போது ஷார்ட் ஹேண்ட் லோயரும், டைப்பிங் ஹையரும் படிக்க‌ இன்ஸ்ட்டியூட்டில் சேர்ந்திருந்தான். எண்பதுகளில் ஷார்ட் ஹேண்ட் மற்றும் டைப்பிங் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கூடுதல் உண்டு.

பட்டப்படிப்பை முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தாலும், கதிருக்கு ஏனோ இதுவரை சரியான வேலை அமையவில்லை. அவ்வப்போது, மனம் தளராமல், மாநில, மத்திய‌ அரசு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கான தேர்வுகளை எழுதிக்கொண்டிருந்தான் கதிர்.

நிரந்தர வேலை கிடைக்கும் வரையில் கிராமத்தில் சும்மா இருக்க வேண்டாம் என்று இந்த‌ நகரத்திற்கு வந்து, கிடைத்த இந்த வேலையில் ஒட்டிக்கொண்டிருந்தான். ஊரிலிருந்து பணஉதவியைப் பெறுவதில்லை என்ற அவனின் வைராக்கியத்தால், இதுபோன்ற‌ சிக்கன வாழ்க்கையையே அவன் வாழ வேண்டியிருந்தது.

அந்த வைராக்கியத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளையும் அவன் மகிழ்ச்சியுடனே ஏற்றுக் கொண்டான். கதிரைப் பற்றிய முழு விபரமும் தெரிந்து கொண்ட‌ சைக்கிள் கடைக்காரர், அவன் மீது ஒரு தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாத அவனின் நேர்மையான நடத்தையும், கடும் உழைப்பும் அவருக்கு அவன் மேல் பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

எப்போது வாசல் கதவு திறக்கும் என்று உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கைப் போல‌ காத்திருந்து, ஓனர் மனைவி கோலம் போட கதவைத் திறந்தவுடன் ‘லபக்’ கென்று உள்ளே புகுந்து காலைக்கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, சரியாக காலை ஏழு மணிக்கு டைப்பிங் இன்ஸ்ட்டிடூட்டில், மிசின் முன் உட்கார்ந்து ஹையர் பரீட்சைக்காக டைப் அடிக்கத் தொடங்குவான்.

எட்டு மணிக்கு அங்கிருந்து கிளம்பி எட்டரை மணிக்குக் கம்பெனியை அடைவான். அவன் கையிலிருக்கும் சாவியைக் கொண்டு கம்பெனியைத் திறந்துவிடும்போதே வேலைக்கு ஆட்கள் வரத் தொடங்குவார்கள்.

பத்து பேர் மட்டுமே வேலை செய்யும் சிறிய கம்பெனி அது. அவனும் ஆபீஸ் அறையைத் திறந்து தனது வழக்கமான வேலைகளைச் செய்யத் துவங்குவான். மாலை ஆறு மணிக்குக் கிளம்பி வழியில் ஒரு டீ குடித்துவிட்டு ஏழு மணிக்கு மீண்டும் அதே இன்ஸ்ட்டிடூட்டுக்குச் செல்வான். எட்டு மணிக்கு ஷார்ட் ஹேண்ட் ஜூனியர் வகுப்பை முடித்துக் கொண்டு அறைக்கு வரும்போது இரவு எட்டரை அல்லது ஒன்பது ஆகிவிடும்.

இப்படி தன்னை எப்பொழுதும் பிஸியாக வைத்துக் கொண்டு, கிடைத்த நேரத்தில் வேலைக்கான தேர்வுகளுக்கும் தயார் செய்து வந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த சைக்கிள் கடைக்காரர் மாத்திரம் அவனின் உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ள அடிக்கடி அறிவுரை கூறுவார். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் அவருடன் பேசவும் கதிருக்கு நேரம் இருந்தது.

அந்த ஷார்ட் ஹேண்ட் படிப்பிக்கும் வகுப்பில் ஒரு ஆசிரியரும், மூன்று மாணவர்களும், மூன்று மாணவிகளும் இருந்தனர்.

ஆசிரியர், ‘அடுத்த வாரம் உங்களுக்கு ஜூனியர் ஷார்ட் ஹேண்ட் பரீட்சை. நீங்கள் அனைவரும் நன்கு பயிற்சி எடுத்து பாஸ் செய்தால் நமது பயிற்சிப் பள்ளிக்கும் நல்ல பெயர். அத்தோடு அப்படியே நீங்கள் அடுத்த ஷார்ட் ஹேண்ட் ஹையர் வகுப்புக்கும் இங்கேயே பயிற்சி எடுக்கத் தொடங்கலாம். ஒருவேளை பரீட்சையில் தோல்வியுற்றால், மீண்டும் இதே லோயர் கிளாசில் பயிற்சி எடுத்து அடுத்த மூன்று மாதம் கழித்து வரும் பரீட்சைதான் எழுத முடியும். ஆகவே நன்றாக பயிற்சி செய்யுங்கள்’ என்று அறிவுரை கூறினார்.

வகுப்பில் எல்லோரும் தலை ஆட்டும்போது கதிரும் தன் பங்குக்கு தலையை ஆட்டி வைத்தான்.

வெளியே வரும்போது கதிரைப் பார்த்து அந்த மூன்று பெண்களில் ஒரு பெண் கேட்டாள், ‘என்னைத் தெரியுதுங்களா சார்?’. முன்பின் தெரியாத பெண்களின் முகங்களை கதிர் எப்போதும் உற்றுப் பார்க்கும் பழக்கம் இல்லை. ஆனால் அந்தப் பெண் கேட்ட பிறகு நிமிர்ந்து பார்த்தான். அந்த முகத்தை எங்கேயோ பார்த்தது போலவும் இருந்தது.

‘நீங்க குடியிருக்கிற வீட்டு ஓனரோட பொண்ணு நான். என் பெயர் யமுனா’ என்றாள்.

‘ஆமாம்.. இப்ப ஞாபகம் வருது.. உங்களைப் பார்த்திருக்கிறேன். என் பெயர் கதிர்’ என்றான்.

‘நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களாமே? பத்திரிகைகளில் எல்லாம் வருமாமே? சைக்கிள் கடைக்காரர் சொன்னார்’ என்றாள் யமுனா.

சைக்கிள் கடைக்காரரை மனதுக்குள் கடுமையான வார்த்தையால் திட்டிக்கொண்டே அவளிடம் ஏதோ சொல்லி, சிரித்து மழுப்பினான் கதிர்.

ஷார்ட் ஹேண்ட் பரீட்சை முடிந்து முடிவுகளும் வெளி வந்துவிட்டது. இன்ஸ்ட்டிடூட்டுக்கு வந்த முடிவுகளை கையில் வைத்துக் கொண்டு ஆசிரியர் வகுப்பில் மெளனமாக நின்றார்.

‘நான் சொல்லித் தருவதில் ஏதாவது தவறு இருக்கிறதா? ஏன் இப்படி ரிசல்ட் வந்திருக்கிறது?’ என்று ஆசிரியர் கேட்டவுடன் வகுப்பில் இருந்த ஆறு பேரும் குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

‘கதிர் ஒருவர்தான் பாஸ் செய்திருக்கிறார். என்ன ஆயிற்று மற்றவர்களுக்கு? கதிர் நீங்க பரீட்சைக்கு எப்படி தயார் செய்தீங்க என்பதைக் கொஞ்சம் சொல்ல முடியுமா?’ என்றார்.

‘சார்.. குறுக்கெழுத்துப் பயிற்சி என்பது ஒருவர் டிக்டேட் செய்ய அதை ஒருவர் கோடு சிம்பலாக மாற்றி எழுதிக்கொண்டு, அதற்குப் பின் எழுதியதை மீண்டும் எழுத்து வடிவில் கொண்டு வருவது. இதில் முக்கியமான அம்சம் என்பது, ஒருவர் நமக்கு ஆங்கில வாக்கியங்களை, தொடர்ச்சியாக, தேவையான வேகத்தில் அடிக்கடி டிக்டேட் செய்ய வேண்டும். நான் எனது அலுவலகத்தில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எனது நண்பனை டிக்டேட் செய்யச் சொல்லிப் பயிற்சி எடுப்பேன். அதனால் பரீட்சையின் போது வேகமும், தவறில்லாமல் எழுதும் ஆற்றலும் கிடைத்தது’ என்றான் கதிர்.

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது உண்மையாயிற்று கதிருக்கு.

அடுத்த இரண்டு நாட்களில் சைக்கிள் கடைக்காரர் தேடி வந்தார் ஒரு வேண்டுகோளோடு. ‘ஏம்ப்பா, நீயும் யமுனாவும் ஒரே வகுப்பில‌ படிக்கிறீங்களாமே? பாவம் ஷார்ட் ஹேண்ட் பரீட்சைல பெயிலாடுச்சாமே…சாயங்காலம் ஒரு மணி நேரம் அந்தப் பொண்ணுக்கு ஷார்ட் ஹேண்ட் பயிற்சி நீ கொடுக்கணும். அவங்க அம்மா கேட்டுக்கிட்டாங்க. ட்யூசன் பீஸ் வாங்கிக்கலாம்’ என்றார்.

தனக்கு நேரம் இல்லை என்று எவ்வளவோ சொல்லியும் சைக்கிள் கடைக்காரர் அவனை விடுவதாக இல்லை. கடைசியாக கதிர் சொன்னான், ‘சரி, உங்களுக்காக ஒத்துக்கறேன். சாயங்காலம் ஆறுலிருந்து ஏழு மணிவரை. ஆனால் காசு வாங்கமாட்டேன். படிப்புச் சொல்லிக் கொடுக்க‌ காசு வாங்குவதில்லை என்பது என் கொள்கை’.

‘சரி.. என்னவோ பண்ணு. உன் பிடிவாதம்தான் தெரியுமே எனக்கு’ என்று கடிந்துகொண்டு, வீட்டு ஓனர் அம்மாவிடம் தகவல் சொல்லக் கிளம்பிவிட்டார்.

அடுத்த நாளில் இருந்து ஓனரின் வீட்டு மாடியில் இருந்த அறையில் டியூசன் தொடங்கியது.  டியூசன் தொடங்கி அரை மணி நேரத்தில் ஓனர் அம்மா நல்ல டிகிரி காபி போட்டு, தானே மாடி அறைக்குக் கொண்டு வருவார்.

டியூசனில் முக்கியமாக டிக்டேசனையே எடுத்துக் கொண்டான் கதிர். யமுனா சிரத்தையுடன் கற்று, நிச்சயம் இந்த முறை பரீட்சையில் தேறிவிடுவாள் என்ற நம்பிக்கையூட்டினாள். ஓனர் வீட்டில் அனைவரும் அவனிடத்தில் மிகுந்த மரியாதை காண்பித்தனர்.

யமுனாவின் குட்டித் தம்பி கூட, கதிர் வீட்டுக்குள் நுழையும் போது ‘டியூசன் மாமா வந்துட்டாங்க’ என்று மரியாதையுடன் அறிவிப்பான்.

‘ஊர்ல தோட்டம் எல்லாம் இருக்குதுங்ளா?’ என்று யமுனாவின் அப்பா அவனிடம் கேள்வியை ஆரம்பித்து அவனின் முழுச் சரித்திரத்தையும் தெரிந்து கொண்டார்.

டியூசனுக்கு வரும்போதெல்லாம் நல்ல பகட்டான‌ உடைகளை உடுத்தி வரத்தொடங்கினாள் யமுனா. சிறியதாய் செய்து கொண்ட முக அலங்காரமும், பவுடர் வாசனையும் அவளின் அழகை மேம்படுத்திக் காண்பித்தன.

ஒரு முறை டியூசனில் செய்த தவறுக்காக, கதிர் அவள் தலையில் குட்டுவதற்காக கையை ஓங்கியபோது, ‘இங்க கிள்ளுங்க’ என்று தன் கன்னத்தை அவன் அருகில் கொண்டு வந்து காட்டினாள்.

இளமையின் பளபளப்பில் மின்னிய அந்தக் கன்னம், ஒரு கணம் கதிரை நிலைகுலையச் செய்தது. அந்தச் சமயம் பார்த்து அவளின் அம்மா காப்பி கொடுக்க வந்ததால், சூழ்நிலை மாறி த‌ன் சுய உணர்விற்கு வந்தான் கதிர்.

‘அதிர்ஷ்டக்காரன்யா நீ’ என்றார் சைக்கிள் கடைக்காரர் ஒரு நாள். ‘நானா? இந்த ரூமில் எட்டுப் போல் வளைந்து படுத்துக் கிடப்பதா அதிர்ஷ்டம்?’ என்றான் கதிர் எரிச்சலுடன்.

‘இது இன்னைக்கு மட்டும்தான். நாளையிலிருந்து நீ மாடி ரூமில் குடியேறப் போகிறாய்?’ என்று அதிர்ச்சி கொடுத்தார். மேலும் தொடர்ந்தார், ‘நேற்று ஓனரும் அவரோட மனைவியும் என்னைக் கூப்பிட்டு இருந்தாங்க. உன்னை அவங்க மாப்பிள்ளை ஆக்கிக்க இஷ்டப்படறாங்க. உன் குடும்பம், சொத்து எல்லாவற்றையும் பற்றி ஓனர் விசாரிச்சிட்டார். நீங்க எல்லாம் ஒரே ஆட்களாமே? உன்கிட்ட சம்மதம் மாத்திரம் கேட்கச் சொன்னாங்க’ என்றார்.

‘நான் வாங்கற சம்பளத்தில, ஒருத்தன் காலம் தள்ளறதே சிரமம். இதுல கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி குடும்பம் நடத்த?’ என்றான் கதிர்.

‘ஓனருக்கு இந்த வீடு இல்லாம டவுனில இன்னும் ரெண்டு வீடு இருக்குது. வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில ஒண்ணு பொண்ணுக்கு. அப்புறம் டவுனில மெயினான இடத்தில பெரிய எலெக்ரிக்கல் கடை வெச்சு நடத்தறார். நல்ல வியாபாரம். அதைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் வேண்டும் அவருக்கு. அதை நீயே பார்த்துக் கொள்ளலாம். வெளியில் வேலைக்கு அலைய வேண்டிய தேவையே இருக்காது. அதிர்ஷ்டம் வாழ்க்கையில் ஒருமுறைதான் கதவைத் தட்டும். யோசித்து பதில் சொல். உனக்கு யமுனாவைப் பிடித்திருக்கிறதா?’ என்றார்.

வட்டமான யமுனாவின் முகமும், அவள் கிள்ளச்சொல்லிக் காண்பித்த பளபளப்பான கன்னமும் அவனின் ஞாபகத்துக்கு வந்தது.

‘அதெல்லாம் சரி.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். ஊரில் அப்பா, அம்மாவிடம் கலந்து பேசிட்டு உங்களுக்குச் சொல்றேன்’ என்றான்.

‘சீக்கிரம் சொல்லு. உன் நல்ல குணத்துக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசு இது. தவற விட்டுவிடாதே. அவ்வளவுதான் சொல்வேன்’ என்று அறிவுரை கூறிவிட்டுச் சென்று விட்டார் சைக்கிள் கடைக்காரர்.

அவர் பேசிவிட்டுச் சென்ற இரண்டு மூன்று நாட்கள் கழித்து, அவனுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து வேலைக்கான உத்தரவு தபாலில் வந்திருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பே பரீட்சை எழுதி, நேர்முகத்தேர்வும் முடித்திருந்தான். அடுத்த ஒரு மாதத்துக்குள் அதே ஊரில் உள்ள தலைமை வங்கியில் அவனது சர்ட்டிபேட்டுக்களைக் காண்பித்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அம்மாவுக்குத்தான் முதலில் போன் செய்து தகவல் சொன்னான் கதிர்.  ‘நா கும்பிட்ட சாமி உனக்கு வேலை வாங்கி குடுத்துடுச்சுடா. மறக்காம நம்ம தோட்டத்து முனியனுக்கு கிடா வெட்டோணும்’ என்று உற்சாகத்தில் அம்மா நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனார்.

வேலையில் சேரும் வரை சைக்கிள் கடைக்காரர் உட்பட யாருக்கும் சொல்வதில்லை என்று முடிவெடுத்திருந்தான் கதிர்.

அடுத்த வாரத்தில் அம்மாவே போனில் கூப்பிட்டிருந்தார், ‘கதிரு.. உனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சுட்டுது போல..எல்லாம் நல்ல சமாச்சாரமா வருதுடா..’ என்றார்.

அம்மா எப்போதும் நேரடியாக விசயத்திற்கு வரமாட்டார். எப்போது சொல்வாரோ என்று கேட்பவரை ஏங்க வைத்துவிட்டே விசயத்தை வெளியிடுவார். அப்பாவோ அதற்கு நேர் எதிர். எந்த முன்னுரையும் இல்லாமல் தந்தி வாக்கியம் போல அளந்து பேசி முடித்துவிடுவார்.

‘உன் மாமன் வந்திருந்தானடா.. கூடவே அத்தையும் வந்திருந்தா.. மாலதியை உனக்கு கல்யாணம் செய்து கொடுக்கத் தயாராம். உங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்த்து விட்டானாம். ஒன்பது பொருத்தம் இருக்கிறதாம். இத்தனை நாள் பார்க்கலாம், பார்க்கலாம் என்று இழுத்துக் கொண்டிருந்தான். இப்பத்தான் எறங்கி வந்திருக்கிறான்’ என்றார்.

‘பேங்கில வேல கெடச்ச விசயத்தை மாமாகிட்ட சொல்லிட்டயா? என்றான் கதிர்.

‘மாமாகிட்ட மாத்திரமில்ல.. ஊர் பூராவும் சொல்லிட்டன்… ஏண்டா சொல்லக்கூடாதா?’ என்றாள் அப்பாவியாக.

அம்மாவின் ஒரே தம்பிதான் மாமா. அவருக்கு ஒரே பெண் மாலதி. சிறு வயதிலிருந்தே கதிரும், மாலதியும் ஒன்றாக விளையாண்டு வளர்ந்தவர்கள். பெரிய பெண் ஆகும் வரை ‘மாமா,மாமா’ என்று கதிரின் பின்னாலேயே சுற்றி வருவாள். அவளின் கலகலப்பான சுபாவம் கதிருக்கு மட்டுமல்ல, அவனின் பெற்றோர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

பெண் பிள்ளைகள் மேல் பிரியம் கொண்ட கதிரின் அம்மா, மாலதியை உட்கார வைத்து, பிரியப்பட்ட மாதிரி அவளை அலங்கரித்துப் பார்த்து ரசிப்பாள். தற்போது பக்கத்து ஊரில் உள்ள கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். தன் அம்மாவின் சிவந்த நிறத்தைக் கொண்ட மாலதி, கல்லூரிப் பருவத்தில் பார்ப்பவரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகைப் பெற்றிருந்தாள்.

கதிரைக் கிண்டல் செய்து அவள் சிரிக்கும்போதெல்லாம், அவளின் குழி விழும் கன்னமும், புருவங்களின் வளைவும், அசைந்து நடமாடும் அவளின் ஜிமிக்கியும் அவனைக் கிறங்கடிக்கும்.  அம்மா முன்பே ஒரு முறை ஜாடையாகத் தன் தம்பியிடம் பெண் கேட்டதற்கு பிடி கொடுக்காமல் பேசியிருந்தார் மாமா.

‘அவள் படிப்பு முடியட்டும்’ என்ற காரணத்தைச் சொன்னாலும், அவரின் வசதியை விட கதிரின் வசதி குறைவாக இருந்ததும், அவனுக்கு ஒரு சரியான வேலை இல்லாமல் இருந்ததுமே அவரின் அந்த மழுப்பலுக்குக் காரணம் என்று மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருந்தனர் கதிர் குடும்பத்தினர். கிடைக்காது என்று மறந்து விட்டிருந்த மாலதியின் நினைவுகளை தற்போது கதிரின் அம்மா கிளறி விட்டிருந்தார்.

தற்போது கதிர் இருபக்கக் கொள்ளியின் நடுவில் இருக்கும் எறும்பைப் போல் இருந்தான். வஞ்சிக்கோட்டை வாலிபன் சினிமாவில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் ஆடும் போட்டி நடனம் போல் அவன் நினைவுகளில் மாலதியும், யமுனாவும் போட்டி போட்டனர்.

மனம் மாலதியின் பக்கம் கூடுதலாகச் சாய்ந்தாலும், ஓனர் வீட்டினரைப் பார்க்கும் போதெல்லாம் இதை எப்படி இவர்களிடம் சொல்லப் போகிறோம் என்ற குற்ற உணர்வு அவனைப் பிராண்டிக்கொண்டே இருந்தது.

அங்கே ஓனர் வீட்டில் நடந்து கொண்டிருந்த சூழ்நிலை மாற்றமும் அவனுக்குக் கொஞ்சம் குழப்பத்தை உண்டு பண்ணியது. டியூசன் போதும் என்று சொல்லி நிறுத்தி விட்டார்கள். முன்பு கிடைத்துக் கொண்டிருந்த ஸ்பெசல் மரியாதைகள் குறையத் தொடங்கியிருந்தன. அதற்கும் ஒரு நாள் விடை கிடைத்தது சைக்கிள் கடைக்காரர் மூலம்.

‘சொல்லறதுக்கே கஷ்டமா இருக்கு கதிர். ஓனர் தன் பெண்ணின் ஜாதகத்தை சொந்த பந்தங்களில் நிறையக் கொடுத்திருந்திருப்பார் போல இருக்கு. அதில் ஒரு சொந்தம், போன வாரம் கூப்பிட்டு அமெரிக்காவில் இருக்கும் தங்கள் பையனுக்கு யமுனாவைக் கொடுக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். பையன் வீடு நல்ல வசதியும் கூட.

கிட்டத்தட்ட கல்யாணத்தை உறுதி செய்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தயங்குறாங்க. என்னைச் சொல்லச் சொன்னாங்க. மன்னிச்சிருப்பா’ என்றார்.

கதிரின் மனசு ஒரு துள்ளுத் துள்ளியது. மலை போல வந்த கஷ்டம் பனி போல் விலகியதைப் போல் இருந்தது. சைக்கிள் கடைக்காரரைக் கட்டிப் பிடித்துக் கொள்ளலாம் போலவும் இருந்தது.

இருந்தாலும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொன்னான், ‘பரவாயில்லீங்க.. நான் கூட இந்த வாரத்தில் ரூமை காலி செய்து விடலாம் என்று இருக்கிறேன். என் வாழ்த்துக்களைச் சொல்லி விடுங்க’ என்றான்.

மனதில் அதுவரை ஆடிக்கொண்டிருந்த பத்மினி, வைஜயந்திமாலா இருவரில் வைஜயந்திமாலா மயங்கி விழ, பத்மினி ஆடிக்கொண்டே அவனை நோக்கி வந்தார். பத்மினியின் முகம் அருகில் வர வர அது மாலதியின் முகமாய் மாறியது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

இணையற்ற இந்திய இளைஞர்களே (புத்தக விமர்சனம்) – ச.பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 17) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை