2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பிரபல நடிகை கவிதாஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை அனைத்து ஊடகங்களும் பிரேக்கிங் நியூஸ் ஆக ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்தவுடன் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அவளின் பண்ணை வீட்டிற்கு விரைந்தார் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன். ஆரம்பகட்ட விசாரணைக்கு பின் கவிதாஸ்ரீயின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தார். மகளின் மரண செய்தி கேட்டு விரைந்து வந்த அவளது பெற்றோர்கள் கதறி அழுதனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் கவிதாஸ்ரீயின் உடல் அவளது பெற்றோர்களிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டது. பெண்ணின் உடலை பெற்றுக் கொண்ட அவளது பெற்றோர்கள் பண்ணை வீட்டில் ஒரு பகுதியிலேயே இறுதி சடங்குகளை செய்து அங்கேயே புதைத்தனர்.
உடற்கூறு அறிக்கையில் கவிதாஸ்ரீ மதுவில் விஷத்தை கலந்து அருந்தியதால் மரணம் ஏற்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நடிகையின் மரணம் ஒரு தற்கொலை என முடிவு செய்து அறிக்கை தயார் செய்து விட்டு கேசை முடிவு செய்யலாம் என எண்ணியிருந்தார் ஆய்வாளர் ராஜேந்திரன். ஆனால், அதற்கு முன்பாக தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை விசாரணை நடத்தி அறிய விரும்பினார்.
இந்நிலையில் சில நாட்களுக்குப் பிறகு ராஜேந்திரனை தொடர்பு கொண்ட கவிதாஸ்ரீயின் பெற்றோர்கள், தங்களது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவள் மதுவில் விஷம் கலந்து சாப்பிட்டு விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும், ஏன் என்றால் அவளுக்கு மது அருந்தும் பழக்கமே கிடையாது என்றும் கூறினார்கள்.
மேலும், அவளின் காதலன் நடிகர் அசோக்கின் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் கூறனார்கள். அவர்கள் கூறியதை கேட்ட ராஜேந்திரன், என்னடா இது? இது ஒரு தற்கொலை கேஸ் என அறிக்கை சமர்ப்பித்து முடித்து விடலாம் என நினைத்தால் இவர்கள் இப்படி கூறுகிறார்களே, என மனதிற்குள் நினைத்துக் கொண்ட ராஜேந்திரன், அவர்களிடம்,
“ஓ… உங்களுக்கு அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறதா? சரி, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. நீங்க சந்தேகப்படற அசோக்கும் ஒரு பெரிய நடிகர், எந்த ஆதாரமும் இல்லாம அவர் மேல சந்தேகப்படவோ, அல்லது கைது செய்யவோ முடியாது. அதனால, நான் ரகசியமாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் , அதுவரை வேறு யாரிடமும் இது பற்றி நீங்கள் பேச வேண்டாம்” என்றும் கேட்டுக் கொண்டார்.
உடனடியாக விசாரணையை துவக்கிய ராஜேந்திரன், கவிதாஸ்ரீயின் மேனேஜர் முருகனிடம் விசாரித்தபோது, அவர் மேடம் பண்ணை வீட்டிற்கு செல்லும்போது தனியாகத்தான் செல்வார் என்றும், அதனால் அன்று என்ன நடந்தது என்று தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.
பின்னர் பண்ணை வீட்டின் பணியாளர்களிடம் விசாரித்தபோது, அவர்கள், மேடம் அங்கு வரும் நாட்களில் அனைவரையும் இரவு 8 மணிக்கெல்லாம் அவுட் ஹவுசில் உள்ள எங்களது இருப்பிடங்களுக்கு போகச் சொல்லி விடுவார்கள், அதனால், அதன்பிறகு அங்கு யார் வருகிறார்கள்,போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.
ராஜேந்திரன், நடிகர் அசோக்கிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர், எனக்கும் அவளுக்கும் சிறிது காலமாக சரிவர பேச்சுவார்த்தை இல்லை, மேலும் கவிதாஸ்ரீ இறந்த அன்று நான் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வருவதற்கே இரவு பதினோரு மணி ஆகிவிட்டது , அன்று அவளை சந்திக்கவே இல்லை என்றும் கூறிவிட்டார்.
நடிகர் அசோக் கூறிய விவரங்களின் உண்மை தன்மையை அறிய ராஜேந்திரன் ரகசிய விசாரணை மேற்கொண்ட போது, கவிதாஸ்ரீ மரணம் நிகழ்ந்த நாளில் அசோக் ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு லேட்டாகவே திரும்பினார் என்பதை சூட்டிங் நடந்த ஸ்டூடியோ வட்டாரங்களில் விசாரித்து தெரிந்து கொண்டார்
.
விசாரணையில் எந்தவித உருப்படியான தகவலும் கிடைக்காமல் குழப்பமாக இருந்த நிலையில், அன்று ராஜேந்திரனுக்கு தபால் ஒன்று வந்தது. அதை அவர் பிரித்து பார்த்தபோது அதில் ஒரு நாட்குறிப்பு இருந்தது. அதனை அவர் புரட்டிப் பார்த்தபோது நடிகை கவிதாஸ்ரீயின் டைரி என தெரியவந்தது. அவசரம், அவசரமாக அவர் ஒவ்வொரு பக்கங்களாக பார்த்துக் கொண்டே வந்தபோது கடைசிப் பக்கத்தில் கவிதாஸ்ரீ கீழ்க்கண்டவாறு எழுதி இருந்தாள்:
“எனக்கும், அசோக்குக்கும் சிறிது காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது, அவரின் சரிந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க சொந்தப் படம் எடுக்கப் போவதாகவும், அதற்கு நான் இரண்டு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் கேட்டார்.
நான் அவரிடம், என்னை நீங்கள் உடனடியாக திருமணம் செய்துகொள்ளுங்கள், நம் திருமணம் நிகழ்ந்த உடனேயே ,நானே உங்களை வைத்து படம் தயாரிக்கிறேன் என்று கூறினேன். அதை ஏற்க மறுத்த அசோக் என்னை மிரட்ட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார்.
அதனால், என் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு முழுப்பொறுப்பும் அசோக்கையே சாரும், என்பதை இதன் மூலம் பதிவு செய்கிறேன். இந்த நாட்குறிப்பை ரகசியமாக உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன், நீங்கள்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடித்திருந்தாள்.
அவளின் நாட்குறிப்பையே வாக்குமூலமாக பதிவு செய்த ஆய்வாளர் ராஜேந்திரன், உடனடியாக நடிகர் அசோக்கின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து அவரிடம் விசாரித்தபோது, அவளை தாம் கொலை செய்யவில்லை என்று மீண்டும் மீண்டும் மறுத்துப் பேசினான். கவிதாஸ்ரீயின் உடற்கூறு அறிக்கையையும், மற்றும் அவளின் நாட்குறிப்பினையும் அசோக்கிடம் காண்பித்தார்.
அப்போதும் கூட அசோக் இன்ஸ்பெக்டரிடம், தான் சில சமயம் கோபத்தில் கவிதாவிடம் உன்னை கொலை செய்து விடுவேன் என கூறியதாகவும், ஆனால் அது கோபத்தில் கூறியதுதானே தவிர மற்றபடி அவளை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு என்றும் ஏற்பட்டதில்லை என்றான்.
இந்நிலையில் கவிதாஸ்ரீ டைரியின் பதிவுகளின் அடிப்படையிலும் சந்தேகத்தின் பெயரில் அசோக்கை கைது செய்தார். இது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அசோக்கின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில், தமது கிளையண்ட் அசோக் இக்கொலையில் ஈடுபட்டதற்கான நேரிடையான சான்றுகள், ஆதாரங்கள் இல்லாத நிலையில் அவரை கைது செய்தது தவறு என்றும், உடனடியாக அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நடிகர் அசோக்கை ஜாமீனில் விடுவித்தது.
இதனிடையில் ராஜேந்திரனை அழைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரிடம், விசாரணையை மீண்டும் துவக்கத்திலிருந்து ஆரம்பித்து மேற்கொள்ளவும், அசோக்தான் கொலை செய்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுரை வழங்கினார்.
ராஜேந்திரன் மீண்டும் கவிதாஸ்ரீயின் பண்ணை வீட்டில் விசாரணை செய்தார். பிறகு அருகில் உள்ள சில பங்களாக்களின் செக்யூரிட்டிகளையும் விசாரித்தார். அப்போது கவிதாஸ்ரீயின் பண்ணை வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு பங்களாவின் வாட்ச்மேன் ஒரு தகவலை கூறினார்.
அவர் கூறியதாவது, ”சார் அந்த அம்மா இறந்து போன அன்னைக்கே சுமார் பதினோரு மணி அளவில் இங்கு ஒரு கார் வந்து நின்றது, அந்தக் காரில் வந்தவர் காரின் விளக்குகளை அனைத்துவிட்டு சற்று தொலைவில் காரை நிறுத்தி இருந்தார். சிறிது நேரத்தில் கவிதா அம்மாவோட கார் வந்தது, இங்கு காரில் அமர்ந்திருந்த ஒருவர் விரைந்து சென்று அந்தம்மாவின் காருக்குள் ஏறிச்சென்றார்” என்றார்.
“அந்த நபர் யார் என்று உனக்கு தெரிந்ததா?” என அவனிடம் கேட்டார் ராஜேந்திரன்
“இரவு நேரமாக இருந்ததாலும், அவர் காரை இருட்டில் நிறுத்தி இருந்ததாலும் எனக்கு அந்தக் காரில் வந்தவர் யாரு என தெரியவில்லை”
“சரி, அந்த காரை எப்போ திரும்ப வந்து எடுத்துகிட்டு போனாருன்னு தெரியுமா?”
“இரவு 12 மணிக்கு மேல ஆயிட்டதால நான் எங்க பங்களாவுக்கு உள்ள போயி செக்யூரிட்டி ரூம்ல படுத்துட்டேன், அந்தக் காரில் வந்தவர் எப்போது திரும்பி வந்து கார் எடுத்துகிட்டு போனாருன்னு தெரியல, விடியற்காலை சுமார் ஐந்து மணிக்கு பார்க்கிறப்ப அங்க கார் நிக்கல” என்றான்.
அந்த காவலாளி கொடுத்த தகவல்கள் ராஜேந்திரனுக்கு இந்த வழக்கில் ஒரு க்ளூவாக அமைந்தாலும் அன்று அங்கு வந்த கார் யாருடையது ,அவரை ஏன் கவிதாஸ்ரீ தன்னுடைய காரில் அழைத்து சென்றாள், அந்த நடுஇரவில் எங்கு சென்றார்கள்? என குழப்பமாக இருந்தத. அந்தக் காரில் வந்தது யார் என கண்டுபிடித்து விட்டால் வழக்கை ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம் என எண்ணினார் ராஜேந்திரன்.
மறுநாள் அந்த பகுதியில் இருந்த, முக்கியமாக “மர்ம கார்“ நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் அமைந்திருந்த பங்களாக்களின் cctv பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தார். குறிப்பிட்ட கார் நின்றுகொண்டிருந்த பகுதியை ஆய்வு செய்தபோது அந்த காரின் பதிவு என் சற்று தெளிவில்லாமல் தெரிந்தது. அது “333”என fancy நம்பர் ஆக இருந்தது. அந்த பதிவெண்ணை பார்த்ததும் ராஜேந்திரனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அந்த பதிவென் தொடர்பாக ஆய்வுகள் செய்து உறுதி செய்துகொண்ட பின்னர் அந்த காருக்குரிய முக்கிய பிரமுகர் மீது நடவடிக்கை தொடர்வதற்கு காவல்துறை தலைவரிடமும், அனுமதியும் பெற்றுக்கொண்டார் ராஜேந்திரன்.
மறுநாள் நாவலூரில் அமைந்துள்ள அந்த பண்ணை வீட்டில் ஓரே ஆட்டமும்,பாட்டமும் கும்மாலாமுமாக இருந்தது.
அப்போது திடீரென்று ஜீப்பில் வந்து இறங்கிய ராஜேந்திரன், அங்கு இருந்த முக்கிய அமைச்சரின் மகன் விவேக் பாபுவை, நடிகை கவிதாஸ்ரீயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்வதாக தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த அவன் ஆவேசமாக, “இன்ஸ்பெக்டர் நீங்க யார்கிட்ட வந்து பேசிகிட்டு இருக்கீங்கன்னு தெரியுமா? ஒரு அமைச்சரோட மகன்கிட்ட வந்து பேசிகிட்டு இருக்கீங்க, கவிதாஸ்ரீய நான் கொல்லவில்லை, எந்த ஆதாரத்தை வச்சி நான் கொலை செய்தேன்னு சொல்றீங்க? நான் உங்களை சும்மா விட மாட்டேன்” என கோபமாக பேசினான் விவேக்பாபு.
“நீதான் கவிதாஸ்ரீயை கொலை செஞ்சேங்கறதுக்கு ஆதாரம் இருக்கு, அத நாங்க கோர்ட்ல சமர்ப்பிப்போம், இப்போ மரியாதையா ஸ்டேஷன்க்கு வா” என அவனை அழைத்தார்.
அவன் உடனே, “இருங்க நான் அப்பாகிட்ட சொல்லி உடனே நடவடிக்கை எடுக்க சொல்றேன்” என போனை எடுத்தான்.
அவனை தடுத்த ராஜேந்திரன், நாங்க எல்லா விஷயத்தையும் அவர்கிட்ட பேசிட்டோம், இந்த முகவரிய கொடுத்து அனுப்பிவெச்சதே உன்னோட தந்தைதான் என்றார். வேறு வழியில்லாமல் தலை குனிந்தவாறு அவருடன் சென்றான் விவேக்பாபு.
போலீஸ் விசாரணையின்போது அவன் அளித்த வாக்குமூலத்தில், நடிகை கவிதைஸ்ரீயை ஒரு சில திரையுலக நிகழ்ச்சிகளில் சந்தித்து பழகியுள்ளேன்.
“நடிகர் அசோக்குடன் இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டதும், கவிதாஸ்ரீ என்னிடம் நெருங்கி பழக ஆரம்பித்தார், சில நாட்களில் நாங்கள் இரவில் அவரது பண்ணை வீட்டில் ரகசியமாக தங்க ஆரம்பித்தோம். அசோக்கை பழி வாங்குவதற்காக நாம் இருவரும் உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று என்னை வற்புறுத்தி வந்தாள். நான் அமைச்சரின் மகனாக இருப்பதால் உடனே திருமணம் செய்ய முடியாது, சிறிதுகாலம் பொறுத்துக்கொள் என்றேன்.
இதற்கிடையில் “அசோக்“ கவிதாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாக அவள் என்னிடம் கூறினாள். நான் அவளிடம், அசோக் உன்னை மிரட்டுவதாக தெரிவித்து காவல்துறைக்கு ஒரு கடிதம் எழுதிக்கொடு, நான் லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து வைக்கிறேன் என்றேன். அவளும் நான் சொல்லியபடி கடிதம் எழுதி என்னிடம் கொடுத்துவிட்டாள்.
சம்பவம் நடந்த அன்று நான் எப்போதும் போல அவள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் காரில் காத்திருந்தபோது கவிதாஸ்ரீ அவளது காரில் வந்து என்னை அவளது பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்றாள். நான் மது அருந்திக்கொண்டே அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவள் திடீரென்று என்னிடம், “நீ உடனடியாக ஒரு வாரத்திற்குள் நம் திருமணம் விஷயதை உன் அப்பாவிடம் தெரிவித்து சம்மதம் வாங்குவதுடன்,பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிப்பு செய்து விடு” என்றாள்.
நான் அவளிடம் “அவசரப்படாத கவிதா “, நான் நேரம் பார்த்து அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கிவிடுகிறேன், அதுவரைக்கும் பொறுமையா இரு” என்றேன்.
அவள் அதை ஏற்காமல், நீ உடனடியாக நம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவில்லையென்றால், நானே பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டி அறிவித்து விடுவேன் என்றாள்.
அதிர்ச்சி அடைந்த நான், அந்த மாதிரி எதுவும் செஞ்சிடாத, அப்பா ஒரு முக்கிய மந்திரி, நீ ஏதாவது செஞ்சுவச்சுட்டா அவமானமா போயிடும், கொஞ்ச நாள் வெயிட் பண்ணு என்றேன்.
அவள் பிடிவாதமாக, “ இல்லை இனிமேல் நான் வெயிட் பண்ண மாட்டேன், நாளைக்கே பத்திரிக்கையாளர்களை அழைத்து சொல்ல போறேன் என்றாள்.
கோபமடைந்த நான், “என்னடி சொல்ல,சொல்ல கேக்க மாட்டேன்கிற”, என்று சொல்லியப்படி அவளை அறைந்தேன். ஆத்திரமடைந்த கவிதாஸ்ரீ என்னை திருப்பி தாக்க ஆரம்பித்தாள்.
ஆவேசமடைந்த நான் அவளை கீழே தள்ளி கழுத்தை நெரித்தேன். அவள் மயங்கிவிட்டாள். நான் அவசரமாக மதுவில் சமையல் அறையில் இருந்த பூச்சி கொல்லி மருந்தையும் கலந்து வாயில் ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்து காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். கேஸை திசை திருப்பவும், அசோக்கை மாட்டிவிடவும், கவிதாஸ்ரீயிடம் எழுதி வாங்கிய கடிதத்தை உங்களுக்கு அனுப்பிவிட்டேன் என கூறி முடித்தான் விவேக்பாபு.
அவனது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு கோர்ட்’ல் சமர்ப்பிக்கப்பட்டதுடன், நடிகர் அசோக் கேசிலிருந்து விடுவிக்கப்பட்டார். தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நடிகையின் மரணத்தில் இருந்த மர்மம் ஒரு வழியாக விலகியது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings