வேக வேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு, மருத்துவமனை வளாகத்துக்குள் ராமசாமி நுழைவதை பார்த்தான் பூக்கண்ணன். ஏனோ அவர் பதட்டமாய் இருப்பதை போல் பூக்கண்ணனுக்கு தோன்றியது
அவரைக் கூப்பிடலாமெனக் கை காட்டுவதற்குள், சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்டு போட்டு விட்டு, அவசரமாக மருத்துவமனைக்குள் சென்று விட்டார்
சிறுமியின் மழலைப் பேச்சில் கவரப்பட்டவனாய், மீண்டும் அவள் பக்கம் கவனத்தைத் திருப்பினான் பூக்கண்ணன்
சற்று நேரம் அவளோடு கதை பேசி சிரிக்கச் செய்தவன், “ஒங்கப்பா ஓ ஆத்தாவக் கூட்டியார மாட்டாரா?” எனக் கேட்டான்
“எப்பவாச்சுந்தான் அவுரு வூட்டுக்கே வருவாரு” என்றவள், சைகையால் அவனை அருகே அழைத்து, “எங்கப்பா சாராயங் குடிப்பாருத் தெரியுமா” என காதில் ரகசியம் கூறினாள்
அதைக் கேட்டதும் பூக்கண்ணனுக்கு ஏதோவொரு உணர்வு உறுத்தியது. அது அவனது குடிப்பழக்கத்தை அவனுக்கு நினைவு அடுக்குகளில் இருந்து மேலே எழச் செய்தது
அதன் காரணமாய், அவன் மனம் அச்சிறுமியின் முன், தன்னையும் அறியாமல் கூனிக் குறுகியது.
“குடிச்சிப்புட்டு ஒங்கொம்மாவப் போட்டு மெதிப்பானோ?” என்றான் சந்தேகமாய்
“அவுரு யாரையும் அடிக்க மாட்டாரு. வூட்டு வாசலுல நின்னு அழுவுவாரு, எங்காலுளெல்லாம் வுழுவாரு தெரியுமா” என்றாள் சிறுமி
‘சரியான போதக்காரனா இருப்பான் போலிருக்கு’ என மனதுக்குள் நினைத்தவன்,”குடிச்சுப்புட்டு வந்து அழுது அழுது ஏமாத்தி காசு வாங்கிப்பானா?” எனக் கேட்டான்
“அதெல்லாங் கேக்க மாட்டாரு. குடிக்கலைனாலும் அழுவாரு…”
“எதுக்கு அழுவுறான்?”
“தெரியிலே…” சற்று யோசித்துவிட்டுத் தொடர்ந்தாள், “ஏதோ தப்பு செஞ்சிப்புட்டேன்னு எப்போப் பாருச் சொல்லுவாரு. செல நேரம் எங்கம்மா அவர வையும், செல நேரம் அதுவுஞ்சேந்து அழுவும். அப்பெல்லா எனக்கு பயமா வரும்… இப்போ எங்கப்பாவப் பாத்தே ரொம்ப நாளாயிடுச்சு” என்று கூறிவிட்டு, “உங்கப்பாவும் இப்புடித்தான் அழுவாரா?” என அவனைக் கேட்டாள்.
“எங்கப்பாரெல்லாம் நாஞ் சின்னப் புள்ளையா இருக்கையிலேயே செத்துப்புட்டாரு. அவுரு மொவத்தக் கூட நாங் கண்டதில்ல.”
“எங்கக்காவும் இப்புடித்தான், நா சின்னப் புள்ளையிலேயே செத்துப் போயிடிச்சு” என்று எவ்வித பாவனையுமின்றிக் கூறினாள்.
அதைக் கேட்டதும் அவன் கலக்கமடைந்தான். அதை விட, இப்படித் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தையையும், அவள் தாயையும் தனியே விட்டுச் சென்றதை எண்ணி, அவள் தந்தையின் மேல் ஆத்திரமாக வந்தது அவனுக்கு
தீடீரென, ஊர்வலத்தில் நெஞ்செலும்பு அதிர வெடிக்கும் வேட்டுச் சத்தம் போல், அவன் மண்டையினுள் வலி கிளம்பியது
நெற்றிப் பொட்டில் ஆரம்பித்த அந்த வலி, ஒரு வினாடிக்குள் புருவங்களில் பரவி, நடு மண்டை வழியே பயணித்து, கபாலத்தில் வந்திறங்கியது. தலையை ஆட்டி ஆட்டி, சரி செய்து கொள்ள முயன்றான்.
இதற்கிடையில், மருத்துவனை வளாகத்தின் நடைபாதையில் ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருந்த ராமசாமி, மருத்துவரைத் தேடித் பிடித்து “இதைப் படிங்க மேடம்” என்று தேன்மொழியிடம், பூக்கண்ணனின் டைரியை எடுத்துக் நீட்டினார்
கூடவே பயிற்சி மருத்துவர் செபாஸ்டினும் இருந்தார். ஒரு சில நிமிடங்களில், மற்ற இரு மருத்துவர்களும் அங்கு இணைந்தனர்.
முதலில் முருகேசனுக்கு நேர்ந்த கதியைப் படித்தனர். அதற்கே அவர்கள் அதிர்ந்து போயினர்
இன்னும் அடுத்தடுத்தப் பக்கங்களில் சிந்தியிருக்கும் குருதியின் கதைகளைப் படித்தால் என்ன ஆவார்களோ என சிந்தித்தவாறு, ராமசாமி அமைதியாக நின்றிருந்தார்.
காட்டுவேல முடிஞ்சிக் கூட்டாளியலோடச் செல வாரஞ் சுத்திப்புட்டு, ஆடியலைஞ்சி வூட்டுக்குள்ளப் போனேன், வீலு வீலுன்னு ஒரே அழுவச் சத்தம்.
என்னடான்னு உள்ள போயிப் பாக்குறேன். கண்ணம்மா குழந்தையோட படுத்துக் கெடக்கா
எனக்கும் புள்ள பொறந்ததுலச் சந்தோசந்தேன். என்ன ஒண்ணு, பொறந்தது பொட்டப் புள்ளையாப் போச்சி.
எம்பொண்டாட்டியோ எழவெடுத்தவ, கெடந்துக் கத்துறா “நீ எங்க போயி மேஞ்சிட்டு வர்ற”னு. கூறு கெட்டவ, நாங் காட்டுக்குப் போவலேன்னா என்னத்த ஆக்கித் தின்னுருப்ப?
சரி அவளுங்கத்திப்புட்டா நாமளுங் கத்திப்புட்டோமுன்னு, அவளச் சமாதானஞ் செய்ய பண்ணையாருகிட்டப் போயி, புள்ள பொறந்த சேதியச் சொல்லி நாலு காசு வாங்கிட்டு வருவோமுன்னு போயிப் பாத்தேன்
சேதியக் கேட்டதும் அவுரு காறித்துப்பிப்புட்டாரு. ‘ஏண்டா மானெங்கெட்டப் பயலே, ஒரு பொட்ட புள்ளியேப் பெத்துப்புட்டு வெக்கமேயில்லாம வந்து நிக்கிறியே!’னு நாக்கப் புடிங்கிக்குற அளவுக்கு கேக்குறாரு.
“இதான்யா மொதப்புள்ள”னு சொன்னேன்
“இங்கக் கேளுடே, ஒனக்கு என்னயிருந்தாலும் அடுத்த வருசமே ஒரு மவம் பொறந்தாலும் ஒம்பொண்ணுதான்டே மூத்தவ என்னிக்கும். உம் பொழப்பு நாறிப் போயிடும்டே. அது மட்டுமாடே? ஒம்பொழப்புக்கு உனக்கும் உம் பொண்டாட்டிக்கும் கஞ்சியூத்தவே நீ மாசக்கணக்குலக் காட்டுலக் கெடக்கணும்.
இதுல ஒம்மவள வேற வளத்து, சோறு போட்டு, கலியாணத்துக்கு சொத்து சேத்து, வரதச்சனயக் கொடுத்துக் கண்ணாலத்த முடிச்சுப்புட்டு நீ வூட்டுக்கு போனா, அங்க வூடு மட்டுந்தேயிருக்கும், உள்ள ஒரு சாமாஞ் சட்டிருக்காது
அப்புடியே கண்ணாலத்த முடிச்சுப்புட்டோமேன்னு நெனச்சா மக்க்யா நாளே புருசன் பொறந்த வூட்டுலேருந்து அதக் கொண்டா இதக் கொண்டான்னு ஊவூட்டுக்குத் தொறத்தி வுடுவான்
எதுக்குடே இந்த நாய்ப் பொளப்பு? நீயிருக்குற நெலமைக்கு இதெல்லாந் தேவயாடே? யோசிச்சி சூதானமா நடந்துக்க”னு சொல்லி, துட்ட எடுத்துக் கொடுத்துப்புட்டாரு.
வூட்டுக்கு போவயில யோசிச்சுப் பாத்தேன். அவுரு சொன்னதுஞ் செரின்னு தான் பட்டுச்சு. இதப் போயி எம்பொண்டாட்டிக்கிட்டச் சொன்னேன்னு வைய்யி, ‘நீ சொன்னது செரிதாஞ் சாமி’னு கள்ளியவா அரைச்சிக் கொடுத்துப்புடப் போறா!
அவகிட்டச் சொல்லாமலேயே சூதானமாக் கள்ளிப் பால கொடுத்துக் காரியத்த முடிச்சுப்புட்டேன். ஆனா பாவி மவ சரியா நாந்தேன் செஞ்சேன்னு கண்டுபுடிச்சுப்புட்டா
எளவு வூடு போல கத்திக்கிட்டுக் கெடந்தவள, செவுள்லயே நாலு வுட்டேன். அன்னிக்குப் போனவ தான். எங்க எப்புடியிருக்கானு இன்ன வரத் தெரியில
இப்படிக்கு, அன்பு பேரன்.
டைரியின் வரிகளை வாசித்த மருத்துவர்கள் நால்வரும், அசைவின்றி அமர்ந்திருந்தனர். மற்றவர் முகங்களைக் கூடப் பார்க்காமல், டைரியையே பார்த்துக் கொண்டிருந்தனர்
#ad
60% off on Kitchen Products in Amazon.in
ராமசாமியோ, டைரியின் வரிகள் அந்த மருத்துவர்களின் முகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.
நா என்னத்தையா பெருசாக் கேட்டுப்புட்டேன்? ஒரு மவனத்தான கேக்குறேன். அதுக்கு என்னவோ எல்லாப் பயலுவலும் வறிஞ்சிக் கட்டிக்கிட்டு வந்து நிக்கிறானுவ
ஏம்ப்டே எனக்கு என்ன பொட்ட புள்ளைங்க மேல போன சென்மப் பகையா இல்ல விரோதமா? அதுங்க நல்லதுக்காண்டித் தானடே இப்புடிச் செய்யிறேன்.
அதுங்க இந்த மண்ணுலப் பொறந்து வளந்து ஆளாவறதுக்குள்ள, பெத்தவங்களையும் நோவடிச்சி, கலியாணங் கட்டிக்கிட்டுப் புள்ளைங்களப் பெத்துப் போட்டுப்புட்டு, புருசனுக்கு புள்ளைக்கும் மத்தியில மாட்டிக்கிட்டு தானும் நோவுறதுக்கு, பொறக்காமலேயே இருந்துறலாம்.
சரி, பொட்டக் கழுததான் பொறக்கணும்னு இருந்தா, அத யாரால மாத்த முடியும்? அதுக்குன்னு அதுங்கள அப்புடியே நோவ விட்டுட முடியுமா என்ன?
பொறந்துப்புடுச்சுன்னா அத அலுங்காமக் குலுங்காம தூக்கியாந்து மடியில போட்டு, கள்ளிய அரைச்சி பாலுலக் கரைச்சி அது வாயில ரெண்டு சொட்டு வுட்டோமுன்னா வலி தெரியாம எஞ்சாமிக்கிட்டவே திரும்பப் போயிடும், அடுத்தப் பொறப்புலயாவது நல்லக் கெடாக் குட்டியா பொறக்கும்.
செல வக்கத்தவனுவ கேப்பானுவ, ஏதோ அவனுவ மாத்தரந்தான் மண்டயிலே மூளைய ரொப்பிக்கிட்டுப் பொறந்தவனுங்க மாதிரி, ‘பொம்பளைங்களே இல்லீன்னா நீயெல்லாம் எப்புடிடா வந்துருப்பே’னு
நா என்னமோ உலகத்துல யாருக்குமே பொட்ட பிள்ளைங்க வேண்டான்ற கணக்குலயில்ல பேசுறானுவ! நம்மள மாதிரி அல்லாடுறப் பயலுக்கெல்லாம் எதுக்குடே பொம்பள புள்ளைங்க?
இப்புடித் தான் தெரு மொகனையிலே இருக்குற மாட்டுக் கொட்டாய் மாணிக்கம் பய, அவனுக்கு ரெட்டப் புள்ளைங்க பொறந்துருக்குன்னு கூரையைப் பிச்சிக்கிட்டுக் கூவிக்கிட்டுக் கெடந்தான்
அதுக்கு முன்னால ரெட்டப் புள்ளைய பாக்காதப் பொம்பளைங்கெல்லாம், அதப் பேசிப் பேசிப் பெரிய சமாச்சாரமாக்கிப் புட்டாளுவ. சரின்னு ஒரு நாளு நாம் போயிப் பாத்தேன். ரெட்டப் புள்ள, ரெண்டும் பொட்டப் புள்ள.
உள்ளயிருந்து வந்த அவம் பொண்டாட்டி, என்னய பாத்ததும் ஏதோ நாய வெரட்டுறாப்புல வெரட்டிப்புட்டா. அட, நம்ம கத அவளுக்குந் தெரிஞ்சிருக்குதுன்னு அப்பத் தான் தெரிஞ்சிக்கிட்டேன்
நடந்து போவயில மாணிக்கம் பயல நெனச்சிக்கிட்டேன். அவங் கெடக்குற நெலையிலே இதெல்லாம் அவனுக்குத் தேவையா?
ரெண்டு எருமையக் கொடுத்து சந்தையில வுட்டு வாடான்னா, சந்தைக்குப் போயிச் சேரும்போது, வெறுங்கயிறுதான் கையில இருக்கும். வழியிலேயே மாடு ரெண்டையும் லவுட்டிகிட்டுப் போயிருப்பானுவ
எரும மேக்கவே துப்பில்லாதப் பய, இவனுக்கெதுக்கு ரெட்டப் புள்ளைங்க? அதுவும் பொம்பள புள்ளைங்க?
இவம்பொண்டாட்டித் தான் இவனுக்கே கஞ்சியூத்துறா. இதே ஒரு மவனப் பெத்துருந்தான்னா நாலுக்கு எட்டு எருமையும், பத்தாததுக்கு செல பன்னிங்களையும் மேச்சாவதுச் சோறு போட்டிருப்பான்.
எங்கய்யா மாத்தரம் அன்னிக்கு துட்டு கேக்கப் போன போது இதெல்லாம் எடுத்துச் சொல்லாம இருந்துருந்தா, நானும் இவனுவளப் போல மக்குப் பயலால இருந்துருப்பேன்!
ஆனா இதெல்லாம் மாணிக்கத்துக்கு எடுத்துச் சொல்ல யாரு கெடக்கா? இன்னிக்கு நல்லா வாய் நெறைய வாழ்த்துவானுவ. நாளைக்குப் போயி ஒதவின்னு நின்னு பாரு, காலணா கொடுக்க கூட கெடந்து யோசிப்பானுவ.
பய கிட்ட எல்லாத்தையும் எடுத்துச் சொன்னேன். கேட்டதும் கதி கலங்கிப்புட்டான். பெறவு சாராயம் உள்ள எறங்கினதுந்தான் நா சொல்ல வந்ததே அவன் மண்டயிலே ஏரினுச்சு
பொறுமையா வெளக்கிச் சொல்லச் சொல்ல பய புரிஞ்சிக்கிட்டான். ஒனக்குச் செரமமாயிருந்தா இத என்னுகிட்ட ஒப்படைச்சிப்புடு, நா பாத்துக்கிடுறேன்னுச் சொல்லிப்புட்டேன்.
ஒரு நாள் மண்டையப் பொளக்குற வெயில்ல மாணிக்கம் வூட்டுக்குப் போனேன். அவம் பொண்டாட்டி குளிக்கிற நேரமாப் பாத்து, ரெண்டு குட்டிகளையும் தூக்கிக்கிட்டு முள்ளு காட்டுக்குள்ள எறங்கிட்டேன்
கருமம் எந்த நேரத்துல அதுங்க ரெண்டும் பொறந்துச்சோ தெரியிலே ஒரு கள்ளிச் செடி கூட கண்ணுலப் படலே, பூராத்தையும் வெட்டியெறிஞ்சிருக்காளுவ
ஊருக்குளேயோ ஆத்தாக்காரி இந்நேரம் ஒப்பாரி வெச்சி ஊரக் கூட்டியிருப்பா. அவளுக்கு மொத டவுட்டு நம்ம மேலதான் வரும். ஆளுங்கத் தேடிக்கிட்டு வர்றதுக்குள்ள காரியத்த முடிக்கணுமேன்னு எனக்கு உள்ளுக்குள்ள அடிச்சிக்கிடுச்சு.
ஆளுங்க ஓடியார்ற சத்தம் கேட்டுருச்சு. இதுங்களோ வெயில் தாளாம கெடந்து அலறுதுங்க. அவனுவளோ என்னப் பாத்துப்புட்டானுவ. மாணிக்கம் பொண்டாட்டியும் அவனுவளோட சேந்து ஓடியாறா. எனக்கு என்னச் செய்யிறதுன்னேத் தெரியிலே.
நெஞ்சுலாம் அடிச்சிக்கிட ஆரமிச்சிடுச்சு. அவசரத்துக்கு வவுத்துச் சுருக்குலச் சொருகியிருந்த கத்திய எடுத்து ரெண்டுத்தோட கழுத்தையும் அறுத்துப்புட்டேன்
அதப் பாத்த ஆத்தாக்காரி வெறிப் புடிச்சி அலறிக்கிட்டே ஓடி வந்தா. கூட வந்தப் பயலுவ அருவாக் கத்தியெல்லாம் வீசியெறிஞ்சானுவ. அதுல ஒண்ணு எம் பின் தொடையப் பொளந்துப்புடுச்சு
ஆனாலும் நிக்கிலியே, எப்புடியோ நெளிஞ்சி நெளிஞ்சி ஓடி பொதருக்குள்ளப் பூந்துத் தப்புச்சிப் புட்டேன். அன்னிக்கு மாத்திரம் நா அவய்ங்களுட்டச் சிக்கியிருந்தேன், என்னயக் கண்டந் துண்டமா வெட்டி காடு முழுக்கப் போட்டுருப்பானுவ.
ஆனா ஒன்ணு சொல்லுறேன். அன்னிக்கு எந்தொடையக் கிழிச்சி வந்த ரத்தம் எரிஞ்சிதோ இல்லியோ, அந்தக் குட்டிங்களோட ரத்தம் சூடா எங்கையில விழுந்தது இன்னிக்கு வரைக்கும் எரிஞ்சிக்கிட்டே கெடக்கு.
இப்படிக்கு,
அன்பு பேரன்.
கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட, அதற்கு மேலும் அங்கு உட்கார முடியாமல், சட்டென அங்கிருந்து வெளியேறினார் மூத்த மருத்துவரான செழியன். கூடவே அவரது கையாளும் வெளியேறினார்
செபாஸ்டினோ, கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து நின்றவர், பின் அவரும் வெளியே சென்றார். ஆனால் தேன்மொழியோ கண்களில் நீர் ததும்ப, இறுகிய முகத்தோடு அமர்ந்து, “என்ன அண்ணே செய்யிறது இவன?” எனக் கேட்டார்.
“இந்தக் கேள்விய மத்த மூணு பேருல ஒருத்தரு தான் கேப்பாங்கனு நெனச்சேன். இந்தக் கொடுமையை கடைசி வர வேற படிச்சிருக்குறீங்க. உங்க மனசுல இவ்வளோ திடமிருக்குனு தெரியாமப் போயிடுச்சு” என்று ஆச்சர்யமடைந்தார் ராமசாமி.
“என் மனசையே திடமுன்னு சொன்னா, பெத்தக் கொழந்தைங்க தன் கண் முன்னாலேயே துடிச்சு சாவுறதப் பாத்த அந்தப் பொண்ணோட மனச என்னனு சொல்லுவீங்க” என்றார் தேன்மொழி.
ராமசாமி அமைதியாக இருந்தார். சற்று நேரத்தில், மற்ற மூவரும் உள்ளே வந்தனர்.
“இவ்வளோ செஞ்சிருக்கானே, இவன் உயிர காப்பாத்தவா நாம அத்தன போராடினோம்? இவன இப்புடியேவா விடறது?” என்றார் செழியன்.
“இவனக் கருணைக் கொலை செஞ்சிருக்கலானு கூட எனக்கு தோணுது. இப்போக் கூட, ஒரு ஊசிய போட்டு இவனக் கொல்ல ரொம்ப நேரமாகாது. ஆனா அதுக்கா நாம கோட்டு போட்டுகிட்டு இங்க இருக்கோம்?” என்றார் தேன்மொழி
பின் அவரே தொடர்ந்தார், “இப்போ அவனுக்குள்ள வாழ்ந்த அந்தக் கொலைகாரனோட நினைவே இல்லாம தான் இருக்கான். ஆனா என்ன தான் நினைவில்லேனாலும், இவனோட கைகள் தான கொலையெல்லாம் செஞ்சிது
கொலை செஞ்சது இவனோட உடம்பா இல்ல தொலைஞ்சிப் போன இவனோட மனசா? நினைவு போயிடுச்சுன்னா செஞ்ச கொலையெல்லாம் இல்லனு ஆயிடுமா? ஆனா அதுக்குனு இப்போ அப்பாவியா இருக்குற இவன தண்டிக்க முடியுமா?”
தேன்மொழியின் இந்தக் கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல இயலவில்லை.
