மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10
பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19
இரவு சாப்பாட்டிற்கு சாம்புத்தாத்தாவிற்கு உதவி செய்து விட்டு, அங்கேயே டைனிங் டேபிளில் உட்கார்ந்து, தன் அலுவலகத்திலிருந்து கொண்டு வந்த சில கோப்புகளின் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாள்.
சபரீஷ்வர் வீட்டிற்கு வரவே இரவு ஒன்பது மணி ஆகி விட்டதால், ஷீலாவைப் பற்றி ஒன்றும் பேச முடியவில்லை. சனிக்கிழமை விடுமுறையானதால் காலை ஏழு மணிக்குத் தான் எழுந்தாள் கிருத்திகா. குளித்து விட்டு தினம் பூஜை செய்வது இப்போது வழக்கம் ஆகி விட்டது. எல்லாம் கருத்திருமன், சாம்புத் தாத்தாவின் பாடம்.
சாம்புத் தாத்தா தினமும் மாலை நேரத்தில் தோட்டத்தில் அரும்பாக உள்ள மல்லிகை மலர்களை பறித்துக் கொண்டு வந்து மாலையாகத் தொடுப்பார். சிகப்பு, மஞ்சள் நிற ரோஜாக்களும் நிறைய பூத்திருக்கும். செடியில் அழகாக இருக்கட்டும் என்று கொஞ்சமாகப் பறித்து வந்து தட்டில் வைப்பார்.
கருத்திருமன் விடியற்காலையில் எழுந்து குளித்து விட்டு, நல்ல சிவப்பழமாக விபூதி பூசிக்கொண்டு, சுவாமி படங்களுக்கு மாலை போட்டு விட்டு தேவாரம், திருப்புகழ் இவற்றிலிருந்து சில பாடல்கள் பாடுவார். அப்போதெல்லாம் கிருத்திகா கூடவே இருந்து உதவி செய்வாள்.
கிருத்திகாவிற்கு நல்ல இனிமையான குரல். கருத்திருமனிடமிருந்து நிறைய சுவாமிப் பாடல்களைக் கற்றுக் கொண்டாள். தினமும் பூஜைஅறையில் மெதுவாகப் பாடவும் செய்வாள். அவள் பாடப்பாட கருத்திருமனும், சபரீஷ்வரனும் பூஜையில் சேர்ந்து கொள்வார்கள்.
காலைச் சிற்றுண்டியெல்லாம் முடிந்த பிறகு கிருத்திகாவின் செல்போன் ஒலித்தது. ஷீலாதான் பேசினாள்.
“அங்கே வரலாமா?” என்று உத்தரவு கேட்டாள்.
“தாராளமாக வரலாம், உடனே வா. காலை டிபனும், மதியம் லஞ்சும் இங்கே சாப்பிட்டு விட்டு மாலை கூட வீட்டிற்குப் போகலாம்”
“நான் வருவது அண்ணாவிற்குத் தெரியுமா?”
“உன் அண்ணாவிற்கு எல்லாம் தெரியும் வா”
ஷீலா தன் அம்மாவுடன் காரில் வந்து இறங்கினாள். அவளைப் பார்த்த சபரீஷ் திகைத்து விட்டான்.
“ஷீலா, ஏனம்மா இப்படி இளைத்து விட்டாய்? உடம்பு ஏதும் சரியில்லையா?” என்றான் கனிவுடன்.
“அண்ணா, நீங்கள் என்னை மன்னித்து விட்டீர்களா? இளங்கோ தான் தேவை இல்லாததெல்லாம் சொல்லி என் மனதை மாற்றினான். அதனால் தான் நான் உங்களையும், அண்ணியையும் தவறாக நினைத்து விட்டேன். சொல்பவர் சொன்னால் கூட கேட்பவர்க்கு மதி இருக்க வேண்டும், அது இல்லாத்தினால் தான் இவ்வளவு கஷ்டமும்” என்ற ஷீலா பெருமூச்செறிந்தாள்.
“பாதர் தான் ஷீலாவிற்கு எல்லாம் விவரமாக சொல்லியிருக்கிறார். இளங்கோ உங்கள் கம்பெனியில் வேலை செய்யும் போது இழைத்த தவறுகளையும் விளக்கிச் சொல்லியிருக்கிறார். அப்போதே வருமான வரித்துறையை ஏமாற்றியதையும் கூறியுள்ளார். பிறகு தான் ஷீலா நம்மை நன்றாகப் புரிந்து கொண்டு இருக்கிறாள்” என்றாள் கிருத்திகா.
அந்த நேரத்தில் கருத்திருமனும், சாம்புத் தாத்தாவும் அவர்களுக்கு காலை உணவையும், புதியதாகத் தயாரிக்கப்பட்ட பழச்சாறும் கொண்டு வந்தார்கள்.
ஷீலா அவர்கள் இருவரையும் நிற்க வைத்து காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கிக் கொண்டாள்.
“இவ்வளவு தப்புக்கள் செய்து விட்டு அந்த இளங்கோ எவ்வளவு நல்லவன் போல் நடித்தான். இனிமேல் நான் அவனுடன் வாழ்வது என்பதே கஷ்டம். பேசாமல் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து விடலாமா என்று கூட நினைக்கிறேன்” என்றாள் ஷீலா கிருத்திகாவிடம்.
“அபத்தமாக பேசாதே ஷீலா. கல்லானாலும் கணவன் என்று நான் உனக்கு உபதேசம் செய்யவில்லை, ஆனால் அவனைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டியது உன் கடமை அல்லவா? மேலும் உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவன் ஒரு நல்ல தந்தையாக மாற வேண்டும்” என்றாள் கிருத்திகா.
“பாம்பு புறாவாக மாறும் என்று எதிர்ப்பாரக்கிறாள் கிருத்திகா” என்றான் சபரீஷ்வரன்.
“நீங்களும் ஷீலாவை ‘டி மோடிவ்’ செய்யாதீர்கள். அவளே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். ஆன்ட்டி, நீங்கள் கெட்டிக்கார வக்கீலாக வைத்து இளங்கோவை ஜாமினில் எடுங்கள். நான் அரசாங்க வேலையில் இருப்பதால் அதற்கெல்லாம் வரக்கூடாது” என்றாள் கிருத்திகா.
“கிருத்திகா, உன் நல்ல புத்தி தெரியாமல் உன்னையும் மட்டமாகப் பேசி, எங்கள் வீட்டுப் பிள்ளையான சபரீஷையும் நாங்கள் உதாசீனப்படுத்தினோம். அதெற்கெல்லாம் தான் இது சரியான அடி” என்று வருத்தப்பட்டாள் ஷீலாவின் அம்மா.
“வருத்தப்படாதீர்கள், எல்லாம் நல்லபடியாக முடியும்” என்று சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
ஷீலாவின் அப்பாவும், சித்தப்பாவும் டெல்லி சுப்ரீம் கோர்ட்டிலிருந்து திறமையான ஒரு வக்கீலை வரவழைத்தார்கள். அவர் திறமையாக வாதாடி இளங்கோவிற்கு ஜாமின் வாங்கிக் கொடுத்து விட்டார்.
அவனை ஜாமீனில் விடுவதற்கு ஐந்து லட்ச ரூபாயும், சொந்த ஜாமினும் கையெழுத்துப் போட வேண்டும் என்றார்கள். அதற்கு அவன் மாமனாரே முன் நின்றார். ஒருவழியாக இளங்கோ ஜாமீனில் வெளியே வந்தான், ஆனால் ஷீலாவை அவனால் சமாதானப்படுத்த முடியவில்லை.
அரசாங்கத்தை ஏமாற்றிய பணத்தைத் திருப்பி செலுத்தி விட்டு மன்னிப்பு கேட்டால் தண்டனை குறையும் என்றாள் ஷீலா, ஆனால் இளங்கோ அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
“கிருத்திகாவோடும் சபரீஷ்வரனோடும் சேர்வதனால் உனக்குக் கிறுக்கு பிடித்து விட்டது” என்று திட்டினான். “இனி அவர்களோடு பேசக் கூடாது” என்று உத்தரவிட்டான்.
“அண்ணி, வருமான வரித்துறையை ஏமாற்றியதால் அவன் ஜெயிலுக்குப் போனதாக உணரவில்லை. ஏதோ தேச சுதந்திரத்திற்கு பாடுபட்டு ஜெயிலுக்குப் போனாற் போல் அலட்டிக் கொள்கிறான் அண்ணி” என்றாள் ஷீலா போனில் கிருத்திகாவிடம்.
“நாய் வால் டக்கென்று நிமிராது ஷீலா, கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நிமிர்த்த வேண்டும்” என்றாள் கிருத்திகா.
“ஆனால் அண்ணி, தப்பு செய்தது அவன். டிபார்ட்மெண்ட்டை ஏமாற்றியது அவன், ஆனால் ஏன் உங்கள் மேல் கோபமாக இருக்கிறான் என்று தான் புரியவில்லை” என்றாள் ஷீலா.
அன்று செவ்வாய்க்கிழமை. மீனாட்சியின் கணக்குப்படி கோயிலுக்குப் போவது ஒன்பதாவது வாரம். வழக்கமாக எளிமையான உடையில் செல்லும் கிருத்திகா, அன்று சபரீஷ்வர் மிக ஆசையாக வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த வெளிர் நீல நிற பட்டுப்புடவையில் வந்தாள்.
அடர் நீல நிற பார்டர். பார்டருக்குத் தகுந்த நீலநிறச் சோளி. ஷேம்பூ போட்டுகுளித்த தலை, அதைத் தளரப் பின்னிய ஒற்றைப் பின்னல். சாம்புத்தாத்தா தொடுத்த மல்லிகைச் சரம் நீளமாக வைத்திருந்தாள். காதில் ஒரு முத்துத்தோடு, கழுத்தில் ஒரு முத்து மாலை. அந்த அலங்காரத்தில் அவளைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.
பார்த்துத் திகைத்து நின்ற சபரீஷ்வர், அவளை இறுக அணைத்து கன்னத்தில் கன்னம் இழைத்து சின்னக் குழந்தையைத் தூக்குவது போல் தலைக்கு மேல் தூக்கிக் கொஞ்சினான்.
“என்னங்க… கோயிலுக்குப் போக வேண்டும். மீனாட்சி மேடம் வேறு வந்து விடுவார்கள், கீழே விடுங்கள்” என்று சிரித்தவாறு அவனிடம் கெஞ்சினாள்.
அவளைக் கீழே இறக்கி விட்ட சபரீஷ்வரன், “கோயிலிற்குப் போய் வந்த பிறகு நாம் எங்காவது வெளியே போகலாமா? இந்த அழகு தேவதையை நான் எப்படித் தனியே அனுப்புவேன். உன்னைப் பிரியவே மனம் வரவில்லையே, இன்று ஒரு நாள் ஆபீஸிற்கு லீவ் போடேன்” என்று கொஞ்சினான்.
அதற்குள் கீழே காரில் வந்த மீனாட்சி, பொறுமையில்லாமல் ஹார்ன் அடித்தாள்.
“காலை டிபன் சாப்பிட்டு விட்டு நீங்கள் ரெடியாக இருங்கள். நான் கோயிலிலிருந்து வந்தவுடன் சாப்பிட்டு விட்டு ஆபீஸ் போகலாம்” என்றாள் கிருத்திகா.
கிருத்திகா மீனாட்சியின் காரில் ஏறும் நேரத்தில் “கிருத்திகா, ஒரு நிமிடம் இரம்மா. நானும் உங்களுடன் வருகிறேன்” என்றார் கருத்திருமன்.
“நீங்களுமா அங்கிள்?” என்றாள் மீனாட்சி.
“மனதிற்கு என்னவோ கொஞ்சம் சஞ்சலமாக இருக்கிறதம்மா, நானும் வருகிறேன்” என்றவர் அவர்களுடன் காரில் ஏறிக் கொண்டார். கருத்திருமனும் காரில் இருக்கவும் மீனாட்சி அமைதியாகக் காரை ஓட்டிக் கொண்டு வந்தாள்.
கோயிலில் போய் இறங்கியவுடன் கருத்திருமன், “நான் அம்பாளை தரிசித்து விட்டு உங்கள் பின்னாலேயே தான் வருவேன். நீங்கள் உங்கள் பிரார்த்தனையை முடிக்கலாம்” என்றார்.
“தேங்க் யூ அங்கிள்” என்ற மீனாட்சி, அவர் முன்னால் சென்ற பிறகு, “கிருத்திகா, இந்தப் புடவை உனக்கு ரொம்ப அற்புதமாக இருக்கிறது. எப்போது வாங்கினாய்? அங்கிள் இருந்ததால் ரொம்ப நேரம் நம் டாபிக்கைப் பேச முடியவில்லை. இப்போது சொல்” என்றாள்.
“நான் வாங்கவில்லை மேடம், சபரீஷ்வர் தான் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு இப்படியெல்லாம் நல்ல நிறம் தேடி எடுக்கத் தெரியாது” என்றாள் கிருத்திகா. அதற்குள் அவள் முகம் நாணத்தால் சிவந்து விட்டது.
“உனக்கு எப்படித்தான் முகம் அந்தி வானமாக சிவந்து விடுகிறதோ. கல்யாணம் ஆகி இத்தனை மாதங்கள் ஆன பிறகும் வெட்கத்தைப் பாரேன்” என மீனாட்சி சிரித்தாள்.
பிறகு இருவரும் மௌனமாகத் தங்கள் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு பிரகாரத்தைச் சுற்றி வந்தார்கள். கோயிலில் சரியான கூட்டம். மூன்றாவது சுற்றைச் சுற்றி வரும் போது கிருத்திகா திரும்பிப் பார்த்தாள். கருத்திருமன் இரண்டு அடி பின்னால் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது தான் யாரோ ஒருவன் யாரும் எதிர்பாராத நேரத்தில் கத்தியை வேகமாக கிருத்திகாவின் தோளிற்கும், கழுத்திற்கும் மத்தியில் செருகி விட்டான்.
கழுத்தைக் குறி வைத்தான் போல் இருக்கிறது. கிருத்திகா ‘டக்’ கென்று திரும்பி கருத்திருமனைப் பார்த்ததால் அவன் குறி தவறி விட்டது.
இரத்தம் பீறிட்டு அருகில் வந்தோர் மேல் அடித்தது. மீனாட்சி இரத்தத்தால் அபிஷேகம் செய்தாற் போல் இருந்தாள். கிருத்திகா வலி தாங்காமல் “அம்மா” என்று கத்தி அப்படியே மயங்கி அறுந்த கொடி போல் கீழே விழுந்தாள்.
திக்பிரமை பிடித்து மரம் போல் நின்ற மீனாட்சி, சுயநினைவு வந்தவளாய், விழுந்தவளைத் தாங்கிப் பிடித்தாள். இல்லையென்றால் கருங்கல் பதித்த தளத்தில் கிருத்திகாவின் தலைபட்டு தலையில் பலமான காயம் ஏற்பட்டு இருக்கும். கருத்திருமனும் தன் வயதையும் பொருட்படுத்தாமல் ஓடி வந்து கிருத்திகாவைத் தாங்கிப் பிடித்தார்.
“பிடியுங்கள், அவனைப் பிடியுங்கள்” என்று கூச்சலிட்டாள் மீனாட்சி. ‘டக்’ கென்று சிலர் கோயில் கதவை மூடி விட்டனர். கூட்ட நெரிசலில் அவனால் தப்பிக்க முடியவில்லை. அந்த ஆள் பிடிபட்டான்.
பரட்டைத் தலையும், அவன் மேல் அடித்த சாராய நாற்றமும் பணத்திற்காக ஆளை அடிப்பவன் என்று புரிந்தது. கோயிலுக்கு வெளியே பந்தோபஸ்திற்காக நிறைய போலீஸ் இருந்தது, அவர்களிடம் அவனை ஒப்படைத்தனர்.
மீனாட்சி உடனே சபரீஷ்வருக்கும், அவள் தங்கை சுமனாவிற்கும் போன் செய்தாள். கருத்திருமன் ஆம்புலன்ஸிற்குப் போன் செய்தார். மீனாட்சி தன் கணவர் சுந்தரத்தையும் உடனே வரச் சொன்னாள், அவர் டெல்லியிலிருந்து வந்து இரண்டு நாட்களாகியிருந்தன.
மீனாட்சி, கிருத்திகா இருவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்பதால் பந்தோபஸ்தும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வேகமாக நடைபெற்றன. அதற்குள் சபரீஷ் கார் எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.
பதறியடித்துக் கொண்டு வந்த சபரீஷ், “என்ன அங்கிள்? எப்படி? யார் செய்தது?” என்றவன், யார் பதிலுக்கும் காத்திராமல் கிருத்திகாவை அப்படியே தூக்கிக் கொண்டான். ஆம்புலன்ஸ் வருவதற்குள் சபரீஷ் அவளைக் காரில் ஏற்றிக்கொண்டு பின் ஸீட்டில் தன் மடியில் உட்கார வைத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.
“அங்கிள், நீங்கள் காரை எடுங்கள். மீனாட்சி, நீயும் அங்கிளோடு வா. சுமனாவை அப்படியே நேரே மருத்துவமனைக்கு வரச் சொல். நிறைய இரத்தப் போக்கு ஆகிறது, வேகமாகப் போங்கள்” என்று கத்தினான் வெறிபிடித்தவன் போல்.
ஆஸ்பத்திரியில் போய் கார் நின்றவுடன் இஸ்மாயில், சுமனா இன்னும் இரண்டு சீனியர் டாக்டர்களுடன் ஸ்ட்ரெச்சருடன் தயாராக இருந்தனர்.
யாருக்கும் ஒன்றும் தோன்றவில்லை. சாம்புத் தாத்தா கூட கதவைப் பூட்டி வாட்ச்மேனிடம் சொல்லிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்து விட்டார்.
சபரீஷ்வரைப் பார்த்தால் அப்போது மீனாட்சிக்கும், கருத்திருமனுக்கும் கூட பயமாக இருந்தது. தலையெல்லாம் கலைந்து சட்டை, பேண்ட் எல்லாம் ரத்தக் கறையாக, கண்கள் கலங்கி பைத்தியக்காரனைப் போல் இருந்தான்.
மீனாட்சியோ ‘எல்லாம் என்னால் தான் நடந்தது. நான் அவளை அழைத்து வரவில்லை என்றால் இந்த வேதனை இல்லை’ என்று நினைத்தாள்.
கருத்திருமனோ, இவர்கள் கூடவே வந்தும் இவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டார்.
“நீங்கள் ஒரு வழியில் கிருத்திகாவைக் காப்பாற்றி உள்ளீர்கள். அவள் உங்களைத் திரும்பிப் பார்த்ததில் அவள் கழுத்துக்குக் குறிபார்த்த கத்தி, குறி தவறி தோளில் குத்தியுள்ளது” என்று மீனாட்சி ஆறுதல் கூறினாள்.
“என் உயிரை நான் பாதுகாக்காமல் அடுத்தவரிடம் கொடுத்தது என் தவறு” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான் சபரீஷ்வர்.
அதற்குள் டாக்டர்கள் ரத்தப்போக்கை நிறுத்தி விட்டு அவளுடைய பி-பாஸிட்டிவ் ரத்தத்தை ஏற்றத் தொடங்கினார்கள். கத்தி குத்துப்பட்ட இடத்தில் எக்ஸ்-ரேவும் எடுத்து அங்கே ஒரு சிறிய சர்ஜரியும் செய்து தையலும் போட்டு விட்டார்கள். மூன்று மணி நேரம் கழித்துத்தான் டாக்டர்கள் இஸ்மாயில், சுமனா எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தார்கள்.
“கிருத்திகா இப்போது எப்படி இருக்கிறாள் டாக்டர்?” என்று கேட்டான் சபரீஷ் பயந்து கொண்டு.
(தொடரும் – திங்கள் தோறும்)
GIPHY App Key not set. Please check settings