in ,

அவளுக்கு தீயென்றும் பெயருண்டு (சிறுகதை) – ✍ சாய் வைஷ்ணவி, திருச்சி மாவட்டம்

அவளுக்கு தீயென்றும் பெயருண்டு (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 126)

ங்கையின் குழந்தைக்கு மொட்டை போட்டு காது குத்தும் நிகழ்விற்காக அறந்தாங்கிக்கு அழைத்திருந்தார்கள். தாய்மாமன் என்ற முறையில் இந்த நிகழ்வு கிட்டத்தட்ட எனக்கானது தான்.

வெள்ளைக்காரன் கணிணியில் மலையளவு வேலை கொடுத்திருக்கிறான். விடுப்பு வேண்டும் என்று கேட்கப் போனால் மேலதிகாரி எரிந்து விழுவான்.

எல்லாவற்றிற்கும் மேலாக அதே நாளில் தான் என் காதலி விஷ்ணுவின் பிறந்த நாளும் வருகிறது. என்ன செய்வது? சனி எட்டில் பாய் போட்டு படுத்துக் கொண்டிருக்கிறான்.

சென்னையில் பிரதான வீதியின் ரோட்டுக் கடைகளில் கண்ணில்பட்ட சகலத்தையும் வாங்கி தோள் பையில் திணித்துக் கொண்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன். பேருந்து வருவதற்கு இன்னும் அரை மணிநேரம் இருந்தது.

தலைநகரின் கோடைக்காலம் முன்கூட்டியே தன் பணியை ஆரம்பித்து விட்டது. நண்பகலின் வெயில் சாலையில் திரிபவர்களை வறுத்துக் கொண்டிருந்தது.

பேருந்து நிலையத்தில் மக்கள் எறும்புகளைப் போல ஊர்ந்துக் கொண்டிருந்தனர். அவரவர் பேருந்து வந்ததும் முண்டியடித்துக் கொண்டு ஏறி ஜன்னலோரத்தில் அமர்ந்து குழந்தைகள் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

எதைத் தேடி எங்கு செல்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் பலரும் பரபரப்பாக இங்குமங்கும் நடந்துக் கொண்டிருந்தார்கள்.  சிலரோ அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தும் பலர் தரைகளில் துண்டு விரித்து படுத்து உறங்கியும் கொண்டிருந்தனர்.

இவர்கள் யார்? ஏன் இப்படி பகலில் பலர் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் எவ்வித தயக்கமின்றி படுத்துக் கொள்கிறார்கள் என்று பல நாட்கள் யோசித்திருக்கிறேன்.

நான் என் ஊருக்கு செல்லும் பேருந்திற்காக காத்திருந்தேன். கேட்கக் கூடிய ஆனால் பார்க்க முடியாத தூரத்தில் ஏதோ சத்தம் கேட்க திரும்பி பார்த்தேன். அங்கிருந்த சில மனிதர்கள் யாரையோ விரட்டுவது போல் தோன்றியது. இந்த மனிதர்களுக்கு என்ன வேலை?

விலகி செல்பவர்களை துரத்திச் செல்வதும், விரும்பி வருபவர்களை விரட்டி விடுவதும் வாடிக்கையாகி விட்டது

இரைச்சலாக ஒலித்த அந்த சத்தம் சரியாக புரியும்படி இல்லை. மேலும், இந்நிகழ்வில் அத்தனை சுவாரசியமும் இல்லை என்பதால், உடலும் மனமும் தானாக வேறொரு காட்சியைத் தேடித் திரும்பிக் கொண்டது

சரியாக அந்த நேரத்தில் என் அலைபேசி சிணுங்கியது. விஷ்ணுவாக இருக்குமோ? மனதின் ஒரு புறத்தில் காதலின் ஏகாந்தத் துளிகள் ஏக்கம் தந்து, பின் தானாகவே தெளிய வைத்தது

இருக்காது, அவள் தான் சண்டை போட்டு விட்டு பேச மாட்டேன் என்றிருக்கிறாளே, வீம்புப் பிடித்தவள். திரும்பி வந்து தான் அவளை சமாதானம் செய்ய வேண்டும்

இப்போது அழைத்தது என் அன்பு அம்மா தங்கலட்சுமி. எங்கிருக்கிறேன் என கேட்டு விட்டு சாப்பிடும்படி சொன்னால். அவளுக்கு எப்போதும் என் நினைவு தான்.

ஐந்து நிமிட இடைவேளையில் மீண்டும் இரைச்சல் சத்தம். “ஏ சனியனே… தூரப்போ, இத்தோட தொல்லையா போச்சு” என அங்கிருந்த சிலர் யாரையோ அல்லது எதையோ விரட்டுவது போல் தோன்றியது.

இம்முறை எனக்கு சத்தமும் காட்சிகளும் தெளிவாகத் தெரியவே, நன்றாக கவனித்துப் பார்த்தேன்.

அவள் ஒரு சிறுமி. ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயது இருக்கும். முகம் அவ்வாறு தான் கூறியது. அவள் அணிந்திருந்த ஆடை பல நாட்களாக மாற்றப்படாமல் நிறம் மாறி அழுக்கு நிற ஆடையாக தோன்றியது. ஆண்கள் அணியும் சட்டை அணிந்திருந்தாள்.

தலைமுடிகள் சிக்குண்டு விரிந்த கோலத்தில் சடை தரித்து பெண் ஈசனாக தோன்றினாள். காலில் செருப்பு இல்லை. அது சரி உணவிற்கே அவலம், இதில் செருப்பிற்கு எங்கு செல்வாள்?

அநேகமாக அவள் பிச்சை எடுப்பதற்காக கடை கடையாக செல்ல, கடைக்காரர்கள் விரட்டி விட்டிருக்க வேண்டும். இது ஒன்றும் பொழுதைப் போக்கும் அளவிற்கு அரிதான நிகழ்வு அல்லவே. நான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டேன்.

சில நிமிடங்களில் என் தோள்களை யாரோ தொடுவது போல் தோன்ற திரும்பி பார்த்தேன். ஒரு திருநங்கை நின்றிருந்தார்.

இரு கைகளையும் தட்டி பணம் தருமாறு கேட்டார். அவருடைய செயல் அனிச்சையாகவே இருந்தது. அருகில் இருந்த ஒரு ஆணிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார்

“இல்லல்ல… அதெல்லாம் முடியாது. அவ்வளவு குறைச்சலா வாங்கனா எம் பொழப்பு என்னாகறது?” 

அவர் மிடுக்கான தோரணையும், ஆறடி உயரமும், கரகரப்பான குரலும் என்னை உள்ளுக்குள் கொஞ்சம் பயங்கொள்ள செய்தது. சில சமயங்களில் அவர்களின் குறையை கிண்டல் செய்பவர்களையோ ஏளனமாக பார்ப்பவர்களையோ சபித்து விடுவார்கள் என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.

அவர்கள் சாபம் பலிக்கும் என்ற சொல் மனதில் தங்கி விட்டது. எந்த சூழலில் அவர்களைப் பார்த்தாலும், கையிலிருக்கும் சில்லரையை அவர்களிடம் தந்து நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொள்வது ஏனோ பிடித்திருந்தது.

என் சட்டை பாக்கெட்டில் இருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவரிடம் தந்தேன். உடன் இருந்த மனிதன் என்னை வித்தியாசமாகப் பார்த்தான்

அந்த திருநங்கைப் பெண் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு தலையில் கை வைத்து எதையோ முணுமுணுத்து “நல்லாரு ராசா” என்றுக் கூறி சில்லறையை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.

‘நல்லாயிரு’ என்று யாராவது என்னை சொன்னால், அடுத்த சில நாட்களுக்கு அந்த வார்த்தை நான் நன்றாக இருப்பதாக தோன்ற வைக்கும்.

அடுத்து அச்சிறுமி என்னிடம் வந்தால் என்ன செய்வது? கையில் இருந்த கடைசி சில்லறையும் திருநங்கையிடம் தஞ்சம் புகுத்தி விட்டதால் என் சிந்தனை கொஞ்சம் கீழாக சிந்தித்தது.

எதற்கும் ஒருமுறை அவளை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். அவள் என்னை அடுத்து மூன்று கடைகள் தாண்டி ஒரு பழக்கடையில் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஆனால் அங்கும் மனிதர்கள் மட்டுமே இருந்ததால் அவளை விரட்டவேச் செய்தனர். அதில் ஒருவர் மட்டும் கவிதைப் போல, “வந்திடுதுங்க மாத்தி மாத்தி. இப்பதான் ‘ஒன்பது’ வந்துச்சு. இது பத்தாவது” என நக்கலாக எதையோ கூற,  உடனிருந்தவர்கள் கடனே என்று சிரித்து வைத்தார்கள்.

எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது. உடலையோ உருவத்தையோக் கொண்டு யாரும் கேலி செய்யப்படுவதை நான் ஒரு போதும் விரும்புவனில்லை.

நீண்ட நேரம் அதே இடத்தில் அமர்ந்திருந்ததால், இடத்தை விட்டு எழுந்து கொள்வது நல்ல யோசனையாகவேப் பட்டது. அதுவும் இல்லாமல் அச்சிறுமியோ அல்லது வேறு யாரோ வந்து கை நீட்டினால் என் குற்ற உணர்ச்சி அடுத்த சில தினங்களுக்கு என்னை நிம்மதியாக சாப்பிட விடாது. 

சிறுமியை ஒருமுறை திரும்பி பார்த்தேன். அவள் தனிப்பட்ட மனிதர்களையும், பயணிகளையும் தொந்தரவு செய்வதாக தெரியவில்லை. கடைகளில் அதுவும் உணவு கடைகளில் மட்டுமே பிச்சை கேட்கிறாள்.

அவளுக்கு உணவு மட்டுமே தேவையாயிருந்தது. பணம் என்பது வெறும் வண்ண காகிதம் என்று இவளுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் என்ன செய்வது? மனிதர்கள் மனசாட்சியை கழட்டி வீட்டில் வைத்துவிட்டு தான் வெளியில் வருகிறார்கள்.

நான் சற்றே ஆயாசமாக பென்ச்சில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டேன். அவள் என் பின்னிருக்கும் தின்பண்டங்கள் விற்கும் கடைக்கு வருவதாகத் தெரிந்தது. இப்போது அவளை அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

பொழுது போக வேண்டுமே. மேலும் கீழுமாக அவள் மேல் என் பார்வையை ஓட விட்டேன். ஓரிரு பட்டன்கள் கழண்டுக் கிடந்த மேல் சட்டை ஓட்டைக்குள் என்ன இருந்து விடப் போகிறது? 

நம்புங்கள். நானும் எல்லா ஆண்களைப் போலவும் உத்தமன் தான். கண்களுக்கும் மனதிற்கும் ஆண்மைக்கும் உறுத்தலாக இருக்கும் விஷயங்களை ஆராய்ந்து தெளிவதற்காகக் தான் ஆண்கள் பெண்களை பார்ப்பது.

அதில் ஒரு அற்ப சுகம். இதுவும் ஒருவகை கற்பு களவாடல் தான். பெண்ணின் அங்கங்களை கண்களால் கற்பழிக்கும் ஆண்கள் எங்குமே இல்லாமல் இல்லை. ஆனால் நான் கண்ணியமானவன் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ள ஆயத்தமானேன். என் நிலையில் தலையை குனிந்து அமர்ந்துக் கொண்டேன்.

ஏதோ ஒன்று பார்வையை உறுத்தியதாகப் பட்டது. ஒரு நிமிடம் சிந்திந்த நான், மறுபடியும் அவளை உற்றுப் பார்க்க அவளது சிறிய மேடிட்ட மார்பகங்களின் கீழ் முகடாக அவளது வயிறு புடைத்திருத்தது.

ஆம், அவள் கர்ப்பமாக இருந்தாள். குறைந்தது ஐந்து மாதங்கள் இருக்கும். இம்முறை எனக்கு ஆண்களின் மீது அதீத வெறுப்பு வந்தது.

அவள் திண்பண்டங்கள் விற்பனரிடம் நீண்ட நேரமாக கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஈக்கள் மொய்க்கும் அந்த பன்களையும் வறுக்கிகளையும் அவர் மெல்லிய கண்ணாடித் தாளைக் கொண்டு மூடி வைத்திருந்தார்.

வளர்ந்தும் வளராமலும் இருந்த அவளது பிஞ்சுக் கரங்கள் அவள் வயிற்றின் மேல் இருந்தது. வயிற்றையும் வாயையும் சுட்டி காட்டி பசிக்கிறது என்று சைகை செய்தாள்.

எனக்கு மேலும் ஓர் பேரதிர்ச்சி. அவளுக்கு பேச்சு வராது போல. அவள் சத்தமெழுப்பவும் சக்தியற்று போயிருந்தாள். அவளது கண்களில் இந்த சமுதாயத்தின் மீதான கோபமும் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கான பசியின் தூண்டுதலும் தெரிந்தது.

கர்ப்பிணிகளுக்கு அதிகம் பசி உண்டாகும் என்பதை நான் என் தங்கையின் கர்ப்ப காலங்களில் உணர்ந்து இருக்கிறேன். கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட ஆரம்ப நாட்களில், எங்கள் வீட்டில் சில வாரங்கள் தங்கியிருந்த அவள் எந்த நேரமும் பசி பசியென்று சுற்றுவாள். 

பசிக்கும் போதெல்லாம் கைக்கு கிடைத்ததை வாய் வழியே வயிற்றுக்குள் நிரப்பும் நிகழ்ச்சியை கவிதையாக கிண்டல் செய்திருக்கிறேன்.

‘உன் வயிற்றில் இருக்கும்

பாதாள குழிக்குள் உணவிற்கு

பதில் என் மருமகன் தவறி

விழப் போகிறான்’ என்பேன்.

அவள் என்னை முறைத்துக் கொண்டே பொரி உருண்டை சாப்பிட்ட கதை நினைவிற்கு வந்தது. இந்த சிறுமியை விட பத்து வருடங்கள் மூத்தவளான என் தங்கையின் அகோர பசிக்கு நாங்கள் இரையாகி போகாதது தான் பாக்கி

ஆனால், இந்தச் சிறுமியால் எப்படி இந்த வேதனையை பொறுக்க முடிகிறது? இவளை யார் இப்படி ஆக்கியிருப்பார்கள்? இவள் ஏன் இன்னும் யாராலும் கவனிக்கப்படாமல் இருக்கிறாள்?

அரசாங்கம் இது போன்ற சிறுமிகளை பாதுகாப்பதற்காக பல சட்டங்கள் போட்டிருக்கிறதே. இருந்தும் இவள் ஏன் யார் கண்ணிலும் படவில்லை? என் கேள்விகளுக்கு பதிலில்லை.

ஒருவேளை என்னால் இவளுக்கு? ம்ம்ஹூஹூம்ம்… நிச்சயம் முடியாது. என் ஓட்டத்தின் பாதையில் இந்த அரைமணி நேரம் மட்டும் தான் நான் நானாக நிற்கிறேன்.

இருந்தும் பேருந்தில் செல்லும் போது மொபைலில் ஏதாவது தேடிப் பார்த்து இவளை அரசாங்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சொல்லவொனா துயரத்தை வயிற்றில் தாங்கி திரியும் இவள் தேவதையின் சாயல் தான். வழக்கம் போல அந்த திண்பண்டங்கள் விற்பவரும் விரட்டி விடவே அங்கிருந்து நகர்ந்தாள்.

அருகில் இருந்த குடிநீர் குழாயில் நீர் குடித்து வயிற்றை நிரைக்க முடிவு செய்திருந்தாள் போல. தள்ளாடியப் படி நடந்து வந்து குழாயை திருகி விட்டு அதன் முன் நின்றாள்.

சில நொடிகளுக்கு வெறும் காற்று மட்டுமே வந்தது. அதைப் பார்த்ததும் பசியையும் மற்ற வேதனைகளையும் கடந்து குழந்தைத்தனமாக லேசான புன்னகை அவள் உதட்டில் எட்டிப் பார்த்ததை நான் கவனிக்காமல் இல்லை.

அவள் உயரத்திற்கு அந்த நவீனக் குழாய் சரியாக இருந்தது. கையால் வாய்க்கும் குழாய்க்கும் பாலம் அமைத்து வரும் தண்ணீரை மடக் மடக்கென்று பருகினாள்.

அவள் செய்கைகள் என்னை காரித் துப்புவது போல் தோன்றியது. கையாளாகாத மனிதர்கள் என்று என்னையும் சேர்த்து திட்டிக் கொண்டேன்.

திடீரென ஒரு பெண் , “ஏ சனியனே” எனக் கத்தினாள்

அவளைத் தான் அடைமொழி கொடுத்திருக்கிறார்கள் போல, “இந்த கொழாயில வாய வைச்சி தண்ணி குடிக்காதனு எத்தன தபா சொல்லறது? நாங்களாம் குடிக்க வோணாம்? வாய் தான் இல்ல? அறிவுமா இல்ல?” கூடையில் பூ விற்கும் பெண்ணொருத்தி அவளை வாய்க்கு வந்தப்படி திட்டித் தீர்த்தாள்

அப்பெண்ணின் கடுங்குரலுக்கு பயந்தவளாய் அங்கிருந்து சிறுமி வேகமாக நகர்ந்தாள்.

அவள் என்னை கடந்து விட்ட சமயத்தில், தான் என் சுயத்தை உணர்ந்தேன். பசியின் முன் சில்லறை என்ன நோட்டுகள் என்ன? என்னிடம் இருந்த சில நூறு ரூபாய் நோட்டுகளை பர்ஸில் இருந்து கையிலெடுத்தேன்.

என் பின்னேயிருந்த திண்பண்டங்கள் விற்பனைக் கடையை நோக்கி நடந்தேன். அந்த மனிதர் “என்னா சார் வேணும்? எல்லாம் ஃபிரெஷா இருக்கு சார்” என்றார்.

அவர் மேல் ஆத்திரம் வந்தது. அவர் மட்டும் என்ன செய்வார்? அவருக்கும் அவர் வாழ்க்கை பெரிதான சவாலை தந்திருக்குமே. கொஞ்சம் பன்களையும் ரொட்டி துண்டுகளையும் வாங்கி கொண்டேன்

அவள் நடந்துச் சென்ற பாதையில் நேராக நடந்து சென்றேன். அவள் என் கண்களில் இருந்து தவறி விட்டாள். இவ்வளவு நேரம் மெதுவாக நடந்து வந்தவள், என் மனம் உதவி செய்ய யோசனை சொல்வதற்குள் மாயமானது எப்படி?

‘சே’ என்ற வார்த்தையில் என் மீதான மொத்த வெறுப்பையும் கொட்டினேன்.

பேருந்து நிலையத்திற்குள் நான் முன்பதிவு செய்திருந்த பேருந்து நுழைவதாகத் தோன்றியது. தாமதமாக செய்யும் உதவி வீணானது என்று புரிந்து கொண்டேன்.

அவளுக்காக வாங்கிய பண்டங்களில் அவளின் சாபங்களோ அல்லது பசியின் கண்ணீரோ கொப்பளித்து என்னை அந்த இடத்திலேயே எரியூட்டிவிடுவதுப் போல தோன்றியது.

இதை எப்படியாவது அவளிடம் சேர்க்க வேண்டும். அதற்குள் பேருந்து பின்னால் நகர்ந்து வந்து அதன் இடத்தில் நின்றது. முன்பதிவு செய்தவர்கள் கூட்டமாக பேருந்தை சுற்றி வளைத்து நின்றார்கள். எனக்கான நேரம் குறைவாகவே இருந்தது என்று உணர்ந்தேன்.

அந்த நடைமேடையின் இறக்கத்தில் இருந்த பெரிய தூண் ஒன்றின் அடியில் நரைத்த தாடியுடன் ஒருவர் படுத்து கிடந்தார். அவர் அருகில் ஒரு கைக்கோலும் அழுக்கு துணியும் விரிந்துக் கிடந்தது. அந்த துணியில் சில சில்லரை காசுகள் இரைந்துக் கிடந்தன.

எனக்கு ஒரு யோசனை வந்தது. இதை விட்டால் வேறு வழி இருப்பதாகவும் அப்போதைக்கு தோன்றவில்லை. அவர் அருகில் சென்றேன்.

“தாத்தா… தாத்தா…”

“என்னப்பா காசா?” படபடத்தபடியேக் கையை நீட்டினார்.

“இல்ல தாத்தா, ஒரு சின்ன பொண்ணு. அவ கூட கர்ப்பமா இருந்தாளே?”

“ஆமா பொன்னி” என்று சொல்லி எழுந்து அமர்ந்துக் கொண்டார். அநேகமாக இவருக்கு அவள் கதை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் கேட்பதற்கு எனக்கு நேரமில்லை.

“இந்த பக்கம் தான் போச்சு. அது வந்தா இதோ இந்த பைய அதுகிட்ட குடுத்திடுங்க” எனக் கூறி கையிலிருந்ததை அவரிடம் கொடுத்தேன்.

அவர் அதை லாவகமாக வாங்கி பக்கத்தில் வைத்துக் கொண்டார். மறுவார்த்தை பேச நேரமில்லை. பேருந்து எனக்காக காத்திருப்பதாகத் தோன்றியது.

அவரிடம் சொல்லாமல் பேருந்தை நோக்கி அரைகுறை மனதுடன் விரைந்தேன். பேருந்தில் ஏறி எனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ஜன்னலோர இருக்கைகள் கவிஞனுக்கு வரம். மனதில் பாரம் சற்றேனும் இறங்கி இருந்தது.

எப்படியோ ஒரு தர்மம் செய்து வந்த கர்வம் மனதில் வராமல் இல்லை.  நல்லவனாகக் காட்டிக் கொள்வதிலோ உணர்வதிலோ அலாதியான திருப்தி தான்.

சோதிப்பதற்காக இல்லை. எதேச்சையாக திரும்பி பார்த்தேன்.  அந்த தாத்தா நான் தந்த பண்டங்களை பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

‘சீ..இது என்ன மாதிரிச் செயல்?’ அவரை நோக்கி வாய் விட்டு திட்டினேன். அதுசரி அவரும் மனிதர் தானே? அவருக்கும் பசி இருக்கும். சுயநலமும் இருக்கும்.

இத்தனைக்கும் அவரால் பொன்னி போல நடக்க முடியாது. பசியில் என்ன பாகுபாடு?  ஒருவேளை நான் கடைகாரனிடமே காசை கொடுத்து விட்டு வந்திருந்தால் அந்த சிறுமி வரும் போது பண்டங்களை தந்திருப்பாரோ?

என்ன நிச்சயம்? வண்ண காகிதங்களுக்கு உணர்வுகள் இல்லையே!

பேருந்து புறப்பட்டு நிலையத்தை விட்டு வெளியே சென்று வேகத்தை கூட்டியது. ஜன்னலோர இருக்கையின் தவத்தில் ஆழ்ந்து என்னை எதிர்புறமாக கடந்து சென்றவைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

வாழ்வும் அது போலத் தான். நாம் நேராக ஓட முயன்றால் அது நமக்கு எதிராக ஓடி வந்து பயமுறுத்துகிறது. மனம் தனக்கு எட்டாத எதையெதையோ சிந்தித்தது. அது இந்த ஜன்னல் வழி வேடிக்கை காட்டும் விநோதம்.

என்னை நொடி நேரத்தில் கடந்துச் சென்ற சாலையோர சுவரொட்டி ஒன்று என் கவனத்தை ஈர்த்தது.

‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ பாரதியின் புகைப்படம் வரைந்து அதன் கீழிருந்த வாசகம் ஏற்கனவே எனக்கு நன்கு பரீட்சயம் ஆனது.

பல மேடைப் பேச்சுகளில் இதை சொல்லித் தான் பேச்சை ஆரம்பிப்போம். பாரதி என் காதின் மேல் துப்பினார்

ஒரு தனிப்பட்ட மனிதனின் உணவுத் தேவைக்காக ஜகத்தினை அழிக்க வேண்டுமென்றால் அழிப்பதற்கு இந்த ஒரு உலகம் போதாதே பாரதி. இல்லாத அவரிடம் மானசீகமாக பதில் கூறி விட்டேன்.

ஏனோ அந்த சுவரொட்டியின் அடியில் படுத்து கிடந்த அந்த பொன்னியின் நிழலை கூடப் பார்ப்பதற்கு என் கண்கள் கூசியது.

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. பாவம், அந்தப் பெண். முன்னாலேயே சாப்பிட ஏதானும் வாங்கிக் கொடுத்திருக்கலாமோ?

  2. அத்தனை தூரம் அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்தவர்
    அவள் நிலையைக் கண்டவர் கையில் காசு இல்லாவிட்டாலும பையில பணம் இருந்ததே.சில சமயங்களில் நாம் யோசித்து செய்யலாமா வேண்டாமா என்று நினைப்பதற்குள் வெகு தொலைவில் வந்து விடுவோம்.ஆனால் அவரால் பசியால வாடிக் கொண்டு இருக்கும் ஒரு முதியவரின் பட்டினியை போக்க முடிந்ததே..அதுவரை நிம்மதி..

பூக்காத மரம் (சிறுகதை) – ✍ ஜெயந்தி ரமணி, சென்னை

நைட் டிரைவ்❤ (சிறுகதை) – ✍ கருணா, கோவை