in , ,

உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 7) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6

ஒரு வாரம் முன்பு.

சென்னை கூடுவாஞ்சேரி.

புதிது புதிதாக முளைத்திருந்த நிறைய வீடுகளைக் கடந்து சற்று உள்ளே தள்ளி ஒரு பரந்த வெற்றிடம் ஆளரவமற்று இருந்தது. காட்டுச் செடிகளும் முட்புதர்களும் மண்டிக் கிடந்ததால் ஒருவித பயத்தைத் தந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நாலைந்து வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டிருந்தன.

சற்று ஒதுக்குப்புறமாக, அவ்வளவாக வீடுகள் இல்லாத ஒரு இடத்தில் ஒரு பழைய வீடு இருந்து. சுற்றிலும் புதர்கள் மண்டி, பாழடைந்த தோற்றத்தைத் தருவதாக இருந்தது. அந்த வீட்டைச் சுற்றிலும் வேறு வீடுகளோ ஆள் நடமாட்டமோ இல்லை.

கொஞ்சதூரம் தள்ளி நாலைந்து வீடுகள் இருந்தன. அந்த வீடுகள் நல்ல பராமரிப்புடன்,  மக்கள் போகவர என்று இருந்ததற்கான ஒத்தையடிப் பாதைகள் எல்லாம் தெரிந்தன.

ஆனால் இந்த  ஒரு  வீட்டில் மட்டும்  காம்பவுண்ட் சுவரைச் சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடந்தன. வீடு சரியாகப் பராமரிக்கப்படாமல், வண்ணங்கள் புதுப்பிக்கப்படாமல் நிறம் மங்கி பார்ப்பவர்களுக்குத் திகிலூட்டியது.

அங்கே சற்று தள்ளி குடியிருந்தவர்களுக்கும் இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்ற விவரமும் அவ்வளவாகத் தெரியவில்லை. வீட்டின் காம்பவுண்டு சுவருக்குள்ளும் வீட்டைச் சுற்றி  ஆளுயரத்திற்கு புதர்கள் வளர்ந்திருந்தன.  சுத்தம் செய்யப்படாத வாசலில் காய்ந்த சருகுகளும் குப்பைகளும் ஒருவித நாற்றத்தைக் காற்றில் கலந்து நாசியைப் பதம் பார்த்தது.

யாருடனும் தொடர்பில்லாமல் அந்த வீட்டிற்குள் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வளர்மதி.

வளர்மதிக்கு வயது 55 தான். ஆனால் எழுபது வயது முதுமையைக் காட்டியது அவளது தோலின் சுருக்கங்கள். சரியாகப் பராமரிக்கப்படாத தலைமுடி,  ஏனோதானோ என்று இருந்த அவளது உடை,  சுருக்கம் நிறைந்த காய்ந்து போன தோலுடன்  முகம். இவையெல்லாம் அவள் ஏதோ இழப்பில் இருந்து மீண்டு வராமல், விரக்தியில் இருப்பதைத் தெளிவாகக் காட்டியது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து வழிந்து காய்ந்து போய்க் கிடந்தன.

ஆழ்ந்த சிந்தனையில் இருந்த வளர்மதி, அவளருகில் யாரோ நிற்பது போல் ஒரு உணர்வு தோன்றவே சட்டென்று திடுக்கிட்டு நிமிர்ந்தாள். ஆனால் அருகில் யாரும் இல்லை. அவள் இருந்த அறையின் வாசலில் சுருண்டு படுத்திருந்த கருப்பு நிற நாய், வளர்மதியின் அசைவைக் கண்டு திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் அமைதியாகப் படுத்துக் கொண்டது.

இப்போது யாரோ பேசும் குரல் மிகவும் பலகீனமாகக் கேட்டது.

“மதி, எப்படி இருக்கே? மதி, யார் வந்திருக்கேன்னு தெரியுதா? மதி…”

மதி என்று தன்னைக் கூப்பிடும் ஒரே நபர் சேதுபதி மட்டும்தான். திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தாள் வளர்மதி. யாருமில்லை. மீண்டும் அதே குரல்.

“மதி, நான்தான் சேது வந்திருக்கேன். எனக்காக இவ்வளவு வருஷம் நீ காத்துட்டிருக்கியா? மன்னிச்சுக்க மதி, உடனே உன்னைத் தேடி வர முடியல. இப்பதான் அதுக்கான சந்தர்ப்பம் கிடைச்சுது. நான் பேசறது கேக்குதா மதி?”

கண்களில் கண்ணீருடன், கேட்கிறது என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள் மதி.

“அழாதடா செல்லம். அதான் நான் வந்துட்டேன்ல. அன்னிக்கு உங்க அப்பா அனுப்பின நாலு பேரும் உன்னை அடிச்சுப் போட்டுட்டு, என்னை இழுத்துட்டுப் போனாங்கல்ல.  என்னை  உயிரோட குழி தோண்டிப் புதைச்சுட்டாங்க மதி. அந்த நாலு பேர்கிட்டயும்  எவ்வளவு கெஞ்சினேன் தெரியுமா. ஆனா கேட்கலையே.

உனக்கு என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஆனா ஒரு மாசம் கழிச்சு, நீ வந்து, என்னைப் புதைச்ச இடத்துல உட்கார்ந்து கண் கலங்கினே. கதறி அழுதே. அப்போ நீ கதறினது  எனக்குத் தெரியும் மதி. ஆனா நான் கையாலாகதவனா போயிட்டேனே.

எவ்வளவு வருஷம் ஆனாலும், எனக்காகக்  காத்திருப்பேன்னு நீ சொன்னே இல்லையா. உன் உடல், பொருள், ஆவி எல்லாம் எனக்காகத் தவமிருக்கும்னு நீ கதறினே. அதனால, என்னைக்காவது, யாராவது என்னை விடுவிக்க மாட்டாங்களான்னு அங்கேயே காத்திருந்தேன்.

இப்பதான் என்னைப் புதைச்ச இடத்தை எதுக்கோ தோண்டினாங்க. அதனால விடுதலையாகி உன்னைத் தேடி வந்தேன். எனக்காக முப்பது வருஷமா நீ இப்படி ஒரு வாழ்க்கையை  வாழ்ந்துட்டிருக்கியா மதி?”

“சேது,  சேது, என்னைத்தேடி வந்துட்டியா சேது. உன்னை உயிரோட புதைக்கறதை நான் பார்த்தேன் சேது. என்னால உன்னைக் காப்பாத்த முடியலையேன்னு  கதறினேன். ஆனா என்னால சத்தமா அழக்கூட முடியல.  அவங்ககிட்ட இருந்து தப்பிக்க எனக்கு வேற வழி தெரியல  சேது. உன்னைப் புதைச்சுட்டு என்னை மறுபடியும் துரத்தினாங்க.  எப்படியோ தப்பிச்சு எங்கெங்கேயோ சுத்திட்டிருந்தேன்.

உன்னைப் புதைச்ச இடத்துல இருந்து மண்ணைத் தோண்டி உன்னைக் காப்பாத்தலாம்னு முயற்சி பண்ணேன் சேது.  ஆனா அந்த கல் நெஞ்சக்காரங்க கண்காணிச்சுட்டே இருந்தாங்க.

ஒரு மாசம் ஓடிப் போச்சு சேது. அதுக்கு மேல என்னால முடியல. அந்த ஒரு மாசம்தான் நான் சுயநினைவோட இருந்தேன் சேது. உன்னைப் புதைச்ச இடத்தைப் பார்த்துட்டுத் திரும்பி வரும்போது பைத்தியம் புடிச்ச மாதிரி தெருவுல வந்தேன். ஏதோ ஒரு கார் வந்து வேகமா என்னை இடிச்சுத் தள்ளிட்டுப் போயிருச்சு சேது. அதுல தலைல அடிபட்டு மயக்கமாயிட்டேன்.

யாரோ அந்த வழியாப் போன ஒரு அம்மாதான் என்னைக் காப்பாத்தி வைத்தியமெல்லாம் செஞ்சாங்க. இது அவங்க வீடுதான் சேது. நாலஞ்சு வருஷம் முன்னாடிதான் எனக்குப் பழைய ஞாபகம் வந்துச்சு.

சுயநினைவில்லாம இருந்த வாழ்க்கைகூட பரவாயில்ல சேது. நினைவு திரும்பின பிறகு நீயில்லாத உலகத்துல நான் இவ்வளவு வருஷம் வாழ்ந்திருக்கேன் அப்படிங்கற குற்ற உணர்வே என்னைக் கொல்ல ஆரம்பிச்சுருச்சு. என்னைக் காப்பாத்தின அம்மாவுக்கும் யாருமே இல்ல போல. புத்தி தெளிஞ்சும் நான் உன்னை நினைச்சு பைத்தியமா இருந்ததை அவங்களாலத் தாங்கிக்க முடியல. போய்ச் சேர்ந்துட்டாங்க.

எங்கேயிருந்தோ வந்த இந்த நாய்தான் எனக்குத் துணை. தற்கொலை பண்ணிக்கலாம்னு நிறைய முறை முடிவெடுத்தேன்.  ஆனா நம்ம வாழ்க்கையை சீரழிச்சவங்க இந்த உலகத்துல சந்தோஷமா வாழறாங்களேன்னு நினைக்கும்போது தற்கொலை எண்ணம் போயிடும். எப்படியாவது அவங்களைப் பழி வாங்கணும், உன்னை வந்து சேரணும்னுதான் தவமிருக்கேன்.

நான் உன்னைப் பார்க்கணும் சேது. உன் குரலை மட்டும்தான் கேட்க முடியுது. இதுக்காகவா இவ்ளோ வருஷம் இப்படி தலைமறைவான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன். ஏன் என் கண்ணுக்குத் தெரிய மாட்டேங்கறே? என் காதல் உண்மையானதில்லையா.”

வெடித்து அழுதாள் வளர்மதி.

“இல்ல மதி, உன் காதல் ரொம்ப சக்தி  வாய்ந்தது. உன் காதல்னு சொல்லக் கூடாது, நம்ம காதல்னு சொல்லணும். அதனாலத்தான் இவ்ளோ வருஷத்துக்கு அப்புறம் நான் உன்னைத் தேடி வர முடிஞ்சுது. உன் கண்ணுக்கு இப்ப நான் தெரிய மாட்டேன்.

அவங்க நாலு பேரும் என்னை உயிரோட புதைக்கும்போது, மனசுக்குள்ள ஒரு சபதம் எடுத்துகிட்டேன். எவ்வளவு வருஷம் ஆனாலும் என்னோட மதி எனக்காகக் காத்திட்டிருப்பா. எந்த விதத்துலயாவது நானும் அவளும் சேர்ந்து எங்க காதலைப் பிரிச்ச நாலு பேரையும், இல்லயில்ல, அஞ்சு பேரையும், உங்க அப்பாவையும் சேர்த்துதான், இந்த உலகத்தை விட்டே அனுப்பின  பிறகு, நானும் என்னோட மதியும் சேர்ந்து எங்க காதலை நிரூபிக்கணும். அதுவரைக்கும் என்னோட ஆத்மா அமைதி அடையக் கூடாது அப்படின்னு உள்ளுக்குள்ள சபதம் எடுத்துட்டேன்.

அதனாலத்தான் இப்போ நான் உன்னைத் தேடி வந்திருக்கேன். சொல்லு, வேட்டையை ஆரம்பிக்கலாமா?”

“ஆமா சேது, அதுக்காகத்தான் இவ்வளவு வருஷம் உயிரோட  இருக்கேன்.  மண்ணுல உன்னை உயிரோட புதைச்சதால நம்ம காதல் அழிஞ்சுடுமா சேது.  அழியக்கூடாது.  உன்கூட சேர்ந்து நம்மளைப்  பிரிச்சவங்களைப் பழி வாங்கத்தான்  முப்பது வருஷமா தவமிருக்கேன் சேது.  நம்ம  காதலை எவ்வளவு ஜென்மமானாலும்  பிரிக்க முடியாது. பாரு, நீ போட்ட மோதிரம்  இன்னும் என் விரல்ல இருக்கு.

சேது, சேது,  இவ்வளவு வருஷம் கழிச்சு என்னைத் தேடி வந்திருக்கே.  கண்ணால உன்னைப் பார்க்க முடியாத பாவியா இந்த உலகத்துல நான் வாழ்ந்துட்டிருக்கேன்.  இனிமேல் எனக்கு இந்த உடம்பு தேவையில்லை சேது. நானும் உன்கூட சேர்ந்துக்கறேன். அதுக்காகத்தான்  இப்படி தவ வாழ்க்கை வாழ்ந்தேன்.”

“அவசரப்படாதே மதி, அந்த ஜாதி  வெறி  பிடிச்சவங்களைப் பழிவாங்கணும்.”

“அதுதான் சொல்றேன், நானும் உன்னை மாதிரி ஆயிட்டா, ரெண்டு பேருமா சேர்ந்து அந்த அஞ்சு பேரையும் பழிவாங்கிடலாம். அப்புறம் நம்ம காதல் வாழ்க்கையைத் தொடரலாம் சேது.”

பேசிக் கொண்டே சட்டென்று கத்தியை எடுத்து தன் கை மணிக்கட்டில் கீறிக் கொண்டாள். ரத்தம் கொப்பளித்து,  கீழே பெருகி ஓடியது. சற்று நேரத்தில் அப்படியே மயங்கி விழுந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டாள் மதி.

நடப்பதைத் தள்ளி நின்று பார்த்துக்  கொண்டிருந்த கருப்பு நாய் ஊளையிட்டது. அந்த கருப்பு நிற நாயின் உடலுக்குள், வளர்மதியின் ஆன்மாவும், சேதுபதியின்  ஆன்மாவும் ஒன்றாகப் புகுந்து கொண்டன.

பிரிவுத் துயரில் தவித்திருந்த காதல்  ஆன்மாக்கள் இரண்டும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்தன. பிரிந்தவர் ஒன்று சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அந்த கருப்பு நாய் இப்போது வெறி கொண்டது போல் உறுமிக் கொண்டே தன் வேட்டையைத் துவங்கத் தயாரானது.

இன்று…..

வேட்டையாடிய களைப்பில்  பேசாமல் அமைதியாக சுருண்டு படுத்திருந்தது அந்தக் கருப்பு நாய். நான்கு பேரை வேட்டையாடியதைவிட, கடைசி வேட்டைதான் ஆன்மாக்களை சாந்தியடையச் செய்தன.

தன் வேலை முடிந்த திருப்தியில் கருப்பு நாய் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக் கொண்டிருந்தது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 26) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 1) – ஜெயலக்ஷ்மி