in

ப்ரோஜெக்ட் கேப்ஸ்யூல் எர்த் 2025 (அறிவியல் புனைவு சிறுகதை) 

ப்ரோஜெக்ட் கேப்ஸ்யூல் எர்த் 2025 (Science Fiction in Tamil)

நாள்: செப்டம்பர் 10, 2022

“வேற வழியே இல்லையா ராம்?”

“இதுக்குன்னே உருவாக்கப்பட்ட உலகத்துல இருக்கற சிறந்த விஞ்ஞானிகள் கொண்ட நம்ம ‘யூனிவர்சல் சர்வைவல் கமிட்டியே கைவிரிச்சப்புறம் வேற எந்த வழியும் இருக்கறதா எனக்கு தெரியல பீட்டர்”

“வாட் நெக்ஸ்ட் ராம்?”

“வேற என்ன? ‘பிளான் பி தான்… எமர்ஜன்சி மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணு பீட்டர்”

“ஓகே ராம்” என கனத்த மனதோடு ராமின் அறையிலிருந்து வெளியேறினான் பீட்டர்

நாள்: செப்டம்பர் 17, 2022

“டியர் பிரெண்ட்ஸ், நான் ராம்பிரசாத், ‘குளோபல் ஹெல்த் மேனேஜ்மென்ட் கமிட்டி’யோட சேர்மன். இந்த அவசரகால கூட்டத்தின் அழைப்பை ஏற்று, கலந்து கொள்ள வந்ததற்கு மிக்க நன்றி

பொதுவா இந்த மாதிரி கூட்டத்திற்கு, மருத்துவத்துறையை சேர்ந்தவங்கள மட்டுமே அழைக்கறது தான் வழக்கம். ஆனா இந்த முறை மக்கள் பிரதிநிதிகளா இருக்கற அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், மதகுருக்கள், தொழிலதிபர்கள்னு உங்க எல்லாரையும் வரவெச்சதுக்கு காரணம், உண்மை நிலவரம் மக்களுக்கு எடுத்து செல்லப்படணும்னு தான். நமக்கு நிறைய அவகாசம் இல்ல, நேரடியா விசயத்துக்கு போகலாம்னு நினைக்கிறேன்

‘கொரோனா வைரஸ் டிசீஸ்’னு சொல்லப்படற ‘COVID-19’ பத்தி உங்க எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும். மூணு வருஷம் முன்னாடி 2019ல ஆரம்பிச்ச இந்த வைரஸ், இப்ப உலகம் முழுக்க பல கோடி உயிர்கள பலி வாங்கி இருக்கு. இது பெரும்பாலானோர் நினைக்கற மாதிரி அப்படி ஒண்ணும் ஜெயிக்கவே முடியாத கொடிய நோய் இல்ல, அம்மை காலரா மாதிரி நம்ம வாழ்நாள்ல கடந்து வந்த சில நோய்கள் மாதிரியான ஒரு தொற்று நோய் தான்

நாம சரியா செயல்பட்டிருந்தா இத்தனை இழப்புகளை தவிர்த்திருக்கலாம். அரசாங்கம் சொன்ன மாதிரி சமூக விலகல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பழக்கம், சுயகட்டுப்பாடு இது மட்டும் கடைப்பிடிச்சுருந்தாலே நிச்சயம் இதை கட்டுக்குள்ள கொண்டு வந்திருக்க முடியும்

ஆனா நாம யாரும் அதுக்கு தயாரா இல்ல. நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன், எனக்கு எதுவும் வராதுனு தான் தோன்றிதனமா செயல்பட்ட காரணமா, இன்னைக்கி நம்ம உலக மக்கள் தொகைல பாதிய இழந்துட்டு நிக்கறோம்”

“எப்பவும் போல மக்கள குறை சொல்லிட்டு தப்பிக்க பாக்கறீங்களா?” என பங்கேற்பாளர் ஒருவர் கோபமாய் கேட்க

“யாரையும் குறை சொல்லி இப்ப ஆகப் போறது ஒண்ணுமில்ல சார், அதுல எனக்கு எந்த லாபமும் இல்ல. இனி என்ன நடக்கப் போகுதுங்கற நிதர்சனத்தை புரியவெக்கத்தான் இந்த கூட்டம்” என பொறுமையாய் பதிலளித்த ராம்பிரசாத் தொடர்ந்தார்

“உலகம் பூரா இருக்கற எல்லா ஆராய்ச்சியாளர்களும் மூணு வருஷ தொடர் முயற்சிக்கு பின்னாடி, இதற்கான மருந்துக்கு இனி வாய்ப்பே இல்லைனு கைவிரிச்சுட்டாங்க. கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளும் வெகு சிலருக்கு மட்டுமே வேலை செய்யுது, அப்படி குணமடைஞ்சவங்களும் மருந்தின் பக்கவிளைவுகள் காரணமா சில மாதங்கள்ல மரணிக்கறாங்க

உலகின் பாதி மக்கள் தொகையை இழந்த பின்னாடியும், இந்த வைரஸ் இன்னும் வேகமா பரவிக்கிட்டு தான் இருக்கு, இதுவரை பாதிப்புக்கு ஆளாகாதவங்க கூட விரைவில் ஆளாக நேரிடும்கறது தான் கசப்பான உண்மை. அதனால இதுக்கு தீர்வே இல்லைங்கற ஒரு கட்டத்துல நாம இருக்கோம்”

“இது பயோ வாருக்காக உருவாக்கப்பட்ட வைரஸ்னு வர்ற வதந்திகள் பத்தி உங்க விளக்கம் என்ன டாக்டர் பிரசாத்?” என இடைமறித்தார் டாக்டர் சாம்சன்

“இந்த வைரஸ் ஏன் எப்படி வந்ததுனு ஆராய்ச்சி பண்ற கட்டத்தை நாம தாண்டிட்டோம் டாக்டர், அதைப் பத்தி பேசறதுல இப்ப எந்த பிரயோஜனமும் இல்ல. வெளிப்படையா சொல்லணும்னா நாம் நம்ம வாழ்வின் கடைசி நாட்களை நோக்கி போய்கிட்டு இருக்கோம்” என கசந்த முறுவலுடன் ராம் நிறுத்த, கூட்டத்தில் பதட்டமான குரல்கள் எழுந்தது

“அப்போ நாம யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லையா?  ரெண்டு வயசு கூட நிரம்பாத என் பிள்ளையும் இதுக்கு பலியாகத் தான் போறானா டாக்டர்?” என கண்ணீருடன் வினவிய பெண்மணியை பார்த்ததும், தன் மகள் மித்ராவின் முகம் கண்முன் தோன்ற, ஒருகணம் பேச இயலாமல் நின்றார் ராம்

“உங்க வேதனை எனக்கு புரியுது மிஸஸ் சோபியா. ஆனா நீங்க ஒரு தாய் மட்டுமில்ல, ஓரு கல்வியாளரா நிறைய பெற்றோருக்கு இந்த விஷயத்தை கொண்டு சேர்த்து தைரியம் கொடுக்க வேண்டிய இடத்துல இருக்கீங்க. நம்ம எல்லோருக்கும் நிச்சயம் இது வேதனையான தருணம் தான், ஆனா தவிர்க்க முடியாத ஒண்ணு

நிதர்சனத்தை ஏற்று, இத்தனை தலைமுறைகளா நம்மை வாழவெச்ச உலகத்துக்கு நம் இறுதிக்கடமையை உணர்ந்து செயல்படுத்த வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்” எனவும், கூட்டத்தில் சலசலப்பு கூடியது

“கொஞ்சம் எல்லாரும் அமைதியா டாக்டர் ராம்பிரசாத் சொல்றதை கேளுங்க. உங்க எல்லாரோட ஒத்துழைப்பும் இருந்தா தான், நாம நம்ம திட்டத்தை செயல்படுத்த முடியும்” என ராமிற்கு அடுத்த பொறுப்பில் இருந்த பீட்டர் கூற

“அதான் தீர்வே இல்லைனு சொல்றாரே, இதுக்கு மேல என்ன திட்டம் தீட்டி யாரை காப்பாத்த போறோம்” என ஆதங்கத்துடன் பல குரல்கள் எழுந்தன

“நாம நம்மை காப்பாத்திக்க முடியாம போகலாம், நம்ம மனித இனத்தை காப்பாத்த ஒரு வழி இருந்தா அதை செய்ய வேண்டாமா?” என ராம் கேட்க

“நிச்சயமா” என்றனர் சிலர்

“நன்றி… நாம முடிவை நோக்கி போய்கிட்டு இருக்கோம்ங்கற உண்மை, ஒரு வருஷம் முன்னாடியே எங்க டீமுக்கு தெரியும். அதை வெளிய சொல்றதால வீண் பதற்றமும் கலவரமும் தான் மிஞ்சும்னு தான் அந்த உண்மையை வெளியிடல. இப்ப நம்ம மனித இனத்தை காப்பாத்த நம்மகிட்ட இருக்கற ஒரே வழி, ப்ரோஜெக்ட் கேப்ஸ்யூல் எர்த் 2025′ மட்டும் தான்” என ராம் நிறுத்த

“கேப்ஸ்யூல் எர்த்தா? அதென்ன?” என கேள்விகள் பலரிடமிருந்தும் எழுந்தன

“சொல்றேன்… இந்த வைரஸ்ல இருந்து நம்மை காப்பாத்த என்ன வழினு தேடின அதே நேரம், அதுக்கு வாய்ப்பில்லாம போனா ‘பிளான் பி என்னனு நாங்க யோசிக்க ஆரம்பிச்சோம்

Amazon.in Deals👇

Amazon.com Deals👇

புதுசா ஒரு டீம் அமைச்சு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிக்க அவகாசம் இல்லைங்கற நிதர்சனம் புரிய, உலக அளவுல ஒரு அறிவியல் ஆராய்ச்சி கட்டுரை போட்டி அறிவிச்சோம். இப்படி ஒரு சூழல் வந்தா மனித இனத்தை காப்பாத்த என்ன வழிங்கறது தான் அந்த கட்டுரை போட்டியோட தலைப்பு. அதுக்கு வந்திருந்த ஆராய்ச்சி கட்டுரைகள்ல ஒண்ணு எங்க குழுவோட கவனத்தை ரெம்பவே ஈர்த்தது

‘ப்ரோஜெக்ட் கேப்ஸ்யூல் எர்த் 2025’ இன்னைக்கி நேத்து ஆரம்பிச்ச விஷயமில்ல. முப்பது வருஷம் முன்னாடி இந்தியன் சயின்டிஸ்ட், டாக்டர் சந்தோஷ்குமார் மனசுல உதிச்ச ஒரு ஐடியா இது. தன்னோட ஐம்பது வயசுல அவர் ஆரம்பிச்ச இந்த ஆராய்ச்சியை அடுத்த இருபது வருஷம் தொடர்ந்து செஞ்சார்

தன்னோட முடிவு நெருங்கறது தெரிஞ்சதும், தகுதியான இளைஞர்களுக்கு அதை பத்தி சொல்லி ஆராய்ச்சியை தொடர செஞ்சுருக்கார். இப்ப அந்த ப்ரோஜெக்ட் முழுமை அடைஞ்சுருக்கு. ப்ரோஜெக்ட் பத்தி அந்த டீமோட ஹெட் டாக்டர் நந்திதா உங்களுக்கு விளக்கமா சொல்லுவாங்க” என நந்திதாவை கைகாட்டி அமர்ந்தார் ராம்

“தேங்க்யூ டாக்டர் பிரசாத்” என்ற நந்திதா, கான்பரன்ஸ் ஹாலில் கூடி இருந்தவர்கள் பக்கம் தன் பார்வையை திருப்பினார், “டியர் பிரெண்ட்ஸ், இது நம்ம எல்லோருக்கும் ரெம்பவும் வேதனையான ஒரு காலகட்டம். ஆனா அதைத் தாண்டி, நமக்கு பின்னும் நம்ம மனித இனம் இந்த உலகில் வாழணுங்கற லட்சியத்தை நோக்கிய பயணம் தான் இந்த ப்ரோஜெக்ட்

என்னோட குரு டாக்டர் சந்தோஷ்குமார் இந்த ப்ரோஜெக்ட் பத்தி சொன்னப்ப, மத்தவங்கள போலவே, இதுக்கு எந்த காலத்துல தேவை வரப்போகுதுனு மனசுக்குள்ள கேலியா சிரிச்சவ தான் நானும். ஆனா அந்த தீர்க்கதரிசி என் வாழ்நாளிலேயே அதுக்கு பதில் இருக்கும்னு தெரிஞ்சு தான், அதை என் தலைமைல தொடர செய்தாரோனு இப்ப தோணுது” என தன் ஆசானின் நினைவில் ஒரு கணம் உழன்ற நந்திதா, தொடர்ந்து பேசலானார்

“விஞ்ஞானிகளின் கணிப்புப்படி நம்ம அதிகபட்ச வாழ்நாள் இனி ஐந்து அல்லது ஆறு மாதங்கள் தான்” என்றதும், மீண்டும் கூட்டத்தில் சலசலப்பும் அழுகுரல்களும் கேட்டன

“பிரெண்ட்ஸ் ப்ளீஸ், அழக்கூட நேரமில்லாத சூழல்ல நாம இருக்கோம், கொஞ்சம் கவனிங்க. இந்த ‘ப்ரோஜெக்ட் கேப்ஸ்யூல் எர்த் 2025’ மனித இனத்தின் அழிவுக்கு இரண்டு வருஷம் கழிச்சு ஏக்டிவேட் ஆகும். இது கிட்டத்தட்ட விண்வெளி பயணத்துக்கு உபயோகப்படுத்தற ஸ்பேஸ் கேப்ஸ்யூல் மாதிரியான ஒண்ணு. இது எந்த வைரஸும் உள்ள புகமுடியாதபடி வடிவமைக்கப்பட்டிருக்கு, வெளிமண்டல வெப்பமோ குளிரோ அல்லது வேற எதுவுமே இதை பாதிக்காது

இந்த கேப்ஸ்யூல் பிரமிட் வடிவத்துல வடிவமைக்கப்பட்டிருக்கு, இதோட அளவு 1000 சதுர அடிகள் தான். நம்ம இனத்தின் பிரதிநிதிகளா உலகின் பல்வேறு நாட்டை சேர்ந்த, இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகாத நல்ல உடல் நலமுள்ள 3000 பெண்கள்கிட்ட இருந்து 3000 கருமுட்டைகளும், அதேப் போல ஆரோக்யமான 3000 ஆண்கள்கிட்ட இருந்து விந்தணுக்களும் பெறப்பட்டது.

அது ‘வேர்ல்ட் ரீப்ரொடக்டிவ் சைன்ஸ் சென்டர் லேப்ல (World Reproductive Science Center Lab) செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டது. இப்ப அது நல்ல தரமான அறுநூறு கருக்கள் ‘லிக்விட் நைட்ரிஜன்ல (Liquid Nitrogen) உறைய வெச்சு, கேப்ஸ்யூல் எர்த்ல பாதுகாப்பா வைக்கப்பட்டிருக்கு. அதோட மற்ற ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள், தாவரங்கள் எல்லாமும், மறு உருவாக்கம் செய்யக்கூடிய வகையில் உறைய வைக்கப்பட்டிருக்கு”

“உறைய வைக்கப்பட்ட கருக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்காதுனு என்ன நிச்சயம்?” என டாக்டர் சில்வியா கேள்வி எழுப்ப

“கருக்கள் எல்லாமும் ஐந்து நாட்கள் டெஸ்ட் டியூப்பில் வளர்க்கப்பட்டு, டயக்நாஸ்டிக் லேபில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னாடி தான் உறைய வைக்கப்பட்டிருக்கு. ஐந்து நாள் கருங்கறப்ப அது பிளாஸ்டோசிஸ்ட் (Blastocyst) ஸ்டேஜுக்கு வந்துடும். அந்த ஸ்டேஜ் வந்த கருக்கள் நிச்சயம் சிறந்த கருக்களாவும் எந்த கிரோமோசோம் பிரச்சனைகளும் இல்லாத நல்ல குழந்தைகளாகவும் உருவாகும். அந்த அறுநூறு கருக்கள் நல்ல ஆரோக்யத்தோட இருக்கு, அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றார் நந்திதா

“அதுக்கு பேசாம அந்த கேப்ஸ்யூல் எதுல செய்யறமோ, அதுலேயே பெரிய மாளிகையா கட்டி, இதுவரை பாதிக்கப்படாதவங்களை அதுல குடி அமர்த்தலாமே” என அதிமேதாவியாய் கேள்வி கேட்டார் ஒருவர்

“உங்க கேள்வி எப்படி இருக்குன்னா, கறுப்புப்பெட்டி செய்யற உலோகத்துலயே ஏன் ஏரோபிளேன் செய்யலைனு கேக்கற மாதிரி இருக்கு” என நந்திதா அளித்த பதிலுக்கு, அத்தனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து, கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது

“நான் கேட்டதுல என்ன தப்பிருக்கு?” என கேள்வி கேட்டவர் சீற

“மன்னிக்கணும், உங்களை கேலி செய்யறது என் நோக்கமில்ல. நீங்க நினைக்கற மாதிரி அது சாத்தியமில்ல. வைரஸ் தாக்காத பெரிய கட்டிடம் வேணா எழுப்பலாம், அதோட எல்லா வசதிகளும் கூட செஞ்சு தரலாம். ஆனா, இந்த வைரஸின் தாக்கம் உள்ள காத்தை சுவாசிச்ச மக்களிடமிருந்து, பிற்காலத்துல எப்ப வேணா வைரஸின் பாதிப்பு வெளிப்பட வாய்ப்பிருக்கு, கருக்கள் அப்படி இல்ல

அதோட, ஐந்தே நாளான கருக்களில் அதிகபட்சம் எழுபது முதல் நூறு செல்கள் தான் இருக்கும், அதுல எதுவும் பாதிப்பு இருக்கானு அந்த கருக்களின் ஒவ்வொரு செல்லா டெஸ்ட் செஞ்சு பாத்து தான் கேப்சியூல்ல வெச்சுருக்கோம். ஆனா மனித உடல்ல சராசரியா முப்பது டிரில்லியன் செல்கள் இருக்கு, அதை அணு அணுவா ஆராயறது சாத்தியமில்ல”

“அதென்ன இரண்டு வருஷ கணக்கு?” என்றார் அவர் விடாமல்

“மொத்தம் சுமார் ஐநூறு மில்லியன் ஸ்கொயர் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது நம்ம உலகம், அது மொத்தமும் கவர் பண்ற மாதிரி பயோ-சென்ஸார்கள் எல்லா நாடுகளிலும் நிறுவும் பணி ஏற்கனவே ஆரம்பிச்சுட்டாங்க, இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அந்த வேலை முடிஞ்சுடும்.

அந்த சென்சார்கள் தினம் ஒருமுறை தன் சுற்றுப்புறத்தை சென்சார் செஞ்சு, எத்தனை உயிர்கள் அங்க வாழுதுனு கணக்கெடுக்கும். ஒரு கட்டத்துல எல்லாரோட அழிவுக்கு பின்னாடி, அது சென்சார் செய்யறப்ப, எந்த ஜீவராசியும் இல்லைனு உணரும். எங்க கணிப்புப்படி அது இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் நிகழும்

அப்படி எந்த ஜீவராசியும் இல்லைனு உறுதி செஞ்சுட்டா, அந்த சென்சார்ல ப்ரோக்ராம் செஞ்சு வெச்சுருக்கறபடி, காற்றுல மிஞ்சி இருக்கற வைரஸை அழிக்கறதுக்காக விஷ வாயுவை அந்த சென்சார்ல இருக்கற கண்ட்ரோல்ஸ் வெளியேற்றும். அந்த விஷ வாயு, வைரஸை மட்டுமில்லாம, ஒரு புல் பூண்டு பாக்கி இல்லாம எல்லாத்தையும் அழிச்சுடும், வைரஸை மொத்தமா அழிக்க வேற வழியில்லை

சென்சார் வெளியேற்றுற விஷவாயுவின் தாக்கம், 16 மாதங்களுக்கு இந்த உலகத்துல இருக்கும். ஒரு பாதுகாப்புக்காக மேலும் சில மாதங்கள் கழிச்சு, அதாவது இன்னும் ரெண்டு வருஷம் ஒன்பது மாதம் கழிச்சு ‘ப்ரோஜெக்ட் கேப்ஸ்யூல் எர்த் 2025’ ஏக்டிவேட் ஆகற மாதிரி செட் பண்ணி இருக்கோம்”

“அது சரி, மனித இனமே அழிய போகுதுங்கறப்ப, இந்த கருக்களை சுமந்து பெறப்போவது யார்? அதை வழிநடத்தற மருத்துவ குழு எங்கிருந்து வரப்போறாங்க?” என கேள்வி எழுப்பினார் மருத்துவ பேராசிரியர் யூசுப் கான்

“நல்ல கேள்வி, அந்த 1000 சதுர அடி கேப்ஸ்யூல்ல 600 கருக்களோட இரண்டு மல்டி ஸ்பெசாலிட்டி ரோபோக்களும் வைக்கப்பட்டிருக்கு, ஒண்ணு ஆண் உருவத்துலயும் இன்னொண்ணு பெண் உருவத்துலயும். 2025வது வருஷம் ஜூன் ஒன்றாம் தேதி கேப்ஸ்யூல் ஏக்டிவேட் ஆனதும், அந்த ரோபோக்கள் செயல்பட ஆரம்பிக்கும், அப்படி தான் ப்ரோக்ராம் பண்ணி இருக்கோம்

அந்த ரோபோக்கள் செயல்பட ஆரம்பிச்சதும் செய்யப்போற முதல் வேலை, உள்ள இருந்தபடியே வெளியுலகின் நிலவரம் எப்படினு ஆராயரது தான். உயிர் வாழத் தகுதியான இடம்னு உறுதி செஞ்சதும், ரோபோக்கள் அந்த ஆயிரம் சதுர அடி மினி லேப்ல, நாம ஸ்டோர் பண்ணி வெச்சுருக்கற கருவிகளை கொண்டு பயோபேக்’னு (Biobag) சொல்லப்படற செயற்கை கருவறைகளை உருவாக்கி, நாம உறைய வெச்சுருக்கற கருக்களை அதுல செலுத்தும். அதுல செலுத்தப்படற கருக்கள், ‘எக்டோஜெனிசிஸ் (Ectogenesis) டெக்னாலஜி மூலமா நாப்பது வாரங்கள் வளர்ந்து, முழு வளர்ச்சி பெற்ற குழந்தையா இந்த உலகுக்கு வரும்”

“எக்டோஜெனிசிஸ் டெக்னலாஜியோட சக்ஸஸ் ரேட் இப்போதைக்கு ரெம்ப குறைவு தானே, அதுல நிறைய ரிஸ்க்கும் இருக்கே. ரோபோக்கள் மனித டாக்டர்கள் உதவி இல்லாம சூழ்நிலைக்கு தக்க செயல்பட முடியுமா?” என கேள்வி எழுப்பினார் டாக்டர் கிரீன்பெர்க்

சிறுகதை சற்று நீளமானதால், கதையின் மீதம் இன்னொரு பகுதியாக அடுத்த வாரம் (செப்டம்பர் 12) வெளியிடப்படும். நன்றி

Amazon.in Deals👇

Amazon.com Deals👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

தங்கமணி சபதம்… 😂😃🤣 (நகைச்சுவை)

சஹானா மின்னிதழ் (செப்டம்பர் 2020) – Amazon eBook