in

என்னவன் ❤ (சிறுகதை) – கரோலின் மேரி – December Contest Entry 14

என்னவன் ❤ (சிறுகதை)

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்தும், தனக்கு தனிமையை மட்டுமே துணையாக தரும் தன்னவனை  நினைத்து வேதனையடைந்தாள் மதியழகி

காதல், கல்யாணம் என்று பல நிகழ்வுகளை தன் கனவுகளின் நாயகனுடன் கண்டவள். அவளின் ஆசைகள் அனைத்தும் நிராசையாகும் என முன்பே அவள் அறிந்திருக்கவில்லை.

அவளின் திருமணம் பெற்றோரால் முடிவு செய்யப்பட்டது. எந்த கேள்வியும் கேட்காமல், சம்மதம் தெரிவித்தாள். அதற்குக் காரணம் வேழவேந்தனின் முகம் 

மற்றவர்களின் எண்ண ஓட்டத்தில் அது சாதாரண புகைப்படம் தான், ஆனால் அதை ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே புலப்படும் அவனின் விழிகளில் இருக்கும் வலி

அந்த கண்கள் ஏதோ ஒன்றை யாசித்து நிற்பது போல், அவளுக்குத்  தோன்றியது. அவனுக்கு ஆதரவாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாள்.

ஆனால் அவனோ, யாருடைய ஆதரவும் எனக்கு வேண்டாம் என்பது போல் அவளை தவிக்க விட்டான்

ன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தவளை தடை செய்தது வேழவேந்தனின் வருகை. கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்தான்

மனைவியின் முகம் தன்னைத் கண்டதும் புத்தம் புது மலராக மலர்வதை உணர்ந்தே இருந்தான். அதிலும், அந்த மை விழிகளில் காதலை நிரப்பிக் கொண்டு பார்ப்பதை கண்டும் காணாதவன் போல் அறைக்குள் சென்றான் 

மோப்பக் குழையும் அனிச்சமாய் மதியழகியின் முகம் வாடியது

மனைவியின் முகமாற்றத்தை உணர்ந்தும், அவன் எதுவும் பேசவில்லை.

சிறிது நேரத்தில், “காபி” என அவன் முன் சென்று நின்றாள்.

“ம்ம்ம்…” என்றவாறு அதை வாங்கிக் கொண்டான்.

“ரொம்ப வேலையா?” என்றவள் அக்கறையான கேள்விக்கு 

“இல்ல… எப்பவும் போல தான்” என்ற அவனின் பதிலில், சற்று தைரியம் வர பெற்றவளாய் 

“வெளியே எங்கேயாவது போலாமா?” என ஆவலுடன் கேட்டாள் 

அடுத்து அவன் கூறிய பதிலில் அவளுடைய ஆவல் அடங்கி போனது

“உனக்கு ஆசையாக இருந்தால் நீ மட்டும் போ” என்றான் சுவரைப் பார்த்தபடி 

அவனின் பாரா முகம் அவள்  மனதில் பாரத்தை ஏற்றியது

“என் கூட எங்கேயும் வரக் கூடாதா?” என்று ஏக்கம் நிரம்பிய குரலில் வினவ

அதற்கு அவளை அமைதியாக ஒரு பார்வை பார்த்தவன், பதில் கூறாமல் தலையை மட்டும் அசைத்தான் 

என்றுமே அவன் முன் தன் உணர்வுகளை காட்டாதவள், ஏனோ இன்று  கட்டுப்படுத்த முடியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

அதைக் கண்டு பதறியவன், “மகி” என எழுந்து அருகில் வர

“வேண்டாம்” என்பது போல் கரங்களால் சைகை செய்து விட்டு, தன் அறைக்கு ஓடினாள்.

கண்ணீருடன் செல்பவளை, கண்களில் வலியோடு பார்த்தான் வேழவேந்தன்

அறைக்குள் சென்ற மதியழகி, மனதில் இருக்கும் பாரம் இறங்கும் வரை அழுது தீர்த்தாள் 

அவனுக்காக தன் மனதில் கட்டிய காதல் கோட்டை தரை மட்டமானது போல உணர்ந்தாள்.

எத்தனை முறை தன் காதலை அவனிடம் கூற முயன்றும், கடைசியில் அவளுக்கு தோல்வியே மிஞ்சியது 

எதுவும் சாப்பிடாமல் அப்படியே உறங்கி விட, அவனும் அவளை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டான்.

காலையில் எழுந்தவுடன் மனைவியிடம் சென்றவன், அவள் எழாமல் இருக்கக் கண்டு, சந்தேகத்துடன் நெற்றியில் கை வைத்து பார்க்க, காய்ச்சல் இருப்பதை உணர்ந்தான் 

“மகி மகி” என மெல்ல எழுப்ப, அவளிடம் அசைவே இல்லை. அவனின் பயம், பதற்றம் இரண்டும் அதிகமானது.

பல முறை அழைத்தும் பலன் இல்லாமல் போக, தன்னுடைய நண்பன் கதிரவனுக்கு போன் செய்தான்.

அவன் ஒரு மருத்துவன். வேழவேந்தனின் ஆருயிர் தோழன்.

சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த கதிரவனை, மனைவியிடம் அழைத்துச் சென்றான்.

அவளை பரிசோதனை செய்து விட்டு, “என்ன வேழா காய்ச்சல் இவ்ளோ அதிகமா இருக்கு, இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த.  ஏன் இப்படி அக்கறை இல்லாமல் இருக்க?” என நண்பனை கதிரவன் கடிந்து கொள்ள

“சாரி கதிர்… கொஞ்சம் வேலை அதான்” என ஏதோ சொல்லி சமாளித்தான் 

“வேலை தான் முக்கியமா உனக்கு?”

“அப்படி இல்லடா… இனிமே இந்த மாதிரி நடக்காது, நான் பார்த்துக்கறேன்” என்றான் நண்பனின் பார்வையை தவிர்த்து 

“ம்ம்… சிஸ்டர் எந்திரிச்சதும் சாப்பிட ஏதாவது தந்துட்டு, அப்புறம் இந்த மாத்திரை எல்லாம் குடு சரியா. ரெண்டு நாள்ல காய்ச்சல் சரியாகலைனா நம்ம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வா, எதுக்கும் பிளட் டெஸ்ட் பண்ணிக்கலாம்” என நண்பன் கூற 

“சரி டா” என்ற வேழேவேந்தன், நண்பனை வழியனுப்பி விட்டு வீட்டினுள் வந்தான் 

அவன் முகத்தில் சொல்ல முடியாத வேதனை இருந்தது, மனைவி கண் விழிக்க அருகிலேயே காத்திருந்தான் 

சிறிது நேரத்தில் கண் விழித்தவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்தான் வேந்தன் 

“எதுக்கு டாக்டர வரச் சொன்னீங்க? அப்படியே விட்டிருந்தா உங்களுக்கும், பூமிக்கும் பாரமில்லாம போயிருப்பேன்” என பலவீனமான குரலில் கேட்க

அடுத்த நொடி, “மகி”என்று அலறியவாறு அவளை வாரி அணைத்துக் கொண்டான் வேந்தன் 

அவளுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை என்றாலும், இப்படி இருப்பதே சுகம் என்பது போல், அவன் அணைப்பை ஏற்றுக் கொண்டாள்

அவளின் முகத்தை நிமிர்த்தியவன் , “என்ன வார்த்த சொல்ற மகி?” என வலி நிரம்பிய குரலில் வேந்தன் கேட்க, மதியழகி மௌனமாய் அவன் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் 

அவளின் அமைதி அவன் அறிந்த ஒன்றே என்பதால், “சரி இப்ப எதுவும் பேச வேண்டாம், நீ முகத்த கழுவிட்டு வா சாப்பிடலாம்” என்றான் 

மறு வார்த்தை பேசாமல் எழுந்து சென்றாள் அவள். அதன் பின் அவளுக்கு தன் கைகளால் உணவை ஊட்டி விட்டு, மாத்திரைகளை தந்து உறங்க வைத்தான்.

தாய் போல தன் தாரத்தை தாங்கினான். இரண்டு நாட்கள் அமைதியாக செல்ல, மதியழகியின் காய்ச்சல் குணமாகியது 

இரவின் தனிமையில் மதியழகி அறைக்கு சென்றவன், மனைவியின் அருகில் அமர்ந்து, அவள் கரங்களை பற்றிக் கொண்டு பேச தொடங்கினான் வேந்தன் 

“உன்ன விலக்கி வெச்சு ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். நான் செஞ்சது சரியா தப்பானு எனக்கு தெரியல. ஆனா அதுக்கு காரணம் என்னோட பயம் தான்” என்றவனை புரியாமல் பார்த்தாள் 

“என்ன பயம்?”

“சொல்றேன்… நான் பொறந்ததுமே என்னோட அம்மா இறந்துட்டாங்க, எனக்கு விவரம் புரியற வயசுல அம்மா சாவுக்கு நான் தான் காரணம்னு எல்லாரும் பேசினதை கேட்டேன். அப்பாவும் என்னை வெறுத்தார், எப்பவும் விலகியே தான் இருந்தார். அப்புறம் அவருக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி சித்தி வந்தாங்க. சித்தி என்னை பார்க்கும் போதெல்லாம் ராசி இல்லாதவன், அம்மாவை சாகடிச்சு பொறந்தவன்னு பேசுவாங்க” என்றவன் பெருமூச்சுடன் நிறுத்த, அவனுக்கு ஆறுதல் தரும் வகையில் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்  மதியழகி

வார்த்தைகளால் தர முடியாத  ஆறுதலை, அவளின் செய்கை அவனுக்குத் தந்தது 

மீண்டும் தொடர்ந்தான், “சித்திக்கு குழந்தை பொறந்ததும், அப்பா என்னை சுத்தமா மறந்து போயிட்டார். நானும் தனியா இருக்க பழகிட்டேன், தம்பிக கூட என்கிட்ட பேச மாட்டாங்க. நாளாக ஆக எல்லோரும் சொல்லி சொல்லி  ‘நான் ராசி இல்லாதவன்’னு என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு

உன்னோட போட்டோ பாத்ததுமே எனக்கு ரெம்ப பிடிச்சு போச்சு, அதுவும் உன்னோட மைவிழி கண்கள்… அப்படியே நான் சரண்டர் ஆகிட்டேன்னு தான் சொல்லணும் ஆனால்…” என்று இழுத்தவன், மனைவியின் முகம் காண, அவனின் தோளில் முகத்தை புதைத்து இருந்தவள், கண்களாலேயே என்னவென வினவினாள்

“நாங்க பெண் பார்க்க வரோம்னு சொன்னப்ப, உனக்கு காய்ச்சல்னு சொன்னாங்க. உடனே எங்க வீட்டில் என்னோட ராசி தான் காரணம்னு பேச ஆரம்பிச்சாங்க. எனக்கும் பயம் வந்துருச்சு, என்னால உனக்கு ஏதாச்சும் ஆகிடும்னு பயந்து, நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனா நான் உன்னிடம் சொல்லாத என் காதல், உன்னை எனக்கே குடுத்துருச்சு. இருந்தாலும் என் பயத்தால உன்னை விட்டு விலகியே இருந்தேன்” என வேந்தன் முடிக்க 

“அய்யோ உங்க பயத்தை என்னனு சொல்றது? எனக்கு காய்ச்சல் எல்லாம் ஒண்ணுமில்ல. அப்போ, அது நான் வண்டி ஓட்டி பார்க்கும் போது கீழ விழுந்துட்டேன், கொஞ்சம் அடி வேற, அதை எப்படி சொல்லுறதுனு தான் இப்படி சொன்னாங்க. எனக்கும் உங்க போட்டோவை பார்த்துமே பிடிச்சுடுச்சு. எப்படி சொல்ல… முதல் பார்வையிலேயே என் மனசுக்குள்ள வந்துட்டீங்க. ஆனா அதுக்குள்ள நீங்க அவசரப்பட்டு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க. எனக்கு ரெம்ப ஏமாற்றமாயிடுச்சு, எப்படியோ எங்க வீட்ல பேசச் சொல்லி, கல்யாணத்துக்கு ஓகே வாங்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என மெல்லிய கோபத்துடன் அவள் கூற 

“சாரிடா  அப்பவே உன் மனசுல நான் இருப்பேன்னு எனக்கு தெரியல, ஆனா கல்யாணத்துக்கு அப்பறமும் நீ  சந்தோஷமா இல்லையே. எல்லாத்துக்கும் காரணம் என்னோட தேவையில்லாத பயம் தான்” என வருந்தினான் வேழவேந்தன்

“விடுங்க… அது உங்க தப்பில்ல. சின்ன வயசுல இருந்து எல்லாரும் அப்படியே சொல்லி சொல்லி உங்க மனசை ரணமாக்கிட்டாங்க. இதை  நீங்க மொதலே என்கிட்ட சொல்லியிருக்கலாம்” என்றாள் குறையாய் 

“நீ எப்படி எடுத்துப்பயோனு தயக்கமா இருந்தது மகி, அதான் சொல்லல” என்றபின், சில நொடிகள் மெளனமே மொழியாக ஆட்சி செய்தது.

பின் வேழவேந்தன், “எதுக்கு மகி அப்படி ஒரு வார்த்த சொன்ன? போய் இருப்பேன்னு” என மறுபடியும் வலியோடு கேட்டான் வேந்தன் 

வார்த்தைகளின் வீரியத்தை உணர்தவளாய், “சாரிங்க ஏதோ கோபத்துல பேசிட்டேன்” என மன்னிப்பு வேண்டினாள்

“பரவால்ல விடு. வேற என்ன வேணா பேசு, எப்பவும் அந்த வார்த்தை மட்டும் வரக்கூடாது” எனவும் 

“அப்போ காலை வரைக்கும் பேச தான் போறோமா?” என சோகமாய் அவள் கேட்க 

அவளின் குறும்பை உணர்ந்தவன், “ஆமா பேசப் போறோம், அதுவும் சத்தமில்லாத காதல் பேச்சுகளை” என்று கண் சிமிட்டி அணைத்துக் கொண்டான், அவளை ஆளும் வேந்தனாக

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இயற்கை (சிறுகதை) – P. ரேஷ்மா – December Contest Entry 13

    நம்பிக்கை (கவிதை) – சாந்தி மாரிமுத்து – December 2020 Contest Entry 15