in

உயிரின் வாசம் (சிறுகதை) – ✍ விடியல் மா. சக்தி, ஈரோடு மாவட்டம்

உயிரின் வாசம் (சிறுகதை) 

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ரியின் ஒரு கரையில் நிறைய வீடுகள் இருந்தன. மறுகரையில் குட்டையான மரங்களை கொண்ட காடு. கிழக்கு எல்லையில் ஒரு கோவில் இருந்தது. அந்த ஊர் நகரத்தை ஒட்டியே இருந்ததால் சாலையில் போக்குவரத்துக்கு குறைவில்லாமல் இருந்தது. வாரக்கடைசி நாட்களில் அந்த ஏரியில் படகு(வல்லம்) சவாரி இருப்பதனால் ஏரியில் கனிசமான கூட்டம் நிறைந்து இருக்கும்.

ஏரியின் அருகில் ஒரு சிறிய சிறுவர் பூங்காவும் இருப்பதனால் குழந்தைகள் கூட்டம் பள்ளி விடுமுறை நாட்களில் அதிகமாக இருக்கும்.

அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் உள்ள குழந்தைகள் தினமும் பள்ளி முடிந்தவுடன் அங்கு வந்து விளையாடுவதும் உண்டு.

பூங்காவின் அருகில் உள்ள துருவ்குமார் வீட்டில், ‘வீடியோ கேம்: விளையாட்டில் மும்முரமாக இருந்தான். அதுவும் அந்த ‘கேம்’ கடலில் சுறாக்களுக்கும், திமிங்கலகளுக்கும் இறையாகாமல் நீந்தி தப்புவது எப்படி என்ற ‘கேம்’.

துருவ்குமார் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் சுறுசுறுப்பான மாணவன். அந்த ‘கேமை’ அவன் ரொம்ப சுலபமாக விளையாட கற்று வைத்திருந்தான். ஒவ்வொரு ‘ஸ்டெப்புகளிலும்’ ராட்சத சுறாக்களை கொன்று தப்பித்து வந்து ஜெயித்து முடித்தான்.

அந்த சமயத்தில் அவன் கூட படிக்கும் அவனது நண்பன் ஆரவ் வந்து அவனை வெளியில் சென்று விளையாட அழைத்தான். ஆனால் அவனுக்கு விளையாட செல்வதற்கு ஆர்வமில்லை இருந்தாலும் அவனது நண்பன் ஆரவ் க்காக கால்பந்து விளையாட முடிவு செய்து, அவன் கொண்டு வந்திருந்த கால்பந்தை எடுத்துக் கொண்டு பூங்காவின் வலது புறம் உள்ள புல்வெளியில் விளையாட உள்ளே நுழைந்தனர்.

அங்கே ஏறகனவே இவர்களை விட வயது மூத்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை பார்த்து விட்டு இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.

இவர்கள் இருவரையும் கவனித்த அந்த பெரிய சிறுவர்கள் இவர்களையும் விளையாட அழைத்தனர். அதற்கு இருவருமே, “வேண்டாண்ணா நாங்க வரல” என்று கூறினார்கள்

ஆனால் அவர்கள் சிறுவர்கள் இரண்டு பேரையும் பார்த்து, “அட சும்மா வாங்கடா” என்று அழைத்தனர். அழைத்தது மட்டுமின்றி இவர்களுடைய கால் பந்தை எடுத்து கொண்டு விளையாட ஆரம்பித்தனர். வேறு வழியின்றி ஆரவ்வும், துருவ்வும் அவர்களோடு சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர்.

இவர்கள் இருவரும் சிறுவர்களாக இருந்ததால் அவர்களுக்கு இணையாக விளையாட முடிய வில்லை. அவ்வப்போது கால் பந்தை வேகமாக அவர்கள் அடித்தனர். அதனால் பந்து பூங்காவின் கேட்டை கடந்து சென்று வெளியே விழுந்து விடும், அப்போது இந்த சிறுவர்கள் இருவரும் கேட்டை கடந்து பந்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தனர். இப்படி அவர்களோடு விளையாடியதில் இருவருமே களைத்து விட்டனர்.

தாங்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி போவதாக அந்த பெரிய சிறுவர்களிடம் கூறினர். அதற்கு அவர்கள் ‘இருங்கடா போலாம்’ என்று கூறி விட்டு அவர்களுடைய பந்தை திருப்பி தராமல் அதை வைத்து விளையாடிக் கொண்டே இருந்தனர்.

துருவ் அவர்களிடம் சென்று, “அண்ணா பந்தை கொடுங்கண்ணா நாங்க வீட்டுக்கு போறோம்” என மறுபடியும் கேட்டான்.

அந்த சமயத்தில் பெரிய சிறுவர்கள் பந்தை வேகமாக அடிக்க அந்த பந்து மறுபடியும் கேட்டை கடந்து அருகே இருந்த ஏரிக்குள் சென்று விழுந்து விட்டது.

அவர்கள் உடனே, “போங்கடா போய் பந்தை எடுத்துட்டு வாங்க” என கூறினார்கள்.

அதற்கு துருவ், “அண்ணா பந்து தண்ணிக்குள்ள விழுந்துருச்சுண்ணா எங்களால எடுக்க முடியாது ப்ளீஸ் எங்களுக்கு எடுத்து கொடுங்க” என்று கூறினான்.

அதற்கு அந்த பெரிய பசங்க அனைவருமே சிரித்தனர்,”ஏய் போங்கடா பந்து வேனுன்னா போய் எடுத்துங்குங்க” என்று கூறி விரட்டினர்.

ஆரவ் உடனே, “அண்ணா பந்து என்னோடதுண்ணா தண்ணிக்குள்ள போயி விழுந்துருச்சுண்ணா ப்ளீஸ் எங்களுக்கு நீச்சல் தெரியாதுண்ணா நீங்க யாராவது வந்து எடுத்து கொடுங்கண்ணா” என்று அழ ஆரம்பித்தான்.

அதற்கு அவர்கள், “டேய் யாருக்குடா இங்க நீச்சல் தெரியும் போ போ போய் எடுத்துக்க” என்று மீண்டும் கூறி விரட்டினர்.

ஆரவ் அழது கொண்டே துருவ்விடம், “டேய் வாடா எப்படியாவது எடுக்கலாம்” என்று அழைத்தான்.

இரண்டு பேரும் ஏரிக்கு அருகில் சென்றனர். பந்து தண்ணீருக்குள் கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருந்தது. துருவ் குச்சி எடுத்து கரையில்நின்ற படி எடுக்க முயற்சி செய்தான், ஆனால் அது கொஞ்சம் தள்ளிப் போனது.

அதற்கு ஆரவ், “டேய் எப்படி எடுக்குறது நான் பந்து இல்லாம வீட்டுக்கு போனா எங்க அம்மா திட்டி தீர்த்திடுவாங்க என்னடா செயறுது?” எனக் கேட்க

அதற்கு துருவ், “இருடா நான் தண்ணீருக்குள்ள இறங்கி எடுத்து தர்றேன்!” என்று கூற

அதற்கு ஆரவ், “டேய் துருவ் உனக்கு நீச்சல் தெரியுமாடா?”

“டேய் நான் வீடியோ கேம்ல பார்த்திருக்கேன் எப்படி நீச்சல் அடிக்கிறதுண்னு எனக்கு தெரியும், நான் எடுத்து தர்றன்டா!” என்று கூறி விட்டு தண்ணீருக்குள் இறங்கினான்.

அதை ஆரவ் தடுத்து, “டேய் வேண்டாம் பந்து போனா போகுது வாடா !”

“இருடா எடுத்துரலாம்” என கூறி கொண்டே மெல்ல,  துருவ் ஏரியின் தண்ணீருக்குள் இறங்கினான். கால் முட்டு வரைக்கும் தண்ணீருக்குள் இறங்கி கையை நீட்ட கைக்கு பந்து சிக்காமல் நகர்ந்து சென்றது.

மேலும் கொஞ்சம் இறங்கி சென்றான். அவனுக்கு இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி கையை நீட்டி எடுக்க முயற்சி செய்தான், ஆனால் அது மேலும் கொஞ்சம் தள்ளிப் போனது.

ஆரவ் கரையில் நின்று கொண்டே அழுதான், “டேய் துருவ் வேண்டாம்டா சொன்னா கேளு! “

அந்த பக்கம் நின்ற பெரிய சிறுவர்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர், ஒருவர் கூட தடுக்க வில்லை. துருவ் மேலும் இறங்கி கொஞ்சம் ஆழத்திற்கு செல்ல, மார்பளவு தண்ணீர் இருந்தது கொஞ்சம் தடுமாற சுதாரித்துக் கொண்டு பந்தை எடுக்க முயற்சி செய்தான்.

கரையில் நின்ற ஆரவ் பார்த்து பயந்து போய்  கத்தினான், “டேய் துருவ் வாடா திரும்பி வந்துருடா பந்து வேண்டாம்!!”

கொஞ்சம் கொஞ்சமாக துருவ்க்கு கழுதளவு தண்ணருக்குள் செல்ல நிறைய தடுமாறினான். கரையில் நின்ற ஆரவ் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே துருவ் தண்ணீருக்குள் காணாமல் போனான்.

அப்போது பயத்துடன் ஆரவ், “துருவ்…. துருவ்… டேய்… துருவ்!! என்று கத்தினான்.

அந்த பெரிய சிறுவர்கள் துருவ் தண்ணீருக்குள் மூழ்கியதை பார்த்து பயந்து ஓடிப் போய் விட்டனர். துருவ் மட்டும் கதறி அழுது கொண்டே வீட்டிற்கு திரும்பி ஓடினான்.

ஓடிய அவனோ அங்கிருந்த குழிக்குள் தடுக்கி விழுந்து உடலில் காயம் ஆனது. தட்டு தடுமாறி எழுந்து துருவ்வின் வீட்டை கடந்து ஓடிச்சென்று அவனுடைய அம்மாவிடம் சொல்ல அவன் அம்மாவோ, மும்முரமாக டீவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆரவ் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

அவனது காயங்களை மட்டும் பார்த்துவிட்டு, “ஏன்டா இன்னைக்கு போய் விழுந்துட்டு வந்துட்டியா சொன்னா கேட்க மாட்டேங்குற இப்ப பாரு காயமாக்கிட்டு வந்திருக்க!” என்று அவனை திட்ட ஆரம்பிக்க

அவனோ திக்கி திக்கி,  “அம்மா…. துருவ்… பந்து… தண்ணீக்குள்ள… போயிட்டான்!”

அவளோ அது புரியாமல் மேலும் திட்ட ஆரம்பித்தாள், “கொண்டு போன பந்தையும் தொலச்சிட்டியா, எத்தனை தடவ சொல்லுறது அங்க போயி விளையாடத இங்க உனக்கு என்ன இல்ல டீவி இருக்கு, கம்ப்யூட்டர் இருக்கு அதுலேயே ஏதாவது விளையாட வேண்டியது தானே இப்ப பந்து போச்சா இனி பந்து கிடையாது!!”

ஆரவ் பயத்தில் உளறினான்,  “அம்மா…. துருவ்.. தண்ணீக்குள்ள இறங்கி போயிட்டாம்மா!”

“என்னடா சொல்ற உளறாத இனிமே துருவ் வீட்டுக்கு போகாதே… சரியா… என்ன புரியுதா போகாதேன்னா போகாத அவ்வளவுதான்!”  என்று கண்டிப்புடன் கூறிவிட்டு சீரியலில் மூழ்க ஆரவ் பயத்துடன் டீவியை வெறித்து பார்த்துக் கொண்டே அழுது கொண்டே இருந்தான்.

அந்த பெரிய சிறுவர்களும் அவரவர் வீட்டிற்கு போய் அமைதியாக இருந்து விட்டார்கள். யாரிடமும் எதுவும் சொல்வதற்கு பயந்து கொண்டு துருவ் தண்ணீரில் மூழ்கியதைப் பற்றி எதுவுமே கூறவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து துருவ்’வோட அம்மா அவனை தேடிப் பார்த்து விட்டு, பக்கத்து வீட்டு பெரிய சிறுவர்களிடம் கேட்க சென்றாள். அவர்களோ பயத்துல நாம ஏதாவது சொல்ல போக நம்ம வீட்ல திட்டினா என்ன பன்றதுன்னு எதுவுமே சொல்ல வில்லை.

துருவ் வோட அம்மா அடுத்து ஆரவ் வீட்டுக்கு சென்று கேட்டாள். அப்போதுதான் ஆரவ் அழுது கொண்டே சொன்னதை கேட்டு கதறிக் கொண்டு அனைவரும் ஓடினார்கள். அதற்குள் அந்தப் பகுதி முழுவதும் செய்தி பரவ அந்த ஏரிக்குள் படகு எடுத்துக் கொண்டு தேட ஆரம்பித்தனர்.

பல பேர் பல விதமாய் ஐடியா கொடுத்தனர்.

“ஏம்ப்பா காற்றோட திசை அக்கரை பக்கமா அடிக்குது அக்கரையில தேடுங்க!” என்று யாரோ ஒருவர் சொல்ல படகை அக்கரை பக்கமா செலுத்தி தேடினர். நேரம் ஆக ஆக துருவ் வோட அம்மா கதறி கத்தி அழுதாள். பக்கத்துல நின்றவர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்லியபடியே நின்றனர். ஆரவ் வோட அம்மாவும் கண்ணீர் விட்டு அழுதாள்.

அங்கு நின்றிருந்த அந்த பதுனைந்து வயது சிறுவர்கள் வாயை மூடி நின்றிருந்தனர். அவர்களை யாரோ ஒருவர் விசாரித்துக் கொண்டிருந்தார்,

“ஏம்ப்பா அந்த பையன் தண்ணீருக்குள்ள இறங்கும் போது யாராச்சும் பாத்தீங்களா?” என்று கேட்க, யாருமே வாயை திறக்காமல் நின்றிருந்தனர்.

ஆரவ் மட்டும் அழுதபடியே பயத்தில் ஏதோ உளறி கொண்டே இருந்தான். படகில் நாலா பக்கமும் தேடியும் துருவ்’வை கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த பகுதியில் இருந்தவர் யாரோ தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து ஏரிக்குள் இறங்கி தேட ஆரம்பித்தனர்.

அந்த அதிகாரிகளில் ஒருவர் மட்டும், “இவங்கூட விளையாடியவன் யார்?” என்று கேட்க அந்த பெரிய பசங்க ஆரவ் வை மட்டும் கை காண்பித்தனர்.

உடனே அவர் ஆரவ் விடம் பொறுமையாக விசாரிக்க, தட்டு தடுமாறி அழுது கொண்டே நடந்ததை ஆரவ் கூறினான். அந்த அதிகாரி உடனே அந்த வீரர்களை எதிர்பாராது அவரே அந்த ஏரியின் கரையிலிருந்து சற்று தள்ளி தண்ணீருக்குள் இறங்கி தேட ஆரம்பித்தார்.

அவருடைய மார்பளவு தண்ணீருக்குள் துருவ் கிடைத்தான். அவனுடைய முடியை பற்றி அவர் இழுக்க முயற்சித்தார். ஆனால் அவரால் ஒற்றை ஆளாக இழுக்க முடியவில்லை.

அவர் உடனே கத்த, “ஏய் வாங்க வாங்க இங்கதான் இருக்கான்”

உடனே அங்கு நின்றிருந்த பெரியவர்கள் நாலைந்து பேர் தண்ணீருக்குள் பாய்ந்தனர். அனைவரின் முயற்சியில் துருவ் வை வேகமாக இழுத்து மீட்டனர்.

ஆனால் அவன் உயிர் உடலை விட்டு போயிருந்தது. அங்கிருந்த அனைவரும் ஓ.. வென கதறி அழுதனர். துருவ்வோட அம்மா அவனது உயிரற்ற உடலை கட்டி பிடித்து கத்தி கதற ஆரம்பிக்க அங்கிருந்தவரின் ஓலங்கள் அதிகரித்தது. அந்த அதிகாரி சற்று தள்ளிச் சென்று கண்ணீர் விட்டழுதார். ஆரவ் வோட அம்மாவும் கதறி அழுதாள்.

துருவ் வோட அம்மா, “உனக்கு என்னடா இல்லை ஏண்டா இங்க வந்து விளையாடின வீட்லேயே எல்லாமே இருக்கே மொபைல், கம்ப்யூட்டர் இருக்கு அதிலயே விளையாடத்தான சொன்னேன் நீ ஏண்டா இங்க வந்த! இப்படி உன்னை பறிகொடுக்கவா  பாத்து பாத்து வளர்த்துனோம்!”

அதற்குள் வெளியே சென்ற துருவ் வோட அப்பாவும் வந்து சேர்ந்தார். அவரோ அவர் மனைவியை திட்டிக் கொண்டே அழுதார், “ஏண்டி இதுதான் பையன பாத்துக்குற இலட்சணமா உங்களுக்கு என்ன குறை வச்சேன் எல்லா வசதியும் வீட்டுக்குள்ள இருக்குதே அப்புறம் ஏன்டி பையன வெளிய அனுப்பின!” என்று அழுதார். அங்கு நின்றிருந்த அனைவருமே அழுதனர்.

இதை எல்லாமே பார்த்துக் கொண்டு நின்றிருந்த பதினைந்து வயது சிறுவர்களும் அழுத படியே பயத்தில் நின்றிருந்தனர்.

அந்த தீயணைப்பு வீரர் மட்டும் இதை எல்லாம் கவனித்துக் கொண்டு அங்கிருந்த அனைவரிடமும் உரக்க கத்தினார்.

“நிறுத்துங்க எல்லாரும், ஒன்னு கேளுங்க எல்லாருடைய வீட்டு பசங்களையும் மொபைல், கம்ப்யூட்டர், டீவி அப்படீன்னு நவீன சாதனங்கள் வாங்கி கொடுத்து வீட்டுக்குள்ளேயே முடக்கி வச்சுட்டீங்க. அத்தோட அவங்ககிட்ட சகோதரத்துவம், மனிதாபிமானம் அப்படீனா என்னங்கறதையும் சொல்லிக் கொடுக்க தவறிட்டீங்க.

அப்புறம் அவங்களோட தன்னம்பிக்கை எல்லாத்தையும் கொன்னு புதைச்சுட்டீங்க பழைய காலத்துல சேர்ந்து விளையாடுன ஆர்வம் பசங்கள்ட்ட இப்ப இல்லாம ஆக்கிட்டீங்க நீங்களும் கம்ப்யூட்டர், மொபைல், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்ரா கிராம்முன்னு உள்ளிட்ட பல்வேறு, விஷயங்கள்ல மட்டுமே கவனத்தை செலுத்தி உங்களையும் முடக்கிகிட்டீங்க!”

“அப்புறம் இந்த பையன் எப்படி இறந்து போனான் தெரியுமா? இதோ இந்த ஏரியில கழுத்தளவு தண்ணிக்குள்ள மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துட்டான். அவனோட கால்கள் ஏரி புதை மணல புதைஞ்சு போச்சு அப்படியே உயிர் போயிடுச்சு.

இதுக்கெல்லாம் நீங்க எல்லாருமே காரணம்தான்! பசங்ககிட்ட சகோதரத்துவம் இல்ல, தைரியம் இல்ல, இப்படி எல்லாத்தையுமே இழந்து நிக்குற இந்த பசங்க பயந்து போய் யாருகிட்டயும் சொல்லல அந்தப் பையன் மூழ்குனவுடன் உடனே தகவல் கொடுத்து இருந்தாங்கனா உயிரோட மீட்டு இருக்கலாம்!

ஆனா அந்த தைரியம் எல்லாம் எங்க போச்சு மொபைல் ஃபோன் கேம்முக்குள்ள முடங்கிப் போச்சு. இனிமேலயாவது திருந்துங்க. பிறந்த குழந்தைக்கு மொபைல் போன்லதான் தாலாட்டு! மூன்று வயசு குழந்தை மொபைல் போன் இல்லாம சாப்பிடறதே இல்ல, தூங்குறதில்ல! இப்படி எல்லாமே மொபைல் போன்!

இந்த கலாச்சாரம் எங்க போயிட்டு இருக்கு கொஞ்சமாவது உணருங்க மொபைல் உங்களுக்கு உதவத்தான் வந்துச்சு ஆனா இப்ப மொபைல் இல்லாம ஒரு செகண்ட் கூட யாரும் இல்லை!

இது மாறனும்முன்னா நீங்க மாறனும்! இப்படியே போனால் நீங்க எல்லாருமே அதனோட அடிமைகள். அது என்ன சொல்லுதோ அத மட்டும் தான் செய்யவீங்க. பழைய காலத்துக்கு மாறுங்க, பசங்கள ஒன்னு சேரந்து விளையாட அனுமதிக்கனும்! அதோட போன்ல விளையாட அனுமதிக்காதீங்க. இது மாறுனாவே எல்லாமே மாறும்!

அப்பதான் இந்த உயிர்களோட வாசனை புரியும். அத விடல்லேன்னா அடுத்து உள்ள உயர்களோட மகத்துவம் புரியாது. பக்கத்து வீட்டில் என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது இதுதான் இப்ப இங்க இருக்குற நிலைமை!

அந்த நிலைமை மாறனும், உயிர்களோட வாசம் புரிஞ்சுக்கனும் இனிமேலாவது மாறுங்க இறந்து போன இந்த சிறுவன பாருங்க உங்கள மாத்திக்குங்க இந்த சிறுவனுக்கு நடந்தது அடுத்து உங்க வீட்லயும் நடக்காம இருக்கனும்னா பழையகால கலாத்துக்கு மாறுங்க இதுதான என்னோட வேண்டுகோள்!!” என்று கூறி கண்களைத் துடைத்துக் கொண்டே நகர்ந்தார்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. இப்போது நடக்கும் நவீன அவலங்களை கதை எடுத்துச் சொல்கிறது 👍👍👍👍👍👍👍

சொக்கனை காப்பாற்றிய உயில் (சிறுகதை) – ✍ டாக்டர். பாலசுப்ரமணியம்

பாட்டியும் பக்கத்து வீடும் (சிறுகதை) – ✍ நாமக்கல் எம்.வேலு