அன்று காலை எழும் போதே எனக்கு கொஞ்சம் தலைசுற்றல், எனவே அன்றாட வேலைகளை தாமதமாகவே செய்தேன்
அப்போது வெளியில் இருந்து, “சார் சார்” என யாரோ அழைக்கும் குரல் கேட்டது
இன்னும் சற்று சோர்வாய் இருக்க, வீட்டு வேலையாளை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன்
அவள் சென்று பார்த்து விட்டு, “அம்மா யாரோ ஒரு தம்பியும் ஒரு வயசான அம்மாவும் வந்திருக்காங்க, உங்களத்தான் பாக்கணுமாம்” என்றாள்
“சரி” என்றுவிட்டு முன் வாசலுக்கு விரைந்தேன்
பெண்மணிக்கு எழுபது வயதுக்கு மேலிருக்குமென தோன்றியது, உடன் நின்றிருந்த நபருக்கு நடுத்தர வயதிருக்குமென கணக்கிட்டேன். இரண்டுமே இதுவரை பார்க்காத முகங்களாக இருந்தது
“என்ன விஷயமா என்னைப் பாக்க வந்திருக்கீங்க?” என்ற என் கேள்விக்கு
“இந்த அம்மா ரயில்வே ஸ்டேஷன்ல உக்காந்திருந்தாங்க. யாரு என்னனு விசாரிச்சதுக்கு, எனக்கு யாருமில்ல, நான் ஒரு அனாதைனு சொன்னாங்க. அங்க இருந்த ஒரு பெரியவர், நீங்க ஏதாச்சும் வழி செய்வீங்கனு உங்க பேரையும் அட்ரஸயும் சொல்லி கொண்டு விடச் சொன்னார், அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றார் அந்த நடுத்தர வயது ஆண்
நம் சமூக சேவை பற்றி அறிந்த யாரோ கூறி இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன். அந்த அம்மாவை பார்க்க பாவமாய் இருந்தது எனக்கு
“எனக்குத் தெரிஞ்சு திருநின்றவூர்ல ஒரு ஆசிரமம் இருக்கு, அங்க சேக்க ஏற்பாடு செய்யறேன்” என்று கூறிவிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்தேன்
சில நாட்களுக்கு பின், அந்த ஆசிரமத்துக்கு அழைத்து விசாரித்த போது, அந்த அம்மாள் அங்கு மற்றவர்களோடு சேர்ந்து நிம்மதியாக இருப்பதாக கூறினார் நிர்வாகி
ஓரிரு மாதங்கள் கடந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் திருநின்றவூர் ஆசிரமத்தில் இருந்து எனக்கு போன் வந்தது
அந்த அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் கூறி, என்னை உடனே வரும்படி கூறினார் நிர்வாகி
நான் உடனே கிளம்பி, நிர்வாகி குறிப்பிட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்றேன்
“நீங்க தான இந்த அம்மாவ சேத்து விட்டீங்க, அதான் உங்களுக்கு சொன்னேன்” என்றார் ஆசிரம நிர்வாகி
டாக்டரிடம் நிலைமையைக் கேட்க, “ஞாபகம் இருக்கே ஒழிய, பல்சும் பிரசரும் கொறஞ்சுட்டே வருது. நோய்னு பெருசா ஒண்ணுமில்ல, தனிமையும் கவலையும் ஒடம்பை உருக்கிடுச்சுனு நினைக்கிறேன். எங்களால முடிஞ்சத செஞ்சுட்டோம், எந்த முன்னேற்றமும் இல்ல. எந்த நேரமும் என்ன வேணா ஆகலாம்” என நிதர்சனத்தை எடுத்துரைத்தார்
என்ன செய்வதென தெரியாமல் ஒரு கணம் சோர்ந்து அமர்ந்தேன்
பின் அந்த பெண்மணியிடம் நெருங்கி அமர்ந்து, “அம்மா சீக்கரம் சரியாயிடும், பயப்பட ஒண்ணுமில்ல சரியா” என நான் சமாதானம் கூற
