in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 24) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12    பகுதி 13    பகுதி 14     பகுதி 15     பகுதி 16    பகுதி 17    பகுதி 18    பகுதி 19    பகுதி 20    பகுதி 21    பகுதி 22    பகுதி 23

“இன்னும் ஒரு அரை மணி  நேரம் கொடுங்கள், வந்து  விடுகின்றேன்” என்றவள், அங்கிருந்த பெண்களோடும் பெரியவர்களோடும் சகஜமாகப் பேசிச் சிரித்து கொஞ்ச நேரம் அவர்களுள் ஒருத்தியாய் பழகி விட்டு வந்தாள்.

சில பெண்களோடு ஓடிப் பிடித்தும் விளையாடினாள். குழந்தை போல் விளையாடும் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ரிஷி.

“ஹலோ ரிஷி போகலாமா?” என்றவாறே எதிரில் வந்து நின்றாள் தர்ஷணா.

ஓடி விளையாடியதால் நெற்றியெல்லாம் முத்து முத்தாக வியர்வை, கழுத்திலும் நெஞ்சிலும் ஈரம் பளபளத்தது. ஒரு பின்னல் மார்பில், ஒரு பின்னல் முதுகில், சுருண்ட கூந்தல் கலைந்து நெற்றியில் விளையாடியது. திக்பிரமை பிடித்தது போல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“போகலாம்” என்றவன், தன் கர்சீப்பை எடுத்து அவள் நெற்றியில், கழுத்தில் இருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்தான்.

“எல்லோரும் பார்க்கிறார்கள் ரிஷி” என்றாள் தர்ஷணா சற்றே கன்னம் சிவந்து  லேசாக சிரித்தபடி.     

“பார்த்தால் பார்க்கட்டும், ஆனால் உன்னோடு இவ்வளவு நேரம் விளையாடிய இந்த ஆஸ்ரமத்துப் பெண்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது தர்ஷணா” என்றான்.

“ஏனாம்?”

“இந்த சந்தோஷமான தர்ஷணாவின் முகத்தை நான் இதுவரைப் பார்த்ததில்லை, அதனால் தான்” என்றான்.

அவர்கள் அங்கிருந்து கிளம்பும் போது ஒரு தோட்டக்காரர் இளநீர் வெட்டி ஸ்ட்ரா வைத்து மூவருக்கும் கொடுத்தார். வழுக்கையையும் அந்த காயிலேயே வைத்துக் கொடுத்தார். காரியதரிசி வந்து வழியனுப்பி வைக்க மூவரும் கிளம்பினார்கள்.

காரில் போகும் போது டிரைவர், “இந்த தர்ஷணா டாக்டரம்மா, இங்கே வந்தால் ரொம்ப நன்றாகப் பாடுவார்கள். பாட்டும் சொல்லித் தருவார்கள். பெரிய அம்மாவுடன் அல்லது டாக்டர் அம்மாவுடன் வந்தால் இங்கிருந்து  இருட்டிய பிறகு தான் கிளம்புவார்கள்” என்றான்.

“நிஜமாகவா? தர்ஷணா பாடுவாள் என்றே எனக்குத் தெரியாதே?”  என்றான் ரிஷி.

“ரொம்ப நன்றாகப் பாடுவார்கள் சார், வீணையெல்லாம் கூட  வாசிப்பார்கள்” என்றான் டிரைவர்.

“நிஜமாகவா தர்ஷணா?” ரிஷி வியப்புடன் தர்ஷணாவைப் பார்த்துக் கேட்டான்.

“எப்போதோ சிறு வயதில் கற்றுக் கொண்டது. அவர்கள் யாருக்கும் பாட்டு முறையாகத் தெரியாது, அதனால் நான் சமயத்தில் கத்தினால் கூட சங்கீதம் என்று தான் சொல்வார்கள்” என்று சொல்லிச் சிரித்தாள்.

“இது ரொம்பத் தன்னடக்கம்” என்றான் ரிஷி, அவளை உறுத்துப் பார்த்துக் கொண்டே.

அடுத்த நாள் காலை, காலண்டரைப் பார்த்து நல்ல நேரத்தில் சென்னை கிளம்ப வற்புறுத்தினாள் சாந்தா. டிரைவரும் ஜட்ஜும் முன் சீட்டில் உட்கார்ந்து கொள்ள, சாந்தா, ரிஷி, தர்ஷணா மூவரும் பின் ஸீட்டில் உட்கார்ந்தனர். சென்னைக்கும் வந்து சேர்ந்து விட்டனர். நேரே சியாமளா வீட்டிற்கு வருவதாக நிர்மலாவிற்கு போன் செய்தார்கள். நிர்மலாவும் மாதவனும், சியாமளா வீட்டிலேயே நித்யாவோடு காத்திருந்தனர். விக்னேஷிற்கு உதவியாக விஷ்ணு ஏதோ செய்து கொண்டிருந்தான்.

வத்சலாவையும், ரோஷிணியையும், நேகாவையும் பார்த்துக் கொண்டு, தன் தாயாருக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.  சரவணனும், முருகேசனும் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர். அந்த இரண்டு குடும்பங்களும் இல்லாமல், விக்னேஷும், சியாமளாவும் எதுவும் செய்ய மாட்டார்கள். எல்லோரும் தர்ஷணாவையும், அவளுக்குக் கணவராக வரப் போகிறவரையும் பார்க்க மிக்க ஆவலாகக் காத்திருந்தார்கள்.

அத்தையின் சந்தோஷத்திற்கோ அளவே இல்லை. பெரிய ஜட்ஜும், அமெரிக்காவில் இருக்கும் அவர் மகனுமே இன்று தங்கள் வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்று பெருமிதப்பட்டாள். ரிஷியும், அவன் பெற்றோரும், தர்ஷணாவுடன் விக்னேஷின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். மாலை நேரமாகி விட்டதால் எல்லோருக்கும் குலோப் ஜாமுனும், ரவாஉப்புமாவும் செய்து சாப்பிட வைத்தார்கள்.  வந்தவர்கள் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்த பிறகு, ஜட்ஜ் பிரகாசம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார். ரிஷிக்கு தர்ஷணாவை பெண் கேட்டார்கள். எல்லாவற்றிலும் அத்தையை முன்னிறுத்தித் தான் பேசினார்கள்.

அத்தை தான் பேசினாள். “எங்களுக்குப் பரிபூரண சம்மதம், ஆனால் உங்களோடு சம்பந்தம் செய்யும் அளவு எங்களுக்கு  வசதியில்லை” என்று உண்மையை உடைத்துப் பேசினாள்.

“எங்களுக்கு நல்ல மனிதர்கள் உறவுதான் வேண்டும். நீங்கள் எதற்கும் கஷ்டப்பட வேண்டாம். எந்த சீரும் செய்ய முடியாது. தர்ஷணா இல்லாமல் எங்களாலும் இருக்க முடியாது, எங்கள் மகன் ரிஷியாலும் இருக்க முடியாது. நித்யாவின் பிறந்தநாள் கொண்டாடும் ஹோட்டலிலேயே நல்லநேரம் பார்த்து சிம்பிளாக நிச்சயதார்த்தம் வைத்து விடலாம். திருமணம் மட்டும் கோவையில் வைத்து விடலாம். ஏனென்றால் ஜட்ஜ் அங்கிளுக்கு அங்கே தான் நிறைய நண்பர்கள், ரிஷிக்கும் நிறைய நண்பர்கள். இவர்கள் எல்லோரையும் விட தர்ஷணாவின் ரசிகைகளும் பேஷன்ட்டுகளும்  அங்கே அதிகம்” என்றனர் பிரகாசமும் சாந்தாவும்.

“திருமணம் முடிந்த பிறகு சென்னையில் சிறப்பாக ரிஸப்ஷன் வைத்து விடலாம். ரிசப்ஷனுக்கு முதலமைச்சரையும் அழைக்க வேண்டும்” என்றார் மாதவன்.

தர்ஷணாவின் அருகிலேயே இருந்தாள் நித்யா. அப்பாவிடமும் சித்தியுடனும் இருந்த போது காய்ந்து வற்றிப்போன முருங்கைக் காய் போலவே இருந்த நித்யா, இப்போது நன்கு தளதளவென்று இருந்தாள்.

“நித்யா, எந்த காலேஜில் சேரப் போகிறாய் என்று முடிவு செய்து விட்டாயா? அம்மாவைப் போல் டாக்டராகவா, அப்பாவைப் போல் வக்கீலாகவா?” எனக் கேட்டாள் தர்ஷணா.

“இரண்டும் இல்லை தர்ஷணா, நான் விஷ்ணு மாமாவைப் போல் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயரிங் தான் படிக்கப் போகிறேன்” என்றாள் நித்யா.

“விஷ்ணு மாமாவா?” என்றாள் தர்ஷணா ஆச்சர்யத்துடன்.

“ஆமாம் தர்ஷணா.  சியாமளா அக்கா விக்னேஷ் அங்கிளை மாமா என்று தானே கூப்பிடுகிறார், அதே போலத்தான்” என்றவள், முகமெல்லாம் சிவக்க ஓடி விட்டாள்.

“என்னடா விஷ்ணு?” என தர்ஷணா தம்பியைப் பார்த்துக் கேட்க, அவனோ காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு தர்ஷணா முதுகில் ஒரு தட்டு தட்டிச் சிரித்தான்.

பிரகாசமும் சாந்தாவும் நிச்சயதார்த்தத்திற்கு பட்டுப்புடவை, நகை வாங்க தர்ஷணாவை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டனர். அவர்கள் ஆசைக்கு நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் என்ற விலையில் பட்டுப்புடவைப் பார்த்தனர்.

“ஆன்ட்டி, இவ்வளவு விலையில் வாங்கினால் அது இருக்கும் கனத்திற்கு அதைக் கட்டிக் கொண்டு நடக்கவே முடியாது போல் இருக்கிறதே. அடிக்கடி உபயோகப்படுத்துவது போல் சிம்பிளாக எடுங்கள். தூக்கவே முடியாத புடவையை எடுத்தால் நான் எப்படிக் கட்டுவது? பிறகு கல்யாணத்தில் ஜீன்ஸ் பேண்ட் தான்” என்றாள் தர்ஷணா.

“நீ செய்தாலும் செய்வாய், இப்போதே பயமுறுத்தினால் எப்படி? கழுத்தில் தாலி ஏறிய பிறகு எங்களை மிரட்டலாம்” என்றார் சாந்தா சிரித்துக் கொண்டே.

“நகைகளும் சிம்பிளாகத்தான் வாங்க வேண்டும்” என்றனர் ரிஷியும் தர்ஷணாவும். ஆனால் சாந்தா எல்லா நகைகளும் வைரத்தில் ஒரு செட், முத்தில் ஒரு செட், பவளத்தில் ஒரு செட், தங்கத்தில் ஒரு செட் என்று வாங்கினாள்.

சரவணனும் முருகேசனும்  அடுத்தடுத்த பெரிய மனைகளாக வாங்கி வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்திருந்தனர்.

“நிச்சயதார்த்தம் எங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள், பூஜையெல்லாம் செய்து கிருஹப்பிரவேசம் செய்த வீடு” என்றான் சரவணன்.

நித்யாவின் பிறந்த நாளை ஹோட்டலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். விஷ்ணு அவளைக்குத் தனியாக ஏதோ ஒரு பரிசு கொடுத்தான். விக்னேஷ் தான் விஷ்ணுவிற்கு கேட்டவுடன் பணம் தருவானே. சில நேரங்களில் பணம் கொடுத்தால் சியாமளா திட்டுவாள். அதிகச் செல்லம் கொடுப்பதாகக் கோபித்துக் கொள்வாள், அதனால் சில நேரங்களில் பணம் கொடுப்பதை மறைத்து விடுவான் விக்னேஷ்.

வத்சலாவைப் பார்க்கத்தான் சியாமளாவிற்கு மனம் வருந்தியது. கௌசிக்கிற்கு இன்னும் ஒரு வருடத்தில் விடுதலை கிடைக்கும், அவனும் செய்த செயல்களுக்கு வருந்துவதாகத்தான் விக்னேஷும் மாதவனும் கூறினார்கள்.

தர்ஷணாவின் நிச்சயத்திற்கு, நேஹாவிற்கும் ரோஷணிக்கும் ரெடிமேட் பட்டுப்பாவாடை வாங்கி வந்தனர் ஜட்ஜ் பிரகாசமும் சாந்தாவும். பாவாடையில் பாதி உயரத்திற்கு ஜரிகையாகவே இருந்தது. இரண்டு குழந்தைகளும் தட்டாமாலை போல் சுற்றிக் கீழே உட்கார்ந்தால் அந்தப் பாவாடை குடை போல் விரிவதைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தனர். அவர்கள் சிரிப்பில் மெய்மறந்து நின்றான் விக்னேஷ்.

நிச்சயதார்த்தம் சிம்பிளாகச் செய்ய வேண்டும் என்று சொல்லிச் சொல்லிக் கடைசியில் ஆடம்பரமாகவே முடிந்தது.               ஆட்டோ நண்பர்கள், வக்கீல் நண்பர்கள் என்று எல்லோரையும் அழைத்திருந்தான் விக்னேஷ். சியாமளாவும், வத்சலாவும்  அதே போல் தங்கள் நண்பர்களை அழைத்திருந்தனர்.

விக்னேஷ்  அவன் திருமணத்திற்கு பட்ஜெட் போட்டு செலவு  செய்ததுபோல் இப்போது பட்ஜெட் போட்டு செலவு செய்யவில்லை. தாராளமாக சந்தோஷமாக செலவு செய்தான். சரவணனும் முருகேசனும். “விழா எங்கள் வீட்டில் நடப்பதால் நாங்கள் தான் எல்லா செலவும் செய்வோம்” என்று போட்டிப் போட்டுக் கொண்டு செய்தனர்.

கடைசி பந்தியில் உட்கார்ந்து சாப்பிடும் போது சரவணன், முருகேசன், அவர்கள் குடும்பத்துடன் விக்னேஷும், சியாமளாவும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மாதவன், பிரகாசம், வத்சலா, நிர்மலா பரிமாறினர். சந்தோஷக் களைப்புடன் சாப்பிட்டு விட்டு அத்தையுடன் பேசிக் கொண்டிருந்தார் சாந்தா .

“தர்ஷணா ரொம்ப அதிர்ஷ்டக்காரி இல்லையா சியாமளா?” என்றான் விக்னேஷ்.

“ஏன் என் அதிர்ஷ்டத்திற்கு என்ன குறைச்சலாம்?” என்ற சியாமளா, சாப்பிட்டுக் கொண்டே இடதுகையால் லேசாக அவனை இடித்தாள்.

“என்ன இருந்தாலும் பெரிய ஜட்ஜ் குடும்பம். ஒரே பிள்ளை, அமெரிக்காவில் பெரிய டாக்டர்” என்றான் விக்னேஷ். சரவணனும் முருகேசனும் சியாமளா என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்னைப் பொறுத்தவரை நான் தான் மிகவும் அதிர்ஷ்டக்காரி. நான் மட்டும் வராமல், தம்பி தங்கையோடு அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல், தங்குவதற்கு நிழலும் இல்லாமல் உங்களைத் தேடி வந்தோம். நீங்களும் அத்தையும் அதிக வசதி இல்லாத நிலையிலும் என்னை மட்டும் ஆதரிக்கவில்லை, என் தம்பியையும் தங்கையையும் அன்புடன் ஆதரித்து நல்லவழியில் படிக்க வைத்து வாழ வைத்தீர்கள். இன்று தர்ஷணா இவ்வளவு நல்ல நிலைமை அடைவதற்கு உங்கள் அன்பும் அக்கறையும், அத்தையின் ஆசீர்வாதமும் தான் காரணம். பெற்றோர் இல்லாத குறையே எங்களுக்குத் தெரியவில்லை” பேசிக் கொண்டிருக்கும் போது சியாமளாவின்  கண்கள் கலங்கி தொண்டை அடைத்தது.

“விக்னேஷ், சாப்பிடும் போது சியாமளாவைக் கண் கலங்க வைக்காதே” என்று கடிந்து கொண்டாள் வத்சலா .

ரிஷி இரண்டு மோதிரங்கள் வாங்கி வந்திருந்தான். சுற்றிலும் சின்னச் சின்ன வைரக் கற்கள் இருக்க, ஒரு மோதிரத்தில் மத்தியில் சிறியதாக தர்ஷணாவின் படமும், மற்றொன்றில் ரிஷியின் படமும் இருந்தது. தர்ஷணாவின் படம் இருந்ததை ரிஷியின் விரலிலும், ரிஷியின் படம் இருந்த மோதிரத்தை தர்ஷணாவின் விரலிலுமாக மோதிரங்கள் மாற்றிக் கொண்டனர்.

ஜோஸியரைக் கேட்டு ரிஷியின் விடுமுறை முடிவதற்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று கலந்து பேசிய பிறகு தர்ஷணாவை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள் ரிஷியும் அவன் பெற்றோரும். நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தாள் தர்ஷணா. ரிஷியை கோயமுத்தூரில் அவன் படித்த மருத்துவக் கல்லூரியில் ஏதோ கான்பரன்ஸ் என்றும், அதில் கலந்து கொள்ள வேண்டுமென்றும்  நேரில் வந்து அழைப்பு விடுத்தனர்.

“நான் தர்ஷணாவை ஆஸ்பத்திரியில் விட்டுப் பிறகு பிக்-அப் செய்ய வேண்டுமே” என்று தயங்கினான் ரிஷி.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 2) – ஸ்ரீவித்யா பசுபதி

    ஒரு நடிகையின் டைரி (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்