in ,

விதியின் விளையாட்டு ❤ (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

விதியின் விளையாட்டு ❤
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 12)

வாசுகியும், அவள் தங்கை வசுமதியும் மாலை நேர வாக்கிங் சென்று கொண்டிருந்தனர்   

தங்கையைத் திரும்பிப் பார்த்தாள் வாசுகி. வசுமதியின் நடை, ஒரு மெல்லிய பூங்கொடி காற்றில் ஆடுவது போல் இருந்தது

“வசு, ரகுவிடம் பேசுகிறாயா? இந்த விஷயம் அவருக்குத் தெரியுமா?” என வாசுகி கேட்க 

“அவருக்குத் தெரியுமானு எனக்குத் தெரியாது. அவர் அம்மாவும் அப்பாவும் அவருடனே ஆஸ்திரேலியா போய் விட்டனர். ஆனால் அவர் போனில் பேசுவதைப் பார்த்தால், அவருக்கு ஒன்றும் விஷயம் தெரியாதென்று தான் நினைக்கிறேன். எனக்கும் எப்படி சொல்வதென்று  தெரியாமல், ரகுவின் கேள்விகளுக்கு எல்லாம் எஸ் நோ என்று சொல்லிக் கொண்டு இருக்கிறேன்” என்றாள் வசுமதி

“அப்படியே இரு, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று உண்மையை உடைத்து விடாதே” 

“என்ன அக்கா இப்படி சொல்லுகிறாய், உண்மையை எத்தனை நாள் மறைக்க முடியும்?” 

“திருமணம் முடியும்  வரை மாப்பிள்ளை வீட்டாருக்கு  விஷயம் தெரிய வேண்டாம் வசு. பிறகு தெரிந்தால் என்ன செய்யமுடியும்? ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தானே?”

“அப்படி  செய்வது சரியான ஏமாற்று வேலை, என்னால் மனசாட்சிக்கு மாறாக நடக்க முடியாது அக்கா”

“நீ உண்மையை உளறிக் கொட்டி உன் திருமணம் நின்று விட்டால், என்னால் என் மாமியார் வீட்டில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. நம் அண்ணா பிரபாகரனுக்கும் அதே நிலைமை தான். அண்ணி மட்டம் தட்டிப் பேசியே ஆளைக் கொன்று விடுவாள். அதை நினைவில் வை வசு” என வாசுகி தங்கைக்கு அறிவுரை கூறினாள் 

அதற்குள் அவர்கள் வீடு வந்து விட்டிருக்க, பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டார்கள்.

இரவு உணவை முடித்து, தன்னறைக்குள் நுழைந்தாள் வசுமதி. அறைக்கதவைத் தாழிட்டு விட்டு தன் படுக்கையில் வந்து அமர்ந்ததும், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் கண்ணீராக வழிந்தது

எவ்வளவு மோசமான ஒரு நிகழ்ச்சி! எவ்வளவு சந்தோஷமாக  இருந்தாள்! திருஷ்டி மாதிரி ஒரே நாளில் விதி அவள் வாழ்க்கையைப் புரட்டி வீசிவிட்டது.

மூன்று மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் கணினி மென்பொருள் துறையில் வேலை செய்யும் ரகுவிற்கும் வசுமதிக்கும் திருமணம் என பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. மாப்பிள்ளையின் குடும்பம் நல்ல வசதியானவர்கள், மாப்பிள்ளை ரகுவும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான் 

வசுமதியின் அப்பா உறவினர்கள் பொறாமைப்படும்படி நிச்சயதார்த்தமே மிக ஆடம்பரமாக பணத்தை வாரியிறைத்து செய்தார் 

வசுமதி இயற்கையிலேயே மிக அழகான பெண். கம்ப்யூட்டர் பொறியியல் படித்து, நல்ல சம்பளத்தில் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒரு அமெரிக்கன்  கம்பெனியில் பணிபுரிகிறாள். உலகம் முழுவதும் அந்தக் கம்பெனிக்குக் கிளைகள் உண்டு.

அதனால் சுலபமாக அந்தக் கம்பெனி மூலமாக திருமணத்திற்குப் பின் உடனே தன்னுடன் வசுமதியை  அழைத்துச் செல்ல முடிவு செய்தான் ரகு. அதனால் மென்பொருள் துறையில், வேறு சில மொழிகள் படித்து சான்றிதழ்கள் வாங்கினால் நல்லது என்று உபதேசித்து  அவற்றைப் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினான்.

அதனால் கம்பெனி வேலையை முடித்து விட்டு, பின் கிளாசும் முடித்து விட்டு வீட்டிற்கு வரவே இரவு ஒன்பது மணி ஆகிவிடும்.

அப்படி வரும் போது தான் ஒரு நாள், பலத்த மழை பொழிந்தது. கால் டாக்ஸிiiயும் கிடைக்கவில்லை, வெகு நேரம் ஆட்டோவும் வரவில்லை.  கொஞ்ச நேரம் கழித்து ஆட்டோ ஒன்று வந்தது. வழக்கமாக அவளுடன் வரும் நிர்மலா அன்று மட்டம் அடித்து விட்டாள். அதனால்  தனியாகத் தான் வர வேண்டியிருந்தது

இரவில், மழையில் தனியாக வர கொஞ்சம் பயமாக  இருந்தது. சிறிது தொலைவு வந்ததும், ஒரு பெண் கையாட்டி ஆட்டோவில் இடம் கேட்டாள். வசுமதி தான் பாவம் பார்த்தும்,பெண் என்றால் துணையாக இருக்கும் என்றும் ஆட்டோவில் ஏற்றிக் கொள்ளச் சொன்னாள்.

ஆட்டோ வேகமாக செல்ல ஆரம்பித்த பின் தான், இருவரும் கூட்டுக் களவாணிகள் என்பது தெரிந்தது. அதற்குள் காரியம் கை மீறிப் போய்விட்டது. அந்தப் பெண் வசுமதியின் முகத்தை ஒரு கைகுட்டையால் அழுத்த மயக்கமாகி, பெண்மை பறி போய், உடம்பெங்கும் காயங்களோடு காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்

விஷயம் வெளியே தெரியாமல் இருக்க, வசுமதியின் பெற்றோர் பல ஆயிரங்கள் செலவு செய்தனர். ஒரு வாரத்திற்கு முன்பு தான் மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு வந்தாள் வசுமதி 

யாரும் அவளிடம் எந்த கதையையும் கிளறக்கூடாதென்று டாக்டர்கள் வற்புறுத்தியும், வாசுகி பேசிய விதம் அவளுக்கு வருத்தத்தை அளித்தது 

‘இவளை மாமியார் வீட்டில் மதிக்க மாட்டார்கள் என்பதற்காக ரகுவிடம் உண்மையை மறைக்க முடியுமா?  அப்படியே மறைத்தாலும் எத்தனை நாட்களுக்கு? திருமணத்திற்கு பின்னர் குழப்பம் வந்தால் அப்போதும் எல்லோருக்கும் அசிங்கம் தானே, இது தெரியவில்லை அந்த முட்டாளிற்கு’ என மனதிற்குள் தமக்கையை திட்டினாள் வசுமதி

உடனே தன் லேப்டாப்பை எடுத்து, ரகுவிற்கு உண்மையை விளக்கி ஒரு மின்னஞ்சல் அனுப்பினாள். அதன் பிறகு தான் அவளால் அமைதியாகத் தூங்க முடிந்தது

திருமணம் அநேகமாக நின்றுவிடும். இந்த மன நிலையில் திருமணம் நின்றால் கூட நல்லதே  என்று நினைத்தாள்.

தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் ரகுவிடமிருந்து வசுமதிக்குப் அழைப்பு வரும். அதுவும் உருகி உருகிப்  பேசுவான். “உன் குரல் கேட்காத நாட்களெல்லாம் வீணான நாட்களே” என்று கவிதை பாடுவான்

வசுமதியின் மின்னஞ்சல் அனுப்பிய பின், ரகுவிடமிருந்து எந்த செய்தியும் இல்லை, அழைப்பும் இல்லை. ஆனால் அதைப் பற்றி வசுமதி கவலைப்படவில்லை. உண்மையை அவனிடம் கூறிவிட்டதால் நிம்மதியாகவே உணர்ந்தாள் 

புடவைகள், நகைகள் என்று எவ்வளவு கேட்டு வாங்க முடியுமோ அவ்வளவும் வாங்கிக் கொண்டு தன் புக்ககம் திரும்பினாள் வசுமதியின் தமக்கை வாசுகி. அவள் கிளம்பிய பிறகு தான், வசுமதி தன் பெற்றோரிடம் ரகுவிற்கு தான் அனுப்பிய மின்னஞ்சல் பற்றிக் கூறினாள்.

“உண்மையைச் சொன்னால் நல்லது தான்” என்றார் அவளின் அப்பா ராகவன் 

“இப்படி  உண்மையைக் கூறினால் எப்படி இந்தத் திருமணம் நடக்கும்? இந்த காலத்தில் திருமணத்திற்கு முன் எல்லாப் பெண்களுமா தூய்மையாக, உண்மையாக இருக்கிறார்கள்? ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் என்று பெரியவர்களே சொல்லவில்லையா?” என்றாள் அவளின் அம்மா வருத்தத்துடன்

“மற்றவர்களை பற்றி நமக்கு என்னம்மா, நாம் நம்மைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்” என்றாள் வசுமதி காட்டமாக

“லட்சுமி, திருமணம் நடைபெறுவது பெரிய விஷயமில்லை. நடந்த திருமணம் நீடித்து நிலைக்க வேண்டும் அல்லவா? உண்மையை  மறைத்தால் கஷ்டம்” என மனைவியிடம் நிதர்சனத்தை எடுத்துரைத்து, பெருமூச்சு விட்டார் ராகவன்.

த்து நாட்கள் கழித்து, ரகுவின் பெற்றோர், சில உறவினர்களுடனும், ஒரு வக்கீலுடனும் வந்து நிச்சயதார்த்தத்திற்காக எழுதப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டுப் போனார்கள்.

வசுமதியின் மாமா சங்கரன் தான் அவள் அப்பாவிற்கு வலது கை போல் தைரியமாக நின்றார். அவர், அவள் அம்மா லட்சுமியுடன் பிறந்த சகோதரர் தான். அவர் ஒரு  தலித் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் லட்சுமியும், அவர் சகோதர, சகோதரிகளும் அவருடன் பேசுவதில்லை. ஆனால் ராகவன் மட்டும் முற்போக்குக் கொள்கை உள்ளவர்.

சங்கரன் மிகவும் நல்லவர் நாணயமானவர் என்று வாய்க்கு வாய் அவரைப் புகழ்வார். அவர் மேல் உள்ள அளவு கடந்த நம்பிக்கையால், தன் நிலங்களை எல்லாம் சங்கரனிடமே குத்தகைக்கும் விட்டார். ஆனால் லட்சுமி, சங்கரனிடமோ அல்லது அவர் குடும்பத்தினரிடமோ எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை

அது மட்டுமல்ல, சங்கரனின் மகன் வசந்த், அவனுடைய சிறு வயதில் லட்சுமியை “அத்தை” என்று அழைத்ததற்கு, அவனை கண்டபடி திட்டியதுடன் ஜாதியை வைத்தும் ஏளனம் செய்தாள் லட்சுமி

அன்று முதல்  வசந்த்  அவர்கள் திசைக்கே வருவதில்லை. அவன் வசுமதியை விட நான்கு வருடங்கள் பெரியவன். லட்சுமியே தன் சகோதரனை  அலட்சியப்படுத்தியதால், அவள் பிள்ளை பிரபாகரனோ, அல்லது வாசுகியோ மாமாவின் குடும்பத்தை மதிப்பதில்லை.

ஆனால்,  வசுமதிக்கு மட்டும் மாமா சங்கரனையும், அவன் மனைவி கோமதியையும் மிகவும் பிடிக்கும். அப்பா ராகவனுடன், தங்கள்  வயலிற்குப் போகும் போது, வயலின் நடுவில் கம்பீரமாக நிற்கும் மாமாவின் வீட்டிற்கும் போய் வருவாள்

“மாமா… உங்கள் வீடு மிகவும் அழகு” என்றாள் வசுமதி ஓர் நாள்.

“இது உங்கள் வீடு தானம்மா, நான் இருப்பதால் என் வீடாகிவிடாது” என்றார் சங்கரன் சிரித்துக் கொண்டு.

கோமதி கொடுக்கும் வெல்லம் போட்ட பருப்பு பாயசம் வசுமதிக்கு மிகவும் பிடிக்கும். கரண்டியை எடுத்து, அதில் இருக்கும் முந்திரிப் பருப்புகளையும், காய்ந்த திராட்சைகளையும் எடுத்து தன்னுடைய கப்பில் போட்டுக் கொள்வாள். அதைப் பார்த்து எல்லோரும் சிரிப்பார்கள்.

சிறு வயதில் வசந்த், வசுமதியுடன் பேசவே மாட்டான். அத்தை லட்சுமியின் மேல் உள்ள கோபத்தை வசுமதியிடம் தான் காட்டுவான்.  நாளடைவில், அவளது நல்ல குணத்தைக் கண்டு அவளுடன் சகஜமாகப் பேசத் தொடங்கினான்

அவனும் பி.ஈ. மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் முடித்து விட்டு, சர்வீஸ் கமிஷன் மூலம் ரயில்வேயில் அஸிஸ்டென்ட் இஞ்ஜினீயராக நல்ல சம்பளத்தில் சேர்ந்து விட்டான்.

வசுமதியும், அவனும் நல்ல நண்பர்களாகப் பழகினார்கள். தங்கள் அலுவலகப் பணிகளைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும் பேசிச் சிரிப்பார்கள்.

லட்சுமி அத்தை தங்கள் ஜாதியைப் பற்றி ஏதாவது இழிவாகப் பேசி விடுவாள் என்று தான் வசுமதியின் நிச்சயதார்த்தத்திற்கே  வசந்த் போகவில்லை. பின்னால் அவளுக்கு நேர்ந்த கொடுமைப் பற்றியும், அதனால் அவளது திருமணம் நின்றது குறித்தும் மிகவும் வேதனைப்பட்டான்.

வசுமதியின் மருத்துவ விடுப்பு முடிய இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. வேலையில் போய் சேரலாமா, இல்லை ராஜினாமா செய்து விடலாமா என்று முடிவு எடுக்கமுடியாமல் தவித்தாள்.  

‘சங்கரன் மாமாவும், வசந்த்தும் தான் சரியான ஆலோசனை கொடுப்பார்கள். அவர்களிடம் கலந்து பேசித்தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்று நினைத்தாள் வசுமதி 

அவள் அருகில் வந்து ஆதூரமாய் அவள் தலையைத் தடவியபடி, “வசுமதி, என்னம்மா யோசனை?” எனக் கேட்டார் ராகவன் 

“வேலையில் போய் ஜாயின்  பண்ணலாமா, அல்லது ராஜினாமா செய்து விட்டு வேறு வேலை தேடலாமா என்று யோசனையாக இருக்கிறது அப்பா” என்றாள் வசுமதி.

“உனக்கு எப்படி விருப்பமோ, அப்படியே செய் அம்மா. நீ வேலைக்குப் போய் சம்பாதித்துத் தான் ஆகவேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை” என்றார்

“எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, அப்பா. அதனால் சங்கரன் மாமாவுடனும், வஸந்த்துடனும் கலந்து பேசினால் கொஞ்சம் தெளிவாகும் என்று நினைக்கிறேன்” என்றவள் கூற 

“அந்த சங்கரனுக்கு நல்ல புத்தியிருந்தால் தலித் ஜாதியில் போய் விழுவானா? அவனுக்கென்று ஒரு பிள்ளை, அது ஒரு அவதாரம். உன் அண்ணா பிரபாகரனிடமோ அல்லது உன் அக்கா வாசுகியிடமோ யோசனை கேட்கலாமே” என்றாள் லட்சுமி கடுப்பாக 

“உன் மகன் பிரபாகரன் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போனதோடு சரி. அதன் பிறகு ஒரு போன் கூட கிடையாது. உன் பெண்ணைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! சரியான ஸெல்பிஷ்” என்றவள், தொடர்ந்து,”அம்மா, என்னை நாசமாக்கி நடுத்தெருவில் எறிந்துவிட்டுப் போனானே அந்த மிருகம் என்ன ஜாதி என்று உனக்குத் தெரியுமா? நாமெல்லாம் ஜாதி பற்றிப் பேசக் கூடாது, எப்போது பார்த்தாலும் தலித் என்று சொல்லிக் கொண்டு ” என்று கத்தியவள், முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்

லட்சுமியின் முகம் அவமானத்தினால் சிவந்தது. கண்கள் கலங்கின.

“போதும், இனிமேல் யாரும் ஜாதியைப் பற்றியோ, பழைய கதைகள் பற்றியோ பேசக் கூடாது. வசுமதி, நாம் இன்று மாலை உன் மாமா சங்கரனையும், வஸந்தையும் போய் பார்த்து விட்டு வரலாம்.எனக்கும் கொஞ்சம் வயலில் வேலை இருக்கிறது”  என்ற ராகவன், முன்னறை ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டார்

சொன்னது போல் தந்தையுடன் மாமா வீட்டிற்கு சென்றாள் வசுமதி. அலுவலகத்தில் இருந்து வந்து சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, வசுமதி தன் குழப்பத்தை வஸந்த்’திடம் பகிர்ந்தாள் 

“வசு, நீ என்ன தப்பு செய்தாய் தண்டனை  அனுபவிப்பதற்கு? வேலையை விட்டு விட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருப்பது மிகவும் கொடுமை. வேறு கம்பெனிக்குப் போனால் மட்டும் இதெல்லாம் மறைந்து விடுமா? நீ உன் பழைய கம்பெனியிலேயே வேலையில் சேர். இங்கே உனக்கு  உன்னைப் பற்றி அறிந்த நண்பர்கள் அதிகம். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று கவலைப் படாதே, உன் மனசாட்சிப்படி நீ மிக நல்லவள் உத்தமி. அது எனக்கும் தெரியும்” என்றான் வஸந்த். உணர்ச்சிப் பெருக்கில் அவன் குரல் தடுமாறியது.

அவன் குரலில் தெரிந்த உண்மை, வசுமதியின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. வஸந்த்  தன்னை அறியாமல், எல்லோரும் இருப்பதை மறந்தவனாய், வசுமதியின் கண்களைத் துடைத்து, அவள் தோளில் இரு கைகளையும் வைத்து அழுத்தி, “வசு, இனி மேல் உன் கண்களில் கண்ணீர் வரக்கூடாது. நீ அழுததெல்லாம் போதும். உன் சிரிப்பைத் தான் இனி நான் பார்க்க வேண்டும்” என்றவனின் குரல் தழுதழுத்தது

எல்லோரும் பிரமித்து அவர்கள் இருவரையுமே பார்த்தனர். அப்போது தான் வஸந்த் தன் நிலை உணர்ந்து கைகளை விலக்கி, “ஸாரி” என்றான்

ராகவனின் கண்களில் ஏதோ ஓர் ஒளி தெரிந்தது. வசுமதியும் பிரமித்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

அன்று இரவு வசுமதிக்கு உறக்கம் வரவில்லை. வஸந்தின் பரிவான பார்வையும், அவன் அவளுடைய தோள்களை அழுத்திப் பேசிய பேச்சுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவன் மனம் அவளுக்கு புரிவது போல்தான் இருந்தது. ஆனால் அவனைப் பற்றி நினைக்க தனக்கு என்ன தகுதி இருக்கிறது?  இவர்கள் நன்றாக இருக்கும் போது, அவர்களை தலித் என்று ஒதுக்கி வைத்தார்கள். இவர்கள் தன்னிலையில் தாழ்ந்து, வசுமதியின் திருமணமும் நின்ற பிறகு, வசந்த் வாழ்க்கையில் தான் நுழைவது மிகவும் சுயநலமான எண்ணம் என்று நினைத்தாள் வசுமதி.

டுத்த நாள் மருத்துவரிடம் சென்று, பணியில் சேர தகுதிச் சான்றிதழ் பெற்று திரும்பிக் கொண்டிருந்தாள் வசுமதி. பிற்பகல் மணி மூன்று இருக்கும். அப்போது எதிரில் வந்தான் வஸந்த். இவளைப் பார்த்த வசந்த் தன்  மோட்டார் சைக்கிளை அருகில் கொண்டு போய் நிறுத்தினான்.

“வஸந்த், நீ ஆபிஸ் போகவில்லையா?  இந்த நேரத்தில் இங்கே இருக்கிறாய்” எனக் கேட்டாள் தன் கைக்கடிகாரத்தை பார்த்தவாறே 

“இன்று பிற்பகல் தான் அரை நாள் விடுப்பு  எடுத்துக் கொண்டேன் வசு, பிளட்  டோனர்ஸ்  அஸோஸியேஷனிலிருந்து பி பாஸிட்டிவ் குரூப் பிளட் கேட்டு ஆபீஸிற்கு மெயில் வந்தது, அதனால் வந்தேன்” என்றான் 

“நீ இரத்தம் கொடுத்து விட்டு வந்தாயா”? என்றாள் ஆச்சர்யத்துடன்.

“நான் நான்கு வருடமாக அந்த குரூப்பில் மெம்பராக இருக்கிறேன். தலித் குரூப் பிளட் என்றாலும், உடம்பிற்கு தேவையென்றால் ஒத்துக் கொள்ளும்” என்றவன் விளையாட்டாய் கூறி சிரிக்க, வசுமதியின் முகம் சுருங்கி விட்டது

“சாரி வசு, உன்னை ஹர்ட்  பண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. ஏதோ ஒரு ஜாலி மூடில்  சொல்லி விட்டேன், வெரி ஸாரி. எனக்கு ரொம்ப பசிக்கிறது. ஏதாவது ரெஸ்டாரன்டில் சாப்பிட்டு விட்டுப் போகலாமா? ப்ளீஸ், எனக்கு கொஞ்சம் உன்னுடன் பேச வேண்டும்”  என்றான் வஸந்த்

வசுமதி, அவனுடன்  பைக்கில் ஏற, இருவரும் அருகில் இருந்த ஹோட்டலுக்குச் சென்று தனிமையில் அமர்ந்தனர்.

இருவருக்கும் ஆளுக்கொரு மசாலா தோசை, பலூடா என்று வஸந்த் ஆர்டர் செய்து விட்டு “வசு, உனக்கு இது பிடிக்குமா அல்லது வேறு ஆர்டர்  செய்யட்டுமா?” எனக் கேட்டான் 

“வெறும் காபி மட்டும் போதும் வசந்த்” என்றாள் அவள் 

“நீ என்னுடன் முதல் முறை வெளியில் வந்திருக்கிறாய். அதை செலிபிரேட் பண்ணப் போகிறேன்” என  தன் வெண்ணிறப் பற்கள் தெரிய சிரித்தபடி வசந்த் கூற 

“நீங்கள் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னீகளே” என நினைவூட்டினாள் வசுமதி

“நான் நேற்று நம் அம்மா அப்பா எதிரில் உன்னிடம் நடந்து கொண்டதற்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வஸந்த் கூற 

“நேற்றே தான் கேட்டு  விட்டீர்களே” என சிரித்தாள் வசுமதி 

“நான் ஏன் அப்படி செய்தேன் தெரியுமா?” என்றவன் கேள்விக்கு, ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவனே தொடர்ந்தான்.

“நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். உனக்குத் திருமணம் என்ற உடன், நான் மிகவும் நொந்து விட்டேன். இவ்வளவு சுயநலம் பிடித்தவனா என்று நினைக்காதே. இப்போது கூட என் உள்ளத்தை உனக்கு தெரிவிக்காவிட்டால் நான் முட்டாள். நான் நேராகவே கேட்கிறேன், நீ என்னை மணந்து கொள்வாயா? உடனே சொல்ல வேண்டாம், உனக்கு எப்போது தோன்றுகின்றதோ அப்போது சொல் போதும். எவ்வளவு நாட்களானாலும், மாதங்களானாலும் வருடங்களானாலும் நான் உன் பதிலுக்காகக் காத்திருப்பேன்” என்றான் உணர்ச்சியின் மொத்த வடிவமாக

“வஸந்த், நீ என்ன முட்டாளா? நான் உனக்கு மட்டும் அல்ல, இனி யாருக்கும், எப்போதும் பயன்படாத ஒரு பொருள். சேற்றிலே கொட்டிய சந்தனம். இனி திருமண வாழ்க்கைக்கு பயன்படமாட்டேன். உன் அழகிற்கும், அறிவிற்கும் உன் நல்ல குணத்திற்கும் அத்தை மாமாவின் அன்பான மனதிற்கும் நல்ல மனைவி அமைவாள்” என்றாள் அவள் 

“உன் ஆருடம் எனக்கு வேண்டாம். என் மேல் சத்தியமாகச் சொல், என்னைப் பிடிக்குமா பிடிக்காதா? ஒரே வார்த்தையில் சொல்” என்றான் வஸந்த் கண்டிப்பான குரலில்

“பிடிக்கும். இதற்கு முன்பு உன்னுடன் பழகும் போது, பேசும் போது எந்த எண்ணமும் இல்லை. ஆனால் நீ நேற்றுப் பேசிய பேச்சு, என் வாழ்நாள் முழுவதும் அது போதும்” என்ற வசுமதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது

“இவ்வளவு அன்பும், காதலும் என் மேல் வைத்துக் கொண்டு நாம் ஏன் பிரிய வேண்டும்? நம் அம்மா, அப்பாவிடம் சொல்லி உடனே நம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப் போகிறேன்” என வசந்த் கூற 

“வஸந்த், உனக்குப் புரியவில்லை. நான் ஒரு முகம் தெரியாதவனால் பாழடிக்கப்பட்டவள். உன் அம்மாவை என் அம்மா எவ்வளவு கேவலமாகப் பேசி இருக்கிறார்கள். அந்த  ஜாதி வெறிக்குக் கிடைத்த தண்டனை தான் இது. மாதா பிதா செய்த பாவம் மக்களுக்கு இல்லையா?” என்றவள் வருத்தத்துடன் கூற 

“அவர்கள் பழமையில் ஊறியவர்கள், அப்படித் தான் இருப்பார்கள். மேலும் நீ எப்போது பார்த்தாலும் சொல்லுகிறாயே, சேற்றில் கொட்டிய சந்தனம், வேறு ஒருவனால் கெடுக்கப்பட்டவள் என்று, இனி அப்படிச் சொல்லாதே. நீ வேண்டும் என்று பாழ்படவில்லை. பாழாக்கப்பட்டாய், அது விதியின் செயல். உன் மனம் என்றும் புனிதமானது, என் வசுமதி பவித்ரமானவள்” என்றான் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு

வசுமதி ஒன்றும் பதில் சொல்லவில்லை, ஆனால் அவள் கண்கள் கலங்கின. அவன் கைகளில் இருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள். அவனும் தடுக்கவில்லை, அவளுக்கு சற்று அவகாசம் வேண்டுமென உணர்ந்து மௌனம் காத்தான் 

டுத்த நாள், வசுமதி பணியில் சேர்ந்து விட்டாள். இவளுடைய ஸீனியாரிட்டி, சின்சியாரிட்டி இரண்டையும் கருதி, ஆறு மாதம் போல் அமெரிக்கா அனுப்பினார்கள்.

“எனக்கு பதில் சொல்லி விட்டுப் போ” என்று கேட்டான் வஸந்த்.

“என் மனசாட்சிக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது வஸந்த். உனக்கு நல்ல மனைவியும், நல்ல குடும்பமும் வேண்டும்” என்று வாழ்த்தியவள், சிரித்துக் கொண்டே அவனிடம் விடை பெற்று அமெரிக்கா பறந்தாள் 

கடமையில் தன் மனதை அர்ப்பணித்ததால், வசுமதிக்கு ஆறு மாதம் வேகமாக சென்றது. சென்னை விமான நிலையத்தில் இவளை வரவேற்க  வஸந்த் மட்டும் தான் வந்தான். அவள் பெற்றோரோ அல்லது சகோதர, சகோதரியோ வரவில்லை.

“ஏன் வஸந்த், என் அம்மா அப்பா யாரும் ஏர் போர்ட் வரவில்லை? உடம்பு ஏதாவது சரியில்லையா?” என பதட்டத்துடன் வசுமதி கேட்க 

“லக்கேஜ்  நிறைய இருக்கும், இடம் போதாது என்று தான்” எனச் சிரித்தான். முன்பை விட இப்போது நன்றாக இருந்தான்.

வசுமதி அமெரிக்காவில் இருந்த போது ஒருமுறை வஸந்த்திற்குப் போன் செய்து, “எப்போது கல்யாண சாப்பாடு போடப் போகிறாய்?” என்று கேட்டாள்

“பெண் பார்த்து முடிவு செய்து விட்டேன், நீ வந்தவுடன் திருமணம் தான்” என்றான் அவன் 

அதைக் கேட்டதும் அவள் மனம் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தது என்னவோ உண்மை. அந்தத் திருமணம் பற்றிய மகிழ்ச்சி தான் இவன் முகம் இவ்வளவு தெளிவாக இருக்கிறது போலும் என நினைத்துக் கொண்டாள். அவள் மனம் மிகவும் வலித்தது

கார் நேராக வஸந்த்தின் வீட்டிற்கு சென்றது 

வஸந்த், ஏன் எங்கள் வீட்டிற்குப் போகாமல் உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள்?” என்றவளின் கேள்விக்கு பதிலேதும் கூறாமல், சிரித்துக் கொணடே தங்கள் வீட்டினுள் சென்றான் வசந்த் 

ஒரு கட்டிலில் வசுமதியின் அம்மா படுத்துக் கொண்டிருக்க, பக்கத்தில்  நாற்காலியில் அவள் அப்பாவும், மாமாவும் இருந்தனர். வஸந்தின் அம்மா கோமதி அத்தை, இவளைக் கையைப் பிடித்து அழைத்து அரவணைத்துக் கொண்டாள்

“அம்மாவுக்கு என்னாச்சுப்பா? ஏன் ஒரு மாதிரி படுத்து கொண்டு இருக்கிறார்கள்?” என வசுமதி கேட்க 

“உன் அம்மாவுக்கு திடீரென பக்கவாதம் பாதிப்பு வந்துவிட்டது வசுமதி. வாசுகியோ பிரபாகரனோ உடனிருந்து பார்த்துக் கொள்ள முடியாதென்று கூறி விட்டார்கள். ஆனா உன்  மாமா, என்னையும் உங்க அம்மாவையும் இங்க கூட்டிட்டு வந்துட்டார். உன் அத்தை தான் குழந்தை போல் உன் அம்மாவை பார்த்துக் கொள்கிறார்கள்” என அவள் தந்தை கூறி முடித்தார் 

“அத்தை… உங்களின் இந்த உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? எங்கள் அம்மாவை மன்னித்து விட்டீர்களா?” என வசுமதி கேட்க 

“மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். நீ என் மருமகளாய் இந்த வீட்டிற்கு வந்தால் போதும். வஸந்த் உன்னைத் தவிர யாரையும் மனைவியாய் ஏற்றுக்  கொள்ள மாட்டான்” என்றார் கோமதி

“அவன் தான் பெண் பார்த்து விட்டேன், நீ வந்தவுடன் திருமணம் என்றானே?” என வசுமதி விழிக்க 

“நீ தான் அந்தப் பெண் வசு, உன்னைத் தவிர வேறு யார் என் வாழ்க்கையில் நுழைய முடியும்?” என்றவன் கூற, பிரமித்து நின்றவள் அருகில் வந்து மெல்ல அவள் கன்னத்தை தட்டினான் 

“டேய்  வஸந்த், நான் இங்கே தான் இருக்கிறேன்” என்றாள் கோமதி சிரித்துக் கொண்டு.

வசுமதியின் முகம் வெட்கத்தால் சிவந்து, மகிழ்ச்சியால் மலர்ந்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. இந்தக் கருவில் பல கதைகள், பல தொலைக்காட்சித் தொடர்கள் வந்தாலும் இதன் வித்தியாசமான முடிவு ரசிக்க வைத்தது.

டீச்சரின் மெட்டி (சிறுகதை) – ✍ சத்யா GP, நங்கநல்லூர், சென்னை

சிறுகதை விமர்சனப் போட்டி 2021