in

பாட்டியும் பக்கத்து வீடும் (சிறுகதை) – ✍ நாமக்கல் எம்.வேலு

பாட்டியும் பக்கத்து வீடும் (சிறுகதை)

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

க்கா, நீ அடுத்த தடவை ஊருக்கு வரும்போது எனக்கு என்ன வாங்கிட்டு வருவே?”

பாட்டி வீட்டுக்கு போகிறோம் என்ற நினைவு வந்தவுடனேயே, போன தடவை ஊருக்குப் போய்விட்டு திரும்புகிற நாளன்று சுஜிதா அப்படிக் கேட்டதுதான் நினைவுக்கு வந்தது மஞ்சுவுக்கு.

பாட்டி வீட்டுக்கு பக்கத்து வீட்டுப் பெண்தான் சுஜிதா.  ஐந்து வயது குட்டி. ஒன்றாவது போய்க் கொண்டிருந்தாள்.

நேற்று சாயங்காலம் ஆபீசிலிருந்து வீட்டிற்கு வரும்போது காலையில் பாட்டி வீட்டுக்கு கிளம்புவதைப் பற்றி யோசித்துக் கொண்டே வந்த போதுதான், சுஜிதா கேட்டது நினைவுக்கு வர,  அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு போக வேண்டுமே என்று நினைத்து, சட்டென மொபெட்டின் வேகத்தை குறைத்து பக்கத்தில் என்னென்ன கடைகள் இருக்கின்றன என்று பார்வையை அலையவிட்டாள்.

ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தெரிந்தது. வண்டியை பூட்டிவிட்டு கடைக்குள் நுழைந்து பார்வையை சுழற்றினாள்.

சுஜிதா மிகவும் துருதுருவென்று இருப்பாள்.  ‘என்ன வாங்கலாம்?’ என்று யோசித்துக் கொண்டே நடக்கும்போது, ஒரு ப்ளூ கலர் ரிமோட் கார் பார்வையில் விழுந்தது. விலையைக் கேட்டாள், பணத்தைக் கொடுத்து அதை வாங்கிக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்ததும் அம்மா, “மஞ்சு, யாருக்குடி  அந்த பொம்மைக் கார்?” என்றாள்

மஞ்சு விவரம் சொன்னாள். “ஓஹோ…அந்த துறுதுறு குட்டிக்கா… சரிதான்…கொண்டு போய்க் கொடு, விளையாடட்டும்” என்றாள்.

ஒருவாரம் லீவு போட்டாகி விட்டது. தங்கை பார்கவியுடன் ஊருக்கு கிளம்புவதாக திட்டம். முதலில் அம்மாவும்தான் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் தஞ்சாவூரிலிருந்து மாமாவும் அத்தையும் வரப் போவதாக தெரிந்ததும், அம்மா பின் வாங்கிவிட்டாள்.

தாத்தாவும் பாட்டியும் மட்டும் திருச்சியில் இருக்கிறார்கள். வருடத்தில் இரண்டு மூன்று முறையாவது பாட்டியைப் போய் பார்த்துவிட்டு வந்துவிடுவாள் மஞ்சு. 

போன தடவை போகும்போதுதான், பட்டி வீட்டுக்கு பக்கத்து வீட்டிற்கு ஒரு புதிதாய் ஒரு குடும்பம் வந்திருந்தது. அவருக்கு எல்.ஐ.ஸி.யில் வேலை. அந்தம்மாவுக்கு உள்ளூரில் ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சர் வேலை. அவர்களது குழந்தைதான் சுஜிதா, அதே ஸ்கூலில் ஒன்றாவது படித்தாள்.

மஞ்சுவும் அவளது அம்மா, தங்கை மூவரும் போன தடவை கும்பகோணம் போயிருந்தபோது ஏதோ பூர்வஜென்ம பந்தம் போல வந்து அப்படியே மஞ்சுவிடம் ஒட்டிக் கொண்டாள் சுஜிதா.

அவளது அம்மா கூப்பிட்டாலும் போகவில்ல, பார்கவி கூப்பிட்டாலும் போகவில்லை. அம்மா கூட சொல்லி சிரித்தாள், “அதென்னடி உன்கூட மட்டும் அப்படியே வந்து ஒட்டிக்கறா, எங்ககேட்டே வரவே மாட்டேங்கறா… முற்பிறவியில நீங்க ரெண்டுபேரும் திக் பிரண்ட்ஸோ”

சுஜிதாவின் பேச்சும், சிரிப்பும் மஞ்சுவை வெகுவாகவே கவர்ந்து விட்டது. போனதடவை அங்கிருந்து ஊருக்கு கிளம்பும்போதுதான், “அடுத்த தடவை ஊருக்கு வரும்போது எனக்கு என்ன வாங்கிட்டு வருவே?” என்று கேட்டிருந்தாள்.

“ஏதாவது வாங்கிட்டு வருவேன், உனக்கு புடிச்ச மாதிரி…” என்று சட்டென சொல்லி விட்டாள் மஞ்சு.

ஆனாலும் அவளிடமே “என்ன வேண்டும்?” என்று கேட்டிருக்கலாமோ என்று பின்னால் தோன்றியது. அவளுக்குப பிடித்ததை வாங்கிக் கொடுத்தால் ரொம்பவும் சந்தோசப்படுவாளே என்றும் தோன்றியது.

அதற்குப் பிறகு அதை மறந்தே போனாள். நேற்று ஆபீசிலிருந்து  திரும்பி வரும்போது டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நுழைந்து பார்வையை சுழற்றி கொண்டே வரும்போதுதான், போனதடவை சுஜிதாவின் அம்மா சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

ஒரு காரைக் காட்டி, “இந்தக் கார்தான் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும், எப்போவும் கையிலேயே வெச்சுக்கிட்டே இருப்பா…. தூங்கும்போது கூட அதை நெஞ்சோட அணைச்சுக்கிட்டே தூங்குவான்னா பாத்துக்கோயேன்”

அது ப்ளூ கலர் கார்.

“அவளுக்கு என்னவோ ப்ளூ கலர்தான் ரொம்பப் பிடிக்குது. பிராக் வாங்கினா ப்ளூ கலர்ல கேட்பா.  ஸ்கூல் பேக் வாங்கினா ப்ளூ கலர்ல கேட்பா… அவ்வளவு ஏன், ஸ்கூல்க்கு கொண்டுபோற டிபன்பாக்ஸ் பேக் கூட ப்ளூ கலர்தான்னா பாத்துக்கோயேன்”

ஸ்டோருக்குள் பார்வையை சுழற்றிகொண்டே வரும்போதுதான் அதே ப்ளூ கலர் ஒன்று அவளது பார்வையில் பட்டது. அதுவும் ரிமோட் கார். பார்த்ததும் கண்டிப்பாக சந்தோசப்படுவாள் என்று நம்பினாள் மஞ்சு. வாங்கிக்கொண்டு வந்திருந்தாள் மஞ்சு.

கிப்ஃட் பேப்பர் சுற்றி, “சுஜ்ஜி குட்டிக்கு மஞ்சு அக்காவின் நினைவுப் பரிசு” என்று ஸ்டிக்கர் ஒட்டி வைத்துக் கொண்டாள்.

ம்மா இரண்டு பை நிறைய வத்தல், வடாம், சாம்பார் பொடி என்று பொட்டலங்களாகக்கட்டி பைகளுக்குள் வைத்திருந்தாள். அத்துடன் இவர்களது துணிமணிகள் அடங்கிய இரண்டு தோள்பையும் சேர்த்துத் தூக்கிகொண்டு பஸ்ஸ்டாண்ட் வரை ஆட்டோவில் வந்து கும்பகோணத்திலிருந்து நேராக திருச்சி போகும் பஸ் பார்த்து ஏறிவிட்டார்கள் இருவரும்.

பாட்டிக்கு ஏற்கனவே போன் போட்டு அம்மா சொல்லி விட்டாள், மஞ்சுவும் பார்கவியும் ஊருக்கு வருகிறார்களென்று.  உடனேயே பாட்டியும், “சரி வரட்டும் வரட்டும், மத்தியான லஞ்ச் நேரத்துக்கு வந்துடுவாங்கள்ள… மஞ்சுவுக்கு பிடிச்ச வடைப் போட்ட மோர்க்குழம்பும், பார்கவிக்குப் பிடிச்ச முட்டைப் பொரியலும் செஞ்சு அசத்திப்புடுறேன் அசத்தி” என்றிருந்தாள். 

பாட்டி ரொம்பவும் பாசமாய் இருப்பாள் பேத்திகளிடம். ஆனால் அம்மாவிடம் மட்டும் ஒவ்வொருமுறை பேசமாட்டாள். அம்மாத்தான் சொல்லுவாள், “அவங்க அப்படித்தான், திடீர்னு கொஞ்சுவாங்க… திடீர்னு மிஞ்சுவாங்க, சிலசமயம் சண்டை வந்து பத்து நாளைக்கு கூட பேசமாட்டங்க… அப்புறம் திடீர்னு கண்ணைக் கசக்க்கிக்கிட்டு அழுவாவாங்க…” என்பாள்.

பத்து மணிக்கு புறப்பட்ட பஸ் திருச்சி சென்ட்ரலில் கொண்டுவந்து இறக்கும் போது மணி ஒன்று. அங்கிருந்து ஆட்டோ பிடித்து சோமரசம்பேட்டை வந்து சேர்வதற்குள் மேலும் அரைமணி நேரம் ஓடிவிட்டது.

மஞ்சுவுக்கு ரொம்பவும் பசி. வீட்டிற்குள் நுழைந்ததும் பாட்டி ஓடிவந்து பேத்தி இருவரையும் கட்டிக்கொண்டாள்.

பைகளை இறக்கி வைத்து விட்டு, “பாட்டி முதல்லே சோத்தைப் போடு” என்றாள் மஞ்சு.

“தயாரா இருக்குடியம்மா… சாதம், கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, முட்டைப் போரியல், வத்தல், அப்பளம், ரசம்…எல்லாம் தயாரா டைனிங் டேபிள்ள எடுத்து வெச்சிருக்கேன்.  போய்ட்டு முக கை கால் அலம்பிட்டு வந்து உட்காருங்க…தட்டை எடுத்து வைக்கறேன்” என்றாள் பாட்டி.

சொன்னது போலவே தயாராக இருந்தது. மஞ்சுவும் பார்கவியும் சாப்பிட்டு முடித்தார்கள். அவர்களுக்கு பிடித்ததை அள்ளியள்ளி வைத்து அவர்களை திக்குமுக்காட வைத்தாள் பாட்டி.

உண்ட களைப்பில் போய் மெத்தையில் பொத்தென சாய்ந்த மஞ்சு அப்படியே தூங்கிப் போனாள். திடுக்கிட்டு கண் விழித்தபோது மணி நான்கு.

அப்போதுதான் அந்தக் கேள்வி எழுந்தது அவளுக்குள், இந்நேரம் பத்து தடவையாவது வந்து போய்க்கொண்டிருப்பாளே சுஜிதா. என்ன ஆயிற்று… ஊருக்கு ஏதும் போயிருக்கிறார்களா, இல்லை மறுபடியும் வேறு ஊருக்கு மாற்றிக்கொண்டு போய்விட்டார்களா?

ஓடிப்போய், தனது தோள்பையைத் திறந்து பெட்டியை வெளியே எடுத்தாள். ஒரு ஸ்வீட் பாக்ஸும் வாங்கியிருந்தாள் மஞ்சு. இரண்டையும் ஒரு சிறு துணிப் பையில் போட்டுக்கொண்டு எழுந்தாள்.

அந்த நேரம் பார்த்து அந்தப் பக்கம் வந்த பாட்டி, “என்ன மஞ்சு…என்ன பையில… எங்கே கிளம்பிட்டே?” என்றாள்.

“பாட்டி… பக்கத்து வீட்டிலே ஒரு குட்டிப் பாப்பா இருக்குமே… சுஜிதா… அவளுக்கு ஒரு ரிமோட் கார் வாங்கிட்டு வந்தேன், அவளுக்கு பிடிக்குமேன்னு… அதான் அவங்களைப் பார்த்துட்டு, ஸ்வீட்டும் கொடுத்துட்டு வரலாம்னு….” என்று இழுத்தாள்.

சட்டென முகம் மாறினாள் பாட்டி. “வேண்டாம், அங்கெல்லாம் நீ ஒன்னும் போக வேண்டாம்” என்றாள்.

திகைத்தாள் மஞ்சு… ஒன்றும் புரியாமல், “ஏன் பாட்டி?” என்றாள்.

“போக வேண்டாம்னா போக வேண்டாம்” என்றாள். அப்படியே சோர்ந்து சேரில் உட்கார்ந்து விட்டால் மஞ்சு.

அங்கிருந்து நகர்ந்தபடியே, “சரியான ராங்கிக் காரி அவ அம்மா…ரெண்டு மாசமா திரும்பிக்கூட பார்க்கறதில்லை… நீ ஒன்னும் அங்கே போகவேண்டாம், பேசவேண்டாம்” என்றாள் பாட்டி.

பாட்டியை எதிர்த்தால் கோவித்துக் கொள்வாள்.  அம்மாவிடமே சிலசமயம் சண்டைப் போட்டுக்கொண்டு பேசாமல் இருந்தவளாயிற்றே என்று நினைத்தபோது கொஞ்சம் வெறுப்பும் உண்டானது.

“ச்சே… இவர்களது சண்டையில் அந்த சின்னக் குட்டி என்ன செய்யும்… பார்த்தவுடன் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளுமே…. அங்கே போகவேக் கூடாது என்கிறாளே பாட்டி” என்று நினைத்தபோது பாட்டி மேல் வெறுப்பும் உண்டானது.

பையைத் திறந்து பார்த்தாள், கலர் பாக்ஸும் ஸ்வீட் பாக்ஸும் அவளைப் பார்த்து சிரிப்பது போலவே இருந்தது.

பாட்டி நகர்ந்து போனதும், அவளுக்குத் தெரியாமல் மெல்ல ஓடிப்போய் பார்த்து, பேசிவிட்டு வந்துவிட்டால் என்னவென்று நினைத்துக் கொண்டாள். வேண்டாம்… ஒருவேளை பின்னால் தெரிந்து போனால் நிச்சயம் கோபித்துக் கொள்வாள்.

“இனி நீ இங்கே வராதே” என்று கூட சொல்லக்கூடும். பாட்டி கொஞ்சம் முசுடு என்றுகூட அம்மா சிலசமயம் சொல்வதுண்டு.

அப்போது பார்த்து அங்கே வந்த பார்கவி, “அக்கா, பையை எனக்கா இன்னும் இங்கேயே வேச்சிக்கிட்டிருக்கே… போயி அந்தப் பாப்பாக்கிட்டே கொடுக்கலை…?” என்று கேட்டாள்.

அவளிடம், “வாயை மூடு” என்பது போல ஜாடை கட்டி பக்கத்தில் இழுத்து வைத்துக்கொண்டு, “பக்கத்து வீட்டோட சண்டை போல, அவங்க வீட்டுக்கு ஒன்னும் நீ போகவேண்டாம்னுட்டாங்க பாட்டி” என்றாள்.

பார்கவியின் முகம் கூட லேசாய் சோர்ந்தது. “சரி… பாட்டி சொல்லைத் தட்டாதே” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு சிரிக்க முயன்றாள் அவள்.

போனை எடுத்தாள் மஞ்சு. அம்மாவுக்கு போனை போட்டாள். விவரத்தைச் சொன்னாள்.

சிரித்தபடி, “இதென்ன புதிசா… நான் சொல்லலை… திடீர்னு கொஞ்சுவாங்க… திடீர்னு மிஞ்சுவாங்க. நான் போகும்போது கூட அப்படித்தான், ஒருதடவை அவங்களே ஓடி ஓடி பக்கத்து வீடுகள்ல பேசுவாங்க, மறுதடவை அங்கே போகாதேம்பாங்க. திடீர்னு திறக்கும், திடீர்னு மூடும். அப்படி ஒரு சுபாவம் அங்களுக்கு. சரி விடு… எப்போவாவது சான்ஸ் கிடைக்குமில்லையா, அப்போ கொடுத்துடு. எதுக்கும் நீயும் கொஞ்சம் அடக்கியே வாசி” என்றுவிட்டு போனை வைத்தாள்.

பார்கவி ஒரு தூக்குடன் வந்து, “அக்கா… இந்தாண்டை ஒரு அக்கா இருக்காங்கல்ல… அவங்களுக்கு மோர்க்குழம்புனா ரொம்பப் பிடிக்குமாம். பாட்டி கொடுத்திட்டு வரச் சொன்னாங்க…நான் போயிட்டு வர்றேன்… நீயும் வர்றியா?” என்றாள்.

திடீரென்று நினைவுக்கு வந்தது, போனதடவை மஞ்சுவிடமே ஒரு டிபன் பாக்ஸைக் கொடுத்து “சுஜிதாம்மாக்கு விஜிடபிள் புளாவ்னா ரொம்பப் பிடிக்கும், கொஞ்சம் கொண்டு பொய் கொடுத்துட்டு வா, சாப்பாட்டு நேரம் தாண்டிடப் போகுது” என்று சொல்லிக் கொடுத்தாள்.

என்ன ஆனாலும் சரி என்று முடிவுசெய்துகொண்டு சுஜிதாவுக்கு கொடுக்கவேண்டிய பையை எடுத்துக்கொண்டு பூனை போல மெல்ல அடியெடுத்து வைத்து வெளியேறினாள் மஞ்சு.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிரின் வாசம் (சிறுகதை) – ✍ விடியல் மா. சக்தி, ஈரோடு மாவட்டம்

    செக்கு மாடு (சிறுகதை) – ✍ இரஜகை நிலவன், மும்பை