in

வைராக்கியம் ❤ (இறுதிப் பகுதி) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10 

பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14  பகுதி 15  பகுதி 16  பகுதி 17

நீண்ட வருடங்களுக்குப் பிறகு தங்கள் வீட்டில் ஒரு மாட்டுப் பெண்ணாக அனு வளைய வளைய வருவது நந்தினிக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.

கிருஷ்ணாவும், அனுவும் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு பழகுவதைப் பார்க்க, கார்த்திக், நந்தினி இருவருக்கும் சந்தோஷமாக இருந்தது.

அவர்களைப் பார்க்கும் போது, நந்தினிக்கு தான் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வந்த நாட்களே கண் முன்னே வந்து போனது. இன்று எல்லோரும் அவரவர் குடும்பத்துடன் ஒவ்வொரு ஊரில் வசித்தாலும், எல்லோருடனும் ஒன்றாக இருந்த நாட்கள் பச்சைப் பசுமையான நினைவுகளாக நந்தினியின் மனதில் நிலைத்திருந்தது.

கூட்டுக் குடும்பமாக ஒவ்வொருவரையும் அனுசரித்துப் போனதும், முதன்முதலில் தாயான போது பூரித்த தருணமும், கடந்து வந்த கடுமையான பாதைகளும் என்று, தன் வாழ்க்கை அனுபவங்களை அசை போட்டுக் கொண்டே தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் நந்தினி.

சமையலுக்கு நடுவே கார்த்திக்கிற்கு தேநீரை எடுத்துக் கொண்டு வந்தவள், “ஏங்க… பசங்க குழந்தைத்தனமா சண்டை போட்டுண்டு, ஆனா அதே சமயம் சந்தோஷமா இருக்கறத பார்க்கவே ஆசையா இருக்குல்ல” என்று சொல்ல

“ஆமாமா… இவங்க இந்த தலைமுறை குழந்தைகள் நந்தினி. நம்ம அம்மாமார்கள் புருஷனை தெய்வமா, தன்னை விட எல்லா விதத்திலும் மேலானவனா பார்த்தாங்க. நம்ம தலைமுறைல, ஒரு பொண்ணு அவ நெனச்சத சாதிக்கறதுக்காக எல்லோர்கிட்டயும் அவ உரிமைக்காக போராடினா.

ஆனா இந்த தலைமுறை பொண்ணுங்க, இதைப் பண்ணலாம், பண்ணக்கூடாதுன்னு பெரியவங்க பேசறதே தப்புனு நெனக்கறா. அவள் நெனக்கறதுல தப்பில்லையே. உண்மையில வேலைல என்ன ஆண், பெண் வித்தியாசம் பார்க்க வேண்டியிருக்கு? புள்ள பெக்கற வலியையே தாங்கற அவளுக்கு அவளைப் பாத்துக்கத் தெரியாதா?

திறமைங்கறது கிடைச்ச படிப்பையும், அனுபவத்தையும் வச்சுக்கிட்டு, ஒரு பிரச்சனையின் சூழலைப் பத்தி புரிஞ்சுகிட்டு அதை எப்படி புத்திசாலித்தனமா சமாளிக்கறதுங்கறதுல தான் இருக்கு. திறமைக்கான தளம் இங்கே பரவலா இருக்கு, ஆனா அந்த பெண்ணோட குடும்பம் அவளுக்கு துணையா நின்னா மட்டும் போதும். அவ உலகத்துல சாதிச்சுகிட்டே இருப்பா” என்றான் கார்த்திக்.

“எதேச்சையா ஏதோ நான் பேச, நீங்க ஏதோ ஒரு பெரிய லெக்ச்சரே குடுத்துட்டீங்க” என்றாள் நந்தினி.

“உண்மையத்தான சொன்னேன். ஒரு பொண்ணு நெனச்சா ஒரு குடும்பத்தை வாழ வைக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்னு சொல்வாங்க. உண்மையும் அதுதான. நம்ம வாழ்க்கைல நடந்ததையே எடுத்துப்போமே. என்னடா, புருஷனுக்கு ஆக்ஸிடெண்ட்டுல கால் போயிடுச்சேன்னு நீ உடைஞ்சு போய் உட்கார்ந்திருந்தா, வீடே படுத்திருக்கும்.

உடம்பு முடியாம நானும் உன்னை தெரிஞ்சோ தெரியாமலோ நெறைய படுத்தியிருக்கேன். ஆனா எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டுண்டு யார்கிட்டயும் என்னைக் குறைச்சுப் பேசாம குழந்தைங்களையும் உன்னோட கண்டிப்புக்குள்ள வச்சுண்டு ஒரு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தீட்ட. நான் ஒன்னு சொன்னா நீ திட்டுவ. ஆனாலும் அதுதான் உண்மை. உங்கிட்ட என் அம்மாவைத் தான் பாக்கறேன்.

வேலைக்குப் போற ஒரு குடும்பத் தலைவனுக்கு ஒருவித பொறுப்புன்னா, எல்லா கஷ்ட நஷ்டத்தையும் சகிச்சுண்டு, குடும்பத்தோட நல்லது கெட்டது எல்லாத்தையும் பார்த்துண்டு, குடும்பத்தைத் தூக்கி நிறுத்துறதுல பொறுப்பான ஒரு முழுமையான பெண்ணா இப்ப உன்னை நான் பாக்கறேன்” என்றார் கார்த்திக்.

“ஏதேது? பையனுக்குத்தான் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. மாமனார் புது மாப்பிள்ளை மாதிரி பேசீண்டு இருக்கேளே?” என்றவளிடம்

“உண்மைதான். அன்னைக்கு செய்ய முடியாததை இன்னைக்கு செய்யணும்னு ஆசைப்படறேன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு நந்தினி?” எனக் கேட்டான் கார்த்திக்.

இரண்டு நிமிடம் யோசித்த நத்தினி, “பெரிய ஆசை யெல்லாம் இல்லை. சொன்னா சிரிப்பேள், ஆனால் நான் பிறந்து வளர்ந்த மேட்டூர்ல எனக்கு பிடிச்ச இடத்துக்கெல்லாம் போய்ட்டு வரணும்னு மட்டும் ஆசையா இருக்கு” என்றாள் நந்தினி.

அன்று இரவு எல்லோரும் ஒன்றாய் சாப்பிட உட்கார்ந்து போது, நந்தினியின் ஆசையை கார்த்திக் மகன்களிடமும், மாட்டுப் பெண் அனுவிடமும் கார்த்திக் சொல்ல, மகன்கள் யோசித்துச் சொல்வதற்குள், “தாராளமாக போய்ட்டு வரலாம்ப்பா. இந்த வாரக் கடைசில போற மாதிரி வண்டிய ஏற்பாடு பண்ணிக்கலாம். நீங்களும், அம்மாவும், வேணுங்கறத எடுத்து வச்சுக்கோங்கோ” என்றாள் அனு.

“ஆமாம்ப்பா. நாம எல்லாரும் சேர்ந்து மேட்டூர் பாட்டி வீட்டுக்குப் போய்ட்டு வருவோம். அப்பறம் நாங்களும், ராகுலும் ஊருக்கு போய்ட்டா அப்பறம் லீவு கிடைக்கும் போது தான் வர முடியும். அதனால நாம சேர்ந்து போற இந்த பயணம் மறக்க முடியாத பயணமா இருக்கும்னு நெனக்கறேன்” என்றான் கிருஷ்ணா.

பிறகு எல்லோரும் அந்த வார இறுதியில் மேட்டூருக்கு காரில் புறப்பட்டுப் போக சேலம் தாண்டி வரும்போது “நான் ஜன்னலோரம் உட்கார்ந்துகட்டுமா” என குழந்தைத்தனமாக நந்தினி கேட்க

வித்தியாசமாக அம்மாவைப் பார்த்த கிருஷ்ணா, “காதடைக்காம இருக்க இந்த பஞ்சையாவது வச்சுக்கோ” என்று பச்சைக் கையில் கொடுக்க, காதில் மாட்டிக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே தலையை விட்டு சில்லென்று வந்த காற்றை மனதார சுவாசித்தாள்.

கண்ணை மூடியதும் மேட்டூரில் தானும் தன் தங்கையும் உச்சிப்பிள்ளையார் கோவில் ஒரே மூச்சில் ஏறியது தான் ஞாபகம் வந்தது.

மேட்டூர் சாம்பள்ளி அருகே வர வர கெமிக்கலின் வாசனை. கடலோர கிளிஞ்சலைப் போன்ற அந்த நெடி, கம்பெனியின் உயரமான புகைக்கூண்டிலிருந்து வெளிவரும் புகை ‘தன் பிறந்த ஊருக்கு வந்துவிட்டோம்’ என்ற ஆனந்தத்தைத் தந்தது.

பேருந்து நிறுத்தம் நிழற்குடையுடன் காட்சியளிக்க, நிறைய கடைகள் வந்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தது.

நேரே அண்ணாவின் வீட்டுக்குச் சென்றவள் அம்மாவைப் பார்க்கவும் கட்டிக் கொண்டாள். வயது மூப்பின் காரணமாக அம்மாவிற்கு சரியாய் காது கேட்கவில்லை. மெதுவாகப் பேசினாள்.

நாட்டுப் பெண்ணிடம் ஜாடை காண்பிக்க, “காஃபி தான? குடுத்தாச்சு, குடுத்தாச்சு. டிபன், சமையலெல்லாம் பண்ணிட்டேன். என் நாத்தனாரை நன்னா பாத்துக்கறேன். கவலைப் படாதீங்கோ. நீங்க நிம்மதியா பொண்ணான்ட சித்த பேசீண்டு இருங்கோ” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

எல்லோருக்கும் வாழ்க்கை முழுக்க ஓடாய் உழைத்தாலும், “சாப்பிட்டயா, நன்னா இருக்கயா” என்று ஒரு பெண்ணை அம்மா மட்டுமே மனதாரக் கேட்பாள்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தபின், “எனக்கு முடியலை நந்தினி. கொஞ்சம் படுத்துக் கட்டுமா?” என்று அம்மா கேட்க

“என்னம்மா இப்படி கேக்கற? படுத்துக்கோ” என்றவள் கூடத்திற்கு வர, எல்லோருமாக அரட்டை அடித்துக் கொண்டு ஒன்றாக சாப்பிட்டனர்.

“நானும் பழைய ஆளுகளையெல்லாம் பாத்து நாளாச்சு. நானும் என் காரை எடுத்துண்டு வரேன். அம்மாவையும் கூட்டீண்டு போலாம். அம்மாவும் சந்தோஷப்படுவா” என்றான் கணேஷ்.

ஒரு வழியாக இரண்டு கார்களில் கிளம்பியவர்கள் முதலில் கெமிக்கல் காலனியில் பண்டாரத்தம்மாவைப் பார்க்கப் போக, கடையை அவளின் பேரன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பாட்டிக்கு இப்பல்லாம் முடியறதில்ல. வீட்டுக்குள்ள தான் இருக்காங்க. நடை குறைஞ்சு போச்சு” என்று சொல்லவும்

கடைக்கு பக்கவாட்டிலிருந்த குறுகலான சந்தில் நுழைந்தவர்கள் பின்னால் இருந்த வீட்டு வாசலில் காலிங்பெல்லை அழுத்த, பேரனின் மனைவி இவர்களை விசாரித்து விட்டு கதவைத் திறக்க கயிற்றுக் கட்டிலில் திண்ணையில் படுத்திருந்த பண்டாரத்தம்மாவிடம் விஷயத்தைச் சொல்ல, இரண்டு நிமிடம் நெற்றிப் புருவங்களைக் குறுக்கி யோசித்தவளின் முகத்தில் பிரகாசம் தெரிய “ஐயர் வூட்டுலருந்து வந்துருக்காங்களா?” என்று விழிவிரிய அன்புடன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தவள் தலையசைத்து வரவேற்றாள்.

ரகுவின் இறப்பு செய்தியைக் கேட்டவள் மிகவும் வேதனை அடைந்தாள். எல்லா குழந்தைகளைப் பற்றியும் விசாரித்தவள், “அந்த காலம் மாதிரி வராதுங்க மாமி. மனுஷங்க எல்லாரும் மனசைப் பாத்து பழகின காலமது” என்றவள், “ஊர்லருந்து பழசை ஞாபகம் வச்சுட்டு இந்த கிழவியை பார்க்க வந்தயே கண்ணு. ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லிவிட்டு எல்லோரையும் மனதார வாழ்த்தினாள்.

கிளம்பும் சமயத்தில் கணேஷ் மைதிலியைக் கூட்டிவர, “அம்மாவுக்கு பெருசா நடக்கவே முடியறதில்ல. ஆனாலும் உங்களைப் பார்க்கணும்னு கைத்தாங்கலாக கூட்டீண்டு வரச் சொன்னாங்க” என்று சொல்ல

“என்ன பண்டாரத்தம்மா? சௌக்யமா? பேரன் பேத்தி நல்லா பாத்துக்கறாங்களா? எங்க வீட்டு ஐயா உங்க கடைக்கு வருவாரு. இப்ப என்னோட பசங்கள உங்க வீட்டுக்கே கூட்டீட்டு வந்துருக்கேன் பாருங்க” என்று சொல்லிய மைதிலியிடம்

“மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கும்மா” என்றாள் பண்டாரத்தம்மா.

பின்பு ரகு வீட்டுக்கருகில் குடியிருந்த பத்மாக்கா வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற நந்தனியைப் பார்த்ததும், “கண்ணு, நல்லா இருக்கயா சாமி? மாமி எப்படி இருக்காங்க? வீட்டுல எல்லோரும் செளக்யம் தான?” என்றவளிடம் தன் மகன், மருமகள் எல்லோரையும் அறிமுகப்படுத்தினாள் நந்தினி. மைதிலியும், பத்மாக்காவும் சிறிது நேரம் பழைய நினைவுகளை அசைபோட நேரம் போனதே தெரியவில்லை.

பிறகு அங்கிருந்து உச்சி பிள்ளையார் கோயில் செல்ல முடிவெடுக்கவும், “எனக்கு முடியல. சோர்வா இருக்கு. என்னை வீட்டுல விட்டுடா கணேஷா” என்று அம்மா சொல்ல, நந்தினியின் குடும்பம் மட்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் போனார்கள்.

அடிவாரத்திலிருந்து கோவில் வரை யார் சொல்லியும் கேட்காமல் பொறுமையுடன் ஒவ்வொரு படியாய் ஏறினாள் நந்தினி. இந்த மலைக் கோவிலுக்குதான் அடிக்கடி வருவேன் என்று மகன்களிடம் சொல்லிக் கொண்டே, பொறுமையாக மலையேறி முடித்ததும் ஆசுவாசப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தாள்.

விநாயகர், முருகன், சிவன், துர்கை, நவகிரஹம் என எல்லா ஸ்வாமிகளையும் தரிசித்து விட்டு, பிரதக்ஷணமாக கார்த்திக்குடன் கோவிலைச் சுற்றி வரும்போது கோவிலின் பின்பக்க சுற்றுச் சுவருக்கு நடுவே இருந்த கேட்டை மெதுவாகத் திறந்து வெளியே செல்ல, சிறிது மண் இடமும், அதன் நடுவே ஓர் வேப்ப மரமும் அங்கிருந்து பத்தெட்டில் ஒரு பெரும் பாறையும் இருக்க, கீழே கண்முன்னே மேட்டூர் அணை கடல் போல் காட்சியளித்தது.

நந்தினி தன் இளமை பிராயத்திற்கே சென்றாள். மெதுவாக கார்த்திக்கின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றவள், அந்த பாறையின் மீது கார்த்திக்கை அமரச் செய்து அருகே தானும் அமர்ந்து கொண்டாள்.

“நந்தினி” என்றார் கார்த்திக்.

“ம்…” என்றவளிடம்

“இதுக்காக தான கூட்டீண்டு வந்த?” என்றார் கார்த்திக்.

“ம்…” என்றவள், “கண்ணை மூடி நாம இறக்கும் போது கூட நம்மோட முதல் இருபது வருட வாழ்க்கை தான் அதிகம் நம் கண் முன்னே வந்து போகுமாம். அதுமாதிரி என்னோட சின்ன வயசு ஞாபகங்களை உங்க கையைப் புடிச்சுட்டு வயசான காலத்துல ஒரு தடவை பார்த்துடனும்னு நெனச்சேன். நீங்களும் ஆக்ஸிடண்ட், தலைல ஆபரேஷன்னு என்னென்னவோ என்னை பயமுறுத்திப் பாத்தீங்க. சத்தியவான் சாவித்திரி எமதர்மராஜன்கிட்ட போராடின மாதிரி, நான் எமதர்மராஜன் உங்ககிட்ட நெருங்கவே விடாம போராடினேன்னு தான் சொல்லணும். சரிதான?” என்றவளிடம்

ஆழமான காதலுடனும், ஆச்சர்யத்துடனும் நந்தினி யைப் பார்த்தவன், “நீ வைராக்கியம் பிடிச்ச என் அழகு பொண்டாட்டி. இன்னும் சின்னவனுக்கும் கல்யாணம் பண்ணணும். இதே வைராக்கியத்தோடே இரு. நல்லபடியா அதையும் பண்ணீட்டு குடுகுடு கிழவன், கிழவியா பேரன் பேத்திகளையும் கூட்டீண்டு பார்க்ல காலைல காலார வாக்கிங் போலாம்” என்று கார்த்திக் சொல்ல

“காதல் ஜோடிகளை தொந்தரவு பண்ணவேண்டான்னு தான் இவ்வளவு நேரம் பண்ணல. ஆனா, ரொம்ப நேரமாச்சேன்னு தான் வந்தேன். இன்னைக்கு ராத்திரி பாட்டி வீட்டுல இருந்துட்டு காலைல சீக்கிரமா ஊருக்கு கிளம்புவோமா?” என்று கிருஷ்ணா கேட்க,

“ஏதேதோ பேசிகிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல” என்று எழுந்த நந்தினி, கைத்தாங்கலாக கார்த்திக்கைத் தூக்க, இரவுப் பொழுது அம்மா மற்றும் அண்ணன் குடும்பத்துடன் மறக்கமுடியா இனிய நாளாக அமைந்தது.

மறுநாள் காலை பிறந்த வீட்டிலிருந்து குடும்பத்துடன் கிளம்பிய நந்தினி, கார்த்திக்கின் மார்பில் சாய்ந்தவாறே தனது வாழ்வின் அடுத்தகட்ட பயணத்துக்கு தயாரானாள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மன வதம் (சிறுகதை) – ✍ பீஷ்மா

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 18) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை