in ,

அவள் சாந்தி (சிறுகதை) – ✍ நஸ்ரத் அமனா, ஸ்ரீலங்கா

அவள் சாந்தி (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 136)

“சாந்தி…. சாந்தி இந்த பால குடிம்மா”

“கண்ணைத் திறந்து பாரும்மா”

“இவளுக்கு இந்த நிலமை வரணுமா? இவ பட்ட கஷ்டம் போதாதா?”

அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு  கதை பேசிக் கொண்டனர். எல்லாரது முகத்திலும் உண்மையான சோகம் இருந்தது

சாந்தி உட்பட அத்தனைபேரும் கிட்டத்தட்ட சமவயது உடையவர்களாயிற்றே. தங்களுக்கும் இப்படி ஒரு கதி நேர்ந்திடுமோ என்ற பயம் இல்லாமலில்லை

போலிஸ் வண்டி வந்து நின்றது. “இங்க என்ன கூட்டம், எல்லாரும் ஒன்னா கூடி இருக்குற காலமா? உங்க மாஸ்க் எங்கம்மா? முதல்ல போடுங்க”

“சார்… இந்த வீட்டுக்கார அம்மாக்கு உடம்பு ரொம்ப கவலைக்கிடமா இருக்கு. கூட யாருமில்ல, அதான் எல்லாரும் கூடியிருக்காங்க”

“ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க, அட்மிட் பண்ணா அவங்க பார்த்துப்பாங்க. அவங்கள விட்டு முதல்ல தள்ளி நில்லுங்க. ஒவ்வொரு நாளும் இங்க கூட்டமாவே இருக்கு. சூழ்நிலைய விளங்கி நடந்துக்கோங்க” என சத்தமிட்டான்

அங்கே இருந்த ஒருவர் அவரது செல்வாக்கை பயன்படுத்தி போலிசை அனுப்பி வைத்தார். சற்று நேரத்தில் இருள் பரவியிருக்க, ஒவ்வொருத்தராய் கலைய ஆரம்பித்தனர். எதிர் வீட்டுக் கிழவி மட்டுமே எஞ்சியிருந்தார்

“சாந்தி… எதாச்சும் வேணும்னா பக்கத்துல தான் இருக்கன் கேளு” என்றபடி பாயை விரித்துப் போட்டார்

“கடவுளே… ஒரு மாசத்துக்கு மேலா கஷ்டப்படுறா, எல்லாமே படுக்கையில போகுது. பார்த்துப் பராமரிக்க புள்ளை இருந்தும் என்ன பிரயோசனம், கடைசி காலத்துல இல்லாம போயிட்டானே. நன்றி கெட்ட பாவி, யாருக்கும் இந்த நிலை வரக் கூடாது” என்ற கிழவியின் முணுமுணுப்பு சாந்தியின் காதுகளில் விழுந்திருந்ததன் அடையாளமாய், அவள் கண்ணீர் வடிந்தோடியது

‘சூர்யா… எங்கப்பா இருக்க? உனக்காகத் தான்பா இந்த உசுரு தொங்கிட்டு இருக்கு. உன் குரல் கேட்டா போதும், அம்மா நிறைஞ்சிடுவன். சூர்யா சூர்யா… எல்லாரும் உன்னப் பத்தி தப்பா பேசுறாங்கப்பா. உங்கிட்ட ஒரு உண்மை சொல்லாம விட்ட என் மேல தான் தப்பு, இவங்களுக்கு அது தெரியுமா?’

ஒரு பக்கம் கோணியிருந்த வாயால் உமிழ்நீர் வழிந்தது. கையை உயர்த்தித் துடைக்க நினைத்தும் முடியாதிருந்தது. அவள் கண்கள் முகட்டை வெறித்துக் கொண்டிருந்தது. அங்கே சில ஓடுகள் இல்லாமல் இருந்தபடியால் வானம் துல்லியமாய்த் தெரிந்தது.

“அம்மா… நான் எங்க போனாலும் நிலா கூடவே வருது. ஏன் வீட்டுக்க வந்தா மட்டும் காணோம். நிலாவ வீட்டுக்க கூப்பிடும்மா, நிலா வேணும்” கண்ணைக் கசக்கி கசக்கி அழுதான் சூர்யா

அவனுக்கு அப்போது மூன்று வயது தான். தன் பிள்ளை கேட்டால் எதையும் செய்யத் தயாராய் இருந்தவளுக்கு நிலாவை கூட்டி வருவது கஷ்டமா என்ன? அடுத்த நாளே ஒருத்தனைப் பிடித்து ஓட்டைப் பிரித்து விட்டாள்

“ஹைய்ய்… ம்மா நிலா தெரிது. நிலா வந்துட்டு, என் வீட்டுக்கு நிலா வந்துட்டு” என துள்ளிக் குதித்தான் சூர்யா

அந்த சந்தோசத்தைப் பார்த்த சாந்திக்கு, தன் உயிரை வேண்டுமானாலும் கொடுக்க வேண்டும் போலிருந்தது

“சூர்யா தங்கம்… அம்மா ஊட்டி விட இனிமே நீ வீட்டுக்க இருந்தே சாப்பிடுவியாம் சரியா?”

“சரிம்மா” என கழுத்தைக் கட்டித் தொங்கினான்

“சூர்யா… சூர்யா…” என பிதற்றிக் கொண்டிருந்தாள் சாந்தி

கண்கள் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தது. தன்னைச் சுற்றி இருக்கும் கூட்டத்தையும் அவர்கள் பேசுவதையும் அவள் கொஞ்சமும் உணரவில்லை

“இரவு பூரா இப்படியே தான் இருக்கா” முந்தானையால் கண்ணைத் துடைத்த படி சொல்லிக் கொண்டிருந்தாள் எதிர்வீட்டுக் கிழவி

சாந்தியின் வாயில் ஊற்றிய பால் கோணியிருந்த அவள் வாயிலிருந்து வழிய, மெல்லமாய் துடைத்துக் கொண்டிருந்தாள் கமலம். இவள் சாந்தியின் எதிர்வீட்டுத் தோழி

“அம்மா… எனக்கு அப்பா இல்லியாம்மா? பக்கத்து வீட்டு ரவி சொன்னான் அவனோட அப்பா தோள் மேல ஏறிட்டு தான் பள்ளிக்கூடம் போறானாம். எனக்கு அப்பா இல்லாததால நான் உன் கூட கைய புடிச்சிட்டு வர்ரேனாம். நான் பாவம்னு சொல்றாம்மா”

“சூர்யா… இதுக்கெல்லாம் கலங்கக் கூடாதுப்பா, அம்மா நா இருக்கேன். உன் அப்பா சாமிக்கிட்ட போயிட்டாரு, ஆனா நிதமும் என் கனவுல வந்து சூர்யா குட்டி எப்டி இருக்கான், அவன பார்த்துக்க, அவன் கேட்ட எல்லாத்தையும் செய்யின்னு சொல்வாரு தெரியுமா?” என்றாள் சாந்தி

“அப்பா அத என் கனவுல வந்து ஏம்மா சொல்லல்ல” சூர்யாவின் வாய் அழுகத் தயாரானது

“என் அறிவுத் தங்கமே…” என நெற்றியால் அவன் தலையை முட்டியவள், “நீ குட்டிப் பையனா இருக்க. கொஞ்சம், ம்ம்ம்..அதோ… தெரியிதுல்ல அந்த கதவு, அது வரைக்கும் நீ வளந்த பிறகு தான் உன் கனவுல வருவாரு”

“அப்டியா?” என்றவன், தினமும் கதவருகில் நின்று உயரம் பார்த்துக் கொள்வான்

சாந்தி அத்தனையும் அவ்வளவு ரசிப்பாள். அவள் வேலை செய்யாவிட்டால் ஒரு வயிறு நிரம்பாது. அந்தளவு கடுமையான சூழல்

ஆனால் அதனை ஒரு நாளும் சூர்யா மேல் காட்டியதில்லை. அவளைப் பொறுத்தவரைக்கும் இருளப் போன தன் வாழ்க்கைக்கு பிரகாசம் தந்தவன் அவன் தான். அதனால் தான் அந்தப் பெயர் வைத்தாள்

அவன் எது கேட்டாலும் ஒரு நாளும் இல்லையென்று சொல்ல மாட்டாள். அவன் முகம் பார்த்துச் சிரிப்பவளுக்கு அவன் சந்தோசம் ஒன்று தான் குறிக்கோள்

எட்டு வயது வரை தன் தோள் மேல் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் விட்டாள் சாந்தி. போகும் போதும் வரும் போதும் அவன் கேட்கும் ஆயிரம் கேள்விக்கும் சலிக்காமல் பதில் சொல்வாள்

கட்டிடங்களுக்கு கல் சுமப்பது தான் அவள் வேலை. செங்கல் சுமந்து படியில் நடந்து செல்ல ஏதுவாய் காலுக்கு செருப்பு அணிய மாட்டாள். அவளுக்கும் வெற்றுக் காலில் தான் வேகமாக நடக்க முடியுமென்பதால், சூர்யாவை சுமந்து போதும் செருப்பு போட மாட்டாள்.

“ஏம்மா சாந்தி இந்த வெயில்ல செருப்பில்லாம நடக்கியே. கால் என்னத்துக்காகுறது?” என கேட்காதவர்களில்லை

“கமலம்… சூர்யாக்கு இன்னொரு தடவை எடுத்துப் பாரேன்”

“என் கோவத்தை கிளறாத சொல்லிட்டன். இந்த சாந்தி வராத புள்ளைக்காக போகப் போற உசுர புடிச்சிட்டு இருக்கான்னா நீயும் விளங்காம பேசாத. அவன் நம்பரு வேலை பண்ணுதில்ல. என் நெஞ்சு பதறுது கிழவி. அவ காலப் பாத்தியா? ரேகையே இல்ல தேஞ்சு கிடக்கு. எப்படி வளத்தா, பாவி முன்னால நம்ம தாய்ப் பாசமும் தோத்துப் போயிடும்” கமலத்தின் அழுகையும் புலம்பலும் அங்கு கூடியிருந்தவர்களின் கண்களை கசியச் செய்தது.

சாந்தி பிறந்து வளர்ந்தது எல்லாமே அந்த சின்னக் கிராமத்தில் தான். கிருஷ்ணணை கல்யாணம் செய்து கொண்டு நாலு தெரு தள்ளியிருக்கும் இந்த வீட்டில் குடி வந்தாள்

சூர்யா பிறந்து ஒரு வருடத்திற்குள்ளேயே கிருஷ்ணன் கார் விபத்தொன்றில் இறந்து விட இளவயதில் விதவையாகி விட்டாள் சாந்தி

அதன் பிறகு வந்த கொடுமையான நாட்களில் அவள் சந்தித்த துயரங்களை அயலவர்கள் அனைவரும் கண்ணருகே கண்டவர்கள். கற்புக்கு எந்தக் களங்கமும் வராமல் அவப்பெயர் வராமல் அவள் பட்ட போராட்டங்கள் எத்தனையோ

அதனால் தான் சாந்தியை எல்லாருக்கும் அவ்வளவு பிடிக்கும். இந்த இக்கட்டான கொரோனா காலத்தில் கூட சொந்தம் போல் அனைவரும் கூடியிருந்தனர்

“கட்டிலை கொஞ்சம் இடம்மாத்தி போடலாமா?” என்ற ஒருத்தியின் ஆலோசனை சில பல விவாதங்களுக்குப் பிறகு அரங்கேற்றப்பட்டது

“அக்கா பாத்தியா? அவ எதையோ தேடுறா? எவ்வளவு நாளுக்குப் பிறகு அசைவு தெரியிது”

“சாந்திக்கண்ணு… என்ன தாயி வேணும்? நா இருக்கன், உன்ன சுத்தி எவ்வளவு பேர் பாரு. சொந்த பந்தம் எதுலயும் நீ குறையல்ல, எல்லாரும் இருக்கம்”

“சூ..சூ… யா. யா” எதையோ சொல்ல வந்த சாந்தியின் வாய் இன்னும் கோணியது. கண்கள் மேல் நோக்கி சொருக மூச்சிரைத்துக் கொண்டிருந்தாள் சாந்தி

காரணம் புரியாமல் அத்தனை பேரும் ஆளுக்கொரு யோசனை சொன்னார்கள். கடைசியாய் பழய இடத்திற்கு கட்டில் மாற்றப் பட்டதுமே சாந்தியின் மூச்சிரைப்புக் குறைந்தது

மெல்லிதாய் ஒரு புன்னகையுடன் மீண்டும் பழைய படி மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு தானே அவள் மகன் சூர்யா இருக்கிறான், சிரிக்கிறான். சாந்தியும் சிரித்தாள்

அழுதான், சாந்தியும் அழுதாள். அவன் கேள்விகளுக்கு முணகலாய் விடை சொன்னாள். கூடி இருப்பவர்களுக்கு அவள் நடத்தைகள் வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கலாம்

அதைப் பற்றி சாந்திக்கு எந்த சங்கடமும் இருக்கவில்லை. அவள் தான் வேறொரு உலகில் இருக்கிறாளே

“அம்மா… உன்னோட முடியெல்லாம் காணோமே. எங்கம்மா? ஏம்மா அழுகுற? இனிமே அழுகாத.நான் கேக்க மாட்டன் சரியா?” சாந்தி பதில் சொல்லாத ஒரே கேள்வி அதுதான்.அதுக்கு பதில் தெரிந்தால் வந்திடுவானா?

அவன் மீதான பாசத்தின் அடையாளம் அல்லவா அது. நான் அன்று சொல்லியிருக்கலாமோ. சொல்லியிருந்தா இன்னேத்திக்கு புள்ள பக்கத்தில் இருந்திருப்பான்.

சின்னப் புள்ளையாய் அவளுக்கு அவளே நொண்டிச் சமாதானம் செய்து கொண்டு சந்தோசமானாள்

“சாந்திம்மா… இன்னும் கொஞ்சம் குடி. எவ்வளவு நாளைக்குப் பிறகு பாலாவது வயித்துக்க இறங்குதே. ஒன்னும் அவசரமில்ல மெதுவா பேசலாம், முதல்ல குடி”

சாந்தி பேசும் எதையுமே யாராலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் கை மட்டும் தலையை தொட்டுத் தொட்டு “சூ…..யா” என்றது.

“சரிம்மா….சரி. நீ சொல்றது புரியிது, சூர்யா வர்ரானாம். நீ சொன்னத நான் சொல்லுறன், நீ அழுகாத. நிம்மதியா தூங்கு, புள்ள வந்தா எழுப்புறன். இப்போ கண்ணை மூடு” என சமாதானம் சொன்னாள் கமலம்

‘சூர்யா வருகிறான்’ என்ற சொல் மந்திரமாய் வேலை செய்ய, வெகு நாட்களுக்குப் பிறகு கண்களை மூடினாள் சாந்தி.

‘இதை முதலே சொல்லியிருக்கலாமோ’ என கமலத்திற்குத்  தோன்றியது.

கண்கள் உள்ளே போய், முகமெல்லாம் சுருங்கி, கன்னத்தில் ஒரு பக்கத்தில் கறுப்புத்திட்டாக, தலையில் முடி இல்லாமல் என பார்ப்பதற்கே அவள் தோற்றம் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது

ஒரு வயிற்றில் பிறக்கா விட்டாலும், சொந்த சகோதரியாய் பழகிய கமலத்திற்கு மட்டுமே சாந்தியைப் பற்றி முழுதாய் தெரியும். சாந்தி மேல் உள்ள பாசத்தால் தான் தன் தாயை கூட அங்கு  சாந்திக்கு துணையாய் தங்க வைத்திருக்கிறாள் கமலம்

கிருஷ்ணன் இறக்கும் போது சாந்திக்கு முப்பதிற்குள் தான் வயது இருக்கும். சூர்யா ஒரு வயது கூட நிரம்பாத கைக்குழந்தை. சின்ன வயதில் கணவனை இழந்து தனியே தவித்தவள் சூர்யாவிற்காகவே மீண்டெழுந்தாள்

எத்தனை நாட்களுக்கு அழுவது? அவளை நம்பி ஒரு ஜீவன் இருக்கிறானே. பிள்ளையை கையில் சுமந்து கொண்டு எங்கெல்லாமோ வேலைக்கு அலைந்தாள். அவளது நிலையை பயன்படுத்திக் கொள்ள சில கழுகுகள் சுற்றி வந்தன

அவளது இரவுகள் நரகமாகக் கழிந்தன. தூங்காமல் தன் பிள்ளைக்காக தன் உயிரையும் கற்பையும் அடை காத்தாள். அதையும் மீறி வேலைக்குச் சென்ற இடத்தில் ஒருத்தன் அத்து மீறத் துணிந்தான்

கிழிந்த ஜாக்கெட்டை முந்தானையால் இழுத்து மூடிக் கொண்டு ஓடி வந்தவள், கமலத்தைக் கட்டிப் பிடித்து தேம்பித் தேம்பி அழுதாள். சமாதானங்கள் தோற்றுப் போன சாந்தியின் துயரங்கள், அன்று தான் எல்லாவற்றிற்குமான முடிவொன்றைத் தேடியது

கண்ணாடிக்கு முன் தன்னைப் பார்த்துக் கொண்டாள். கருத்தடர்ந்த நீளமான கூந்தலும் சின்ன மூக்குத்திக்குப் போட்டியாக கன்னத்தில் மச்சமுமாய் சிவந்த நிறத்தில் பார்க்க அழகாக இருந்தாள்

அவளுக்குள் எரிந்துகொண்டிருக்கும் தீ அதை அழிக்க தூண்டிக் கொண்டிருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவள் தன் முடியை மொத்தமாக வழித்து மொட்டை போட்டுக் கொண்டாள். கன்னத்தில் தனக்குத் தானே சூடு வைத்து வடுவாக மாற்றினாள்.

கமலத்திற்கு பொங்கிப் பொங்கி அழுகை வந்தது. சாந்தியைப் பார்க்க சகிக்காமல் கை வலிக்கும் வரை அடித்தாள்

“ஏன்டி சாந்தி இப்டி பண்ணின? உன்னப் பார்க்கவே முடியல்லடி”

“அழாத கமலா… எனக்கு இப்போ தான் வாழ்க்கைய பத்தின பயம் போயிருக்கு. இனிமே என் புள்ளயோட பயமில்லாம நிம்மதியா தூங்கலாம். அவனுக்கு அம்மாவா மட்டும் வாழ்ந்திடுவேன். இந்தக் கோலத்த பார்த்தா யாருமே வரமாட்டானுங்கல்ல” என்ற சாந்தி துளியும் அழவில்லை

கமலாவை தேற்றி விட்டு இயல்புக்கு திரும்பினாள். அவளுக்கும் சூர்யாவுக்குமான சின்ன உலகத்தில் தன் வாழ்க்கையைத் தேடினாள். காலங்கள் யாருக்கும் காத்திராமல் ஓடிச் சென்றது

அப்போது சூர்யாவிற்கு பத்து வயது இருக்கும். அவனது பள்ளி ஆசிரியர் சாந்தியை திடீரென்று அழைத்தார்

‘என்ன எது’ என்று பதட்டத்துடன் சென்றவளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்து. அந்த ஆண்டு நடந்த மாவட்டம் சார்ந்த போட்டிப் பரீட்சையில் சூர்யா முதல் இடத்தில் வந்திருந்தான்

தந்தையுமான தாயாக அவனை வளர்க்கப்பட்ட கஷ்டங்கள் யாவும் இந்தச் செய்தில் காணாமல் போயிருந்தன. அதன் பின்னர் அவர் சொன்னவை நடந்தவை தான் அவள் வாழ்க்கையை புரட்டிப் போட்டது

“அம்மா… சூர்யாகிட்ட இருக்குற திறமைக்கு எங்கோ போகப் போறான் பார்த்துக்கங்க. நீங்க எவ்வளவு தியாகத்துக்கு மத்தில உங்க புள்ளைய படிக்க வைக்கிறீங்கன்னு கேள்விப்பட்டன். க்ரேட் மா”

“ஐய்யோ… தியாகம்னு பெரிய வார்த்தை பேசாதீங்க சார், அது என்னோட கடமை”

நெற்றியிலிருந்து வழிந்த வியர்வையை முந்தானையால் துடைத்தவளின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது.

“இன்னும் ஏதோ முகக்கியமான விஷயம் சொல்லக் கூப்பிட்டிருக்கீங்கன்னு புரியிது, என்னன்னு சொல்லுங்க சார்” என்றாள்

“எல்லாம் சந்தோசமான விஷயம் தான், சூர்யாவோட திறமைக்கு நல்ல வாய்ப்பு வந்திருக்கு. பணக்காரர் ஒருத்தர் இந்த மாதிரி சின்னக் கிராமங்கள்ல இருந்து ஐந்து கெட்டிக்கார புள்ளைங்கள எடுத்து, தன் சொந்த செலவுல படிக்க வைக்கப் போறாராம். அதுல சூர்யாவும் ஒருத்தன்”

சாந்திக்கு பெருமையும் மகிழ்ச்சியும் ஒரு சேர கலங்கிய கண்ணீரை துடைத்தபடி, கடவுளுக்கு நன்றி சொன்னாள்

“இது சின்ன கிராமம், இங்கிருந்து முன்னேற முடியாது. சூர்யா மேல் படிப்பெல்லாம் படிக்கனும்னா அவர் சொல்ற இடத்துல தான் படிக்கனும். அதுக்கான எல்லா செலவும் அவரோட நிறுவனம் பொறுப்பேத்துக்கும். யோசிக்காம அனுப்பி வைம்மா” என்றார்

முதலில் கலங்கினாலும், தன் மகனின் முன்னேற்றத்திற்கு பாசம் தடையாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தவள், சூர்யாவை அனுப்பி வைத்தாள்

“போக மாட்டேன்” என்று மறுத்தவனை, சமாதானங்கள் சொல்லி அனுப்புவது பெரும்பாடாயிற்று. பிள்ளையின் பிரிவு, சாந்திக்கு நெஞ்சை பிழிவது போல் இருந்தது

மாதம் இரு முறை மட்டுமே ஃபோனில் பேசலாம் என்றபடியால், கமலத்தின் வீட்டில் ஒரு மணி முதலே போய் காத்திருந்து பேசுவாள்

“கண்ணு சாப்டியா? தம்பி பெரிய ராசாவாக போயிருக்கானே. தங்கம் அதிஷ்டம் பண்ணிருக்கு. அம்மாவையும் கூட்டிப் போகனும் சரியா? அதுக்கு நீ நிறய்ய படிக்கனும், சரியா?” கண்ணீர் வழிய வழிய அவள் பேசுவதைப் பார்த்தாலே, கமலத்திற்கு அழுகை முட்டும்

லீவு விட்டால் வீட்டுக்கு வேனில் அனுப்பி வைப்பார்கள். பின்னர் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே வீடு வந்தான்

காலம் போகப் போக நீண்ட லீவு கிடைக்காது போனது. இதற்கிடையில் சூர்யா நன்றாகப் படித்தான். காலமும் வேகமாகக் கடந்தது. சாந்தி மட்டும் தன் தோளில் சுமந்து சென்ற மகனின் நினைவுகளைக் கடக்க முடியாமல் தேங்கி நின்றாள்

ஆனால் சூர்யா அதையெல்லாம் என்றோ கடந்திருந்தான். பகட்டான சூழலில் அதிகப்படியாக வாழ்ந்தவனுக்கு, இந்தச் சின்னக் கிராமம் கசக்கத் தொடங்கியது. பத்து வருட நகர வாழ்க்கை அவனை மாற்றியிருந்தது.

ஒரு நாள், “மா…எனக்கு அமெரிக்கா போக வாய்ப்பு வந்திருக்கு” என வெறும் தகவல் சொன்னான்

இன்னொரு நாள், “ஹலோ…. ம்மா உனக்கொரு சப்ரைஸ். நான் எங்கிருந்து பேசுறேன் தெரியுமா? ஐ யம் இன் யு.ஸ்” என்றான்

பக்கத்து வீட்டில் ஃபோனிருக்கும் போது அடிக்கடி பேசத் தவித்த மகன் , சொந்தமாக ஃபோனிருக்கும் போது பேச மறந்தானோ? வருடங்கள் போகப் போக பேசும் வீதம் குறைந்தது

அவன் போய் எட்டு வருடங்களுக்கு மேலாகியிருந்தது. சூர்யா இல்லாத ஏக்கத்தில் சாந்தியின் உடல்நிலை மிக மோசமாகத் தொடங்கி, இப்போது ஒரேயடியாகப் படுத்து விட்டாள்

“சுயாயாயாயா… சுய்ய்ய்” மூச்சிரைக்க உடல் மேலும் கீழும் தூக்கிப் போட சாந்தியை பார்க்கவே பரிதாபமாக இருந்தது

வெளியே சென்ற கமலம், கையில் ஃபோனுடன் வேகமாக வந்தாள்

“சாந்தி… கண்ணைத் திற, இந்தா சூர்யா பேசுறான். ஹலோ சொல்லுவியா…” எனக் கேட்டாள் கமலம்

கேட்ட உடனே கடைவாய் துடிக்க கண்களை பிரிக்க முயன்றபடி எழுவதற்கு ஆயத்தமானாள் சாந்தி. அவளை மெல்லமாய் எழுப்பி தன்னில் சாய்த்துக் கொண்டவள் சாந்தியின் காதோரம் ஃபோனை வைத்தாள்

கைகால் நடுங்க கண்கள் சொருக “தூ…யா யாயா” என்றவளின் பேச்சு அப்படியே நின்று போனது

என்றோ ஒரு நாள் தன் மகன் பேசுவான். தான் மொட்டை போட்டதன் காரணம் சொன்னால் வந்து விடுவான், பிறகு எங்கும் போக மாட்டான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தவளுக்கு, அவனுடன் பேசியதே போதும் என்ற நிம்மதி வந்ததோ? அப்படியே மீழாத தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்

அந்த ஊரில் இறந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்தே அடக்கம் செய்வது வழக்கம் என்றபடியால், அதற்காக அவள் உடலை வண்டியில் ஏற்றிச் சென்றனர்

சடங்கு சம்பிரதாயங்கள் செய்ய யாருமில்லாததால், அவளது உடல் அநாதையாக இயற்கையுடன் சங்கமமானது

ன்று சாந்தி இறந்து மூன்றாவது நாள். கமலம் தன் வீட்டு கேட்டைப் பூட்ட வாசலுக்கு வந்தாள். எதிரே பூட்டியிருந்த சாந்தியின் சின்ன வீடும் அங்கிருந்த மாமரமும் பார்க்கப் பார்க்க கமலத்திற்கு மனது கனத்துப் போனது

‘உன்னோட தியாகத்துக்கு உம் மகன் தகுதில்லாதவன் சாந்தி. என்னை மன்னிச்சிடு, நா உன்னோட தவிப்ப பார்த்து ஒரு தாயா என்னால ஜீரணிக்க முடியாம தான் கடைசியா ஒரு பொய் சொல்லிட்டன். உன் மகன் கடைசி வரை உன்னை தேடல, போன் கூட பண்ணல’

அப்போது அவள் கையிலிருந்த செல் சிணுங்கியது, கண்களை துடைத்தவாறே அதைப் பார்த்து விரக்தியாய் புன்னகைத்தாள் கமலம்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. அவள் சாந்தி..என்ற கதை எழுத்தாளர் நஸ்ரத் அமனா…ஊர் ஸ்ரீலங்கா..எண்.136
    சாந்தி யின் இறப்பும் மகன் சூர்யாவின் மாற்றமும் இன்றும் நம்மிடையே உள்ள நிகழ்வுதான்.எத்துனை மகன்கள் உள்ளூரில் இருந்து கொண்டே பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்பி விட்டு நிம்மதியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு போலி வாழ்க்கை வாழ்கிறார்கள்.மனசாட்சியெல்லாம் இந்த கால கட்டங்களில் இல்லை என்பது நிஜம்.
    நாம் நம் பிள்ளைகளிடம் எதையும் எதிர் பார்க்க எதையும் எதையும்..அதாவது பாசத்தை கூட ஒரு வயதுக்கு பிறகு எதிர் பார்க்க கூடாது என்பதை பெற்றோராகிய நாம் புரிந்துக் கொண்டால் எல்லாம் நலமாக விடும்.பெற்றோராகிய நாம் நம் கடமையை செய்து விட்டு பிரதிபலன் எதிர் பார்க்காமல் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
    பெற்றோரின் அதீத பாசத்திற்கு தன் மக்கட் மீது வைக்கும் அதீத பாசத்திற்கு வைத்த செக் இந்த கதை..நாம்தான் புரிந்து விலகி நடக்க வேண்டும்.இது இறைவன் இன்றை கால கட்டத்தில் விதித்த விதி..அருமையான அழகான எழுத்துடன் பிரசன்னமான கதை அற்புதம்..அற்புதம்.

ராசி (சிறுகதை) – ✍ ‘செவ்வந்தி’ புனிதா, திண்டுக்கல்

சிவப்பு ரிப்பன் (சிறுகதை) – ✍ ஹரி பிரகாஷ், மதுரை