sahanamag.com
சிறுகதைகள்

இயற்கை (சிறுகதை) – P. ரேஷ்மா – December Contest Entry 13

“கதிரேசா… கதிரேசா” என்ற அழைப்பில், தூங்கிக் கொண்டிருந்த கதிரேசன், தன் அண்ணன் வேலுமணியின் குரல் உணர்ந்து எழுந்து அமர்ந்தான்

“இதோ வந்துட்டேண்ணே” எனவும்

“மெல்ல வா தம்பி… ஒண்ணும் அவசரமில்ல” என்றார்

சட்டை பட்டனை போட்டபடி முன்னறைக்கு வந்தவன், “வாங்கண்ணே” என்றபடி எதிரில் இருந்த மடக்கு நாற்காலியை விரித்துப் போட்டு அமர்ந்தவன், “வேணி அண்ணன் வந்திருக்காரு” என உள்நோக்கி குரல் கொடுத்தான்

“வேணி பேசிட்டு தான் போச்சு, நீ உக்காருப்பா” என்றவர்

“நம்ம வயல்ல வேலைப் பாக்குற செல்லம்மா மகளுக்கு கல்யாணம்னு உன்கிட்ட சொன்னனே, நாம தான் முன்னாடி இருந்து நடத்தி வெக்கணும். செல்லம்மா புருஷன் நம்ம நிலத்துல கம்பி தாக்கி செத்ததுல இருந்து, ஒத்தப்புள்ளய வச்சுக்கிட்டு கஷ்டப்படுது”

“ஆமாண்ணே கண்டிப்பா நாம முன்ன நின்னு செய்யணும்” என்றவன்

“அது சரி, அண்ணி நாளைக்கு காலைல ஊருக்கு போறதா  வேணிகிட்ட சொன்னாங்களாம். நின்னு பேசறதுக்குள்ள ஆள் வந்ததுனு கெளம்பிட்டதா சொன்னாப்ல” என கேள்வியாய் ஏறிட்டான்

“ஆமா கதிரேசா, உங்க அண்ணியோட அம்மா கொஞ்சம் முடியாம இருக்காங்கனு தகவல் வந்தது, அதான் போறா. நம்ம வயலுல இருந்து கொஞ்சம் நெல்லும் தர்பூசணி பழமும் குடுத்தனுப்பலாம்னு இருக்கேன், அதான் உங்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு…” என தயக்கமாய் நிறுத்த

“இதெல்லாம் எங்கிட்ட கேட்கணுமாண்ணே? யாருக்கு தரோம், பாவம் சிரமத்துல இருக்கற நம்ம அண்ணி குடும்பத்துக்கு தான” என்றான்

“இல்ல கதிரேசா முறைனு ஒண்ணு இருக்கல்ல. தாயும் புள்ளைனாலும் வாயும் வயிரும் வேற தான?அந்த நிலத்துல உனக்கும் உரிமையிருக்கு அப்புறம் உங்கிட்ட கேக்காம எப்படி” என தன்னை நியாயப்படுத்தினார்

“நீங்க என்ன செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும்ணே” என்றான் கதிரேசன்

“அப்புறம் கதிரேசா நம்ம வயல்ல வேலை செய்யற சிலர் ஏதோ முக்கியமா பேசணும்னு வீட்டுக்கு வந்தாங்க. நீயும் இருக்கறப்ப பேசறது தான் முறைனு நான் வயலுக்கு வரேன்னு அனுப்பிட்டேன் போவமா?” எனவும்

“அண்ணா இருங்க” என்றவன், “வேணி என்ன பண்ற உள்ள, அண்ணனுக்கு காபி கொண்டா” என்றான்

“அதெல்லாம் வந்ததுமே ஆச்சு… கொழந்தை அழுவுதுனு வேணி உள்ள போனா, தொந்தரவு பண்ணாத” என கூறிக் கொண்டிருக்கும் போதே, வெளியே வந்தாள் வேணி

“இருங்க மாமா சாப்ட்டுட்டு போலாம்” என உபசரிக்க

“இருக்கட்டும்மா… நம்ம வீடு தான, இன்னொரு நாள் வரேன். கதிரேசன கூட்டிட்டு போகத் தான் வந்தேன்.  போவமா கதிரேசா?” எனவும்

“போலாண்ணே” என்றவன், “வயல் வரைக்கும் போயிட்டு வந்தர்றேன் வேணி” என மனைவியிடம் விடைபெற்றான்

“ஆங்…  போய்ட்டு வாங்க” என விடை கொடுத்தாள்

“அண்ணா… என்ன விஷயமா நம்மகிட்ட பேசனுமாம்” செல்லும் வழியில் வேலுமணியிடம்  வினவினான் கதிரேசன்

“தெரியலயே… இதோ வயலே வந்தாச்சு,  நம்மள வரச் சொன்ன விவசாயிககிட்டயே கேப்போம்” என்றார்

“வணக்கம் ஐயா” என அங்கிருந்தவர் முகமன் வைக்க

“வணக்கம் எதைப் பத்தி பேசணும்?”

“ஐயா நம்ம நிலத்துக்கு பக்கத்துல உங்ககிட்ட வேலை செஞ்ச முத்தையாவோட நிலம் இருக்குல்ல, அதுல அவரு கத்தரிக்காய், வெண்டைக்காய்னு பயிரிட்டு வச்சுருக்காரு”

“அதுலென்ன பிரச்சனை?”

“ஐயா அந்த வயல பல பேர் குத்தகைக்கு கேட்டாங்க, அவரு யாருக்கும் தர தயாரா இல்லனு சொல்லிட்டாரு. ஆனா, நகரத்துலருந்து சில பேரு வந்து முத்தையாவோட நிலத்துக்கு விலை பேசுறாங்கய்யா”

“வாங்கினா என்ன?”

“ஐயா அந்த நிலத்துல, அவங்க நகரத்துல இருக்குறது போல ஒரு துணிக்கடையோ இல்ல  நகைக்கடையோ கட்டப் போறாங்களாம். அது மட்டுமில்லாம அந்த நிலத்தோட மதிப்பு 8 லட்சம் தான் ஐயா, அதோட சேத்து எவ்ளோ வேணாலும் தர்றதா சொல்லிட்டாங்களாம். மகுடி  ஊதுனா அதுக்கு வசப்படாத பாம்பு  இருக்குமா? முத்தையா அந்த மதிப்புக்கு கீழ கேட்டா கூட நிலத்தை கொடுத்துருவாரு ஐயா. அவரு நிலைமை அப்படி இருக்கு”

“என்ன சொல்றிங்க ஒண்ணும் புரியலயே, அப்படி என்ன பிரச்சனை இப்ப அவனுக்கு”

“மகளுக்கு கல்யாணம் செய்யணுமாம், அதனால தான் அப்படி சொன்னேன். அந்த நிலத்தால டவுன்காரங்களுக்கு ஏற்படுற லாபத்தை விட, அதிக நட்டம் நமக்கு தான் ஐயா. ஒருத்தரை பாத்து எல்லாரும் காசுக்கு ஆசைப்பட்டு இப்படி விவசாய நெலத்த விக்க ஆரம்பிச்சா, நம்ம கிராமத்தில இருக்குறவங்க நகரத்துக்கு போய் அதிக வெல குடுத்து தான் காய்கறிகளை வாங்கிட்டு வரணும்

அதோட, நம்ம குழந்தைகளுக்கு ரசாயன உரம் போட்ட சாப்பாடு தான் குடுக்கணும். அதை சாப்பிட்டு நம்ம சனமெல்லாம் ஆரோக்கியமில்லாம ஆசுபத்திருக்கு அலையுற நெலம வந்துடும்

நூறு வருசத்துக்கு மேல நம்ம காடுகரைல இருக்கற வேப்ப மரம், மாமரம் எல்லாம் அழிஞ்சுரும். நல்ல காத்துக்கு கூட பஞ்சமாகிரும். மரம் இல்லேன்னா மழை ஏது? வெப்பம் அதிகமாகும், காத்து மாசுபாடு, வாகன போக்குவரத்து, நீர்பற்றாக்குறை எல்லாம் அதிகமாகி நம்ம கிராமமே அழிஞ்சு போயிரு’ய்யா”

“இதெல்லாம் ஏன் ராமசாமி என்கிட்ட சொல்றீங்க? இதுல நான் என்ன செய்ய முடியும்”

“ஐயா, முத்தையா நிலத்தை வேற ஒருத்தர் வாங்குறதுக்கு பதிலா நீங்களே வாங்கிக்கலாமே”

 “வாங்கலாம்… ஆனா முத்தையா ஒத்துக்கணுமே”

“அதெல்லாம் ஒத்துப்பாரு  ஐயா. உங்ககிட்ட வளர்ந்தவர் தான, உங்க சொல் பேச்சு தட்ட மாட்டார்”

“நல்ல யோசனை தான்! கதிரேசா, நீ என்ன சொல்ற?”

“நீங்க எடுக்கிற முடிவு தான் என் முடிவு அண்ணா”

“எல்லாம் சரி தான், இப்போதைக்கு அத்தனை பணத்தை திடீர்னு புரட்ட முடியணுமே”

“நீங்க ஏன் ஐயா கவலைப்படுறீங்க? நாங்க எல்லாரும் இதுவரை  உங்ககிட்ட வேலை செஞ்சதுக்கு கைல தர்ற கூலி தவிர, மகசூல் முடிஞ்சதும், எங்க ஒரு ஒருத்தருக்கும் வருசா வருசா சேமிப்பு தொகை போட்டுட்டு வர்றீங்களே.

அதை அவசியம் இல்லாம எடுக்க வேண்டாம்னு சொல்லி இருந்தீங்க, நாங்களும் தொடாம தான் வெச்சுருக்கோம். அது எப்படியும் இப்ப ஆளுக்கு இருபதாயிரம் பக்கம் இருக்கும். எங்க முப்பது பேரோட பணத்த சேத்தா எப்படியும் எட்டு லட்சம்கிட்ட வரும்”

“அப்படிங்கறயா… சரி அது உங்க பணம், உங்க  முப்பது எல்லார் பேர்லயுமே பத்திரம் பதிஞ்சரலாம்.  நான் முத்தையாகிட்ட பேசறேன். நீங்க எல்லாரும் உங்க வயல் வேலையை  முடிங்க. கதிரேசா நான் முத்தையா வீட்டுக்கு போய்ட்டு வரேன்” என கிளம்பினார் வேலுமணி

சிறிது நேரத்தில், “முத்தையா…முத்தையா…” என முத்தையா வீட்டின் முன் நின்று வேலுமணி  அழைக்க

“யாருனு  தெரியலயே” என்றவாறே வெளியே வந்தார் முத்தையா

தன் முன்னாள் முதலாளியை பார்த்தவுடன், “ஐயா வாங்கய்யா வணக்கம் ஐயா! உள்ளே வாங்க” என வரவேற்றான்

“இருக்கட்டும் முத்தையா…உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன்”

“சொல்லுங்கய்யா” என்றான் பணிவுடன்

“இதைக் கேட்டா நீ என்ன நினைப்பேனு தெரியல”

“நீங்க கேட்டா என் உசுரையும் தருவேங்கய்யா. உங்க சம்பளத்தில் தான் இந்த அனாதையோட உசுர் பொழச்சிருக்கு” என்றான் பழசை மறக்காதவனாய்

“இல்ல முத்தையா… அது  வந்து… உன் நிலத்தை நான் சொல்றவங்க பேருக்கு எழுதி வெக்க முடியுமா? விலையா 8 லட்சம் வாங்கிக்கோ”

“ஐயா நீங்க கேட்டு நான் இல்லனு சொல்ல முடியாது, எடுத்துக்கோங்க ஐயா” என்றான் கணமும் யோசியாமல்

“சரி முத்தையா, நான் பொறப்படறேன்” என வேலுமணி எழ

“இருங்கய்யா சாப்பிட்டுட்டு போலாம்”

“இருக்கட்டும் முத்தையா அப்புறமா வரேன்” என வந்த காரியம் நிறைவேறிய மகிழ்வுடன் கிளம்பினார் வேலுமணி

(முற்றும்)

Similar Posts

2 thoughts on “இயற்கை (சிறுகதை) – P. ரேஷ்மா – December Contest Entry 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!