in

பெண் (சிறுகதை) – ✍ ஹேமமாலினி சுந்தரம், கோவை

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“ஜெயா… அபிகிட்ட பேசினியா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பொண்ணு பார்க்க வரச் சொல்லட்டுமா?” வேதாசலம் மனைவி ஜெயாவிடம் விசாரித்தார்.

“ம்ம்… பேசினேங்க. இது வரையில, சரி தான் வரட்டும்னு சொல்லியிருக்கா. என்னமோங்க… இந்தக் காலத்துப் பொண்னுங்களை புரிஞ்சுக்கவே முடியலை. நாங்கல்லாம் அப்பா, அம்மா என்ன சொன்னாங்களோ அப்படியே கேட்டோம். மணவறையில் போய் உட்காருன்னா உட்காருவோம். ஹ்ம்… இப்போ பாருங்க, கல்யாணம் பேசலாமா அப்படிங்கிறதுல ஆரம்பிச்சு, எல்லாம் அவங்களைக் கேட்டுக் கேட்டு தான் செய்ய வேண்டியிருக்கு” ஜெயா அலுத்துக் கொண்டார். வேதாசலம் சிரித்தார்.

“உனக்கு பொறாம, என் பொண்ணு மாதிரி உங்கப்பா உன்னை படிக்க வைக்கலை, ப்ளஸ்டூ முடிச்சதும் என் தலையில கட்டி விட்டுட்டார். அபி அப்படியா? எம்.ஈ முடிச்சிருக்கா, வெளியுலகம் தெரியும். நல்ல வரனா பார்த்து கட்டிக் கொடுக்கலாம்னு தான் இப்பவே ஜாதகத்தை எடுத்துட்டேன்” என்று ஜெயாவை கிண்டல் செய்தார்.

“அப்பாவும் பொண்ணும் என்னவானும் செய்ங்க” என்று ஜெயா பொறுப்பை அவரிடம் தள்ளி விட்டார்.

அபி என்ற அபிநயாவுக்கு 23 வயது; காலாகாலத்தில் திருமணம் செய்ய நினைத்த வேதாசலம், மகள் சம்மதத்தோடு ஜாதகத்தை எடுத்து விட்டார்.

மாப்பிள்ளை ரகு வீட்டிலிருந்து அடுத்த வாரம் வந்தார்கள். இனம், குடும்ப அந்தஸ்து, பண வசதிகள் எல்லாம் ஒத்துப் போனது. ரகு சட்டம் படித்து விட்டு, தன் தந்தையின் அலுவலகத்தில் வேலையில் இருந்தான். அவர்கள் வீட்டுப் பெண்களும் மிகவும் உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களாகத் தெரிந்தனர்.

திருமணத்துக்குப் பின் தனக்கு வேலைக்குப் போகும் எண்ணம் உள்ளது என்று அபி சொன்ன போது, ரகு எதுவும் ஆட்சேபணை சொல்லவில்லை.

“ஷூட் பீ ஓக்கே” என்று ஸ்டைலாக தோளைக் குலுக்கியதோடு சரி, அதைப் பற்றி மேலே இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மற்றபடி இருவருக்கும் பரஸ்பரம் பிடித்துப் போனது,

மூன்று மாதங்கள் கழித்து நிச்சயத்துக்கு நல்ல நாளும் குறித்தாகி விட்டது. இருபக்கப் பெரியவர்களும் அவ்வப்போது பழக்க வழக்கங்கள் பற்றி பேசித் தெரிந்து கொண்டார்கள். ரகுவும் அபியும் தனியே பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

அபிக்கு திருமணம் நிச்சயம் ஆன விஷயத்தை எல்லா உறவினர்களிடமும் சொல்லியாகி விட்டது. மண்டபத்துக்கு அட்வான்ஸ், கேட்டரிங், வீடியோ, ஒப்பனை என ஒவ்வொன்றாக தேர்வு செய்து, ஆசை ஆசையாக செய்தாகி விட்டது. இன்னும் ஒரு மாதமே இருக்கும் போது, திடீரென ஒரு நாள் அபி அவரிடம் வந்தாள்.

“அப்பா… நான் ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்.

“என்னம்மா? மண்டப டெகரேஷன் ஐடியாவா? உன் ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேர் வராங்களா?  எதுன்னாலும் சொல்லு, ஜமாய்ச்சுடலாம்” வேதாசலம் உற்சாகமானார்.

“இல்லப்பா வந்து… இந்த நிச்சயதார்த்தம் வேணாம்ப்ப, நிறுத்திடுங்க”

“என்ன?” வேதாசலம், ஜெயா இருவருமே அதிர்ந்து தான் போனார்கள்.

“பார்த்தீங்களா? இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன். பொம்பளைப் பிள்ளையை மேலே மேலே படிக்க வைக்காதீங்க, அது நம்ம சொல் பேச்சு கேட்காதுன்னு. நீங்க கேட்டா தானே?” என்று கோபத்தில் பொரிந்த ஜெயா, மகளிடம் திரும்பினார்.

“ஏய் அபி, உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? நிச்சயத்தை எதுக்கு நிறுத்தணும்? உறவுக்காரங்க எல்லாருக்கும் சொல்லியாச்சு, மண்டபம், சமையல், அது இதுன்னு எல்லாத்துக்கும் அட்வான்ஸ் கொடுத்தாச்சு. இப்ப வந்து திடீர்னு நிறுத்திடுங்கன்னு சொன்னா எப்படி முடியும்? மனசுல நீ என்ன தான் நினைச்சுட்டிருக்கே?”

வேதாசலம் மனைவியை அமைதிப்படுத்தினார்.

“ஜெயா கொஞ்சம் பொறுமையா இரு. அவ என்ன சொல்றானு தான் கேப்போமே, அதுக்குள்ள நீ ஏன் டென்ஷன் ஆகுறே? அபி நீ சின்னக் குழந்தை இல்லே, நீ பிடிச்சிருக்குன்னு சொன்னப்புறமா தான் நாங்க மேற்கொண்டு எல்லா ஏற்பாடும் பண்ண ஆரம்பிச்சோம். இப்ப இந்த மாதிரி பேசறே. இதுக்கு என்ன காரணம், சொல்லு?”

“அப்பா… அம்மா தான் என்னைப் புரிஞ்சுக்காம கோவத்துல பேசறாங்க, ஆனா உங்களுக்கு நான் சொல்றது கண்டிப்பா புரியும் பா. ஏன்னா, என்னை இந்த அளவுக்கு ஒரு சுயசிந்தனையோட வளர்த்தது நீங்க தானே” என்ற சொல்ல ஆரம்பித்தாள் அபி.

“அப்பா… ஆரம்பத்துல நாங்க ரெண்டு பேரும் பேசிக்க ஆரம்பிச்சப்போ தயக்கம், கூச்சம், வெட்கம் எல்லாம் இருந்தது. பொதுவான விஷயங்கள், பிடிச்சது, பிடிக்காதது, சினிமா, பாட்டு… இந்த மாதிரி இதைப் பத்தி எல்லாம் தான் பேசிட்டு இருந்தோம். அப்புறம் அப்புறமா எங்களைப் பத்தி பேசிக்க ஆரம்பிச்சப்போ தான், ரகுவோட கேரக்டர் பத்தி என்னால கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்க முடிஞ்சதுப்பா. ரகு நல்லா படிச்சிருக்கான், அதுவும் சட்டம் படிச்சிருக்கான் அப்படீன்னதும் நான் ரொம்ப எதிர்பார்த்தேன் பா. எனக்கு உண்டான உரிமைகள் அந்த வீட்டுல கட்டாயம் இருக்கும்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன், ஆனா அந்த நம்பிக்கை பொய்யாயிடுச்சுப்பா.

அவன்கிட்ட போன வாரம் பேசும் போது, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேலைக்கு போகிறது பத்தி ஏதோ பேச்சு வந்தது. ரகு ரொம்ப கூலா, ‘அபி, அதெல்லாம் தேவையில்லை, நீ கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போறதெல்லாம் வேணாம். அது எங்க வீட்டுல யாருக்கும் பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க. எங்க ஸ்டேடஸ்க்கும் அது சரிப்பட்டு வராது, அதனால நீ ஹேப்பியா வீட்டுல என் வேலையை மட்டும் பார்த்துட்டு இருந்தா போதும்’ சொல்றான் பா”

“என்ன அபி இது? பொண்ணு பார்க்க வந்தப்பவே நீ மாப்பிள்ளைகிட்ட இது பத்திப் பேசிட்டேன்னு சொன்னே?”

“ஆமாம்பா… அப்ப இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலை, கேட்டா ‘நான் அப்ப தானே உன்னை பார்க்க வந்தேன், பொண்ணு பிடிச்சு, மற்ற விஷயம் எல்லாம் ஒத்து வந்தா, இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. எல்லாம் கல்யாணம் ஆன பின்னால கூட சொல்லிக்கலாம்னு தான் நினைச்சேன். நீ ரொம்ப வற்புறுத்தினதால தான் இதைச் சொன்னேன். இல்லைன்னா இப்ப கூட சொல்லி இருக்கமாட்டேன். அப்படி என்ன இது ரொம்ப முக்கியமா?’னு கேட்கறான் பா. இதைப் பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம அவனே ஒரு முடிவெடுத்து அதுக்கு நான் சம்மதிப்பேன்னும் எதிர்பார்க்கறான்பா. நான் மறுத்துப் பேசின எதையும் அவன் காதுல கூட வாங்கலே. அந்த வீட்டுல எனக்கான இடம் என்னவா இருக்கும், சொல்லுங்க ?”

வேதாசலம் மௌனமானார்.

“அப்பா… எனக்கு பெண் சுதந்திரம் பத்தியும், பெண் உரிமை பத்தியும் சொல்லிக் கொடுத்ததே நீங்க தான். பாரதியார், பாரதிதாசன், கல்கி, பாலகுமாரன்னு படிக்கிற பழக்கமும் உங்களால வந்தது தான். ஏம்பா, பாலகுமாரனோட ‘யானை வேட்டை’யில ஒரு வரி வருமே, ஞாபகம் இருக்காப்பா? ‘பெண் மாடு இல்லை; கால்நடை இல்லை; சந்தையில் பிடித்து ஊருக்குள் ஓட்டிப் போக’ அப்படின்னு. நாம ரெண்டு பேரும் அந்த வரிகளை எவ்வளோ ரசிச்சோம். இப்ப ரகு என்னை அப்படி தான்பா நினைக்கிறான். இப்ப சொல்லுங்கப்பா, நான் அவனை கல்யாணம் செஞ்சு தான் ஆகணுமா?”

வேதாசலம் கண்கள் கலங்க, அபியை ஆதரவாய் தலையை வருடிக் கொடுத்தார்.

“வேணாம் மா அபி, அவன் வேற சந்தைக்கு போகட்டும். உனக்கு வேற நல்ல மனுஷனா நானே பார்க்கறேன்” என்றார் உறுதியாக.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (இறுதிப்பகுதி) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 3) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி