in ,

மனோரா (சிறுகதை) – ✍வித்யசுகி, வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம்

மனோரா
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 10)

ட்டுக்கடங்காமல் இருந்தது கூட்டம்

கை கால் எல்லாம் தனித்தனியா இருக்காமே. தலையும் பாதி தான் இருக்காம், ‌முகமே இல்லையாம். 

“ஏய் தள்ளுங்க, ஒடுதுன்னா பறக்குதும்பீங்க” என கான்ஸ்டபிள் விரட்ட 

“ஏட்டய்யா நாங்க ஒரு வாட்டி பார்த்துட்டு வத்துடறோமே? எங்க கூடவே இருந்தவன் இப்படி போயிட்டானே” என கூட்டத்தில் ஒருவர் வருத்தத்துடன் கூற 

“அதெல்லாப் பேக் பண்ணப்புறம் காட்டுவாங்க போங்க, அங்கே யாரும் போகக் கூடாது” என விரட்டினார் அவர் 

இறந்தவனின் மனைவி ஒரு பக்கம் கதறிக் கொண்டிருந்தாள். 

“இன்ஸ்பெக்டரய்யா வர்றார் தள்ளுங்க” என கூட்டத்தை விலக்கினார் கான்ஸ்டபிள் 

சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் “வெடி வெக்கும் போது இவன் ஏய்யா அங்கப் போனான்?” என கேட்க 

“இவன் தாங்கய்யா குழிப் போடறவன், எப்படி பாதியில வந்து மாட்டிகிட்டான்னு தெரியலை” என்றார் கான்ஸ்டபிள் 

“இவன் பொண்டாட்டியை கூட்டிட்டு வாங்க” எனவும், வாயிலடித்துக் கொண்டு வந்தாள் அந்த பெண் 

48 மணி நேரத்திற்கு முன்…

வெயிலுக்கு ஒதுங்க ஒரு மரம் செடிக் கூட இல்லாத அந்த இடத்தில்,  வியர்வையை வழித்து முந்தானையில் முகத்தைத் துடைத்துக் கொண்டே, ஒரு கையால் சல்லி உடைக்கும் சக்கை கற்களை அருகில் தள்ளிக் கொண்டாள் மனோரா

சிறு ஒற்றை ஓலையை வளைத்து ஒரு கொம்பில் கட்டியிருந்தாள். அந்த குவாரி முழுக்க, ஆங்காங்கே அது போல் ஓலைத் தெரிந்தது.  அந்த இடத்தில், ஒற்றை ஆள் தான் அமர முடியும்

அவள் கணவன் அந்தக் குவாரியிலேயே பாறையை குழிப் போடும் வேலை செய்து வந்தான் 

அந்தக் கம்பெனியின் வெளிப்புறம் இருந்த லைன் வீடுகளில் அவர்கள் குடியிருந்தார்கள். குழந்தைகளுக்கு காலையிலேயே   சாப்பாடு கொடுத்து பள்ளிக்குப் அனுப்பி விட்டு வேலைக்கு வந்து விட்டாள் மனோரா 

கல் உடைக்கும் மலைக்கும் கம்பெனிக்கும் நாலைந்து கிலோ மீட்டர் இருக்கும். காலையில் சல்லி ஏத்த வரும் லாரியில் வந்து விட்டால், மாலை ஆறு மணிக்குத் தான் வீடு திரும்புவார்கள்

அந்த வீடுகளில் பிள்ளைகளைத் தவிர யாரும் இருக்க மாட்டார்கள். ரோட்டுப் பக்கம் வாசல் என்பதால் குழந்தைகளை விட்டு வருவதில் பயம் தான். ஆனால் என்ன செய்ய, பிழைப்பை பார்க்க வேண்டுமே? இங்கு அழைத்து வந்தாலும், இந்த வெயிலில் எங்கே உட்கார வைப்பது? 

எல்லாப் பெண்களின் கைகளும், சுத்தியலைப் பிடித்து பிடித்து காய்த்துப் போய் கல் மாதிரி தான் இருக்கும் 

யூனிட் கணக்கில் உடைத்து குடுப்பதால், யாரும் சுணங்காமல் வேலை செய்வார்கள். ஆண்கள் செக்கை உடைப்பதும், பெண்கள் அதை சல்லியாய் உடைப்பதுமாய், வேலை மும்முரமாய் நடந்தது. ஒருவருடன் ஒருவர் பேசுவது கூட அரிதாக தான் நடந்தது

 மதிய உணவு நேரத்தில், அங்கிருந்த  சிறு குடிசையில் எல்லோரும் ஒன்று சேர்ந்தார்கள்  

“மஞ்சுளா இன்னிக்கு உங்க வூட்டுக்காரன் ஏன் அந்த ஆட்டம் ஆடறான்?” என ஒருத்தி கேட்க 

“ஆங்… அந்தாளுக்கு பணம் வேணுமாம். நேத்து எனக்குத் தெரியாம மேனேஜர்கிட்டப் போய் நூறு ருபா வாங்கி மூத்திரம் பேஞ்சாச்சி, இன்னிக்கு நான் என்னத்தை தர்றது. மளிகை கடைல பாக்கி குடுத்தாத் தான் செலவு தருவாங்க, போன வாரமே தர முடியலை. ஏதோ அந்தக் கடைல தாட்சண்யம் பார்த்து கடன் தர்றாங்க, இப்போவே எட்டாயிரம் சேர்ந்திருச்சி. சீட்டு எடுத்து மொத்தமா தரேன்னு சொல்லியிருக்கேன்” என்றாள் மஞ்சுளா  

“அவ்ளோ சேர்ற வரைக்கும் எப்படி உட்டே?” என மனோரா கேட்க 

“இல்லக்கா அஞ்சாயிரம் பைனான்ஸ், மூணாயிரம் கடை பாக்கி.  பைனான்ஸ் கட்டாம விட்டதால வட்டி ஏறிட்டேப் போகுது” என்றாள் மஞ்சுளா பெருமூச்சுடன் 

“என்னமோ போ, நம்ம பொழப்பு இப்படித் தான் இருக்கு. அப்புறம் நேத்து ராத்திரி காஞ்சான் உருண்டு பொரண்டானே. என்னனு கேட்டா, அவன் பொண்டாட்டியை சந்தேகப்படறான். பாவம் அவ நோஞ்சானாட்டம் இருக்கா, இவனுக்கு இதே பொழப்பு. அதான் தொடப்பைக் கட்டையாலே சாத்துனா அவ நேத்து ராத்திரி” என அங்கிருந்த ஒரு பெண் கூற, எல்லோரும் சிரிக்க,  காஞ்சான் எழுந்து தூரப் போனான். 

“ஏண்டா தம்பி போதைல அடியெல்லாம் ஒண்ணும் உரைச்சிருக்காதே, அப்புறம் எதுக்கு அந்த கத்துக் கத்துன?” என மனோரா சிறு கேலியுடன் கேட்க 

“யக்காவ் நீ என்ன எல்லா வூட்டுக் கதையும் கேக்கறே?  மாமன்நேத்து ராத்திரி அந்த குடைக்காரன் வூட்டுக்கு போனாராமே” என வம்பு பேசி பேச்சை திசை திருப்பினான் காஞ்சான்

“அடேய் எவண்டா சொன்னது? ராத்திரிப் பூரா காச்சல்ல பாடாப் பட்டாரு மனுஷன். நான்தானேடா பத்துப் போட்டு விட்டேன். எந்த நாதாரிடா சொன்னது?” என மனோரா கத்த ஆரம்பிக்க,  அவ்வளவு தான் இவள் வாயை இவளாக மூடினால் தான் உண்டு என்பதை உணர்ந்த மற்றவர்கள், அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினர் 

அதே நேரம், மனோராவின் கணவன் காலை இழுத்துக் கொண்டு வந்து அமர்ந்தான்

“இந்தா இதுல ரெண்டு உருண்ட களி இருக்கு, தின்னுட்டு செத்தப் படுத்துட்டுப் போ.  நான் போறேன்” என சுத்தியலை கையிலெடுத்தவள், மாலை வரை ஓயவில்லை

லாரியில் ஏறி உட்கார்ந்ததும்  “கனகு கடைக்கு நேரா நிறுத்துங்க கொஞ்சம் செலவு வாங்கனும்” என மனோரா கூற 

“த்தா… நீங்க செலவு வாங்கற வரைக்கும் வண்டி நிக்காது, வாங்கறவங்க நடந்து வந்துக்கங்க” என்ற ட்ரைவர், கடை முன் இறக்கி விட்டு கிளம்பினான் 

ஒரு கிலோ மீட்டர் தூரம் பையை தலையில் சுமந்து வந்த மனோரா, சோர்வுடன் அமர்ந்தாள் 

மூன்றாம் வகுப்பு படிக்கும் ஜெயாவும் ஒண்ணாவது படிக்கும் கண்ணனும் ஓடி வந்தார்கள். இருவர் கையிலும் முறுக்கு இருந்தது. 

“டேய் ஏது இது? உங்கப்பன் வந்தாச்சா?” என மனோரா கேட்க 

“இல்லம்மா… கொடைக்கார மாமா குடுத்தார்” என மகன் கூற 

“யார்கிட்டயும் வாங்காதீங்கன்னா கேக்கறதில்ல” என்று மொத்தினாள் மனோரா 

அதைக் கண்டு கொடைக்காரன் மனைவி ஓடி வந்தாள், “வுடுங்கண்ணி உங்கண்ணன் தான வாங்கி குடுத்தாரு. இன்னிக்கு நிறையக் கொடை ரிப்பேருக்கு வந்துச்சாம், அதான் குஷில பெரிய பொட்டலமா வாங்கிட்டு வந்திச்சி, நான் தான் குடுக்கச் சொன்னேன்” என்றாள் அவள் 

முகத்தை திருப்பிக் கொண்டு மனோரா மெளனமாக, “ம்க்கும்”  என கொடைக்காரன் மனைவி கழுத்தை நொடித்தாள் 

“சும்மாவே மெல்றாளுங்க, இப்ப வெத்தலைப் பாக்கு வேற கிடைச்சாச்சு” என மனோரா கூறக் கேட்டதும்,  கொடைக்காரன் பொண்டாட்டிக்கு சுருக்கென்றது

“என்னா அண்ணி, என்னென்னமோ பேசறீங்க?” என்றவள் கேட்க 

“நான் எதுவோ வயித்தெரிச்சல்ல பேசறேன் நீ போ” என்றதோடு எழுந்து உள்ளே சென்றாள் மனோரா 

விடியும் முன்னே  வீட்டில் வேலை எல்லாம் முடித்துக் கொண்டு, எல்லோரும் குவாரிக்கு வந்து சேர்ந்தார்கள். 

“இன்னிக்கு வெடி உண்டு, மதியம் வரை உடைங்க, அப்புறம் வெடிக்கனும்” என்றார் அங்கிருந்த மேற்பார்வையாளர் 

“ஏன் அண்ணா சாயங்காலமா வைங்களேன்?” என மஞ்சுளா கூற 

“இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்கு, நாளைக்கிருந்து மூணு நாளைக்கு திருவிழா ஆச்சே, நேரத்தோட வெக்கணும். இனி மூணு  நாளும் லீவாச்சே” என்றார் அவர் 

“ஆமா திருவிழா…  சாராயம் தான் ஆறா ஓடப் போகுது” என மனோரா கூற 

“ஏய் மனோரா… உம் புருசன்  ஒரு  கேன் சாராயத்தை ஒத்தையாளா குடிச்சாக்கூட ஸ்டெடியா நிப்பான்டி” என அவர்களால் மூத்த பெண் ஒருத்தி கூற 

“ம்க்கும்… இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை” என முகம் திருப்பினாள் மனோரா 

எல்லாம் தயார் செய்வதற்குள் மழை வலுக்க ஆரம்பித்தது, வைத்த வெடி வெடிக்காமல் நின்று போனது

“ச்சே நாளைக்கு வேற வேலைக்கு வரணும்” என சலித்துக் கொண்டே  அனைவரும் வீடு நோக்கி கிளம்பினர் 

குழந்தைகள் பள்ளியில் இருந்து இன்னும் வந்திருக்கவில்லை. மறுநாள் திருவிழாவுக்காக, வீடெல்லாம் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் மனோரா 

“ஏன்க்கா  பதினாறடி வேல் குத்தறாங்களாமே?” என்றபடி மஞ்சுளா வர 

“ஆமாம் மஞ்சுளா, இந்த வருசம் தான்  புதுசா ஏதோ செய்றானுங்க. சாமியா கேக்குது, இவனுங்க  புது புதுசா கண்டுபிடிக்கிறாங்க” என்றாள் மனோரா 

“அதென்னமோ வாஸ்தவம் தான். அது சரி, கறிக்கி சொல்லிட்டீங்களாக்கா?” என மற்றவள் கேட்க 

“ஆமா… உன் புருசன் தான் காசு வாங்கிட்டு போனான்” என்றாள் மனோரா 

றுநாள்  விடியலை அனைவரும் சந்தோசமாய் வரவேற்றார்கள். கறிசோறு, அதோடு திருவிழாவை காணும் ஆனந்தம் வேறு சேர்ந்து கொண்டது 

“மனோரு… நான் போய் வெடி போட்டுட்டு வந்துடறேன்” என கணவன் கிளம்ப 

“ஏய்யா… இன்னிக்கு போயே ஆகணுமா?” என தடுத்தாள் மனோரா 

“அரைமணி நேர வேலைதாண்டி, சுருக்க வந்துருவேன். அதுக்குள்ள கொழம்பு வச்சிடு, அப்புறம் கொஞ்சமா வறுத்து வையேன்” என கோணல் சிரிப்புடன் கூற 

“சரி சரி சீக்கிரம் வா.  இங்கப் பாரு, பாறைக்கு போகும் போதே ஊத்திக்காதே, வீட்டுக்கு வந்தப்புறம் பாத்துக்கலாம்” என்றாள் மனோரா

“ம்…”  என விலகினான் அவன் 

சற்று நேரத்தில், நேர்த்தியாய் உடுத்தி அழகுபடுத்திக் கொண்டு வந்து நின்ற கொடைக்காரன் மனைவி, “அண்ணி… புள்ளைங்களை கோயிலுக்கா கூட்டிட்டு போகட்டா?” எனக் கேட்க 

“வாணாம்… நானே கூட்டியாறேன் நீ போ” என்றாள் மனோரா 

“அம்மா… அத்த கூட போறேம்மா. நீ வர லேட்டாகும்ல, அம்ம்மா ம்மா…” என பிள்ளைகள் கெஞ்சவும் 

“இதுங்களுக்கு என்னா சொன்னாலும் புரியாது, போய்த் தொலைங்க. இந்தாங்க ஏதாச்சும் வாங்கித் தின்னுங்க” என முந்தானையில் முடிந்திருந்த  முடிச்சை அவிழ்த்து, மகளின் கையில் பணத்தைத்  திணிக்க, சந்தோசக் கூச்சலோடு  நகர்ந்தார்கள் பிள்ளைகள் 

சோறுப் பொங்கி குழம்பை கொதிக்க விட்டவள். “இந்தாளுக்கு இது வேற” என தனியாக காரம் கொஞ்சம் தூக்கலாகப் போட்டு கொஞ்சம் கறியை வறுத்தாள் 

“என்ன சொல்லு, என் மனோரு கைப்பக்குவம் யாருக்கும் வராது” எனக் கூறும் கணவனின்  பாராட்டுக்காகவே, ஒவ்வொரு முறையும் சிறிதேனும் வறுத்து வைப்பாள் மனோரா 

வேலை எல்லாம் முடிக்க பணிரெண்டு மணியாக, அதே நேரம் மஞ்சுளா வந்து நின்றாள். 

“அக்கா வாயேன் கோயிலுக்கு போய்ட்டு வரலாம், வேல் குத்தறாங்களாம்” எனவும் 

“அடி இதுங்க ரெண்டும் அந்த கொடைக்காரன் பொண்டாட்டி கூட போச்சிங்க, ஆளையேக் காணும். சரி இரு நானும் வரேன், போய் பார்ப்போம்” என கிளம்பி வந்தாள் மனோரா 

நல்ல சேலைக்கட்டி, பெரிய குங்குமம் வைத்திருந்தாள்

“அக்கா இந்த சிவப்புச் சேலை உனக்கு அழகா இருக்குக்கா” என மஞ்சுளா சிரிப்புடன் கூற 

“ஆங்… அந்தாளு தான் எடுத்தாந்துச்சி. இப்பத் தான் கட்னேன், நெசமாவே அழகா இருக்குதா மஞ்சுளா?” என ஆர்வமாய் கேட்க 

“ஆமாக்கா” என்றாள் மஞ்சுளா 

எதிரில் மகன் வரக் கண்டு, “எங்கடா அக்கா?” என மனோரா கேட்க 

“அம்மா அவ அப்பவே கறி தின்னப் போறேன்னு சொல்லிட்டு வந்துட்டாளேம்மா” என்றான் 

“வரலையேடா, ஒருவேளை அவளோட இருப்பாளோ என்னமோ. இரு வர்றேன், சாமி கும்பிட்டு போலாம், அப்புறம் சாப்பிடுவீங்க” என்றவள், கோயில் அருகில் கற்பூரம் வாங்க சில்லறை எடுக்கவும், காஞ்சான்  ஓடி வந்தான் 

“எக்காவ் எக்கா…” என பதட்டமாய் அவன் அழைக்க 

“என்னாடா?” என்றாள் மனோரா விளங்காமல் 

“எக்கா…  உன் புருஷன் வெடில மாட்டிக்கிடாரு” என மூச்சிரைக்க கூறியவன், கோயில் வாசலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து புரண்டான்

“என்னாடா சொல்றே?” என மனோரா அதிர 

“ஆமாம்… உம் புருசன் வெடில மாட்டி செத்துட்டாரு” என்றான் அவன் 

“ஐயோ… போச்சா எல்லாம் போச்சா” என தலையிலடித்துக் கொண்டு ஓடினாள் மனோரா 

அதற்குள் கம்பெனி மேனேஜர் லாரி வரச் சொல்ல, ஒரு கூட்டமே அதில் ஏறியது

இந்த களேபரத்தில், மகளை சுத்தமாய் மறந்து போனாள் மனோரா 

“யோவ் ஏட்டு அந்தம்மாவை வரச் சொல்லு” எனவும், அழுது கொண்டே வந்து நின்றாள் மனோரா 

“இங்க பாருங்கம்மா, போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சி நாளைக்குத் தான் பாடி கிடைக்கும், நீங்கல்லாம் கிளம்புங்க” என இன்ஸ்பெக்டர் கூற, திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அழுகையுடன் நகர்ந்தாள் 

மீண்டும் லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து கம்பெனியில் விட்டார்கள். திருவிழா நாள், அனைவருக்கும் துக்க நாளாக மாறிப் போனது  

அழுது அழுது  சோர்ந்துப் போனாள் மனோரா 

“அம்மா அக்கா வரவேயில்லை” என்ற மகனின் குரல் அவளுக்கு ஏறவேயில்லை. எல்லாப் பெண்களும் இவளை தேற்றுவதிலேயே கவனம் செலுத்தினார்கள். 

“எப்படி ஆச்சாம்?” என யாரோ கேட்க 

“போகும் போதே புல்லா ஊத்திகிட்டு போயிருக்கான். வெடிக்க போகும் முன்ன வெடி வெடின்னு கத்திட்டு தான வெடிப்பாங்க, இவனும் கத்தியிருக்கான். ஆனா ஓடி வரும் போது குவார்ட்டர் பாட்டில் இடுப்புல இருந்து கீழே விழவும் எடுக்க குனிஞ்சிருக்கான். பழைய வெடி ஒயர் ஏதோ இருந்திருக்கு, கால்ல மாட்டி கவுந்துட்டான். நாங்க கத்தினோம், அதுக்குள்ள வெடிச்சிடுச்சி” என்றார் கூட்டத்தில் ஒருவர் 

“பாவி… சொல்லியனுப்பினேனே. இங்கே வந்து குடிச்சி தொலைச்சிக்கோடான்னேனே, இப்படி பண்ணிட்டு போயிட்டானே” என மனோரா அழ, மற்றவர்கள் தேற்ற வகையறியாது விழித்தனர் 

டு இரவு ஆகியும், ஐனங்கள் கலையாமல் அப்படியே இருந்தார்கள்

“அம்மா அக்கா வரவேயில்லை, நான் மட்டுந்தான் கறித் தின்னேன்” என பிள்ளை கூற, அப்போதும் கூட மனோரா அதை கவனிக்கவில்லை. மஞ்சுளா தான் கவனித்தாள்

“என்னடா சொல்றே?” என பதற்றத்துடன் மஞ்சுளா கேட்க 

“அக்கா வூட்டுக்கு வரவேயில்லை அத்தை” என்றது பிள்ளை மீண்டும் 

“எக்கா பொண்ணு வரவேயில்லையாமே. ஆமா அந்த கொடைக்காரனும் அவன் பொண்டாட்டியும் எங்க?” என மஞ்சுளா கேள்வியெழுப்ப 

“அவங்க சாயங்காலமே ரெடியாகி பஸ் ஏறிப் போனாங்க” என்றான் அங்கிருந்த மற்றொரு ஆள் 

எல்லோரும் அப்பனை மறந்து எட்டு வயது பொண்ணைத் தேட ஆரம்பித்தார்கள். 

கம்பெனியைச் சுற்றி புளிய மரக்காடும் கல் அரைத்த துகளும் குவியல் குவியலாக கிடந்தது. ஆளுக்கொரு டார்ச்சை வைத்து தேடினார்கள் . 

மனோரா ஓடி ஓடி  மரத்தின் பின்னால் எல்லாம் தேடினாள்.  

மஞ்சளாவுக்கு ஏதோ சந்தேகம் வர, “ஆமா மத்தியானமே சாவுன்னு தெரியுமே, கொடைக்காரனும் அவன் பொண்டாட்டியும் வரவேயில்லையே” என்றவள் கேட்க 

“குவாரிகிட்டக் கூட வரலியா?” எனக் கேட்டான் அவள் கணவன் 

“இல்லை மச்சான்” என மஞ்சுளா கூற 

“டேய் காஞ்சான்” என அழைத்தான் மஞ்சுளாவின் கணவன் 

“என்னண்ணா” என்றவன் வர 

அதற்குள், “இங்கப் பார்றா… ஓடியாங்கடா. டேய் பொண்ணு மயக்கமாத் தான் இருக்கு, தூக்குங்க” என யாரோ கத்தும் ஒலி கேட்டது 

அதற்குள் குவாரி ஓனரின் கார் வந்து நிற்கவும், “ஐயா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகனும்” என அங்கிருந்த ஒரு முதியவர் கூற 

“யோவ் இருக்கறது பத்தாதுன்னு இது வேறயா? என்னய்யா ரத்தம் வழியுது” என முதலாளி கேட்ட பின் தான், மற்றவர்கள் அதை கவனித்தார்கள்

நடந்ததை யூகித்ததும், “அடப்பாவிங்களா… என் குழந்தையை சிதைச்சிட்டானுங்களே” என நெஞ்சில் அறைந்து கொண்டு கதறினாள் மனோரா

விரைந்து மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். இரவெல்லாம் தவிப்பில் காத்திருக்க, பொழுதும் விடிந்தது 

மகள் பிழைப்பாளா? போஸ்ட் மார்ட்டம் முடிந்து அப்பனின் உடலை எப்பொழுது தருவார்கள்? என காத்திருந்த வலி நிறைந்த முகங்களை காணவே, பரிதாபமாக இருந்தது    . 

மனோரா மகள் படுக்க வைக்கபட்டிருந்த கட்டிலை விட்டு நகர மறுத்து, அங்கேயே நின்றபடி, மகளின் தலையை தடவிக் கொண்டே இருந்தாள். 

“ரத்தம் நிறைய போயிருக்கு, கொஞ்சம் சேதம் தான். ஆனா பயப்படாதீங்கம்மா, காப்பாத்திடலாம். போலீசுக்கு சொல்லிட்டீங்களா?” என டாக்டர் கேட்க 

“ஐயா போலீசெல்லாம் வேணாங்கய்யா. என் குழந்தையை விசாரணைங்கற பேர்லேயே நோகடிச்சிடுவாங்கய்யா” என மனோரா கூற 

“அதெப்படி ம்மா, நாளைக்கு வழக்கு விசாரணைன்னு வந்தா நாங்க தான பதில் சொல்லணும்” என்றார் டாக்டர் 

முன்னால் வந்த காஞ்சான், “ஐயா இந்த கொழந்தையோட அப்பன் தான் வெடில செத்துப் போனது, இன்னிக்குத் தான் போஸ்ட்மார்டம் பண்ணப் போறாங்க” எனவும், டாக்டரால் எதுவும் பேச இயலவில்லை 

“உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருந்தா சொல்லுங்க, இன்பெக்டர்கிட்ட சொல்லி, பொண்ணை வெளியேக் காட்டாம விசாரிக்கச் சொல்லாம்” என டாக்டர் கூற, ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். 

“கொடைக்காரன்” என்றார் கூட்டத்தில் ஒருவர் 

“யார் அது?” என டாக்டர் கேட்க 

“ஒரு வருசத்துக்கு முன்ன எங்கிருந்தோ வந்தான். இங்கே புறம்போக்கு எடத்துல குடிசைப் போட்டுத் தங்கினான். ஊர் ஊராப் போயி கொடை ரிப்பேர் செய்வான், எங்ககிட்டேயெல்லாம் நல்லாத் தான் பழகுவான். ஆனா மத்தியானமே சாவு நடந்துச்சி, அவன் சாயங்காலம் வரைக்கும் வரவேயில்லை. அதுக்கப்புறம் பஸ் ஏறியிருக்காங்க புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும்” என அவர் கூற 

“சரி விசாரிக்க சொல்லுவோம்” என்றார் டாக்டர் 

“ஐயா, என் புள்ள பொழச்சுக்குவாளா ஐயா?” என கண்ணீருடன் மனோரா கேட்க 

“நாளைக்கு வரைக்கும் ஒண்ணும் சொல்ல முடியாது ம்மா, ரத்தப் போக்கு நிறைய ஏற்பட்டிருக்கு. நாங்க எப்படியும் காப்பாத்த முயற்சி செய்றோம்” என்றார் டாக்டர்  

“ஐயா எம்புருசன் தான் போயிட்டான், என் குழந்தையாவது காப்பாத்தி குடுங்கய்யா” மனோரா கையெடுத்து கும்பிட்டு கேட்க 

“நாங்க கடவுள் இல்லைம்மா, உங்களை மாதிரியான மனுசங்க தான். எங்களால் முடிந்ததை செய்றோம்,  நம்பிக்கை வைங்க” என்றார் டாக்டர் 

மஞ்சளாவை மருத்துவமனையில் விட்டுவிட்டு மற்ற எல்லோரும் சவ அடக்கத்திற்காக வந்து விட்டார்கள்

ஒரு போலீஸ்காரர் வந்து, “கொடைக்காரன் இருந்த வீட்டை காட்டுங்க” எனவும், எதிரில் இருந்த வீட்டுக்கு அழைத்துத் சென்றார் அருகில் இருந்தவர்

வீடு திறந்தே இருந்தது. துணிகளைத் தவிர மீதியெல்லாம் அப்படியே இருந்தது

“எங்க போயிருப்பாங்க?” என தெரியாமல் விழித்தனர் அனைவரும் 

ற்றொரு இரவும் கடந்து, மறுநாள் பொழுதும் புலர்ந்தது  

“பொண்ணு கண் முழிச்சிடுச்சாம், நல்லாயிடுமாம்” என ஊரெல்லாம் இதே பேச்சாக இருந்தது. 

மருத்துவமனை செல்லக் கிளம்பிய மனோராவை அக்கம் பக்கத்தினர் தடுக்க, “இல்ல என் மகளப் பாத்தேயாகணும்” என கிளம்பினாள் அவள் 

அங்கு மருத்துவமனையில், “அத்த… அம்மா எங்க? எனக்கு வயிறு வலிக்குது” என மனோராவின் மகள் அழ, அதைக் கண்டு மஞ்சுளாவும் அழுதாள் 

“பாவிங்க நல்லாயிருப்பானுங்களா? பச்ச மண்ணை இப்படி பண்ணியிருக்கானுங்களே?” என திட்டித் தீர்த்தாள் மஞ்சுளா 

அப்போது அங்கு வந்து சேர்ந்த மனோரா, “மஞ்சளா நீ போய் இவளுக்கு காப்பி வாங்கியா?” என அனுப்பியவள் 

மெல்ல மகளின் தலையை தடவிக் கொடுத்தவாறே, “புளியங்காட்டுக்குள்ள ஏன்டா கண்ணு போன?” எனக் கேட்டாள் 

“அம்மா… அம்மா” எனத் தேம்பியது குழந்தை

“சொல்லு… அழாமச் சொல்லு” என சமாதானம் செய்ய 

“கொடைக்கார மாமா தான் அங்கே நிறைய மயிலிறகு விழுந்திருக்கு எடுத்து தரேன் வான்னுச்சி. அத்தைகிட்ட சொல்லிட்டு வர்றேன்னு சொன்னதுக்கு, கறிக்கொழம்பு சாப்புட்டு வர்றேன்னு சொல்லு, இல்லேன்னா விட மாட்டானு சொன்னுச்சு. அப்புறம்.. அப்பறம்…  அம்மா…” என அடிவயிற்றில் கை வைத்து கத்தினாள் பிள்ளை 

கண்ணீர் வற்றிப் போய், எழுந்து வெளியே வந்தாள் மனோரா  

எதிரில் வந்த மஞ்சுளாவைக் கண்டதும், “மஞ்சுளா புள்ளயப் பார்த்துக்க” என்றவள், பேருந்தில் ஏறினாள்

பேருந்தை விட்டு இறங்கியதுமே, “கொடைக்காரன புடிச்சிட்டாங்க” என்ற தகவல் அவளுக்கு வந்தது 

மறுமடியும் பேருந்தில் ஏறினாள். பின்னாடியே ஓடிவந்து அவளுடன் ஏறினான் காஞ்சான் 

“எக்கா எங்கப் போறே  திரும்பவும்?” என்ற கேள்விக்கு பதில் கூறாது அமைதியாகப் பார்த்தவள், திரும்பி அமர்ந்து கொண்டாள். 

‘கொடுமையே … யாருக்கும் இந்த நெலமை வரக்கூடாது’ என்றெண்ணிக் கொண்டான் காஞ்சான் 

மனோரா பேருந்தை விட்டிறங்கி காவல் நிலையம் நோக்கி நடக்கக் கண்டதும், “எக்கா அங்க எதுக்கு போற? விசாரிக்கறோங்கற பேர்ல புள்ளய நோகடிச்சுடுவாங்க’க்கா” என தடுத்தான் காஞ்சான் 

“நீ போய் மஞ்சுளாவை வீட்டுக்குப் போயிட்டு வரச் சொல்லு, மூணு நாளா அங்கயே இருக்கா பாவம்” என்றாள் மனோரா 

“ஸ்டேசனுக்கு எதுக்குக்கா போறே?” என்றவன் மீண்டும் கேட்க 

“நீ போடா… நான் வர்றேன்” என்றவள், அவன் சென்றதும் அருகில் இருந்த கடையில் ஒரு பிளேடு வாங்கினாள்

பேப்பரை பிரித்து பாதியாய் ப்ளேடை உடைத்து, விரலிடுக்கில் பிடித்துக் கொண்டவள். ஸ்டேசன் வாசலில் நின்றிருந்த போலீசிடம் விவரம் கூறி, கொடைகாரனை  வேண்டுமென்றாள்

“ஏம்மா… அவனைப் பார்த்து என்ன செய்யப் போற?” என கான்ஸ்டபிள் கேட்க 

“ஐயா… அவனை ஒரே ஓரு வார்த்தை கேட்டுட்டு போயிடறேன்” என்றாள் மனோரா 

“இன்ஸ்பெக்டர் கூட இல்லம்மா,  ஏதாவது ஏடா கூடம்னா நாங்க தான் பதில் சொல்லணும்” என அவர் மறுக்க 

“விடும்யா… போய் அவனை துப்பிட்டு வரட்டும்” என்றார் அங்கிருந்த மற்றொரு கான்ஸ்டபிள் 

ஆவேசமாய் உள்ளே நுழைந்தவள், கொடைக்காரனை கண்டதும், “ஏன்டா உன் பொண்ணையும் இப்படி தான் கொன்னியா? உன் பொண்ணு பத்து வயசிலேயே செத்துப் போச்சாமே, இதான் நடந்ததா?” என கோபமாய் கேட்க, தலை குனிந்து நின்றான் அவன் 

“இந்தா நீயே அறுத்துடு” என்றவள் கூற, அந்த நேரம் உள்ளே வந்த கான்ஸ்டபிள், “ஏய் ஏய் இந்தாம்மா… என்னப் பண்ணப் பாத்த, எங்க வேலைக்கே உலை வெச்சுடுவ போல” என தடுத்து ப்ளேடை பிடுங்கிக் கொண்டார் 

“ஐயா… இன்ஸ்பெக்டர் எப்போ வருவாரு” என அவள் கேட்ட நேரம், ஜீப் சத்தம் கேட்டது 

சில நொடிகளில் உள்ள  வந்த இன்ஸ்பெக்டரை பார்த்ததும், “ஐயா… நான் கேஸ் தர்றேன், என் மகளை விசாரணைக்கு அனுமதிக்கறேன்.  இவன் மறுபடியும் உயிரோட வெளியே வரக் கூடாது. உதிர்ந்த ஒரு பூவுக்காக, ஓராயிரம் பூக்கள் கசங்கிடக் கூடாது” என்ற மனோரா, ஸ்டேசனை விட்டு நிமிர்வுடன் வெளியே வந்தாள்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

   

                    

                    

 

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. நடப்பது/நடந்து கொண்டிருப்பது தான் எனினும் மனதில் வேதனை அப்பிக் கொண்டது. 🙁

  2. மனோரா – அந்தப் பாத்திரமும் சரி, பெயரும் சரி.. ஆழமாக உள்ளது..!

இனியும் ❤ (சிறுகதை) – ✍ சந்துரு மாணிக்கவாசகம், மாங்காடு, சென்னை

டீச்சரின் மெட்டி (சிறுகதை) – ✍ சத்யா GP, நங்கநல்லூர், சென்னை