in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 2) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1

2016-ம் வருடம்.

அந்தப் பள்ளிக் கூடத்தின் நிர்வாக உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வடநாட்டைச் சேர்ந்தவர்களானதால், அப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் ஹோலிப்பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.

மாணவ, மாணவிகள் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவிக் கொண்டும், வண்ணம் கலந்த நீரினை குடுவையில் அடைத்து சக மாணவ, மாணவியர் மீது பீய்ச்சியும் மகிழ்வர்.

மறுநாள் நடைபெறவுள்ள அந்தக் கொண்டாட்டத்திற்காக அவள் வண்ண நீர்க் குடுவையைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.  அதில் வண்ண நீரை நிறைக்கும் போது தன் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தையும் கொஞ்சம் கலந்து விட்டாள்.

“இதை அந்த சுரேஷ் கண்ணில் அடித்து விட்டால் போதும்… அவன் எக்ஸாமே எழுத முடியாமல் போயிடும்!… அதுக்கப்புறம் அவன் எங்கே ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர்றது?”

“ஏய்… என்னடி பண்ணிட்டிருக்கே?” அவள் தாயார் முதுகிற்குப் பின்னால் நின்று கேட்க,

“நாளைக்கு ஸ்கூல்ல ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம் அதுக்கு கலர்த் தண்ணிக் குடுவை நிரப்பிட்டிருக்கேன்” என்றாள்.

“இந்த வருஷம் நீ பிளஸ்டூ… அதை ஞாபகத்துல வெச்சிட்டு படிக்கற வேலையை மட்டும் பாரு… அதை விட்டுட்டு ஹோலிப் பண்டிகை… காலிப் பண்டிகைன்னு விளையாட்டிலேயே கவனமாயிருக்காதே….” தாயின் கண்டிப்பு.

“ம்மா… அந்த சுரேஷ்தான் இந்த வருஷம் பிளஸ்டூல நாந்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவேன்னு பெருமையா பீத்திக்கிட்டுத் திரியறான்… ஆனா அது நடக்காது” என்றாள் அவள் வெறி கலந்த வார்த்தைகளில்.

“எதை வெச்சுடி… அப்படிச் சொல்றே?”

“நாந்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரப் போறேன்… அதை வெச்சுத்தான் சொல்றேன்” என்றாள்.

“வெறும் வார்த்தைல மட்டும் சொன்னாப் போதாது… செயலிலேயும் காட்டணும்” தாயின் வார்த்தைகளில் நக்கல் தெரிய,

“காட்டறேன்… காட்டறேன்” என்றாள் அவள் கர்ண கடூரமாய்.

மறுநாள், அந்தப் பள்ளி மைதானத்தில் மாணவப் பட்டாம்பூச்சிகள் வித விதமான வண்ணங்களோடு ஹோலியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். துரத்தித் துரத்தி வண்ண நீரைப் பீய்ச்சிக் கொண்டனர்.

அவள் குறி அந்த சுரேஷின் மீது மட்டுமேயிருந்தது.  அவன் எங்கெல்லாம் போகிறானோ அங்கெல்லாம் அவனைத் துரத்திக் கொண்டு மாணவிகள் ஓடினர்.  அம்மாணவிகளில் ஒருத்தியாய் அவளும் இணைந்து கொண்டாள்.

ஒரு கட்டத்தில் அவனை எல்லோருமாய்ச் சேர்ந்து ஒரே அமுக்காய் அமுக்கு தங்கள் குடுவையிலிருந்த வண்ண நீரை அவன் கை… கால்… கழுத்து… முதுகு… நெஞ்சு… என எல்லாப் பகுதிகளிலும் பீய்ச்ச, அவள் மட்டும் அவன் இரு கண்களிலும் அதைப் பீய்ச்சினாள்.

நெருப்பாய் எரியும் கண்களைத் தேய்த்துக் கொண்டு அவன் கத்த, அந்தக் கத்தலை சந்தோஷக் கத்தலாய் நினைத்துக் கொண்டு மற்ற மாணவிகள் தங்கள் குடுவையிலிருந்த வண்ண நீர் தீரும் வரை அடித்து ஓய்ந்தனர். தள்ளிச் சென்று நின்று அவன் துள்ளித் துடித்ததை ரசித்து ஓய்ந்தாள் அவள்.

 2022-ம் வருடம்.

மதிய வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. தார் ரோடு கொதிப்பில் உருகி, போவோர் வருவோர் செருப்பையெல்லாம் “பச்சக்… பச்சக்” கென்று  இழுத்துப் பிடித்தது.

தன் ஸ்கூட்டியை அந்த வீட்டின் முன் நிறுத்திய வித்யா, கேட்டில் தொங்கிக் கொண்டிருந்த “நாய்கள் ஜாக்கிரதை” என்ற போர்டைப் பார்த்துக் கூட சிறிதும் அச்சமில்லாமல் கேட்டை நீக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

“பொள்… பொள்”ளென்று குரைத்தபடி கன்றுக்குட்டி சைஸில் ஒரு நாய் அவளை நோக்கி ஓடி வந்தது. கொஞ்சமும் பயப்படாமல் அப்படியே நின்ற இடத்தில் நின்று  அந்த நாயையே தீர்க்கமாகப் பார்த்தாள்.

சில நிமிடங்களில் அந்தக் கன்றுக்குட்டி சைஸ் நாய் அவளைப் பார்த்துக் குரைப்பதை நிறுத்தி விட்டு, சற்றுத் தள்ளிப் போய் அமைதியாய் நின்று கொண்டது.

நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் பால்கனியிலிருந்து ஒரு குரல் வந்தது.  “சீஸர்… வொய் ஆர் யூ சௌட்டிங்?”

தொடர்ந்து ஒரு டீன் ஏஜ் எட்டிப் பார்த்து, “ஹாய் வித்யா… என்னடி திடீர் விஸிட்?” கேட்க,

“மொதல்ல கீழே வந்து கதவைத் திறந்து விடு” வித்யா எரிச்சலோடு சொன்னாள்.

“வெய்ட் எ மினிட் யா” சொல்லி விட்டு, ‘தட…தட’ வெனக் கீழே ஓடிய அந்த டீன் ஏஜ் யுவதியின் பெயர் கோமதி. வயது உண்மையில்… இருபத்தி மூன்று.  ஆனால், அவள் சொல்வது பத்தொன்பது. படிப்பு பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சைன்ஸ். இன்னும் முடிக்கவில்லை.  கொத்துக் கொத்தாய் அரியர்ஸ்.

கதவு திறக்கப்பட்டதும், ஹாலுக்குள் நுழைந்த வித்யா அசந்து போனாள்… அந்த மாதிரியொரு உயர்தரமான ஹாலை அவள் சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்கிறாள். அந்தக் குடும்பத்தின் செல்வச் செழிப்பின் அளவுகோலாய் அந்த ஹால் இருந்தது. வெயிலில் வறுபட்டு வந்த வித்யாவிற்கு ஏ.ஸி.யின் ஜில்லிப்பு இதமாயிருந்தது.

“உட்கார் வித்யா” கோமதி சோபாவைக் காட்ட, உட்கார்ந்தாள்.  தான் அமர்ந்தது ஒரு சோபாவிலா?… இல்லை மேகத்தின் மீதா என்று சந்தேகமாயிருந்தது வித்யாவிற்கு.  அவ்வளவு மென்மை.  அவ்வளவு குளுமை.

“என்ன கோமதி காலேஜ் படிப்பை முடிச்சிட்டு வெளிய போன கையோட என்னோட ஃப்ரெண்ட்ஷிப்பையெல்லாம் துடைச்செறிஞ்சிட்டே போலிருக்கு!… ஒரு போன் கால் இல்லை… ஒரு மீட்டிங் இல்லை” வித்யா செல்லக் கோபத்தைப் பிரயோகிக்க,

“அய்யய்ய… அப்படியெல்லாம் எதுவுமில்லை!… வீட்ல வேற ஏதேதோ பிராப்ளம்ஸ்… அதான்…” இழுத்தாள் கோமதி.

“வீட்ல ப்ராப்ளம்ஸ்ன்னா… என்ன?… கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்களா?”

“அதுவும்தான்… அது இல்லாம வேற சில பிரச்சினைகளும் இருக்கு”

“சரி…சரி… சமாளிச்சது போதும்!…. இந்தா… இதைப் பிடி மொதல்ல” என்றபடி தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஓரங்களில் மஞ்சள் பூசப்பட்ட ஒரு இன்விடேஷனை எடுத்து கோமதி முன் நீட்டினாள் வித்யா.

“ஹேய்ய்ய்…. வாட் எ சர்ப்ரைஸ்!… என்னடி இது திடீர்ன்னு?” ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்துக் கொண்டு கேட்டாள் கோமதி.

“என்னவா?… பார்த்தா தெரியலை… மேரேஜ் இன்விடேஷன்!… அடுத்த மாசம் ஆறாம் தேதி எனக்கு மேரேஜ்!… இங்கதான் நடக்குது லோக்கல்ல!… அதனால தவறாம வந்திடணும்… ஏதாச்சும் சாக்குப் போக்கு சொல்லி வராமப் போனே?… அப்புரம் உன்னோட மேரேஜுக்கு நான் வர மாட்டேன்”

“கண்டிப்பா வர்றேண்டி” என்ற கோமதி, “ஆனா உண்மையிலேயே பயங்கர சர்ப்ரைஸா இருக்குடி” தலையை இட, வலமாய் வேகமாய் ஆட்டிச் சொன்னாள்.

 “ஏண்டி?… எனக்கெல்லாம் கல்யாணமே ஆகாதுன்னு நெனச்சிடிருந்தியா?”

“பின்னே?… சராசரி பெண்களாட்டம் கல்யாணத்தை பண்ணிக்கிட்டு புருஷனுக்கு தீனியா இருந்துக்கிட்டு… குழந்தைகளை குட்டிகளைப் பெற்றுத் தள்ளிக்கிட்டு… இருக்க மாட்டேன்!… இன்டர்நேஷனல் லெவல்ல பெரிய ஆளாகப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தே!… இப்ப திடீர்னு எல்லார்த்துக்கும் முன்னாடி கல்யாணப் பத்திரிகையை கொண்டு வந்து நீட்டறியே?… என்ன கேரக்டர்டி நீ?…”

“ம்ம்ம்… அது அப்போதைய மனநிலை!… இது இப்போதைய மனநிலை!” என்றாள் வித்யா தலையைச் சாய்த்துக் கொண்டு.

“கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிடும்மா” இடையில் வந்து டிரேயை நீட்டிய பெண்மணி, அநேகமாய் கோமதியின் அம்மாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் வித்யா. காரணம்?.. அதே முகம்!… அதே குரல்.

“நீங்க கோமதியோட அம்மாதானே?” கேட்டபடியே டிரேயிலிருந்து ஒரு டம்ளரை எடுத்தாள் வித்யா.

“ஆமாம்டா… எப்படிக் கண்டுபிடிச்சே?”

“இதுக்காக ஸ்காட்லாண்ட் யார்டுக்குப் போய் டிரெய்னிங் எடுத்திட்டு வரணுமா?… அதான் பார்த்தாலே தெரியுதே?… கோமதிக்கு வயசானா எப்படி இருப்பாள்?ன்னு கற்பனையே பண்ண வேண்டாம்!… உங்களை பார்த்தால் போதும்” சொல்லி விட்டுக்  “கல…கல”வெனச் சிரித்தாள் வித்யா. பதிலுக்கு நளினமாய் புன்னகைத்தாள் கோமதியின் தாய்.

“பாருங்க… பாருங்க… இந்தப் புன்னகை கூட அப்படியே இருக்கு அவகிட்ட” என்றாள் வித்யா.

சிறிது நேரம் கல்லூரி நினைவுகளைப் பரிமாறிவிட்டு, “ஓ.கே… கோமதி நான் கிளம்புறேன்!… கண்டிப்பா மிஸ் பண்ணாம வந்திடணும்!… அம்மா நீங்களும்தான்… குடும்பத்தோட வந்து என்னை ஆசீர்வாதம் பண்ணனும்!”

“சரிம்மா… சரிம்மா!… கண்டிப்பா வந்துடறோம்”

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தரை டிக்கட் (சிறுகதை) – நாகராஜா சுப்ரமணியன், சென்னை

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 5) – ராஜேஸ்வரி