in ,

மதி வதனா (பகுதி 4) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3

“அருமன்… என்ன ஆயிற்று? வாருங்கள், வேறு பக்கம் செல்லலாம். மதயானை வந்து விடப் போகிறது” என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது.

“இந்த குழந்தைகள் பாவம் கூட்டத்தில் விழுந்து விட்டனர். இவர்களை காப்பாற்ற தான் ஓடி வந்தேன்”  என்று பதில் சொல்லிக்கொண்டே தங்கள் முன் கைகளை நீட்டிய நபரை மனதில் திகிலுடன் இருந்த  வதனாவும் லலிதாவும் நிமிர்ந்து பார்த்தனர்.

நெற்றியிலும் கன்னத்திலும் நீண்ட வடுக்கள் உடைய முகத்தை பார்த்ததும் சிறிது பயந்து போயினர். அவர் நீட்டிய கைகளைப் பற்றிக்கொண்டு மெல்ல எழுந்தனர்.

ஒரு அழகான இளம் வாலிபனையும், அவனுக்கருகில் முகத்தில் வடுக்களுடைய வாட்டசாட்டமான நடுத்தர வயதில் போர்வீரர் போல் இருந்தவரையும் பார்த்து தங்களை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தனர் இருசிறுமிகளும்.

“மகேந்திரா, இவர்களை முதலில், நமது கூடாரத்திற்கு அழைத்துச் செல். பிறகு விசாரித்து இவர்கள் இருக்கும் இடத்தில் சேர்த்து விடு. 

நான் உன்னை பிறகு இரவு அரண்மனையில் சந்திக்கிறேன்.” என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் வேகமாக கூட்டத்திற்குள் நுழைந்து சென்று விட்டார் அருமன்.

“விரைவாக வாருங்கள் என் பின்னால்”. என்று சிறிது வெறுப்பும் அதிகாரமும் கலந்த குரலில் கூறியபடி  சிறிது வேகமாக நடந்தான் மகேந்திரன்.

வதனாவும் லலிதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சிறிது பயத்துடன் அவன் பின்னால் சென்றனர். 

அரை நாழிகை நடந்ததும் வந்த ஒரு பெரிய கூடாரத்தின் வாயிலில் நின்று கொண்டு “மாயவண்ணா”…என்று அழைத்தான் மகேந்திரன்.

கூடாரத்தின் வாயிலை மூடியிருந்த திரைச்சீலையை திறந்து கொண்டு மாயவண்ணன் எனும் வாலிபன் வெளிவந்தான். 

மகேந்திரன் எனும் வாலிபன் லலிதாவையும் வதனாவையும் பார்த்து  “நீங்கள் சிறிது நேரம் கூடாரத்தின் உள்ளே இருங்கள்” என்று கூறிவிட்டு மாயவண்ணனிடம் திரும்பிஃ இவர்களை சந்தித்த விபரத்தை கூறலானான்.

கூடாரத்தின் உள்ளே நுழைந்த வதனாவும் லலிதாவும், அங்கே மிகப்பெரிய பட்டு மெத்தைக் கட்டிலும், நான்கு பேர்

அமர்வதற்கான ஆசனங்களும் 

உணவு உண்பதற்கான வசதிகளும் இருப்பதை பார்த்து அது ஒரு அரசர்கள் தங்கக்கூடிய கூடாரமாக இருக்கக்கூடும் என்ன முடிவு செய்தனர். வதனா அங்கிருந்த பெரிய தாமிரபானையில் ஊற்றி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை எடுத்து அருந்தினாள்.

“லலிதா ,நீயும் சிறிது நீர் அருந்து” என்று கொடுத்தாள்.

தண்ணீர் அருந்தியதும் இருவருக்கும் சிறிது பயம் குறைந்து தைரியம் வந்தது.

லலிதா ஏதோ பேச வாய் எடுக்கும் பொழுது மாயவண்ணன் உள்ளே நுழைந்தான் “அமருங்கள்”.

என்று இருக்கையை காண்பித்தான். அவனும் அமர்ந்து கொண்டான். அவர்கள் தயங்குவதைக் கண்டு “இங்கு யானை வராது பயப்படாதீர்கள்… அமருங்கள்” இன்று நிதானமாக கூறிவிட்டு

அவர்கள் அமர்ந்ததும், ஒரு புன் சிரிப்புடன் “இப்பொழுது உங்களுடைய விவரத்தை சொல்லுங்கள். எங்கிருந்து வருகிறீர்கள்? என்று அன்பாக கேட்டான். 

அவனுடைய குரலில் இருந்த சிநேகத்தினால் இவர்களுக்கு இருந்த பயம் முழுவதும் மறைந்து ஒரு சந்தோஷம் தோன்றியது. தங்களைப் பற்றிய விபரங்களை எல்லாம் அவனிடம் கூறினர். 

“அப்படியா…?,சரி, உங்களை விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்வது என்னுடைய பொறுப்பு. கவலைப்படாமல் இருங்கள். இதோ வந்து விடுகிறேன்” என்று வெளியில் சென்றான்.

“நல்லவேளை….தப்பித்தோம். நாமும் அப்பொழுதே அவர்களோடு சென்றிருக்கலாம். ஆசைப்பட்டதால் அவதிப்படுகிறோம்” என்றாள் வதனா. 

“நாம் அவதிப்படவில்லையே இவர்கள்தான் காப்பாற்றி விட்டார்களே” என்றாள் லலிதா. 

“என் தந்தையை காணும் வரை எனக்கு அவதி தான்” சொல்லும்போதே வதனாவின் கண்களில் பயம் தெரிந்தது. 

“பயப்படாதே மாயவண்ணன் மிக நல்லவனாக தெரிகிறான்” என்றாள் லலிதா.

“ஆமாம் நான் மிக நல்லவன்தான். நீ சரியாக கணித்துவிட்டாயே” என்றபடியே சிரித்துக் கொண்டு உள்ளே  நுழைந்தான் மாயவண்ணன்.

 “வண்டி கொண்டு வந்திருக்கிறேன்,.. வாருங்கள் போகலாம்”என்றான்.

” மிகவும் நன்றி “என்று லலிதாவும் வதனாவும் கையெடுத்து கும்பிட்டனர்.

“சரி, உங்கள் நன்றியை வாங்கிக் கொள்கிறேன்” என்று  இரு கைகளையையும் நீட்டி வாங்கிக் கொள்வது போல் பாவனை செய்தான். இருவரும் சிரித்து விட்டனர்.

 மாளிகையின் வாசலில் கோவிந்த பட்டர் நின்றபடி பதட்டத்துடன் வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். வண்டியிலிருந்து இவர்கள் இறங்குவதை கண்டதும் ஓடி வந்து “குழந்தைகளே உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே?” என்று கட்டிக் கொண்டார்.

வதனாவும், லலிதாவும் மாறி மாறி அங்கு நடந்த விபரத்தை பட்டரிடம் கூறினார்கள்.

பட்டர், மாய வண்ணனை பார்த்து “மிகவும் நன்றி தம்பி. நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். தங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா ?” என்று கேட்டார்.

“நான் ஒரு சாதாரண போர்வீரன் ஐயா,.. என் பெயர் மாயவண்ணன்”என்றவன், “தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று பட்டரிடம் கேட்டான்.

“நாங்கள் ஆண்டாள் புரத்திலிருந்து வருகிறோம்” என்று பட்டர் சொன்னதும், 

“ஓஹோ தாங்கள் தான் முரளிதரன் சுவாமி கோயில் பட்டரா?” என்று கேட்டான் மாயவண்ணன். 

“ஆமாம் என்னைப் பற்றி தெரியுமா?”என்று ஆச்சரியப்பட்டார் பட்டர்.

“இல்லை,  நீங்கள் இன்று இங்கு வரப்போகிற செய்தி மட்டும் எனக்கு தெரியும். சரி நான் கிளம்புகிறேன் அய்யா பத்திரமாக இருங்கள்”.என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்து  குதிரையை ஓட விட்டான்.

லலிதாங்கி, மாயவண்ணன் பேசுவதையும் வண்டி ஓட்டிக்கொண்டு போவதையும் கண் இமைக்காமல்  பார்த்துக் கொண்டிருக்க, வதனா அவளது கையைப் பிடித்து இழுத்ததும் தான் சுய நினைவுக்கு வந்தாள்.

மறுநாள் காலை….

காலை ஆகாரத்திற்குப் பிறகு, அரண்மனைக்கு அழைத்துப் போக வண்டி வரும் என்ற செய்தி இரவே வந்ததால் எல்லோரும் தயாராகி இருந்தனர்.

வண்டியில் ஏறி இரண்டு நாழிகைகள் பயணப்பட்டதும் தூரத்தே தெரிந்த மிகப்பெரிய கோட்டையையும், கோட்டைக்கு நடுவே உயரமாக வீற்றிருந்த தங்க கோபுரங்களுடைய பெரிய அரண்மனையையும் கண்டு எல்லோரும் உற்சாகத்துடன் “அங்கே பார்…அரண்மனை….!அரண்மனை….!!எவ்வளவு பெரியதாக இருக்கிறது….!! எவ்வளவு பெரிய கோட்டை….!! கோட்டை வாயிலை பார் எவ்வளவு உயரமாக இருக்கிறது….!!! என்று ஆர்பரித்து அதிசயப்பட்டனர்.

கோட்டை வாயிலருகே வண்டி நிறுத்தப்பட்டது.” இனிமேல் கோட்டைக்குள்ளே நீங்கள் நடந்து தான் செல்ல வேண்டும்”

என்று வண்டி ஓட்டுபவர் சொன்னதும் எல்லோரும் சந்தோஷத்துடன் குதித்து இறங்கினர். பட்டர் இறங்கியதும் வண்டி திரும்பி சென்றுவிட்டது. 

“யாரும் சத்தம் செய்யாமல் அமைதியாக வாருங்கள்”. என்ற பட்டரை தொடர்ந்த ஐவரும் சத்தமில்லாமல் சுற்றி முற்றி பார்த்தபடி நடந்து சென்றனர். எதிரே வந்த இரு பணிப்பெண்கள் “எங்களுடன் வாருங்கள்” என்று அழைத்துச் சென்றனர். 

சிறிது தூரம் சென்றதும்   நாட்டியமாடும் பெண்களும், பூங்கொடிகளும், தாமரை மொட்டுக்களும், மேளம் கொட்டும் ஆடவரும் கண்ணைக் கவரும் ஆறடி உயரச் சிற்பங்களாக வாயிற்படிகளின் இருபுறமும் உள்ள சுவற்றில் கலைநயத்துடன் தத்ரூபமாக செதுக்கப்பட்ட பெரிய மாளிகை இருந்ததைக் கண்டனர்.

படிகளில் ஏறி உள்ளே நீண்ட தாழ்வாரத்தில் செல்லச் செல்ல சலங்கையின் ஒலிகளும், பாடலும், மேளச் சத்தமும் ஆங்காங்கே ஒலித்தன. அந்த ஒலிகளும், காற்றில் வீசிய தாழம்பூ மணமும், சந்தனம்,ஜவ்வாது மணமும் அவர்களை இந்திர லோகத்திற்கே அழைத்துச் சென்றது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அன்பென்ற மழையிலே (பேரிளம் பெண்) (சிறுகதை) – வைஷ்ணவி

    காதல் ஜோடிகள் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு