in

வைராக்கியம் ❤ (பகுதி 15) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10 

பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14

ரு நாள் எதேச்சையாக ஊரிலிருந்து ஏதோ கல்யாணத்திற்காக பெங்களூர் வந்த கார்த்திக், தங்கையின் கணவர் சுரேஷ், தனக்குத் தெரிந்த ஒருவர் திடீரென உடல்நலம் சரியில்லாமல் போய், பிறகு கேரளாவின் கொடுவாயூர் அருகே உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று விட்டு அருகில் இருந்த ஆசிரமத்தில் தொடர்ந்து இரண்டு மாதம் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதில் அவரின் உடல்நலம் சரியானதாகச் சொல்ல, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று மனதில் நினைத்துக் கொண்டே இருந்த நந்தினி கார்த்திக்கிற்காக அந்த முகவரியை இந்துவின் கணவர் சுரேஷிடம் வாங்கிக் கொண்டாள்.

பொதுவாக எப்போதும் கார்த்திக் கோபமாக இருப்பதில்லை. ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு சில சமயம் கோபம் வந்தால் என்ன பேசுவது என்றே தெரியாமல் பேசி விடுவான்.

இப்படித்தான் பக்கத்து வீட்டு வித்யாவுடன் வெளியே காய்கறி வாங்கப் போன நந்தினி, அப்படியே பக்கத்திலிருக்கும் சாய்பாபா கோவிலுக்கும் சென்றுவிட்டு தாமதமாக வீட்டுக்கு வந்தபோது, “எல்லாரோடயும் உனக்கு ஊர் சுத்த நேரமிருக்கு. என்னோட தான் உனக்கு உட்கார்ந்து பேச, வெளிய போகன்னு நேரமில்ல. என்ன பண்றது? எனக்கு ரெண்டு காலும் போயிடுச்சு. பத்தாததுக்கு தலைல வேற ஆபரேஷன். என்னோட போனா உனக்கு கௌரவமா இருக்குமா?” என்ற கேள்வியில் உடைந்து போனாள் நந்தினி.

என்னதான் ஆபரேஷனுக்குப் பிறகு கார்த்திக்கிற்கு மனவேதனை இருந்தாலும், எதையும் யார் முன்னும் காண்பித்துக் கொள்ளாமல் நல்லது கெட்டது என எந்த விசேஷமானாலும் அந்த நேரத்திற்கு மட்டும் போய் நின்று விட்டு வரும், புருஷனும், குழந்தைகளும், வீடே கதியென்று உலகமென்று நினைத்திருக்கும் நந்தினிக்கு கார்த்திக் கேட்ட கேள்வி, நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியது போன்றிருந்தது.

கேட்ட கேள்விக்கு விரக்தியாய் சிரித்துக் கொண்டே, “ஆமாமா. இப்ப தான் நான் பதினெட்டு வயசுப் பொண்ணு. இருபது வயசுப் பையனோட சினிமா பாத்துட்டு வரேன். சரியா?” என்றவள், வேறு எதுவும் பேசத் தோன்றாமல் சமையற்கட்டுக்குள் சென்று அடுத்த வேலையைப் பார்க்கப் போனாள்.

வாழ்க்கையில் பெண்களின் சந்தோஷங்களையும், துக்கங்களையும் சமையலறையே நிறைய பார்க்கிறது. சிறுவயதில் விளையாட்டுத்தனமாய் இருக்கும் பெண் குழந்தை, திருமணம் முடிந்து புகுந்த வீட்டினைத் தன் வீடென நினைத்து அனைவருக்கும் பணிவிடைகள் செய்யும் போது, என்னைக்கு இருந்தாலும் வேற வீட்டிலிருந்து வந்த பொண்ணு தான’ என்ற சாதாரண சொல்லில் எப்போதும் தனிமைப்படுத்தப்படுகிறாள்.

ஒரு கட்டத்தில் தான் சொல்லவருவதைப் புரியவைக்க முயற்சி செய்பவள், பின்பு தனக்கு ஏற்படும் அனுபவங்களால் யாரிடமும் எதையும் சொல்லாமலும் எதிர்பாராமலும் வாழப் பழகி விடுகிறாள்.

பெற்றவர்களின் செல்லமகள் என்ற போர்வையில் வளர்பவள், ஒரு வயதுக்குப் பிறகு ‘அடுத்தவீட்டுக்குப் போற பொண்ணு’ என்று எல்லோராலும் சொல்லக் கேட்டு இறுதியில் திருமணம் முடிந்ததும் ஏதோ என்றைக்காவது வந்து போகும் சொந்தக்காரர் போலவே பிறந்த வீட்டிலும் நடத்தப்படுகிறாள்.

இதனாலேயே ஒரு கட்டத்துக்கு மேல், தன் குடும்பத்தை மட்டும் பார்த்தால் போதும் என்று கணவனையும், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, கடமையைச் செய்யும் எந்திரமாகவே பெண் மாறி விடுகிறாள்.

‘இந்த மனுஷன கல்யாணம் பண்ணி எத்தனை கஷ்டப்பட்டுண்டு இந்த பசங்களக் கொண்டு வரேன். இவரோட விபத்து என் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது. ஒரு வயசுப் பொண்ணா எனக்குன்னு இருந்த என்னோட சின்ன சின்ன ஆயிரம் ஆசைகளை மனசுக்குள்ளயே அடக்கி வச்சுண்டு இருந்துட்டேன். போன வயசும், காலமும் திரும்ப இனிமே எனக்கு கிடைக்கப் போறதில்ல. எப்பவும் வீட்டு வேலை, குழந்தைங்க, இவர் குடும்பம்னு இருந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்’ என்று தன்னையே நொந்து கொண்டாள்.

பிறகு தன்னையே தான் சமாதானம் செய்து கொண்டு, கேரளாவில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு கார்த்திகைக் கூட்டிச் சென்று காண்பிக்க, பதினைந்து நாட்கள் சிகிச்சைக்காக அங்கேயே கார்த்திக் மட்டும் தங்கியிருக்க வேண்டுமென்று மருத்துவமனையில் கூறினார்கள்.

கார்த்திக்கை மனமில்லாமல் மருத்துவமனையில் விட்டுவிட்டு சிறியவன் ராகுலுடன் வீடு திரும்பினாள் நந்தினி.

கார்த்திக்கை மருத்துவமனையில் விட்டு வந்ததைப் பற்றி பெரியவன் கிருஷ்ணாவிடம் சொல்ல, “சொந்த பந்தம் யாருமே இல்லாத ஒரு இடத்துல அப்பாவை ஏன் விட்டுட்டு வந்த? எதுவா இருந்தாலும் எங்கிட்ட ஒருதடவை கேட்டுருக்கலாமேம்மா?” என்று சொன்ன கிருஷ்ணா, “எல்லாம் நல்லபடியா ஆச்சுன்னா சரி. ஒருவேளை அப்பாவுக்கு சரியாகலன்னா யாரைப் போய் நாம கேட்க முடியும்?” என்று கேட்கவும், நந்தினிக்கு தான் ஏதோ பெரிதாக நம்பி தவறு செய்ததைப் போல உணர்ந்தாள்.

“நம்பிக்கைல தான்டா விட்டுட்டு வந்தேன். நீ சொல்ற மாதிரி ஏதாவது நடந்துடுமோன்னு நெனச்சாலே பயமா இருக்கு. நம்ம ரெண்டு பேரும் வேணா நடுவுல ஒரு தரம் போய் பார்த்துட்டு வந்துடலாமாடா கிருஷ்ணா?” என்று நந்தினி சொல்லவும்

“சரிம்மா” என்ற கிருஷ்ணா தன் அம்மாவுடன் கேரளா செல்லத் தயாரானான்.

பின்பு ராகுலுக்கு வேண்டியதைச் செய்துவிட்டு பக்கத்து வீட்டு வித்யாவிடம் சொல்லிக்கொண்டு நந்தினியும், கிருஷ்ணாவும் கேரளா சென்றனர்.

வருடத்தின் அதிக மழை பொழிவால் எப்போதும் பச்சைப் பாசி படிந்த சுற்றுச்சுவர்களைக் கொண்ட அழகிய ஓட்டு வீடுகளும், குளங்களும், காணுமிடமெங்கும் தென்படும் தென்னை மரங்களும், வாழை மரங்களும், பச்சைப் பசேலென புல்வெளிகளும், தோட்டங்களும், வயல் வரப்பும் கேரளாவின் வனப்பினையும், செழுமையையும் பறை சாற்ற பாலக்காடு செல்வதற்குப் பத்து நிமிடம் முன்பே பஸ் நிறுத்தத்தில் இறங்கியவர்கள் அங்கிருந்து கொடுவாயூர் செல்லும் பேருந்தில் ஏற, வளைந்து நெளிந்து சென்ற பாதையில் வாய்க்கால்களுக்கு நடுவே அழகாய் இருபது நிமிட பயணத்தில் மருத்துவமனைக்கான பஸ் நிறுத்தம் வர, இருவரும் இறங்கிக் கொண்டார்கள்.

சூரியன் மெதுவாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மறையத் தயாராக, வானம் சற்றே கருமேகக் கூட்டங்களுக்கிடையில் இரவின் நிலா வெளிச்சத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே இருந்த டீக்கடையில் இருவரும் தேநீரை அருந்திவிட்டு, அருகில் இரும்புத் தகட்டில் மருத்துவமனையின் பெயர் பலகையை ஒட்டியிருந்த மண் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் போல நடக்க, மருத்துவமனை வந்தது.

ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் நந்தினி கார்த்திக்கை சிகிச்சைக்காக அங்கு விட்டுப் போனதைப் பற்றிய விவரத்தைச் சொல்லிவிட்டு, “ஊரிலிருந்து பெரிய மகன் வந்திருப்பதால் எப்படியாவது கார்த்திக்கைப் பார்த்துவிட்டு டாக்டரையும் பார்த்துப் பேச அனுமதி வேண்டும்” என்று கேட்டாள்.

“ஓ… அந்த பெங்களூர்லருந்து வந்த கேஸ் தான?” என்று இரண்டு நிமிடத்தில் ரிஜிஸ்டரைப் பார்த்து ஊர்ஜிதம் செய்துகொண்டவள்,

“பி-பிளாக்ல பேஷண்ட் இருக்கு. நேத்து டாக்டர் ட்ரீட்மெண்ட் குடுக்கும் போது கூட பேஷண்ட் ரொம்ப ரகளை பண்ணியாச்சு. வேற வழியில்லாம அடிக்கறதா கூட போச்சு” என்று மலையாளம் கலந்த தமிழில் தப்பும் தவறுமாக சொல்லவும்

“என்ன? அடிச்சீங்களா? அவர் யார் தெரியுமா? எவ்வளவு பெரிய உத்யோகத்துல இருக்காரு தெரியுமா? சரி……இப்ப எங்க இருக்காரு. உடனே அங்க கூட்டீட்டுப் போங்க” என்று கோபமும் துக்கமும் கலந்த குரலில் கிருஷ்ணா சொல்ல

“பொறுங்க. வசதி இல்லாம யாரும் பாத்துக்க ஆளில்லாதவங்களும் இங்க இருக்காங்க. ஒரு காலத்துல நல்ல வேலை, பணம், பதவினு எல்லாத்தையும் பாத்தவங்களும் இருக்காங்க” என்றவள்

“இன்னைக்கு டாக்டரைப் பார்க்க முடியாது. வந்தவங்க தங்கறதுக்கு கெஸ்ட் ரூம்ஸ் இருக்கு. நீங்க அங்க தங்கீட்டு நாளைக்கு காலைல வந்து பாருங்க” என்றாள் ரிசப்ஷனிஸ்ட்.

“சரி” என்று சாவியை வாங்கிக் கொண்டவர்கள் கெஸ்ட் ஹவுஸிற்குச் செல்லும் வழியில் மருத்துவமனை ஊழியரிடம் விஷயத்தைச் சொல்லி கார்த்திக்கைப் பார்க்க முடியுமா எனக் கேட்க

“ரெண்டு நிமிஷத்துல பாத்துட்டு வந்துடுங்க. இல்லண்ணா பார்வையாளர் நேரமில்லாத சமயத்துல ஏன் அனுமதிச்சன்னு என்னை புடிச்சுப்பாங்க சார்” என்று அறை எண் 105 என்று சொல்லிவிட்டு வழியையும் காண்பித்தார்.

அவர் சொன்னது போல இருவரும் வராண்டா வழியே சிறிது தூரம் நடந்து வலது பக்கமிருந்த அறை 105-ல் நுழைந்தனர்.

அறைக்குள் ஒரு கட்டிலில் கைகள் கட்டப்பட்டு வந்த நான்கு நாட்களிலேயே சோர்ந்து பாவமாக தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்க்கவும் இருவருக்கும் பாவமாக இருந்தது.

தூக்கத்தில் இருந்தவரை எழுப்பாமல் இருவரும் திரும்பிச் செல்ல, நடை சத்தம் கேட்டு எழுந்த கார்த்திக் இருவரையும் பார்த்து ஆச்சரியப்பட்டு குழந்தை போல அழ ஆரம்பித்து விட்டார்.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் வாழ்க்கை உன் கையில் (நாவல் – பகுதி 9) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை