இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வெள்ளை போர்ட்ல சென்னிமலை என்று எழுதிய நகரப் பேருந்து ஒன்று பேரிரைச்சலோடு வந்து நின்றது. பெண்கள் கூட்டம் மிகுதியாக இருந்தது. காயத்ரி பேருந்தின் முன் வழியே ஏறி பேருந்தின் மத்தியில் ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்து நவநீதனுக்காக காத்திருந்தாள். அவன் காயத்ரியின் அருகில் உட்காரலமா வேண்டாமா என்று தயங்கிய வேளையில், ஆஜானுபாகுவான ஒரு மூதாட்டி காயத்ரியின் அருகில் அமர்ந்து விட்டார்.
செய்வதறியாது திகைத்த நவநீதனை தவறாக புரிந்து கொண்ட மூதாட்டி, “பின்னாடி *ஆம்பளையாளுங்க கூட போய் நிக்க வேண்டியதுதானே?** வலசு புள்ளை பக்கத்துல கோருவியா நீ? ***அந்தட்டம் போ” என்று சத்தம் போட்டார்.
உடனே காயத்ரி, “அவுரு என்ற மாமனுங்க ****ஆத்தோவ்” என்றாள்.
“ஓ ஒன்ற மாமனா! சரி கண்ணு நானு வண்டி பேட்டைல இறங்கிடுவேன். அப்புறமேட்டுக்கு நீ கோருவியாமா” என்று நவநீதனை பார்த்து கேலியாக சிரித்தார்.
அங்கேயே நின்றபடி தலையாட்டிய நவநீதனை பார்க்கையில் காயத்ரிக்கு சிரிப்பாகவும் பாவமாகவும் இருந்தது.
” நீங்க பின்னாடி இடம் இருந்தா உட்கார்ந்துக்கோங்க . நாமளும் வண்டி பேட்டைல தான் இறங்கனும்” என்றாள்.
அந்த மூதாட்டியை பார்த்து சிரித்து விட்டு , இரண்டு சீட்கள் பின் தள்ளி உட்கார்ந்தான். இந்த ஊர்ல பெருசுல இருந்து சிறுசு வரைக்கும் எல்லார்க்கும் நக்கல் அதிகம் என நினைத்துக் கொண்டான். அடிக்கடி காயத்ரி திரும்பி திரும்பி இவனை பார்த்துக் கொண்டே வந்தாள்.
அவனோடு அருகில் உட்கார்ந்து நிறைய பேச வேண்டும் என ஒத்திகை பார்த்தது எல்லாம் இப்படி ஆயிற்றே என்று எண்ணியவாறே ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஈரோட்டிலிருந்து டவுன் பஸ்சில் கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணம். அதுக்குள்ள நடுல இந்த ஆத்தா வேற கரடி மாதிரி என்று நினைத்து பின் திரும்பி பார்த்தாள்.
இரு இருக்கைகளுக்கு பின்னிருந்த நவநீதனும் இதையே நினைத்துக் கொண்டிருந்தான். அவன் தலை நிமிர்ந்த போது இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொண்டன.
வண்டி பேட்டை நெருங்குவதை உணர்ந்த காயத்ரி, எழுந்து கொண்டே நவநீதனுக்கு சைகை காட்டினாள். பேருந்திலிருந்து இறங்கிய அவர்கள் மலை அடிவாரத்தை நோக்கி நடந்தனர். சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! என்ற கோவில் வளைவு அவர்களை வரவேற்றது.
இவர்கள் அடிவாரத்தை நெருங்கவும், தேவஸ்தான பேருந்து புறப்படவும் சரியாக இருந்தது. அதிலிருந்த நடத்துனர் வேகமாக வருமாறு கைகாட்டினார். இவள் வரவில்லை என சைகை அளித்தவுடன் வண்டி புறப்பட்டது
” பஸ்லயே போயிருக்கலாமே மின்னல்?
” பஸ்ல போனா பத்து நிமிஷத்துல போய்டலாம். படில பேசிட்டே போலாம்னு தான் “
“எவ்ளோ படி இருக்கும்?”
” கம்மிதான். ஜஸ்ட் ஆயிரத்து முன்னூத்தி இருவது “
“என்னது ஆயிரத்துக்கும் மேலயா?”
” சரி அந்த மண்டபத்துல உக்காந்துட்டு போலாம் வாங்க “
மண்டபத்தில் உள்ள திட்டில் உட்கார போன அவனை “ஒரு நிமிடம்” என தடுத்தாள்.
“தன் கைப்பையிலிருந்து ஒரு டவலை எடுத்து திட்டின் மீது விரித்து, இப்போது உட்காருங்கள் மஹாராஜா! என இரு கைகளையும் உட்கார சொல்வது போல் அபிநயித்து தலை குனிந்து நிமிர்ந்தாள்.
“ஆகட்டும் மஹாராணி “என்று சிரித்தவாறே அமர்ந்தான்.
அவன் சிறிது ஆசுவாசமான பிறகு தண்ணீர் பாட்டிலை அவனிடம் கொடுத்தாள்.
“நீங்க படில நேரா ஏறக்கூடாது. வளைச்சு வளைச்சு க்ராஸா ஏறனும். அப்போது தான் மூச்சு வாங்காது என நான்கு படிகள் ஏறிக் காண்பித்தாள்.
“இப்படி ஏறினா மனைவி ஒரு மாணிக்கம் படத்துல ராதா நடக்கிற மாதிரி இருக்கு. சே ராதா என்ன அழகு ! என்ன அழகு!” சொல்லிவிட்டு அவளை அல்லக் கண்ணால் பார்த்தான்.
அவனை முறைத்த படி “அப்போ ராதாவையே வர சொல்லி அவ கூடவே மலை ஏறி போங்க” என்றாள்.
“ஓ! குஷ்பூ கிட்டயே பழசு பட்டு வாங்கிக்க சொல்றியா? வேணாம் மின்னல் எனக்கு நீயே போதும். சரி விடு. நீ எல்லா விஷயத்தையும் முன்னயே யோசிச்சு செய்வியா?”
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. ஏன்?”
“நான் உட்காருவதற்கு முன்ன டவல் விரிச்ச, நான் கேட்கறதுக்கு முன்னயே தண்ணி கொடுத்த “
“இதல்லாம் பேசிக் பா. நீங்க ஒயிட் ஜீன்ஸ்னு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. சோ டவல் எடுத்துட்டு வந்தேன். மலையேறினா மூச்சு வாங்கும், தாகம் எடுக்கும். இதெல்லாம் சாதாரண விஷயம். இத போய் பெருசா பேசறீங்க. இதெல்லாம் பெருமையா? கடமை” என தேவர் மகன் சிவாஜி போல காயத்ரி மிமிக்கிரி செய்யவும் இருவரும் சிரித்தனர்.
“வாங்க மெதுவா நடந்துட்டே பேசலாம் வெயில் அதிகமாச்சு” என்றபடி மண்டபத்தை விட்டு எழுந்தனர்.
“எனக்கு சின்ன வயசுலயே அம்மா இறந்துட்டாங்க. மூணு அக்கா. எங்க அத்தை, தன் தம்பி சிரமப்படக்கூடாதுனு பெரிய அக்காவை தன் பையனுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாங்க. எங்க பெரிய அத்திம்பேர் தான் மத்த ரெண்டு அக்காங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சார். தாரை வார்த்து கொடுத்தது கூட அக்கா அத்திம்பேர் தான். அவங்களுக்கு நாங்க பயந்து இல்லை. அன்பால கட்டப்பட்டுருக்கோம். நன்றிக் கடன் பட்டுள்ளோம். அத்திம் பேருக்கு என் மேல கொள்ளை பிரியம்.”
“வீட்ல நானும் அப்பாவும் தான். இந்த மாதிரி எனக்கு பார்த்து பார்த்து செய்ய, என்னை பத்தி யோசிக்கனு பெண்கள் யாரும் இல்லை. என் அக்காக்களுக்கு என்னை பிடிக்குந்தான், ஆனா அவாளால அத்திம்பேர், அவாத்து மனுஷாள மீறி ஒன்னும் பண்ண முடியாது. உன்னை மாதிரி மனசுல பட்டத பேசற தைரியமோ தெளிவோ அவாள்ட்ட இல்லை. அதனால் தான் உனக்கு சாதாரணமா தெரியற விஷயம் எனக்கு ஆச்சரியமா இருக்கு. இப்பக் கூட பாரேன், உனக்கு புடிச்சிருக்குனு கறுப்பு புடவை கட்டிருக்க. அதுவும் பிறந்த நாள் அன்னிக்கு. கண்டிப்பாக உங்க அம்மா சத்தம் போட்டுருப்பாங்க. அப்பாவும் பாட்டியும் உனக்கு சப்போர்ட் பண்ணிருப்பாங்க”
“அடே அப்பா! காலைல நடந்ததை அப்படியே கரெக்டா சொல்லிட்டீங்களே !
“நீ ஆனி கடைசில பிறந்திருக்க. சூரியன் மிதுன ராசியை முழுசா கடந்து அதிக டிகிரி வாங்கி பலமா இருப்பாரு. மூணாம் இடத்துல சூரியன் இருக்கறதால தைரியம் ஜாஸ்தி. கமேண்டிங் பவர் அதிகம். யாரும் உன்ன டாமினேட் பண்ண விட மாட்ட. காத்து ராசில நெருப்பு கிரகம் இருக்கு. அதனால் சட் சட்னு கோவம் வரும். காத்தடிச்சா நெருப்பு நல்லா எரியுமே அது போல சந்திரனும் அங்கயே இருப்பதால் அன்புக்கு கட்டுப்படுவ. இளகுன சுபாவம். இதெல்லாம் தோராயமா சொல்றேன்”.
“பரவால்ல. சொன்ன வரை சரிதான். எங்க கத்துக்கிட்டீங்க? இதெல்லாம் எனக்கு தெரியாது. பேப்பர்ல ராசிபலன் படிப்பேன். 12 ராசி பேரு தெரியும். அவ்ளோதான் என் ஜோதிட அறிவு”.
“என்ன மின்னல்! அமெரிக்க பொருளாதாரம், ஆப்பிரிக்க மதமாற்றம் பத்தி எல்லாம் பேசற, நம்ம நாட்டு சாஸ்திரம் தெரியாதா?”என்று கேலி செய்தான்.
“ஹலோ மிஸ்டர் நவநீத கிருஷ்ணன்! உங்களுக்கு தெரிஞ்சிருந்தா, எனக்கும் தெரிஞ்சு இருக்கனும்னு அவசியம் இல்லை. இப்ப நாலு பக்க ஸ்டேட்மெண்ட்ட ரெண்டே நிமிசத்துல நான் டைப் பண்ணுவேன். உங்களால முடியுமா?”
நிமிடத்தில் காயத்ரி இப்படி கோபமாக பேசுவாள் என்பதை எதிர்பாராத நவநீதன் செய்வதறியாது அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.
கொங்கு வட்டார வழக்கு:
*ஆண் மக்கள்
** வயது வந்த இளம் பெண் அருகில் அமர்வாயா நீ?
*** அந்தப் பக்கம்
****ஆத்தா – அப்பாவின் அம்மா. மூதாட்டிகளை மரியாதை நிமித்தம் அழைக்கும் கொங்கு வட்டார வழக்கு. “வ்” விகுதி ஓசை நயத்திற்காக சேர்க்கப்பட்டது.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings