இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 125)
”என்ன வேணும்”
“டீச்சர் வந்து…”
“என்ன தலைய குனியற?”
“அது வந்து டீச்சர்…”
“சீக்கிரம் சொல்லு. எனக்கு அடுத்த வகுப்புக்கு நேரமாகுது. நேரத்தை வீணாக்கறது எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும் இல்ல”
“எனக்கு எப்பவும் 28 நாளில தான் வரும், ஆனா இந்த முறை 20 நாளிலேயே…”
”இதெல்லாம் உன் பிரச்னை, அதுக்கு நான் என்ன செய்ய. உன் வகுப்பு பிள்ளைகளுக்கு அப்பப்ப அரைநாள் விடுப்பு ஏன் குடுக்கறன்னு தலைமையாசிரியை என்னை கோவிச்சுக்கறாங்க. நீ போய் தலைமையாசிரியைகிட்ட சொல்லிட்டு வீட்டுக்குப் போ” என பத்மா டீச்சர் சிடுசிடுக்க
இவர்கள் பேசுவதை எதேச்சையாய் கேட்ட சாரதா டீச்சர், “டீச்சர் என்கிட்ட சானிடரி நாப்கின் இருக்கு. இந்தாம்மா வா, நான் தரேன்” என்றார்
“ம்ம் வாங்கிட்டுப் போ, இனிமே இந்த மாதிரி வந்து நிக்காத. சொன்னாலும் புரியறதில்ல, சுயமாவும் தெரியறதில்ல, போ போ”
“ரொம்ப நன்றிங்க டீச்சர்”
“சாரதா டீச்சர், நீங்க இப்ப தான் இந்த பள்ளிக் கூடத்துக்கு மாத்தலாகி வந்திருக்கீங்க, இதெல்லாம் சரியா வராது. இந்த பிள்ளைங்கள பத்தி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. அப்புறம் உங்க சம்பளம் முழுக்க சானிடரி நாப்கின் வாங்கத் தான் சரியா இருக்கும்” என்றார் பத்மா டீச்சர் கிண்டலாக.
பதிலுக்கு ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தார் சாரதா டீச்சர்
”ஏங்க நம்ப தமிழை கவனிச்சீங்களா? இப்பல்லாம் ரொம்ப அமைதியா இருக்கான். தங்கச்சியை வம்புக்கு இழுக்கறதில்ல. அத்தோட அவன் வாங்கற மதிப்பெண்களிலயும் நல்ல முன்னேற்றம் இருக்கு” என்று கணவனிடம் சொன்னாள் தமிழரசனின் அம்மா.
“ம்ம் நானும் கவனிச்சேன், அவன் முகமே தெளிவா இருக்கு. செய்கைகளிலும் தெளிவு தெரியறது. நல்ல மாற்றம் தானே, சந்தோஷப்படுவோமே” என்றார் தமிழரசனின் அப்பா
“ம்க்கும்… அண்ணனுக்கு ஒரு சாரதா டீச்சர் கிடைச்ச மாதிரி எனக்கும் ஒரு டீச்சர் கிடைச்சிருந்தா நானும் தான் இப்படி ஆகியிருப்பேன்” பள்ளியிலிருந்து வந்து புத்தகப் பையை தொப்பென்று மேசையில் வைத்து விட்டுக் கண்ணைக் கசக்க ஆரம்பித்தாள் யாழினி
“நீ எப்பவுமே நல்ல பெண் தானே, இன்னிக்கு உனக்கு என்ன ஆச்சு யாழினி?”
”சரி சரி அம்மாவும் பெண்ணும் பேசிக்கங்க, எனக்கு நேரம் ஆச்சு. சரக்கு எடுக்க சந்தைக்குப் போகணும், நான் கிளம்பறேன்” என வெளியேறினார் தந்தை
”அம்மா இன்னிக்கு எனக்கு இருபது நாளிலேயே மறுபடியும் பீரியட்ஸ் வந்துடுச்சும்மா. பத்மா டீச்சர்கிட்ட சொன்னதும் என்னய ரொம்ப திட்டிட்டாங்கம்மா. அப்ப அண்ணனோட வகுப்பு டீச்சர், அதான் புதுசா வந்திருக்காங்களே சாரதா டீச்சர், அவங்கதான் ஒரு சானிடரி நாப்கின் கொடுத்தாங்க”
“நான் தான் சொல்லி இருக்கேன் இல்ல, எப்பவும் உன் பையில தயாரா வச்சுக்கனு”
”அம்மா பத்மா டீச்சர் உன்ன கூட திட்டினாங்க அம்மா, எல்லா அம்மாக்களையும் திட்டினாங்க அம்மா”
“நீ நல்லா யோசிச்சுப் பாரு. அவங்க ஏதாவது முக்கியமான வேலையா இருந்திருப்பாங்க, அந்த நேரம் பார்த்து நீ போய் சொல்லி இருப்ப. யாருக்கா இருந்தாலும் கோபம் தானே வரும். நம்ப மேல தப்ப வெச்சுக்கிட்டு மத்தவங்கள குத்தம் சொல்லக் கூடாது யாழினி. மாதா, பிதா, குரு, தெய்வம் தெரியும் இல்லையா. தெய்வத்தை விட உயர்ந்த இடத்துல வெச்சு பார்க்க வேண்டிய குருவைப் பத்தி நீ இப்படி எல்லாம் பேசக் கூடாது”
“சரிங்க அம்மா, மன்னிச்சுக்கங்க. இனிமே கவனமா இருக்கேன்”
“அது தான் நல்ல பெண்ணுக்கு அடையாளம்”
”வர வர இந்த சாரதா டீச்சர் தொல்லை தாங்க முடியல. அவங்களுக்கு என்னமோ பெரிய அன்னை தெரசான்னு நினைப்பு”
”என்ன பத்மா டீச்சர், ரொம்ப கோபமா இருக்கீங்க போல”
“பின்ன என்ன, அவங்க வந்த ஆறு மாசத்திலயே எல்லா பிள்ளைங்களும் சாரதா டீச்சர் புராணம் பாட ஆரம்பிச்சுட்டாங்க. நாம இத்தனை வருஷமா இங்க வேல பாக்கறோம், நம்பள யாரும் மதிக்கறது கூட இல்ல. போறாத்துக்கு நம்ம பள்ளிக்கூடத்துல வேலை பார்க்கற ஆயால இருந்து எல்லா ஊழியர்களும் அவங்களை தெய்வமாவே கும்பிட ஆரம்பிச்சுட்டாங்க”
“அவங்க பிள்ளைங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கறாங்க. எதையும் அன்பா சொல்லறாங்க. பள்ளிக்கூட ஊழியர்களை சக மனிதனா மதிக்கறாங்க, நடத்தறாங்க. பத்மா டீச்சர், அவங்க கிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு” இது வினயா டீச்சர்.
“நீயும் அவங்க புராணம் பாட ஆரம்பிச்சுட்டாயா?”
“உண்மையை தானே சொல்லறேன்”.
“கால் பரீட்சையில அவங்க வகுப்பில முதல் மூன்று இடத்தை பிடிச்ச பிள்ளைங்களுக்கு பரிசு கொடுத்திருக்காங்களாம்”
“அதுல என்ன தப்பு. அவங்க சொந்த பணத்துல தானே வாங்கி கொடுத்திருக்காங்க. விருப்பம் இருந்தா நீங்களும் வாங்கி கொடுக்கலாமே உங்க வகுப்பு பிள்ளைங்களுக்கு” “அவங்க ஒண்டிக்கட்டை, பிள்ளையா, குட்டியா? நான் அப்படி எல்லாம் செலவழிக்க முடியுமா?”
“அதெல்லாம் ஏன் சொல்றீங்க? நீங்க கூட தான் மாசா மாசம் விலை உயர்ந்த புடவையா வாங்கிக்கறீங்க. ஒரு மாசம் அதை நிறுத்திட்டு அந்தப் பணத்தில உங்க வகுப்பு பிள்ளைங்களுக்கு பரிசு வாங்கி கொடுங்கனு நான் சொன்னா ஏத்துப்பீங்களா?”
மனதுக்குள் ‘இதென்னடா வம்பா போச்சு’என நினைத்த பத்மா டீச்சர் “அது சரி, உன் கிட்ட வந்து சொன்னேன் பாரு” என சலித்துக் கொண்டு வெளியேறினார்
“அம்மா, அங்க பாரு, பச்சை புடைவை கட்டிண்டு இருக்காங்களே, அவங்க தான் சாரதா டீச்சர்.”
“வா போய் அவங்ககிட்ட பேசலாம். வணக்கம் டீச்சர், நான் உங்ககிட்ட பத்தாம் வகுப்பில படிக்கிற தமிழரசனோட அம்மா. இவள் என் பெண் யாழினி. ஏழாம் வகுப்பு படிக்கறா”
“ஓ வணக்கம்மா . நல்லா இருக்கீங்களா?”
“வணக்கம் டீச்சர்” என்றாள் யாழினி.
யாழினியின் அம்மா, “டீச்சர், நானே உங்களை நேரே வந்து சந்திக்கணும்ன்னு நினைச்சேன். சமயத்தில உதவி செய்ததுக்கு ரொம்ப நன்றி டீச்சர். நீங்க கொடுத்த சானிடரி நாப்கின் ரொம்ப நல்லா இருந்ததுன்னு இவ சொன்னா. வழக்கமா மருந்து கடையில வாங்கி உபயோகிக்கும் போது கூட திருப்தியா இருக்காது. என்ன பெயர்ன்னு சொன்னா வாங்கலாம்ன்னு தான் கேட்டேன்”
“அம்மா என்னம்மா, இதெல்லாம் டீச்சர்கிட்ட போய் கேக்கற”
“பரவாயில்லை யாழினி, அம்மா கேக்கறது சரி தான். நல்ல விஷயம் தானே. இதற்குப் பெயர் எதுவும் இல்லைங்க. எனக்கு தெரிஞ்சவங்க வீட்ல இயற்கை முறையில தயார் செய்யறாங்க. வேணும்னா சொல்லுங்க வாங்கி யாழினிகிட்ட கொடுத்து விடறேன்”
“ரொம்ப நன்றி டீச்சர். எங்க தமிழரசன் இப்ப நல்லா படிக்கறான். நீங்க வந்த பிறகு நல்ல மாற்றம் தெரியுது அவன்கிட்ட”
“நான் என் கடமையைத் தான் அம்மா செய்யறேன்”.
“சரிங்க டீச்சர், நாங்க வரோம்”.
“சரிங்க”
“என்ன அநியாயம்?”
“என்ன ஆச்சு பத்மா?”
“நம்ப சாரதா டீச்சர் அஞ்சு, ஆறு, ஏழாம் வகுப்பு படிக்கற பெண்களுக்கு தனியா வகுப்பு எடுக்கப் போறாங்களாம். வயதுக்கு வரதை பத்தியும், எப்படி அவங்க நடந்துக்கணும்ன்னும் சொல்லிக் கொடுக்கப் போறாங்களாம். அதே மாதிரி ஆண் பிள்ளைங்களுக்கும் பெண் பிள்ளைகள் கிட்ட எப்படி நடந்துக்கணும்ன்னும் சொல்லிக் கொடுக்கப் போறாங்களாம்”
“அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே”
“ஆமாம். எனக்கு தெரியும் வினயா. நீ அவங்க பக்கம் தான் பேசுவன்னு. அவங்க அப்பா, அம்மாவுக்கு இல்லாத அக்கறை இவங்களுக்கு எதுக்கு?”
“அவங்க எது செய்தாலும் அதை எதிர்க்கறதே உங்களுக்கு வழக்கமா போச்சு. ஒரு ஆசிரியைக்கு எல்லா மாணவர்களும் பிள்ளைங்க மாதிரி தான்”
“இந்த காலத்துக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது”
“என்ன பேசறீங்க நீங்க? இந்த காலத்துக்கு தாங்க இது கண்டிப்பா தேவை. நீங்க பத்திரிகை எல்லாம் படிக்கறதே இல்லையா? தொலைக்காட்சியில செய்திகள் கேக்கறதே இல்லையா? தினமும் பாலியல் வன் கொடுமைகள் பத்தி எவ்வளவு செய்திகள் வருது? சின்ன பிஞ்சுகளைக் கூட விட்டு வைக்க மாட்டேங்கறாங்க.
முன்பெல்லாம் வீட்டுல தாத்தா பாட்டின்னு பெரியவங்க இருந்தாங்க, நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்தாங்க. பெரியவங்க உதாரண மனிதர்களா வாழ்ந்தாங்க, அவங்கள பார்த்து பிள்ளைங்களும் எப்படி நடந்துக்கணும்ன்னு கத்துக்கிட்டாங்க.
ஆனா இன்னிக்கு, கூட்டுக் குடும்பங்கள விடுங்க. எத்தனை வீடுகள்ல தாத்தா பாட்டி இருக்காங்க. முக்காவாசி வீடுகள்லயும் ஒத்தப் பிள்ளை. எப்படி வளர்க்கணும்ன்னு பெத்தவங்களுக்கும் தெரியல, உதாரணம் காட்ட நல்லவங்களும் இல்ல.
அத்தி பூத்தா மாதிரி சாரதா டீச்சர் மாதிரி யாராவது வந்தா அவங்கள தப்பு தப்பா விமர்சனம் பண்ணி குத்தி கிழிச்சிடுவீங்களே
அன்னைக்கு அப்படித் தான் இராணுவத்துல பணிபுரியற அவங்க பழைய மாணவர்களை அழைத்து வந்து அவங்களுடைய அனுபவங்களை நம்ப பிள்ளைங்களுக்கு சுதந்திர தினத்தன்னிக்கு எடுத்து சொல்லச் சொன்னா, அதையும் கேலி பேசினீங்க.
அவங்க வந்த கொஞ்ச நாளிலேயே எவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருக்காங்க? எவ்வளவு அருமையா மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்தாங்க? நல்ல விஷயங்களை பாராட்ட மனசு இல்லைன்னா பரவாயில்லை, விமர்சனம் செய்யாம இருக்கலாம். உங்களுக்கு சாரதா டீச்சரை பத்தி என்ன தெரியும்?” மூச்சு விடாமல் படபடவென்று பொரிந்து தள்ளினாள் வினயா டீச்சர்
“என்ன தெரியணும். அவங்களும் நம்பள மாதிரி ஒரு டீச்சர், அவ்வளவு தானே”
“இல்லைங்க, அவங்க வேற. அவங்க அப்பாவும் ஒரு ஆசிரியர் தான். நாலு முறை நல்லாசிரியர் விருது வாங்கியவர். ஐந்தாம் முறையும் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது மறுத்து, இளைய தலைமுறையினருக்கு கொடுக்கும்படி சொன்னவர் அவங்க அப்பா.
நம்ப சாரதா டீச்சர் அவருக்கும் ஒரு படி மேலே இரண்டு முறை நல்லாசிரியர் விருது வாங்கியதுமே தனக்கு இனி விருது வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. தலைமை ஆசிரியை பதவியை மறுத்து சாதாரண ஆசிரியையாகவே பணியாற்றுகிறேன்னு சொல்லிட்டாங்க.
ஏன்னா தலைமை ஆசிரியை ஆனா பிள்ளைகளிடமிருந்து விலகி இருக்கும்படி ஆகிடும்ன்னு சொல்லிட்டாங்க. அவங்க உலகமே இந்தப் பிள்ளைகள் தான். மொத்தத்துல அவங்க ஒரு நிறை குடம்’ இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்ன்னு பார்க்கறீங்களா? அவங்க அப்பாவும், என் மாமாவும் நண்பர்கள்”
பதில் எதுவும் சொல்ல முடியாவிட்டாலும் உள்ளுக்குள் குமைந்தார் பத்மா டீச்சர். சாரதா டீச்சர் இவர்கள் பள்ளிக்கு மாற்றலாகி வந்த நாள் அன்றே, அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே பத்மா டீச்சருக்கு ஏதோ ஒரு வெறுப்பு.
சாரதா டீச்சரின் மிகவும் எளிமையான தோற்றம், சாதாரண பருத்திப் புடைவை, காதில் ஒரு சிறிய தோடு, கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலி, வலது கையில் ஒற்றை வளையல், இடது கையில் சாதாரண கைக்கடிகாரம், நீண்ட அடர்த்தியான கூந்தல், புன்னகை சிந்தும் முகம், இதெல்லாம் கண்டிப்பாக எல்லாரையும் கவர்ந்து விடும் என்று அவர் உள்உணர்வு அன்றே கூறியதோ என்னவோ?
அதுவே பொறாமைக்கு வித்திட்டிருக்கலாமோ?
எப்படி ஒரு பக்கம் சாரதா டீச்சரின் புகழ் வளர்ந்து கொண்டே போயிற்றோ, அதே போல் இன்னொரு பக்கம் பத்மா டீச்சருக்கு சாரதா டீச்சர் மேல் வெறுப்பு அதிகமாகிக் கொண்டே போயிற்று.
ஆனால் பத்மாவுக்கு தாளம் போடும் ஓரிரு ஆசிரியைகளும் இருக்கத் தான் செய்தார்கள். நமக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கியவர்களும் இருந்தார்கள்.
“அப்பா, இந்தாங்கப்பா”
“என்ன வினோத் என்ன புத்தகம் இது?”
“அப்பா, “உன் சக மாணிவியை நீ எப்படி நடத்துவாய்” என்கிற தலைப்பில என் வகுப்பு மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னாங்க எங்க சாரதா டீச்சர். அதுல என்னுடைய கட்டுரையை சிறந்ததா தேர்ந்தெடுத்து இந்த புத்தகத்தை பரிசா கொடுத்தாங்கப்பா”
“அட பரவாயில்லையே! இது ஒரு வித்யாசமான அணுகுமுறையா இருக்கே. பத்மா, வினோத் வகுப்பு டீச்சர் நல்ல டீச்சராக இருக்காங்களே. என்கிட்ட சொல்லவே இல்லையே நீ அவங்கள பத்தி, வினோத் இப்ப மதிப்பெண் கூட நல்லா வாங்கி இருக்கான் போல”
“அதான் உங்க பிள்ளை சொல்லிட்டானே, அப்புறம் என்ன”
“இங்க பாரு வினோத் பரிசு வாங்கினா மட்டும் போதாது. வாழ்க்கையிலயும் நல்ல விஷயங்களை கடை பிடிக்கணும்”
“சரிங்க அப்பா”
பத்மா டீச்சர் மட்டும் மனதுக்குள், “இப்ப வீட்டுக்குள்ளயே எதிரிகள் போல எனக்கு” என்று நினைத்துக் கொண்டாள்.
மூன்று வருடங்களுக்குப் பின்
“வா யாழினி, வாழ்த்துக்கள். மாணவர் தலைவர் தேர்தல்ல வெற்றி அடைஞ்சிருக்க” என்றார் சாரதா டீச்சர்.
“ரொம்ப நன்றிங்க டீச்சர். உங்கள பார்க்கத் தான் டீச்சர் வந்தேன், ஒரு உதவி வேணும்”
“சொல்லு”
“எங்களுக்கு, அதாவது மாணவிகளுக்கு ஒரு தனி அறை வேணும் டீச்சர்”
“சரி, தலைமை ஆசிரியைகிட்ட சொல்றேன்”
சில நாட்களுக்கு பின், “ரொம்ப நன்றிங்க டீச்சர். எங்களுக்கு ஒரு அறை கொடுத்துட்டாங்க. பத்தாம் வகுப்பு ஒவ்வொரு பிரிவில இருந்தும் ஒரு மாணவியை தேர்ந்தெடுத்து ஒரு குழு அமைச்சிருக்கோம். நீங்க எங்களுக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்களை சின்ன வகுப்பு பெண்களுக்கு சொல்லி கொடுக்கப் போறோம். அதோட சானிடரி நாப்கின் கூட நாங்களே விற்கப் போறோம். நீங்க அறிமுகப்படுத்தினீங்களே அவங்ககிட்ட தான் வாங்கப் போறோம்” என யாழினி கூற
“ஓ அருமை. வாழ்த்துக்கள்” என மகிழ்வுடன் கூறினார் சாரதா டீச்சர்
“பள்ளிக்கூடத்துல வாரிசு உருவாக்கிட்டாங்க சாரதா டீச்சர், என்ன வினயா பேச்சையே காணும்” என பத்மா டீச்சர் வம்பு பேச ஆரம்பிக்க
மெலிதான ஒரு புன்னகையுடன் அங்கிருந்து சென்றாள் வினயா. அந்தப் புன்னகையின் அர்த்தம் புரிந்தும் புரியாத மாதிரி இருந்தாள் பத்மா.
ஆறு வருடங்கள் கழித்து ஒரு நாள்,
சாரதா டீச்சர் பணி ஓய்வு பெற, பிரிவு உபசார விழாவிற்கு எல்லா ஏற்பாடுகளையும் விழுந்து விழுந்து செய்தாள் பத்மா டீச்சர்
பட்டியலில் முதலில் தன் பெயரைப் போட்டு ஆயிரம் ரூபாய் என்று எழுதினாள். ஐம்பது ஆசிரியைகள் இருக்கிறோம். ஆளுக்கு ஆயிரம் என்றால், மொத்தம் ஐம்பதாயிரம்.அல்பமாக நினைவுப் பரிசை பணமாக அல்லவா கேட்டிருக்கிறார் சாரதா டீச்சர், என்று கிண்டலாக சிரித்துக் கொண்டாள்.
பிரிவு உபசார விழாவில் ஏற்புரை ஆற்ற ஆரம்பித்தார் சாரதா டீச்சர்
“எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னைப் பற்றி நானே தெரிந்து கொள்ள உதவி இருக்கீங்க எல்லாரும். என்னைப் பற்றி இதுவரை நான் யாரிடமும் சொல்லாத விஷயங்களை உங்ககிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன். இது தேவையானு எனக்கு தெரியல.
ஆனா இதனால வருங்காலத்துல நல்ல ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை இந்தப் பள்ளியில உருவாகும்னு நம்பறேன்
நான் ஒரு பூக்காத மரம். என்னுடைய இருபது வயது வரை நான் பூப்பெய்தல. எவ்வளவோ மருத்துவம் செய்தும் எதுவும் நடக்கல. அப்ப அது ஒரு விஷயமா எனக்கு தெரியல, ஆனா என் பெற்றோரால அதை தாங்கிக்க முடியல.
அப்ப தான் நான் ஒரு முடிவு எடுத்தேன். பெற்றால் ஒன்றிரண்டு பிள்ளைகள். ஒரு ஆசிரியை ஆனால் பள்ளிப் பிள்ளைகள் எல்லோருமே நம்ப பிள்ளைகள் தானே.
எனக்கு யார் மேலயும் வெறுப்பு, கோபம் எதுவும் கிடையாது. உங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு விஷயத்தைப் பார்த்து நான் வியந்து போயிருக்கேன்.
பத்மா டீச்சரோட அச்சுக் கோர்த்த மாதிரியான அழகான கையெழுத்து, வினயாவின் நேரம் தவறாமை, நம்ப தலைமை ஆசிரியையின் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு, இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் நிறைய நல்ல விஷயங்களை பார்த்திருக்கேன்.
நான் பணி ஓய்வுக்குப் பிறகு ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமா பாடம் சொல்லி கொடுக்கப் போறேன், அதே மாதிரி உங்களுக்கு எப்ப தேவையோ அப்ப நம்ப பள்ளிக்கூடத்துக்கு வந்து பாடம் எடுக்கவும் நான் தயாரா இருக்கேன்.
எனக்கு நீங்க நினைவுப் பரிசா கொடுத்த பணத்தோட எவ்வளவு தேவையோ அதை நான் தரேன். நம்ப பள்ளியில பெண் குழந்தைகளுக்காக நவீன கழிப்பறைகள் கட்டுவதற்கு
நான் ஏதாவது தவறு செய்திருந்தாலோ அல்லது யாரையாவது மனம் வருந்தும்படி நடந்து கொண்டிருந்தாலோ, புண்படும்படி பேசி இருந்தாலோ தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த சிரம் தாழ்ந்த நன்றி.”
சாரதா டீச்சர் பேசப் பேச தலை குனிந்து மனதிற்குள், ‘நான் தான் உங்கள் மனம் புண்படும்படி நடந்து கொண்டிருக்கிறேன். நான் தான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாளை கண்டிப்பாக சாரதா டீச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள் பத்மா.
அட! சாரதா டீச்சர் எதிர்பார்த்த மாற்றம் இப்பொழுதே வந்து விட்டதே.
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
நல்ல கருத்துள்ள கதை. குறையைப் பெரிதாக நினைக்காமல் அனைவருக்கும் சேவை செய்யத் துடிக்கும் தொண்டு உள்ளம்.
மிக்க நன்றி கீதாம்மா.
ஒரு நல்ல ஆசிரியர்/ஆசிரியை கிடைத்து விட்டால், அவரிடம் படிக்கும் அத்தனை மாணவ மாணவிகளும் சிறந்த குடிமகன்களாகத் திகழ்வார்கள். அத்தகையோர் சமுதாயத்தில் அற்புதமான மாற்றத்தை நிகழ்த்துவார்கள். உடன் பணி புரியும் ஆசிரியர் மனத்திலும் மாற்றம் ஏற்படுத்துவது அந்த நல்ல ஆசிரியையின் அழகான உள்ளத்தைக் காண்பிக்கிறது. மொத்தத்தில் இக்கதையின் ஆசிரியர் படிப்போர் உள்ளத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முயன்று வெற்றியும் கண்டிருக்கிறார். பாராட்டுக்கள்.
மிக்க நன்றி விசுவநாதன். வரவுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.
கதையின் உள்ளடக்கம் அருமை. இக்காலத்துக்கு தேவையான கருத்தை சற்றும் மிகையில்லாமல் அழகாக சொல்லியுள்ளார். எனக்கு இவரை நன்கு தெரியும். இவர் நல்ல கதை சொல்லி. அந்த திறன் இங்கு வெளிப்படுகிறது. இவரது திறமை மென்மேலும் மிளிர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி மாமா
வரவுக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.