in ,

ராசி (சிறுகதை) – ✍ ‘செவ்வந்தி’ புனிதா, திண்டுக்கல்

ராசி (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 135)

மாலை வீடு திரும்பிய அசோக்கின் மனம் நிலையில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தது

‘ஜோசியம் படித்த, தன் நண்பன் சொன்னது உண்மை தானோ’ என அவன் மனம் கேள்வி கேட்டு, ‘ஆம் இல்லை’ என்ற விடைகளை மாற்றி மாற்றி எழுதி அழித்து விளையாடிக் கொண்டிருந்தது.

‘இன்று மட்டுமா பிரச்சனை. பிரச்சனை என்றுமே தன் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப் போனது தான். சண்டைகளும், சச்சரவுகளும், மனக் கசப்புகளும் புதிதில்லை.

ஆனால், பாத்திரத்தைத் தாண்டி பொங்கி வரும் பால் போல், இப்போது பிரச்சனைகள் ஒருவேளை மனதில் நிறைந்து வழியத் துவங்கியிருக்கலாம். இதில் புதிதாய், நமது வீட்டை ஏன் அதற்கு காரணமாய் கை காட்ட வேண்டும்’ எனச் சிந்தித்தவனின் மனதிற்குள், காலை அந்த ஜோசியக்கார நண்பனிடம் பேசியது நினைவிற்கு வந்தது

“வீட்டுல தினமும் சண்டைடா, எப்படி சண்டை வருதுனே தெரியல. ஆனா ஒரு நாள் கூட நிம்மதியாத் தூங்க முடியல. மனம் விட்டு சிரிச்சே வருசம் ஆன மாதிரி இருக்கு. இது பத்தாதுனு பையன் வேற கட்டில்ல இருந்து விழுந்துட்டான். கட்டிலுக்கும் தரைக்கும் ரொம்ப தூரம் இல்லடா, ஆனா கை எலும்பு ரெண்டு இடத்துல ஒடஞ்சு படாதபாடு பட்டுட்டு இருக்கான். வெறுமையா இருக்குடா, எதுக்கு இப்புடி ஒரு பிறவிய எனக்கு கடவுள் குடுக்கனும்னு கோபம் வருது” எனச் சொன்ன அசோக்கின் மனம் வேதனையில் துவண்டது

சில நிமிடம் அமைதி காத்த அந்த நண்பன், “ஒன்னு செய் அசோக், வீட்ட மாத்து. தொடர்ந்து சண்ட, பையனுக்கு இவ்ளோ தூரம் அடிபடணும்னா வீட்ல எதும் சரியில்லாம இருக்கும். ரெண்டு, மூனு வருசம் வேற வீட்டுல இருந்து பாரு, எல்லாம் சரியாகிடும்” என நண்பன் சொன்ன போது, அசோக்குக்குத் தெம்பாகத் தான் இருந்தது.

‘ஆனால் அதற்காக, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை விட்டு வெளியேறும் மன தைரியம் நம்மிடத்தில் உள்ளதா? அவசியமற்று சொந்த வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டுமா?’ என மனம் குழம்பியது

சிந்தனைகளைச் சிதற விட்டுக் கொண்டிருந்தவனின் கவனம் கிச்சனில் கேட்ட பெரும் சத்தத்தில் ஒருமுகப்பட, “டமால் டமால்” எனப் பாத்திரங்களை போட்டுக் கொண்டிருந்தாள் மனைவி ஆனந்தி

ஏற்கனவே தலையில் தாளம் போட்டுக் கொண்டிருக்கும் சுத்தியல்கள் பத்தாதென, ஆனந்தி வேண்டுமென்ற பாத்திரங்களைப் போட்ட சத்தமும் இணைந்து அவனுக்கு வெறி மூட்டியது. வேகமாய் சேரை நான்கடி தள்ளிவிட்டு எழுந்தவன், கிச்சனுக்குள் விரைந்தான்.

“பைத்தியம் எதும் புடிச்சுருச்சா உனக்கு?” என்றான் எடுத்த எடுப்பில்

இன்றைய சண்டைக்குப் “பைத்தியம்” என்ற வார்த்தை அஸ்திவாரம் போட, “ஓ நான் பைத்தியம், நீ ரொம்ப அறிவாளியா? தல தலயா அடிச்சேன் நந்தனுக்கு புத்தூர்ல கட்டுப் போடலாம்னு, என் பேச்சக் கேக்காம மாக்கட்டுப் போட்டு புள்ள துடிச்சுக்கிட்டே இருக்கான். எனக்கென்னனு வெளிய போயிட்டு ராத்திரி வீட்டுக்கு வந்தா, நான் தனியா என்ன தான் பண்றது?” என இன்னும் இன்னும் பாத்திரங்களை உடைத்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி.

“படிப்பறிவில்லாத உனக்கு எல்லாம் தெரியுமா? குறை சொல்ற புத்தி தான உன் குடும்பத்தோடது. என் புள்ளைய எனக்குப் பாத்துக்கத் தெரியும், நீ ஒன்னும் பாக்கத் தேவையில்ல” எனத் தானும் பதிலுக்கு சத்தமிட்டான் அசோக்.

வாக்குவாதம் முடிவில்லாமல் தொடர்ந்ததில், மாக்கட்டு புத்தூர்கட்டு இரண்டையும் விட்டு விட்டு, இருவரின் வீட்டினரின் பெயர்களையும் சண்டைக்குள் இழுத்துக் கொண்டிருந்தனர் இருவரும். வார்த்தைகள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தது.

பெரும் சண்டைகளின் போது, சில சமயம் ஆண்களிடம் வார்த்தைகள் தீர்ந்து போய் விடுமோ என எண்ணும் படி, அசோக்கின் அம்மா பற்றி ஆனந்தி பேசியதும், ‘பளார்’ என்று அவளின் கன்னத்தில் அறைந்திருந்தான் அவன்.

சத்தமாய் அழுதவளின் குரலில் இணைந்த வார்த்தைகள், வாசற்படியைத் தாண்டி எட்டிப் பார்க்க, மீண்டும் அவளை வன்மமாய் தீண்டியிருந்தான் அசோக்.

இடி முழக்கமும் முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும் என்பது போல், அவர்களின் சத்தம் மெல்லக் குறைய, கை வலியைத் தாங்க முடியாமல் தலையணையைக் கடித்தும், அப்பா அம்மா சண்டையிடுவது, முக்கியமாய் அப்பா அம்மாவை அடிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், உடைந்த கையையும் பொருட்படுத்தாது, இரு கை ஆள் காட்டி விரல்களையும் இரண்டு காதுகளுக்குள் கொடுத்து, விழிகளை இறுக்கமாய் மூடி அழுது கொண்டிருந்தான் நந்தன்.

தங்கள் குடும்பத்தின் மானத்தைக் கெடுத்து விட்டதாய் சண்டையிட்டுக் களைத்துப் போன இருவருக்கும், தாங்கள் இணைந்து உருவாக்கிய குடும்பமும் தெரியவில்லை, அறைக்குள் அரண்டு அழுது கொண்டிருக்கும் தங்கள் மகனின் மனநிலையும் தெரியவில்லை.

மழை பெய்து ஓய்ந்த வீதி போல், அமைதி பூண்டிருந்தது அந்த இல்லம். அடி வாங்கிய கன்னத்தோடு மகனுக்கு சாப்பாடு ஊட்டிய ஆனந்தியின் மனதில், நடந்த சண்டை மழைத்தடமாய் தடமிட்டு, மகனோடு பேசுவதற்கும் தடையிட்டிருந்தது.

“அம்மா”, என மெதுவாக அழைத்த நந்தன், “ரெண்டு பேரும் சண்ட போடாதீங்கம்மா, எனக்கு பயமா இருக்குமா” என்றான்.

“நான் தான் சண்ட போடுறனா நந்தா, உங்க அப்பாட்ட போய் இத சொல்லு, பாரு எப்படி அடிச்சுருக்காருனு” என்றாள் ஆனந்தி கடினமாய்.

அன்றைய இரவும் அனல் மேடாய் கடந்து கொண்டிருந்தது. ‘என்ன இருந்தாலும் நான் கைய நீட்டியிருக்கக் கூடாது, ஆனா எப்படிப் பேசுறா தேள் கொடுக்கு மாதிரி” என யோசித்துக் கொண்டிருந்தான் அசோக்

“ஆம்பளைங்கிற திமிரு, அடிக்கிற அளவுக்கு நான் என்னத்தப் பேசிட்டேன்” என விம்மலோடு துயில் துறந்திருந்தாள் ஆனந்தி

‘பாவம் நந்தன், சண்ட போட்டா பயப்புடுறான். அவன் மனசு பாதிச்சுடக் கூடாது, இனி சண்டையே போடக் கூடாது’ என மனதுக்குள் பெயருக்கென சொல்லிக் கொண்டவர்களின், விடியல் மயானத்தின் அமைதியைத் தன் வசப்படுத்தியிருந்தது.

உலகை உலுக்கும், தினம் தினம் கொல்லும் ஈகோ எனும் பிசாசு இருவரையும் இப்போது பிடித்திருந்தது.

‘எப்படி அவ எங்கம்மாவப் பத்தி பேசலாம். நான் ஏன் அவட்ட பேசணும்?’ என அவனும்

‘மனசாட்சி இல்லாம கைநீட்டி அடிச்சுட்டு எப்படித் திண்ணக்கமா இருக்காரு’ என அவளும் நினைத்துக் கொண்டு கடந்த பகல் இரவாகி, இன்றும் ஒரு சண்டைக்கு தூது சென்றிருந்தது.

நாட்கள் மாற்றமேதுமின்று மீண்டும் அப்படியே கடந்தது. மகனுக்கும் எலும்பு கூடிய பாடில்லை. மனதிலும், உடம்பிலும் வலியைச் சுமந்து அல்லாடிக் கொண்டிருந்தது அந்த பிஞ்சு மனம்.

இவன் தான் குற்றவாளியாக இருப்பானோ என்ற சந்தேகம் வந்த பின், எந்தத் தவறு நிகழ்ந்தாலும் அவனை நோக்கிப் பாயும் முதல் பார்வை போல், ஒவ்வொரு சண்டையின் போதும், அசோக்கின் மனம் வீட்டைக் குறை சொல்லிக் கொண்டிருந்தது.

இன்று வேறொரு ஜோசியரைத் தேடியே சென்று விட்டான்

“வீடு பிரச்சனையா இருக்குமா?” என அவனாக மூக்கை நுழைக்க, அதுவே விடையாகியும் போனது

“ஆமா, வீட்ல ஏதோ கெட்ட சக்தி இருக்குற மாதிரி தான் தெரியுது. கொஞ்ச நாளைக்கு தூரமா இருந்து பாருங்க” என்ற பதிலே அங்கும் கிடைத்தது.

சொந்த வீட்டை விட்டுச் செல்வது என்றால் அத்தனை எளிதல்ல. நம் சௌகரியத்தைத் தாண்டி, சொந்த வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டுக்குச் சென்றால் கண்ணு, காது, மூக்கு வைத்துப் பேசும் இந்தச் சமூகம் என்ற எண்ணமும், அவனுள் உறுத்திக் கொண்டே இருந்தது.

அசோக் ஒரு வார்த்தை அதிகமாய் பேசும் போது, அவனை விடத் தான் இன்னொரு படி அதிகமாய் பேசி விட வேண்டும் என உறுதி கொண்டிருக்கும் ஆனந்திக்கும் சண்டைகள் சலித்துப் போயிருந்தன.

எங்காவது சென்று சத்தமில்லாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதிலும் மேலிட்டிருந்தது.

அன்று மாலை வீட்டுக்கு வந்த அசோக், “ஆனந்தி” எனத் தணிந்த குரலில் அழைத்தான். இந்த ஒலியில் அவனின் குரலை அவள் கேட்டு, வருடங்கள் சில ஆகியிருந்தன.

மெல்ல பேச்சை ஆரம்பித்தவன், “நேரம் சரியில்லாம தான் ஒரே சண்டையா இருக்கு, நந்தனுக்கு உடம்புல பிரச்சினை வந்துட்டே இருக்குனு எனக்குத் தெரிஞ்ச ஒரு ஜோசியர் சொன்னாரு. வேற இடம் மாற சொல்றாரு, கொஞ்ச நாளைக்கு வீடு மாறிப் பாப்போமா” என்றான்.

முதன் முறையாய் அவனின் ஒரு முடிவுக்கு அவள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாய் உட்கார்ந்திருப்பது அவனுக்கு வியப்பாய் இருந்தது.

“இத விட்டுட்டு எங்க போக முடியும், மாச மாசம் வாடக எடுக்கனுமே. வீட்டுக்கு லோன் தான கட்டிக்கிட்டு இருக்கோம்” என்றாள் ஆனந்தி.

“இத வாடகைக்கு விட்டுட்டு, வர்ற வாடகைப் பணத்தை அங்க வாடகைக்குக் குடுத்துக்கலாம். ஒரு ரெண்டு மூனு வருசத்துக்கு அப்புறம் நேரம் எப்படி இருக்குனு பாத்துட்டு மறுபடியும் இங்க வந்துடலாம். நீ என்ன சொல்ற? ” என்றான் அசோக்.

சிறிது நேரம் யோசித்தவளுக்கு, தங்கள் அண்டை வீட்டுக்காரர்களே முதலில் நினைவிற்கு வந்தனர்

“எப்பா, ஆனந்தி வீட்டுல எப்பவுமே சண்டச் சத்தம் கேட்டுக்கிட்டே தான் இருக்கும், அதுவா சந்தக்காடுடா” என்ற பொதுவான ஒரு அடையாளத்தைத் தன் வீடு தங்கியிருப்பது அவளுக்குத் தெரியும்.

ராத்திரி முழுவதும் சண்டையிட்டுக் காலையில் வெளியில் செல்லும் போது, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அவள் வாசலைக் கடந்து வந்த தருணங்கள் ஏராளம். கொஞ்ச நாள் இவர்களின் ஏளனப் பார்வைக்கு ஆளாகாமல் இருக்கலாம் என்பது அவளுக்குப் பெரும் நிம்மதியாய்த் தெரிந்தது

“சரி” எனத் தலையாட்டினாள்.

வீட்டு வேட்டையை உடனே துரிதப்படுத்தினான் அசோக். எந்த வாசல் பார்த்த வீடு இருக்க வேண்டும், என்ன நிறத்தில் வீட்டுச் சுவர்கள் இருக்க வேண்டும். வாசல் எப்படி இருக்க வேண்டும் என கூகுளையும், தெரிந்தவர்களையும் கேட்டுக் கேட்டு வீடு தேடினான்

சொந்தமாய் வீடு கட்டும் போது கூட இத்தனை பிரயத்தனப்படவில்லை என நினைத்துக் கொண்டான்

வீடும் கிடைத்து விட்டது. அழகான, அம்சமான வீடு. அவன் விசாரித்த நல்ல ராசியுள்ள வீடுகளின் வரிசையில் எண்பது சதவீதத்தை அடைந்திருந்தது. ஆனாலும், சொந்த வீட்டை விட்டுப் புறப்படுவது நெருஞ்சி முள்ளாய் தைத்துக் கொண்டிருந்தது.

தன் அறையாயின் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால், பொது இடத்தில் உட்கார முடியாது என்பது போல், பற்பல விதிகளும் வாடகை வீட்டோடு வந்திருந்தன.

அனைத்தும் நல்லதுக்கே என வீட்டை வாடகைக்குப் பேசி இன்று குடியும் வந்தாகி விட்டது.

இனிப் பிரச்சனை வராது, நந்தனுக்கு சீக்கிரம் சரியாகி விடும் என்ற எண்ணம் இருவரின் மனதிலுமே நிறைந்திருக்க, அழகாய் பூஜை செய்து பால் காய்ச்சினாள் ஆனந்தி.

அன்றைய நாள் அழகாகவே கழிந்தது. புது வீடு உறக்கத்தைத் தராதிருந்தாலும், நிம்மதியைத் தந்திருந்தது.

இரண்டாம் நாள் விடியல் மலர்ந்து வந்த போது, தன் சட்டையைக் காணாமல் தேடிக் கொண்டிருந்தான் அசோக்.

கொஞ்ச நேரம் தேடியவன், “ஏய் ஆனந்தி, இங்க இருந்த சட்டைய எங்க வச்சுத் தொலஞ்ச?” என்றான்.

என்றும் போல் இன்றும் சண்டைக்கு அச்சாரமாய் “தொலஞ்ச” என்ற வார்த்தை வடிவில் வந்திருந்தது. வேகமாய் வந்தவள், தான் ஆசையாய் அயர்ன் செய்து வைத்திருந்த சட்டையை அவனுக்கு அருகில் தூக்கி எறிந்தாள். இன்றும் தொடங்கிய சண்டை, புது வீட்டையும் போர் பூமியாய் மாற்றியிருந்தது.

மீண்டும் பழைய சண்டைகள் புது வீட்டிலும் நித்தம் பூத்து வந்தது. அவர்களின் சொந்த வீட்டிற்கும் ஒருவழியாய் வாடகைக்கு ஆள் வந்திருந்தனர். கஷ்டப்படும் குடும்பம் தான் ஆனால் நம்பிக்கையானவர்களாய் இருந்தனர்.

இரண்டு மாதம் கடந்த நிலையில் குழாய் வரி வாங்குவதற்காக தன் சொந்த வீட்டுக்குச் சென்றிருந்தான் அசோக். அழகாய் அவனை வரவேற்றது, வாசலில் ஒன்று இரண்டாய் பூத்திருந்த மல்லிகையின் மனம். சிரித்த முகத்தோடு வரவேற்றாள் வாடகைக்கு இருப்பவர்களின் குடும்பத்தலைவி.

“வாங்க” என உள்ளே அழைத்தார் குடும்பத் தலைவர்.

அங்கங்கு இருந்த ஆணிகளில் அளவான அவர்களின் குடும்பத்தின் புகைப்படம் நிறைந்திருந்தது. கொடுத்த காபியை குடித்துக் கொண்டே சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான் அசோக்.

தன் வீடு போல் அல்லாமல் முற்றிலும் வித்தியாசமாய் அவனுக்குத் தெரிந்தது. வீட்டுத் தலைவர் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார்.

“யமுனா வண்டிச் சாவியப் பாத்தியாமா?” என்று அவர் கேட்க

“மறந்துட்டீங்களா இருங்க வரேன்” என உள்ளே ஓடிய யமுனா, “கட்டில் மேல இருக்கு. எப்போப் பாத்தாலும் மறந்துடுங்க” என சிரித்தபடியே கையில் கொடுக்கத், தானும் சிரித்து வெளியேறினார் அந்தக் குடும்பத் தலைவர்.

அங்கு எங்கும் நிம்மதி நிறைந்திருப்பது போன்ற பிரம்மை அசோக்கின் மனதில் தோன்றியிருந்தது. விடைபெற்று புறப்பட்டவனின் மனதிற்குள் பாரம் ஏறியிருந்தது.

நீண்ட நாட்களாய் தேடிக் கொண்டிருந்த வினாவிற்கு விடையும் கிடைத்திருந்தது. மகிழ்ச்சியும், ராசியும் வீட்டைப் பொருத்தது அல்ல, பேசும் வார்த்தையையும், வெளிப்படுத்தும் உணர்வுகளையும் பொறுத்தது என

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

5 Comments

  1. நிதர்சனங்களின் தொகுப்பாய் இருந்தது இக்கதை. அனைவருக்கும் தேவையான ஒன்று. வாழ்த்துக்கள்.

  2. வீட்டுக்கு வாசல் அமைப்பு பற்றி நிஜத்தில் குழம்பிப் போயிருந்த எனக்கு இக்கதை எனது மனக்குழப்பங்களுக்குத் தீர்வாய் அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். மிகவும் அருமையான கதைக்களம். எழுத்து நடை அற்புதம்…

நல்ல காலம் பொறக்குது (சிறுகதை) – ✍ இராஜலட்சுமி மகாராஜன், சென்னை

அவள் சாந்தி (சிறுகதை) – ✍ நஸ்ரத் அமனா, ஸ்ரீலங்கா