in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (இறுதிப்பகுதி) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12    பகுதி 13    பகுதி 14     பகுதி 15     பகுதி 16    பகுதி 17    பகுதி 18    பகுதி 19    பகுதி 20    பகுதி 21    பகுதி 22    பகுதி 23   பகுதி 24

”ரிஷி, நீங்கள் வருவதற்கு முன்பு நான் தனியாகத்தானே போய் வந்தேன். என்னை யார் என்ன செய்யப் போகிறார்கள்?” என சிரித்தாள் தர்ஷணா.

“நீ அமைதியாகவே நடப்பதில்லை தர்ஷணா, நடப்பதற்கு பதில்  ஓடுகிறாய். ஸ்கூட்டரில் போகும் போது பறக்கிறாய், கொஞ்சம் மெதுவாகப் போக வேண்டும் தர்ஷணா. எங்கே அடிப்பட்டுக் கொள்வாயோ என்று பயமாக இருக்கிறது. ஒன்று செய்கின்றாயா? அன்று ஒரு நாள் மட்டும் ஆஸ்பத்திரிக்கு லீவ் போட்டு விட்டு நீயும் கான்பரன்ஸில் கலந்து கொள்” என்றான் கண்டிப்பான குரலில்.

ரிஷி தர்ஷணாவிடம் காட்டும் கரிசனத்தை எண்ணி சிரித்த ஜட்ஜ் பிரகாசம், நியூஸ் பேப்பரால் முகத்தை மூடிக் கொண்டார். சமையலறையில் இருந்த நீலா கூட சிரித்தாள்.

“உனக்கு என்னடி சிரிப்பு? இந்த தர்ஷணா ஸ்கூட்டரில் போனால் அப்படித்தான் வேகமாகப் போகிறாள். குடலே வாய்க்கு வந்து விடும் போல் இருக்கிறது, அவன் கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கிறது” என்றாள் சாந்தா.

“காலை நான் கொண்டு போய் விடுகிறேன். மாலை நீ போய் ஒரு ஆட்டோவில் தர்ஷணாவை அழைத்துக் கொண்டு வந்து விடு நீலா” என்றான் ரிஷி.

“இதேது ரொம்ப வம்பாய் இருக்கிறதே. மிருதுளா முதல் பிறந்த குழந்தை வரை எல்லோரும் சிரிப்பார்கள். நானே வந்து விடுவேன். நீலா சரியான பயந்தாங்கொள்ளி, ஒரு  சின்ன இடி இடித்தாலே அர்ஜுனா அர்ஜுனா என்பாள்” என்று சிரித்தாள் தர்ஷணா.

ஆனால், சொன்னது போலவே தர்ஷணாவை கொண்டு போய் ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு வந்தான் ரிஷி. வரும் போது மிருதுளாவிடம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை, தர்ஷணாவைப் பார்ககும் போதெல்லாம் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

 “மிருதுளா என்ன விஷயம்? வீட்டில் ஏதாவது சந்தோஷமான விஷயமா? நீயே உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறாயே ?”

“என் வீட்டில் எதுவும் இல்லை. உன் வருங்காலக் கணவர் தான், உன்னை மாலையில் வீடு திரும்பும் போது நீலாவுடன் ஆட்டோவில் போகும்படி  பார்த்துக் கொள்ளச் சொன்னார். அப்படி நீலா வரவில்லையென்றால் நான் கொண்டு போய் உன்னை வீட்டில் விட வேண்டுமாம். எனக்கென்ன வேறு வேலை இல்லை என்று நினைத்துக் கொண்டாரா ரிஷி? அடேயப்பா, எவ்வளவு அக்கறை” என்றவள், பேஷண்ட்டுகள் காத்திருக்கின்றனர் என்பதைக் கூட கவனிக்காமல் கலகலவென்று சிரித்தாள்.

மாலை நான்கு மணிக்கு தர்ஷணாவிற்கு நீலாவிடமிருந்து போன். “அம்மா, இன்று மத்தியானம்  முதல் ஆட்டோ ஸ்ட்ரைக்காம், எனக்கு எப்படி  உங்களை அழைத்து வருவதென்று தெரியவில்லை” என்றாள்.

“நீ ஒன்றும் கவலைப்படாதே, நான் மிருதுளாவுடன் வந்து விடுகிறேன்” என்றாள் தர்ஷணா.

“என்ன சொன்னாள் நீலா?” என மிருதுளா கேட்க, தர்ஷணா சிரித்தாள்.

“ரிஷி எவ்வளவு தீர்க்கதரிசி பார். நீலா வராவிட்டால் நீ கொண்டு போய் விடு என்றாரல்லவா உன்னிடம்? அது பலித்து விட்டது. ஆட்டோ ரிக்ஷாக்கள் ஸ்ட்ரைக்காம், எப்படி வருவது என்று கேட்கிறாள் நீலா” என்று சிரித்தாள் தர்ஷணா.

மிருதுளாவும் சிரித்து விட்டாள். “நீயும் ரிஷியும் என்னை பெர்மனென்ட் டிரைவராகவே ஆக்கி விட்டீர்கள்போல் இருக்கிறதே. சரி நான் கொண்டு போய் விடுகிறேன், ஆனால் ஒரு கண்டிஷன்”

“என்ன?”

“போகிற வழியில்  நம் பாலாமணி டீக்கடையில் ஒரு போண்டாவும்  டீயும் சாப்பிட்டுப் போக வேண்டும், சரியா?”

“நீயும் உன் ரசனையும். டாக்டராடி நீ, சரியான அழுக்குப் பண்டாரம். ஒரே ஒரு வாளித் தண்ணீரில் காலையிலிருந்து மத்தியானம் வரை எல்லா டீ டம்ளர்களையும் முக்கி முக்கி எடுக்கிறானே. முதலில் கார்ப்பரேஷனுக்கு எழுதிப் போட்டு அந்த டீக்கடை மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்ல வேண்டும்” என்றாள் தர்ஷணா முகத்தைச் சுளித்தவாறு.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவள் செய்யும் போண்டாவை மட்டும் சாப்பிட்டுப் பார், பிறகு சொல்வாய். கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டால் ஸ்கூட்டர் சவாரி” என்றாள் மிருதுளா சிரித்தவாறு. இருவரும் பேசிச் சிரித்தவாறு தங்கள் டியூட்டி நேரம் முடிந்ததும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர்.

“நீ  இங்கேயே இரு, பார்க்கிங்கிலிருந்து என் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்” என்று பத்தடி தூரம் தான் நடந்திருப்பாள்.

எவனோ ஒருவன் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து குறி பார்த்து தர்ஷணா மேல் ஒரு கத்தியை எறிந்தான். அவளது கழுத்தைக் குறி வைத்திருப்பான் போல் இருக்கிறது, கொஞ்சம் தவறி இடது தோளிற்கு அருகே மார்பில் குத்தி கீழே விழுந்தது. வலி தாங்காமல் அலறினாள் தர்ஷணா. வேகமாக பலமாக எறிந்ததில் ஆழமாக கத்திப் பதிந்து ரத்தம் பீறிட்டு அடித்தது, தர்ஷணா வலியாலும் பயத்தாலும் அப்படியே உட்கார்ந்து விட்டாள்.

“பிடியுங்கள் பிடியுங்கள்” என்று மிருதுளா கத்திய கத்தலில் கேட்டிலிருந்த வாட்ச்மேனும் பொதுமக்களும் ஓடிச் சென்று அவனைப் பிடித்தனர்.

மருத்துவமனை வாசலிலேயே அவ்வாறு நடந்ததால், மிருதுளா உடனே அவளுக்குத் தேவையான எல்லா ட்ரீட்மென்ட்டும் கொடுத்தாள். தர்ஷணா வீட்டிற்கும் தகவல் தெரிவித்தாள். மருத்துவமனை நிர்வாகமே போலீசுக்கு தெரியப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டது.

உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிந்ததால் இரத்தம் அதிக சேதாரமாகவில்லை. ஜட்ஜ் பிரகாசமும், சாந்தாவும், நீலாவும் உடனே ஒரு வாடகைக் காரில் வந்திறங்கினர். ரிஷியும், கான்பரன்ஸைக் கான்ஸல் செய்துவிட்டு நேரே மருத்துவமனைக்கு வந்து விட்டான். எக்ஸ்-ரே’விலும் எல்லாம் சரியாக இருந்தது.

“தர்ஷணாவை ஒரு நாள்  ஐ.சி.யூ’வில் வைத்துப் பார்த்து விட்டு நாளைக்கு வார்டிற்கு அனுப்பி விடலாம், நாளை மாலையே கூட டிஸ்சார்ஜ் செய்து விடலாம்” என்றாள் மிருதுளா.

ரிஷி மருத்துவமனையிலேயே இருந்தான். அன்று இரவே அனஸ்தீஸியாவின் மயக்கம் தெளிந்தது. அடுத்தநாள் மாலை மருத்துவமனையின் பார்மாலிட்டிகளை முடித்துக் கொண்டு, தன் பெற்றோரின் துணையோடு தர்ஷணாவை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டான் ரிஷி. அங்கே மாதவன், நிர்மலா, விக்னேஷ், சியாமளா முதல் ரோஷிணி நேஹா வரை எல்லோரும் இருந்தனர்.

“எதற்கு இத்தனை கூட்டம்?” என்று முணுமுணுத்தாள் தர்ஷணா. தர்ஷணாவுடனே பிரியாமல் இருந்தாள் நித்யா.

நித்யா தர்ஷணாவிடம் ரகசியமாய், “இதை யார் செய்திருப்பார்கள் தெரியுமா? எனக்குக் காலில் சூடு வைத்தாளே அந்த சித்தி தான் செய்திருப்பாள்” என்றாள் கடுப்பாக.

“உத்தேசமாக எந்த செய்தியும் வேண்டாம் நித்யா. குற்றவாளியைக் கண்டுபிடிப்பது போலீஸ் வேலை. நாம் சும்மா இருந்தாலும் ரிஷி விட மாட்டார். அவர்களே பார்த்துக் கொள்ளட்டும், நீ வாயை விடாதே” என்று அடக்கினாள் தர்ஷணா.

அடுத்த நாள் காலை வீட்டிற்கே வந்து விட்டாள் மிருதுளா. வந்தவுடன் செப்டிக் ஆகாமலிருக்கவும் வலியைக் குறைக்கவும் இஞ்ஜெக்ஷன் போட்டு மருந்துகள் கொடுத்தாள்.

“வழக்கமாக இந்த மாதிரிக் கேஸ்களையெல்லாம் மூன்று நாட்கள் கழித்துத் தானே டிஸ்சார்ஜ் செய்வீர்கள், என்னை மட்டும் சீக்கிரமே அனுப்பி விட்டீர்கள்” என்று சிரித்தாள் தர்ஷணா.  பக்கத்தில் ரிஷி அவள் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“எல்லாம் இந்த  ரிஷியால் தான். நீ இருக்கும் வார்டில் டியூட்டி நர்ஸ் வருவதற்குக் கூட ஆயிரம் கேள்விகள் கேட்டு உள்ளே அனுப்பினார். என்னையே மெட்டல் டிடெக்டர் வைத்துத் தான் உள்ளே அனுப்ப வேண்டும் என்று சொல்லுவார் போலிருந்தது. அதனால் தான் ‘போய்யா நீயாயிற்று உன் பெண்டாட்டியாயிற்று’ என்று அனுப்பி விட்டோம். மருத்துவமனைக்குள் ஏன் கேமிரா வைக்கவில்லை என்று நம் சீப் டாக்டருடன் வேறு சண்டை. ‘நம் ஆஸ்பத்திரியில் பிளட் பேங்க்கே இல்லை, இதில் கேமிரா எங்கே பிக்ஸ் பண்ணுவது… பட்ஜெட்டில் இடம் இல்லை’ என்றார். ரிஷி புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார். ரிஷக்குத் தெரியாமல் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே போய் விட்டார்” என்று சொல்லி அடக்க முடியாமல் சிரித்தாள்  மிருதுளா.

தர்ஷணாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வழக்கம் போல் சிரிக்க முயற்சித்தாள், ஆனால் அதிகமாக வலித்தது போலும். முகத்தைச் சுளித்துக் கொண்டு அமைதியாகி விட்டாள்.

“ரொம்ப வலிக்கிறதா தர்ஷணா?” கவலையோடு கேட்டான் ரிஷி.

“உங்களுக்குத் தெரியாதா? காயம் ஆறி விட்டால் வலி தெரியாது” என்று அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தாள் தர்ஷணா.

தன் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினாள் மிருதுளா. கிளம்பும் போது “உடம்பு கொஞ்சம் தேறியதும் பாலாமணி டீக்கடை தான்” என்று சொல்லி குறும்பாகச் சிரித்து விட்டுச் சென்றாள்.  

போலீஸ் இலாக்காவிலிருந்து வந்த தகவலின்படி, நிர்மலாவின் தங்கை தான் வீட்டிலிருந்த சமையல்காரர் உதவியுடன் தர்ஷணாவைக் கத்தியால் குத்த ஏற்பாடு செய்திருந்தாள் என்று கண்டுபிடித்து அவளை அரெஸ்ட் செய்து வைத்திருந்தனர். கடும் முயற்சிகளுக்குப் பிறகு அவள் கணவர் அவளை ஜாமினில் எடுத்தார்.

தர்ஷணாவிடம் வந்து, “நான் சொன்னது சரியாகி விட்டது பார்” என்றாள் நித்யா கிசுகிசுப்பாய்.

“இப்போது பேசு, இத்தனை வருடம் அந்தப் பிசாசுடன் எப்படித்தான் குப்பைக் கொட்டினாயோ?” என்று சலித்துக் கொண்டார் சாந்தா.

தர்ஷணாவின் காயம் நன்கு ஆறவே இரண்டு வாரங்கள் ஆயின, அதன் பிறகு ஒரு வாரத்தில் மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்தது. ரிஸப்ஷன் மிகச் சிறப்பாக முதலமைச்சர்  தலைமையில், அவர் ஆசியுடன் சென்னையில் நடந்தது.

திருமணம் முடிந்தவுடன் தர்ஷணாவுடன் அமெரிக்கா கிளம்பி விட்டான் ரிஷி. இப்போது, குட்டி தர்ஷணாவிடம் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

சியாமளா தன் அறையில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். இரண்டு வருடங்கள் எவ்வளவு வேகமாக ஓடி விட்டன. சிறையிலிருந்து ரிலீசாகி வெளியே வந்து விட்டான் கௌசிக், திருந்தியும் விட்டான். சரவணன், முருகேசன் அவர்களுடைய ஒர்க்ஷாப்பில் வேலையில் சேர்ந்து விட்டான்.

இப்போதெல்லாம் பணத்தை யாராவது இனாமாகக் கொடுத்தாலும் தொடுவதில்லை. வத்சலாவையும், நேகாவையும் திருப்தியாக சந்தோஷமாக வைத்துக் கொள்கிறான்.

விக்னேஷ் வீட்டிற்குப் பக்கத்து வீடு விலைக்கு வந்தது. அதை பேரம் பேசி வத்சலா பேரில் வாங்கி கிரயம் செய்து கொடுத்து விட்டான் விக்னேஷ்.

கன்ஸாஸ் மாகாணத்தில் புல்-ஸ்காலர்ஷிப்பில் எம்.எஸ். முடித்துவிட்டு, காம்பஸ் இன்டர்வியூவில் அங்கேயே வேலைத் தேடிக் கொண்டான் விஷ்ணு. நித்யா பி.ஈ. முடிப்பதற்காகக் காத்திருந்தான், தினம் அவளுடன் அரைமணி நேரம் கட்டாயம் அமெரிக்காவிலிருந்து பேசி விடுவான். அந்த நேரம் அவர்களுடையது.

அத்தைக்கு ரொம்ப சந்தோஷமாக நேஹா, ரோஷிணியுடன் பொழுது கழிந்தது. பலவித பூக்கள் கொண்ட தொடுத்த பூமாலை போலானது குடும்பம் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள் அத்தை.

சியாமளா இவ்வளவையும் யோசித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்து உட்கார்ந்த விக்னேஷ், அவள் தோள் மேல் கை வைத்துத் தன் பக்கமாக மெதுவாகத் திருப்பனான்.

“பலமான  யோசனையா என் கண்ணம்மாவிற்கு?” என்றான் அவள் முகத்தைத் தன் இருகரங்களால் ஏந்தியபடி.

தாமரையாய் மலர்ந்த முகத்துடன், அவன் மார்பில் புதைந்துக் கொண்டாள் சியாமளா.    

                                                              

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 3) – ஜெயலக்ஷ்மி

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 5) – முகில் தினகரன், கோவை