முயன்று கண்களைத் திறந்தவர், மேஜை மேலிருந்த தன் பையை கைக்காட்டி ஏதோ கூறினார். ஏதோ சொல்ல முயல்கிறார் என புரிந்த போதும், என்னவென புரியவில்லை
“அவ்ளோ முடியாதப்பவும், இந்த பையை தூக்கிட்டு தான் ஆசிரமத்தை விட்டு வெளிய வந்தாங்க” என்றார் ஆசிரம நிர்வாகி
சரி எதற்கும் அந்த பையைப் பாப்போம் என மேலோட்டமாய் பார்த்த போது, எதுவும் கிடைக்கவில்லை. பையின் மூலையில் கசங்கிய காகிதம் ஒன்று கையில் நெருட, வெளியே எடுத்தேன்
அதைக் கண்டதும், கையை உயர்த்தி ஏதோ சொல்ல முயன்றார் அவர். ஆனால், வார்த்தைகள் வெளிவரவில்லை
அந்த காகிதத்தை விரித்து, கூர்ந்து பார்க்க, அதில் ஒரு தொலைப்பேசி எண் இருந்தது
எதற்கும் அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்ப்போம் என அழைத்தேன். சில நொடிகளுக்குப் பின் அழைப்பு எடுக்கப்பட, முதியவர் பற்றிய விபரம் தெரிவித்தேன்
உடனே வருவதாய் கூறி அழைப்பை துண்டித்தார் எதிர் முனையில் பேசியவர்
#ad
சிறிது நேரத்தில் அந்த முதியவரின் ஆவி அடங்கிவிட்டதென நர்ஸ் வந்து கூறினார்
நான் முதியவர் இருந்த அறைக்குள் சென்ற அதே நேரம், மூச்சிரைக்க ஓடி வந்தார் ஒரு மனிதர்
“இவரை எங்கோ பார்த்த நினைவாக இருக்கிறதே” என்று எண்ணியபடியே, “யார் நீங்க?” என்றேன்
அவர் அதற்கு எந்த பதிலும் அளிக்காமல், முதியவரைக் காட்டி, “அம்மா… அம்மாவுக்கு என்னாச்சு?” என பதட்டத்துடன் வினவினார்
“அம்மா உயிர் அடங்கி கொஞ்ச நேரமாச்சு” எனவும், முகத்தை மூடிக்கொண்டு அழுதார் அவர்
சற்று சமாதானமானதும், “உங்களுக்கு எப்படி தெரியும் இந்த அம்மாவை?” எனவும்
“நான் தான் அம்மாவை உங்ககிட்ட கொண்டு வந்து சேத்தேன், இப்ப நீங்க போன் பண்ணினது எனக்குத் தான்” என்றார் கண்ணீரை அடக்கிய குரலில்
“எங்கோ பார்த்தது போல் இருந்தது இதனால் தான் போலும்” என அப்போது தான் உரைத்தது எனக்கு
“ஒ… ஆனா உங்க போன் நம்பர் எப்படி இவங்ககிட்ட, நீங்க ஏதோ ரயில்வே ஸ்டேஷன்ல இந்தம்மாவை பாத்ததா தான சொன்னீங்க” என கேள்வியுடன் நான் அவரைப் பார்க்க
தலை குனிந்த அந்த மனிதர், “நான் அவங்களோட மகன் தான்’ம்மா” எனவும், எனக்கு அதிர்ச்சியில் முகம் வெளிறியது
“என்ன மகனா? அன்னைக்கு என்கிட்ட இவங்க அனாதைனு சொன்னீங்களே?” என்றேன் கோபமாய்
“எங்க அம்மாவுக்கு நான் ஒரே புள்ள, எங்கப்பா போனப்புறம் அம்மா என் கூட தான் இருந்தாங்க. அப்பாவோட பென்ஷன் அம்மாவுக்கு வந்துட்டு இருந்தது, அதை என்கிட்ட குடுத்துடுவாங்க
அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க சென்னைய சுத்தி இருக்கற நவக்கிரக கோவிலுக்கு டூர் போறாங்க நானும் போறேனு அம்மா பணம் கேட்டாங்க. அதுக்கு என் மனைவி ஒத்துக்கல, அதோட அம்மாவ தப்பு தப்பா பேசிட்டா. அதுக்கப்புறம் இது தினம் தொடர்கதை ஆய்டுச்சு
அம்மா என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டப்ப, சமாதானம் செஞ்சேன். அடுத்த மாச பென்ஷன் வந்தப்ப, அம்மா என்கிட்ட குடுக்கல, அவங்க சொந்த செலவுக்கு வேணும்னு சொல்லிட்டாங்க
இது என் மனைவியோட கோபத்த அதிகப்படுத்துச்சு, இதனால எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்தது. ஆபீஸிலிருந்து ஏண்டா வீட்டுக்கு வரோம்னு நெனைக்கற அளவுக்கு பிரச்சனை பெருசாச்சு
என் நெலமையப் பாத்து அம்மா ஏதாச்சும் ஆசிரமத்துல சேத்து விடுனு நச்சரிக்க ஆரம்பிச்சாங்க. சரி அங்கயாச்சும் அம்மா நிம்மதியா இருக்கட்டும்னு தான், உங்களப் பத்தி நண்பர் ஒருத்தர் சொன்னதைக் கேட்டு உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன்
அனாதைனு சொன்னா தான் பணம் இல்லாம சேப்பாங்க அப்படியே சொல்லுனு அம்மாவே சொன்னாங்க, நானும் வேற வழியில்லாம மனசை கல்லாக்கிட்டு சொன்னேன்
தன் உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா, ஈமசடங்கு செய்ய பையில் பணம் வெச்சுருக்கேன், அத வெச்சு முடினு சொன்னாங்க, அது அப்பாவோட பென்ஷன் பணம்” என்று அழுதுக் கொண்டே கூறினார் அந்த நபர்
அதற்குள் நர்ஸ் முதியவரின் பையைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். அந்த மூதாட்டி சொன்னது போல் அந்த பையின் உள் அறையில் பணமும், அவர் கணவரின் பென்ஷன் பாஸ்புக் ஆகியவை இருந்தது
அந்தப் பையை அந்த மூதாட்டியின் மகனிடம் கொடுத்தேன், அவர் அதைப் பெற்றுக் கொள்ளாமல், பெற்றவளின் கையை எடுத்து கன்னத்தில் பதித்துக் கொண்டு கதறினார்
அதைப் பார்த்த அங்கிருந்தவர்களுக்கு கண்ணில் நீர் துளிர்த்தது
பெண்கள் சிலர் தான் தன் குடும்பம் என சுயநலத்துடனும், குறுகிய மனதுடன் நடந்து கொள்வதால், இருதலை கொள்ளி எறும்பாய் சிக்கிக் கொள்ளும் இவரைப் போன்ற கணவர்களின் நிலையை எண்ணி, மனம் நொந்து போனேன்
ஆசிரமத்தலைவி, தக்க மரியாதையுடன் மூதாட்டியின் உடலை அவர் பிள்ளையிடம் ஒப்படைத்தார்
தான் கஷ்டப்பட்டாலும் தன் மகன் நன்றாக இருந்தால் போதுமென்ற எண்ணத்துடன், முதுமையில் தனிமையை ஏற்றுக் கொண்ட அந்த முதியவர், “பெற்ற மனம் பித்து” என்பதை நிரூபித்து சென்று விட்டார் என்ற நினைவில், என் மனம் கனத்தது
#ad
(முற்றும்)
உருக்கமான கதை. இப்படியும் நடக்கும்/நடக்கிறது. அம்மாவின் சொத்தை எல்லாம் விற்றுப் பணமாக்கிக் கொண்டு அம்மாவை அமெரிக்காக் கூட்டிச் செல்வதாய்க் கூறி விமான நிலையம் வரை அழைத்துப் போய் அங்கேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் விமானம் ஏறிய மகனை விட இவர் நல்லவர். இப்போச் சொன்னது உண்மைச் சம்பவம்.
அடக் கொடுமையே, நீங்கள் சொன்ன சம்பவம் கேட்கவே வருத்தமா இருக்கு