டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“அம்மா! அம்மா!” என்று, தன் தாயின் படத்தின் முன் நின்று அழுது அரற்றி பாசம் தேடினான், அவளுக்கு கொள்ளி வைத்து சடங்கு முடித்து சற்றுமுன் வீடு திரும்பிய அவள் மூத்த மகன் சொக்கன்.
அவன் கால்களை கட்டிக்கொண்டு, விரல் சூப்பிக்கொண்டு, “என்ன தூக்கிக்க அண்ணா” என மழலை குரலில் கெஞ்சி நின்ற தங்கை புவனாவை வாரி அணைத்தபோது, அவன் அழுகை மேலும் அதிகரித்தது.
“ஏய் சனியங்களா ஏன் இப்டி அழுது எழவு எடுக்கறிங்க! அந்த ராங்கிக்கார சிறுக்கி செத்ததே மேலு. ஷயரோகம் புடிச்சவ இருந்து என்னத்த சாதிக்கப் போறா? போய் துணியெல்லாம் துவச்சிபோட்டு, வீட்டை சுத்தம் பண்ணுங்க!” என உரத்த குரலில், அவன் சிற்றன்னை காந்தம்மாள் ஆணையிட, சொக்கன் மௌனமாகி போனான்.
காலையில் இருந்து அவன் துக்கத்தால் அழுது அழுது தண்ணீர் கூட குடிக்கவில்லை.
“ரொம்ப பசிக்குதண்ணா” என்று குழந்தை அவனை மெல்ல சீண்ட, அவன் அந்த ராட்சசி சிற்றன்னையிடம் சென்று மெல்லிய குரலில் பயத்துடன் “சித்தி, புவனா பசிக்குதுன்றா” என கூனிக்குறுகி நிற்க
அவளோ “இன்னும் துணியக்கூட தொவச்சி போட்ல? அதுக்குள்ள கொட்டிக்கணுமா? அது இன்னா பசியோ, தரித்திர பசி! சரி சரி போய் அந்த வேலைய முடிச்சிட்டு வாங்க. அப்ரமா உங்க முஞ்சில பழங்கஞ்சிய ஊத்தறேன்! என் தல எழுத்து, இதுங்களுக்கு வேரா ஆக்கி கொட்ட வேண்டி இருக்கு” என சலித்தபடி முஞ்சியை காண்பித்தாள், அவன் சிற்றன்னை காந்தம்மாள்.
அருகில் சுடுசோறும் பதார்த்தமும் சாப்பிட்டு கொண்டிருந்த, அவள் பெற்றெடுத்த குழந்தையை பார்த்து, “ராசா! இருடா கண்ணு இதோ வந்து ஊட்டி விடறேன்!” என்றபடி தான் பெற்ற செல்வத்தை கொஞ்ச துவங்கி விட்டாள்.
துணி துவைத்தபடி அழுதுகொண்டே, சொக்கனின் நினைவுகள், தன் ஆருயிர் தாய் அன்னம்மாவுடன் வாழ்ந்த இனிய இளமை நாட்களை அசைபோட துவங்குகிறது.
முதல் குழந்தை என்பதால் அவனை சீராட்டி, பாலும், நெய்யும், தேனும், பழ வகைகளும் ஊட்டி செல்லமாய் வளர்த்தாள். தினமும் புதுப்புது பட்டு சட்டைகள், தங்க நகைகள் போட்டு அலங்காரம் செய்து அழகு பார்ப்பாள்!
அவன் தந்தை அன்னம்பேடு பெருமாள்சாமி, சென்னை ஆனகவுனியில் பெரிய பலசரக்கு கடை வைத்து, ஓஹோ என வியாபாரம் செய்து, வசதியோடு வாழ்ந்து வந்தார்.
அக்காலத்தில், “பெருமாள்செட்டி கடை” என்றால் சுற்றுவட்டாரத்தில் கனப்பிரசித்தம், அவர் கடையில் இல்லாத பொருளே கிடையாது என கூறலாம். நியாயம், நேர்மை, நாணயத்துடன் தரமான பொருட்களை விற்றதால் அவர் கடையில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.
அன்னம்மாள் தன் இரண்டாவது மகள் புவனாவின் பிரசவத்தின் போது, ரத்த போக்கு அதிகமாகி, உடல்நலம் குன்றி, பலவீனமாகி விடுகிறாள். போதாதகுறைக்கு அக்காலக்கட்டத்தில் கொடிய ஆட்கொல்லி நோயான “ஷயரோகம்” எனும் காசநோய் வேறு தொற்றிகொள்ள, அவள் படுத்த படுக்கையாகி விடுகிறாள்.
ஒரு கட்டத்தில் அவள் உயிர் பிழைப்பது அரிது என்று உணர்ந்த பெருமாள்சாமியின் அண்ணன்… அக்கால வழக்கப்படி, குழந்தைகளை கவனித்துக்கொள்ள, “காந்தம்மாள்” எனும் அழகிய ஏழை பெண்ணை, பெருமாள்சாமிக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கிறார்!
உயிர் பிரியும் தருவாயில் தன் கணவனின் கரங்களை பிடித்து “என் இரு குழந்தைகளையும் கைவிட்டு விடாதீர்கள்” என கெஞ்சி அழுதபடி, அன்னம்மாள் கடவுளடி சேர்கிறாள்!
தன் தாய் இறந்த அன்றே, சிற்றன்னையின் கொடுமை அரங்கேற்றம் ஆவதை கண்டு ,அஞ்சி நடுங்கி போகிறான் சொக்கன்.
நாட்கள் செல்ல செல்ல அவள் ஆளுமையும் அதிகாரமும் தலைவிரித்து ஆட துவங்குகிறது.
வியாபார மும்முரத்திலும், தன் இரண்டாவது மனைவியின் அழகிலும் மூழ்கிப்போய், பெருமாள்சாமி எதையும் கண்டும் காணாததுபோல் விலகி நிற்கிறார்!
தன் முதல் மனைவியின், குழந்தைகள் மேல் பரிவும் பாசமும் உள்ளுக்குள் இருந்தும், காந்தம்மாவின் பயத்தால், சூழ்நிலை கைதியாகி, கையாலாகாதவனாக மாறிவிடுகிறார் பெருமாள்சாமி!
அவருக்கு சொந்தமான இரண்டு பெரிய வீடுகளையும், மற்றுமுள்ள அனைத்து சொத்துக்களையும் கணவனை மிரட்டி பயமுறுத்தி, தன் பேருக்கு உயில் எழுதி வாங்கி வைத்து கொள்கிறாள் காந்தம்மாள்!
மாற்றான் தாய் கொடுமையால், சொக்கனும் அவன் தங்கையும் சொல்லொணா துயருற்று, மெலிந்து போய் விடுகின்றனர். காலை முதல் இரவு வரை மாடுபோல் அவர்களை வேலை வாங்கி, கால் பட்டினி அரைப்பட்டினி போட்டு சித்ரவதை செய்கிறாள்!
எந்த உறவினரையும் அண்டவிடாது தனிக்காட்டு ராணியாக கோலோச்சுகிறாள்! சொக்கன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன்.. எப்போதும் முதல் மாணவனாக திகழ்வான். அவன் படிப்பை நிறுத்த அவள் எவ்வளவோ முயன்றும் அது மட்டும் அவளால் இதுநாள்வரை முடியவில்லை.
வருடங்கள் உருண்டோடிட, பெருமாள்சாமி… தன் மனைவி தந்த கொடுமைகளாலும், கவலைகளாலும், அவள் செய்த ஆடம்பர செலவுகளாலும், வியாபாரம் நொடிந்துபோய், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி விடுகிறார். கொத்துசாவி கந்தம்மாவிடம் போய் சேர, சொக்கன் படிப்பு ஒருவழியாக நிறுத்தப்படுகிறது.
இறுதி ஆண்டு படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதை அவன் இதயம் தாங்கி கொள்ள மறுத்தது.அவன் பைத்தியம் போல் ஆகி, தினமும் காலையில் பள்ளி சென்று, படிக்கட்டில் அமர்ந்து தேம்பிதேம்பி அழுவதை காணும், அவன் நண்பர்கள் “சொக்கா நீ நிச்சயம் ஒரு நாள் பள்ளிக்கு திரும்பிவந்து பல சாதனைகள் செய்வாய்” என ஆறுதல் கூறி தேற்றி அவனை வீட்டுக்கு அனுப்பி வைப்பர்!
ஆடி அமாவாசை அன்று அதிகாலை பெருமாள்சாமி உயிர் துறக்க, தனக்கு என்று இருந்த ஒரே ஆதரவான அருமை தந்தையின் பிரிவால், செய்வதறியாது சோகத்தில் மௌனித்து நிற்கிறான் சொக்கன்! அவன் விழி நீரும் வற்றி விட, அவன் கண்கள் தன் தகப்பனின் முகத்தையே உற்று நோக்கி நிலை குத்தி நின்றது.
16ஆம் நாள் சடங்குகள் சம்பிரதாயங்கள் முடிந்தகையோடு உறவினர்கள் கலைந்து சென்றனர்!
அடுத்த நாள் காலை காந்தம்மாள் “அப்பா கண்ணுங்களா! வீட்ட விட்டு கிளம்புங்க.. இனிமேலும் உங்களுக்கு வடிச்சி கொட்டி சவர்ஷணை பண்ண என் உடம்புல தெம்பில்ல! எங்கனா போய் பொழைச்சுக்கங்க!” என கூறி, துணிமணிகள் கொண்ட ஒரு தகர பெட்டியை அவனிடம் கொடுத்து, அவள் இரக்கமின்றி கூறி விரட்டுகிறாள்.
இதை சற்றும் எதிர்பாராத சொக்கன், “சித்தி! எங்கள வீட்ட விட்டு அனுப்பாதிங்க சித்தி! நீங்க சொல்ற வேலை எல்லாம் செய்றோம் சித்தி! எங்களுக்கு வேற யாரையுமே தெரியாது சித்தி! எங்கள காப்பாத்துங்க சித்தி!”என அவள் காலை பிடித்து கெஞ்சினான்.
அவள் அவனை எட்டி உதைத்து “ஏண்டா எரும மாடுமாரி வளந்து நிக்கிறியே! ஒரு வேலை வெட்டி செஞ்சி உன் தங்கச்சிய காப்பாத்த துப்பில்ல உனக்கு. தூ! சோம்பேறி பயலே!” என கண்டபடி திட்டி, கழுத்தை பிடித்து தரதர வென்று தெருவில் தள்ளி விட, தெருவே கூடி நின்று, அந்த கொடுமைக்காரியின் வாய் சவடாலுக்கு பயந்து வேடிக்கை பார்த்து பரிதாப்படுகின்றனர்!
அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது, கருப்பு கோட் அணிந்த ஆஜானுபாகுவான வக்கீல் ஒருவர், அந்த பிள்ளைகளை அரவணைத்தபடி கூட்டி வந்து, “அம்மா! என் பெயர் கிருஷ்ணன்! நான் உன் கணவரின் வக்கீல் நண்பர்! என் கட்சிக்கார நண்பரான உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் நடந்த சேதியை சொல்லவே, விரைந்து வந்தேன். உங்கள் கணவர் இந்த வீடு உட்பட, அவர் தன் சுயசம்பாதனையான இந்த மொத்த சொத்துக்களையும், தன் முதல் தாரத்தின் இரு பிள்ளைகளுக்கும் உயில் எழுதி, என்னை கார்டியனாக நியமித்து ரெஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்து உள்ளார்.. இதோ அந்த உயிலின் ‘டூப்லிகேட்’ காபி! ஒர்ஜினல் என்னிடம் பாதுகாப்பாக உள்ளது” என கூறி உயிலை காண்பிக்க…
காந்தம்மாள்ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று, வக்கீல் என்றும் மரியாதை கொடுக்காமல் “யோவ் வக்கீலு! என் ஊட்டுகாரரு, எல்லா சொத்தையும் என் பேருக்கு ஏற்கனவே உயில் எழுதி வச்சாச்சு.. யார்கிட்ட ஏமாத்தி, கத சொல்ல வந்திருக்கே” என கூறி அவள் பாதுகாத்து வைத்திருந்த உயிலை கொண்டு வந்து காட்ட..
வக்கீல் பொறுமையாக அதை படித்து பார்த்து “அம்மா! அது பல ஆண்டுகளுக்கு முன்னாடி எழுதிய பழைய உயில்! மேலும் இது ரிஜிஸ்டர் செய்யப்படாத, இரு சாட்சிகள் கையெழுத்து இடப்படாத, வெற்று காகிதத்தில் எழுதிய உயில். ஆனால் என்னிடம் உள்ளது, ஆறு மாதங்களுக்கு முன் உன் கணவனால் எழுதப்பட்டு, சாட்சியங்களுடன் பக்காவாக ரெஜிஸ்டர் செய்யப்பட்ட புது உயில்! புதிய உயில் எழுதபட்டவுடன் பழைய உயில் தானாகவே காலாவதி ஆகிவிடும் என்பது சட்டிவிதி.
மேலும் அவர் தன் புதிய உயிலில், தான் இதற்குமுன் ஏதேனும் உயில் எழுதி வைத்திருந்தால் அது செல்லுபடி ஆகாது என்றும் தெளிவாக புது உயிலில் குறிப்பிட்டு உள்ளார்! ஆகவே உங்கள் உயில் செல்லுபடி ஆகாது.
மேலும் அவர் தன் உயிலில், மூத்த தாரத்து பிள்ளைகள், நீங்கள் உயிரோடு வாழும்வரை உங்களுக்கு மாதமாதம் பணஉதவி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்! ஆகவே நீங்கள் வீட்டை காலி செய்து, அவர்களிடம் வீட்டை ஒப்படைத்து உடனே வெளியற வேண்டும்” என கண்டிப்பான தொனியுடன் விளக்கி கூற..
உண்மை அறிந்து நடுநடுங்கிப்போய், “அடப்படுபாவி மனுசா! இப்டி என்ன மோசம் பண்ணிட்டு போய்ட்டியேடா!.. நீ நாசமா போக!” என நடு ரோட்டில் அமர்ந்து ஒப்பாரி வைத்து சபிக்க துவங்க
சுற்றி இருந்தோர், “நீதானே அவரை ஏமாற்றினாய்.. அவர் உனக்கு எந்த துரோகமும் செய்யவில்லையே” என தங்களுக்குள் முணுமுணுத்தபடி கலைந்து சென்றனர்.
ஆனால் சொக்கனோ மெல்ல வக்கீலிடம் சென்று, “ஐயா என் சித்தி எங்களுடன் இருக்கட்டுமே. அவங்களுக்கு எங்கள விட்டா வேற யார் இருக்காங்க?” என்று அவர் கரங்களை பிடித்து கேட்டு கொள்ள
அவர் விழிகள் ஆச்சர்யத்தில் பிரகாசித்து “சரி தம்பி! உங்கள் விருப்பப்படியே செய்து விடலாம்! உன் நல்ல மனசுக்கு கடவுள் உனக்கு துணை புரியட்டும்” என ஆசீர்வதித்தார்.
சொக்கன் தன் சிற்றன்னையின் கரங்களை நேசமுடன் பற்றி “சித்தி! நீங்க கவலப்படாதீங்க! நீங்க தம்பியுடன் இந்த வீட்டிலேயே ராணிபோல இருங்கள்!”என ஆறுதல் கூறி அவளை கைத்தாங்கலாக வீட்டுக்குள் அழைத்து சென்றான். அவள் முகம் இப்போது சற்றே உருமாறி இருந்தது!
பிகு:
பிற்காலத்தில் சொக்கன் படித்து, தன் அறிவாலும் ஆற்றலாலும் மதராஸ் மாகாண கலக்டராகிறான். அவன் சிற்றன்னை மனம் திருந்தி அவனுக்கு நிஜமான அன்பான தாயாக மாறி விடுகிறாள். இது ஒரு உண்மை நிகழ்வின், கற்பனை கலந்து புனையப்பட்ட சிறுகதை!
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings