in ,

முதலாளி… முதலாளிதான் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

     முந்தின இரவு பதினொன்றரை மணி வாக்கில் ஒசூரிலிருந்து கிளம்பி, அதிகாலையில் கோயமுத்தூர் வந்து சேர்ந்தான் குணா.

     “குணா… நீ இப்பவே கிளம்பிப் போகணும்ன்னு அவசியமில்லை!… காலைல நேரத்துல எந்திரிச்சுக் கிளம்பினால் கூடப் போதும்” என்று ஒசூரில் மண்டி ஓனர் சொன்ன போது, “இங்க பாருங்க முதலாளி… கோயமுத்தூர் டெலிவரி வேற யாருக்கா இருந்தாலும் நான் காத்தாலதான் எந்திரிச்சுப் போயிருப்பேன்!… ஆனா… டெலிவரி அந்த  செந்தில் மளிகை ஸ்டோர்ஸ்க்குன்னு நீங்க சொன்னதுக்கப்புறம் நான் எப்படிங்க முதலாளி இங்க இருப்பேன்?… அதான் உடனே கிளம்பிட்டேன்”

      “அப்ப என்னய்யா அந்த செந்தில் ஸ்டோர்ஸ் ஓனர் ராசய்யா ஒசத்தி?”

      “முதலாளி சொன்னாலும் சொல்லா விட்டாலும் அந்த ராசய்யா உண்மையிலேயே ஒசத்திதான் முதலாளி!…”

     அதைக் கேட்ட மணி ஓனர் முகம் கறுத்துப் போக, அதைக் கண்டுபிடித்து விட்ட குணா, “அய்யய்யோ… அதுக்காக நீங்க ஒசத்தி இல்லை!ன்னு அர்த்தமில்லை… நீங்களும் ஒசத்திதான்” என்றான் மழுப்பலாய்.

           கடை வீதியிலிருந்த அந்த “செந்தில் மளிகை ஸ்டோர்ஸ்” முன் தன் டெம்போவை நிறுத்தினான் குணா. “மொதலாளி இருப்பாரா?” சந்தேகத்துடனேயே உள்ளே சென்றான்.

     அவன் சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாய் செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முதலாளி ராசய்யாவே அவன் எதிரில் வந்தார்.

      “அடடே… குணா… வாப்பா… வாப்பா” அடுத்த நிமிடமே கடைப்பையனை அழைத்தார்.  “டேய் முருகா… போய் நம்ம காலேஜ் ரெஸ்டாரெண்ட்ல ரெண்டு ஸ்பெஷல் காஃபி வாங்கிட்டு வாடா” என்று கட்டளையிட்டு விட்டு குணா பக்கம் திரும்பி, “ஏன் குணா… ராத்திரியே கிளம்பிட்டியா?” கேட்டார்,

      “ஆமாங்கய்யா… ஒரு பதினொன்றரை… பன்னெண்டு மணி வாக்குல கிளம்பி வந்தேன்” என்றான் குணா.

      “அட என்னப்பா… காலைல வெள்ளென எந்திரிச்சு வர வேண்டியதுதானே?… அவ்வளவு ரிஸ்க் எடுத்து வண்டி ஓட்டிட்டு வரணுமாப்பா?… ஏதாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டுதுன்னா… என்னவறது?… பொண்டாட்டி புள்ளைங்களை நெனச்சுக்கப்பா மொதல்ல… அப்புறமா இந்த மொதலாளிகளை நெனச்சுக்கோ” தமாஷாகச் சொல்வது போல் சற்று சீரியஸாகவே சொன்னார் மளைகை ஸ்டோர்ஸ் முதலாளி ராசய்யா.

      பெரும் பணக்காரரான அந்த முதலாளியின் அன்பில் நெகிழ்ந்து போன குணா, “அதெப்படிங்க அய்யா?… இன்னிக்கு என்ன கெழமை?… செவ்வாய்க் கிழமை… சந்தை நாளு… சில்லறை வியாபாரிக எல்லாம் இன்னிக்குத்தான் சரக்கெடுக்க மொத்த வியாபாரியான உங்க ஸ்டோர்ஸ்க்கு வருவாங்க!… வர்ற வாடிக்கையாளர்களுக்கு நீங்க ” ஸ்டாக் இல்லை”ன்னு சொல்லிடக் கூடாதல்ல?” என்றான்.

     அப்போது கடைப்பையன் காஃபி எடுத்து வர, ராசய்யா தானே அதை எடுத்து குணாவிடம் தர, “அய்யய்ய… நீங்க எதுக்கய்யா எடுத்துத் தர்றீங்க?… நான் எடுத்துக்க மாட்டேனா?” கூச்சத்தில் நெளிந்தபடி அவர் கொடுத்த காஃபியை வாங்கிப் பருகினான்.

     காஃபி பருகி முடித்ததும், கடைப்பையன் வந்து காலி டம்ளர்களை வாங்கிக் கொண்டு செல்ல, “அப்புரம் குணா… வீட்ல சம்சாரம் குழந்தை எல்லாம் சௌக்கியம்தானே?” தணிவான குரலில் ராசய்யா கேட்க,

      “உங்க மாதிரி நல்லவங்க ஆசில… எந்தக் குறையுமில்லாம எல்லாரும் சௌக்கியம்ங்க அய்யா”

      “சரி… போ… குடோனுக்குப் பின்னாடி ஆளுங்க தங்கற செட் இருக்கு அங்க போய்க் குளிச்சிட்டு… ரெடியாயிட்டு வா… அதுக்குள்ளார நான் பைஅயனி அனுப்பி டிபன் வாங்கி தயாரா வெச்சிருக்கேன்” என்றார் ராசய்யா.

     புன்னகைத்தபடியே நடந்த குணாவை கடைப்பையன் எரிச்சலோடு பார்த்தான்.  “இந்த மொதலாளி… என்கிட்டேயும் சரி… குடோன்ல… கடைல வேலை பார்க்கற மத்த ஆளுங்க கிட்டேயும் சரி… என்னவோ புலி மாதிரியும்… சிங்கம் மாதிரியும்தான் சீறுவாரு… அப்பப்பா… கத்த ஆரம்பிச்சருன்னா… இந்த பின்னாடி இருக்கற குடோனே இடிஞ்சு விழற மாதிரிக் கத்துவாரு… ஆனா இந்த டெம்போக்காரன் கிட்டே மட்டும் என்னாமா அன்பா… சிநேகிதமாப் பேசறாரு… பழகறாரு… ஏன்?”

     “ஒருவேளை அவன் மொதலாளிக்கு தூரத்துச் சொந்தமாய் இருப்பானோ?… ம்ஹும்… அவன் சாதியே வேற… அப்படியிருக்கும் போது எப்படி மொதலாளி அவனை நல்லவிதமா நடத்தறாரு?”  குழம்பித் தவித்தான் கடைப்பையன்.

     முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு, குளித்து ரெடியாகி வந்த குணாவிடம், “குணா… நான் உன் டெம்போல வந்த சரக்குகளை இறக்க ஏற்பாடு பண்றேன்… நீ டிபன் சாப்பிட்டுட்டு அப்படியே கொஞ்சம் ரெஸ்ட் எடு…” சொல்லி விட்டு எழுந்தவர், “சாப்பிட லேட் பண்ணிடாதே… டிபன் ஆறிப் போயிடும்” சொல்லியவாறே வெளியேறினார் ராசய்யா,

     உள்ளுக்குள் “சுரு…சுரு”வென்று எரிந்தது கடைப் பையனுக்கு.  “இந்த டெம்போக்காரனுக்கும்… மொதலாளிக்கும் மத்தியிலே ஏதோ ரகசியம் இருக்கு!…”

     சாப்பிட்டு முடித்த குணா, கடைப்பையனைப் பார்த்து, “தம்பி… நீ சாப்பிட்டியா?” கேட்டான்.

     அவன் முகத்தை அசுவாரஸியமாய் வைத்துக் கொண்டு, “நாங்க சாப்பிட்டோமா?… சாப்பிடலையா?ன்னெல்லாம் யார் கவலைப்படப் போறாங்க?… யார் கேட்கப் போறாங்க?… நாங்களா… நேரம் கிடைக்கும் போது… கெடைச்சதை அள்ளி உள்ளே கொட்டிக்கணும்… அவ்வளவுதான்” என்றான்.

     “ஹும்… எங்கிருந்தோ வர்ற டெம்போக்காரனான என் மேலேயே இத்தனை அக்கறை இந்த முதலாளி… தன் கிட்டே வேலை பார்க்கற பையன் மேலே அக்கறை காட்டாமலா இருப்பார்?… இவன் ஏதோ வேற வெசனத்துல உளர்றான்” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான் குணா.

     வழக்கமாய் காலை பதினோரு மணிக்கெல்லாம் குணாவின் டெம்போ சரக்குகளை எல்லாம் இறக்கி முடித்து அவனைத் திருப்பியனுப்பும் முதலாளி இன்று மணி பனிரெண்டுக்கும் மேலாகியும் அனுப்பாமல் போக, குணாவிற்கு குழப்பமாயிருந்தது. “சரி… நாமே குடோனுக்கு நேர்ல போய்ப் பார்த்திட்டு வந்திடலாம்!.. அவங்களுக்கு பொருட்களை இறக்கறதுல ஏதாச்சும் சிரமமிருந்தா… நாமும் ஹெல்ப் பண்ணலாம்” கிளம்பினான்.

     குடோனை அடைந்தவன் நேரே அங்கிருந்த முதலாளியின் அறை நோக்கி நடந்தான். அறைக்குள் முதலாளி யாருடனோ பேசிக் கொண்டிருக்க. வெளியே காத்திருந்தான்.

     உள்ளே முதலாளியும் அந்த யாரோவும் பேசிக் கொண்டிருந்தது அட்சரம் பிசகாமல் அவன் காதுகளில் விழுந்தது.

 “உங்க தகுதிக்கு நீங்க இவ்வளவு தூரம் இறங்கிப் போய் அந்த டெம்போக்காரனுக்கு செய்யறது… எனக்கே கஷ்டமாயிருக்கு முதலாளி” யாரோ சொல்ல,

“டேய்… நான் ஒண்ணும் காரணமெல்லாம அந்த வேலைகளைச் செய்யலை!.,.. எல்லாம் காரணத்தோடதான் செய்யறேன்!” என்றார் செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முதலாளி ராசய்யா.

காதுகளைத் தீட்டிக் கொண்டான் குணா.

“இந்த டெம்போக்காரனையெல்லாம் உபசரிக்கற மாதிரி உபசரிச்சு… நம்ம கைக்குள்ளார போட்டு வெச்சுக்கணும்டா!… இல்லாட்டி வர்ற வழில மூட்டைக்கு அரைக் கிலோ… கால் கிலோன்னு அரிசி… பருப்புகளை உருவி எங்காச்சும் மளிகைக் கடைல வித்திடுவானுக!…” கிசுகிசு குரலில் ராசய்யன் சொல்லியதைக் கேட்டு நொந்து போனான் குணா.

      “ஏழைகளிடம் நீ வாங்கும் சாபமும், பணக்காரர்களிடம் நீ வாங்கும் பாராட்டும், உபசரிப்பும் ஆபத்தானவை” என்று ஏதோ ஒரு டெம்போவின் பின் பகுதியில் எழுதியிருந்தது குணாவின் ஞாபகத்தில் வந்து போனது.

    (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மாறவில்லை பாசம் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 2) – ஸ்ரீவித்யா பசுபதி