டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21
தன் மக்களது சிறு வயது புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை பார்க்கவும், மனதுக்குள் பெரும் பிரளயம்.
சௌபாக்கியவதியே அவர் முன் நின்று, “என்ன ஏன் பா கை விட்டீங்க? ஆனாலும், எந்தக் கஷ்டம் வந்தாலும்.. நான் இந்த வீட்டு படியேறல பார்த்தீங்களா? எப்பயும் போல நான் தான் ஜெயிச்சேன்..” என்று அதே திமிர் குறையாமல், தம் தந்தை தன்னைக் கைவிட்ட கோபத்திலுமாய் அவர் அரங்கநாதனின் கண் முன்னே நின்று பொறிவதை போன்றதான கற்பனை ஒன்று அவருக்குத் தோன்றிவிட…
அந்தக் கற்பனையின் இறுதியில், சௌபாக்கியவாதியின் மரணக் களை குடிகொண்ட முகமும்.. அந்த முகம் அந்நிலையிலும் அவரைக் குற்றம் சுமத்தும் பாவனையைக் கைவிடாது அவரைப் பார்ப்பது போலவும் தோன்றிட, அந்தச் சிறு குருத்து சிதைந்து விட்டதென்ற நிதர்சனமும் மனதுள் பெரும் பூதமாய் நின்று அவர் தவறை அவருக்கே உணர்த்திட, தன் வாழ்நாளிலேயே கண்ணீரைக் கண்டிடாத அந்தப் பெரிய மனிதர்.. தன் மகள் பெயரைக் கூறியபடி கதறி அழ முயன்ற அந்நொடி.. அதிர்ச்சியைத் தாங்காத அந்தப் பலவீனமான இதயம் சற்றே சிரமப்பட, அது அவரை மூர்ச்சை நிலைக்கு இட்டுச் சென்றது.
அவரது அலறல் ஒளியில் அவரிடம் ஓடி வந்த வெண்மணியம்மாவுக்கும், அதிர்ச்சியில் இதயம் நின்றுவிடும் போலானது. ஆனால்… சில அசாதாரணச் சூழ்நிலையில் தான் மனிதனின் மனம் அசாதாரணமாக வேலை செய்யும் என்பது போல, அதிர்ந்த தன் இதயத்தைச் சிரமப்பட்டுத் தன்னிலைக்குக் கொண்டுவந்து, அவசரமாக ஓடோடிச் சென்று தருணை அழைத்தார்.
அவனும் அங்கேயே இருந்தவன் தானே… அவரது ஒரு குரலுக்கே பதறியடித்து ஓடிவந்துவிட, வந்தவரிடம் நிலைமையைக் காண்பித்து விட்டு, பின் தன் உடலை தானே சுமக்கும் திராணியற்றவராய் சரிந்து விட்டார்.
உடனே அரங்கநாதனையும், வெண்மணியம்மாவையும் பரிசோதித்த தருணோ, அவர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமெனக் கூறிடவே, இருவரையும் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு விரைந்தான் கிருஷ்ணா.
அந்த நேரத்தில் அபியும், துளசியும் அவர்கள் இருந்த அறையைப் பூட்டிக் கொண்டு இருந்ததனால் அவர்களுக்கு விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் சற்று நேரத்திலே வெளியே வந்த துளசிக்கு நிலவரம் உரைக்கப்பட, அவர் உறங்கிக்கொண்டு இருக்கும் அபியை எழுப்ப மனமற்று, தானாகவே மருத்துவமனைக்கு விரைந்து விட்டார்.
அங்குச் சென்றால், தாத்தாவின் உயிரை எமனிடம் மீட்பதற்குப் பற்பல மருத்துவர்கள் முயன்று கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் பாட்டி மயங்கி விழுந்ததும் சரி எனவே பட்டது. அவருக்கு வந்திருப்பது, அதிர்ச்சியிலும், பயத்திலுமான மயக்கமே தானே ஒழிய, அவர் உடல்நலனுக்கு எவ்வித கெடுதலும் வந்திடவில்லை.
ஒருவேளை அவர் நன்றாயிருந்து தாத்தாவின் உடல்நிலையைப் பற்றிய முழு விவரமும் தெரிந்திருந்தால், இந்நேரத்திற்கு அவரது உடல் நிலையும் அபாயக் கட்டத்திற்கே சென்றிருக்கும். அதனாலே அவரை அப்படியே மயக்கநிலையில் வைத்தே அவரது உடல்நலனை மேம்படுத்தும் முயற்சி நடந்துகொண்டு இருந்தது.
இங்குத் துளசி அடித்துப் பிடித்து ஓடி வர, மொத்த குடும்பமே அவர் தோள் சாய்ந்தே ஆறுதலடைய முனைந்தது.
ஒரு குடும்பத்தில் எத்தனை ஆண் மகன்கள் இருந்தாலும்.. அவன் குடும்பத்தை என்ன தாய் தங்கினாலும்.. அந்தக் குடும்பத்தின் கடினமான சூழ்நிலையில் அவர்கள் மனம் ஒரு பெண்ணையே.. அதுவும் தன் பெண்ணையே தேடும்.
இங்கு அந்த அண்ணனே, தனது தங்கை துளசியின் மடியில் தான் தஞ்சமடைந்தார். தாயும் உடல்நலமின்றிப் படுத்திருந்த அந்நிலையில், தங்கையையே தாயாய் பாவித்தாரோ என்னவோ.
தானாடா விட்டாலும், தன் தசையாடும் என்பதற் போல, என்னதான் தன் தந்தையின் மேலும், தாயின் மேலும் பெருங்கோபம் இருந்தாலும், இந்த நிலையில் அவர்களைத் தண்டிக்க முடியவில்லை துளசிக்கு.
அபிக்கு இந்த விவரம் தெரிந்தாலும், அவளும் இப்படித்தான் நடந்து கொள்வாள் என்று உணர்ந்தே இருந்தார் அவர்.
இப்படியான அவரது சிந்தையைக் கலைத்தது தருணின் குரல், “நீங்க வேற யாரோவா இருந்திருந்தாலும் கூட என்னால உங்ககிட்ட முழுசா மறைக்க முடியாது. ஆனா.. இப்ப உங்ககிட்ட நான் முழுசா சொல்லித் தான் ஆகணும். தாத்தா அவரோட கடைசிக் கட்டத்துல இருக்காரு. கடைசியா அபிகிட்டே தான் பேசணும்னு சொல்றார். அதனால அபியை சீக்கிரம் இங்க கூட்டிட்டு வாங்க” என்று அவன் கவனமாய் உணர்ச்சி துடைத்த குரலில் கூறினாலும், எங்கிருந்தோ அனைவருக்கும் அந்த வார்த்தைகள் முழுவேகத்துடன் உண்மையை உணர்த்தியது.
‘தாத்தா அவரது மரணத்திற்கு முன்பு இறுதியாக அபியின் மன்னிப்பை யாசிக்கிறார்’ என்பதே அது.
ஆனால் இந்நிலையில் அபியின் முடிவு என்னவாய் இருக்கும்? அவள் இந்நிலையில் தாத்தாவிடம் எப்படி நடந்து கொள்வாள்? ஒருவேளை அவள் தாத்தாவை சந்திக்கவே மறுத்து விட்டாளென்றால் என்ன செய்வது?
ஒரு மனிதன் வாழ்க்கையில் என்ன கஷ்டப்பட்டிருந்தாலும், அவனது மரணமாவது அவனுக்கு நிம்மதியளிப்பதாய் வர வேண்டும்.
ஆம்.. மரணம் என்பது நிம்மதியின் இளைப்பாறல். அதை எந்தவொரு மனிதனும் உணர்ந்தே இருக்க வேண்டும். அதை அவ்வாராய் அனுபவிப்பதற்கான அத்தனை தகுதியும் எந்தவொரு உயிரும் எதிர்பார்ப்பது தானே?
அதனாலேயே, இளமையில் ஆடியவர்கள் எல்லாம், வயது ஏற ஏற… சாந்த சொரூபியாய்… இறை சிந்தனை மிக்கவராய் மாறிவிடுவது.
இங்கு அரங்கநாதன் தாத்தாவிற்கும் அது விலக்கில்லாது போனது. இத்தனை நாட்களாய் தனது மகளுக்கு அவர் உணராமலே செய்த அநீதி.. அது தான் சரியென்று அவர் வளர்ந்த முறைமை அனைத்தும் இன்று தவிடுபொடியாகிவிட்ட நிலையில், அவர் மனம் நிம்மதியான மரணத்தையே வேண்டியது.
அதை ஒரு மருத்துவனாக உணர்ந்திருந்த தருண், இதன் காரணமாகவே அபியை அழைத்து வரச் சொன்னான்.
ஏனென்றால், அதுவரையிலும் அங்கிருந்த அனைவருக்கும் தாத்தாவின் உடல்நிலையைப் பற்றிய வருத்தம் இருந்தாலும், மனதின் ஒரு ஓரத்தில் அபிக்கு இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது, சொன்னாலும் அவள் இங்கே வருவாளா என்ற எண்ணம் உறுத்திக் கொண்டே இருந்தது.
ஆனால் துளசியோ தருண் கூறியதற்கு எந்த மறுமொழியும் பேசாது, கிருஷ்ணாவிடம் திரும்பி, “வா ப்பா.. நாம போய் லயாவ கூட்டிட்டு வந்துடலாம்” என்று கூறிவிட்டு, அவனது பதிலையும் எதிர்பார்க்காது விறுவிறுவெனக் காரை நோக்கி சென்று விட்டார்.
அங்கிருந்தோர் அனைவரும், சிறுதிகைப்பிலும் அதிர்ச்சியிலும் உறைந்திருக்க, முதலில் சுதாரித்த கிருஷ்ணா, அவர் மனதின் எண்ணவோட்டங்களை அறிய முனையும் பொருட்டு அவருடன் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தான்.
பிறகு இருவரும் காரில் ஏறி, அது கிளம்பிய பிறகு… சற்று நேரத்திற்கு அங்கு முழு அமைதியே நிலைநாட்டப்பட்டது. கிருஷ்ணாவும் துளசியிடம் எப்படி, என்னவென்று கேட்பதெனத் தயங்கியபடியே வாளாவிருந்தான்.
ஆனால், அதை உணர்ந்த துளசியோ, “எனக்கு என் அப்பா மேல் ரொம்பக் கோபம் தான் கிருஷ்ணா. மரணம் எந்தவொரு மனுஷனையும் புனிதனாக்கிடாது. ஆனா.. என் பொண்ணுகிட்ட அவர் மன்னிப்பை யாசிக்கறது.. அவரோட கடைசி விருப்பம். தூக்குத் தண்டனை கைதிக்கு கூடக் கடைசி விருப்பம்… இறுதி ஆசை கேட்கப்படுது. நிறைவேற்றவும் படுது.
அதனால தான் நான் லயாவ இங்க கூட்டிட்டு வரலாம்னு சொன்னது. அவளுக்கும் தாத்தா மேலயும், பாட்டி மேலயும் அத்தனை வெறுப்பும், கோபமும் இருந்தாலும் கூட, இந்த மாதிரியான நேரத்துல அவ தாத்தாவை பார்க்க மாட்டேன்னு சொல்ல மாட்டா. அந்த அளவுக்கு அவ மனிதத் தன்மை இல்லாதவ கிடையாது. நான் அந்த மாதிரி அவளை வளர்க்கவும் இல்ல” என்று வெளியே வெறித்த பார்வையுடன் இறுகிய குரலில் கூறினார்.
அதைக் கேட்ட கிருஷ்ணாவிற்கு உள்ளூர கொஞ்சம் நிம்மதியே பிறந்தது. இருந்தாலும்.. “நீங்க இத எனக்காகவோ, இல்ல அபி தாத்தாவைப் பார்த்து அவருக்கு ஆறுதலா பேசினாத் தான் எனக்கும் அவளுக்குமான உறவு சீர்படும்னு நினைச்சு இதெல்லாம் செய்யல இல்ல அத்தை?” என்று கேட்க, சரேலென்ற பார்வைத் திருப்பல் துளசியிடம்.
“நான் யாருக்காகவும் பார்க்கற நிலைமையில இல்ல கிருஷ்ணா. இன்னைக்கு ஒரு கோபத்துல என் பொண்ணு எடுக்கற முடிவு, இன்னும் வருங்காலத்தில் அவளை, அவளுக்கே அவளைக் குற்றவாளியா உணர்த்திடக் கூடாதுனு தான் நான் இதெல்லாம் செய்யறேன்.
மத்தபடி அவளுக்கு உன்ன பிடிச்சுருக்கின்றது எனக்கு நல்லாவே தெரிஞ்ச விஷயம் தான். ஆனா.. அத அவ உணரணும். எல்லா விஷயங்கள்லயும்.. அதுலயும் குறிப்பா, இந்த மாதிரியான விஷயங்கள்ல, ஒரு அம்மா அவ பொண்ண ரொம்பக் கட்டாயப்படுத்தக் கூடாது. வேணும்னா கைட் பண்ணலாம். அது தான் அவளோட எல்லை.
இந்த எல்லையை அந்த அம்மா மீறினா, கெடப்போறது என்னமோ அவ பொண்ணோட வாழ்க்கை தான். அதனால புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும் உள்ள பிரச்சனையா அவங்களாவே தீர்த்துக்கிட்டாங்கன்னா அது சீக்கிரம் முடிவுக்கு வந்துடும்.
இதுல இன்னொரு மூணாவது மனுஷங்க.. அது பையனோட அப்பா, அம்மாவா இருந்தாலும் சரி.. பொண்ணோட அப்பா, அம்மாவா இருந்தாலும் சரி.. அவங்க தலையிட்டா, அது நல்லபடியாகத் தீர்வை கொண்டு வராது” என்று அவர் கூறி முடிக்கையில், ஆமோதிப்பான மௌனம் கிருஷ்ணாவிடம்.
அதன் பின் அவர்கள் இருவரும் லயாவிடம் எப்படிப் பேசி அவளைத் தாத்தாவை சந்திக்க அழைத்துச் செல்வது என விவாதித்தவாறே வீடு வந்து சேர்ந்தனர்.
ஆனால் அங்கே.. லயா வீட்டில் இல்லை. அவளெங்கே என்று வீட்டின் வேலையாட்களிடம் விசாரிக்கையில் அவர்களோ திருதிருவென விழித்தனர்.
அதைக் கண்டு சந்தேகித்த கிருஷ்ணா அவர்களிடம் சற்று அழுத்திக் கேட்கவும், அவர்களது நீண்ட நாள் சமையலாளான சாவித்ரி அம்மாள், “இல்ல தம்பி அபி பொண்ணு எங்ககிட்ட எதுவுமே சொல்லிட்டு கிளம்பல. அது பாட்டுக்கு ஒரு பைய தோள்ல மாட்டிகிட்டு கிளம்புச்சு. நாங்களும் நீங்க அதுகிட்ட போன்ல தாத்தா பத்தி தகவல் சொல்லிருப்பீங்க, அதனால தான் இப்படி எங்க யார்கிட்டயும் எதுவும் பேசாம அப்படிக் கிளம்புதுனு நினச்சுட்டோம்” என்று அவரும் குழம்பியவாறே சொல்ல, முகம் இறுகிப் போனது கிருஷ்ணாவிற்கு.
அதன் பிறகு கிருஷ்ணாவை தனியே அழைத்து வந்த துளசி, “என்ன கிருஷ்ணா.. அவளுக்குத் தாத்தா விஷயம் தெரிஞ்சுருக்குமோ.. ஆனா.. அப்படித் தெரிஞ்சிருந்தாலும் அவ ஏன் இப்படி இங்கிருந்து யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம கிளம்பியிருக்கணும்?” என்று கேட்க
அதற்குக் கிருஷ்ணாவோ, அதே இறுக்கம் மாறா குரலில்.. “அபிக்கு தாத்தா விஷயம் எதுவும் தெரில அத்தை. அப்படித் தெரிஞ்சுருந்தா அவ இப்படியான ஒரு காரியத்தைச் செய்திருக்க மாட்டா. ஆனா.. அவ இப்ப ஏன் திடீர்ன்னு கிளம்பினாள்னு தெரியணும். வாங்க அவ ரூமுக்குள்ள போய்ப் பார்க்கலாம்” என்று கூறி அவரையும் அழைத்துக் கொண்டு அபிக்கென ஒதுக்கப்பட்ட அவளது தனியறைக்குச் சென்றான் கிருஷ்ணா.
ஆனால் அந்த அறையும் துடைத்து வைத்தார் போலக் காலியாகக் கிடக்க, உள்ளுக்குள் சோர்ந்து போனது அவனுக்கு.
ஆனால் திடீரென அவனது கண்களில் ஏதோ ஒரு மின்னல் வெட்டு. படபடவெனத் தனது அறைக்கு ஓடியவனைத் திறந்திருந்த ஜன்னல் வழிய எட்டிப் பார்த்த காற்றில் அசைந்தாடியபடி ஒரு கடிதம் வரவேற்றது.
அந்தக் கடிதத்தின் மேலே அது பறக்காத வண்ணம் பார்த்துக் கொண்டது லயாவின் அலைபேசி தான். ஓடிச் சென்று அந்த அலைபேசியையும், அந்தக் காகித்ததையும் தவிப்புடன் எடுத்தான் கிருஷ்ணா.
அந்தக் கடிதம், அவன் எதிர்பார்த்தது போல அவனுக்கல்லாது, துளசிக்கே எழுதப்பட்டிருந்தது.
“அம்மா.. துளசிம்மா..” என்று இறுதியாய்ச் சொல்லிக் கொள்வது போன்றதொரு பரிதவிப்பில் அந்தக் கடிதத்தை ஆரம்பித்திருந்தாள் அவள்.
“நீங்க எனக்குத் தந்த எல்லாத்துக்கும் நன்றிம்மா. ஆனா, நான் இப்ப செய்திருக்கற விஷயம் உங்களுக்குத் துரோகமா படலாம். ஆனா எனக்கு வேற வழி தெரியல மா.. என்ன பத்திய உண்மை தெரிஞ்சதுக்கு அப்பறம், இங்க இருக்கற எல்லார் பார்வையிலயும் இருக்கற தவிப்பு.. வேதனை.. இதெல்லாத்துக்கும் நான் தா காரணம்ன்ற குற்றஉணர்வு… இதெல்லாம் சேர்ந்து என்ன கொல்லுது மா.
அதனால தான் இங்க இனியும் இருக்க முடியாதுனு கிளம்பிட்டேன். ஆனா.. நீங்க இன்னும் கொஞ்ச நாள் அவங்களோட பாதுகாப்புல, அவங்களோட அரவணைப்புல இருக்கனும்மா. உங்களுக்கு எப்ப நான் தேவைப்படறனோ, அப்ப உங்க முன்னாடி நான் நிப்பேன்.
தாத்தா மேல எனக்கு வருத்தம் இருந்தாலும், அவரோட இந்த வயசுல என்கிட்டே அவர் மன்னிப்பு கேட்கணும்னு எல்லாம் நான் எதிர்பார்க்கல ம்மா. பாகிம்மாவும் இதையெல்லாம் விரும்பியிருக்க மாட்டாங்க. அதுமட்டுமில்லாம இதுல முதலும் முக்கியமுமா.. என்னால மத்தவங்க கஷ்டப்படறத பார்க்க முடியாது.
அதுவும் என் காரணமாவே மத்தவங்க எல்லாரும் வருத்தப்படறத என்னால சகிச்சுக்கவே முடியாதும்மா. அதனால நான் போறேன். ஆனா பயப்படாதீங்க. நான் சாக மாட்டேன். கொஞ்ச நாள் எல்லாத்துலயும் இருந்து கொஞ்சம் விலகியிருக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன். அதே மாதிரி உங்களுக்கு எப்ப நானோ, என்னோட உதவியோ தேவைப்பட்டாலோ அங்க முதல் ஆளா வந்து நிப்பேன்” என்று உணர்ச்சி மிகுந்து, நன்றி பகிர்தலில் ஆரம்பித்து, மன்னிப்பை வேண்டி.. இறுதியாகச் சற்று ஆறுதல் அளிக்கும் தொனியுடன் முடிந்திருந்தது அந்தக் கடிதம்.
அந்தக் கடிதத்தைக் கிழித்தெறிய போனவன் பார்வை அந்த மேஜையின் மீதிருந்த மற்றொரு கடிதத்தைக் கண்டது. அது கொஞ்சம் சிறிதாக மடிக்கப்பட்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அதைத் திறந்து பார்த்தான் கிருஷ்ணா.
“கிருஷ்.. என் கிருஷ்ணா.. யு ஆர் லவ் ஆப் மை லைப்…” என்ற அவளது முதல் வார்த்தையிலே கரைந்து விட்டான் அவன்.
“நாம காதலிச்சுருக்கவே கூடாது க்ரிஷ். நான் உங்க வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது க்ரிஷ். நாம ரெண்டு பேருக்கும் இடையில இதெல்லாம் நடந்துருக்கவே கூடாது கிரிஷ்.
ஆனா.. இதெல்லாம் இப்படிக் கூடாது, கூடாதுன்னு நான் யோசிச்சாலும், நான் என் வாழ்க்கையில திரும்பிப் பார்க்கறதுக்குன்னு ஒரு அழகான நினைவுகளைக் கொடுத்தது நீங்க தான்.
அந்த நினைவுகள் தான் இனி என் வாழ்க்கையில நிறைஞ்சு இருக்கப் போகுது. அதுக்காகவே உங்களுக்கு என் வாழ்நாளெல்லாம் நான் கடமைபட்டிருக்கேன் க்ரிஷ். அந்தக் கடனை உங்களுக்கு விடுதலை கொடுக்கறது மூலமா நான் கொஞ்சமாவது அடைக்கலாம்னு நினைக்கறேன்.
ஆமா.. என் கூட இனி உங்களால நிம்மதியா இருக்க முடியாது. இதெல்லாம் நினச்சு தான் நான் நம்ம கல்யாணம் நடக்கவே கூடாதுன்னு வலியோட சொன்னது. ஆனா.. நடந்துருச்சு. அது மூலமா உங்க காதலை நானும்.. என் காதலை நீங்களும் கொஞ்சமாவது உணர்ந்துட்டோம்.
இன்னும் இன்னும் என் வாழ்க்கை முழுக்க உங்க மேல மழை மாதிரி கொட்டித் தீர்க்க, தீராத காதல் எனக்குள்ள இருக்கு. ஆனா.. அதே காதல் காரணமா தான் நான் உங்கள விட்டு பிரியற முடிவையும் எடுக்க வேண்டியதா இருக்கு.
நான் உன் வாழ்க்கையில வேணாம் க்ரிஷ். உன் பீரோல நான் நம்ம விவாகரத்துக்குச் சம்மதிச்சு கையெழுத்து போட்டிருக்கற பேப்பர் இருக்கு. என்ன தான் நம்ம கல்யாணம் இன்னும் வெளில யாருக்கும் பெருசா தெரிலைன்னாலும், நாளைக்கு உனக்கு இன்னொரு வாழ்க்கை அமையறப்போ நான் உனக்கு உறுத்தலா இருக்கக் கூடாது..” என்று முடிந்திருந்தது அந்தக் கடிதம்.
அவளை அணு அணுவாய் நேசிப்பவனுக்கு, இந்தக் கடிதமும், அதில் பறைசாற்றப்பட்டிருக்கும் அவன் மீதான அவளது காதலும் உவப்பாய் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால்.. கிருஷ்ணாவிற்கோ, அவளை என்ன செய்தால் தகும் என்னும் அளவிற்கு அடங்காத ஆத்திரம் வந்தது.
பின்னே.. உடம்பின் ஒவ்வொரு செல்லையும் காதலால் உயிர்ப்பித்துக் கொண்டிருப்பவன், அந்தக் காதலாலே அவனது அபி அவனை விட்டு விலகுவதை எப்படி ஏற்பானாம்.
அவள் கையில் கிடைத்தால் அவ்வளவு தான் என்ற ஆவேசத்தில் அந்தக் கடிதத்தைக் கிழித்தெறிய அவன் முற்பட்ட பொழுது, அவனை நோக்கி நிர்ச்சலமான பார்வையுடன் நின்றிருந்தார் துளசி.
அவரைக் கண்டதும் வந்த கோபத்தைத் தனக்குள்ளாக அடக்க முயன்றபடி, கை முஷ்டிகள் இறுகியவாறு நின்றிருந்தான் கிருஷ்ணா.
அதே விதமான பார்வையுடன் நின்றிருந்த துளசியும் கிருஷ்ணாவிடம், “என்ன கிருஷ்ணா அப்ப லயா உங்ககிட்ட உன்ன விட்டு முழுசா பிரிஞ்சு போறேன்னு சொல்லி இருக்காளா? சரி இப்ப அவ மேல கோபப்பட்டு அப்படியே நின்னுட்டு இருக்கலாமா? இல்ல அவள சீக்கிரம் தேடி கண்டுபிடிக்கலாமா? நீயே முடிவு சொல்லு” என்று அவர் தீர்க்கமாகக் கூறவும், அடுத்த நிமிடத்தில் துளசியுடன் கிருஷ்ணாவின் கையில் கார் பறந்து கொண்டிருந்தது.
‘அவள் ஏன் இப்படிச் செய்தாள்? எந்தக் காரணம் கொண்டும் இனி தங்களுக்குள் பிரிவென்பதே இருக்காது என்று ஆணித்தரமாக நம்பி இருந்தானே அவன். அவனது எண்ணத்தில் எல்லாம் மண்ணள்ளிப் போட்டு இப்படிச் செய்து விட்டாள். அதுவும் எதற்காகவாம்? அவன் மீது அவள் வைத்திருக்கும் காதலுக்காகவாம். காதல்.. இப்படி எத்தனை வதைப்பதற்குத் தான் காதல் எனக்குள் இத்தனை பெருகி பொங்கி ஊற்றெடுக்கிறது’ என்று மிகவும் கடுப்புடன் எண்ணிக் கொண்டான் கிருஷ்ணா.
அதே சமயத்தில் துளசியும் லயாவின் மீது கோபமாக இருந்தாலும், மனதின் ஒரு ஓரத்தில் சற்று படபடப்பும் இருக்கவே செய்தது. ஏனென்றால் அவரது மகளின் அந்தப் பிடிவாதம் தான். என்னதான் அவள் மனமுதிர்ச்சி அடைந்தவளாக இருந்தாலும், அவளுக்குள் என்றுமே இருக்கும் அந்தப் பிடிவாதம் தான் துளசிக்குப் பயத்தை ஏற்படுத்தியது.
இப்படி யாருமே வேண்டாம் என உயிராய் நேசிக்கும் கிருஷ்ணாவையும் உதறிவிட்டு உயிருக்குயிராய்ப் பார்த்துக் கொள்ளும் அன்னையான தன்னையும் உதறி விட்டு ஓட முடிவெடுத்திருக்கிறாள் என்றால், அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும். இன்னும் அவளே அவளுக்கு ஏற்படுத்திக் கொண்ட இந்தத் தனிமையும் அவளுக்கு எப்படியான வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.
இத்தனையும் மீறி எப்படித் தானும் கிருஷ்ணாவும் அவளுக்கு நிதர்சனத்தைப் புரிய வைத்து அவளை அவளிடம் இருந்தே மீட்டுக் கொண்டு வர போகின்றோம்? என்று இதையெல்லாம் எண்ணிப் பார்க்கவே துளசிக்குப் பயமாக இருந்தது.
‘மகள் ஒரு விதத்தில் பிடிவாதக்காரி என்றால், இதோ இந்த மருமகன் கிருஷ்ணா மிகவும் கோபக்காரன் ஆக அல்லவா திரிகிறான். என்ன தான் இப்பொழுது தாத்தாவிற்காக அவளைக் கட்டாயப்படுத்தி அழைத்து வந்துவிட்டாலும், பின்னாட்களில் இவர்களது உறவு எப்படி இருக்குமோ?’ என்று இப்பொழுதும் கூட ஒரு தாயாய் அவருக்குள் பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.
‘அப்படி அந்தப் பெண் என்ன தான் பாவம் செய்து விட்டாள்? தான் நினைப்பது, விரும்புவது ஒன்றும் கூட நிலைத்திருக்காத இப்படியான ஒரு வாழ்க்கை. ஆனால் இந்த நிலைமையிலும் அவளது மனோதிடம் பாராட்டப்பட வேண்டியது தான்’ என்று தன் மகளைத் தானே மனதிற்குள் இறைஞ்சியும் போற்றியும் கொண்டிருந்தார் துளசி.
ஆனால் கிருஷ்ணாவை பற்றித் தான் தெரியுமே? அவன் மனமோ, எரியும் தீப்பிழம்பாய்.. பொங்கும் ஆழ்கடலாய்.. அதிரும் முகில் கூட்டமாய்.. சுற்றி சுழலும் சண்டமாருதமாய்ச் சுழன்று கொண்டிருந்தது.
இப்படியான மனநிலையில் இருந்தாலும், அவனது கையில் கார் நல்ல கட்டுப்பாட்டில் தான் இருந்தது. லயாவைத் தேடி அவன் நேரே சென்றது வேலூருக்கு தான். எப்படி இருந்தாலும் செழியனின் அந்தக் கல்லூரியில் லயாவும் ஒரு பார்ட்னர் தான்.
அதை அவள் எவ்வளவோ மறுத்தும் கூட, செழியன் அவளுக்காக செய்து இருந்தார். அதனால் அவரது அந்தக் கல்லூரியில் தான் அவளும் வேலை பார்த்து கொண்டிருந்தாள். அதனாலேயே இப்போது கண்டிப்பாகக் கல்லூரியின் பொறுப்பை அவள் மீண்டும் பார்த்துக் கொள்ளத் தான் சென்றிருப்பாள்.
அன்றி அவள் வேறு இடத்திற்கு இடம் பெறவேண்டும் என்றாலும், அவர்களது அந்தக் கல்லூரியில் அவளைத் தொடர்பு கொள்ள ஏதேனும் தகவல்கள் பகிர்ந்து இருப்பாளாய் இருக்கும்.
அல்லது அவளது படிப்புச் சான்றிதழ்களை எடுத்துச் செல்லவேணும் அவள் கண்டிப்பாய் வேலூருக்கு வந்து தான் இருப்பாள் என்று சரியாகவே கணித்தான் கிருஷ்ணா. எனவேதான் அவன் மாற்று யோசனை ஏதுமின்றி முதல் வேலையாக வேலூரில் சென்று தேடிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தது.
அவனது முடிவே சரியானதாய் அமைந்துவிட, அபி நேரே வேலூரில் அவர்களது வீட்டில் தான் இருந்தாள். ஆனால் அவள் சாதாரண மனநிலையில் இருப்பதாய் தோன்றவில்லை. முதலில் அவளைச் சென்று பார்த்தது துளசி தான்.
ஏனெனில் தான் இருக்கும் இந்த மனநிலையில் அவளைப் பார்த்தால் கோபத்தில் ஏதேனும் வார்த்தையை விட்டு விடுவோம் என்று அஞ்சியே, துளசியை முதலில் வீட்டிற்குள் சென்று பார்க்கச் சொன்னான் கிருஷ்ணா.
தவிர, இது புது இடம். அங்கே அக்கம்பக்கத்தினருக்கு கிருஷ்ணாவைப் பற்றி எதுவும் தெரிந்திருக்காது. அதே வேளையில் அவன் இப்படி வீட்டினுள் நுழைந்து, அங்கே ஆவலுடன் ஏதேனும் வாக்குவாதம் வந்தாலும், அந்தச் சத்தம் அருகிலுல்லோருக்கு கேட்டு விட்டால்?
என்ன தான் துளசி வந்து எல்லோருக்கும் விளக்கமளித்து விடுவார் என்றாலும், அது லயாவின் பெயருக்கு எப்படி இருந்தாலும் சிறு களங்கத்தை விளைவிக்கும் அல்லவா? அதனால் தான் அவன் முதலில் துளசியைச் சென்று பார்க்கச் சொன்னது.
