in

ஆணிவேர் (சிறுகதை) – சுபாஷினி பாலகிருஷ்ணன் – “பிரபல பதிவு போட்டி டிசம்பர் 2020″க்கான பதிவு

ஆணிவேர் (சிறுகதை)

குழந்தை வித்யா சில நாட்களாக யாருடனும் சரியாக பேசுவதில்லை, அமைதியாக இருக்கிறாள். டாக்டர் முரளிக்கும், அவன் மனைவி டாக்டர்  கமலாவிற்கும் தங்கள் மகள் இயல்புக்கு மாறாய் அப்படி இருப்பது கவலையளித்தது

“நாம வேணா என் ஃப்ரெண்ட் சைக்காலஜிஸ்ட் ஷீலாவை கன்சல்ட் பண்ணலாமா?” என கமலா கேட்க

“வேண்டாம்… கொஞ்சம் பொறுமையா இரு பார்க்கலாம்” என்றான் முரளி

இருவரும் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர். முரளி இருதய அறுவை சிகிச்சை நிபுணர், கமலா சிறந்த மகப்பேறு மருத்துவர்.

மருத்துவமனையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில், திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மிகப் பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவரும் மருத்துவமனையில் வேலை செய்வதால், குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக பார்வதி அம்மாள் எனும் ஐம்பது வயதை தாண்டிய ஒருவரை வேலைக்கு நியமித்து இருந்தனர்.

பார்வதி அம்மாள் வீட்டு வேலைகள், குழந்தை கவனிப்பு என அவர்களுடனேயே தங்கி குழந்தையை நன்றாக பார்த்துக் கொண்டாள்

மகள் வித்யாவை பக்கத்தில் இருக்கும் ஒரு இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்த்திருந்தனர். ஐந்தாம் வகுப்பு படிக்கும் வித்யாவிற்கு தினமும் ஸ்கூல் வேன் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே வந்துவிடும்.

பார்வதியம்மாள் காலை எழுந்து குழந்தையை கிளப்பி டிபன் கொடுத்து, மதியம் சாப்பிடுவதற்கு கட்டிக் கொடுத்து, கீழே சென்று பள்ளிக்கு அனுப்பி விட்டு வருவார்.

வித்யா எழுந்து பல் துலக்கி குளித்து வரும் வேளையில், அவளின் பெற்றோர்  மருத்துவமனைக்கு  செல்ல தயாராகி, குழந்தையோடு சாப்பிட வருவார்கள்.

அவர்கள் மூவரும் சேர்ந்து சாப்பிடுவது பெரும்பாலும் அந்த காலை நேரம் மட்டுமே. அந்த நேரத்தில் தான் குழந்தை தன் பள்ளி விஷயங்கள், தோழிகளை பற்றி  ஏதாவது பேசுவாள்.

சில நேரம் பொறுமையாக அவள் பேசுவதை செவிமடுக்கும் வித்யாவின் பெற்றோர், சில நேரம் “லேட்டாயிடுச்சு, சீக்கிரம் கெளம்பணும் சாப்பிடு” என வித்யாவை அமைதியாக்கி விடுவர். ஆனால் சமீபமாய் வித்யா அப்படி பேசுவது கூட குறைந்து போனது

இரவு படுக்கப் போகும் முன், மருத்துவமனையில் அன்று நடந்த விஷயங்கள், மற்ற விஷயங்கள் என முரளியோடு பேசி விட்டு, வித்யாவை பற்றி கவலைப்பட்டாள் கமலா

“வித்யா என்ன இன்னும் சின்ன குழந்தையா, கவலைப்படாதே சரியா போய்டும்” என்றான் முரளி. ஆனால் கமலா சொன்னதை மனதில் உள் வாங்கிக் கொண்டான்

மறுநாள் காலை, எப்போதும் உள்ள வழக்கமாய், வாரம் ஒரு முறை கோவையில் இருக்கும் தன் அம்மாவிற்கு நலம் விசாரிப்பதற்காக அழைத்த முரளி, மகளின் மாற்றம் குறித்து பெற்றவளிடம் கூறினான்

மகன் மருமகளை நலம் விசாரித்த முரளியின் தாயார், “கவலைப்பட வேண்டாம்” என ஆறுதல் கூறினார். அதோடு, நேரம் கிடைக்கும் போது, குடும்பத்துடன் ஊருக்கு ஒருமுறை வந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.

அன்னையுடன் மேலும் சற்று நேரம் பேசிய பின், குளித்து விட்டு டிபன் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளுக்கு வந்தான் முரளி. வித்யா சாப்பிட்டுக் கொண்டிருக்க, பார்வதியம்மாள் முரளிக்கும் டிபனை எடுத்து வைத்தாள்

“அம்மா சாப்பிட வரலையா” என வித்யா கேட்க

“அம்மா நைட் ஒரு எமெர்ஜன்சி கேஸ் பாத்துட்டு காலைல மூணு மணிக்கு தான் வந்தாங்க பாப்பா, இப்ப அசந்து தூங்கறாங்க” என பார்வதியம்மாள் பதிலளித்தாள்.

“சரிப்பா எனக்கு ஸ்கூலுக்கு டைமாச்சு நான் கிளம்புறேன்” என்று கூறி வித்யா விடைபெற்றுச் சென்றாள்

“கமலா எழுந்தப்புறம் எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க” என்று பார்வதி அம்மாளிடம் கூறிவிட்டு, தானும் மருத்துவமனைக்கு கிளம்பினான் முரளி

காலை 8.30 மணி போல் எழுந்த கமலா, பல் துலக்கிவிட்டு காபி குடிக்க டைனிங் டேபிளுக்கு வந்தாள்

“ரெண்டு பேரும் கிளம்பீட்டாங்களா பார்வதிம்மா?” என கமலா கேட்க

“ஆமாம்மா, பத்து நிமிஷம் முன்னாடி தான் கிளம்பினாங்க. அசதியா இருப்பீங்க, அதனால உங்களை எழுப்ப வேண்டாம்னு ஐயா சொல்லிட்டார். நீங்க எந்திரிச்சதும் பேசச் சொன்னார்” என்றாள்

“சரி நான் பேசிக்கறேன்” என்றவள், குளித்து சாப்பிட்டு விட்டு மருத்துவமனைக்கு சென்றாள் கமலா

ஆபரேஷன் ஆனவர்களை வார்டில் சென்று பார்த்து விட்டு, என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும் என்று செவிலியர்களுக்கு அறிவுறுத்தி விட்டு தன்னறைக்கு திரும்பினாள்

மாத பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிகளைப் பரிசோதித்து முடிக்க மதியம் இரண்டு மணி ஆனது. மதிய உணவுக்கு பின், ஆபரேஷன் தியேட்டர் செல்லும் முன், கணவன் முரளிக்கு போன் செய்தாள்.

“இந்த வீக்கெண்ட் ஊருக்கு போய் அம்மாவை பாத்துட்டு வரலாமா கமலா?” என்ற முரளியின் கேள்விக்கு

“ஆமா நாளாச்சு ஊருக்கு போய்,போலாம்” என ஆமோதித்த கமலா, “சரிங்க, நான் ஆபரேஷன் தியேட்டருக்கு போகிறேன், நடுவுல போன் எடுக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு போனை வைத்தாள்

மூன்று பிரசவங்களை பார்த்து விட்டு அறைக்கு திரும்பியவள், சூடாக காபி அருந்த பத்து நிமிட இடைவெளி எடுத்துக் கொண்டாள்.

பின், அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு உண்டான கால அட்டவணையை தயாரித்து, அதை முதன்மை செவிலி பத்மாவதியிடம் கொடுத்து விட்டு, திரும்ப வரும்வரை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினாள்.

முதன்மை செவிலி பத்மாவதி இருபது வருடங்களாக அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர், நம்பிக்கைக்கு உரியவர். எனவே முக்கியமான பொறுப்புகளை அவரிடம் ஒப்படைப்பது கமலாவின் வழக்கம்

“சரி டாக்டர், நீங்க ஊருக்கு போயிட்டு வாங்க, ஏதாவது எமெர்ஜன்சினா கால் பண்றேன்” என்றாள் பத்மாவதி.

வீட்டிற்கு வந்தவுடன், ஊருக்கு செல்லும் திட்டத்தை மகள் வித்யாவிடம் கூறினர். உணவுக்கு பின் மூவரும் தேவையான துணிமணிகளை பெட்டிகளில் எடுத்து வைத்தனர்.

ஏழு, எட்டு மாதங்களாக, கொரோனா சூழ்நிலையால் எங்கும் வெளியே செல்லாததால், அனைவருக்கும் ஊருக்கு போக மனம் ஏங்கியது.

பார்வதி அம்மாளிடம் பயணத் திட்டத்தை கூறி, வீட்டை பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, விமான பயணத்துக்கு ஃபேஸ்ஷீல்டு, மாஸ்க் சகிதம் புறப்பட்டனர்

றுநாள் காலை 5.30 மணிக்கு சென்னையில் கிளம்பிய விமானம், ஆறேமுக்கால் மணிக்கு கோவை விமான நிலையத்தில் தரை இறங்கியது

ஏர்போர்ட்டில் இருந்து முக்கால் மணி நேர பயணத்தில், துடியலூர் அருகில் உள்ள என்.ஜி. ஜி. ஓ காலனியில் உள்ள மங்களத்தம்மாள் வீட்டில் கொண்டு சேர்த்தது அவர்கள் வந்த கால் டேக்சி

வாசலில் செங்காவி கோலமிட்டு மகன், மருமகள், பேத்தியின் வரவிற்காக காத்திருந்தார் மூத்தவர்

நேர்த்தியின் மறு உருவம் மங்களத்தம்மாள். வீட்டினை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பார்

வேலை நேரம் போக மரங்கள், செடி கொடிகளை பராமரிப்பார். வீட்டில் இரண்டு தென்னை மரமும், ஒரு மாமரமும், கொய்யா மரமும், சப்போட்டா மரமும், பூச்செடிகளும் செழிப்பாக வளர்ந்திருந்தன.

கார் ஹாரன் சத்தம் கேட்டு வெளியே வந்தவர், மூவரையும் மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்றார்

கொரோனா பெருந்தொற்று இன்னும் பயமுறுத்தி கொண்டிருப்பதால், “போய் குளிச்சுட்டு வாங்க, டிபன் எடுத்து வெக்கறேன்” என்றவர், சமையலறைக்குச் சென்று சாப்பிடுவதற்கு செய்த பதார்த்தங்களை எடுத்து வைக்கலானார்

மூவரும் குளித்து விட்டு வர, பேத்திக்கு பிடித்த கேசரி மற்றும் இட்லி, வெண் பொங்கல், சட்னி, சாம்பார் என அனைத்தையும் அன்போடு பரிமாறினார் பாட்டி.

“பாட்டி நீயும் சாப்பிட வா”  என பேத்தி அழைக்க

“கோவிலுக்கு போய்ட்டு வந்து தான் சாப்பிடுவேன், நீ சாப்பிடு கண்ணம்மா” என்றார்

பிறகு கோயிலுக்கு கிளம்ப,”நானும் உன்கூட வரேன் பாட்டி” என்று உடன் சென்றாள் வித்யா

வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் உள்ள யோகாம்பாள் கோவிலுக்கு பாட்டியும் பேத்தியும் நடக்கத் தொடங்கினர்

“ஏன் பாட்டி எங்களை விட்டுட்டு இப்படி தனியா இருக்க, உனக்கு கஷ்டமா இல்லையா? எனக்கு வீட்ல தனியா இருக்க கஷ்டமா இருக்கு பாட்டி” என்றாள் வித்யா

“நீ தனியா எங்க இருக்க, பார்வதியம்மா தான் உனக்கு எப்பவும் துணையா இருந்து உன்னை நல்லா பாத்துக்கறாங்களே கண்ணம்மா” என பரிவாய் பாட்டி கூற

“பார்வதியம்மா இருந்தாலும் உன்னப் போல வருமா பாட்டி?” என்ற பேத்தியின் எதிர் கேள்வியில், வாயடைத்துப் போனவர், ஆதரவாய் தன் பேத்தியின் கையைப் பற்றி    வருடினார்

“ஏன் பாட்டி நீ அப்பாவை டாக்டருக்கு படிக்க வெச்ச? தாத்தா மாதிரி அப்பாவும்  இந்த ஊர் ஸ்கூல்லேயே டீச்சரா இருந்துருக்கலாம். நாம எல்லாம் இங்கயே ஒண்ணா இருந்துருக்கலாம்” என வித்யா அங்கலாய்க்க

“உங்கப்பாவை ஏன் டாக்டருக்கு படிக்க வெச்சோம்னு சொல்லவா?” என பாட்டி புன்னகையுடன் நிறுத்த

“ம்.. சொல்லு பாட்டி” என கதை கேட்கும் ஆவலில் உற்சாகமானாள் வித்யா

“உங்க தாத்தாவுக்கும் எனக்கும் பிறந்த ஒரே மகன் தான் உங்கப்பா முரளி. உங்க தாத்தா டீச்சர்னு உனக்கு தெரியுமில்லையா? உங்கப்பா படிப்புல ரொம்ப சுட்டி. கிளாஸ்ல எப்பவும் முதலா வருவான். இங்க இருக்கற கவர்மண்ட் ஹை ஸ்கூல்ல தான் படிச்சான்.

அப்பத்துல இருந்தே உங்கப்பாவோட கனவு டாக்டர் ஆகணுங்கறது தான். கஷ்டப்பட்டு படிச்சு சென்னை மெடிக்கல் காலேஜ்ல சீட்டும் வாங்கினான். இப்ப மாதிரியெல்லாம் அப்ப பசங்கள இப்படி அதிகமா வெளியூருக்கு படிக்க அனுப்ப மாட்டாங்க.

ஆனா உன் தாத்தா, ‘உயிரைக்காப்பாத்தற உத்தியோகம், டாக்டர் உத்தியோகம் தான், அவன் போய் படிச்சு நாலு பேரை காப்பாத்தட்டும்’ அப்படின்னார்

அவர் சொன்னது எனக்கும் சரினுபட்டது. அதனால தான் ரெண்டு பேரும் மனசார அவன சென்னைக்கு அனுப்பி படிக்க வச்சோம்” என்று சொல்லி முடித்தார்

மங்களத்தம்மாள் பழைய கதையை பேத்தியிடம் சொல்லி முடித்த அதே நேரத்தில், “டமால்” என்ற சத்தம் காதை பிளந்தது

கண்ணிமைக்கும் வேளையில் பள்ளிக்கூட சாலையில் இருந்து வந்த ஒரு காரும், நாலு ரோடு ஸ்டாப்பிலிருந்து வந்த ஒரு ஸ்கூட்டரும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளாகியது

ஸ்கூட்டரில் இருந்த கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்ததை கண்ட மங்களம் பாட்டியும் வித்யாவும், விரைந்து அருகில் சென்றனர்

அருகில் இருந்தவர்கள் உதவியோடு விழுந்த இருவரையும் கைத்தாங்கலாக பிடித்து கற்பகம் பேன்சி ஸ்டோர் வாசலில் உட்கார வைத்து,  குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து, அவர்களின் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்தனர்

நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வண்டியிலிருந்து விழுந்ததால், பனிக்குடம் உடைந்து பிரசவ வலியில் துடித்தாள் அப்பெண். அதற்குள் மங்களத்தம்மாள் விவேகமாக தனது மகனுக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்தார்

அருகிலுள்ள மருத்துவமனையில் தன் நண்பன் பணியாற்றுவதாகவும்,  அடிபட்ட தம்பதியை அங்கு அழைத்து செல்லுமாறு கூறினான் முரளி, அதோடு விரைவில் தாங்கள் அங்கு வருவதாகவும் கூறினான்

மங்களத்தம்மாள் மகன் கூறியதை அங்கிருந்தவர்களிடம் கூற, இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்

யாரோ அழைத்ததன் பேரில், ஆம்புலன்ஸ் சரியாய் வந்து சேர்ந்தது. அடிப்பட்ட தம்பதியை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்சில் ஏற்றினர்

பாட்டியும் பேத்தியும் ஒரு ஆட்டோவில் ஆம்புலன்ஸை தொடர, ஒரு வழியாய் மருத்துவமனை வந்து சேர்ந்தனர். அதே நேரம், மருத்துவப் பெட்டி சகிதம் முரளியும் கமலாவும் மருத்துவனையை வந்தடைந்தனர்

மருத்துவமனையின் டாக்டருக்கு விவரத்தை கூறுமாறு அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட்டிடம் சொல்லி விட்டு, டாக்டர் முரளியும், கமலாவும் முதலுதவி செய்ய ஆரம்பித்தனர்

மங்களம் பாட்டி மற்றும் மருத்துவமனையில் வேலை செய்த செவிலியின் உதவி கொண்டு அப்பெண்ணை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தாள் டாக்டர் கமலா

இதயத் துடிப்பை பரிசோதித்து விட்டு சிகிச்சையை ஆரம்பித்தாள். விபத்தில் பனிக்குடம் உடைந்ததால், விரைந்து டெலிவரி வார்டுக்கு அழைத்து செல்லுமாறு நர்ஸிடம் கூறினாள் கமலா.

ஹாஸ்பிடல் ப்ரொசீஜர் அது இதென அந்த நர்ஸ் ஆரம்பிக்க, “இந்த ஹாஸ்பிடல் டாக்டர் என் கணவரோட பிரெண்ட் தான், எல்லாம் நான் சொல்லிக்கறேன். நீங்க மொதல்ல இந்த பொண்ண டெலிவரி வார்டுக்கு ஷிப்ட் பண்ணுங்க” என கமலா குரலை உயர்த்த, உடனே பணிந்தாள் நர்ஸ்

அதற்குள் அந்த மருத்துவமனையின் டாக்டரும் வந்து சேர, நாற்பத்தைந்து நிமிட சிகிச்சையில், அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் அந்த பெண்.

இன்னொரு பக்கம் அவள் கணவனுக்கு டாக்டர் முரளி கை, கால்களில் ஆன வெட்டுக் காயங்களுக்கு தையல் போட்டு மருந்திட்டு சிகிச்சை அளித்தான்

நடந்தவை அனைத்தையும், மருத்துவமனை வளாகத்தில் பாட்டியுடன் அமர்ந்து, மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.

சிகிச்சையை முடித்துக் கொண்டு இருவரும் விடைபெறும் வேளையில், படுக்கையில் இருந்தபடியே அந்த கணவன் தன் கைகளை உயர்த்தி டாக்டர் முரளிக்கு நன்றியைக் கூறினான்

குழந்தையை பெற்றெடுத்த அந்த இளம் தாயோ, டாக்டர் கமலாவிற்கு தன் கண்ணீர் மூலம் நன்றியை செலுத்தி விட்டு, கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்

“இட்ஸ் ஆல் ரைட், நத்திங் டு வொரி, டேக் கேர்” எனக் கூறி விட்டு இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர். கூடவே வித்யாவும் பாட்டியும் காரில் ஏற, நால்வருமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்கு வந்தவுடன் மதிய சமையலுக்கு தேவையானவற்றை மங்களத்தம்மாள் செய்ய ஆரம்பித்தார். கமலா காய்கறிகளை வெட்டிக் கொடுக்க, முரளி தேங்காயைத் துருவிக் கொடுத்தான்.

சென்னையில் அவரவர் வேலைகளிலேயே மூழ்கி இருக்கும் தன் பெற்றோர், பாட்டி வீட்டில் இயல்பாய் வேலை செய்வதை பார்த்து ஆச்சர்யமடைந்தாள் வித்யா.

சொந்த பந்தங்களில் சமீபத்தில் நடந்த விசேஷங்களையும் விஷயங்களையும் சிறிது நேரம் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர்.

பிறகு சென்னை மருத்துவமனையின் அலுவல் விஷயமாக முரளியும், கமலாவும் அவரவர் மடிக்கணினியை  வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டனர்.

சமையலறையின் மேஜையின் மீது வித்யா அமர்ந்திருக்க, அவளுடன் பேசிக் கொண்டே சமையலை செய்து கொண்டிருந்தார் மங்களத்தம்மாள்

“நாம காலையில கோயிலுக்கு கிளம்பி, கடைசியில் கோயிலுக்கு போகவே முடியலையே பாட்டி” என வித்யா வருத்தமாய் கூற

“அதனால என்ன,  கோயிலுக்கு போகாமயே போன போன புண்ணியத்த தேடிகிட்டோமே” என்றார் பாட்டி பூடகமாய்

வித்யா புரியாமல் விழிக்க, “உலகத்தைக் காக்கற விஷ்ணு காக்கும் தெய்வம் அப்படினா, ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றும் டாக்டரும் அந்தப் பெருமாளின் மறு உருவம் தான கண்ணம்மா” என புன்னகையுடன் கூறியவர், மேலும் தொடர்ந்தார்

“இன்னைக்கு உங்க அப்பாவும் அம்மாவும், ஏக்சிடண்டுல சிக்கின அந்த அங்கிள் ஆன்ட்டிக்கு வைத்தியம் செய்யலன்னா, அவங்க நிலைமை என்னனு யோசிச்சு பாரு. தினமும் உன் அப்பாவும் அம்மாவும் இந்த மாதிரி புண்ணியத்தை தான் வேலையா செய்யறாங்க.

ஒவ்வொரு தொழில்ல ஒவ்வொரு கஷ்டம் இருக்கும். உன்னோட அப்பா, அம்மா டாக்டரா இருக்கிறத நெனச்சு நீ பெருமைப்பட்டுக்கணும். அதை விட்டுட்டு மீதி அப்பா அம்மா மாதிரி நம்மளோட ரொம்ப நேரம் விளையாடறதில்லைனு நினைச்சு வருத்திக்க கூடாது” என்ற பாட்டியை ஆச்சர்யமாய் நிமிர்ந்து பார்த்தாள் வித்யா

“உங்க அப்பாவுக்கு அம்மா நான். அவன் பெத்த குழந்தை உன் மனசுல என்ன வருத்தம் இருக்குனு எனக்கு தெரியாதா?” என தீர்க்கமாய் பார்த்தபடி பாட்டி கேட்க, அழுகையுடன் தன் பாட்டியை கட்டிக் கொண்டாள் வித்யா

“சேச்சே… அழக்கூடாதுடா செல்லம். எதுக்கு குழந்தைகளை படிக்க வைக்கிறோம்? நல்லா படிச்சு நல்ல வேலை கிடைச்சு பணம் சம்பாதிக்க மட்டுமில்ல. நல்ல மனிதனா வளர்ந்து நம்மாலான உதவியை ஏதோ ஒரு வகையில் எல்லோருக்கும் செய்யணும். படிச்ச படிப்பே அதுக்கு உதவுதுன்னா, நல்ல விஷயம் தானே. நாளைக்கு நீயும் நல்லா படிச்சு நல்ல வேலைக்கு வந்து நாலு பேருக்கு நல்லது செய்யணும், சரியா?” எனவும்

“சரி பாட்டி” என மகிழ்வுடன் தலையாட்டினாள் சிறியவள்

“சரி சரி நீ போய் பாட்டி ரூம்ல, இரும்பு பெட்டில தாயக்கட்டை விளையாடற அட்டையும் ஒரு கருப்பு டப்பால  காய்களும் வெச்சுருக்கேன், எடுத்துட்டு வா” என பேத்தியை செல்லமாய் விரட்டினார்

“என்னடா, ஆபீஸ் வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டியா?” என்று சமையலறையில் இருந்து கேட்ட அம்மாவிடம்

“இமெயில் கொடுத்திண்டு இருக்கம்மா, இப்ப முடிஞ்சிடும்” என்றான் முரளி

“நாலு பேரும் சேர்ந்து  தாயம் விளையாடி ரொம்ப நாளாச்சு, விளையாடுவமா” என மங்களத்தம்மாள் கேட்க, உற்சாகமாய் மற்றவர்களும் இசைந்தனர்

பிறகு நேரம் போவதே தெரியாமல் தாயக்கட்டை விளையாடிவிட்டு, மதிய உணவை உண்டனர்

“அம்மா சாயங்காலம் கோயிலுக்கு போலாமா?” என முரளி கேட்க

“நாலு மணிக்கு காபி குடிச்சிட்டு எல்லோருமா போலாம்” என்றார் மங்களத்தம்மாள்

சிறிது நேர ஓய்வுக்கு பின், “முரளி, முரளி” என்று அழைத்த அம்மாவின் குரல் கேட்டு எழுந்து வந்தவன்,  பெற்றவள் கொடுத்த காபியை பெற்றுக் கொண்டு ஆசுவாசமாய் அமர்ந்தான்

தானும் காபியுடன் பிள்ளையின் அருகில் அமர்ந்த மங்களத்தம்மாள், “உன்கிட்ட வித்யாவ பத்தி கொஞ்சம் பேசணும்” எனவும்

“சொல்லும்மா” என்றான் முரளி

“நேரம் கிடைக்கறப்பவெல்லாம் ரெண்டு பேரும் கொழந்தையோட நெறைய பேசுங்க, வெளில எங்கயாச்சும் கூட்டிட்டு போங்க. கொழந்தையோட இருக்கற இந்த வயசு போனா வராது முரளி. உங்க வேலை கஷ்டம் எல்லாம் எனக்கு புரியுது, சின்ன கொழந்தை அதுக்கு புரியாதில்லையா?”

“அம்மா அது…” என முரளி ஏதோ சொல்ல வர

“இரு நான் பேசி முடிச்சுடறேன்” என்றவர் தொடர்ந்தார்

“பெத்தவங்க நீங்க உங்க பிள்ளையோட நேரம் செலவிடலைனா, வேற யார் அவங்களுக்காக பாப்பாங்க சொல்லு?

இந்த வயசு தான் நல்ல விதைகளை விதைப்பதற்கான வயசு. எதை நீ விதைக்கறயோ அந்த மாதிரி தான் அந்த குழந்தை வளரும். படிப்போட, விளையாட்டு, நல்லது கெட்டதுக்கு போறது, சொந்தங்கள சொல்லிக் குடுக்கறது, கோவிலுக்கு போறது, வீட்ல பண்டிகைக கொண்டாடுறது எல்லாமும் இந்த வயசுல சொல்லிக் குடுத்தா தான் பெரியவ ஆகறப்ப அதை கடைபிடிப்பா” என பெற்றவள் கூற

“நீ சொல்றது சரிதாம்மா, இனி வித்யாவுக்குனு நேரம் ஒதுக்கி பாத்துக்கறோம்” என்றான் முரளி

மாலை காரில் கிளம்பியவர்கள், யோகாம்பாள் கோவில் அம்பாளையும், மருதமலை முருகனையும், பேரூர் பட்டீஸ்வரையும் மனம் குளிர தரிசித்தனர்

இரவு உணவை, வரும் வழியில் ஒரு உணவகத்தில் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வெளியில் சென்று வந்த அசதியில், முரளியும், கமலாவும், வித்யாவும் நன்றாக உறங்கினர். ஆனால் மங்களத்தம்மாவிற்கு, கனவில் கணவரின் முகம் வந்து வந்து போனது.

மறுநாள் காலை முரளியின் குடும்பம் ஊருக்கு கிளம்ப தயாரானார்கள். எல்லாம் எடுத்துக் கொண்ட பிறகு பெரியவருக்கு மூவரும் நமஸ்காரம் செய்ய, ஆசீர்வாதம் செய்து கண் கலங்கினார் மங்களத்தம்மாள்

“என்னம்மா ஆச்சு?” என முரளி பதற

“ரொம்ப நாள் கழிச்சு உங்கப்பா நேத்து கனவுல வந்தார் முரளி. என்னவோ என்கிட்ட சொல்ல வந்த மாதிரி தோணித்து. வித்யா பெரிய பொண்ணா ஆயிண்டு வரா, இப்போ வீட்ல பெரியவங்க இருக்கிறது அவசியம். என்ன தான் வேலைக்கு வெச்சவங்க பார்த்துகிட்டாலும் நாங்க தாத்தா பாட்டிகள் பாக்கற மாதிரி இருக்குமா?

இத்தன நாள் சொந்த ஊர், உங்க அப்பா வாழ்ந்த வீடுனு இங்கேயே இருந்து என் வாழ்க்கையை முடிச்சுக்கணும் தான் நினைச்சேன். ஆனா வித்யா, ‘ஏன் பாட்டி தனியா இருக்க’னு கேட்டதும், உங்கப்பா கனவுல வந்ததும், ஏதோ எங்கிட்ட சொல்ல வந்தது போல இருக்கு.

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போச்சுனு நாங்க பெரியவங்க சொல்றோமே ஒழிய, அதுக்கு நாங்களும் ஒரு காரணமா தான் இருந்திருக்கோம். எங்க குழந்தைங்க நல்லா படிச்சு வேலைக்கு வரணும்னு ஆசைப்பட்டோம். நீங்களும் நல்ல வேலை, குடும்பம் என்று நாங்க ஆசைப்பட்ட மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தாலும், ரெண்டு பேரும் வேலைக்கு போறதால வீட்ல குழந்தைகளை பராமரிக்க அல்லாடுறீங்க

எங்க காலத்துல,  நாங்க கூட்டுக் குடும்பமா இருந்ததால குழந்தை வளர்ப்பு எங்களுக்கு பெருசா தெரியல. நீங்க உங்க வேலைய  விட்டுட்டு சொந்த ஊர்ல வந்து தங்கறது சாத்தியமில்லை. ஆனா பெரியவங்க நாங்க வாழ்க்கையின் முன் பாதியை வாழ்ந்துட்டோம். இனி இரண்டாம் பாதிய பிள்ளைகளோடவும், பேரன் பேத்திகளோடவும் செலவிடறது தான் சரியா இருக்கும்.

நாம எல்லோரும் ஒண்ணா இருந்துட்டா இந்த பிரச்சனை சுமூகமா தீர்ந்துடும், மீண்டும் கூட்டு குடும்பம் தழைக்கும். எப்பவும் வாழ்க்கையோட பயணம் வேரை நோக்கியதா தான் இருக்கணும்.

அப்ப தான் நம் அடுத்த தலைமுறை ‘செழித்து வளர்ந்த மரம் சுவையான கனிகளைக் கொடுப்பது போல’, சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக வளருவார்கள்” என தன் மனதில் உள்ளதையெல்லாம் பிள்ளையிடம் பகிர்ந்தார் மங்களத்தம்மாள்

பெற்றவளை ஒரு கணம் உற்றுப் பார்த்த முரளி, தன்னையும் அறியாமல் கண்ணில் நீர் மல்க அன்னையை  இறுக கட்டிக் கொண்டான்.

பொதுவாக உணர்ச்சிவசப்படும் தருணங்களில், ஆண்கள் அதிகம் பேசுவதில்லை என்பதால், வேறெதுவும் பேசாமல், “சரி புறப்படும்மா, போலாம்” என்றான் முரளி

“அதுக்குனு வீட்டை அப்படியே போட்டுட்டு வர முடியுமாடா, வீட்டு சாமான் எல்லாத்தையும் ஒரு ரூம்ல வெச்சு பூட்டிட்டு, பக்கத்தாத்து ரகுகிட்ட சாவியைக் குடுத்துட்டு கிளம்பி வரேன். அப்ப தான் வீடு வாடகைக்கு விட சரியா இருக்கும்.  நீ அடுத்த வாரம் போல வந்து என்ன கூட்டீண்டு போ” எனவும், ஊருக்கு மனைவி மகளுடன் கிளம்பினான் முரளி

எப்பொழுது ஊருக்கு வந்தாலும்,  கனத்த மனதோடு திரும்ப செல்லும் முரளி, இந்த முறை மனநிறைவுடன் சென்னை நோக்கி புறப்பட்டான்.

தோ இரண்டு வாரம் நிமிடமாக ஓடி விட, முரளியின் வீட்டில் காலை நேரம், மங்களத்தம்மாள் குளித்து புதிதாய் வாங்கிய துளசி செடிக்கு பூஜையை முடித்து, சுவாமிக்கு விளக்கேற்றினார்

பின் வித்யாவை எழுப்பி கிளப்பி, பார்வதி தயார் செய்திருந்த கிச்சடியை உண்ணச் செய்து, ஸ்கூல் வேனில் ஏற்றிவிட சென்றார்

பின் முரளியும் கமலாவும் மருத்துவமனைக்கு கிளம்ப, பக்கத்திலிருந்த பார்த்தசாரதி கோவிலுக்கு சென்று  பெருமாளை தரிசித்து விட்டு வந்து சாப்பிட்டார்

பாட்டியும் பேத்தியும் ஒரே அறையில் இருப்பதற்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தான் முரளி. வித்யா மாலை பள்ளியில் இருந்து வந்தவுடன், சாப்பிடக் கொடுத்து இருவரும் அப்பார்ட்மெண்ட்டிற்கு கீழே பார்க்குக்கு சென்றனர்.

குழந்தைகளுடன் வித்யா பார்க்கில் விளையாட, மங்களம் பாட்டி அங்கிருந்த வயதானவர்களுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து, “விளையாடியது போதும் வா” என பாட்டி கூப்பிட,  பேத்தியும் பாட்டியுமாக வீடு திரும்பினார்கள்.

மருத்துவமனையிலிருந்து முரளியும், கமலாவும் எட்டரை மணிக்கு வந்து சேர, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து பின்பு பாட்டியும் பேத்தியும் அவர்களது அறையில் உறங்கப் போனார்கள்

விளையாடிய களைப்பில் வித்யா உறங்கிப் போக, மங்களம் பாட்டியும் கண்ணயர்ந்தாள்

அன்றிரவு கனவில் வந்த அவரின் கணவர், புன்முறுவல் செய்துவிட்டு மறைந்து விட்டார். உடனே விழித்தவள் முகத்தில் ஒரு புன்னகை. பக்கத்திலிருந்த தண்ணீரை குடித்து விட்டு நிம்மதியாக உறங்கிப் போனார் மங்களத்தம்மாள்

புரிதலும் விட்டுக் கொடுத்தலும் இருந்து விட்டால், வாழ்க்கை என்றும் இனிமையாகவே அமைந்துவிடும். நம் தனிமனித ஒழுக்கமும், குடும்ப அமைப்பும், சமூகத்தின் நல்ல பழக்க வழக்கங்களுமே நம்முடைய பலம்.

வானைத் தொடும் மரமாக இருந்தாலும், அதனுடைய வேரை பொறுத்தே மரத்தின் பலம் அமையும். நல்ல விதைகளை விதைப்போம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றுவோம்.

(முற்றும்)

உங்கள் படைப்புகளையும் “பிரபல பதிவு போட்டி – டிசம்பர் 2020”க்கு அனுப்ப விரும்பினால், போட்டி விதிமுறைகள், பரிசு விவரங்கள் அனைத்தும், கீழே கொடுக்கப்பட்டுள்ள “சஹானா” இதழின் Youtube சேனல் linkல் காணலாம். நன்றி 

Subscribe to Sahanamag’s Youtube Channel to get updates on Competitions and Prize Announcements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. கூட்டுக் குடும்பத்தின் உண்மையான பொருள் இந்நாட்களில் மாறினாலும் தாத்தா, பாட்டி கூட இருந்தாலே கூட்டுக் குடும்பம் எனச் சொல்லி இருக்கும் இந்தக் கதை நல்லதொரு நீதியைப் போதிக்கிறது என்பதால் நன்றாகவே இருக்கிறது. எழுத்தில் இன்னும் கொஞ்சம் இயல்பான நடை வேண்டும்.

டிசம்பர் 2020 போட்டி அறிவிப்பு – “பிரபல பதிவு போட்டி”

தமிழில் சுலபமாய் மற்றும் விரைவாய் டைப் செய்வது எப்படி? (Detail Video in Tamil)