இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஹலோ கூல் மிஸ். மின்னல் ! விளையாட்டுக்கு சொன்னா உடனே கோபம் வந்துடுச்சு”
“ஹை! பயந்துட்டீங்களா? சும்மா சீண்டி பார்த்தேன்.”
“இன்னும் எவ்ளோ நேரமாகும் மின்னல்?”
” அவ்ளோதான் இன்னும் ஒரு அம்பது படிதான் “
சற்று நேரத்தில் ராஜ கோபுரம் தெரிய ஆரம்பித்தது. படி ஏறிய பின் பெரிய புளியமரம். நான்கு பேர் கட்டியணைத்தாலும் அளக்க முடியாத அகலம். இத்தலத்தின் ஸ்தல விருட்சம்.
உள்ளே சென்று சுவாமி தரிசனம் ஆன பின் இருவரும் வெளிப் பிரகாரத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
“பிறந்த நாள் வாழ்த்துக்கள் மின்னல் ” என்றபடி ஒரு கவர் தந்தான்.
“என்னது இது ?”
“பிரிச்சு பாரு”
ஆவலுடன் காயத்ரி அதை பிரித்தாள்.
உள்ளே சிவப்பும் க்ரே கலருமாக ஒரு அழகிய பார்க்கர் பேனா அவளை பார்த்து சிரித்தது.
“ஹே அழகாருக்கு! தேங்க்யூ “
காயத்ரி தன் கைப்பையிலிருந்து ஒரு HMT வாட்சை எடுத்து அவன் கையில் கட்டி விட்டாள்.
“வாட்ச் சைட்ல தொலைஞ்சிடுச்சுனு சொன்னீங்களே, அதான் நல்லார்க்கா?”
“நீ கொடுத்ததாச்சே, எப்படி நல்லா இல்லாம போகும்? நான் சொன்னா இல்லைம்ப. என்ன ஒரு ஞாபக சக்தி, ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் .லவ் யூ மின்னல். அப்படி என்ன ரொம்ப நேரம் சுவாமியையே பார்த்துட்டு இருந்த நீ? “
“எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு முருகன்ட்ட பேசிட்டு இருந்தேன். விளையாட்டா இருக்கேனோனு தோணுது. மேல வர வரை சாதாரணமா தான் இருந்தேன். எத்தனை வாட்டி வந்துருக்கேன் இங்கே. உள்ள அவரை பார்த்ததும் ஏனோ அழுகை வந்திருச்சி. மனசு முழுசா ஒரே பயமா இருக்கு. வழக்கமா அப்படி இருக்காது. முருகனை பார்த்தா அவ்ளோ அழகா இருப்பார். இன்னிக்கு கூட நல்லா டார்க் ரெட் கலர்ல சட்டை மேட்சிங்கா சிவப்பு கிரீடம், தும்பை பூ வேட்டி. அவர் சிரிப்பை பார்த்தா அவ்ளோ எனர்ஜிடிக்கா இருக்கும். ஆனா இன்னிக்கு அவர் சிரிப்பு வித்யாசமா இருந்தது. அத பார்த்து தான் பயந்துட்டேன்” என்று கண்ணில் நீர் மல்க கலக்கத்துடன் கூறினாள்.
“அட லூஸு! எதுக்கு பயப்படுற? எல்லாம் நல்லா தான் நடக்கும். இன்னிக்கு நைட் நான் அப்பாகிட்டயும் அத்திம்பேர்ட்டயும் பேசிடறேன். ஏன்னா, எங்காத்துல எதா இருந்தாலும் அத்திம்பேர் தான் முன்ன நின்னு செய்வார். சரி கிளம்பலாமா? காபி குடிக்கனும் போல இருக்கு “
“சரி கிளம்பலாம். வெயில் வந்துடுச்சி. பஸ்ல போய்க்கலாம்”
இருவரும் தேவஸ்தான பேருந்தில் அடிவாரத்தை அடைந்தனர்.
ஈரோடு மத்திய பேருந்து நிலையம்.
இருவரும் ஹோட்டலில் உணவருந்தினர். நவநீதன் அவன் ரூமிற்கு செல்வதற்காக பேருத்திற்கு காத்திருந்தான். அவனை பஸ் ஏற்றி விட்டு இவள் கிளம்புவதாக ஏற்பாடு. அப்போது சுமார் முப்பது வயதுடைய ஒரு இளைஞன் அழுக்கு உடையுடன் சாப்பிட்டு நாலு நாளாச்சுமா என கையேந்தினான்.
நவநீதன் ஒரு பத்து ரூபாய் தாளை நீட்ட காயத்ரி, “சாப்பாடு வாங்கி தரட்டுமா?” என கேட்க அவன் “இல்லை நீங்க காசு குடுங்க. நானே வாங்கிக்கறேன்”
கொடுக்கறதை தடுக்க வேண்டாம் என நினைத்து காயத்ரி தலையசைக்க நவநீதன் கையிலிருந்த பணத்தை கொடுத்து விட்டான்.
“சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, பாத்திரம் அறிந்து பிச்சையிடு கோத்திரம் அறிந்து பெண்ணை எடுனு. ஆமா மின்னல்! நீ என்ன கோத்திரம்? “
“பாரத்வாஜ கோத்திரம்”
“என்ன சொன்ன?”
“பாரத்வாஜ கோத்திரம்”
லட்சம் தேள் கொட்டியது போல இருந்தது நவநீதனுக்கு.
“நல்லா தெரியுமா?”
“அர்ச்சனை செய்றப்ப நாந்தானே பேர், நட்சத்திரம் எல்லா சொல்றேன். ஏன் கேட்கறீங்க?”
“நானும் அதே கோத்திரந்தான் “
இருவரும் அரை மணி நேரம் எதுவும் பேசாமல் சிலையாக நின்றிருந்த பின் காயத்ரிதான் ஆரம்பித்தாள்.
“நீங்க கிளம்புங்க. நைட் போன்ல பேசிக்கலாம்”
பதிலே பேசாது அவள் முகத்தை ஏறெடுத்து கூட பார்க்காமல் பெருந்துறை ரேக்கை நோக்கி நடந்தான்.
காயத்ரி நேரே சுதா வீட்டிற்கு சென்றாள். அழுதழுது கண்கள் சிவப்பாகிவிட்டன. நடந்ததை அனைத்தையும் கலங்கிய கண்களுடன் ஒரே மூச்சில் கூறினாள்.
சுதா, மாதவனை நோக்கி “என்னங்க இது?”
“அதான் எனக்கும் ஒன்னும் புரியலை சுதா”
“உலக விஷயம் அத்தனையையும் பேசுனீங்களே, அதுல முக்கியமானதை தவிர மத்த எல்லாமும் இருக்கு. நான் உன்னைத் தான் தப்பு சொல்வேன். எல்லாத்துலயும் ஒரு விளையாட்டுதனம். உன் விளையாட்டுத்தனம் எதுல கொண்டு வந்து நிறுத்திருக்கு பாத்தியா?”
“இதுல யார் மேலயும் தப்பு இல்லை சுதா. எல்லாருமே சூழ்நிலைக் கைதிகள் தான். நீ என்ன பண்ண போறே காயத்ரி?”
“கடைசியா நவநீதன் என்கிட்ட போய்ட்டு வரேனு கூட சொல்லலை. மூஞ்சியையும் பாக்கலை. முடிவு நவநீதன் கைல தான் இருக்கு. அவர் உறுதியா இருந்தா அப்பாட்ட நான் பேசிக்கறேன்”
“என்ன விளையாடறியா? நாளைக்கு சபைல ஒரே கோத்ரம்னா சொல்ல முடியும்?”
“சுதா! ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ, நான் எல்லாம் தெரிஞ்சிருந்தும் நவநீதன்ட்ட பேசலை. எங்களுக்கே இப்பதான் தெரிஞ்சிருக்கு. மாதவன் சொல்ற மாதிரி சூழ்நிலை கைதிகள். எனக்கு தலைவலிக்குது நீ காபி கொண்டு வா!”
காயத்ரி தன் வீட்டிற்கு செல்லாமல், நவநீதனின் தொலைபேசி அழைப்பிற்காக அங்கேயே காத்திருந்தாள். போனும் வந்தது. சிறிய மெளனத்திற்கு பின், “காயத்ரி!நான் நவநீதன் பேசறேன்”
“சொல்லுங்க”
“நான் இருதலைக் கொல்லி எறும்பா தவிக்கிறேன். என்ன சொல்றதுனு தெரில “
“சுத்தி வளைச்சு பேச வேணாம். உங்க முடிவு என்ன? அப்பாகிட்ட பேசட்டுமா? வேணாமா?”
“எங்க வீட்டுல யாரும் இதை ஒத்துக்க மாட்டாங்க. அவங்களை மீறி என்னால ஒன்னும் பண்ண முடியாது. அதுக்காக உன்னை புடிக்கலைனு அர்த்தம் இல்லை. நாம ரெண்டு பேர் சந்தோஷத்திற்காக கல்யாணம் பண்ணிக்கிட்டா, மத்தவங்க எல்லாரும் வேதனைப் படுவாங்க. அதுக்கு பதிலா நாம காயப்பட்டலும் பரவால்லனு நாம அவரவர் வழியில் போய்க்கலாம். என்னை மன்னிச்சுடுமா ப்ளீஸ்”
“நீங்க இப்படி தான் பேசுவீங்கனு தெரியும். மின்னல்னு கூப்பிடவும் வாய் வராம, காயத்ரினு கூப்பிட்டா அந்நியமா இருக்குனு மன்னிச்சிடும்மானு சொல்றப்ப உறுதியே செஞ்சிட்டேன். உங்களை வற்புறுத்த மாட்டேன். சாபமும் கொடுக்க மாட்டேன். உங்க மேல கோபமும் இல்லை. நான் ரொம்ப உடைஞ்சிட்டேன். நான் சரியானா நானே உங்கள கூப்பிடுறேன். அதுவரை என்ட்ட பேசாதீங்க ஆல் த பெஸ்ட் “என அழுதபடியே போனை வைத்தாள்.
எல்லாம் அவசரத்தில் அள்ளி தெளித்த கோலமாயிற்று. இன்னும் காயத்ரியால் இதை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. மாதவன் எவ்வளவோ நவநீதனிடம் பேசி பார்த்தான். ஒன்றும் பலனளிக்கவில்லை.
சில வருடங்களுக்கு பிறகு….
காயத்ரி தன் மனதை இந்த ஏமாற்றத்திலிருந்து திசை திருப்பவும் வீட்டில் எடுக்கப்படும் கல்யாண பேச்சை தவிர்க்கவும் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் பரீட்சைக்கு படிக்க ஆரம்பித்தாள். வைராக்கியத்துடன் படித்ததாலோ என்னவோ முதல் முயற்சியிலேயே தேறினாள்.
சுதாவின் பெரிய மகன் இந்த வருடம் ஐந்தாவது படிக்கிறான். இரண்டாம் குழந்தை ரகுவையும் பள்ளியில் சேர்த்தாயிற்று. சுதாவிற்கு பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர் கிருஷ்ணமூர்த்தியும் தன் பயிற்சியை நிறைவு செய்து விட்டு அங்கேயே மருத்துவராக பணிபுரிகிறார்.
குழந்தைகளுக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது சில சமயம் காயத்ரியும் உடன் செல்வாள். அப்போது அவளை பார்த்த மருத்துவர் கிருஷ்ணமூர்த்திக்கு காயத்ரியை பிடித்து விட்டது. மாதவன் மூலமாக திருமண பேச்சு வார்த்தை நடந்து திருமணமும் நடந்தேறியது.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings