2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
சென்னை கமிஷனர் அலுவலகம் காலை நேரத்திலேயே மிகுந்த பரபரப்போடு இருந்தது. வெவ்வேறு இடங்களிலிருந்து தொடர்ந்து வந்த ஃபோன் அழைப்புகளால் டென்ஷனின் உச்சத்தில் இருந்தார் கமிஷனர். உடனடியாக கமிஷனரை வந்து பார்க்கச் சொல்லி ஐஜி கபிலனுக்குத் தகவல் போனது.
அதனால் வேக நடை போட்டு போய்க் கொண்டிருந்த கபிலனுக்கு இந்த டிசம்பர் மாதக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது. நெடுநெடுவென்ற உயரமும், கூர்மையான பார்வையும் ஐஜி கபிலனின் போலீஸ் மிடுக்கை அதிகப்படுத்திக் காட்டியது. காலையிலேயே கமிஷனர் வரச் சொன்ன காரணம் கபிலனுக்குத் தெரியுமாதலால், அந்தப் பரபரப்பு அவருக்கும் தொற்றிக் கொண்டிருந்தது.
கதவைத் தட்டிவிட்டு, கமிஷனர் அறைக்குள் நுழைந்து சல்யூட் வைத்து பதட்டத்துடன் நின்றார் கபிலன்.
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க கபிலன்? இன்னிக்குக் காலைல எக்மோர்ல நம்ம டிபார்ட்மெண்ட் ஆளுகளப் ப்ரொட்டக்ஷனுக்குப் போட்டிருந்தீங்களா இல்லையா? நேரங்காலம் தெரியாம என்னை சிக்கல்ல மாட்ட வைக்கறதே உங்க எல்லாருக்கும் வேலையாப் போச்சு.”
“இல்ல சார், நம்ம டிபார்ட்மெண்ட் அங்கே எல்லா பந்தோபஸ்தும் பண்ணித்தான் வச்சிருந்தோம். இது ஒரு விபத்து. யாரும் எதிர்பார்க்கல.”
“என்ன விபத்து? கட்சி மேலிடத்தில இருந்து இதோட எக்கச்சக்க ஃபோன் வந்துருச்சு. ஆளுங்கட்சி எம்எல்ஏவா இருந்தா இப்படி அஜாக்கிரதையா இருப்பீங்களான்னு கிழிச்சு எடுக்கறாங்க. இன்னும் ஒரு வாரத்துல மகாபலிபுரத்துல மாநாடு வேற இருக்கு. இப்போன்னு பார்த்து ட்ரெயின்ல வந்து இறங்கின ஒரு எம்எல்ஏவுக்கே பாதுகாப்பில்லை அப்படிங்கறதால, வரவேண்டிய மத்திய மந்திரிகள் எல்லாம் மாநாட்டுக்கு வரணுமான்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். சிஎம் வேற கூப்பிட்டு திட்டறார். எல்லாத்துக்கும் என்ன பதில் சொல்லப் போறீங்க கபிலன்?”
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலையைக் குனிந்து நின்றிருந்தார் கபிலன்.
“என்ன கபிலன், பதிலே காணோம்?”
“இல்ல சார், ஏதாவது திட்டமிட்ட சதியா இருந்தா, ஆளைத் தேடிப் பிடிச்சு மடக்கலாம். ஆனா ரயில்வே ஸ்டேஷன்ல படுத்துத் தூங்கிட்டு இருக்கற நாய் திடீர்னு வந்து இப்படியாகும்னு யாரும் எதிர்பார்க்கல சார். எல்லாமே கண் இமைக்கற நேரத்துல நடந்துருச்சு சார்.”
“ம்ம்ம், எனக்குப் புரியுது கபிலன். ஆனா கட்சிக்காரங்களுக்கு எங்கே புரியுது? ஃபோன் மேல ஃபோனைப் போட்டு வறுத்தெடுக்கறாங்க. அவங்ககிட்ட இந்த மாதிரி பதிலைச் சொன்னா காதுல போட்டுக்காம கேள்விகள் மட்டும்தான் கேக்கறாங்க. எதிர்க்கட்சில யாராவது வேணும்னே செஞ்சிருப்பாங்க, சீக்கிரம் கண்டுபிடிச்சு அவங்கமேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி அமிர்தவளவன் இருக்கற கட்சி மேலிடத்துல இருந்து எக்கச்சக்க அழுத்தம் கெடுக்கறாங்க. சரி, அதை விடுங்க. அந்த அமிர்தவளவன் உங்களுக்கு ஏதோ உறவுக்காரர்தானே?”
“ஆமா சார், என் வைஃப்புக்கு சொந்தம்.”
“ம்ம்ம், சரி. இப்போ நீங்க வீட்டுக்குப் போயிட்டு அப்புறம் ஸ்டேஷனுக்குப் போங்க. எக்மோர் ஸ்டேஷன் சிசிடிவி ஃபுட்டேஜ்ஜை எதுக்கும் ஒரு முறை செக் பண்ணுங்க. அந்த கருப்பு நாய் ஸ்டேஷன்ல இருக்கறதுதானா, இல்ல அதை ஏவி விட்டவங்க யாராவது இருக்காங்களான்னு பாருங்க.”
“சரி சார்.”
கபிலனுக்கு ஒரு விதத்தில் கொஞ்சம் படபடப்பு குறைந்தாலும், அமிர்தவளவனின் இந்தத் திடீர் மரணம் தன் மனைவிக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கும் என்பதால், வீட்டுக்கு விரைந்தார்.
கபிலன் வீட்டுக்குள் நுழையும் போதே, அவர் மனைவி தேன்மொழி பதறினாள்.
“என்னங்க, வளவன் பெரியப்பாவுக்கு இந்த மாதிரி நடக்கற வரை நீங்க பார்த்துட்டு சும்மாவா இருந்தீங்க?”
“இல்ல தேனு, எதிர்பாராம என்னென்னவோ நடந்துருச்சு. எங்களால ஒண்ணும் செய்ய முடியல. சரி, உங்க அப்பாவுக்குத் தகவல் சொல்லிட்டியா? நீ எப்போ மதுரைக்குப் போகணும்? டிக்கெட் எதுவும் புக் பண்ணணும்னா சொல்லு. நீ போனா உங்க பெரியம்மாவுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.”
“ஆறுதல் சொல்றது இருக்கட்டும். பெரியப்பா பாடி கிடைக்கறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணியிருக்கீங்களா? பெரியப்பா முகத்தை கடைசியா ஒருமுறையாவது பார்க்க முடியுமா? பெரியம்மா இதெல்லாம் கேட்டா நான் என்ன பதில் சொல்லட்டும்?”
“என்ன தேன்மொழி, நடந்தது எவ்வளவு மோசமான விபத்துன்னு தெரிஞ்சும் நீயே இப்படிக் கேட்டா எப்படி? பெரியம்மாதான் வயசானவங்க, பதட்டத்துல இதெல்லாம் புரிஞ்சுக்க முடியாது. நீ கொஞ்சம் ஆறுதல் சொல்லிப் புரிய வை. ட்ரெயின் போற ரூட் ஃபுல்லா தகவல் போயிருக்கு. கண்டிப்பா இன்னிக்கு மதியத்துக்குள்ள பாடி எங்கே இருக்குன்னு தகவல் கிடைச்சுரும். பாடி என்ன கண்டிஷன்ல இருக்குன்னு பார்த்துட்டு, மத்த ஃபார்மாலிட்டீஸ் முடிச்சுட்டுதான் பாடியை மதுரை கொண்டு போக முடியும்.”
தேன்மொழியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே கைபேசி அழைக்கவே, அதை எடுத்து காதில் வைத்தார் கபிலன். மறுமுனையில் பதட்டத்துடன் வந்த தகவலால், கபிலனுக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
“சரி, எந்த ஏரியா?”
“…….”
“அப்படியா. நான் உடனே ஸ்பாட்டுக்கு வரேன்.”
பேசிக்கொண்டே, தேன்மொழியிடம் சைகையால் விடைபெற்றுக் ஏகொண்டு, ஸ்பாட்டுக்கு விரைந்தார் கபிலன்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டிடம். பலவித நிறுவனங்களின் தலைமை அலுவலகம் அந்தக் கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் மூன்றாவது தளத்தில் மென்பொருள் அலுவலகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த அம்பலவாணன் என்ற தொழிலதிபர் அந்தக் கட்டிடத்தின் கார் நிறுத்தும் இடத்திற்கு அருகே அலங்கோலமாகக் கிடந்தார்.
கபிலன் அங்கே போய்ச் சேரும் போது கூட்டம் அவரைச் சுற்றி நின்றிருந்தது. அனைவரையும் விலக்கிவிட்டு விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். சுமார் 55 வயது மதிக்கத்தக்க அம்பலவாணன் நசுங்கிக் கிடந்தார்.
அதற்குள் தலையில் விளக்கைச் சுழல விட்டுக்கொண்டே வந்த ஆம்புலன்ஸ், அவரை அப்படியே அள்ளிப் போட்டுக் கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. கபிலன் தனக்கு ஃபோனில் தகவல் சொன்ன கான்ஸ்டபிளிடம் சம்பவம் நடந்ததைப் பற்றி விவரம் கேட்டார்.
“சார், நான் இங்கே பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்லதான் இருக்கேன். செக்யூரிட்டிதான் உடனே ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணார். அதனால என்ன ஏதுன்னு பார்க்கறதுக்கு வந்தேன். அவர் சொன்ன தகவல் கொஞ்சம் நெருடலா இருந்ததாலத்தான் உங்களுக்குத் தகவல் சொல்லச் சொன்னார் எங்க இன்ஸ்பெக்டர்.
கபிலன் அந்த செக்யூரிட்டியை அழைத்து விசாரித்தார்.
“சார், அம்பலவாணன் சார் வழக்கமா இதே நேரத்துக்குத்தான் வருவாரு. அவர் வந்தபோது நான்தான் கேட்டைத் திறந்து விட்டேன். காரை அந்தக் கடைசில கொண்டு போய் நிறுத்துவார். நிறுத்திட்டு இப்படி சுத்தி வந்து, படியேறி உள்ளே லிஃப்ட் இருக்கு, அதுலதான் தேர்ட் ஃப்ளோர் போவாரு. காரை நிறுத்திட்டு அவர் இறங்கி வரும்போது பார்த்தேன். அதுக்குள்ள இந்த கழிவுநீர் லாரி வந்துச்சா, அதுக்கு கேட்டைத் திறந்து விடறதுக்காக நான் திரும்பின நேரத்துல என்ன நடந்ததுன்னு தெரியல. கேட்டைத் திறந்துட்டு நான் திரும்பிப் பார்க்கும்போது, அம்பலவாணன் சார் கண்ணுமண்ணு தெரியாம ஓடி வந்துட்டிருந்தாரு. பின்னாடி திரும்பிப் பார்த்துட்டே வந்தாரு, அதனால லாரி வந்ததை கவனிக்கல. சரிவுல இருந்து உள்ளே ஏறித் திரும்பினதால லாரி டிரைவர்னாலயும் ஒண்ணும் பண்ண முடியல. லாரி டிரைவரை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டார் இன்ஸ்பெக்டர்.”
“அவர் பின்னாடி யாராவது துரத்திட்டு வந்தாங்களா?”
“யாரும் இல்லை சார். எதுக்கு ஓடி வரார்ன்னு நான் பின்னாடி பாக்கறதுக்குள்ள இதெல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு. ஆனா நான் உடனே என்னோட ரூமுக்கு வந்து போலீசுக்கு ஃபோன் பண்ணப்போ, ஒரு கருப்பு நாய் உள்ளேயிருந்து வெளியே போச்சு சார். அது எப்படி உள்ளே வந்ததுன்னே தெரியல. நான் காலைல எட்டு மணியிலிருந்து இருக்கேன். காரோ, வண்டியோ வந்தாதான் கேட்டைத் திறக்கறேன். என்னை மீறி எதுவுமே உள்ளே போக முடியாது சார். அந்த நாய் எப்படி உள்ளே போச்சுன்னு குழப்பமா இருக்கு சார்.”
செக்யூரிட்டி இப்படிச் சொன்னதும் அதிர்ந்து போய் நின்றார் கபிலன்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings