எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஊரடங்கு உத்தரவின் காரணமாக காலை 7.00 மணிக்கே கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது .
அடுத்த நான்கு நாட்களுக்கான தேவையான மளிகை பொருட்களையும், காய்கறிகளையும் கடைகளில் வரிசையில் நின்று வாங்கி குவித்துக் கொண்டிருந்தனர்
முதல் நாள் பதினைந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ நாற்பது ரூபாய்க்கு கூவி, கூவி விற்று கொண்டிருந்தனர் தெருவோர கடைகளில் .
வீட்டுக்கு தேவையான சில பொருட்களை வாங்க வந்த ரகுராமன் ஒவ்வொரு கடையிலும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ,பொது மக்களை ஏமாற்றி கடைக்காரர்கள் பொருட்களின் விலையை உயர்த்தி விற்று கொள்ளை அடிப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டான் .
ரகுராமன், ஒரு கடையில் குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கினான். கடைக்காரர் பாக்கெட்டில் போட்டிருந்த விலையை விட ஆறு ரூபாய் அதிகமாக கேட்டார். உடனே கோபமடைந்த ரகுராமன் அவரிடம் “என்ன ,ஏமாத்தலாமுன்னு பாக்கிறீங்களா ?
அதிகபட்சம் விலையே 32 ரூபாய்தான் போட்டிருக்கு , ஆனால் 38 ரூபாய் கேட்கறீங்க ? கூடுதல் விலைக்கு வித்தீங்கன்னா அதிகாரிகள்கிட்ட புகார் செய்வேன் என்றான் காட்டமாக .
கடைக்காரர், “சார், பிஸ்கட் சப்ளை செய்த டீலரே விலை உயர்ந்திடுச்சுன்னு சொல்லித்தான் சரக்கே போட்டாங்க, சைடுல புதிய விலைக்கான ஸ்டாம்ப் போட்டு இருக்காங்க ,இஷ்டமுன்னா வாங்குங்க ,வேண்டாமுனா போய்கிட்டே இருங்க” என கோபமுடன் கூறினார் .
நான் , இதை சும்மா விடப்போவதில்லை , அதிகாரிங்ககிட்ட புகார் செய்கிறேன் என கூறிவிட்டு சென்றான் ரகுராமன் .
ரகுராமனும் “ஸ்டார் ஸ்னாக்ஸ் “ என்ற பெயரில் முறுக்கு ,மிக்ஸ்ர் ,காராசேவு போன்ற பல தின்பண்டங்களை தயாரிக்கும் சிறிய நிறுவனத்தை நடத்தி வருகிறான். அவற்றை நகருக்கு வெளியே கடைகளில் சப்ளை செய்கிறார்கள்.
அவன் வீட்டினுள் நுழையும்போது , அவனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் பணியாளர் ஒருவர் போன் செய்தார் ,
போனை எடுத்த ரகுராமன் , என்ன முருகேசன் ? என்ன விஷயம் என கேட்டான் .
எதிர்முனையில் பேசியவர், “சார், நம்ம ஸ்னாக்ஸ் ஐட்டம்களை கடைகளில் விற்பனைக்காக எடுத்து சென்றபோது, நாம முன்பு சப்ளை செய்த ஸ்னாக்ஸ் பாக்கெட்களை உபயோகிக்க தகுதியான நாட்கள் கடந்து விட்டது என்று கூறி (use by date) திருப்பி கொடுத்துவிட்டார்கள், இப்போது என்ன செய்வது?” என கேட்டான் .
“இந்த கடைகாரங்க எல்லாம் வேணுமின்னே பெரிய கம்பெனி சரக்குகளை விற்றுவிட்டு ,நம்ம பொருள விக்காம வைத்திருந்துவிட்டு திருப்பி அனுப்பி வைக்கறாங்க , அதனால நாமதான் நஷ்டப்பட வேண்டியிருக்கு., சரிபரவாயில்லை, நீ திரும்பி வந்த எல்லா பாக்கெட்டையும் பிரித்து, அந்த ஸ்னாக்ஸ் எல்லாத்தையும் மீண்டும் புது பாக்கெட்ல போட்டு பேக்கிங் பண்ணிடு ,அதோட use before date முத்திரையையும் புதுசா போட்டுட்டு , ஒவ்வொரு பாக்கெட்லயும் ஐந்து ரூபாய் விலையையும் உயர்த்தி ஸ்லிப் ஓட்டி திரும்பவும் கடைகளுக்கு சப்ளை செஞ்சுடு” என்றான் ரகுராமன் மிகவும் நேர்மையாக.
எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings