in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 3) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1    பகுதி 2

ழுந்து நடந்த வித்யாவின் பின்னாடியே வந்த கோமதி, “வித்யா!… ஒன் மினிட்” என்று சொல்லி அவளை நிறுத்தினாள்.

நின்றவளின் அருகில் சென்று, “ஏய்… வித்யா… நீ இன்னும் அப்படியேதான் இருக்கியா?… இல்ல… மாறிட்டியா?” கேட்டாள்.

“நீ… எதைக் கேட்கறே?”

“உன்னோட அந்தக் குணம்?”

“அது பிறப்பிலேயே வந்தது!… மாறவே மாறாது!” விறைப்பாய் சொல்லி விட்டு வேகமாய் வெளியேறினாள் வித்யா.

வீட்டிற்குள் திரும்பிய கோமதி அம்மாவின் கையில் இருந்த அந்த இன்விடேஷனை வாங்கிப் பார்த்தாள். “மணமகன். திருநிறைச்செல்வன். இரா. சுந்தரராமன். பிகாம்” என்றிருந்தது.

“ஐயோ பாவம்!… இந்த சுந்தரராமன் யாரு பெத்த பிள்ளையோ?” என்ற கோமதியை வினோதமாய்ப் பார்த்தாள் அவள் தாய்.

“ஏண்டி… அப்படிச் சொல்ற?”

“அம்மா உனக்கு இந்த வித்யாவை பற்றித் தெரியாது!… பொம்பளை பிரகாஷ்ராஜ்”

“என்னடி சொல்ற?… சரியான வில்லியா?”

“இல்லை… இல்லை!… சரியான சாடிஸ்ட்…. அடுத்தவங்களைத் துன்புறுத்தி அவங்க படற கஷ்டத்தைப் பார்த்து ரசிக்கிற குணம் உண்டு அவளுக்கு!” சொல்லி விட்டு தோள்களைக் குலுக்கினாள் கோமதி.

“கடவுளே!… பெண்களிலும் இப்படி உண்டா?” நெஞ்சின் மேல் கையை வைத்தாள் அவள் தாய்.

“ஆனால் அவளோட அந்தக் குணம்.. என்னைத் தவிர யாருக்கும் தெரியாது!… யாருக்கும் தெரியாமல் துஷ்ட காரியங்களை செஞ்சிட்டு… அதனால் பாதிக்கப்பட்டவங்களுக்கு நல்லவளாட்டம் போய் ஆறுதல் சொல்லுவா!… சமயத்துல உதவியும் கூட செய்வா!… ஆனால் என் ஒருத்திகிட்ட மட்டும் மறைவில்தான் தான் செஞ்ச காரியங்களைச் சொல்லுவா” என்று கோமதி சொல்ல,

“அய்யடா… வேண்டாம்மா… உனக்கு இந்த மாதிரி பொண்ணுங்க சகவாசம் வேண்டவே வேண்டாம்மா” பயந்தாள் தாய்.

 “ம்மா… அந்த ஒரு குணம்தான் அவகிட்ட மைனஸ்!… மத்தபடி அவ ரொம்ப நல்லவம்மா”

 “அப்படின்னா… சில சமயங்களில் மட்டும் கிறுக்கு புடிச்சிக்குது… அப்படித்தானே?”

“ஆமாம்!… அதேதான் ஒரு தடவை அவ செஞ்ச காரியத்தை நினைச்சா இப்ப கூட உடம்பே நடுங்குது!” சொல்லி விட்டு உடம்பை ஒரு தரம் சிலிர்த்துக் கொண்டாள் கோமதி.

 “அப்படி என்ன செஞ்சா?” தாய் ஆர்வமாய்க் கேட்க,

 உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள் கோமதி.

****

அந்த கோ-எஜுகேஷன் கல்லூரி முன் வந்து நின்ற டவுன் பஸ்,  ‘பொல…பொல’வென பட்டாம்பூச்சிகளை உதிர்த்து விட்டு செல்வது போல் மாணவிகளை இறக்கி விட்டுச் சென்றது.

சுடிதார்களில், மிடிகளில், ஜீன்ஸ் பனியன்களில், என ஆரணங்குகள் அழகோவியமாய் நடை பழக, கல்லூரி வாசலில் அந்த பெண் தேவதைகளின் தரிசனத்திற்காகவே காத்துக் கிடந்த ஆடவர் கூட்டம், வைத்த கண் வாங்காமல்… திறந்த வாய் மூடாமல்… பார்த்துப் பார்த்து வழிந்து கொண்டிருந்தனர்.

“அடடா… அடடா…. இதைப் பார்க்கறதா?… அதைப் பார்க்கறதா?…. ஒண்ணுமே புரியலையே” ஒரு ஜொள் மாணவன் வாய் விட்டுப் புலம்ப,

“கஞ்சம் பிடிச்ச கடவுள்… ரெண்டு கண்களை மட்டும் குடுத்திட்டான்… இன்னும் பத்து கண்களைக் குடுத்திருந்தா… எல்லாக் கண்களிலும் இந்த தேவதைகளைப் பார்த்துப் பார்த்து ரசித்திருப்போமே?” இன்னொரு மாணவன் ஆண்டவன் படைப்பிலேயே குறை கண்டுபிடித்தான்.

சரேலென்று அந்த பெண்கள் கூட்டத்திற்குள் புகுந்து, சிட்டுக்களை உரசிக் கொண்டு, ஸ்டைலாக  பறந்து  சென்றது  அந்த  பல்ஸர் பைக்.

“ஹும்… மனிதப் பிறவி எடுத்தா இவனை மாதிரி எடுக்கணும்… இல்லையா ஒரு நாயாகவோ… கழுதையாகவோ… பிறந்திட்டு போயிடணும்!” என்றாள் கோமதி தன்னை கடந்து சென்ற அந்த பைக்காரனை பார்த்து.

“ஏன்?.. ஏன் அப்படி சொல்றே?” கேட்டாள் வித்யா.

“பின்னே?… இந்த சிவா பெரிய பணக்கார வீட்டுக்கு ஒரே பிள்ளை!.. நாலு மில்லு… ஒரு மினரல் வாட்டர் யூனிட்…. தியேட்டர்…. எக்ஸெக்ட்ரா…. எக்ஸெக்ட்ரா…!… எல்லாத்துக்கும் இவன் ஒருத்தனே வாரிசு!… ஆளும் பார்க்க ஹீரோ கணக்கா இருக்கான்!… நம்ம காலேஜ்ல நிறைய கேர்ள்ஸ் இவனைக் கொக்கி  போட்டு ட்ரை பண்ணிட்டு இருக்காளுக!… இந்த விலாங்கு மீன்  எவ  வலையிலுமே சிக்க  மாட்டேங்குது!”

“ஓஹோ… அத்தனை பெரிய அப்பாடக்கரா இவன்?”

யோசனையுடன் கேட்ட வித்யா ஒரு அரசாங்க அதிகாரியின் மகள்.  அடிக்கடி ஏற்படும் இடமாற்றமும், கல்லூரி மாற்றமும், அவளுக்கு பழகிப் போனவொன்று. இந்த கல்லூரிக்குள் நுழைந்து ஒரு வாரமே ஆனதால் அவளுக்கு  பல  விஷயங்களை  புதுத்தோழி  கோமதியே  சொல்லித்  தர  வேண்டியிருந்தது.

வகுப்பில் லெக்சரர் கத்திக் கொண்டிருக்க, வித்யாவின் நினைவு முழுவதும் அந்த சிவாவையை சுற்றிச் சுற்றி வந்தது.

“ஓஹோ இவன்தான் இந்தக் கல்லூரி கன்னிகளின் கனவுக் கண்ணனா?”

அவளுக்குள் அந்த அமிலக் குடுவை உடைந்து, மனதின் சுவரெங்கும் விகாரம் ஒட்டிக் கொண்டது.

“விடக் கூடாது!… அதெப்படி அவன் சந்தோஷமா இருக்கலாம்?… அவன் சந்தோஷ வாழ்க்கையை இனியும் தொடர விடக் கூடாது”

“என்ன செய்யலாம்?… எப்படி அவன் சந்தோஷத்தை சிதறடிக்கலாம்?” தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தாள்.

சட்டென்று அவளுக்குள் மாதவன் நினைவு வந்தது. முந்தின நாள் மாலை, கோமதி அறிமுகப்படுத்திய அந்த மாதவன் அதே கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவன். கராத்தே வீரன். கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் கராத்தே டோர்ணமெண்ட்களில் மாவட்ட, மாநில அளவில் முதலிடம் வகிப்பவன்.

“இந்த மாதவனையும், அந்த சிவாவையும் மோத விட்டால் என்ன?”

அவள் கண்களில் குருரம் மின்னியது. அன்று மாலையே தன் எண்ணத்தை செயல்படுத்த துவங்கினாள் வித்யா.

“கோமதி நீ வேணா கிளம்பு!… எனக்கு லைப்ரரில கொஞ்சம் வேலை இருக்கு” என்றாள் வித்யா.

அவளை ஆச்சரியமாய் பார்த்த கோமதி, “என்னது லைப்ரரியில் வேலையா?… என்னடி?… என்ன ஆச்சு உனக்கு?. வா வான்னு கூப்பிட்ட போதெல்லாம் லைப்ரரி பக்கமே வரமாட்டேன்னு ஆணித்தரமாய்ச் சொல்லுவே… இப்ப என்னடான்னா நீயே லைப்ரரில வேலைங்கறே” கேட்டாள்.

“வந்து… ஒரு அசைன்மெண்ட்டுக்காக ரெண்டு மூணு புக்ஸ் தேட வேண்டியிருக்கு” என்றாள் வித்யா பொய்யாக.

“அடடே… இன்னிக்குன்னு பார்த்து எனக்கும் கொஞ்சம் வீட்ல வேலை இருக்கு!… இல்லைன்னா நானும் உன் கூட இருப்பேன்” என்றாள் கோமதி நிஜமாக.

“நோ ப்ராப்ளம்!… நீ புறப்படு” என்று சொல்லி கோமதியை அங்கிருந்து அனுப்பி விட்டு, நேரே ஸ்போர்ட்ஸ் ஹாலுக்குச் சென்றாள் வித்யா.

வெறும் ஜட்டி பனியனுடன் எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அவளின் திடீர் வருகையால் அதிர்ச்சியுற்று, அவசர அவசரமாக தங்கள் வியர்வை பாடியை துண்டால் மறைக்க முயன்றனர்.

அவர்களை சிறிதும் சட்டை செய்யாமல் நடந்து, ஹாலின் கடைசிப் பகுதிக்குச் சென்று, நான்கைந்து மாணவர்களுடன் கராத்தே பிராக்டிஸில் ஈடுபட்டிருந்த மாதவன் அருகில் நின்றாள்.

முகத்தில் கேள்விக்குறியுடன் அவளை திரும்பிப் பார்த்தான் மாதவன். அவளோ அவனுடைய உடலின் கம்பீரத்தை பார்வையால் அளந்தாள்.

தன் பயிற்சியைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டு அவளிடம் வந்து,  “என்னங்க இந்தப் பக்கம்?… இது ஜென்ட்ஸ் ஏரியாவாச்சே?” சிரித்தபடி கேட்டான் மாதவன்.

“நீங்க பிராக்டீஸ் பண்றதை… ஜஸ்ட்…. வேடிக்கை பார்க்க வந்தேன்”

“உங்களுக்கு கராத்தேல இன்ட்ரஸ்ட் உண்டா?” மாதவன் கேட்க,

“கராத்தேயில்….ன்னு சொல்றத விட கராத்தே பண்ற ஆளு மேல இன்ட்ரஸ்ட் உண்டு” வசீகரப் புன்னகையுடன் அவள் சொல்ல, புரியாதவனாய் அவளை உற்று நோக்கினான் மாதவன்.

“யெஸ்!…  உங்க மேல இன்ட்ரஸ்ட் உண்டு” ‘வெடுக்’கென்று சொல்லி விட்டு, தள்ளிப் போய் நின்று கொண்டாள் வித்யா.

மீண்டும் தன் பிராக்டீஸிற்க்குத் திரும்பிய மாதவன், தனக்குள் ஒரு வித ரசாயன மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான்.

“என் மேல் இன்ட்ரஸ்டா?…. அப்படின்னா…?” மனதிற்குள் அந்த கேள்வி திரும்பத் திரும்ப வந்து ஒரு சந்தோஷம் பூக்கச் செய்ய, முன்னை விட ஆர்வமாய்…. முன்னைவிட…. வேகமாய் பிராக்டீஸ் செய்தான்.

அரை மணி நேரம், அவளது விஸ்கி பார்வையால் நனைக்கப்பட்டதில் அந்த கராத்தே வீரன் சரண்டர் ஆனான்.  பிராக்டிஸ் முடிந்ததும் அவனுடன் பேசிக் கொண்டே வெளியே வந்தவள்,  “ஓகே மாதவன்!… நான் கிளம்புறேன்… நாளைக்கு பார்க்கலாம்” என்றாள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நேரம் நல்ல நேரம் ❤ (சிறுகதை) – Writer Susri, Chennai

    டாக்டர் சதீஷ் (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி