in ,

நல்ல காலம் பொறக்குது (சிறுகதை) – ✍ இராஜலட்சுமி மகாராஜன், சென்னை

நல்ல காலம் பொறக்குது (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 134)

“அக்கா,   நாளைக்கு காலைல  மாமாகிட்ட  பாப்பாவுக்கு  செய்ய வேண்டிய வளையலை   கொடுத்துடறேன். அப்பாவுக்கு போன் பண்ணாத” என்று அலைபேசியில்  குதூகலமாக சொன்னான் பாபு

“நெஜமாவாடா சொல்ற?” என்று மறுமுனையில் சந்தோஷத்துடன் விம்மினாள் அக்கா

“ஒரு வேலை கிடைச்சிருக்கு, அட்வான்ஸ் பணம் கொடுத்து இருக்காங்க.  கொஞ்சம் ஊர் ஊரா போற வேலை.  நான் உனக்கு எல்லாம் செட்டில் ஆனதும் மறுபடியும் பேசுறேன்.  அப்பா கிட்ட சொல்லிடு, அவரை தொந்தரவு பண்ணாத” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான் பாபு

‘கையில் நாலு நோட்டு பணம் இருந்தா சந்தோஷமா தான் இருக்கு.  காதலுக்கும் காசுக்கு மட்டும் தான் கனவு வரவழைக்கிற வித்தை தெரியுது’ என்று சிலாகித்துக் கொண்டு உறக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்  பாபு. 

‘வேலையை நல்லா  கத்துக்கணும்.  வேலையை பத்தி இன்னும் முழுசா சொல்லல.   புரிஞ்சா  மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.  ஆனா,  வேலை நல்லது. இப்போதைக்கு பணம் வருது.  எப்படியாவது சமாளிக்கலாம்’ என்று நம்பிக்கையை துளிர, அமைதியான தூக்கத்தை தழுவினான்

போனில் எப்போதும் போல ரோஜாப்பூ, முருகன் படம், குழந்தை படம் போட்டு ‘இந்த நாள் இனிய நாள்’ என்பது போல நான்கு காலை வணக்கம் வாட்ஸ்ஆப் பகிர்வுகளில் கண் விழித்தான்

முதல் நாள் வேலை. பாபுவிடம் இருந்த நல்ல பேண்டையும் சட்டையையும் எடுத்து வைத்தான்.  எப்படிப் பார்த்தாலும் ரொம்ப சுமாராகவே இருந்தது.  சம்பளம் வாங்கினதும் முதல்ல ரெண்டு நல்ல சர்ட் பேண்ட் வாங்கணும். 

செருப்பும் பாடாவாதியாக  இருந்தது. கண்டிப்பா நல்ல ஷூ சாக்ஸ்  வாங்கணும்.  எவ்வளவு உற்சாகம் இருந்தாலும் பாபுவுக்கு காலையில் பசிக்கத் தான் செய்தது.  என்னையும் கொஞ்சம் கவனி என்பது போல் வினோத சப்தங்களை காட்டி உறுமிக் கொண்டிருந்தது அவன் வயிறு. 

வர்ற மாதத்திலிருந்து மெஸ்ல மாச சாப்பாட்டுக்கு காசு கொடுத்திடலாம்.  வரவை விட செலவு படிப்படியாக முன்னேறிக் கொண்டு வருவதே லேசாக பாபு உணர்ந்தான். 

ஊர் ஊரா போகணும்னு சொன்னாங்களே,  அப்போ மெஸ்சுக்கு காசு கட்ட வேண்டாம் என்று  பட்டியலில் ஒரு பெரிய பங்கு சரிந்து விழுந்ததை நினைத்து சந்தோஷப்பட்டான்

‘கையேந்தி பவனில் அடைக்கலம் புகுக’ என்று ரோட்டோரத்தில் ஆவி பறக்க இட்லி குண்டாவில் இருந்து வெளிவந்து தட்டுக்களில் வந்த இட்லிகள் அவனை அரைகூவல் இட்டு கூப்பிட்டுக் கொண்டிருந்தது

‘வேணாம் வேணாம்,  சட்டையில் சாம்பார் படும்.  முதல் நாள் வேண்டாம்.  அவ்வளவு டீசன்டாக நமக்கு பசியில் சாப்பிட வராது’  என்று இட்லிக்கு மறுப்பு சொல்லி விட்டு நகர்ந்தான். 

முக்கால்வாசி அலுவலகங்களுக்கு பக்கத்தில் உடன்பிறவா உறவு போல் பெட்டிக் கடைகளும்  டீக்கடைகளிலும் முளைத்து உறவாடிக் கொண்டிருப்பது போல பாபுவின் அலுவலகம் பக்கத்திலும் ஒரு கடை இருந்தது

“அண்ணே ஒரு…” என்று பாபு சொல்ல ஆரம்பிக்கும் போதே, கடைக்காரர் ஒரு சிகரெட்டை நீட்ட

“அது இல்ல, ஒரு பழம் தாங்க” என்று சில்லறையை தகர மூடிகள் மீது வைத்தான். 

வாழைப்பழத்தை கிள்ளி கொடுத்தவர்,  “ஏரியாவுக்கு புதுசா?” என்று கேட்டார். 

கையில் வாழைப்பழத்தை எடுத்தவுடன் திடீரென தோன்றிய இரண்டு நபர்கள்,  “வாங்க கிளம்பணும், வேலைக்கு நேரம் ஆயிடுச்சு” என்று பாபுவின் தோள் மீது கை வைத்தார்கள்

வெலவெலத்துப் போனான் பாபு.  பெட்டிக் கடைக்காரரும்,  பிறகு தோன்றிய இருவரும் கலகலவென சிரிக்க ஆரம்பித்தார்கள்

“ஏம்பா தம்பிய இப்படி பயமுறுத்துறீங்க?” என்று பெட்டிக்கடைக்காரர் கேட்டதற்கு

“நீங்க வேற பையன் நம்ம ஊரு,  பயமெல்லாம் வாய்ப்பே கிடையாது,  என்னடா சரி தானே” என்று மறுபடியும் கலகலவென சிரித்தார்கள்.

“நாங்கள் நியூ ஏஜ் மெக்கானிக்ஸ் கம்பெனி தான். இன்னிக்கு புதுசா ஒரு பையன் வரான்னு சொல்லி இருந்தாங்க, பாபு தானே நீ” என்று கேட்டவுடன், மெலிதாக ஆமாம் என்று சிரித்தான் பாபு

அலுவலகத்தில் நுழைந்ததும் அப்படி ஒரு அமைதி.  பெரிதாக வெளிச்சமும் இல்லை

“இன்னிக்கி இந்த ஏரியால பவர் கட்,  ஆபீஸ் இப்போ ஜெனரேட்டர்ல தான் ஓடுது” என்று ஒரு கேபினுக்குள் நுழைந்தார்கள்.

“வா   பாபு வா,  என்று ரொம்ப பரிச்சயம் ஆனவர் போல் அழைத்தார்.  ஆல் தி பெஸ்ட். இன்னைல இருந்து உனக்கு நல்ல நேரம் ஆரம்பம். உனக்கு முதல் வேலை நம்ம  சீப் இன்ஜினியர்கிட்ட டூல்பாக்ஸ் பெட்டியைக் கொண்டு போய் கொடுக்கணும். 

அங்கு கம்பெனியில ட்ரெயினிங் கொடுத்து  ஊர் ஊரா அனுப்புவார்கள்.  நம்ம ஊர்கார பையன்னு சொன்னாங்க, அதனால சாமர்த்தியமாக பிழைச்சுப்பேன்னு  தெரியும்” என்று சொல்லி “கை செலவுக்கு இதை வச்சுக்கோ” என்று கொடுத்தார்.

வாழ்க்கையில் இது போல எல்லாம் நடக்குமா? என்று பாபு கனவு கூட கண்டது கிடையாது.  எப்பவுமேவா கஷ்டகாலம் சுத்திகிட்டு இருக்கும்.  என்னைக்காவது நமக்கும் விடிய தானே வேணும்னு சந்தோசமாக சிரித்தான்

“சார்,  அந்த  டூல் பாக்ஸ்”,  என்று பாபு கேட்டவுடன்

“பையனுக்கு  ஆர்வத்தை பார்த்தீர்களா?” என்று நக்கலாக சிரித்தான் கூட இருந்த தடியன்

“இருக்கட்டும்  இருக்கட்டும்,  உங்க எல்லாரையும் தூக்கி சாப்பிடற மாதிரி வேலை செஞ்சு நல்ல பேர் வாங்குவேன்” என்று அவன் வயதுக்கே உரிய மிடுக்கை பாபு வெளி காட்டினான்

“போற வழியில ஷெட்ல  சேகர் எடுத்து தருவான், இவன் கூட வண்டியில் போ” என்று அனுப்பி வைத்தார் அங்கிருந்த பெரிய தலை

“இவன் கூடவா” என்று சற்று ஏமாற்றம் இருந்தாலும்,  வேலை  முக்கியம்,  காசு அதைவிட முக்கியம் என்று நினைத்துக் கொண்டு நடையைக் கட்டினான் பாபு.

பார்க்க ஒரு மளிகைக்கடை மாதிரி இருந்தது.  அங்கு தான் வண்டியை நிறுத்தினான்.

“போய் சேகர்கிட்ட டூல்ஸ்ன்னு சொல்லு” என்று ஹெல்மெட்டை கழட்டாமல் சொன்னான்

“யாரு சேகர்?” என்று பாபு கேட்க, “நீ யார்கிட்ட கேக்கறியோ, அவங்க தான் சேகர்” என்று சொன்னான்

அரை மனதாக பாபு அந்த கடைக்குள் நுழைந்தான். “சேகர் சார் சேகர் சார்” என்று கூவியதற்கு ஒரு வயோதிகர் வெளியே வந்தார்

“சேகர் சார் கிட்ட டூல்ஸ் வாங்கணும்” என்றான் பாபு.

பதிலேதும் பேசாமல், ஒரு மூலையை அவர் பழுப்பேறிய பெரிய நகங்களை உடைய விரல்கள் திசைக் காட்டியது

அங்க அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளின் நடுவில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தது அந்த தகர டப்பா டூல்ஸ் பாக்ஸ். பாபு தொட்டவுடன் தான் தெரிந்தது அது தகரமில்லை பிளாஸ்டிக் என்று.

கொஞ்சம் இலகுவாக தான் இருந்தது. தொழில் பக்தி காரணமாக, அந்த பெட்டியை ஆட்டுகுட்டிப் போல நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வெளியே வந்தான். திரும்பி பார்த்தால் அந்த வயதான ஆசாமியை காணவில்லை.

“சீக்கிரம் வா, வண்டில ஏறு” என்று அரைக்கூவல் விடுத்தான் தடியன்

‘எல்லாம் பிடித்திருக்கிறது, இந்த தடியனை தவிர’ என்று நினைத்துக் கொண்டான் பாபு

“நான் கீழ நிக்கறேன், நீ அந்த என்ஜினீயர் கிட்ட பெட்டியை கொடுத்திட்டு வீட்டிற்கு போயிடு. ராத்திரி சென்ட்ரல் ஸ்டேஷன் பிளாட்பாரம் 5-ல 8 மணிக்கு வந்திடு. உன் டிக்கெட் எடுத்துக்கிட்டு நான் வரேன்” என்றான்

‘இவனோடு பம்பாய் வரை போகணுமா?’ என்று நினைக்கையில் அழுகையே வந்தது பாபுவிற்கு.

“நீங்களும் வரீங்களா?” என்று கேட்டான்.

“இல்ல, நான் ஹைதராபாத்ல இறங்கிடுவேன். நீ தான் பம்பாய் போகணும்” என்றான்.

வந்த கஷ்டம் பாதியிலேயே கழண்டு கொள்வதை நினைத்து அவன் மனம் ஆனந்த கூத்தாடியது. பாபுவிற்கு வெகு நாட்கள் பம்பாய், டெல்லி போன்ற இடங்களுக்கு போக ஆசை.

பெரும்பாலான தென்னிந்தியர்கள் போல டெல்லியையும், பாம்பேவையும் செய்திகளில் மட்டும் பார்த்திருப்போர் கூட்டத்தில் ஒருவன் பாபு.

‘பாஷைக் கூட தெரியாதே, ஆபத்துக்கு பாவமில்லை என்பது போல கோபித்து கொள்ளாத அளவு ஆங்கிலத்தை வைத்து சமாளித்து கொள்ளலாம்” என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்

பாம்பேவைப் பற்றிய எண்ண ஓட்டம் முடிவதற்குள் ஒரு அடுக்கு மாடியின் வாசலில் நிறுத்தினான் வண்டி ஒட்டியவன்.

“இரண்டாவது மாடில தான் என்ஜினீயர் இருப்பாரு, அவரை கூப்பிடு. அவர் வந்ததும் கார்ல அந்த டூல்ஸைக் கொண்டு வச்சுடு” என்றான்

“அப்புறம்” என்று பாபு கேட்க

“விழுப்புரம்” என நக்கலடித்தான் கூட வந்தவன்

‘இன்னையோட இவன் சகவாசத்தை ஒழிக்கணும்’ என்று பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான் பாபு

சட்டென பெட்டி கீழே விழுந்தது. பெட்டியின் கைப்பிடி உடைந்து, பெட்டி கீழே விழுந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த தடியனின் கையிலிருந்த பைக் உதறி சடாரென்று சரிந்து விழுந்தது

”எடுடா, உடனே எடு, பாஸ்சுக்கு தெரிஞ்சா…” என்று வியர்க்க ஓடி வந்தான்

“சாரி” என்று மறுபடியும் ஆட்டுக்குட்டியை அள்ளி அணைப்பது போல, நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான்.

கார் பார்க்கிங்கில் ஒருவர் அழைப்பது போல் பாபுவிற்கு தோன்றியது

“சேகர் ஆளு தானே? பெட்டியை டிக்கில போடு,  நீ கிளம்பு” என்றான்

“இல்ல சார், நான் ரெண்டாவது மாடில இருக்கிற…” என்று ஆரம்பித்தவனை

“அது நான் தான், சீக்கிரம் வை. பாக்டரிக்கு எடுத்துகிட்டு போகணும். யு மே கோ” என்று அதட்டியவுடன், வேகமாக வேலையை செய்து விட்டு வாசலுக்கு வந்தான் பாபு.

ரோட்டில் ஏதோ  விபத்துப் போல, மக்கள் கூட்டமாக கூடியிருந்தனர். அதற்குள் அந்த இடத்தில போலீஸ் ஜீப்பும் ஆம்புலன்சும் வந்து சேர்ந்திருந்தது.

இடத்திலிருந்து விரட்டப்பட்டவனை போல, பைக்கில் விருட்டென கிளம்பி இருந்தான் தடியன். வீட்டுக்கு பக்கத்தில் இறக்கி விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்த பாபுவிற்கு, கொஞ்சம் ஏமாற்றம் தான்.

அவனது மொபைல் நம்பர் கூட வாங்காததை நினைத்து சிறிது வருத்தமும் பட்டான். பாபுவின் பேங்க் அக்கௌன்ட்டில் பணம் வந்திருப்பதற்கான குறுஞ்செய்தி வந்திருந்தது.

மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு, நேராக அக்கா மகளுக்கு நகை வாங்க நகை கடைக்கு போனான் பாபு

உச்சி வெயில் கண்களை கூசச் செய்தாலும், நகைக் கடைகளின் ஒளிவிளக்குகள் துளியும் ஜொலி ஜொலிப்புக் குறையாமல் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது.

வெயில் மண்டையை பிளந்துக் கொண்டிருந்த போதும், அவ்வப்போது திறந்து மூடிக் கொண்டிருந்த கண்ணாடி கதவுகள் ஏ.சி நிறைந்து குளிரூட்டப்பட்ட காற்றை அவன் மீது வீசி அரவணைத்துக் கொண்டது

நகைக்கடை வாசலை அக்காவின் திருமணம் போது தான் முதன் முதலில் பாபு பார்த்தது நினைவில் வந்தது. இப்பொழுதும் அவளுக்காகத் தான் வந்திருக்கிறோம் என்று நினைவுப்படுத்திக் கொண்டு, உள்ளே நுழைந்தான்.

“சார் வணக்கம், என்ன பாக்றீங்க?” என்று தன்னைப் பார்த்து ஒரு பெண் புன்முறுவலுடன் கேட்க, அவன் சிலிர்ப்பதை நிறுத்தினாலும், அவன் மனம் நிறுத்தவில்லை

“சின்ன  பாப்பாவிற்கு செயின்” என்று நா தழுதழுத்ததை மீறிக் கொண்டு சொன்னான்.  அந்த தைரியத்தை தந்தது அவன் அக்கவுண்டில் விழுந்த பணம்

“முதல்  மாடி சார்” என்று அந்தப் பெண் வழிகாட்டிய உடன் நகர்ந்தான். 

மளிகை கடையா  நகைக்கடையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கூட்டம். காலையில் சென்ற மளிகைக்கடை வெறிச்சோடி இருந்தது.  நகைக் கடையில் கூட்டம் அம்முகிறது. 

நாட்டில் எல்லோரும் வீட்டில் பணம் அச்சடிக்கிறார்களோ  என்று சந்தேகத்தை பாபுவால் தவிர்க்க முடியவில்லை. வயதான தாத்தா பாட்டி முதல், பிறந்த சில மாதங்கள் கூட நிரம்பாத குழந்தைகள் வரை கடையில் இருந்தார்கள். 

செயின் என்ற பலகைக்கு போகும் வழியில் அத்தனை பெரிய தங்க ஆபரணங்களை சுமந்த தட்டுகள் வரிசையாக பார்வையை கவர்ந்தன. 

இதையெல்லாம் யார் தான் வாங்குவார்கள் என்று நினைக்கும் போதே,  அதைப் போன்று இரண்டு மடங்கு அவர்கள் கழுத்தில் தொங்க விட்டிருந்த பெண்கள் அதை வாங்கிக் கொண்டிருந்தனர்

அதை பார்த்து விழி பிதுங்கிய நிலையில் “செயின்ஸ்”  பலகையை வந்து   சேர்ந்தான் பாபு

“ஒரு சவரன்ல பார்வையா சின்ன பாப்பாவுக்கு ஒரு செயின்” என்று கேட்டான்.   அங்கிருந்த பெண் ஒரு  ட்ரேயை எடுத்து வைத்தாள்.  முதலில் இருந்த செயினை எடுத்துக் கொண்டான்

“இது எவ்வளவு?” என்று கேட்டதற்கு,  தன் வங்கி கணக்கில் விழுந்த பணத்தை விட குறைந்த எண்களை கேட்டதில் சந்தோஷப்பட்டு, “பில் போடுங்க” என்றான்

கூட்ட நெரிசலில்,  அவன் வாங்கிய நகையைப் பத்திரமாக சட்டைப் பையில்  உயிரைப்  பிடித்துக் கொள்வதைப்  போல பிடித்துக் கொண்டு  வெளியே வர முயற்சி செய்தான்.  

நகை வாங்கிய பிறகு அந்தப் பெண் அவனைப் பார்த்து வணக்கம் வைக்காததை உறுத்தலுடன் பார்த்தான்

மாமாவிற்கு போன் செய்து வரவழைத்து நகையை கொடுத்து விட்டு, வீட்டுக்கு சென்று பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு பாம்பே கிளம்ப வேண்டும் என்ற  நினைப்பு, பாபுவை தள்ளாட செய்தது. 

ஆனாலும் சொந்த காசில் நகை வாங்கிய பெருமிதம் அவனை உற்சாகப்படுத்தியது.  படியில் இறங்காமல்  லிப்டில் ஏற ஆசைப்பட்டு  நேரே பேஸ்மென்டுக்கு  சென்றடைந்தான். 

மேலே இருந்த மனித வெள்ளத்தின் சாயல் கூட இல்லாமல் இருaந்தது.  வெளியே வருவதற்கு திக்கு தெரியாமல் திரிந்த பாபுவிற்கு பின்னால் வித்தியாசமான உடைகளை அணிந்த நால்வர் விரைந்து அவனை நோக்கி ஓடி வருவது தெரிந்தது

அந்த ஒரு சவரன் நகையை திருட நாலு பேரா   என்பதைப் போல பதைபதைத்து ஓடி ஒரு தூணின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தான்.

அந்த நால்வரில் இருவர் அவன் நின்ற தூணின் அருகில் சென்று பாபுவை சுற்றி வளைத்தார்கள்.  தூணின் மீது சரிந்து விழுந்த பாபுவை தள்ளிவிட்டு, அவன் பின்னால் இருந்த கைப்பிடி உடைந்து இருந்த பெட்டியின் அருகே சென்றார்கள்.

இடத்தை விட்டு ஓடாமல் அவனுக்குப் பரிச்சயமான பெட்டியை பார்த்தவுடன் அதை அவர்களிடமிருந்து காப்பாற்ற சென்றான் பாபு

அந்த மூவரும் சூழ பெட்டியை அவசரமாகத்  திறந்ததில், அதில் “00:05… 00:04”,  என்று ஜெலட்டின் குச்சிகள் மீது பளீரென்று மின்னிக் கொண்டிருந்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. நல்லகாலம் பொறக்குது..ராஜலட்சுமி மகாராஜன் சென்னை.கதை எண் 134..
    மனசை அப்படியே கஷ்டப்படுத்திட்டிங்க. உங்க எழுத்தால்.
    கதை வாசிக்க ஆரம்பித்த உடன்.ஏதோ நிகழப் போகிறது பாவம் பாபு எனத்தான் தோன்றியது.ஆனால் இத்தனை பெரிய மன ஏமாற்றமா என நினைத்து நமக்குள்ளேயே ஒரு ஏமாற்றத்தை விதைத்து விட்டு செல்கிறது கதை..எழுதிய எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்.அருமை அருமை..

காமராசு (சிறுகதை) – ✍ சல்மா அம்ஜத் கான், மதுரை

ராசி (சிறுகதை) – ✍ ‘செவ்வந்தி’ புனிதா, திண்டுக்கல்