அங்கே சென்றால் லயாவோ, அந்த வீடே அதிரும்படி கத்திக் கதறி கொண்டிருந்தாள். கடைசியாக அந்த வீட்டில் செழியனுடனும் ரதியுடனும் கழித்த ஞாபகங்கள் அவளை இடியாய் தாக்கி, சம்மட்டியால் அடித்தது. அதுவே அவளது இந்தக் கதறலுக்குக் காரணமாய் அமைந்தது.
அவள் இப்படியாய் கதறிக் கொண்டிருக்க அங்கு வீட்டிற்குள் நுழைந்த துளசி பதறிப் போய் மகளை அள்ளி எடுத்தார்.
“என்ன ஆச்சு? ஏன் இப்படி அழற லயாம்மா..? என்னடா? என்ன ஆச்சு?” என்று அவர் பதற்றத்துடன் கேட்டார்.
அவரது அந்த ஒவ்வொரு கேள்விக்கும் லயாவின் அழுகை அதிகமானதே தவிரக் குறையவில்லை. அவள், மேலும் மேலும் பயத்துடனும்… பருந்துக்கு அஞ்சி நடுங்கும் கோழிக்குஞ்சு தன் தாயிடம் அடைக்கலம் புகுந்தல் போலவும் தன் தாயின் மடியில் தஞ்சமானாள்.
துளசி அவளை ஆறுதல்படுத்த முயன்று பின்பு அதில் தோற்று, “சரி அவள் முழுமையாக அழுது முடிக்கட்டும். தன் மனபாரத்தை எல்லாம் அழுகையில் கரைத்து விடட்டும்” என்று முடிவெடுத்தவராய் அவளை மெதுவாக அணைத்தவாறு முதுகில் மட்டும் தட்டிக் கொடுத்துக் கொண்டு மானசீகமாய் ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார்.
ஆனால் நேரம் செல்ல செல்ல அவ்வளவு கேவலும், கண்களின் கண்ணீரும் அதிகமானது. மனபாரத்தை எல்லாம் கண்ணீரில் கரைக்கட்டும் என்றிருந்த துளசியும் இப்போது அவளே கண்ணீரில் கரைந்து விடுவாள் போல் இருக்கும் இந்த நிலையில் அவளை உலுக்கி எடுத்து தான் தன்னிலைக்கு மீட்டெடுத்தார்.
அவரது அந்தச் செய்கைக்குப் பின்னரே சுயநினைவடைந்த லயா, இன்னமும் தனது தேம்பலை நிறுத்திய பாடு இல்லை. ஆனால் அடுத்து துளசியும் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் அரவணைத்து, அவள் ஏன் இவ்வாறு கதறுகிறாள் என்று கேட்டு அறிய முயன்றார்.
ஏனென்றால் அந்த வீட்டிற்குள் நுழைகையில் அவருக்குமே மனதிற்கும் அதே உணர்வு. அதே போன்றதொரு சம்பட்டி அடி விழத்தான் செய்தது. தனது மகளின் அத்தகைய உணர்ச்சியையும், அவ்வளவு அழுகையையும் அவரால் முழுவதுமாய் உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது.
பின்பு முயன்று தானும் தேறி, ஒருவராய் லயாவையும் தேற்றினார் அவர். பிறகு அவர் எப்படி இங்கே வந்து சேர்ந்தார் என்று திகைப்பும் அதிர்ச்சியுமாய் லயா கேட்க, இப்பொழுது அப்பட்டமான கோபம் அவர் கண்களில்.
“நீ என்ன நினைச்சு இப்படி ஒரு காரியம் செஞ்ச லயா? அந்த வீட்டுல இப்பதான் உன் அம்மாவுக்குச் செஞ்ச பாவத்தையே உணர ஆரம்பிச்சிருக்காங்க. அதுவும் உன்னால தான். அதுக்காக அவங்க உன்கிட்ட பாவமன்னிப்பு தான் கேட்கிறாங்களே தவிர, உன்ன வஞ்சிக்க நினைக்கல.
ஒருத்தங்க மனசு உணர்ந்து மன்னிப்பு கேட்கிற பொழுது அதை முழுவதும் உதாசீனப்படுத்துறது அதைவிடப் பெரிய தப்புன்னு உனக்குத் தெரியாதா லயா? அப்படி அவங்க திருந்தவே இல்லன்னு நீ நினைச்சாலும் கூட, அங்கே இருந்து உன் அம்மாவுக்கு நியாயம் வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்க வேண்டாமா? அத அவங்களுக்கு உணர்த்தனும்னு நினைக்க வேண்டாமா? அத விட்டுட்டு இப்படி ஓடி வந்துருக்க?
அதைவிட உன்னையே நினைச்சுட்டு இத்தனை வருஷமா வாழ்ந்துட்டு இருக்கிற கிருஷ்ணாவ ஒரு நிமிஷம் நினைச்சு பாத்தியா? அவன் என்கிட்ட காரில் வரும்போது உன்னுடைய லெட்டர் பத்தி சொன்னான். என்னமோ காதலுக்காகவே அவனை விட்டு பிரியறேன்னு எழுதியிருந்தியாம்? உன்னை இவ்வளவு முட்டாளா தான் நான் வளர்த்தனா?
அப்படிப்பட்ட காதலுக்காகவே அவனை நீ விட்டுக் கொடுக்கவே கூடாதுன்னு வைராக்கியத்தோட நினைத்து இருக்கணும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவனை விட்டு போறத நீ யோசிச்சு பார்த்து இருக்கவே கூடாது. எனக்கு ரதியும், நீயும், ஏன் கிருஷ்ணாவும் கூட ஒன்னு தான். அவனும் நான் பார்த்து வளர்ந்த குழந்தை தான். என் குழந்தைங்க நியாயமா நடக்கணும்னு தான் நான் நினைப்பேன்.
அப்படித் தப்புப் பண்றது ரதியா இருந்தாலும் சரி, நீயா இருந்தாலும் சரி, கிருஷ்ணாவாவே இருந்தாலும் சரி.. அவர்களைத் திருத்தற உரிமையும், கடமையும் எனக்கு இருக்கு. அதே மாதிரி இந்த மூன்று குழந்தைகளில் யாருக்கு அடிபட்டாலும் அவங்கள தாங்குற கடமையும் எனக்கு இருக்கு. அதை நீ புரிஞ்சுக்கோ லயா’ம்மா. அவன் உள்ளுக்குள்ள எவ்வளவு உடைஞ்சு போயிருக்கான் தெரியுமா?
உன் அம்மாவுக்கு உன்னோட தாத்தாவும், பாட்டியும் செஞ்சது கொடுமைன்னா, நீ இப்போ கிருஷ்ணாவுக்குச் செஞ்சது என்ன? இத்தனை வருஷமா உன்னுடைய காதலையே நம்பிட்டு, இத்தனைக்கும் நீ சம்மதம் சொல்லாத போதும் கூட உன்னையே நினைச்சுட்டு இருந்தவனுக்கு நீ கொடுக்கிற தண்டனை ரொம்ப அதிகம் டா.
ஒன்னு உனக்கு அந்த வீட்டுல இருக்கிறது பிரச்சனைனா அங்க நின்னு போராடி இருக்கணும். அல்லது உன்னோட குழப்பங்களையும் பயத்தையும் அவங்ககிட்டயோ, கிருஷ்ணாகிட்டயோ, இல்ல என்கிட்டயாவது பேசி தெளிஞ்சிருக்கணும். இது எதுவுமே பண்ணாம நீ ஓடி ஒளிஞ்சிருக்க! என்னோட பொண்ணு இப்படிப் பிரச்சனைக்குப் பயந்து ஓடி ஒளிவாள்னு நான் நினைக்கவே இல்ல. ஆமா லயா இங்க குறை சொல்ல வேண்டியது என்னுடைய வளர்ப்பை தான்” என்று அவர் தன்னைத் தானே நோகவும், அப்பொழுது தான் சட்டென்று உரைத்தது லயாவிற்கு.
தான் எந்த அளவிற்கு ஒவ்வொரு மனிதரையும் காயப்படுத்தி, குத்திக் கிழித்து உள்ளோம் என்பது உடனே தன் தாயிடம் சமாதானமாக “இல்லம்மா..” என்று ஏதோ கூற வந்தவளை கைநீட்டி தடுத்தார் அவர்.
“நீ இப்படி வந்த நேரத்துல அங்க என்ன நடந்தது தெரியுமா? தாத்தா உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல இருக்காரு. அந்த விஷயத்தை உன்ட்ட சொல்லலாம்னு வீட்டுக்கு வந்தா, நீ இப்படிச் செய்து வச்சிருக்க. அவரு அங்க உயிருக்கு போராடிட்டு இருக்காரு. அந்த நிலைமையிலையும் கடைசியாக உன்ட்ட மன்னிப்பு வாங்கிடணும்ன்னு தவிச்சிட்டு இருக்கார்.
அவர் செஞ்ச எதையும் நானும் சரின்னு சொல்லல. ஆனா உன்னுடைய இந்தச் செய்கை உன்னுடைய பின்னாளில் உனக்கே தவறா தோன்றலாம். அப்ப உனக்கு ஏற்படப் போற குற்றவுணர்ச்சி உன்னுடைய வாழ்க்கையை எந்த அளவுக்குப் பாதிக்கும்னு எனக்குத் தெரியல. நிச்சயமா இத உன்னோட அம்மாவும் கூட விரும்பியிருக்க மாட்டா” என்று அவர் கூறவும், பதறிவிட்டாள் பெண்.
“என்னம்மா… என்னம்மா சொல்றீங்க? தாத்தாக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க, அவர் நடந்ததை விளக்கமாகக் கூறினார். உடனே மீண்டும் கோவைக்குக் கிளம்பத் தயாராகி இருவரும் வெளியே வந்தனர்.
அவர்கள் காரில் ஏறக் கதவை திறந்து விட்டவன் தான், அதற்குப் பிறகு ஒரு எந்திரம் போல யாரிடமும் எதுவும் பேசாது முகத்திலும் கூட எவ்வித உணர்ச்சியும் காட்டாது சாலையைப் பார்த்து வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
பல மணி நேரம் செல்ல வேண்டிய அந்தப் பயணம், கிருஷ்ணாவின் அதிவேக பாய்ச்சலால் சில மணி நேரமாகக் குறைந்ததைக் கூடக் காரில் இருந்த மூவருமே உணரவில்லை. ஏனெனில் அவர்கள் மூவரும் இருந்த மனநிலை அப்படி.
பிறகு கார் மருத்துவமனையை அடைந்ததும் அதிலிருந்து வேகவேகமாக இறங்கி, லயாவின் கரம்பற்றி அழைத்துச் சென்றார் துளசி. அவர் நேரே சென்றது அரங்கநாதன் இருந்த அறைக்குள் தான். அவளைக் காணுவதற்காகவே அதுவரை உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தது போல் இருந்தார் அவர்.
லயா, அவரது அருகில் வந்ததுமே கையெடுத்து கும்பிட முடிந்தவரை சட்டெனத் தடுத்தாள் அவள்.
“நீங்க எதையும் நினைக்காதீங்க தாத்தா. இனி இந்த வீட்டுல எந்தத் தப்பும் நடக்காதுன்னு எனக்குத் தெரியும். நீங்க இவ்வளவு வருத்தப்படுவது கூட அம்மா தாங்க மாட்டாங்க. அவங்க இருந்த வரைக்கும் கூட உங்களைப் பற்றிய எந்த ஒரு தப்பான வார்த்தை சொன்னதில்ல. அதனால நீங்க பழசெல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க. நல்லபடியா குணமாகி சீக்கிரம் வீட்டுக்கு வரணும்னு உங்களுக்காக நான் கடவுளை வேண்டிக்கறேன். அதுவரைக்கும் வேற எந்த நினைப்பும் மனசுல வராம பார்த்துக்குங்க” என்று ஆறுதலாகக் கூறி விட்டு, அமைதியாக வெளியே வந்து அமர்ந்து விட்டாள்.
அப்படி அவள் அவரிடம் பேசி விட்டதாலேயே அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் மீளத் துவங்கினார்.
அப்படியிருந்தும் கூட, மேலும் இரண்டு நாட்கள் போக்குக் காட்டிவிட்டு, பிறகு, “தாத்தா பிழைத்து விட்டார்” என்று நல்ல வார்த்தை கூறினான் தருண்.
அதன் பிறகே லயா திரும்பவும் வீட்டிற்கு வந்தாள். தாத்தாவும் அதன் பிறகு ஒரு இரண்டு வாரங்களில் குணமாகி வீட்டிற்குத் திரும்பிவிட, அந்த வீடு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலையை அடைய முயன்று கொண்டிருந்தது.
அப்படியான ஒரு நாளில் தான் கிருஷ்ணா அவனது அறையில் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்துக் கொண்டிருக்க, தயங்கியவாறே அந்த அறைக்குள் நுழைந்தாள் லயா.
அவள் சௌபாக்கியவதி மகள் தான் என்று தெரிந்து கொண்ட நொடி முதல், இப்பொழுது வரை கிருஷ்ணாவுக்கும், லயாவிற்கும் இடையே எந்த ஒரு பேச்சு வார்த்தையும், ஏன் நேர் நோக்கும் கூட இல்லாது இருந்தது. இதில் அவள் வீட்டைவிட்டு கிளம்பி இருந்தது அவனுக்கு இன்னும் அதிக ஆத்திரத்தை வரவழைத்து இருந்தது என்பதை லயாவும் பின் வந்த நாட்களில் உணர்ந்திருந்தாள்.
ஆனால் ஒவ்வொரு முறை அவனிடம் அவள் போய்ப் பேச முயன்ற தருணத்திலும், அதை வேண்டுமென்றே தவிர்த்தான் கிருஷ்ணா. அதுவும் கூட அவளுக்குப் புரியத்தான் செய்தது. எனவே இன்று நிச்சயம் எப்படியாவது அவனிடம் பேசியே தீர வேண்டும் என்ற முடிவுடன் அவனது அறைக்கு வந்து விட்டாள் அவள்.
ஆனால் அவனது இந்த அலட்சியப் போக்கும், வெறுத்த பார்வையும் அவளது உள்ளத்தை உடைத்து நொறுங்கவே செய்தது. அதையெல்லாம் மனதின் ஒரு ஓரம் வைத்துவிட்டுக் கொஞ்சம் சாதாரணமாக இருக்க முயன்றபடியே, “கிருஷ்ணா” என்று அழைத்தவாறே அவனருகில் சென்று அமர்ந்தாள் அவள்.
ஆனால் மறுகணமே அவன் எழுந்து செல்ல முயல, சட்டென்று அவன் கரத்தை பற்றிக் கொண்டாள் லயா.
“தயவு செஞ்சு நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க கிருஷ்ணா. நான் நிஜமா உங்கள வெறுத்து உங்கள விட்டு பிரியணும்னு நினைக்கல. ஆனா.. நான் என்ன வெறுத்துட்டேன். இந்தக் குடும்பத்துல என்னால உண்டான பிரச்சனைகளால நான் உடைஞ்சுட்டேன். அந்தச் சமயத்துல என்னால நிலையான முடிவை எடுக்க முடியல. அந்தச் சூழ்நிலையில மனசெல்லாம் ஒரே குழம்பிய குட்டை மாதிரி இருந்துச்சு. இப்படி நான் ஒவ்வொரு முறையும் உங்கள விட்டு பிரிஞ்சு போய் உங்கள காயப்படுத்திட்டே இருக்கேன். இப்படிச் செஞ்ச தப்புக்காக என்ன முழுசா வெறுத்துடுவீங்களா?” என்று கண்களில் தேங்கிய கண்ணீருடன் காதலும் சேர்த்து அவள் கேட்ட அடுத்தக் கணமே, அவளை இறுக்கி அணைத்திருந்தான் அவளது கிருஷ்ணன்.
“என்ன மன்னிச்சுடுவீங்களா க்ரிஷ்?” என்று அவள் வாஞ்சையுடன் கேட்க, அக்கணமே அவள் நெற்றியில் அழுந்த பதிந்தன கிருஷ்ணாவின் இதழ்கள்.
ஆனால் மறுகணமே முகம் கொஞ்சம் கடினமாக, “உன்ன இப்படி கைக்குள்ள வச்சு, நெஞ்சுக்குள்ள புதைச்சுக்கணும்னு நினச்சுருக்கற ஒருத்தன விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சுடி? உன்னோட மனச பத்தி நீ என்கிட்டே சொல்லியிருக்கணும்ல? நான் உன்கிட்டயோ, இல்ல, நீ என்கிட்டயோ கோபப்பட்டா, அப்பறம் வேற யார் இருக்காங்க நமக்கு? நீ உன்னோட பிரச்சனை எல்லாம் என்கிட்ட கொட்டியிருக்கணும்ல? அஞ்சு வருஷமா தவியா தவிச்சுட்டேன்டி, நீ என்ன விட்டு விலக விலக என்னோட உயிரே கரைஞ்சுட்டேன் டி” என்று இன்னமும் அந்தத் தவிப்பு மாறாது கிருஷ்ணா கூற, இன்னுமே இறுக்கமாய்க் கட்டிக் கொண்டு கண்ணீர் உகுத்தாள் அவள்.
“உன்னோட வாழ்க்கைக்கு மொத்தமா நான் இருக்கணும்னு நினச்சுருந்தா, நீ என் வாழ்க்கையையே சுழியமாக்கிட்டு போய்ட பார்த்த இல்ல?” என்று அவன் இன்னுமே தவிக்க
“ஹையோ இல்ல க்ரிஷ். நான் இப்படி எல்லாம் ஆகும்னு நினைக்கல. தயவு செஞ்சு உங்கள கஷ்டப்படுத்தினதுக்காக என்ன மன்னிச்சுடுங்க..” என்று லயா பரிதவித்துக் கொண்டிருந்த வேளையில்
அதையெல்லாம் உணராத கிருஷ்ணாவோ, “ஆனா.. இப்ப நீ என்கிட்ட முழுசா இருக்க. இதோ நான் நினைச்ச மாதிரி என் கைக்குள்ள இருக்க.. முழு மனசோட இருக்க..” என்று அவன் பாட்டிலும் நிறைவாய்க் கூறிக் கொண்டிருக்க, அதுவரையிலும் கூட இல்லாது, அப்பொழுது.. அந்நொடி தான் லயாவிற்கு முழுமையாய் உணர்ந்தது அவனது காதலும்.
அதற்குப் பதிலாய் தன்னைப் பற்றியும் அவள் மேலும் விளக்க முனைய, அவனோ ஒற்றை விரல் கொண்டு அவள் இதழுக்கு பூட்டிட்டான்.
“எனக்கு இனி வேறெந்த விளக்கமும் தேவையில்லை லயா. நீ என்னோடவளா.. எனக்கானவளா.. என்கூட இருக்கறதே போதும்” என்று கூறிவிட்டு அவளை அணைத்தவாறே, நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியாய் உறங்க முற்பட்டான் அவன்.
இறுதியில் ஒற்றை நிம்மதி பெருமூச்சு மட்டுமே அவளிடம்.
இப்படியாய் கிருஷ்ணாவின் காதல் அபியின் மனவெளியில் மழையெனத் தூறிக் கொண்டிருக்க, அதே வேளையில், விண் மிதக்கும் கார் முகிலும் தன் திரை விலக்கி.. வான் மழையைப் பொழிந்துகொண்டு இருந்தது.
அந்த மாயக் கண்ணன் குழலின், மயக்கும் லயம் போல, அந்த மழையோடு கரையும் மண்ணின் வாசம் போல, அவன் மனதோடு உறைந்தாள் அணங்கவளும்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings