in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 5) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4

“ஐயோ சிவா!… நீ பாட்டுக்கு கோபத்துல அடிதடில இறங்கிடாதே!… அவன் கராத்தே சாம்பியன்!… நீயெல்லாம் அவனுக்கு தூசு மாதிரி… தூக்கிப் பந்தாடிடுவான்”

எங்கே தட்டினால் எது விழும் என்று அவளுக்குத் தெரியும். அவன் ஆண்மையை சீண்டினாள்.

வெகுண்டெழுந்தவன், “நீ சும்மா இரு வித்யா!… நான் யாருன்னு அவனுக்கு காட்டறேன்!” அவன் முகத்தில் கோபம் கூடாரம் அமைத்தது.

அவன் தன் பற்களை “நற… நற”வெனக் கடிக்கும் சத்தம் அப்பட்டமாய் வெளியில் கேட்டது. அதைக் கேட்கவே சந்தோஷமாயிருந்தது  வித்யாவுக்கு.

அடுத்த வாரத்தில் ஒரு நாள், பஸ்ஸிலிருந்து இறங்கிய வித்யாவும் கோமதியும் காலேஜ் கேட் முன்பு ஒரு போலீஸ் வேனும், பத்துப் பதினைந்து  போலீஸ்காரர்களும்  நிற்பதை கண்டு  துணுக்குற்றனர்.

“என்னடி இது?… ஒரே போலீஸ் தலையாய்த் தெரியுது” கோமதி அச்சத்துடன் கேட்டாள்.

“எனக்கு என்னடி தெரியும்? … நானும் உன் கூடத்தானே வர்றேன்?” அலட்சியமாய் பதில் சொன்னாள் வித்யா.

மெல்ல கேட்டை நெருங்கி, தயக்கமாய் உள்ளே நுழைந்தனர். ஆங்காங்கே மரத்தடியில் ஸ்டூடண்ட்ஸ்  கும்பல்  கும்பலாய்  நின்று  விவாதித்துக்  கொண்டிருந்தனர்.

“என்னமோ நடந்திருக்கு!… வா போய் விசாரிக்கலாம்” சொல்லியபடியே மரத்தடிக்குச் சென்று அந்த ஒல்லி மாணவனிடம் கேட்டாள் வித்யா.

“உங்களுக்கு விஷயமே தெரியாதா?… நம்ம கராத்தே மாதவனுக்கும்… சூப்பர் ஹீரோ சிவாவுக்கும்… நேத்திக்கு ஈவினிங் பயங்கர ஃபைட்!… என்ன காரணம்னு தெரியலை!… ரெண்டு பேரும் கத்தியை தூக்கிட்டு… ஆளாளுக்கு குத்திக்கிட்டானுக…. ஒரே ரத்தக்களரி” சொல்லும் போதே அந்த ஒல்லி மாணவன் முகத்தில் டன் கணக்கில் பீதி.

“அடப் பாவமே” குரல் நடுங்கியது கோமதிக்கு.

“அப்புறம் என்னதான் ஆச்சு?” வித்யா சிறிதும் பாதிப்பு இல்லாமல் வெகு இயல்பாக கேட்டாள்.

“ரெண்டு பேரும் ஜி.ஹெச்.ல இப்பவோ… அப்பவோ…ன்னு… கெடக்கறானுக!..  உயிர் ஊசலாடிட்டு இருக்கு!.. எந்த நேரமும் நியூஸ் வரலாம்.” என்றவன் பக்கத்தில் வந்த இன்னொரு மாணவன், “டேய்… நாங்கெல்லாம் மலர் வளையம் வாங்க அமௌண்ட் கலெக்ட் பண்ணிட்டிருக்கோம்… நீயும் காண்ட்ரிப்யூட் பண்றியா?” கேட்டான்.

வித்யாவின் முகத்தில் வெற்றிப் புன்னகை. கோமதியின் முகத்தில் வண்டி வண்டியாய் கிலி.

“ஏய்… வித்யா!… எனக்கு பயமா இருக்குடி!… நான் வீட்டுக்கு போறேன். இந்த அமளியெல்லாம் ஓய்ந்த பிறகுதான் காலேஜுக்கு வரப் போறேன்” திரும்பி போக எத்தனித்தவளை நிறுத்தினாள் வித்யா,

“ஏண்டி இப்படி பயந்து சாகுற?… உன்னை யாரு என்ன பண்ணப் போறாங்க?” சாதாரணமாகச் சொன்னாள் வித்யா.

“ஐயோ… எனக்கு இந்த அடிதடி சமாச்சாரம் எல்லாம் அலர்ஜி சாமி… ரத்தத்தை பார்த்தாலே மயக்கம் போடற பொம்பளை சாதிடி நான்!… வித்யா… வாடி போயிடலாம்!” வித்யாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.

“அடச்சீ… நீ வேணா அப்படி இருந்துக்கோ… அதுக்காக பொம்பளை சாதியை மொத்தமா அப்படின்னு சொல்லாதே!” வலுக்கட்டாயமாய் அவள் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டாள் வித்யா.

“என்னடி… என்னடி பண்ண முடியும் நம்மால?… மீறிப் போனா மூலைல உட்கார்ந்து அழத்தான் முடியும்” கோபமே வந்து விட்டது அந்த கோமதிக்கு.

“என்னது எ…ன்..ன செய்ய முடியுமா?… ஏய்… ஒரு பொம்பளை நினைச்சா என்ன வேணாலும் செய்யலாம் தெரிஞ்சுக்க!… சுண்டெலியை டைனோசராக்கலாம்!… டைனோசரைச் சுண்டெலியாக்கலாம்!”

“ஆஹா… ஆஹா… வாயில சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கு!… பிராக்டிக்கலா வாய்ப்பேயில்லை ராஜா”

“இருக்குன்னு  ப்ரூஃப்  பண்ணிட்டா?” ஆவேசமாய்க்  கேட்ட வித்யாவை வித்தியாசமாய் பார்த்த கோமதி, “ஏய் இப்ப நீ என்ன சொல்ல வர்றே?” தாழந்த குரலில் கேட்டாள்.

“அதை இங்கே சொல்ல முடியாது கொஞ்சம் அப்படித் தனியா வா” என்று சொல்லி கோமதியை வேறொரு மரத்தடிக்கு அழைத்துச் சென்று, அந்த இருவருக்குள்ளும் தான் நடத்திய நாடகத்தை ஆரம்பத்தில் இருந்து விலாவாரியாக சொன்னாள் வித்யா.

எச்சிலைக் கூட்டி விழுங்கிய கோமதி,  “அடிப்பாவி  நீ சொல்றதெல்லாம்  நிஜமா?.. ”

“யெஸ்!… அன்னிக்கு நீ என்ன சொன்னே?… மனிதப் பிறவி எடுத்தா இந்த சிவா மாதிரி எடுக்கணும் இல்லைனா… ஒரு நாயாகவோ… கழுதையாகவோ… பிறந்துட்டுப் போகணும்னு தானே சொன்னே?… இப்ப என்ன தோணுது….?” தலையை மேலும், கீழும் ஆட்டியபடி கேட்டாள் வித்யா.

“அடிப்பாவி… அதுக்காக சந்தோஷமா இருந்த ரெண்டு பேரை இப்படி சாவு முனைக்குக் கொண்டு போய் விட்டுட்டியே?” அங்கலாய்த்தாள் கோமதி.

பதில் பேசாது விஷமமாய் சிரித்த வித்யாவின் தோளைத் தொட்டு,  “வித்யா…. சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கறதுதான்…னு சொல்லுவாங்க!… ஆனா நீ என்னடா அதை மாத்தி… சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம்…  சந்தோஷமா இருக்கறவங்களை துன்பப்படுத்திப் பார்க்கிறதுதான்”னு ஆக்கிட்டே!… ம்ஹும்…இது சரியில்லை!.. இதுக்குப் பேரு சாடிஸம்”

“தட் இஸ் வித்யா” சொடுக்குப் போட்டுச் சொல்லி விட்டு கேட்டை நோக்கி நடந்தவளை, பின் தொடர்ந்து வந்த கோமதி, “ஏய் நில்லுடி… எங்கடி வெளியில் போறே?… வகுப்புக்கு வரலையா?… இன்னைக்கு முக்கியமான டெஸ்ட் இருக்கு ஞாபமில்லையா?”

“அதை விட முக்கியமான வேலை வெளியே இருக்கு” என்றாள் வித்யா அலட்சியமாக முடியைப் பின்னுக்கு தள்ளியபடி,

“அதென்ன அப்படி முக்கியமான வேலை?”

“ஜி ஹெச்.ல சாகக் கிடக்கிற ரெண்டு பேரையும் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வர வேண்டாமா?” உதட்டைச் சுழித்துக் கொண்டு கேட்ட வித்யாவை

எரித்து விடுவது போல் பார்த்த கோமதி,  “ச்சீய்ய்… நீ ஒரு பொம்பளையான்னே எனக்கு சந்தேகமா இருக்கு… குழந்தையையும் கிள்ளி விட்டுட்டு… தொட்டிலையும் ஆட்டி விடறியா?…”. என்றாள் கடுங்கோபத்துடன்.

“என்ன சொன்னே?… பொம்பளையான்னு சந்தேகமாயிருக்கா?… அதுக்கு எவிடென்ஸ் இருக்கு… காட்டட்டுமா?” கேட்டு விட்டுச் சிரித்தாள் வித்யா.

 அவளது டைமிங் ஜோக்கில் தனது கோபத்தை மறந்து ”பக்”கென்று சிரித்து விட்ட கோமதி,  “சரி நானும் உன் கூட ஜிஹெச் வர்றேன்” என்றாள்.

 “ஓகே வித் ப்ளஷர்”

****

 ஜி. ஹெச்.

காம்பவுண்டுக்குள் நுழையும் போதே அசூசையான வாடை வரவேற்றது. சோக முகத்துடன் பலரும், இறுக்க முகத்துடன் சிலரும் ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தனர்.

“இந்த நாத்தத்துல இருந்தா… ஏற்கனவே இருக்கிற வியாதி ஜாஸ்தி தான் ஆகுமே தவிர குணமாகறதுக்கு வாய்ப்பே இல்லை” என்றாள் வித்யா.

“அங்க பாரு… நம்ம ஸ்டூடண்ட்ஸ் மாதிரி தெரியுது”

கோமதி காட்டிய திசையில், நான்கைந்து மாணவர்கள், மரத்தடியின் நின்று புகைவிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை  நெருங்கி மெல்ல  விசாரித்தாள் வித்யா. “சிவா… எந்த பில்டிங்ல…?”

“என்னது சிவாவா”?… ஏம்மா அவன் பெரிய மில் ஓனர் மகன்!… இந்த மாதிரி கவர்ண்மெண்ட் ஆஸ்பத்திரிக்கெல்லாம் அவன் வருவானா?… நேத்திக்கே அவனை பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு மாத்தியாச்சு” புகையையும் வார்த்தைகளையும் ஒன்றாக வெளியே விட்டான் அவன்.

“அப்படியா?…. அப்ப கராத்தே மாதவன்…?”

“அவன் இங்கதான் கிடக்கிறான்!… எமர்ஜென்சியில!… போய் பாருங்க”

எமர்ஜென்சியை நோக்கி நடந்தார்கள் வித்யாவும், கோமதியும். மங்கிப் போன வெள்ளை யூனிஃபார்மில் இருந்த ஆஸ்பத்திரி சிப்பந்தி கத்திக் கொண்டிருந்தான்.

“இப்படி ஆளாளுக்கு வந்து தொந்தரவு பண்ணுனா எப்படி?… பேஷண்டை யாரும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தான் எமர்ஜென்சி ரூம்ல வெச்சிருக்காங்க!…. நீங்க என்னடான்னா வரிசையா ஊர்வலம் போற மாதிரி போய்ப் பார்த்துட்டு வர்றீங்களே?”

அந்த ஏரியாவின் நாட்டாமையல்லவா அவன்?

கண் ஜாடை காட்டி அவனை தனியே அழைத்து நூறு ரூபாய் நோட்டை கண்ணெதிரில் ஆட்டினாள் வித்யா. அவனுக்கு வாயெல்லாம் பல். அன்று மாலை வாங்கப் போகும் குவாட்டர் பாட்டில் இப்போதே கண்களுக்குத் தெரிந்தது.

“வழி விடுங்கப்பா… வழி விடுங்கப்பா” என்று எல்லோரையும் விலகச் செய்து அவர்கள் இருவரையும் எமர்ஜென்சி ரூமுக்குள் அனுப்பி வைத்தான் அந்த சின்ஸியர் சிகாமணி.

கட்டிலில் படுத்து கிடந்த கராத்தே மாதவனுக்கு சுயநினைவு இருந்தது. நெஞ்சிலும் வயிற்றிலும் ரத்தக்கறையுடன்  கூடிய  பெரிய பெரிய பேண்டேஜ்கள். முகத்தில் கையில் காலில் என எல்லா பகுதிகளிலும் சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்கள்.  முகத்தில் வாங்கிய குத்துக்கள் அவன் முகத்தை வீங்கச் செய்திருந்தன.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 5) – கற்பக அருணா

    நினைச்சது ரெண்டு (சிறுகதை) – Writer Susri, Chennai