in ,

மதி வதனா (பகுதி 5) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4

“குழந்தைகளே, இந்த சர்வகலா சாலையில் அனைத்து விதமான கலைகளும் கற்றுக்கொடுக்கப்படும். உங்களுக்கு விருப்பமான கலைகளில் முழுமையாக தேர்ச்சி பெறலாம். ஆனால் இங்கு தங்க வேண்டும். அதுதான் நிபந்தனை. உங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் இங்கு கிடைக்கும். நீங்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பீர்கள்.

மாதம் ஒருமுறை மூன்று நாட்கள் உங்கள் இல்லத்திற்கு சென்று வரலாம். இன்னும் ஒரு முக்கியமான செய்தி. நீங்கள் கற்பதற்கும், இங்கு தங்குவதற்கும் எந்த செலவும் கிடையாது. எல்லா செலவையும் நம் பேரரசர் பல்லவ மகாராஜா ஏற்றுள்ளார். பெற்றோரிடம் பேசி அனுமதி பெற்று வாருங்கள். சந்தோஷமாக இங்கு கலைகளை கற்றுக் கொள்ளுங்கள். ஒருவரே மூன்று கலைகள் வரை ஒரே நேரத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என்று ராணி சௌபர்ணிகா சொல்வதைக் கேட்ட வதனாவிற்கு சந்தோஷம் நிலைகொள்ளவில்லை.

உடனே,” ராணி, எனக்கு நடனக் கலையும், ஓவியமும் கற்க வேண்டும்.  தந்தையிடம் அனுமதி பெற்று இப்பொழுது சேர்ந்து விடுகிறேன்” என்று ஓட எத்தனித்தவளை பிடித்து நிறுத்தினாள் லலிதா.

“இரு இரு….நாங்களும் எங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்று வந்து பிறகு எல்லோரும் ஒன்றாய் சேரலாம்.”என்றாள். 

“ஆமாம், அது தான் சரி…என்று மற்ற தோழிகளும் சொல்ல அமைதியானாள் வதனச்சந்திரிகா. 

ஒரு வாரம் கழித்து லலிதாங்கியும், வதனச்சந்திரிகாவும் நடனம் மற்றும் பாடல் கற்றுக்கொள்ள சேர்ந்தனர்.

நூபுரா வீணை கற்றுக்கொள்ள சேர்ந்தாள். விச்ராந்தி மற்றும் விஜயமாலா வின் பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை.

லலிதாங்கியும், வதனச்சந்திரிகாவும் மிகவும் மகிழ்ச்சியாகவும், அதீத ஈடுபாட்டுடனும் கலைகளை கற்றுக்கொண்டனர். அந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. தினமும் மாலையில் நான்கு தோழிகளும் அந்த கலைக்கூட மாளிகையைக் சுற்றியுள்ள பரந்த வெளியில் சுற்றித் திரிந்தனர்.  

இப்படியே ஒரு வருட காலம் ஆயிற்று….

ஒரு நாள்  வதனா, லலிதாங்கியிடம், “நாளை ஏதோ அரண்மனையில் நாட்டிய நிகழ்ச்சியாம், ஆசிரியர்கள் எல்லோரும் செல்கிறார்கள். நமக்கு விடுமுறை. இங்கிருந்து இரு காத தூரத்தில் ஒரு அருவி இருக்கிறதாம். போய் பார்க்கலாமா?”என்று மிகுந்த ஆர்வத்துடன் கேட்டாள்.

அதற்கு லலிதாங்கி, “வேண்டாம். அது இன்னொரு நாள் செல்லலாம். நாளை நாமும் அரண்மனைக்குச் செல்லலாம். என்ன சொல்கிறாய்? “என்று கேட்டாள்.

“ம்ஹூம்…நான் வரவில்லை.”என்றாள் சிறிது கோபத்துடன் வதனா.

“சரி..சரி…அருவிக்கு செல்லலாம். கோபம் கொள்ளாதே குழந்தாய்” என்று வதனாவின் கன்னத்தைக் கிள்ளி   சிரித்தாள் லலிதாங்கி.

“நான் ஒன்றும் குழந்தையில்லை.”என்று சிரித்துவிட்டு அவளை செல்லமாகஅடிக்க கை ஓங்கினாள் வதனா. அவளிடம் அகப்படாமல் லலிதாங்கி வேகமாக இவர்கள் தங்கியிருந்த மாடி அறையிலிருந்து கீழே இறங்கி ஓடினாள். பின்னாடியே ஓடியவதனச் சந்திரிகா அவளை  காணாது குழம்பினாள். அந்த இடத்தில் மூன்று பாதை பிரிந்தது. ஒவ்வொரு பாதையிலும் பல அறைகள் இருந்தன.

“லலிதா…லலிதா….வந்து விடு….என்னால் தேட முடியவில்லை”.என்று படபடக்கும் நெஞ்சத்துடன் அழைத்தாள். பதில் வராமல் போகவே சிறிது பயம் கொண்டாள் வதனச் சந்திரிகா.

முதலில் வலது பக்கம் பார்க்கலாம் என்று முடிவெடுத்து திரும்பினாள்.

வலது பக்கம் இருந்த பல அறைகள் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு அறை வாசலிலும் நின்று லலிதா….லலிதா…என்று குரல் கொடுத்தாள்.

இரண்டு அறைத் தள்ளியிருந்த அறையிலிருந்து ஒரு வாலிபன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

வந்தவன் வந்தனாவை விழிகளில் கண்டு அதிசயத்து, யார் வேண்டும்? தங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்யவா? என்று கேட்டவாறே அவளை தலை முதல் கால் வரை சிவந்த விழிகளில் அளந்தான். 

அவனின் பார்வையால் ஏற்பட்ட அச்சமும் கோபமும் கலந்த குரலில் “எனக்கு…. யா….ரும் வேண்டாம்,…. என் தோழியை தேடி இங்கு வந்தேன்” என்று கூறிவிட்டு சடாரென திரும்பி னாள்.  

“பயப்படாதீர்கள் நான் ஒன்றும் செய்து விடமாட்டேன் நான் என் தங்கையை காண வந்தேன் நான் சென்று விடுகிறேன் நீங்கள் தேடி கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு அவன் இடது பக்கம் திரும்பி வாசலை நோக்கி சென்று விட்டான்.

வதனாச்சந்திரிகாவிற்கு புலியிடமிருந்து தப்பித்த மானின் மனநிலை ஏற்பட்டது அந்த நிமிடம். 

“என்ன….எனைக் காணாமல் பயந்துவிட்டாயா? என்றபடியே  சிரித்துக் கொண்டே பின்புறமாக ஓடி வந்தாள் லலித்தாங்கி.

 “ஆமாம் நிஜமாகவே பயந்துவிட்டேன். இனி இப்படி ஒருபோதும் செய்யாதே” என்று அவளை கடிந்து கொண்ட வதனா, “லலிதா…. இங்கு ஆடவர் யாருமே வர மாட்டார்கள் என்று சொன்னார்களே இப்பொழுது ஒரு ஆடவன் வந்து விட்டுப் போனான் தெரியுமா? என்றாள் பயந்த குரலில். 

“அப்படியா..? நான் இருக்கும் போது யார் இந்த செயலை செய்வது? எப்படி விதியை மீறலாம் ? வரட்டும், ராணியாரிடம் சொல்லி இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்றாள் லலிதா கோபமான முகத்துடன்.

“அவன் தன் தங்கையை காணவந்ததாக சொன்னான் என்னிடம் “என்றாள் வதனா.

“இல்லை… இல்லை…. எந்த ஆடவரும் எக்காரணம் கொண்டும் இந்த மாளிகைக்குள் வரக்கூடாது. அதுதான் விதி. நம்மை காக்கும் வீரர்கள்,  காவலாளிகள் கூட உள்ளே வர அனுமதி கிடையாது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே உள்ளே வரலாம் அவர்கள். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இரு, நாம் அதை கண்டுபிடிக்கலாம்.”என்ற லலிதா, “அவன் எங்கு சென்றான்..? வா… போய் பார்க்கலாம் .”என்று அவசரப்படுத்தினாள்.

“வேண்டாம் விடு..வா.. நாம் அறைக்கு செல்வோம்” என்று வதனா அவளை இழுத்தாள். 

“இல்லை, இல்லை, இந்த விஷயத்தை நான் தெளிவுபடுத்திக் கொண்டு தான் வருவேன். நீ வேண்டுமானால் செல். அவன் எந்தப் பக்கம் சென்றான் என்று மட்டும் சொல்” என்று சுற்றும் முற்றும் பார்த்தபடியே கேட்டாள் லலிதாங்கி. 

“இடது பக்கமாக வாயிலை நோக்கி சென்றான்.” என்று கை காட்டினாள் வதனச் சந்திரிகா.

வாயிலில் காவலாளியுடன் பேசிக் கொண்டிருந்தான் அந்த வாலிபன். அதைப் பார்த்துவிட்டு லலிதா வேகமாக காவலாளியை நோக்கி விரைந்தாள். வதனா அங்கேயே நின்று விட்டாள்.

“ஐயா காவலாளியே, ஆடவர் இனி இந்த மாளிகைக்குள் வரலாம் என்று புதிதாக நியமனம்  வந்து விட்டதா என்ன? “என்று லலிதா கோபமாகக்  கேட்டாள்.

காவலாளி பதில் சொல்வதற்குள் முந்தி கொண்ட அந்த வாலிபன் “தாங்கள் தான் இந்த மாளிகைக்கு வந்திருக்கும் புதிய நிர்வாகியா? தங்களிடம் தான் அனுமதி பெற வேண்டுமா? இந்த முறை என்னை மன்னித்து விடுங்கள் இனிமேல் தங்களிடம் அனுமதி பெற்று உள்ளே வருகிறேன்” என்றான் ஏளனத்துடன்.

“ஏன்? நிர்வாகிக்கு மட்டும் தான் கேள்வி கேட்கும் உரிமை உள்ளதா?” என்று கோபமாக கேட்டாள் லலிதாங்கி.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு நடிகையின் டைரி (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 8) – ரேவதி பாலாஜி