in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 23) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12    பகுதி 13    பகுதி 14     பகுதி 15     பகுதி 16    பகுதி 17    பகுதி 18    பகுதி 19    பகுதி 20    பகுதி 21    பகுதி 22

பூனை போல் அடி மேல் அடி வைத்து மெதுவாக நடந்து வந்த அவளைப் பார்த்து ரிஷியும் அவன் அப்பாவும் வாயைக் கையால் மூடி வாய்க்குள் சிரித்துக் கொண்டனர்.

ஏன் அம்மா இப்படி மெதுவாக வருகிறீர்கள்?”  என்று குறும்பு கொப்பளிக்கக் கேட்டான் ரிஷி.

“நீங்கள் இருவரும்  ஏன் இப்படி மெதுவாக வாய்க்குள்ளே சிரிக்கிறீர்கள்?” என்றாள் லேசான எரிச்சலுடன். “பாவம் தர்ஷணா, ரொம்ப டயர்டாக தூங்குகிறாள். சிறிய சத்தம் கூட அவளை எழுப்பி விடக் கூடாதென்று தான்  இவ்வளவு அமைதியாக வந்தேன். ஆனால் உங்கள் இருவருக்கும் என்னைப் பார்த்தால் ரொம்ப கிண்டலாக இருக்கிறது” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.

அவள் கோபித்துக் கொண்டதற்கும் சிரித்தனர். தர்ஷணா தூங்கி எழுந்ததும், நீலா கொடுத்த டீ கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டு, தன் மருத்துவமனைக்குப் போன் செய்து, அகல்யாவின் நலத்தையும், பிறந்த குழந்தையின் நலத்தையும் விசாரித்தாள்.

தர்ஷணாவிற்குத் தொடரச்சியாக ஒரு வாரம் நைட் டியூட்டியாக இருந்தது. அகல்யா குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்குச் சென்றாள். கிளம்பும் முன் தர்ஷணாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றியைத் தெரிவித்தாள் அகல்யா.

“அகல்யா, என் கடமையைச் செய்வதற்கு நீ நன்றி தெரிவிக்க வேண்டாம். உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள். குட்டிப் பாப்பாவிற்கும் எங்கள் வாழ்த்துக்கள். ஹெல்த் சம்பந்தமாக எந்த உதவி வேண்டுமானாலும் உடனே எங்களுடன் தொடர்பு  கொள்ளுங்கள்” என்று விடைகொடுத்தாள்.

மூன்று நாட்கள் கழித்து அகல்யாவிடமிருந்து போன்.

“டாக்டர் தர்ஷணா, நான் உங்கள் வீட்டிற்கு வரலாமா?”

“என் வீடு என்று எங்கும் கிடையாது அகல்யா. இது டாக்டர் ரிஷியின் வீடு, நான் அவர்கள் வீட்டு விருந்தாளி”

“நான் அங்கு வரலாமா? அந்த அங்கிளிடமும் ஆன்டடியிடமும் கேட்டுச் சொல்கிறீர்களா? நான் மன்னிப்பு கேட்க வேண்டும், முக்கியமாக டாகடர் ரிஷியிடம்”

“நான் அவர்களிடம் கலந்து தான் சொல்ல முடியும். ஒரு மணி நேரம் அவகாசம் தருவீர்களா அகல்யா?” என்று அவளிடம் கூறி விட்டுப் போனை வைத்தாள்.

பிரகாசமும் , சாந்தாவும், “அவள் ஏன் இங்கு வர வேண்டும்? எங்கள் குடும்பத்தில் எவ்வளவு கஷ்டம் இவளால்?” என்று கோபித்துக் கொண்டனர்.

“துன்பத்திற்குப் பின் வரும் இன்பம் என்பது போல் தர்ஷணா நம் வீட்டிற்கு வந்து விட்டாள். அவள் அப்படி ஓடிப் போனதால் தானே எனக்கு என் தர்ஷணா கிடைத்தாள், அதனால் கோபித்துக் கொள்ளாதீர்கள். தர்ஷணாவின் பேஷண்ட் என்ற அளவில் அவளை வரவேற்போம்” என்றான் ரிஷி.

அகல்யா தன் கணவருடனும் குழந்தையுடனும் வந்தாள். ஜட்ஜ் பிரகாசத்தின் காலிலும், சாந்தாவின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டாள். ரிஷியிடமும் தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டாள். ஆனால் ரிஷியோ, ”மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். பட், தேங்க் யூ சோ மச் “ என்றான்.

“எதற்கு ?” என்றாள் அகல்யா.

“ஓடி விட்டதற்கு” என்று சிரித்தான் ரிஷி.

“ஆனால் நான் மாட்டிக் கொண்டேன்” என்று சிரித்தான் அகல்யாவின் கணவன்.

“எங்களுக்குள் எந்தக் காதலுமில்லை  கத்திரிக்காயுமில்லை, ஆனால் திருமணம் என்றதும் இவரில்லாமல் வாழ முடியாது என்ற பயம் வந்து விட்டது. அதனால் தான் உங்களுக்கு அந்த அவமானம்” தன் நிலையைத் தெளிவாக உணர்த்தினாள் அகல்யா.

அவள் பேச்சில் எல்லோரும் சமாதானம் அடைந்தார்கள் என்றே கூற வேண்டும். விடைபெற்றுக் கிளம்பினாள் அகல்யா. அவள் போகும் போது  சாந்தா வெற்றிலைப் பாக்குடன், பழம், பூ, ஒரு ஜாக்கெட் துண்டு வைத்துக் கொடுத்தாள். வந்தவர்களுடன் சகஜமாகப் பேசி குழந்தையின் கையில் ஒரு  ஐநூறு  ரூபாய் வைத்தான் ரிஷி. தர்ஷணாவிற்கு, ரிஷியின் தெளிவடைந்த மனமும் முகமும் நிம்மதியை அளித்தது.

“ஆனாலும் இந்தப் பெண்ணுக்கு தைரியம் அதிகம் தான். திருமணப் பந்தலில் ஓடிப் போகவும் தைரியம் வேண்டும். கையில் ஒரு அரிவாளைக்  கொடுத்தால் ஐயனார் சாமி தான். குழந்தையோடு வந்து நம்மிடமே மன்னிப்பு கேட்கிறாளே, அதற்கும் தைரியம் வேண்டும்” என்றாள் சாந்தா அவர்கள் போன பிறகு.

“எல்லாம் தலையெழுத்து, யார் யாருக்கு என்ன எழுதியிருக்கிறதோ அதுபடி தான் நடக்கும்”  என்றார் ஜட்ஜ்.

“ஆன்ட்டி, நான் மத்திப்பாளையம் ஆஸ்ரமத்திற்கு நாளை போக வேண்டும். நீங்கள் வருவீர்களா?” என தர்ஷணா கேட்க

“நாளை மறுநாள் நாம் சென்னை கிளம்ப வேண்டும், ஞாபகமிருக்கிறதா? நாளை ஆஸ்ரமத்திற்குப்  போய் விட்டு வந்தால் டயர்டாகி விட மாட்டாயா?”  என்றாள் சாந்தா.

“டயர்டெல்லாம் ஆக மாட்டேன் ஆன்ட்டி. நாளை போகவில்லை என்றால் இந்த வாரம் அனுப்பும் ரிப்போர்ட் டிலே ஆகிவிடும்” என்றாள் தர்ஷணா .

“எதற்காக ஆஸ்ரமத்திற்கு?” என்றான் ரிஷி.

“வாரம் ஒரு நாள் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை ஆஸ்ரமத்தில் உள்ளவர்களை செக்-அப் செய்வாள். சில நாட்களில் தர்ஷணாவுடன் மிருதுளா போவாள், அவள் போகாத அன்று நான் போவேன்” என்றாள் சாந்தா.

“நாளை நான் போகிறேன்” என்றான் ரிஷி.

“நான் கொஞ்சம் துணிகளை எடுத்து வைத்திருக்கிறேன், அதையும் கொண்டு போய் ஆஸ்ரமத்தில் கொடுத்து விடுங்கள்” என்றாள் சாந்தா.

அன்று இரவு மிருதுளாவிடமிருந்து போன். “தர்ஷணா… நாளை எனக்குக் கொஞ்சம் அர்ஜன்ட் வேலை வந்து விட்டது, நீ சாந்தா ஆன்ட்டியை அழைத்துக் கொண்டு மத்திப்பாளையம் போய் வருகிறாயா?” என்றாள்.

“நீ கவலைப்படாதே, நாளை என்னுடன் ரிஷி வருகிறார்” என்றவள், மேலும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தாள்.

அடுத்த நாள் காலை ஏழு மணிக்கெல்லாம் இருவரும், டிபன் சாப்பிட்டு விட்டு  டிரைவருடன் காரில் கிளம்பி விட்டனர். அடுத்தடுத்து பெய்த மழையினால் போகும் வழியெல்லாம் பச்சைப் பசேல் என்று அழகாக இருந்தது.  அந்த ஆசிரமமே ஒரு தென்னந்தோப்பில் அமைந்தது போல் வரிசையாக நிறைய தென்னை மரங்கள். கொஞ்ச தூரம் சென்றவுடன் பத்தடி  அகலத்திற்கு பதினைந்தடி நீளத்திற்கு பெரிய தண்ணீர் தொட்டி, தொட்டியில் முக்கால் பாகம் வரை தண்ணீர் இருந்தது.

“இந்தத் தொட்டி எதற்கு?” என ரிஷி கேட்க

“கொஞ்சம் நீச்சல் தெரிந்த பெரிய பிள்ளைகள் சிறிய பிள்ளைகளுக்கு நீச்சல் சொல்லித் தருவார்கள். அவர்கள் ஒருமணி நேரம் தண்ணீரில் அட்டகாசம் செய்து சென்ற பிறகு பறவைகள் வந்து தண்ணீர் குடிக்கும். இந்த ஹோமில் இருக்கும் பசுக்களுக்கு இது தான் தண்ணீர் தொட்டி. மாலை நேரத்திற்குள் தண்ணீர்  கால் தொட்டியாகக் குறைந்து விடும். பெரியவர்களும் இந்தத் தொட்டியின சுவர்களின் மேல் உட்கார்ந்து கதை பேசுவார்கள். மல்ட்டி பர்பஸ் தொட்டி” என சிரித்தாள் தர்ஷணா.

அழகிய சிவப்புக்கலர் சாடின் சல்வார் கமீஸ் அணிந்திருந்தாள் தர்ஷணா. மெல்லிய துப்பட்டா, இரட்டைப் பின்னல். அவளுடைய பளிங்கு வெள்ளை நிறத்திற்கு சிவப்புநிற சல்வார் கமீஸ் மிக அழகாக இருந்தது. யாரோ வடஇந்தியப் பெண் போல் இருந்தது. தன் செல்போனை எடுத்து அவளுக்குத் தெரியாமல் ஒரு போட்டோ எடுத்தான் ரிஷி.

அந்தத் தோப்பில்  அவள் நின்று சிரித்தது ஏதோ தேவதையைப் போல் இருந்தது. தன் செல்போனை எடுத்து மேலும் சில போட்டோக்கள் எடுத்தான். ரிஷி இந்தியா வந்ததிலிருந்து அவன் செல்போனில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போஸில் தர்ஷணா தான் நிரம்பியிருந்தாள். இருவருமாகத் துணி மூட்டைகளை உள்ளே எடுத்துச் சென்றனர். கார் டிரைவர் ஒரு பெரிய மூங்கில் கூடையை எடுத்து வந்தார்.

“இது என்ன?” என  ரிஷி கேட்க

“இது முழுவதும்  சர்க்கரைப் பொங்கலும், வெண்பொங்கலும், வடையும் தான் அம்மா. பெரிய அம்மாவும், ஜட்ஜ் ஐயாவும் தான் கொடுத்தார்கள்” என்றான் டிரைவர்.

ரிஷிக்கு அந்த டிரைவர் புதியவர், அதனால் கூடையைப் பிரித்துக் காட்டச் சொன்னான். உள்ளே இரண்டு எவர்ஸில்வர் தூக்குகள் மூடியோடு இருந்தன. திறந்து பார்த்தால் ஒன்றில் வெண்பொங்கல், ஒன்றில் சர்க்கரைப் பொங்கல். நெய்யின் வாசனையும், ஏலக்காய் வாசனையும், பொன்னிற முந்திரிப் பருப்பும் உள்ளத்தை அள்ளியது.

“இதைக் கொடுத்தனுப்புவதாக எங்களிடம் அம்மாவோ, அப்பாவோசொல்லவில்லையே?” என்றனர் தர்ஷணாவும் ரிஷியும்.

“நீங்கள் தான் வயதானவர்களுக்கு நெய்யும் சர்க்கரையும் ஆகாது கொடுக்கக்கூடாது என்றீர்களாம், அதனால் தான்” என்றார் டிரைவர் தர்ஷணாவிடம்.

ரிஷி உடனே போனில், “அம்மா, எவ்வளவு நெய் போட்டு வெண்பொங்கலும், சர்க்கரைப்பொங்கலும் அனுப்பியிருக்கிறீர்கள். இதில் எண்ணெயில் குளித்த வடை வேறு. இந்த ஹோமில் இருப்பவர்கள் எல்லாம் வயதானவர்கள் என்பது மறந்து விட்டதா அம்மா” என்றான்.

“வீட்டில் ஒரு டாக்டர் தர்ஷணாவையே சமாளிக்க முடியவில்லை, இதில் இவன் வேறே. ஆஸ்ரமத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், ஆளுக்கு இரண்டு ஸ்பூன் தான் வரும். எத்தனை நாள் ‘சப் ‘ பென்று சாப்பிடுவார்கள்” என்றாள் சாந்தா.

துணி மூட்டையைக் காரியதரிசியிடம் கொடுத்து எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்கச் சொன்னார்கள். அதே போல் சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் கொடுத்தார்கள். அந்த உணவை அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் போது, அவர்கள் முகத்தில் காணப்பட்ட சந்தோஷம் இருவர் உள்ளத்தையும் உருக்கி விட்டது.  டிரைவர் கூடத் தன் கண்களை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டார்.

வழக்கமாக செய்யும் எல்லாப் பரிசோதனைகளையும் அவர்களுக்கு செய்து விட்டு, அங்கேயே ஒரு ரிப்போர்ட் தயாரித்து நகல்களையும் எடுத்தாள். கம்ப்யூட்டரில் எல்லா விவரங்களையும் சேகரித்து பாதுகாத்து கொண்டாள். ஒன்றை ஆசிரமத்து அலுவலகத்திற்கும், ஒன்றை  முதலமைச்சர் அலுவலகத்திற்கும் அனுப்பி விட்டு, ஒன்றைத் தன் பர்ஸனல் பைலில் வைத்துக் கொண்டாள்.

“முதலமைச்சர் அலுவலகத்திற்கு எதற்கு தர்ஷணா?” என்று கேட்டான் ரிஷி.

“இந்த ஆஸ்ரமத்தைப் பற்றிச் சொன்னவரே முதலமைச்சர் தான். முடிந்த போது  அங்கே போய் ஏதாவது உதவி செய் என்றார் நம் முதல்வர், அதனால் தான் இந்த  ரிப்போர்ட் அவருக்கு” என்றாள் தர்ஷணா”

“ஓ… சரி கிளம்பலாமா” என்றான் ரிஷி.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என்னைக் கொல்லாதே (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    வாடகை வீடு (சிறுகதை) – ரேவதி பாலாஜி