in ,

டீச்சரின் மெட்டி (சிறுகதை) – ✍ சத்யா GP, நங்கநல்லூர், சென்னை

டீச்சரின் மெட்டி
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 11)

காலை காரியாலயத்திற்கு வந்ததில் இருந்து சர்வேஷுக்கு ஏகப்பட்ட வேலை

பர்சேஸ் பில்கள், சேல்ஸ் இன்வாய்ஸ், இன்வெண்டரி, டெடார்ஸ், க்ரெடிடார்ஸ் என முந்தைய வாரம் மற்றும் மாத நிலவரத்தை சரி பார்த்து ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டியிருந்தது

வங்கி மேலாளர் கேட்டதாக காலையிலேயே வாட்ஸப், மின்னஞ்சல், குறுஞ்செய்தி என சகல தொலைத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி நினைவூட்டி இருந்தார் எம்டி. ஃபோன் செய்தும் துடிக்க விட்டிருந்தார்

அவசர வேலையில் ஆழ்ந்திருந்த போது, வங்கி ரீஜினல் ஆபீஸின் அலைத் தந்தி மேலும் பதற்றத்தைக் கூட்டியது.

“குட் மார்னிங் சர்வேஷ், ஆர்.ஓ’ல இருந்து பரந்தாமன் பேசறேன். ப்ரொவிஷனல் பேலன்ஸ் ஷீட் பார்த்தேன். ஓகே, ஆனா பேங்க் இன்ட்ரஸ்ட் எக்ஸ்பென்ஸஸ்க்கு ப்ரேக் அப், லோன்ஸ் & கேஷ் கிரெடிட் அவுட் ஸ்டாண்டிங்குக்கு தனித்தனியா ப்ரேக் அப், டெடார்ஸ் க்ரெடிடார்ஸ்க்கு பார்டி வைஸ் லிஸ்ட் வேணும். கிரெடிட் ஹெட் ஃபிஃப்டி லேக்ஸ் என்ஹான்ஸ்மெண்ட்க்கு ஓகே சொல்லிட்டார், சீக்கிரமா மெயில் அனுப்புங்க” என்றவர் பதிலை எதிர்பார்க்காமல் இணைப்பைத் துண்டித்து விட்டார்.

எம்டியை “அலை”த்தான் சர்வேஷ்

“அவர் சொல்றதும் அர்ஜென்ட் சர்வேஷ், ஒன் ஹவர்ல மெயில் பண்ணிடுங்க. நான் ஏற்கனவே சொன்னதை எனக்கும், பிரான்ச் மேனேஜருக்கு மெயில் அனுப்பிட்டு, ரெண்டு செட் பிரிண்ட் அவுட் எடுத்து டேபிள்ல வைச்சுடுங்க” என இவரும் பதிலை எதிர்பார்க்காமல் அலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

ஆடிட்டர் ஆபீஸுக்கு ஃபோன் செய்தான் சர்வேஷ்

“கணேஷா, ஒரு ஹெல்ப் டா”

“ஆஃபீஸ் வந்த உடனே போன் அடிக்கிற, என்ன சமாச்சாரம்?”

“மெயில் அனுப்பறேன். என்ன தேவைன்னும் மென்ஷன் செய்யறேன். ரெடி பண்ணி அனுப்பு, அர்ஜென்ட்”

“என்ன வேணும்? சுருக்கமா சொல்லு”

“ப்ரொவிஷனல் பேலன்ஸ் ஷீட்க்கு ப்ரேக் அப் ஷெட்யூல்ஸ்”

“அடேய் அது உங்க வேலை, நீங்க அனுப்பனும். நாங்க சரியா இருக்கான்னு பார்த்துட்டு அட்டெஸ்ட் பண்ணுவோம்”

“ப்ளீஸ் இப்ப நேரமில்லை மச்சி, பேங்க் ரீஜினல் ஆஃபீஸ்ல கேட்கறாங்க”

“இன்ட்ரஸ்ட் ப்ரேக் அப் எடுக்க மாசா மாசம் ஸ்டேட்மென்ட் பார்க்கணும். லோன் ஷெட்யூல் எடுத்து ப்ரின்ஸிபல் அவுட் ஸ்டாண்டிங், ஈ.எம.ஐ’ல இண்டரஸ்ட் போர்ஷன்னு தனித் தனியா எடுக்கணும். உனக்கு மனசாட்சியே இல்லியா?”

“ப்ளீஸ்”

“சரி”

“எம்டி டார்ச்சர். அவங்க அப்பா இருக்கிற போது எப்படி ஸீன் போட்டாப்டி. பிரிண்ட் அவுட்ஸ், மேன்யுவல் ஃபைல்னு இல்லாம டிஜிட்டலா அப்டேட் ஆகுங்கனு, இப்ப  எதுக்கெடுத்தாலும் பிரிண்ட் அவுட்னு உசுர வாங்குறார்”

“அது அப்படித் தான் மாப்ள. உளவியல் ரீதியா பார்த்தோம்னா, ரெண்டு மனுஷங்களோட ஐடியாலஜி கம்ப்ளீட்டா டிஃப்ரண்டா இருக்கும், களமே வெவ்வேறா இருந்தாலும் சில மைண்ட் செட் ஒரே மாதிரி இருக்கும். ஆழமா ஆராய்ந்தா சுவாரசியம் பிடிபடும்”

“உன்னோட திடீர் சைக்காலஜி ஃபோபியால ஸிங் ஆக முடியல, கோச்சுக்காத. இதை சண்டே பஞ்சாயத்துல வெச்சுக்கலாம்” என அழைப்பை துண்டித்தான் சர்வேஷ்

மெயில் அனுப்பி முடித்து, எல்லாம் சரியாகும் வரை சர்வேஷுக்கு இருப்புக் கொள்ளவில்லை. புத்தியளவில் மிகச் சோர்வாக உணர்ந்தான்

வண்டியை அரிஸ்டோ பேக்கரி வெளியே நிறுத்தி உள்ளே நுழைந்து, ஸ்பெஷல் டீ சொல்லி சேரில் அமர்ந்தவன், சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்து ரிலாக்ஸ் செய்யப் போன போது, பக்கத்து இருக்கையில் இருந்த வில்லியம்ஸைப் பார்த்தான்

ஒரு காலத்தில் அடுத்த தெருவில் குடி இருந்தவன், தற்போது பொன்மலையில் வசிக்கிறான். நேரடியாகப் பேசி பல வருடங்களாகி இருக்கும்.

“டேய் வில்லி எப்படி டா இருக்க?”

“சர்வேஷ்‌‌‌ தானே? அடடா, நல்லா இருக்கேன் நீ எப்படி டா இருக்க?” என்றவாறு சேரை இழுத்துப் போட்டு பக்கத்தில் அமர்ந்தான். இடது கையில் இருந்த நெருப்பையும் பகிர்ந்தான்

“நல்லா இருக்கேன். உன் வைஃப், அப்புறம் பையன் ரொனால்டோ எப்படி இருக்கான்?”

“நல்லா இருக்காங்க டா, சின்ன வயசுல அடிக்‌‌‌கடி பார்க்கற மாதிரி இப்போ முடியல பாரேன்”

“ஒரு ஃபேமிலி கெட் டு கெதர் ப்ளான் பண்ணுவோம், கொடைக்கானல் போலாமா?”

“சூப்பர் ஐடியா, செய் டா, இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா?”

“என்ன?”

“பிரேமா அக்கா திருச்சி வந்துட்டாங்க”

“எப்போ? எங்க இருக்காங்க?”

“போன மாசம். காந்தி மார்க்கெட்‌‌‌ல பார்த்தேன்‌‌‌. கருமண்டபத்துல இருக்காங்களாம்.‌‌ போன் நம்பர் தந்தாங்க, அறுந்த வால் எப்படி இருக்கான்னு உன்னையும் விசாரிச்சாங்க”

“நம்பர் தா, காலைல பேசறேன், அம்மா சந்தோஷப்படுவாங்க”

நம்பரை அலைபேசியில் சேமித்துக் கொண்டு புறப்பட்டான். வண்டி முன்னோக்கி நகர நினைவுகள் பின்னோக்கிப் பிரயாணித்தது

கோடை விடுமுறை வந்தாலே, சர்வேஷின் பக்கத்து வீட்டிற்கு ஒரு பெண் வந்து விடுவார்

இரண்டாவது படிக்கும் காலம் தொட்டு அந்தப் பெண்ணைப் பார்க்கிறான். “வா பிரேமா” என்று அம்மா வாஞ்சையுடன் பேசுவார்

பிரேமாவுக்கு குறுமிளகு, எலுமிச்சை சேர்த்த ஊறுகாய் என்றால் இஷ்டம். எப்போது வந்தாலும் வீட்டில் சாப்பிட சொல்லி மறக்காது அம்மா ஊறுகாய் வைப்பார். ஊருக்குத் திரும்பும் போது பெரிய பாட்டிலில் நிரப்பியும் தருவார்.

பக்கத்து வீட்டில், காதலென்னும் கோயில் கட்டி வைத்தேன், தலையைக் குனியும் தாமரையே, மெட்டி ஒலிக் காற்றோடு… இது போன்ற பாடல்கள் விடாமல் ஒலித்தாலே, பிரேமா பெரியப்பா வீட்டிற்கு கோடை விடுமுறைக்கு வந்து விட்டார் என்று உணர்ந்து கொள்ளலாம்.

“படிச்சு முடிச்சு டீச்சர் ஆவேன்” பிரேமா அடிக்கடி சொல்லும் வாக்கியம் இது

பிரேமா, பிரேமா டீச்சர் ஆகிப் போனார். வாய் வலிக்கப் பேசுவார், வருடா வருடம் கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து விடுவார். ப்ளஸ் டூ முடித்தவுடன் பிஎஸ்ஸி கணக்கு

சர்வேஷுக்கு மட்டுமல்ல, வில்லியம்ஸ், நானா, ரகு, கண் சிமிட்டி ஃபாரூக், ரஜினி ஃபாரூக்… எல்லாருக்கும் கணக்கு சப்ஜெக்டில் உள்ள சந்தேகங்களை லீவில் வரும் போது நிவர்த்தி செய்தார் பிரேமா அக்கா

ஆறாம் வகுப்பில் கணக்கில் பாஸ் மார்க் வாங்கத் திணறிய வில்லியம்ஸ் முழுப் பரீட்சையில் அறுபது வாங்கினான். சர்வேஷ் தொண்ணூற்றி ஆறு

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் பிரேமா டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமானது. அம்மா அப்பாவுடன் சர்வேஷும் கல்யாணத்திற்கு சென்று வந்தான். சர்வேஷ் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, பிரேமா டீச்சர் பெரியப்பா வீட்டுக்கு வந்து மாதக் கணக்கில் தங்க ஆரம்பித்தார்

பிரேமா டீச்சர் காலில் புதிதாக மெட்டி. அவர் ராஜா பாடும் ‘மெட்டி ஒலி’ பாட்டைக் கேட்கும் காட்சியை நினைத்தாலே…

கையில் குழந்தை வேறு. பிறர் செவிக்கு எட்டாத விதத்தில் அம்மாவும் டீச்சரும் பேசிக் கொள்வார்கள். நிறைய கோயில்களுக்குப் போய் வந்தார்கள்

சர்வேஷுக்கு எரிச்சலாக இருந்தது. ரோஜா, புதியமுகம், ஜென்டில்மேன், திருடா திருடா என நாம் அப்டேட் ஆன போதும் டீச்சர் மெட்டி ஒலி என்றே இருக்கிறாரே என நினைத்தான்

“புதிய முகம் படத்துல எஸ்.பி.பி பாடின ஜூலை மாதம் வந்தால் பாட்டைக் கேளுங்க டீச்சர், செம மெலடி” ஒரு முறை வீட்டுக்கு வந்த போது சொல்லியும் விட்டான்

“தாயில்லாப் பிள்ளை” என டீச்‌‌‌சர்‌‌‌ குறித்த அங்‌‌‌கலாய்ப்பு அம்மாவிடம்‌‌‌ கூடியது

ஒரு நாள் இரவு, டீச்சரின் அப்பா மாரடைப்பில் காலமானதை லேண்ட் லைன் போன் சொல்ல, மீண்டும் மதுரை பயணம்.

டீச்சர் குழந்தையுடன் வாடி இருந்த காட்சியைக் காண சகிக்கவில்லை. மனம் என்னவெல்லாமோ யோசித்தது. எங்கு தேடியும் டீச்சர் வீட்டுக்காரரைக் காணவில்லை, ஏதோ புரிந்தது போல் இருந்தது சர்வேசுக்கு

சில நாட்களில் டீச்சர் குழந்தையுடன் பெரியப்பா வீட்டுக்கு வந்து விட்டார். பிஎட் படிப்பு, மெட்டி ஒலி பாட்டு என ஆண்டுக்கணக்கில் இருந்தார். மெட்டியோடு டீச்சரைப் பார்க்கும் போது கூடுதல் வசீகரம் இருப்பதாய் மனதுக்குப்பட்டது.

வீடு இருந்த தெருவில் நுழைந்ததும், பழைய நினைவுகளில் இருந்து மீண்டும் சர்வேஷ்

வீட்டுக்குள் நுழைந்த போது மனம் நிதானமாக இருந்தது

உணவின் போது, அம்மாவிடம் டீச்சர் திருச்சி வந்ததை சொன்னான். மனைவி கேள்வியாய் பார்க்க “அவங்களே தான்” என்றான்

“போய் ஒரு எட்டு பார்த்துட்டு வா டா” என அம்மா கூற

“நாளைக்கு ஆஃபீஸ்க்கு லீவ் போட்டுட்டேன், காலைல நீங்களும் போன் பேசுங்கம்மா, பார்த்துட்டு வரேன்” என்றான்

“ஊறுகாய் தரேன். அதை மட்டும் எடுத்துட்டுப் போகாத, கூட ஸ்வீட்டும் வாங்கிட்டுப் போ. ரொம்ப நாள் கழிச்சுப் பாக்கற போது புளிப்பு, உரைப்பு மட்டும் கூடாது” என்றார் அம்மா

முகவரி கண்டுபிடிக்க பெரிய சிரமம் இருக்கவில்லை.  டீச்சர் சரியான லேண்ட் மார்க் சொல்லி இருந்தார், வாட்ஸப்பில் லொகேஷனும் ஷேர் செய்ததால் எளிதாகிப் போனது.

தனி வீடு. வாசல் வராண்டாவில் மொபைலுடன் அமர்ந்திருந்த டீச்சர், சிரித்தபடி வரவேற்றார்

இனிப்பையும், ஊறுகாய் பாட்டிலையும் டீச்சரிடம் தந்துவிட்டு, தயங்கித் தயங்கி பேச ஆரம்பித்தான்

“எப்படி இருக்கீங்க டீச்சர்?”

“நல்லா இருக்கேன் அறுந்த வால், அம்மாகிட்ட பேசினது சந்தோஷமா இருந்துச்சு. நீலாக்கு மெட்ராஸ்ல பெரிய வேலை அமைஞ்சுருக்கு, முன்ன விட அதிக சம்பளம், ஃபார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு சண்டே வருவான். சண்டே ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்னு அம்மாகிட்ட சொல்லு, அதே வீடு தான?”

“ஆமா டீச்சர்”

“வில்லி நம்பர் தந்தானா? ஜூஸ் கொண்டு வரேன் இரு” என்றவர், டிவியை ஆன் செய்து ரிமோட்டை கையில் தந்தார்

வீடு திருத்தமாக பளீச் என்றிருந்தது. வாசலில் துளசி மாடம், நிறைய செடிகள், வராண்டாவில் இரு சேர், டேபிள். ஹாலிலும் பொருட்கள் ஒழுங்கு முறையுடன் இருந்தன.

உள்ளே இருந்த அறையைப் பார்க்க முடிந்தது. அகல் தீபம் ஏற்றி இருந்தது கண்ணுக்கும் மனதுக்கும் இதத்தைத் தந்தது. ஊதுபத்தி, சாம்பிராணி வாசம் நாசிக்கும், புத்திக்கும் மணத்தைத் தந்தன

விளக்கின் மீதான பார்வையை, ஜூஸ் கிளாஸுடன் வந்த டீச்சர் கண்டு கொண்டாள்.

“என்னடா இவ காலைல ஒன்பதரை மணிக்கு விளக்கேத்தி பூஜை செய்யறான்னு பாத்தியா? நைட் யூ டியூப், நெட் ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக் பார்த்துட்டு தூங்க மூணு மணி ஆகிடும். பிரும்ம முஹூர்த்ததுல சாமிக்கு விளக்கேத்தி வைச்சுட்டுப் படுத்துருவேன். காலைல எட்டரை மணிக்கு எழுந்து குளிச்சு பூஜை செய்ய லேட் ஆகுது”

வழமையான சகஜப் பேச்சு அவனை இயல்பாக்கியது.

“சொந்த வீடா டீச்சர்?”

“ஆமாம் பா, நானும் நீலாவும் சேர்ந்து ஹோம்லோன் போட்டோம்”

“டீச்சர் உங்க வேலை?”

“மாறிட்டேன். இப்ப எஸ்.வி.எஸ்’ல ப்ளஸ் ஒன், பிளஸ் டூ ஸ்டூடண்ட்ஸ்க்கு மேத்ஸ் எடுக்கப் போறேன், புது ஜாப்”

பழைய விஷயங்களை எதுவும் கேட்கக் கூடாது என சங்கல்பம் செய்தான் சர்வேஷ்

“உன் பொண்ணு ரமா இப்ப எத்தனாவது? அம்மா சொன்னாங்க மறந்துட்டேன்”

“தேர்ட்”

“குட்”

“ஒம்போது வருஷத்துக்கு இந்த ஸ்கூலை விட்டுப் போகாதீங்க”

“ஏன் சர்வேஷ்?”

“ஆறாவதுல இருந்து ரமாவை எஸ்.வி.எஸ்’ல தான் சேர்க்கலாம்னு இருக்கேன்”

“அட்ரா சக்கை, கண்டிப்பா இருப்பேன்”

டீச்சருக்கு போன் அடித்தது, மெட்டி ஒலி காற்றோடு பாடல் ரிங் டோனாக… “நீலா தான் கூப்பிடுறான், இரு”

பேசி விட்டு சர்வேஷிடம்‌‌‌ போனைத் தந்தாள்.

பரஸ்பர நலம் விசாரித்தல், உத்தியோகம் எல்லாம் பேசி முடித்த பின், “சண்டே ஈவ்னிங் அம்மாவை அழைச்சுட்டு அவசியம் வீட்டுக்கு வாப்பா” என்றான் சர்வேஷ்

கிளம்புகையில், டீச்சர் வேண்டாம் வேண்டாம் என்று மறுதலித்தும், பிடிவாதமாக காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றான்

வெளியே வந்து கணேஷுக்கு போன் அடித்தான். அழைப்பு செகண்ட் லைன் ஆனது.

வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டான். கொஞ்ச நேரத்தில் ஜூலை மாதம் வந்தால்… செல் பாடி அழைத்தது. கணேஷ்!

“நேத்து நீ சொன்னியே உளவியல்… ஐடியலாஜி டிஃபரண்ட்… மைண்ட் செட் எல்லாம்… உண்மை தான்”

“எப்படி சொல்ற?”

“மேத்ஸ் டீச்சர்…”

“அது யாரு டா?” 

“பக்கத்து வீட்ல இருந்தாங்களே”

“பிரேமா டீச்சர்னு சொல்வியே?”

“ஆமா மேத்ஸ் டீச்சர்”

சொல்லும் போது சற்று முன் தரிசித்த டீச்சரின் மெட்டி கண் முன் வந்து போனது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

   

                    

                    

 

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. முடிவில் என்ன சொல்கிறார் என்று புரியாதபடி சொல்லியிருக்கிறார் கதாசிரியர்.

  2. கதை, தலைப்பு:டீச்சரின் மெட்டி,
    கதை ,எண்,11
    கதை ஆசிரியர்:சத்யா GP
    நங்கநல்லூர், சென்னை.
    பிரேமா டீச்சரை பற்றிய கதை.எடுத்துக் கொண்ட கரு அருமை.
    விஸ்வேஷ் நினைப்பதாக பல இடங்களில் ..சிறப்பு.
    அவன் அம்மா கொடுக்கும் ஊறுகாய்.நமது கிராமத்து சொந்தங்களை ஞாபகத்தில் தொட்டு விட்டு நமது அம்மாவையும் அழைத்து வருகிறது நினைவலைகளில்.
    மெட்டி ஒலி பாடல் எதற்காக டீச்சருக்கு பிடிக்கும் ..என்ற சரியான தகவல் சொல்லப்பட வில்லை என்றாலும் ,டீச்சர் ரசனை புரியபடுகிறது .
    பிரம்மாவின் வாழ்க்கை அப்பட்டமாக சொல்லாமல் சொல்லும் காட்சி அமைப்பு நாம் கண்ணிலே காண்பது போல ,சிலர் வாழ்க்கை இப்படிதான் என நம்மை சுற்றி உள்ள சில பெண்களை திரும்பி பார்க்க வைப்பதுடன், நம் பால்ய கால பள்ளி பருவத்தை நினைவூட்டி, கொஞ்ச நேரம் எனது அரசு எலிமெண்ட்ரி ஸ்கூலுக்கு சென்று வந்தேன் எனலாம்
    ஒரு பெண்ணின் மனம் இப்படிதான் .
    ஒரு வாழ்க்கை தனியாக ஒரு குழந்தையுடன் .அப்பெண் கண்டிப்பாக பிறருக்கு புரியாத புதிராகவே இருப்பார்.என்பது போல இக்கதையில் புரியாத விஷயங்கள்.ஆராய்ந்தால் இதுதான் நிதர்சனம்.
    சில புதுக்கவிதை ஒன்றும் புரியாது.அதை போல இக்கதை சட்டென புரியாத மாதிரி சில நிஜங்களை புரிய வைக்கிறது ..மறை முகமாக..
    கதாசிரியருக்கு பாராட்டுக்கள்.
    மேலும் வளர வாழ்த்துக்கள்..இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுத்தியிருககலாம் சட்டென முடிந்து விட்டதோ என்ற ஆதங்கம்.
    பிரேமா டீச்சருடன் இன்னும் கொஞ்ச நேரம் நானும் பயணித்திருப்பேன்.
    பிரேமா டீச்சர் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்.
    இங்கே நம் அருகாமையில் நிறைய்ய பிரேமா டீச்சர்கள் உண்டு.அதெல்லாம் நாம் கண்டு கொள்ள மாட்டோம்.
    கதைகளில் ஏனோ ரசிக்கிறோம்.
    இதுவும் நிஜம்.
    நிஜங்கள் அருகாமையில் நிறைய்ய உண்டு.
    சிறப்பான கதை.கதை ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.நானும் ஒரு எழுத்தாளராக…..சாருதமிழ்.

மனோரா (சிறுகதை) – ✍வித்யசுகி, வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம்

விதியின் விளையாட்டு ❤ (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை