in

பூக்கண்ணன் (குறுநாவல் – பகுதி 2) – எழுதியவர்: கார்த்திக்

பூக்கண்ணன் (பகுதி 2)

இந்த குறுநாவலின் முதல் பகுதியை வாசிக்க

ன்று, வழக்கமான மருத்துவச் சோதனையின் போது, பூக்கண்ணனின் கால்விரல் அசைவதைக் கண்டனர் மருத்துவர்கள்

தொடர்ந்தளித்த சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட, சிகிச்சையும் தீவிரமடைந்தது. திடீரென்று அந்த இருண்ட அறையில் நம்பிக்கைப் பிறந்தது. கூடவே பரபரப்பும் சேர்ந்து கொண்டது.

மருத்துவர்களோடு சில செவிலியர்களும் சேர்த்து கொண்டனர். ராமசாமியும் உடனிருந்தார்

‘நாம் இவன் கண் விழிப்பதைக் காண ஆவலோடு நிற்பது போல, இவனும் இவன் குழந்தை கண் விழிப்பதைக் காண மனைவியின் பிரசவத்தின் போது நின்றிருப்பானா? அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பானா? தன் குழந்தையை அள்ளித் தூக்கியிருப்பானா?’ போன்ற கேள்விகள் ராமசாமியின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன

சிகிச்சைக்குப் பின், பூக்கண்ணனின் கண்கள் திறந்தன. ஏதோ பிரசவத்தில் பரிதவித்துப் பிறந்த குழந்தையைப் போல், அவனைப் பார்த்துப் பூரிப்படைந்தனர் மருத்துவர்கள்

மற்றவர்களுக்கு எப்படியோத் தெரியவில்லை, தேன்மொழி டாக்டருக்கு உண்மையாகவே முகத்தில் ஆனந்தம் மலர்ந்து, அதன் வெளிப்பாடாய் இரண்டுச் சொட்டுக் கண்ணீர் கூட வெளிப்பட்டது.

இவன் ஒருவன் உயிரையாவது காப்பாற்ற முடியாதா என்ற ஏக்கத்தோடு கடந்த அவருடைய நாட்கள், ஒருவழியாக முடிவுக்கு வந்தன

பூக்கண்ணனின் பூவிழுந்த கண்ணை, சூழ்ந்திருந்த மருத்துவர்களின் தோள்பட்டை இடைவெளியினூடே, இன்னொரு முறை கண்டார் ராமசாமி.

அக்கணம் இன்னொரு சிக்கல் முளைத்தது. பூக்கண்ணனின் சுயநினைவு திரும்பியதேத் தவிர, பழைய நினைவுகள் யாவும் மறைந்திருந்தன

சமீப வருடங்களில் நடந்தேறிய சம்பவங்கள் யாவும், அவன் நினைவில் இருந்து அழிந்திருந்தன

அது பின் மண்டையில் ஏற்பட்ட அதிர்வின் விளைவே என்றும், தற்காலிகக் குறைபாடு தான் என்றும் மருத்துவர்கள் நம்பினர்

ஆனால் எப்போது நினைவு திரும்பும், ஒருவேளை மறந்தது மறந்ததுதானா, அல்லது மறதியை எறிந்து நினைவைப் பெருவானா போன்ற கேள்விகள், பதிலேதுமின்றி அந்தரத்தில் தத்தளித்துக்  கொண்டிருந்தன.

அவனுக்கு பழைய நினைவுகள் தான் திரும்பவில்லையே தவிர, சுயநினைவைப் பெற்று விட்டான். காயங்களும் முக்கால்வாசிக்கு மேல் குணமாகிவிட்டன

இனியும் அவனை மருத்துவமனையில் வைத்திருக்க மருத்துவர் குழுவின் மூத்த மருத்துவரான செழியனுக்கு விருப்பமில்லை

அவர் என்ன சொன்னாலும் தலையாட்டும் டாக்டர் அன்பரசன், அதற்கும் வழக்கம் போல் தலையாட்டினார்.

ஆனால் அக்குழுவின் தலைவரான தேன்மொழியோ, பழைய நினைவுகள் திரும்பும் வரையோ, அல்லது சம்பந்தப்பட்டவர்களின் தொடர்பு கிடைக்கும் வரையோ, அவனை வெளியே அனுப்புவது அவனுக்கே அபாயகரமானதென்று வாதிட்டார்

பயிற்சி மருத்துவர் செபாஸ்டினும் தேன்மொழியின் கருத்தை ஆமோதிக்க, “உன் கருத்த சொல்ற அளவுக்கு நீயின்னும் வளரல தம்பி” என்று செழியனால் வாயடைக்கப்பட்டார்

நீண்ட நெடிய விவாதத்திற்கு பின், அவனுக்குத் தற்காலிகமாக மருத்துவமனையிலேயே ஒரு வேலை போட்டுத் தந்து, சில தினங்கள் அங்கேயே தங்க வைக்க முடிவெடுக்கப்பட்டது.

மருத்துவமனையில் வேலை செய்யத் தொடங்கிய சில நாட்களிலேயே, எல்லோரிடமும் நன்றாகப் பழகியிருந்தான் பூக்கண்ணன். குறிப்பாக ராமசாமியிடம் நல்ல நட்பு ஏற்பட்டது அவனுக்கு

மருத்துவமனை வளாகத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது

நோயாளிகள் மற்றும் தாய்மார்-குழந்தைகளிடம் கனிவாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் பணிவாகவும் நடந்து கொண்டான் பூக்கண்ணன்

ஆனால் டைரியில் அவனது எழுத்துக்களை வாசித்திருந்த ராமசாமிக்கு, பூக்கண்ணன் முற்றிலும் வேறொரு ஆளாக தெரிந்தான்

டைரியில் இருந்த சிடுசிடு முகம், இப்போது புன்னகை பூத்த முகமாக மாறியிருந்தது. அவனது உண்மைப் பெயர் பேச்சியப்பன் என்று ஒருமுறை ராமசாமியிடம் கூறினான்

அதுமட்டும் எப்படி நினைவில் உள்ளது என்பது, மருத்துவர்களுக்கே புரியாத புதிராய் தான் இருந்தது

ஆக, டைரியில் பார்த்த பூக்கண்ணனும் நேரில் பார்க்கும் பேச்சியப்பனும் வெவ்வேறு ஆட்களாய்த் தோன்றினார்கள். இருப்பினும் ராமசாமிக்கு பூக்கண்ணனின் மேல் ஓர் ஆர்வமிருந்தது

அதனால் தானோ என்னவோ, பூக்கண்ணனின் பையில் மிஞ்சியிருந்த மற்ற பொருட்களை அவனிடம் ஒப்படைத்த ராமசாமி, அவனது டைரியை மட்டும் தன்னுடனேயே வைத்துக் கொண்டு விட்டார்.

நாளாவட்டத்தில், அங்கு வேலை செய்பவர்களுக்கும், அடிக்கடி வந்து போகும் நோயாளிகளுக்கும், நன்றாய் பழகும் நண்பனாகி விட்டான் பூக்கண்ணன்

அவன் கண்களைப் பார்த்தாலே தாயின் சுண்டு விரலை இறுகப் பற்றும் குழந்தைகள் கூட, அவனையே சுற்றிச் சுற்றி வந்தன

அதற்குக் காரணம், அவனது விதவிதமான கதைகளும், அவற்றுள் அவன் வைத்துச் சொல்லும் நையாண்டி குறும்புகளுமே.

அதிலும் ஒரு குட்டிப் பெண் அவனோடு மிகவும் ஒன்றி விட்டாள். அவனும் அந்த ஏழு வயதுச் சிறுமியை, இரண்டு மூன்று முறைப் பார்த்திருக்கிறான்

எப்போதும் அவள் தனியாகவே அமர்ந்திருந்ததால், அவளுக்கு மட்டும் சில கதைகளை சேர்த்துச் சொல்லுவான்

அவள் குரல் வேறு தொண்டைக் குழியில் ஏதோ அடைபட்டு, அதனால் சிரமப்பட்டுப் பேசுவது போலிருக்கும். அதனாலேயே அவள் மீது அவனுக்கு தனிப் பாசமிருந்தது.

“எப்பவாத்தாலும் ஒன்ன மட்டுந்தான் பாக்குறேன், ஒங்கம்மா எங்கப் போவுது ஒன்னத் தனியா வுட்டுபுட்டு?” என்று மரத்தடியில் அமர்ந்திருந்த அந்த சிறுமியிடம் கேட்டான் பூக்கண்ணன்

“அவங்களுக்கு பாப்பா வரப் போவுதுல்ல, அதான் டாக்டர்கிட்ட காட்டப் போயிருக்கு” என்றாள் சிறுமி.

“ஒங்கப்பா வரலியோ?”

“அவுரு எப்பாச்சுந்தான் வருவாரு” தொண்டையில் மாவடைத்துப் பேசுவது போல் இருந்தது, அந்த சிறுமியின் குரல்

“ஒன்னய ரெண்டு மூணுத் தரவப் பாத்துருக்கேன், ஆனா ஒம்மாவப் பாத்ததில்லையே?”

“நாங்க பின்னாடி செவுத்துல ஓட்ட இருக்குமுல, அதுல வருவோம். ஏம்மாவாலத் தூரமா நடக்க முடியாதுல…”

“ஏன் காலுல ஏதுங்காயம் பட்டுருக்குதா?”

“இல்லியே!” என்றவள், சற்று யோசித்துவிட்டு “வயித்துல தான் பாப்பா இருக்குல்ல, எப்புடி நடக்க முடியும்? இப்பத் தான சொன்னேன்” என மழலைக் கோபம் புரிந்தாள்

அவனுக்கு அப்பிஞ்சுக் குழந்தையின் பேச்சும், அவளது முகபாவங்களும், செல்லச் சிரிப்பும், கொஞ்சும் மிரட்டல்களும், வறண்ட நிலத்தில் திரண்டு வந்துப் பாயும் ஊற்றாக மனத்தைக் குளிர்வித்து, ஆனந்த அலைகளை எழுப்பியது.

இதற்கிடையில் ராமசாமி மறுபடியும் டைரியை கையிலெடுத்தார். முன்பு போலவே இரண்டு மூன்று கடிதங்களைப் படித்தார்

அதில் அவனது காட்டு வேலையைப் பற்றியும், ஊருக்குள் நடந்தேறிய சிற்சிலச் சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தான் பூக்கண்ணன்

அன்று மருத்துவமனை எவ்வித பரபரப்புமின்றி அமைதியாய் இருந்தது. மாலைச் சூரியன் நன்றாய் பழுத்த மிளகாய்ப் பழம் போல உருண்டுத் திரண்டு, மேற்கு வானில் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தது

சாவகாசமாய் நாற்காலியில் சாய்ந்து கொண்டு பூக்கண்ணனின் டைரியைப் படித்துக் கொண்டிருந்த ராமசாமி, சட்டென நிமிர்ந்து அமர்ந்தார்

முகம் தீவிரமடைய, கண்களோ கலவரமடைந்தன. அப்படி என்ன இருந்தது அந்த டைரியில்?

ஒருவேளை பூக்கண்ணனின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்து விட்டதோ!

முந்தா நேத்தி கோயில் திருவிழாவுலப் போட்டிருந்த சந்தைக்குப் போயிருந்தேன். எப்பா எம்புட்டு சனம்! எத்தினிக் கடைங்க! எங்கப் பாத்தாலும் வளவி, தோடு, கம்மல், பொட்டுனு கலர் கலராத் தொங்க வுட்டுருக்கானுவ

ஆனா எத்தினிக் கடைங்கப் போட்டாலும் இந்தப் பொம்பளைங்களுக்கு மட்டும் பத்தவே பத்தாது. கொப்புறானே எல்லாக் கடையிலேயும் மொச்சிக்கிட்டு நிக்குறாளுவ.

அந்தக் கூட்டத்துல ஏதோ தெரிஞ்ச சாடையா இருக்கேனு உத்துப் பாத்தா, நம்ம முருகேசம்பய பொண்டாட்டி. பாவம் அழுது அழுது கண்ணெல்லாம் வீங்கிப் போயி அவ ஆத்தாளோட நடந்து போயிகிட்டு இருந்தா

இந்த முருகேசம்பய இப்புடியா அவளத் தனியா வுட்டுப்புட்டு போய்ச் சேரணும்? அப்பத்தேன் ஒரு சேதியச் சொல்லத் தவறிட்டோமேனுத் தோணுச்சு.

ஒரு நாள் பண்ணையாரு மில்லுலேருந்து சரக்கெல்லாம் லாரியிலக் கொண்டு போயிச் சந்தையில எறக்கிட்டு மறுபடி மில்லுக்குப் போய்க்கிட்டிருக்கேன். தனியாத்தான் லாரிய ஒட்டிக்கிட்டு போறேன்.

திடீர்னு இந்த முருகேசம்பய குறுக்கால வந்து, துண்ட ஆட்டிக்கிட்டே வண்டிய நிறுத்த சிக்னல் கொடுக்குறான். சரி பேச்சுத் தொணைக்காதுத் தேருவான்னு வண்டிய நிறுத்தினேன்.

உள்ள ஏறினப் பய, “எடே பூக்கண்ணா, எப்படே வண்டியெல்லாம் ஓட்டக் கத்துக்கிட்டே?”னு பொளக்க ஆரம்பிச்சிட்டான். நல்லாயிருக்குற புத்திய நாசஞ் செய்யிறதுக்குன்னே வரானுவ

நானும் அவனும் மாத்தி மாத்தி பேச, பேச்சு முத்தி குரல் ஒசர, நா அப்ப மட்டும் வண்டியோட்டாம இருந்துருந்தேன்னா கைகலப்பாயிருக்கும்.

எம் மண்ட காஞ்சி போயிருச்சு. அந்தப் பய பேச்ச அதுக்கு மேலையுங் கேக்க முடியல.

வண்டிய பிரேக் போடாம கொஞ்ச தூரம் ஓட விட்டு, மெதுவா நடுரோட்டுல நிறுத்தினேன்

“எடே முருகேசா திரும்பவும் டீசல் டியூப்பு புடிங்கிக்கிடுச்சுனு நெனக்கிறேன், செத்த எறங்கிப் பாரு” ன்னேன்.  

“ஏம்ப்பா, நமக்கிதெல்லாந் தெரியாதுடே” ன்னான் அவன்.

“எம்ப்டே இப்புடி அலுத்துக்கிற? மொரண்டு புடிக்காம கொஞ்சமாவது நன்றியக் காட்டுடே. அப்புடி எறங்கிப் பின்னால போ. பின் டயருக்கு முன்னாலச் செவப்பா ஒரு சிலிண்டர் இருக்கும்பாரு. அதுல இருந்து ஒரு டியூப் புடுங்கிக் கீழ கெடக்கும், அத எடுத்து சிலிண்டருலச் சொருவு, அம்புட்டுதான்” ன்னேன்.

பய எறங்கிப் போனான்.

“அந்தப் பக்கம் இல்லடே, இப்புடிச் சுத்தி வா, எவனாவது அங்க சிலிண்டர் வெப்பானாடே? முன்ன பின்ன லாரியப் பாத்துருக்கியா இல்லையா”னு சொல்லி எடப்புறம் அனுப்பினேன்

“டியூப் கண்ணுக்குத் தெரியாதுடே, நல்லா கீழ படுத்துக்கிட்டு பாரு” ன்னேன்.

அவனும் மல்லாந்துப் படுத்துக்கிட்டு இல்லாத டியூப்பத் தேடிக்கிட்டு இருந்தான் கிறுக்குப் பய. “ஏதும் டியூப் இல்லயேடே… கீழயீழ வுழுந்துப்புட்டோ!”ன்னு அவஞ் சொல்லிட்டிருக்கும்போதே, வண்டியச் சாவி போட்டு முன்னால எடுத்தேன்

முருகேசன் நெஞ்சுல டயரு முழுசா ஏற முடியாம நிண்டுருச்சு. பயலோட அலறல் என்ன பீதியாக்கிடிச்சு. வாயிலிருந்து வேற கருஞ்செவப்பா ரத்தம், அவன் மொவத்துலேயே வழியிது

சட்டுனு வண்டிய பின்னால எடுத்து, கியர மாத்தி வேகமா வுட்டு ஏத்தினேன். அலறல் சத்தம் முழுசா நிண்டுருச்சு. ரோடு முழுக்க ரத்தம் வழிஞ்சியோடுது.

அந்தக் கொடுமைய என்னால பாக்க முடியாம வண்டியெடுத்துக்கிட்டு வந்துப்புட்டேன். பாவிப் பய, கடைசியில உண்மையாவே அவம் பொண்டாட்டித் தாலிய அறுக்க வெச்சிப்புட்டானே!

இப்படிக்கு,                                                                                                                             

அன்பு பேரன்.

இரத்தம் யாவும் வடிந்துப் போனது போல் ராமசாமியின் முகம் வெளிறியது. கண்களை மூடினால், முருகேசனின் கருஞ்சிவப்புக் குருதி, அவர் எண்ணத் திரையில் வழிந்தோடியது.

டைரியை மூடியெடுத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினார். இரவு பூத்திருந்த வேளையில், சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடந்த போது, சற்று தூரத்திலிருந்து, எதிரே ஓர் உருவம் விசுக்கி விசுக்கி நடந்து வருவதைக் கண்டார்

அது யாரென்றுத் தெரிந்ததும், அவரின் ரத்தவோட்டம் வேகமெடுத்து, இதயத் துடிப்பை முடுக்கி விட்டது.

“என்னண்ணே கெளம்பிட்டீகளா?” என்று கேட்டுக் கொண்டே அவரின் சைக்கிளை நிறுத்தினான் பூக்கண்ணன்.

“ஆமாம்பா இன்னைய சோலி முடிஞ்சிடுச்சு, கெளம்ப வேண்டியது தானே” என்று பயத்தை காட்டிக் கொள்ளாதவாறு கூறினார் ராமசாமி

“சரி வாண்னே, ஒரு டீயப் போட்டு போவலாம்.”

“இல்லய்யா வூட்டுல புள்ளைங்க எல்லாந் தனியா இருக்குதுங்க… எனக்கு வேற வயிறு என்னமோ கோளாறாவே இருக்குது…” என நழுவினார் ராமசாமி

“அட என்ன நீரு டாக்டர் வூட்டுல இருந்துக்குட்டே வவுரு செரியில்ல அது இதுன்னுப் பொலம்புறீய! சரி வா, ஒரு சுக்குக் காப்பியாது போடு. நீ வூட்டுக்கு போறதுக்குள்ள எல்லாஞ் செரியாயிச் சாப்பாட்ட பந்தி கட்டியடிப்ப” என்று சிரித்துக் கொண்டே அவர் தோள் மீது கைபோட்டு நடந்தான் பூக்கண்ணன்

ராமசாமி அதற்கு மேலும் மறுத்துப் பேச பயந்து, வேறு வழியின்றி அவனோடுச் சென்றார்

அவன் எப்பேற்பட்டவன் என்றுத் தெரிந்து கொண்டு, அவனுக்குத் தெரியாமலேயே அவன் டைரியையும் தன் பையில் வைத்துக் கொண்டு, அவன் கைகளைத் தோளில் போட்டுக் கொண்டு ‘எதுவும் நடக்கவில்லை, எனக்கும் கவலையில்லை’ என்ற பாணியில் அவனோடு காபி குடிப்பதென்பது சிரமமான ஒன்று தான்

அவர் மனம் பட்டபாடு அவருக்குத் தான் தெரியும். போதாதற்கு பூக்கண்ணன் இடுப்பில் சொருகியிருக்கும் கத்தியின் ஞாபகம் வேறு வந்து தொலைத்தது

ஒரு முறை அதைப் பற்றி அவனிடம் கேட்ட போது, “அது காட்டுச் செடியை அறுக்குற கத்திண்ணே, கழுத்த அறுக்குற பொருளா என்ன? என்னைய பாத்தா கொலகாரப் பயலாட்டமா தெரியுது?” என்று சிரித்துக் கொண்டே கூறியது அவர் நினைவில் வந்தது.

“ஏம்ப்பா இன்னுமா இடுப்புச் சுருக்குலக் கத்திய வெச்சி சுத்திக்கிட்டுக் கெடக்குறே?” என்று சாதாரணமாய் கேட்பது போல் கேட்டார் ராமசாமி.

“ஆமாண்ணே, ஏன் கேக்குறீய?”

“நீதான் இப்போ காட்டு வேலைக்குப் போறதில்லயே, ஆஸ்ப்பிட்டல்ல தான வேல. டாக்டருங்க பாத்தாப் பிரச்னையாகிடப் போதுய்யா…”

“அட, நம்மென்ன மறச்சி மறச்சியா வெச்சிக்கிட்டு திரியுறோம்… இப்புடிப் பதறுறீயளே! நர்ஸம்மாவே பல நேரம் எங்கத்திய வாங்கித் தான் மருந்துப் பையெல்லாங் கிழிக்குறாங்க…” என்றான் புன்னகையுடன்

‘இன்னும் கொஞ்ச நேரத்திற்கு இவனுக்கு பழைய நினைவுகள் வராமலிருந்தால் போதும்’ என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார் ராமசாமி

அவசர அவசரமாக, ஆனால் அதே சமயம் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், மொடக் மொடக்கென காபியைக் குடித்து விட்டு, அவனுடன் பேச்சை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்

மறுநாள் உடல்நிலை கோளாரெனக் கூறி, விடுப்பு எடுத்துக் கொண்டார்

தன் பேத்திகள் வாசலில் விளையாட, மரத்தடியில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து, டைரியின் ரத்தம் தோய்ந்த பக்கங்களைப் புரட்டினார்.

ன்று மதியம், தரையில் கிடந்த காய்ந்த இலைகளையெல்லாம் பெருக்கித் தள்ளி, ஆங்காங்கே கோபுரம் போல் குவித்து வைத்துவிட்டு, சிந்தும் வியர்வையைத் துடைத்துக் கொண்டே மரத்தடிக்குச் சென்றான் பூக்கண்ணன்.

“என்ன புள்ள, இன்னிக்கும் ஓ ஆத்தா ஒன்ன தனியா வுட்டுப்புட்டுப் போயிட்டாளா?” என்று மரத்தடியில் அமர்ந்திருந்த, முந்தைய நாள் பார்த்துப் பேசிய அதே சிறுமியிடம் கேட்டான்.

அவள் ஏதும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.

“என்ன சோந்து போயி கெடக்குறே, காலையில ஏதுஞ் சாப்புட்டியா?”

“ஆத்தா கஞ்சி கொடுத்துச்சு” என்றாள் மெல்லிய குரலில்

“ஏன் நெல்சோறு போடாதா ஓ ஆத்தா?” என்று கோபித்துக் கொல்வதைப் போல் கேட்டான்

“போடுமே… ஆனா காலையிலக் கஞ்சி தான் ஊத்திக் குடுக்கும்”

“தெனைக்கும் இங்க வந்து ஒக்காந்துக் கெடக்கியே பள்ளியூடத்துக்கெல்லாம் போவுறதில்லயா?”

“ஓ போவேனே! இப்போ எனக்கு லீவு. இப்பத் தான பரிச்ச முடிஞ்சிது.”

“என்ன படிக்குதே?”

“ஒண்ணாங் கிளாஸ் படிக்குறேன். நாந்தான் நாலாவது ரேங்க்கு” என்றாள் பெருமையுடன்

அதற்கு அர்த்தம் புரியாமல் சிரித்து மழுப்பினான் பூக்கண்ணன்.

“நீ பள்ளியோடத்துக்கெல்லாம் போனதேயில்லதான, ஒன்ன பாத்தாலேத் தெரியுது” என்று வாயில் கை வைத்துச் சிரித்தாள் அந்த சிறுமி

“அடிச் சிறுக்கி, என்னச் சிரிப்புப் பாரு! கொஞ்சம் எழுதப் படிக்க  தெரியற அளவுக்கு நானும் தெரிஞ்சு வெச்சுருக்கேன். அதுக்கு மேல காட்டுப் பயலுக்கு என்னத்துக்கு புள்ள பள்ளியூடம்?”

“நீ காட்டுலேயா வேல பாக்குற? என்ன வேல பாக்குற?”

“அது தெரியாமத் தான இங்க கெடக்குறேன்”

“நீ என்ன வேல பாக்குறேன்னே ஒனக்குத் தெரியில்லயா!!” என்று கலகலவென சிரித்தாள்.

“எனக்கு மண்டையில தம்மாத்தூண்டு ஒரு ஓட்ட வுழுந்துப்புடுச்சு. அது வழியா ஞாபகம் வெச்சிருந்த செலதுலாங் கொட்டிப் போயிடுச்சு. அதான் மறந்துப்புட்டேன்”

ஓட்ட மண்ட ஓட்ட மண்ட” என்று சொல்லி, விழுந்து விழுந்துச் சிரித்தாள் சிறுமி

அப்போது வேக வேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு, மருத்துவமனை வளாகத்துக்குள் ராமசாமி நுழைவதை பார்த்தான் பூக்கண்ணன். ஏனோ அவர் பதட்டமாய் இருப்பதை போல் பூக்கண்ணனுக்கு தோன்றியது

அவரைக் கூப்பிடலாமெனக் கை காட்டுவதற்குள், சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்டு போட்டு விட்டு, அவசரமாக மருத்துவமனைக்குள் சென்று விட்டார்

#ad

(தொடரும்… அக்டோபர் 28, 2020 அன்று, இந்த குறுநாவலின் இறுதிப் பகுதி வெளியிடப்படும்)                     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    லலிதா ஸகஸ்ரநாமத்தில் அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள் – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)

    மில்க் பேடா (சுவையான ஸ்வீட் ரெசிபி) – By ஆதி வெங்கட்