“சரி இப்போ இவனுக்கு மறந்ததெல்லாம் நினைவுக்கு வராதுனு என்ன நிச்சயம்? அவன இங்கேயே நாம ஏதாவது செய்யிறது தான் சரினு தோணுது” என்றார் செழியன்.
“தொலைஞ்ச ஞாபகம் அவன் நினைவுக்கு வந்தா, மறுபடியும் இதையெல்லாம் செய்ய அவன் தயங்க மாட்டான்” என்றார் தேன்மொழி.
“அதுக்கு தான் சொல்றேன், அவன இங்கயே ஏதாவது செஞ்சிடலாம்.” என்றார் செழியன் மீண்டும்
“ஏதாவதுனா என்ன? கொலையா? உங்கள விட ஒரு தாயா எனக்கு அவன் மேல இருக்குற ஆத்திரம் அதிகம். அவன இங்கேயே கழுத்தறுத்து போடுற அளவுக்கு கோவம் வருது” என்றார் தேன்மொழி
இதைச் சொல்லும்போது தேன்மொழியின் கண்கள் சிவந்து, கோபம் தெறிப்பதை அங்கிருந்த அனைவரும் கண்டார்கள். அதற்கு முன் அவரை அப்படி யாரும் பார்த்ததில்லை
யாரும் எதுவும் பேசும் மனநிலையில் இல்லாதது போல் மௌனமாய் இருக்க, தேன்மொழி தொடர்ந்தார். “அவன கொன்னு போட அஞ்சு நிமிஷம் ஆகாது. அப்படி செஞ்சா அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசமிருக்கு? அதுவும் உயிரக் காப்பாத்துறத் தொழில்ல இருந்துகிட்டு நாம அப்படி செய்யறது சரியா? எல்லாத்துக்கும் மேல, அவன் இப்போ நம்மோட பேஷண்ட்”
உணர்ச்சிவசத்தில் தொண்டை அடைக்க சற்று நிறுத்தி, பின் மீண்டும் பேசினார், “கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவன் உயிரக் காப்பாத்தப் போராடின நாமளே, இப்போ அவன் உயிர எடுக்கறத பத்தி பேசுறோம்…” என வேதனையுடன் கூறியவர், “பேசாம போலீஸ்ல சொல்லிறலாம், அவங்க சட்டப்படி என்ன செய்யணுமோ செய்யட்டும்” என்றார் முடிவாய்
முதல்முறையாக தேன்மொழியின் கருத்து அனைவராலும் ஆமோதிக்கப்பட்டது.
#ad
இந்த பேச்செல்லாம் மருத்துவமனையினுள் நடந்து கொண்டிருந்த அதே வேளையில், வெளியே மரத்தடியில் வலி மண்டையைப் பிளக்க, வேதனையில் துடித்துக் கொண்டிருந்தான் பூக்கண்ணன்.
அருகிலிருந்த சிறுமியோ, “என்னாச்சி, என்னாச்சி” என்று கேட்ட வண்ணமாயிருந்தாள்.
“ஒண்ணுமில்ல, தல என்னமோ ரொம்ப வலிக்குது. டாக்டரம்மாவத்தான் எனக்குத் தெரியுமே, ஏதாவது மாத்தரை வாங்கி முழுங்கிப்புட்டாச் சரியாயிடும். நீ பதறாத” என அந்த நிலையிலும் சிறுமியை சமாதானம் செய்தான் பூக்கண்ணன்.
பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் பார்வை மங்கியது. வலி தலையைக் குடைய, மண்டையைப் பிடித்து அழுத்தினான்
அணையை உடைத்துக் கொண்டு பெருக்கெடுக்கும் வெள்ளம் போல், ஏதேதோ எண்ணங்கள் அவன் மனதில் பாய்ந்தன
மனிதனால் தனது எண்ணங்களையே கட்டுப்படுத்த முடியாது என்பதை, அன்று தான் அவன் உணர்ந்தான்.
பாய்ந்து வரும் எண்ணங்களில் பலவிதமான முகங்கள். அடையாளம் தெரிந்ததும் திடுக்கிட்டுப் போனான்
டைரியின் பக்கங்களைப் போல், அவன் மனதின் கறை படிந்த பக்கங்கள், அவன் மனக்கண் முன் புரளத் தொடங்கின. அதில் தான் எத்தனையெத்தனை முகங்கள்
காட்டாற்றில் மாடு குளிப்பாட்டிய வாலிபர்களும், கூரிய முகங்கொண்ட பொன்னம்மாவுங்கூட அவன் மனதில் தெள்ளத் தெளிவாக உதித்தனர்
ஆனால் கூடவே இருண்ட உலகிலிருந்து கண்ணம்மாவும், அவனது குழந்தையும், முருகேசனும், மாணிக்கமும், அவன் மனைவியும், அவ்விரட்டைப் பிஞ்சுகளும் ஒன்றன் பின் ஒன்றாகவும், ஒன்றாய்ச் சேர்ந்து பலவாகவும் அவனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தனர்
பின் அவர்களே காடலறக் கதறினர். இரட்டைக் குழந்தைகள் கழுத்தில் குருதி வழிய ஓலமிட்டன. மனத்திரையில் அவனே தன் குழந்தையின் குருதியை எடுத்து முகத்தில் பூசிச் சிரித்தான்
முருகேசனோ, “நா லாரி கீழ படுக்க மாட்டேன் நீ என்ன அரைச்சிடுவ” என்று இவன் கைகளைப் பிடித்து பரிதாபமாய்க் கதறினான்.
பூக்கண்ணன் தன் மனத்திரையில் தெரியும் யாவும் பொய்யென நம்ப முயற்சித்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் உண்மை அவன் முகத்தைக் கிழிக்கும் வண்ணம், அவனை அறைந்தது
அவன் தன்னையே பார்த்துப் பயந்தான். தான் இப்படிப்பட்ட ஒரு ஆளா என்று கதறினான்.
அதைக் கண்ட அந்த சிறுமி, “எங்கப்பா அழுவராட்டமே நீயும் ஏன் அழுவுற?” என பாவமாய்க் கேட்டாள்
அச்சிறுமியின் குரல், எண்ணச் சிறையிலிருந்து அவனை தற்காலிகமாக வெளியே எடுத்து வந்து போட்டது
“உங்கப்பாவும் என்னாட்டந்தான் அழுவானா? ஏன் அழுவான்?”
“என் அக்கா செத்துப் போச்சுல்ல, அத நெனச்சிதான்…”
“உன் அக்கா எப்பு…” எனக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அவன் பார்வையில் ஒன்று தட்டுப்பட்டது
அதைக் கண்டதும், அவனின் இருதயம் துடித்தே செத்தொழிவது போல் அவ்வளவு வேகமாகத் துடித்தது. மூச்சுக் காற்றை இழுப்பது கூட சிரமமாகிப் போனது.
அச்சிறுமியின் வலது காதின் கீழே, கழுத்தின் மேல் தன் இடது கையை வைத்து மிருதுவாகத் தடவினான்
அவன் விரல்களினிடையே ஆழமாகத் தையல் போட்டிருந்த வடு ஒன்று தென்பட்டது. அவனின் விரல்கள் அதை வருட, பயம் அவனைச் சூழ்ந்தது. தான் கண்ட காட்சி கனவாக இருக்கக் கூடாதா என ஏங்கினான்.
சிறுமியின் கழுத்தில் இருந்து கையை விலக்காமலே, “உன் அக்கா எப்புடிச் செத்தா?” என்று கேட்டான் பூக்கண்ணன்
“சின்ன வயசுல ஏதோ கழுத்துல அடிபட்டு செத்துருச்சாம்” என்றது குழந்தை
பயத்தில் அவன் இதயம் நின்று விடும் போல் உணர்ந்தான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டான், “நீயும் உன் அக்காவும் ரெட்டப் பிறவிங்களா?”
அவள் ஆமென்று தலையசைக்க, ‘ஐயோ’ வென்று ஓலமிட்டுக் கதறினான்
அவனின் கண்ணீர், வெடித்த ரத்த நாளங்களில் இருந்துக் கசியும் உதிரமாய், கண்களின் வழியே கசிந்தது
அவன் அழுததைக் கண்டு பயந்து, சிறுமியும் அழத் தொடங்கினாள்
அந்நேரம் அங்கு வந்த ராமசாமி, ஏதோ அசம்பாவிதம் நிகழப் போகிறதென பதறியவராய், “பூக்கண்ணா அந்தப் புள்ளைய விட்டுருடா, ஏதுஞ் செஞ்சிறாதடா, பூக்கண்ணா” என்று கத்திக் கொண்டே வந்தார்
எதுவும் காதில் விழாமல், துக்கமும் குற்றவுணர்வும் பூக்கண்ணனை அழுத்திச் சூழ்ந்திருந்தன. அழுது கொண்டே “என்ன மன்னிச்சிடுத் தாயி” என்றான் சிறுமியிடம்
ஏதும் புரியாமல் “அம்மா அம்மா” என கத்தியது பிள்ளை
பூக்கண்ணன் சிறுமியை நெருங்க, ராமசாமி அவனைப் பிடித்து இழுத்தார்
அதே நேரம், பிள்ளையில் அழுகுரல் கேட்டு என்னவோ ஏதோவென பதறியவளாய் அங்கு வந்து சேர்ந்தாள், நிறைமாத கர்ப்பிணியாய் சிறுமியின் தாய்
சில ஆண்டுகளுக்கு முன், தன் ரெட்டை குழந்தைகளின் உதிரத்தை கண்டு பதறிக் கதறிய அதேத் தாய்
பயத்தில் அகண்டிருந்த அவளின் கண்கள், பூக்கண்ணனைப் கண்டதும் பழைய கொடிய நினைவுகள் யாவும், அவள் கண் முன் விரிந்தன
பயமொரு கண்ணிலும், கொதிக்கும் தணல் ஒரு கண்ணிலும் தெரிய, தன் மகளை அவனருகிலிருந்து தன்னிடம் பிடித்து இழுத்தாள்.
“என்ன மன்னிச்சுடு ஆத்தா” என்று அவளைப் பார்த்துக் கதறினான் பூக்கண்ணன்.
“என்னடா செய்ய வந்துருக்க எங்கொழந்தைய? அவப் பொழச்சதுப் புடிக்காமத் திரும்பி வந்துட்டியா? என்னடா பாவஞ் செஞ்சா அவ ஒனக்கு?” தன் மகளை இறுக அணைத்துக் கொண்டு அலறினாள்.
“அய்யய்யோ அப்புடிலாம் நெனக்காத தாயி, புத்தி கெட்டுப் போயி நா செஞ்ச பாவத்துக்கெல்லாம் உன் காலுல வுழனுந் தாயி” என்று சொல்லிக் கொண்டே ராமசாமியின் பிடியிலிருந்து நழுவி, அவளின் காலில் விழச் சென்றான்.
காலில் விழக் குனிந்த நேரத்தில், அவனிடுப்பில் சொருகியிருந்த கத்தி கீழே விழுந்தது
தரையில் கிடந்த கத்தியைப் பார்த்தான், உடனே ரௌத்திரமாய் தன்னை பார்த்துக் கொண்டிருந்த அந்த தாயின் முகத்தையும் பார்த்தான்
அந்த ஒரு நொடிப் பார்வையில், எத்தனை எத்தனையோ அர்த்தங்களை அவளிடம் கடத்தி விடப் பார்த்தான்!
கத்தியை தன் இடுப்பில் வைத்திருந்ததற்கு, அந்நொடி வருந்தியதைப் போல், வேறெதற்கும் வாழ்நாளில் அவன் வருந்தியதில்லை
அவன் கூறிய வார்த்தைகள் யாவும், அக்கத்தியால் ஒரு நொடியில் சுக்குநூறாய் உடைந்ததை அவன் உணர்ந்தான்.
தன் மூத்த மகளைப் பறிகொடுத்த உணர்வும், தன் இன்னொரு மகளைக் காப்பாற்ற வேண்டுமே என்கிற பரிதவிப்பும் ஒரேப் பொழுதில் அந்த தாயைத் தாக்க, கீழே கிடந்த கத்தியை கைப்பற்றினாள்
வேறெதைப் பற்றியும் சிந்திக்காமல், அக்கத்தியைக் கொண்டு சரமாரியாக அவன் உடலைக் கிழித்தவள், இறுதியில் அவன் மார்பில் இறக்கினாள்
பிஞ்சு உயிரைக் காவு வாங்கிய அதேக் கத்தியை, தன் உடலில் ஏந்திக் கொண்டு, மண்டியிட்டுக் குப்புற விழுந்தான் பூக்கண்ணன்
அந்த தாயோ, பலநாள் அழுகையை அணை கட்டி வைத்திருந்தது போல், “ஓ”வென கதறித் தீர்த்தாள்.
நொடிகளில் எல்லாம் கைமீறிப் போய்விட்டதை உணர்ந்த ராமசாமி, சிறுமியையும் தாயையும் அங்கிருந்து செவிலியர்கள் உதவியோடு வெளியேற்றினார்
மருத்துவர்கள் வந்து பார்த்த போது, நெஞ்சு பிளவுபட்டு குருதியின் குளத்தில் இறந்து கிடந்தான் பூக்கண்ணன்.
பல வருடங்களாய் அவன் கைகளில் எரிந்து கொண்டேயிருந்த அந்த சிசுவினுடைய உதிரத்தின் தணல், கடைசியாக அக்கணத்தில் அடங்கியது
(முற்றும்)
Good writing, and good ending.
Thank you