in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (இறுதிப்பகுதி) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14 பகுதி 15  பகுதி 16  பகுதி 17  பகுதி 18  பகுதி 19

பகுதி 20  பகுதி 21

“நல்லவேளையாகக் கழுத்தில் கத்திபடவில்லை. ஆபத்து கட்டம் நீங்கி விட்டது. ரத்தப்போக்கு நிறைய ‌ஆகி விட்டதாலும், பயந்து விட்டதாலும் தான் மயக்கமாகி விட்டார்” என்றார் பெரிய டாக்டர்.

“பேஷண்ட்டிற்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை, யாரும் தொந்தரவு செய்யக் கூடாது” என்றார் இஸ்மாயில்.

“நான் மட்டும் இப்போது போய் பார்க்கலாமா டாக்டர்?”  என்றான் சபரீஷ். அவன் கண்கள் கலங்க, குரல் நடுக்கத்தோடு கேட்டது டாக்டருக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“ICUவில் இருப்பதால் பேஷண்டை டிஸ்டர்ப் செய்யாமல் பார்த்து விட்டு உடனே வந்து விடுங்கள்” என்றார்.

சபரீஷ்வர் உள்ளே ஓடினான். சுமனா அவள் பக்கத்தில் இருந்த மெடிக்கல் ‘சார்ட்’டில் என்னவோ எழுதிக்கொண்டு இருந்தாள். கிருத்திகா கிடந்த கோலம் அவனை உலுக்கி விட்டது.

மருத்துவமனை உடையில், கழுத்திற்கும், தோளிற்குமாய் போடப்பட்ட பெரிய கட்டு. குளுகோஸ் வாட்டர் ஒரு பக்கம் ஏறிக் கொண்டு இருந்தது. ஒரு பக்கம் ரத்தம் ஏறிக் கொண்டு இருந்தது. அந்த குளுகோஸ் வாட்டரில் பல மருந்துகள் வெவ்வேறு டியூப்களில் ஏறிக்கொண்டு இருந்தது.

‘காலையில் புடவையில் தேவதை மாதிரி இருந்தாளே என் கண்மணி, இப்போது இப்படி அலங்கோலமாக்கி விட்டார்களே’ என்று துக்கத்திலும் கோபத்திலும் துடித்தான். லேசாக அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான், எந்த அசைவும் இல்லை.

மீனாட்சியின் கணவர் சுந்தரம் சபரீஷ்வருக்கு போன் செய்தார். கத்தியை எறியச் சொன்னவன் இளங்கோ தான். குத்தியவன் பணத்திற்காக செய்தவன். இளங்கோவையும் கைது செய்தாகி விட்டது என்று தெரிவித்தார்.

‘எல்லாம் இந்த ஷீலாவோடு கிருத்திகா நட்பு கொண்டதால் தான். என்ன தான் இருந்தாலும் உடைந்த கண்ணாடி எப்படி ஒட்டாதோ அப்படித்தான் சொந்தங்களும். இனிமேல் என் கிருத்திகாவைத் தவிர வேறு சொந்தங்கள் எனக்குக் கிடையாது’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டான் சபரீஷ்வர்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் விஷயம் தெரிந்து பாதர் வந்தார். பெரியப்பா, பெரியம்மா, ஷீலாவும் வந்து சேர்ந்தனர். சபரீஷ் யாரோடும் பேசவில்லை. ஷீலா மட்டும் இந்தத் தவறுகளுக்கு தானும் ஒரு காரணமோ என்று வருந்தினாள். டாக்டரின் அனுமதியோடு, கிருத்திகாவின் படுக்கை அருகில் அமர்ந்து பைபிள் படித்துக் கொண்டிருந்தார் பாதர்.

ICUவிலிருந்து  சபரீஷ் பணம் கட்டியிருந்த ஸ்பெஷல் வார்டிற்கு கிருத்திகாவின் ‘பெட்’டை நகர்த்திச் சென்றனர். மருத்துவமனையில் நோயாளியோடு ஒருவர் மட்டும் தான் தங்கலாம், மற்றவர்கள் போகலாம் என்று சொல்லி விட்டனர்.

சபரீஷ்வர் தான் மட்டும் தங்கப்  போவதாகக் கூறினான். சுமனா, இஸ்மாயில் இருவரும் அன்றைக்கு நைட்  டியூட்டியாக  மாற்றிக் கொண்டு சபரீஷ்வர் தைரியம் அளித்தனர்.

இரவு எட்டு மணிக்குத் தான் கண்களைத் திறந்தாள் கிருத்திகா. பக்கத்தில் சபரீஷ்வரைப் பார்த்தவள், “ரொம்ப வலிக்கிறது” என்று முணுமுணுத்தாள்.

முகத்தைத் தடவிக் கொடுத்து அவள் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான் சபரீஷ்வர். இரத்தம் ஏற்றுவது நிறுத்தப்பட்டிருந்தது. குளுக்கோஸ் மட்டும் ஏறிக் கொண்டிருந்தது.

“நீங்கள் சாப்பிடவில்லையா?” என்றாள் கிருத்திகா மிகவும் பலஹீனமான குரலில்.

“என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், உனக்கு வலி எப்படி இருக்கிறது?”

“எனக்கு வலிக்கிறது, ரொம்ப பயமாக இருக்கிறது. நீங்கள் என்னுடனே இருப்பீர்களா?” 

“நான் உன்னுடன் தான் இருப்பேன் கிருத்திகா. நீ ஆபத்தை தாண்டி விட்டாய், அமைதியாகத் தூங்கு” என்று சின்னக் குழந்தையைத்  தட்டித் தூங்க வைப்பது போல் தட்டிக் கொடுத்தான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கருத்திருமன் அவனுக்கு காரியரில் சாப்பாடு  எடுத்து வந்தார்.

“வெறும் ரசம் சாதம்  மட்டும் போதும் அங்கிள்” என்றான்.

“நீங்கள் நன்றாக சாப்பிட்டு பலமாக இருந்தால் தான் கிருத்திகாவை கவனிக்க முடியும்” என்று வற்புறுத்தி சாப்பிட வைத்தார்.

அவனுக்கு மாற்றுச் சட்டையும் பனியனும் கொண்டு வந்திருந்தார். சபரீஷ்வர் சாப்பிட்ட பிறகு கேரியரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டார்.

சுமனா அடிக்கடி வந்து கிருத்திகாவை செக் செய்வதும் அதை அங்கிருந்த மெடிக்கல் சார்ட்டில் குறிப்பதுமாக இருந்தாள்.

அசதி மேலீட்டால் இரவு ஒரு மணிக்கு மேல் கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டான் சபரீஷ்வர். லேசாக முனகுவதும் அனத்துவதுமாக இருந்தாள் கிருத்திகா. திடீரென கண் விழித்த சபரீஷ்வர், கிருத்திகாவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான், கை சுரீரென்று சுட்டது.

‘நல்ல ஹை டெம்ப்ரேச்சர் போல் இருக்கிறதே’ என்று உடனே டாக்டரை அழைத்தான். சுமனா தான் வந்தாள், ஜுரம் நூற்று இரண்டு டிகிரி காட்டியது. பாராசிட்டமால் இன்ஜெக்ஷனை அந்த குளுகோஸிலேயே ஏற்றி விட்டாள்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஜுரம் குறைந்தது. நெற்றி, கழுத்தெல்லாம் முத்து முத்தாக வேர்வை விட்டிருந்தது. பக்கத்தில் இருந்த டவலால் அதையெல்லாம் லேசாக ஒற்றி எடுத்தான் சபரீஷ்வர், அதன் பிறகு அமைதியாகத் தூங்கினாள். தூங்கும் போது கூட அவன் கையை விடாமல் பிடித்துக் கொண்டு இருந்தாள்.

அடுத்த நாள் காலை ஒரு கடிதத்தை சபரஷின் கையெழுத்திற்காக எடுத்து வந்தாள் மீனாட்சி. கிருத்திகாவிற்கு நேர்ந்த விபத்தை விவரித்து மருத்துவமனையில் சேர்ந்திருப்பதால் ஒரு மாதம் மருத்துவ விடுப்பு மனைவிக்காக சபரீஷ்வர் வேண்டுவதாக இருந்தது.

அந்த விண்ணப்பத்தில், விபத்தின் போது, அந்த இடத்தில் இருந்ததாகவும் சாட்சிக் கையெழுத்து போட்டிருந்தாள். அத்துடன் வைத்தியம் பார்க்கும் பெரிய டாக்டரின் மருத்துவச் சான்றிதழும் இணைத்திருப்பதாக எழுதி இருந்தாள்.

அதில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டான் சபரீஷ்வர். சுமனா மூலம் மருத்துவச் சான்றிதழ் வாங்கி அதையும் அக்கடிதத்துடன் இணைத்து எடுத்துக் கொண்டு ஆஃபீஸ் சென்று விட்டாள் மீனாட்சி.

அன்று முழுவதும் லேசாகக் கண் விழிப்பதும், மறுபடியும் சபரீஷின் கைகளைப் பிடித்துக் கொண்டு உறங்குவதுமாக இருந்தாள் கிருத்திகா.

ஒரு வாரம் கழித்து தையல் பிரித்து கிருத்திகாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாம்புத் தாத்தாவும், கருத்திருமனும் ஆரத்தி எடுத்து அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இருவரும் கண்களில் துளிர்த்த நீரை யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டனர். சூடான ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தார் சாம்புத் தாத்தா.

காயம் ‌பட்ட இடத்தில் மட்டும் வலி இருந்தது. மற்றபடி  கிருத்திகா நல்ல தெளிவாகி விட்டாள். சபரீஷும் ஒரு வாரமாக ஆஃபீஸ் போகவில்லை. அவனுக்கு பதில் கருத்திருமனே ஆஃபீஸ் நிர்வாகம் பார்த்துக் கொள்வார் என்று நோட் அனுப்பி விட்டான்.

ஒரு மாதத்தில் கிருத்திகா நன்கு குணமடைந்து விட்டாள். சபரீஷின் அன்பான, அனுசரணையான பேச்சும் வேளா வேளைக்கு அவனே ஊட்டிவிட்ட ஆகாரத்தினாலும் அவள் முன்பை விட நன்றாகத் தேறிவிட்டாள்‌.

“இன்னும் ஒரு மாதம் விடுமுறை நீட்டிக்க வேண்டி மேலதிகாரிகளிடம் கேட்கலாமா?” என்றான் சபரீஷ்வர்.

“நோ நோ… உங்கள் கவனிப்பில் நான் முன்பைவிட நன்றாகவே தேறி விட்டேன். அநாவசியமாக லீவ் போட்டால் ஆஃபீஸ் நிர்வாகம் கெட்டு விடும். என்னையும் எங்காவது வெளியூர் மாற்றி விடலாம்” என்றாள்.

கிருத்திகா வேலையில் சேர ஒரு வாரம் இருக்கும் போது, வயலட் அவள் திருமண அழைப்பிதழ் கொண்டு வந்து கொடுத்தாள்.

“சென்னையில் உள்ள மாதா கோயிலில் தான் திருமணம், உன்னால் முடிந்தால் சாருடன் வா கிருத்திகா” என்றாள்.

“நாங்கள் கட்டாயம் வருவோம் வயலட், நீ போய் மற்ற வேலைகளை கவனி” என்றான் சபரீஷ்.

கிருத்திகா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததில் இருந்து சபரீஷ் ஆபீஸில் என்ன வேலை இருந்தாலும் மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்து விடுவான்.

கிருத்திகா, சபரீஷ் இருவரும் வயலட்டின் திருமணத்திற்கு போயிருந்தனர். மும்தாஜிற்கு செய்த எல்லா திருமணப் பரிசுகளும் வயலட்டிற்கும் கொடுத்தனர், ஆனால் கிருத்திகாவின் உடல்நலம் கருதி சீக்கிரம் திரும்பி விட்டனர்.        

ஒரு நாள் கிருத்திகா, “சபரீஷ், ஹோமிற்குப் போய்ப் பார்த்து விட்டு வரலாமா?” என்றாள். உடனே கிளம்பி விட்டார்கள். ஆனால் அங்கே தான் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அந்த ஹோமைச் சார்ந்த பள்ளியில் ஷீலா டீச்சராக வேலை செய்துக் கொண்டிருந்தாள்.

“ஷீலா இங்கே எப்போது வந்து சேர்ந்தாள் பாதர்?” என்று கேட்டான் சபரீஷ்.

“ஷீலா ரொம்ப நல்ல பெண் சபரீஷ். கிருத்திகாவிற்கு, இளங்கோவினால் நேர்ந்த விபத்தை எனக்குத் தெரியப்படுத்தியவளே அவள் தான். இளங்கோவுடன் வாழ முடியாதென்று விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டாள்” என்றார் பாதர்.

“குழந்தை வேறு இருக்கிறதே, அது அப்பா இல்லாமல் வளர வேண்டுமே?” என்றாள் கிருத்திகா.

“பணத்தின் மேல் உள்ள பேராசை ஒழிந்தால் தான் அவன் மனிதனாக வாழலாம். அவனுக்கு ஒரு வருட கடுங்காவல்  சிறை தண்டனை கொடுத்திருக்கிறார்கள். சிறைச்சாலை எத்தனையோ பேருக்கு நல்ல பள்ளிக்கூடமாக இருந்திருக்கிறது.  இவனும் திருந்தினால் நன்றாக இருக்கும்” என்றார் பாதர்.

“ஷீலா போய் அவனைச் சிறையில் பார்த்தாளா? பார்க்காமலே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டாளா?”

“ஷீலா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பிறகு தான் இளங்கோவிற்கு புத்தி வந்திருக்கிறது. நிஜமாகவே நான் திருந்தி விட்டேன். என் மனைவியும் மகனும் எனக்கு வேண்டும் என்று புலம்புகின்றான், ஆனால் ஷீலா விவாகரத்து நோட்டீஸை திரும்ப வாங்க மறுக்கிறாள். என்ன செய்வது?” என்று வருத்தப்பட்டார் பாதர்.

“நாங்கள் ஷீலாவிடம் பேசி அவளை இளங்கோவுடன் வாழ சம்மதிக்க வைக்கிறோம். ஜெயிலில் இருந்து வந்த பிறகு இளங்கோ திருந்தி ஷீலாவுடன் பிரியமாக வாழ்ந்தால் என் கம்பெனிகளில் ஒன்றை அவன் பொறுப்பில் விடுகிறேன். ஆனால் எந்தத் தில்லுமுல்லும் பண்ணக் கூடாதென்று அவனிடம் எடுத்துச் சொல்ல முடியுமா பாதர்?” என்று கேட்டான் சபரீஷ்.         

“தாராளமாகச் சொல்ல முடியும், ஆனாலும் சபரீஷின் பெருந்தன்மை யாருக்கும் வராது. எங்கள் கிருத்திகா ரொம்ப அதிர்ஷ்டக்காரி” என்றார் பாதர்.

ஒரு வருடம் கழிந்தது. இளங்கோ விடுதலை ஆகிவிட்டான். சபரீஷ் ஒரு கம்பெனியின் முழு பொறுப்பை இளங்கோவிடம் கொடுக்க, அதை ஏற்க மறுத்து விட்டான்.

“இலவசமாக எந்த உதவியும் வேண்டாம் சபரீஷ் மச்சான். எனக்கு சம்பளத்திற்கு ஒரு வேலை கொடுங்கள் போதும். நான் செய்த பாவத்திற்கு நீங்களும், கிருத்திகா மேடமும் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டதே அதிகம். உங்களாலும், மேடத்தாலும் தான் எனக்கு என் மனைவியும், குழந்தையும் கிடைத்திருக்கிறார்கள். நான் அதிக ஆசை, இல்லை இல்லை இனி ஆசையே படமாட்டேன்” என்றான் இளங்கோ.

ஷீலா தன் கைக்குழந்தையோடு வந்து நன்றி தெரிவித்து விட்டுப் போனாள்.

“அப்பாடா! பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது. அந்த முப்பாத்தம்மனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றாள் கிருத்திகா.

“நான் அந்த அம்மனோடு சண்டைப் போடப் போகிறேன்” என்றான் சபரீஷ்வரன்.

“ஏனாம்?”        

“அந்த அம்மாவைக் கும்பிடுபவர்களுக்கெல்லாம் எல்லா நலன்களும் வாரித் தருகிறாள். என் பெண்டாட்டிக்கு மட்டும் கத்திக் குத்தா? ஒன்பது வாரம் கோயில் சுற்றிய மீனாட்சிக்குக் கையில் பிள்ளை, என் பெண்டாட்டி ஏமாந்தவளா தாயா என்று சண்டை போடுவேன்” என்றான் சபரீஷ்வர்.

“முப்பாத்தம்மன் என்ன சொல்லுவாள் தெரியுமா? மீனாட்சிக்கு கையில் பிள்ளை, உன் பெண்டாட்டிக்கு வயிற்றில் பிள்ளை என்பாள்” என்றாள் கிருத்திகா முகமெல்லாம் சிவக்க தலை குனிந்தபடி.

“நிஜமாகவாடா கண்ணம்மா” என்றான் சபரீஷ் அவள் இடையைத் தன் கைகளால் வளைத்துத் தன் அருகில் இழுத்தபடி.

“ஆமாம்” என்று பதில் சொன்ன கிருத்திகா, அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

“நான் தான் அங்கீகாரம் இல்லாமல் பிறந்தேன், ஆனால் நம் குழந்தைக்கு ஒரு நல்ல பெற்றோரால் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது… இல்லையா சபரீஷ்?” என்றாள் கொஞ்சலாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தபடி.

“உனக்குத் தான் திருமதி சபரீஷ்வரன் என்று அங்கீகாரம் இருக்கிறதே, இதைவிட வேறென்ன வேண்டும் சொல்லுடா” என்றவன், அவளை இறுக அணைத்து அவள் கொடுத்த ஒரு பரிசில்களும் பல பரிசுகளைப் பதிலாகக் கொடுத்தான்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொட்டுவிடும் தூரந்தான் (சிறுகதை) – ✍ மலர் மைந்தன், செங்கல்பட்டு

    பெண் (சிறுகதை) – ✍ ஹேமமாலினி சுந்தரம், கோவை