in

செம்பா ! (சிறுகதை) – ✍ சுபா செல்வகுமார்

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“ஹலோ… நீங்க… நீ… செம்பா தானே? SRRB ஸ்கூல்லதானே படிச்சீங்க?”

அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து அவன் கேட்டதும், ஒரு நொடி தீர்க்கமாக அவனைப் பார்த்தவள் சட்டென அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.

“நீ..ங்..க..பாண்டியனா? செந்தூர் பாண்டியன் தானே”. கேட்கையில் இவள் விழிகளும் விரிந்தது.

“ஹே! ஆமாப்பா..செம்பா! வாவ்!!.. எத்தனை வருஷமாச்சு உங்களையெல்லாம் பார்த்து. என்னிக்காவது ஒருநாள் பார்ப்பேன்னு நினைச்சிட்டே இருந்தேன். இதோ பார்த்துட்டேன். உலகம் உருண்டை தான்” சொல்லிவிட்டு சிரித்தான் பாண்டியன். செம்பாவும் அவனுடன் சேர்ந்து சிரித்தாள்.

“பை தி வே… இவங்க..???” என்று செம்பாவின் பக்கத்தில் நிற்கும் இருவரைக் காட்டி அவன் கேட்கவும்

“எம் பசங்க தான். பெரியவன் கோகுல், BE முடிச்சிட்டு MS பண்ணிட்டு இருக்கிறான். பொண்ணு நிலா, MBBS செகண்ட் இயர் பண்ணிட்டு இருக்கிறா”

ஒரு தாய்க்கே உரிய பெருமிதத்துடன் அவர்களைத் தன் பள்ளித் தோழனுக்கு அறிமுகம் செய்தாள் செம்பா.

“ஹேய்… ரியல்லி? உனக்கு இவ்வளோ பெரிய பசங்களா? மை காட். உனக்கு சீக்கிரமே கல்யாணமாயிடுச்சா? நான் டென்த்  முடிச்சிட்டு வேற ஸ்கூல் மாறிட்டதால எனக்கு யாரைப் பத்தியும் அவ்வளவா ஒண்ணும் தெரியாது. நீ என்ன படிச்சே? எப்போ மேரேஜ் ஆச்சு? இப்போ என்ன பண்ணிட்டு இருக்கே?”

படபடவென்று கேள்விகளை அடுக்கியவன், “ஓ ஐயாம் சாரி. நான்  என்னைப்பத்தி எதுவுமே சொல்லாம உன்னப்பத்தி மட்டும்  கேட்குறேனில்ல. மீட் மை ஒயிஃப் சாரதா… நாங்க ரெண்டு பேருமே  சாஃப்ட்வேர் இன்ஜினியர்ஸ். யூ.எஸ்’ல செட்டில் ஆயிட்டோம். இது என்  பையன் ரயான், டென்த் படிக்கிறான்”.

தன் மனைவியின் பக்கம் திரும்பி, “சாரு… இவங்க  செம்பா… செண்பகவல்லி. செமயா படிப்பா தெரியுமா, ஆல்வேஸ் ஃபர்ஸ்ட்  ரேங்க்தான். டீச்சர்ஸ் பெட். இவங்க கூட போட்டி போட்டு படிக்கிறது  எனக்கு ரொம்பப் புடிக்கும். ஆனாலும் ஒருதடவை கூட நான் ஃபர்ஸ்ட்  ரேங்க் வந்ததேயில்ல. எப்பவும் அந்த ஃபர்ஸ்ட் ரேங்க் ஹோல்டர்ங்கிற கிரீடம் இவங்களுக்குத்தான்” என்று செம்பாவின் புகழை அவன் மனைவியிடம் சொல்லிவிட்டு, “செம்பா நீ என்ன பண்றே? என்ன படிச்சு முடிச்சே?” ஆவலாய்க் கேட்டான்.

அவனின் கேள்வி செம்பாவின் மனதுக்குள் புகுந்து அவளைப் பல வருடங்களுக்கு முன்பான பள்ளி நாட்களுக்கு இழுத்துச் சென்றது. அவளின் கண்களோ ஈரத்தைக் கசிய ஆரம்பித்தது.

1990 – மாங்குளம் கிராமம்

பள்ளியில் எங்கும் எதிலும் முதலிடம் செம்பாவுக்குத்தான். அவளின் பேச்சும், எழுத்தும் அங்கு கொண்டாடப்படும். எந்த ஆசிரியருக்கு என்ன வேலை ஆகவேண்டுமென்றாலும் செம்பாவின் பெயரே அங்கு உச்சரிக்கப்படும். வகுப்பின் லீடரும் அவளே.

ஆனால் வீட்டில் அவள் நிலைமையோ, “ஏய்… சமையப் போற கொமரி நீ, கொஞ்சமாச்சும் அறிவிருக்காடி? சித்தப்பனே ஆனாலும் இப்படியா அவன் பக்கத்துல போய் ஒரசிக்கிட்டு  உட்கார்ந்திருப்ப. வயசு என்ன ஆவுது? பத்து முடிஞ்சு பதினொண்ணு ஆயாச்சு, உங்கூடச் சேர்ந்தவளுங்க எல்லாம் குத்த வச்சாச்சு. நீ இன்னும்  சின்னப்புள்ள கணக்கா குதியாட்டம் போட்டுட்டு திரியுற. ஆம்பளப் புள்ளைங்க கூட சேர்ந்து தெருவுல நின்னு வெளையாடுறதும், சித்தப்பா மடியில  தலைசாய்ஞ்சு படுத்துக் கெடக்குறதும் நல்லாவாயிருக்கு” ரிப்பனை வைத்து இரட்டைச் சடையை மடித்துக் கட்டியபடியே அம்மா அர்ச்சனை செய்ய

‘அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன். சமையப் போற கொமரின்னா… சித்தப்பா மடியில படுக்கக் கூடாதா?’ செம்பாவின் மனமோ குழம்பியது. ஆனால் இந்தக் கேள்வியை அம்மாவிடம் கேட்க முடியாது.

கேட்டால்… “பெரியவங்க சொன்னா உம்முன்னு கேட்டுக்கணும், கேள்வி கேட்கக்கூடாது”ன்னு அதுக்கும் திட்டு விழும். செம்பாவின் மனதில் இதுபோல் கேள்விகள் நிறைய தோன்றும். ஆனால் அதை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென்பதே தெரியாமல் தவித்துப் போவாள்.

தன் தோழி மல்லியுடன் பள்ளிக்கு நடந்து போய்க் கொண்டிருந்தவள், “ஏ புள்ள மல்லி… எங்கம்மா எதுக்கெடுத்தாலும் என்னைய சமையப் போற கொமரின்னு  திட்டுறாங்கடி. சமையறதுன்னா என்ன?” வெகுநேரமாக அவளின் மனதை உறுத்திய அந்தக் கேள்வியை, தன் ஆத்ம நண்பி மல்லியிடம்  கேட்டாள்.

“சமையறதுன்னா என்னன்னு எனக்கும் தெரியல புள்ள… ஆனா மூணாங்கிளாஸ்ல நம்ம கூட படிச்சாளே ராமலட்சுமி, அவ நேத்து சமைஞ்சிட்டாளாம். அதுக்கு எல்லாரையும் கூப்பிட்டு தலைக்கு தண்ணி ஊத்தினாங்க”

பூப்பெய்தும் விஷயத்திலேயே இத்தனை ஒளிவு மறைவு என்றால், அந்தப் பெண் அங்கு வேறு எதைப் பற்றி பேசுவதற்கு அவளுக்கு சுதந்திரம் இருக்கக் கூடும்? அதன்பின்பு செம்பாவின் வாழ்க்கை நிறைய மாற்றங்களைச் சந்தித்தது.

சில வருடங்களில் அவளும் சமைந்தாள். அவளின் கவுனும் சுடிதாரும் பறிக்கப்பட்டு, பாவாடை சட்டை, தாவணி அணிவிக்கப்பட்டது. தேவையில்லாமல் ஆண்கள் யாரிடமும்  பேசக் கூடாது. சத்தமாக சிரிக்கக் கூடாது. அப்பாவோ, அண்ணனோ  யாராயிருந்தாலும் ஆண்களைத் தொட்டுப் பேசக்கூடாது.

வாசலில் மற்ற பிள்ளைகளோடு அவள் ஓடி விளையாடுவதும், அம்மாவுக்கு தேங்காய், மாங்காய் வாங்கிக் கொடுக்க நாலுகால் பாய்ச்சலில் அவள் துள்ளிக்குதித்து தெருவில் ஓடுவதும் எல்லாமே தடை செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்டதைக் கூட அவள் தாங்கிக் கொண்டாள். ஆனால் அது ஏன்? எதற்கு? இத்தனை மாற்றங்களும் எதனால்? என்பதன் விளக்கம் மட்டும் அவளுக்கு கிடைத்தபாடில்லை. அதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இத்தனை தடைகளுக்கு மத்தியில் அவளின் படிப்பு பத்தாம் வகுப்பு வரைக்கும் நல்லபடியாக ஓடியது. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒருநாள், “நாளைக்கு நீ பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம், லீவு போட்டிரு”

அம்மா அவளிடம் சொல்லவும், “ஏம்மா..எங்க போறோம்?”

“நாம ஒரு பக்கமும் போகல, உன்னைப் பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நம்ம வீட்டுக்கு வர்றாங்க”

“என்னது.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களா?? அம்மா என்னம்மா இது? எனக்கு இப்பவே கல்யாணமா? அம்மா நான் படிக்கணும்மா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம்  இதைக் கேட்டா சிரிப்பாங்கம்மா” அதிர்ச்சியும் அழுகையுமாய் பொங்கினாள் செம்பா.

“ஏய் இதென்ன புதுப்பழக்கம்? அம்மா அப்பா சொன்னா சரின்னு கேட்கணும். நாங்க எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்லுவோம். அக்காவுக்கு அப்படித் தானே கல்யாணம் பண்ணோம், அப்புறமென்ன? அவளைப் பார்த்தேயில்ல, எங்களை ஏதாவது எதுத்து பேசுனாளா. நாங்க சொன்னதுக்கு தலையாட்டுனால்ல. நம்ம வீட்ல என்ன நீ மட்டுமாயிருக்க? உனக்குக் கீழே இன்னும் ரெண்டு பேர் இருக்காங்கல்ல. எங்க காலும் கையும் நல்லாயிருக்கும் போதே நாங்க எங்க கடைமையை ஒவ்வொண்ணா  முடிக்க வேண்டாமா?” அம்மாவின் ஒற்றை அதட்டலில் அடங்கிப் போனாள் செம்பா.

 “பார்த்தியா வள்ளி. இப்பவே இது இம்புட்டுப் பேச்சு பேசுதே, இன்னும் இதை படிக்க வச்சேன்னு வையி, வீட்டுக்கே அடங்காது. நாளைக்கு கல்யாணமாச்சுன்னா புருசனை எப்படி மதிக்கும்? அவன் ஏதாவது சொல்லுவான், பதிலுக்கு இது ஏதாவது சொல்லும். பொறவு ரெண்டும் அடிச்சிட்டு கெடக்கும். அந்தக் கத நம்ம குடும்பத்துக்குச் சரி வருமா? பேசாம கழுத படிச்சது போதும்னு எவன் கையிலயாவது புடிச்சுக் குடுத்திடு” உறவுக்கார ஆச்சி ஒருவர் அம்மாவுக்கு அறிவுரை சொல்ல, அம்மா செம்பாவிடம் வந்தாள்.

“இங்க பாரு செம்பா… நான்லாம் சடங்கானதோட சரி, பள்ளிக்கூடம் பக்கமே எட்டிப் பார்க்கல. சடங்கான பிள்ளைக்கு இனிமே பள்ளிக்கூடப் படிப்பு எதுக்கு? அதுவா வந்து நாளைக்கு சோறு போடப் போகுது? வீட்லயிருந்து சட்டி பானை கழுவ, பொங்க பொறிக்கன்னு   குடும்பம் நடத்துறதுக்குப் படிச்சுக்கட்டும்னு எங்க ஆச்சி தாத்தா சொல்ல, அதைக்கேட்டு எங்க அப்பா அம்மாவும் என் படிப்பை நிறுத்தி ரெண்டே வருசத்துல என்னைக் கெட்டிக் குடுத்துட்டாங்க. கல்யாணம்னா அப்போ எனக்கு என்னன்னு கூடத் தெரியாது. மாப்பிள்ளை யாரு என்னன்னு எதுவுமே தெரியாது. எங்கப்பா அம்மா சொன்னாங்கன்னு மறுபேச்சு பேசாம தலையாட்டுனேன். கல்யாணத்தன்னிக்கு மணவறையிலதான் உங்கப்பாவை மொத மொதல்ல பார்த்தேன்.

இப்ப எனக்கென்ன குறைஞ்சு போச்சு, நல்லாயிருக்கேன். மாமனார் மாமியாரோட கூட்டுக் குடும்பமா இருந்து வரவு செலவு பார்த்து, கஷ்ட நஷ்டம் தெரிஞ்சு, குடும்பம் நடத்தலியா? உங்களையெல்லாம்  பெறலியா? ஆனாலும் இப்போ என் காலம் மாதிரியில்ல, காலம் மாறிப்போச்சுன்னு தான் சடங்கான பொறவும் உன்னைப் பள்ளிக்கூடம் அனுப்பியிருக்கேன். ஆனா அதுக்காக காலாகாலத்துல செய்ய வேண்டியதை செய்யாம முடியாது.

இப்போ உன்னைப்  பார்க்கத்தான் வர்றாங்க, இது முடியுமா  முடியாதானு தெரியாது. முடிஞ்சிடுச்சுன்னா சந்தோசம், எங்க கடமை முடியும். இல்லன்னா அடுத்து நல்ல எடம் வர்ற வரைக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போ. எப்போ நல்ல எடம் வருதோ அப்போ கல்யாணத்தை முடிச்சிருவோம்… சரியா?” அவளுக்குத் தெரிந்த உலக நடப்பை செம்பாவிடம் சொன்னாள்.

அம்மாவின் காலத்தில் அவள் வாழ்க்கை இருந்த விதமும், இப்போது தனக்கு அவள் தந்திருக்கும் சுதந்திரமுமே செம்பாவுக்கு ஒரு பெரிய சந்தோஷத்தைத் தந்தது. அம்மாவின் பேச்சுக்குப் பணிந்தாள். அவளின் நேரமோ… இல்லைகடவுளின் கருணையோ.. செம்பா பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் வரையில் தகுந்த வரன் அமையவில்லை… பள்ளிப்படிப்பை சந்தோஷமாய் முடித்தாள்.

அதை முடிக்கவும் சொல்லி வைத்தாற் போல வரனும் அமைந்தது. கல்யாணம் செய்து இதோ இன்று இங்கே நிற்கிறாள். ஆனால் அவளுடன் படித்த பாண்டியனோ பட்டப்படிப்புகள் படித்து இன்று அமெரிக்காவில் பணி புரிவதாகச் சொல்லும்போது, அவனின் நடை உடை பாவனை வாழ்க்கை முறையும், நுனிநாக்கு ஆங்கிலமும் பார்த்து இவளின் மனம் ஏங்கியது.

‘இவனும் என் ஊரில்தான் பிறந்தான், என்னோடுதான் வளர்ந்தான், படித்தான். ஆனால் எங்கள் இருவரின் வாழ்க்கைக்கும் இடையில்தான் எத்தனை வித்தியாசங்கள். ஆணாய்ப் பிறந்ததால் அவனின் வாழ்க்கை எங்கோ போய்விட, பெண்ணென்பதால் மட்டுமே அவனைவிட திறமையானவளாக  இருந்த போதிலும் என் வாழ்வில் கல்வியை நான் விரும்பும் வரையில் எட்டிப் பிடிக்க முடியவில்லையே!.  

ஆனால் என் அம்மாவின் இளமைக்காலத்துக்கும் என் இளமைக்காலத்துக்கும் இடையே ஏற்பட்ட மிகச்சிறிய மாற்றம் இன்று என் மகளின் இளமைக்காலத்தில் மிக அதிகமாய் தெரிகிறது. இதுவே  சந்தோஷம்தான்.

என் மகளின் சிறுவயதிலேயே ‘குட் டச், பேட் டச்’ பற்றியும், பத்து வயதில்  பூப்பெய்துவதைப் பற்றியும், பதின்ம வயதில் அவள் அணியும் உடை அவள் மனதுக்குப் பிடித்தவாறும், அதே நேரத்தில் பிறர் கண்களை உறுத்தாதவாறும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், காதல் என்றால் என்ன? காமம் என்றால் என்ன? இனக்கவர்ச்சி என்றால் என்ன? என்பதன் வேறுபாடுகளைப் பற்றியும், கல்வி அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றியும், அவளின்  கனவுகளை நனவாக்குவது பற்றியும்,சுயமாய் தன் காலில் நிற்பதைப் பற்றியும், கல்யாண வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், கணவன் மனைவிக்குள் இருக்க வேண்டிய விட்டுக் கொடுத்தலும் புரிதலும் பற்றியும், குடும்பத்தின் பொருளாதார நிலையை பெண்களும் அறிந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றியுமாய்… நாங்கள் இருவரும் எல்லா விஷயங்களையும் பேசிக் கொள்கிறோமே.

எங்களுக்குள் மிக அழகாய் பகிர்ந்து கொள்கிறோமே, இது எப்பேர்ப்பட்ட மாற்றம். ஆனால் இந்த மாற்றம் தனிப்பட்ட யாரோ ஒருத்தரால் மட்டுமே வந்ததில்லை. காலங்கள் மாற மாற… மக்களின் மனங்களும் விசாலாமாகிறது. சமுதாயமும் அதை ஏற்றுக் கொள்கிறது என்பதுதானே உண்மை.

செம்பாவின் தாய் மனம், தனக்கு கிடைக்காத இளைமைக்காலம் தன் மகளுக்கு வாய்த்ததில் பூரித்துப் போனது.

(முற்றும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 21) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 2) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி