in ,

ரசிகன் (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்

எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்      

காலை எட்டு மணிக்கு சாவகாசமாக எழுந்த, சந்திரன் பல்துலக்கிய பின்பு முன் அறையில் வந்து அமர்ந்தான். அவனது மனைவி கலா சூடாக காப்பி கொடுத்தாள் .

உனக்கு தெரியுமா கலா , தலைவர் “ராகவ்வின் “ புது படம் “ பிரிந்த உள்ளம் “வர்ற வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகப்போகுது , மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் முத்துவேலும் நாங்களும் சேர்ந்து பிரம்மாண்டமான தலைவர் கட்டவுட் ,மாலை ,எல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்கோம் , தூள் கிளப்ப போறோம் என்றான் உற்சாகத்துடன் .

அதை கேட்ட கலா , “உங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியல , ரசிகர் மன்றமெல்லாம் நமக்கு சோறு போடாது , நமக்கு நம்ம குடும்பம், பெண் ஜனனியின் படிப்பு , முன்னேற்றம்தான் முக்கியம், இப்படி நடிகருக்கு பேனர் கட்டுவது ,மாலை போடுவது இதெல்லாம் விட்டுட்டு பொறுப்பா ஒரு வேலைய தேடிகிட்டு நிம்மதியா” இருங்க என்றாள் .

அதெல்லாம் “நீ சொல்லாத ,எனக்கு என் தலைவர் “ராகவ் “தான் முக்கியம் ,மத்ததெல்லாம் அப்புறம்தான்” என்றான் சந்திரன்.

நீங்க எக்கேடோ கெட்டு போங்க , நீங்களே ஒரு நாள் உணர்ந்து, திருந்தி வருவீங்க என சொல்லிவிட்டு உள்ளே போனாள் கலா .

வெளியே அமர்ந்திருந்த அவன் தந்தை மாணிக்கம் , ஏண்டா , “உன் பொண்டாட்டி சொல்றதுல என்ன தப்பிருக்கு ?

உனக்கும் 30 வயசாச்சு ,ஒரு பொண்ணும் பிறந்தாச்சு , இன்னமும் ரசிகர் மன்றம் அது, இதுன்னு அலைஞ்சுக்கிட்டு இருக்க , அந்த நடிகரெல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிகிட்டு A.C. பங்களாவுக்குள்ள உட்கார்ந்துகிட்டு இருக்கான் , நீங்க என்னடானா உங்க பொழப்பு விட்டுட்டு கைக்காசை செலவு செஞ்சு விழா எடுக்கறீங்க , இனிமேலாவது திருந்து என்றார் கோபமாக ,

‘உங்களுக்கெல்லாம் வயசாயிடிச்சு, வாய மூடிக்கிட்டு வீட்ல படுத்து கிடங்க “என அப்பாவை கோபமாக திட்டிவிட்டு வெளியே சென்றான் சந்திரன் .

மாணிக்கம் அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் , மனைவி இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது .

சந்திரன் பிளஸ் டு வரையில் படித்திருந்தாலும். எந்த வேலைக்கும் செல்லாமல் , கார் ,இரு சக்கர வாகனம் , வீடு வாங்க ,விற்க ,வாடகைக்கு என சில நண்பர்களுடன் இணைந்து தரகர் பணி செய்து வந்தான் . நிரந்தர வருமானம் இல்லை என்றாலும் , ஓரளவுக்கு வருமானம் வந்தது .

ஆனா , தன்னுடைய அபிமான நடிகர் ராகவ் நடித்த படம் ரிலீசாகும் மாதங்களில் வீட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பேனர் ,கட் அவுட்,மாலை என தன் சொந்த செலவில் செய்து அமர்களப்படுத்துவான். சந்திரனை ராகவ்வின் ரசிகன் என்பதை விட” வெறியன்” என்றே சொல்லலாம் .

அந்த வெள்ளிக்கிழமையும் வந்தது ,முதல் நாள் இரவு ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் முத்துவேலுடன் , சந்திரனும் இணைந்து அறுபதடி உயர கட்டவுட்டை தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தனர் . ரசிகர் மன்றத்துக்காக காலையில் ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

ரசிகர்கள் ஓவென்று கூச்சலுடன் ஆடிக்கொண்டிருந்தனர் . சந்திரன் , ராகவ்வின் உருவத்திற்கு பாலாபிஷேகம் செய்வதற்காக மேலே ஏறிக்கொண்டிருந்தான் .

அவன் பாலை கட்டவுட்டின் மீது ஊற்றியவுடன் ,கீழே நின்று கொண்டிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர் .

அவன் சாரத்தில் சவுக்கு கம்பினை ஒரு கையால் பிடித்தபடி ,மற்றொரு கையால் சூடம் ஏற்றி காண்பித்தான் . அப்போது காற்று பலமாக வீசியதால் நெருப்பு சந்திரனின் முகத்துக்கு நேரே வீசியபோது , அவன் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்தான். அதிர்ச்சி அடைந்த மொத்த கூட்டமும் அவனை நோக்கி ஓடியது .

தலையில் அடிபட்டு ,ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்திரனை, மாவட்ட தலைவர் முத்துவேல் , உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார் . செய்தி அறிந்ததும் அவன் மனைவியும் , அப்பா மாணிக்கமும் பதட்டத்துடன் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர் .

சந்திரன் விபத்துக்குள்ளான செய்தி எல்லா செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பாகியது . அதை பார்த்த நடிகர் ராகவ் , “தனது ரசிகருக்கு ஏற்பட்ட விபத்துக்கு தான் மிகவும் வருந்துவதாகவும் , அவரின் மருத்துவ செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தார் .

சந்திரனுக்கு பின் தலையில் ஒரு பெரிய காயம் ,காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டிருந்தது. டாக்டர்கள் தொடர்ந்து ஒரு மாதம் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறிவிட்டார்கள். சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு சந்திரன் பூரணமாக குணம் அடைந்தவுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனான்.

பதினைந்து நாட்களுக்கு பிறகு அவனது வீட்டிற்கு வந்த மாவட்ட தலைவர் முத்துவேல், நாம் இருவரும் சென்னை சென்று தலைவர் ராகவ்-ஐ பார்த்துவிட்டு வரலாம், நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார்.

இதைக் கேட்டவுடன் சந்திரனுக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது. தன்னுடைய உயிருக்கு உயிரான நடிகர் ராகவ்வினை நேரில் பார்க்க போகிறோம் என்பதால் அவனும் உடனே சம்மதம் தெரிவித்தான்.

ஆனால் ,அவனது மனைவியும், தந்தையும் “இன்னுமும் உடல்நலம் பூரணமாக குணம் அடையவில்லை, தற்போது பயணங்கள் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்கள் .

இருந்த போதிலும் அவன், ”நான் காரில் போய்விட்டு வந்து விடுகிறேன் என கூறி முத்துவேலுடன் சென்னைக்கு வந்தான்.

ஓட்டலில் ரூம் எடுத்து தங்கிய அவர்கள் ,மறுநாள் காலையில் ஏழு மணி அளவில் ராகவ்வின் பங்களாவிற்கு சென்றனர், தாங்கள் வருவது குறித்து ராகவின் மேனேஜரிடம் ஏற்கனவே முத்துவேல் தகவல் தெரிவித்திருந்தார். ஆனால், பங்களாவில் செக்யூரிட்டி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

முத்துவேல் ராகவ்வின் மேனேஜர்-க்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்கவே இல்லை . முத்துவேலுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது .

இருந்தபோதிலும் , “ராகவ் “ வெளியே வரும்போது பார்த்து பேசிவிடலாம் என்ற எண்ணத்தில் கேட் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர்.

ஒன்பது மணி அளவில், ராகவின் கார் வெளியே வந்தது, குழுமியிருந்த ரசிகர்கள் கைதட்டி கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.

முத்துவேல், காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ராகவ்வின் மானேஜரை பார்த்து சைகை செய்தார். அதை கவனித்த அவர் ராகவ்விடம் ஏதோ கூறினார் .

முன்னே சென்ற ராகவின் கார் நிறுத்தப்பட்டு, ஜன்னல் கண்ணாடிகள் இறக்கப்பட்டு ராகவ் , சந்திரனையும், முத்துவேலையும் பார்த்து அருகே வருமாறு கை அசைத்தார்.

அவர்கள் இருவரும் அவசரமாக காரின் அருகே சென்று வணக்கம் தெரிவித்தனர். பின்னர் சந்திரனைப் பார்த்து ராகவ், “இப்போது எப்படி இருக்கிறீர்கள்? உடல்நலம் முழுமையாக குணம் ஆகிவிட்டதா ?என சிரித்தபடியே கேட்டார் .

சந்திரனும் ஆமா தலைவரே, இப்போது நான் குணமாகி விட்டேன் என்றான் சந்தோஷமாக.

உடனே முத்துவேல், ராகவ்விடம் “தலைவரே, இவருக்கு மருத்துவ செலவை நீங்க ஏத்துக்கறதா சொன்னீங்க , அதான் உங்கள பாத்துட்டு போகலாமுன்னு வந்தோம். அவரு ரொம்ப கஷ்டப்படுறாறு , நீங்கதான் ஏதாவது உதவி செய்யனும்” என கூறினார்,

உடனே, ராகவின் முகம் மாறியது, “என்னது பண உதவி செய்யணுமா , நான் எப்ப சொன்னேன்? என கோபமாக முத்துவேலை பார்த்து கேட்டார்.

அவர் உடனே, இல்லை தலைவரே , இவர் அடிபட்டு விழுந்த போது நீங்கள் மீடியாக்களிடம் இவருக்கு உதவி செய்வதாக கூறி இருந்தீர்களே” என ஞாபகப்படுத்தினார் ,

உடனே ராகவ் கோபமாக, ”அட போங்கய்யா, உங்களுக்கு வேற வேலை இல்லையா? டிவில சொன்னதெல்லாம் கேட்டுட்டு புறப்பட்டு வந்து இருக்கீங்களே? நீங்க கவனமா இல்லாமல் கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்வதற்கெல்லாம் நான் காசு கொடுக்க முடியுமா, உங்கள நானா எனக்கு பேனர் கட்ட சொன்னேன்? நீங்க வேலை வெட்டி இல்லாம உங்க பொழுதுபோக்குக்கு ஏதோ ஆர்வத்துல செய்யறீங்கன்னு நானும் அதை தடை செய்யல. அதுக்காக நீங்க செய்யற தப்புக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியுமா, ஒரு பைசா நான் தரமாட்டேன், ஊரப்பாக்கபோய் சேருங்க“ என கோபத்துடன் கூறி விட்டு காரை எடுக்க சொன்னார்.

ராகவ் இவ்வாறு பேசியதும், சந்திரன் அவரைப் பற்றி உருவகப்படுத்தி வைத்திருந்த நல்லவர் என்ற பிம்பம் எல்லாம் நொறுங்கிப் போனது,

தன் குடும்பத்தை கூட சரி வர கவனிக்காமல், தன்னுடைய சம்பாத்தியத்தை எல்லாம் அவருடைய படவெளியீட்டின் போதெல்லாம் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும், அதைப்பற்றி எல்லாம் மனதில் கொள்ளாமல் ஒரே வரியில் நீங்கள் வெட்டியாக செய்வதற்கு எல்லாம் நானா பொறுப்பு, என்று கேட்டுவிட்டுச் செல்கிறாரே என்று மனதளவில் நொறுங்கிப் போனான்.

இப்படிப்பட்ட ஒரு நடிகருக்காக உயிரைக் கொடுத்து உழைத்தது அத்தனையும் வீண் என்பதை உணர்ந்து கொண்டான்.

ராகவ்வின் அலட்சியமான பேச்சும், செயலும் அவரது ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் முத்துவேலுக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அவருக்கும் இன்றுதான் ராகவ் என்ற பிரபல நடிகரின் “மற்றொரு முகம்” தெரிந்தது.

சந்திரனுக்கு ஏதாவது ஒரு பணஉதவி வாங்கி தரலாம் என்று நினைத்து அழைத்து வந்தோம், இப்படி நடந்து விட்டதே என்று அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

கண்கலங்கியபடி நின்றுகொண்டிருந்த சந்திரனை முதுகில் தட்டிகொடுத்து சரி வா, நாம போகலாம், நமக்கு இது ஒரு படிப்பினை என்று சொல்லிக் கொண்டே இருவரும் ஹோட்டல் அறைக்கு திரும்பினார்கள்.

மறுநாள் ஊருக்கு வந்து சேர்ந்த சந்திரன் மனைவியிடமும், தனது தந்தையிடமும் நடந்தவைகளைக் கூறி வருத்தப்பட்டான், பிறகு தான் தற்போது தவறை உணர்ந்து திருந்தி விட்டதாகவும், இனி எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு நடிகருக்கும் என் உழைப்பையும் பணத்தையும் செலவு செய்யப் போவதில்லை, தொழிலையும்  குடும்பத்தையும் இனி கவனிக்க போகிறேன்“ என்று கூறினான்.

அதைக்கேட்ட அவனது மனைவியும், மிகவும் சந்தோஷம் அடைந்தாள்.

முத்துவேலும் தனது ரசிகர் மன்ற பதவிகளையும் இராஜினாமா செய்துவிட்டு அவரது தலைமையில் இயங்கி வந்த “ராகவ் “ரசிகர் மன்றம் அனைத்தையும் கலைத்து விட்டார்.

எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நேர்மை (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்

    நீங்க செய்றது சரியா? (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி