in ,

வேர்கள் (சிறுகதை) – ✍ சிபி சரவணன், சென்னை

வேர்கள்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 15)

கார்த்திகை  மாதத்திற்கு முன்பாகவே இந்த வருடம் மழை அடித்து ஊற்றியது. தெக்குபட்டி ஊர் கரட்டில் பேய் மழை என்று ஊரே பேசிக் கொண்டது. கரட்டில் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்குப் பத்தி போனவர்களுக்குக் கூட பாதை தெரியாமல் திண்டாடும் அளவிற்கு மஞ்சு அடைத்திருந்தது

ஊர் கடைசியில் உள்ள காலனியை தொட்டுப் போகும் ரோட்டுப் பாதையில் தான் பெருமாள் கோயில் கரட்டுக்குப் போக வேண்டும், மாரி காவி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே கரட்டு வழியாக நடக்கத் துவங்கினான்.

கவாய் செருப்பின் பின்புறத்தில் ஓட்டை வழியாகக் காலில் கல் குத்துவது கூட தெரியாமல் வெடுக்…வெடுக்.. என அவன் நடந்த  நடையில் ஒரு குதுகலம் தெரிந்தது.

மாரியின் வயதை வைத்து ஆளைக் கணிக்க முடியாது. ஆங்காங்கே நரைத்த முடி, கருத்த தேகம், மம்புட்டி வேலை செய்து செய்து இறுகிய நெஞ்சு.

பீடி இழுத்து இழுத்து எல்லா பல்லும் போய் ஆள் பொக்கை வாயாக இருந்தான். ஆனால் இளந்தாரிகளைப் போல நல்ல துடிப்பான நடை. அன்று அவன் முகத்தில் ஏக சந்தோசம்

பெருமாள் கோயிலுக்குப் போகும் பாதையில் எங்கும் திராட்சை தோட்டங்கள், பச்சை பந்தல் போட்டு பூமியின் மேல் போர்வை போர்த்தியிருப்பதைப் போல ஒரு வனப்பு.

ஒவ்வொரு திராட்சைக் கொடிகளும் தொடை தண்டி பெருத்து நெளிந்து, வளைந்து சர்பத்தை போல் பந்தலுக்குள் படுத்திருந்தது. பத்து வருசத்திற்கும் மூப்பான செடிகள்.

திராட்சையைப் பொருத்தவரை பெரிய அளவில் மகசூல் செய்யக்கூடிய ஒரு கார்ப்ரேட் வியாபாரம் தான். அதற்கெல்லாம் கிணற்றில் நல்ல தண்ணீர் ஊறினால் தான் சரிப்பட்டு வரும்.

மாரிக்கு பெருமாள் கோயில் கரட்டை ஒட்டி ஒரு தரிசு நிலமிருக்கிறது. வானம் பார்த்த பூமியென்று தான் அதைச் சொல்ல வேண்டும். மொக்கை தேவரிடம் அந்த நிலத்தை வருச குத்தகைக்கு மாரி வாங்கியிருந்தான். அவன் வாங்கிய நேரமோ என்னவோ கடந்த 10 மாசமாய் மழையேயில்லை.

கரட்டை ஒட்டியுள்ள தரிசு நிலங்களில் பெருவாரியாகத் தண்ணீர் பற்றாக்குறை தான். மழை பெய்தால் தான் விவசாயம், அதுவும் பெய்த 2 நாட்களுக்குள் விதைத்தால் தான் உண்டு

இத்தனை நாளாய் குத்தகைக்கு வாங்கிய தரிசு நிலத்தை, அதன் காய்ந்த செம்மண் கட்டிகளை முட்டு வரப்பில் நின்று பார்த்து விட்டு ஏக்கத்தோடு தான் மாரி மம்புட்டி வேலைக்குப் போவான். இதோ இப்போது இந்த மழை அவன் நெஞ்சுக்குள் கூத காற்றை வீசியிருக்கிறது.

மாரி வரப்புகளினூடே வேகமாய் ஓடி நிலத்தில் கால் வைத்தான், மண் பொதக்…பொதக்… எனச் சத்தமிட்டு அவன் கால்களை இறுக அன்போடு பற்றிக் கொண்டது

அவன் வேட்டியைக் கீழ் நெஞ்சு வரை தூக்கிக் கட்டிக் கொண்டு அந்த முக்கால் ஏக்கர் நிலத்தில் குறுக்கும், மறுக்குமாய் ஓடினான். சந்தோசத்தில் கத்திக் கொண்டே வானத்தைப் பார்த்து அவன் ஓடியதைப் பக்கத்துத் தோட்டத்தில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த பொக்கை வாய் கிழவி புன்னகையோடு ரசித்தது.

இதற்கு முன்பாக அவன் தலைமுறையில் யாருமே விவசாயம் செய்தது கிடையாது. தலைமுறை தலைமுறையாய் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு கும்புடு போட்டு பழகியவர்கள்.

சம்சாரிகளுக்குக் கூலியாய் வாழ்ந்தே பழகிய ஜீவன்கள், அதில் மாரியும் விதிவிலக்கில்லை. பண்ணைத் தோட்டத்தில் மேய்ச்சல்காரனாக இருந்து, பிறகு சில ஆடுகளை வாங்கி வளர்த்து, சிறுக சிறுக காசு சேர்த்து இந்த நிலத்தைக் குத்தகைக்கு, அதுவும் வருச குத்தகைக்கு வாங்க அவன் பட்டபாடு சொல்லித் தீராது

மாரி நிலத்தில் மண்டியிட்டு மண்ணை தனது கைகளில் தாங்கி, கண்ணை மூடி அதன் வாசனையை நுகர்ந்தான்

“கருப்பா… இனியாச்சும் என் தலைமுறை தளைக்கட்டும்” என வானத்தைப் பார்த்து வணங்கினான். தோட்டத்திலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் அவன் மனம் எண்ணங்களில் அசை போட்டது. என்ன விதைக்கலாம் என்ற நினைப்பில் நடந்தான்.

“கொத்தமல்லி விதைச்சா நல்ல வருமானந்தே, முளைக்காம போனா அப்பறம் மண்ணெடுக்க முடியாது. கம்பு, மக்காச்சோளம், அவரை…” இப்படி மனம் போட்டு அவனைக் குழப்பியது.

காசியின் வீட்டு ஓடுகள் கருமை நிறத்தில் புகை அப்பி ஒரு வித வண்ணத்தில் பார்க்க அழகாயிருக்கும். வீட்டுக்குள்ளே போக வேண்டும் என்றால் தலையை முண்டி தான் போய் ஆக வேண்டும்

மாரி பரணிலிருந்த அருவாளை எடுத்து வீட்டுத் திண்ணையில் தீட்ட ஆரம்பித்தான். அப்போது அதிலிருந்து வந்த கீச்… கீச் சத்தம் அவனுக்கு மேல் கூச வைத்தது.

பாப்பாத்தி வெளக்கமாரை உள்ளங்கையில் வைத்துத் தட்டிக் கொண்ட வெளியே வந்தாள்

“என்னய்யா , காலையிலே இம்புட்டு உறைப்பா இருக்க?”

“ம்… எல்லாம் நல்ல சேதி தே, கையில எம்புட்டு காடு வச்சுருக்க …”

“ஆமா நா சர்க்காரு உத்யோகத்துக்கு போறேன் காசு வச்சுருக்க. நானே 100 நாளு வேலைக்கு போறேன், அதுவும் அந்த பீத்த பய ஒழுங்கா காசு தரானா? அதுலையும் பிடிங்கி திங்கிறது”

“இப்ப எதுக்குடி நொய் நொய்னு பேசிக்கினு இருக்க, காசு இருக்கா இல்லையா ?”

“பெட்டியில 5000 ரூவா இருக்கு, அதுவும் செய்முறைக்கு வச்சிருக்கேன். உனக்கு தெரியாதா? நாளைக்கு ஏன் தங்கச்சி மகனுக்கு காது குத்துறாங்கனு”

“அடியே கூறு கெட்ட மூதி, தோட்டத்துல வெள்ளாமை எடுக்கணுமடி, ஒடியா ஒடிப்போய் காசு கொண்டா பாப்போம்”

பாப்பாத்தியின் முகத்தில் ரத்தின சிரிப்பு, சந்தோசத்தில் நெஞ்சடைத்தவள் போல உள்ளே வேகமாய் ஓடினாள்.

மாரிக்கு அக்கா மகள் தான் பாப்பாத்தி. அவள் குத்த வச்ச மாசத்திலேயே அவளைக் கல்யாணம் செய்தவன் தான் மாரி

அன்றிலிருந்து இன்று வரை வறுமை, வறுமை தான். ஆனால் கொண்டாட்டத்திற்குப் பஞ்சமில்லை. கா வயிறு கஞ்சி குடித்தாலும், காதலுக்கு எந்த குறையும் வைத்ததில்லை. அதற்குப் பரிசாக மூன்று பிள்ளைகள்.

அதில் ஒன்று பெண்பிள்ளை, பாவம் அதற்குக் கால் ஊனம் வேறு. மற்ற இரண்டும் ஆண் பிள்ளைகள். ஒன்று 9வது, மற்றொன்று பத்தாவது படிக்கிறது.

இப்போதே அதில் ஒருவன் கஞ்சா அடிக்க ஆரம்பித்துவிட்டான். இன்னொருவன் நல்ல படிப்புக்காரன், ஆனால் தப்பு என்றால் அவனுக்கு உயிர். ஊருக்குள் எங்குத் தப்படிக்கும் சத்தம் கேட்டாலும் ஆளுக்கு முன்பாக நிற்பான்.

போன வருச வீரபாண்டி திருவிழாவில் கூட தீச்சட்டிகளுக்கு கொட்டடித்து நல்ல காசு சம்பாரித்து அம்மாளுக்கும், அக்காளுக்கும் துணி மணிகள் வாங்கி கொடுத்தான்.

நடவுக்கு முன்பாக காட்டை உழுவதற்கு டிராக்டர்களை விசாரிக்கப் போனவன், அதிக விலை கேட்பதால் கட்டுபடி ஆகாதெனெ தெரிந்து, ஏர் பூட்டிய வண்டி மாட்டை பிடித்து வந்தான்

அந்த மாடுகள் இரண்டும் முதுகு வரிச்செழும்புகள் தெரிய அப்பிராணியாய் நின்றது. நல்ல தீனியில்லை, கடந்த பல மாசங்களாய் மழையில்லை. புல்லுக்கும் மேய்ச்சலுக்கும் கெடுபிடி, புண்ணாக்கு கலக்கி ஊத்தக் கூட மாரியின் கையில் காசில்லை.

சூரியன் மெல்ல எழுந்து வானில் நடந்தது. இளம் வெயிலில் பெருமாள் கோயில் கரட்டில் செஞ்சிவப்பு நிறம் விரவியது. கரட்டில் பச்சை, வானத்தில் செஞ்சிவப்பென தேசியக் கொடி வண்ணங்களில் அவை காட்சியளித்தது.

மாரி மெல்ல மாடுகளை பத்திக் கொண்டே நடந்தான்

ரோட்டு பாதையில் இரண்டு பக்கமும் பொட்டல் காட்டை டிராக்டர்கள் கிழித்து கோடு போட்டுக் கொண்டிருந்தன. இத்தனை நாளாய் மக்கிப்போயிருந்த நிலம், டிராக்டரின் கீறலில் கிழிந்து செக்கச் செவேலென செம்மண் தெரிந்தது.

கொக்குகளும் காகங்களும் கிண்டிய மண்ணிலிருந்த புழுக்களைத் தேடிக் கொத்தித் தின்றன. டிராக்டர் எங்கெல்லாம் போகிறதோ அங்கெல்லாம் கொக்குகள் பறந்து, பறந்து அமர்ந்த காட்சி மாரிக்குள் பேரானந்தத்தை உண்டாக்கியது.

ஊரே பரபரப்பாய் வேலைக்கு ஓடியது. இத்தனை நாள் மழையில்லாத குறைக்கு இப்போது தான் எல்லா கிழவிகளுக்கும் களை எடுக்க  நேரம்  கிடைத்திருக்கிறது.

எழுபது வயதிலும் கிழவிகள் கூன் நிமிராமல் சரக்.. சரக்கென மண்ணை சுரண்டுவதைப் பார்த்தால் பார்ப்போருக்கே மூச்சு வாங்கும்.

மாரி ஏர்கலப்பையை நிலத்தில் பதித்து நிறுத்திவிட்டு, நேராய் பெருமாள் கோயிலுக்குப் போய் சூடம் பொருத்தி சாமி கும்பிட்டான். பிற்பாடு ஏர்கலப்பையை நிலத்தில் ஊன்றி உழுக ஆரம்பித்தான். வெயிலும் கூதக்காத்தும் ஒரு சேர அடித்ததால், உழுவதே தெரியாமல் ராத்தலாய் வேலை செய்தான்.

வண்டி மாடுகள் இரண்டும் நேரம் ஆக ஆகத் திணறியது. கால்கள் எட்டு வைக்கும் வேகமும் குறைந்தது. கொஞ்ச நேரத்தில் இரண்டும் வாயில் நுரை கக்க ஆரம்பித்தது. கண்கள் இருண்டு வெளிறிப் போய் நின்றது. மாரி இரண்டையும் வேப்பமர நிழலில் கட்டி வைத்து விட்டு உட்கார்ந்தான்

அப்போது, கரட்டுக்கு மேய்ச்சலுக்குப் போன சின்னையன், “என்னா மாரி? ஒரு டிராக்டரை கூட்டியாந்து உழுக வேண்டியதானப்பா? இன்னும் எந்த காலத்துல இருக்க நியீ?”

“ஏண்டா, நானென்ன உங்க முதலாளி மாதிரி பெரிய சம்சாரியா? நானே அஞ்சாறு நிலத்த வச்சு பொழைச்சுக்கிருக்கேன், இதுல டிராக்டருக்கு ஏதுடா காசு?”

 “ஆமா… இருந்தாலும் நீ புழுத்திபுடுவ ? கஞ்சப்பய… 10 ஓவா டீ வாங்கி குடிக்க பல தடவ யோசிக்கிற ஆளு தான நீ “

“எலேய்…”

“இந்த அரட்டெல்லாம் நீ மொனையாத்தா அரட்டுவ, என்னத்தயாவது செஞ்சு பொழைச்சா சரி” என கிளம்பினான் சின்னையன்

அன்று பொழுது மசங்கும் வரை உழுது உழுது, ஓரு வழியாய் வேலையை முடித்தான் மாரி. மாடுகள் ரெண்டும் ஆள விட்டா போதுமுடா என்பது போல் சோர்ந்து நின்றது.

பாப்பாத்தி வேலைக்குப் போய்விட்டு வீடு வந்தவள், புருசனுக்கு வக்கணையாய் எதாவது செய்யவேண்டுமென நினைத்தவள், பாலு கறிக்கடையில் அரைக்கிலோ கோழி கறி வாங்கி கமகமவென சமைத்தாள்.

எப்போதும் போல் இல்லாமல், குளித்துச் சீவி சிங்காரித்து வெடுப்பாகத் தயாரானாள்.

பாப்பாத்திக்கு அடுத்த ஆவணியோடு 38 வயசு ஆகப் போகிறது. ஆனால் பார்க்க 28 வயதை ஒத்த உடல் கட்டு. காட்டு வேலை செய்து சப்பிய முலைகள், இறுகிய கைகள், ஒடுங்கிய கன்னம், களையான மாநிறம் என்றிருந்தாள்

ரோட்டு வேலைக்கு இரண்டு பழைய சேலை, விசேஷத்திற்கு உடுத்த இரண்டு பட்டு சேலை, அதிலும் ஒன்று கல்யாணத்திற்கு எடுத்தது. இவற்றை தான் மாற்றி மாற்றி உடுத்துவாள் பாப்பாத்தி

உழுத களைப்பில் வந்த மாரி, நேராய் வீட்டுக்கு வந்து மாடுகளை ஒப்படைத்து விட்டு, நெடு நெடுவென அவரை விதை வாங்கப் போனான்

“காவா கஞ்சி குடுச்சிட்டு பிறகு போய் சோலியைப் பாக்க வேண்டிய தான” எனப் பாப்பாத்தி சொல்லியும், அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

கோழி கறி வாசம் நெஞ்சை நோண்ட, நொண்டி பெண் தட்டில் போட்டு ஒரு வெட்டு வெட்டினாள். மாரியும் நன்றாகச் சாப்பிட்டான், ஆனால் கறி எதையும் திங்கவில்லை. அதை மகன்களுக்கு வைத்துட்டு குழம்பை மட்டுமே ஊற்றிச் சாப்பிட்டான்.

“நாளைக்கு கரட்டுக்கு ரெண்டு ஆளுகல கூட்டியாந்திரு, அவரை விதைச்சுப்புடுவோம்”

“அவரையா, அது வர மாசக்கணக்கா ஆகுமேயா? மேற்கொண்டு மருந்து அடிக்கிறது, அது இதுனு மேற்படி செலவு கூடுதலா வருமே?”

“எல்லாம் எனக்கும் தெரியும், கம்பு சோளமெல்லாம் போட்டா பெருசா வருமானமிருக்காது அதேன்”

“சரி உன் நோக்கத்துக்கு செய்யி…நான் நாளைக்கு ரெண்டு பொம்பளைகல கூப்புட்றேன், நட்டு விட்ருவோம்” என சொல்லும் போதே பாப்பாத்தி முகத்தில் கலை அப்பியது

பெண்ணின் தலையை வாரியபடி, “எதோ வெள்ளாமை நல்லா வந்துச்சுண்ணா இவளை எங்கிட்டாச்சும் கட்டி குடித்துறலாம். பொண்ணு கேட்டு வார பயக எல்லாம் கால் நொண்டினாலும் பரவாயில்ல, சீதனத்தில நொண்டி வரக்கூடாதுனு தான் எதிர்பாக்குறாங்க”

மகள் தலையில் பேன் எடுத்துக் கொண்டே சொன்னாள், பெண் எதுவும் பேசாமல் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்

மறுநாள் விடியலுக்கு முன்பாகவே எழுந்து சோறாக்கி வைத்து விட்டு, காட்டுக்குக் கிளம்பினாள் பாப்பாத்தி

அன்று பொழுது அவர்களுக்கு நல்ல பொழுதாக விடிந்தது. மாரி பாப்பாத்தி மற்ற இரண்டு பெண்கள் என, நால்வரும் உழுத நிலத்தில் ஆளுக்கு ஒரு நெறை அளவு தூரத்தில் நின்று கொண்டனர். எல்லார் கையிலும் கொத்தும் அவரை விதையுமிருந்தது.

பாப்பாத்தி கருப்பனைக் கும்பிட்டு நிலத்தில் கொத்தால் கைப்பிடி அளவு கொத்தி விதையைப் போட்டு மண்ணை மூடினாள். அவளைத்  தொடர்ந்து மற்ற மூவரும் விதைத்து மண்ணை மூடிக் கொண்டு போனார்கள்.  அவ்வப்போது மாரியும் பாப்பாத்தியும் முகம் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்

காக்கைகள்  சில விதைத்த பகுதியிலிருந்த   மண்ணை கிண்டி அவரை விதைகளைத் தீனிக்கு  தேடின.  அதைப் பார்த்து கடுப்பான மாரி, செம்மண்  கட்டிகளை எரிந்து  அவற்றை விரட்டினான் 

விதைத்த மூணாவது நாளில் அவரை விதைகள் மண்ணிலிருந்து வெடித்து சின்னதாய் முளைத்து நின்றது. மாரி எதிர்பார்த்தது போலவே, சின்ன சின்ன இடைவெளியில் ஒரு சில பயிர்களை தவிர, மற்ற எல்லாப் பயிர்களும் முளைத்திருந்தன

அவன் விதைத்ததற்கு  தோதாய் அப்போது நல்ல மழை வேறு பெய்தது. பத்து நாட்களிலேயே அவரைச்செடி நன்கு குத்திட்டு ஒரு ஜான் அளவு வளர்ந்தது.  

அவற்றின் வளர்ச்சியைப் பெற்ற பிள்ளையின் வளர்ச்சியைப் போல ரசித்தான் மாரி. சுற்றியிருந்த எல்லா தரிசு நிலங்களிலும் அப்போது பச்சைப் பெயிண்ட் பூசியது  போலச் செழித்துக் காணப்பட்டது. 

பெருமாள் கோயில் கரட்டின் பசுமையும், நிலத்தின் பசுமையும் பார்ப்போருக்கு ரம்மியத்தைக் கூட்டியது.

செடி இப்போது ஓரளவுக்கு வளர்ந்த லேசாகச் சிரித்தன. அதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் அரும்பத் தொடங்கியது. வயதுக்கு வந்த பெண்ணின் கொண்டையில் வைத்த மல்லிகைப் பூவை போலக் காற்றுக்குக் குலுங்கியது

அடிவாரத்தில் பச்சை மேலே வெள்ளை என, தூரத்திலிருந்து பார்ப்பதற்குப் பூந்தோட்டமா காட்சியளித்தது. அவரைப் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சும் தேனீக்கள், குண்டியில் மகரந்தங்களை அப்பிக் கொண்டு மற்றொரு பூவில் அமர துவங்க துவங்க,   மாரியின்  நெஞ்சில் மாரி மழை பொழியத் துவங்கியது.

காற்றுக்கு சில பூக்கள் உதிர தொடங்கின.  பூக்களில் சிலவற்றில் கருமை படிந்த நோய்  வந்தவை போல் காணப்பட்டன.  உடனே பதறிப் போன மாரி, அக்கம்பக்கத்துத் தோட்டத்துச் சம்சாரிகளிடம்  விசாரிக்க ஆரம்பித்தான்

“ஒன்னும் இல்லடா, மருந்தடிச்சா எல்லாம் சரியா போகும். நீ என்னவோ பிள்ளைய இழந்தவன் மாதிரி தவிக்கிற?”

“இல்லண்ணே… இந்த வெள்ளாமைய நம்பித் தானே குடும்பமே இருக்கு”

“எல்லாத்துக்கும் அப்படி தாண்டா… என்னா செய்யறது?  எப்பவும் சம்சாரி பொழப்பு பீ பொழப்பு தான” என, மாரியின் கூட்டாளி ஆறுதல் சொன்னார்.

மாரியும் மருந்துக் கடையில் டப்பா டப்பாவா பல பெயர்களில் மருந்தை வாங்கி அடிக்க ஆரம்பித்தான்.  ஒன்றை  விட்டால் இன்னொரு நோயென, ஏதாவது வந்து கொண்டே இருந்தது

அவரைச் செடி என்றாலே கூடுதல் பராமரிப்பு என்று சம்சாரிகள் சொல்வார்கள். மருந்து செலவு அது இதுவென  விளைச்சலுக்கு முன்பாகவே காசு செலவாகி விட்டது. அதற்குக் கடனும் வாங்கி ஆகி விட்டது

இப்போது தான் எங்காவது ஒரு இடத்தில் பிஞ்சு அவரை முளைக்கிறது.  அதிலும் சிலவற்றை வண்டுகள் துளையிட்டு ஓட்டையாகி வைத்திருக்கின்றன

பாப்பாத்தியும் அவனது கூட்டாளிகளும் அவரை செடிகள் இருந்த கோரைப்பல் களைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொத்து வைத்து செதுக்கினர்.  முழுதாய் வளர்ந்து நின்றிருந்த அவரைக்காயை பார்த்தால், அதை பிடுங்கி பெருமாள் கோயில் வாசலிலேயே வைத்து சாமி கும்பிட்டாள் பாப்பாத்தி

“இந்த வெள்ளாமை நல்லபடியாக வரணும் வனப்பெருமானே, நல்ல வருமானம் வந்தா உனக்கு என் இரண்டு மகங்க முடிய காணிக்கை செய்றேன்” என  வேண்டிக் கொண்டாள்

முதல் காய் அடுப்பில் எப்போதும்  குறையாகத் தான் காய் வரும். அதே போலத் தான் அன்றும் நடந்தது. மொத்தமாக 10 கிலோ காய் தான் பிடுங்கியது. அதனை சந்தையில் கொண்டு போய் விற்க விருப்பம் இல்லாத மாரி, பாப்பாத்தியிடம்  சொல்லி ஊருக்குள்ளே விற்கச் சொன்னான்.

பொதுவாக காலனியிலிருந்து விற்று வரும் எந்த ஒரு காயும், மேலைத் தெருவில் விற்காது

“இவங்ககிட்ட  வாங்கித் திங்கிறதா?” என, பொம்பளைகள் சலித்துக் கொள்வார்கள். அதனாலே பாப்பாத்தி காலனியிலேயே  குறைவான விலைக்கே காய்கறிகளை விற்றாள்

அடுத்த எடுப்புக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும். அதற்குள்ளே பூ எப்படி விட்டிருக்கிறது என பார்க்க தோட்டத்திற்குப் போனோன் மாரி

அங்கே ஊர் பெருசுகள் சிலது, வெள்ளையும் சொள்ளையுமாக மாரி நிலத்தருகே  நின்று கொண்டு குசுகுசுவென பேசினார்கள்

சர்வர்கள் இருவரும் மாரியின் நிலத்தில்  டேப் வைத்து அளந்து கொண்டிருந்தார்கள். அவனுக்குத்  தூக்கி வாரிப் போட்டது போலிருந்தது.  பதட்டத்தோடு அங்கே நின்றிருந்த தலையாரி அருகே போனான்

“என்னணே அளக்குறாக?”

“வா மாரி… ஓண்ணுமில்லையா, பெருமாள் கோயில ஓட்டினாப்புல கல்யாணம் மண்டபம் கட்ட போறாகளாம், அதான் அளவெடுக்குறாக?”

மாரி பதற்றத்துடன், “என்னணே சொல்றீக? எப்ப கட்றாக?” எனக் கேட்க

“பத்து நாளைல ஆரம்பிச்சிருவாக. அந்தா தோட்டத்துக்கு ஓனரே நிக்கிறாரு பாரு, அவருகிட்டயே போயி கேளு போ” என்ற தலையாரின் பேச்சில் எகத்தாளம் தெரிந்தது

தோளில் கிடந்த துண்டை எடுத்து கையில் வைத்துக் கொண்ட மாரி, மெல்ல குனிந்து மெதுவாக நடந்து மொக்கை தேவர் அருகே போனான்.

“வாயா மாரி, நல்ல வெள்ளாமை போலிருக்கே? ஆளு செழிப்பாகிட்ட போல” என வெத்தலையை வாயில் வைத்து மென்று கொண்டே கேட்டார் மொக்கை

தலையை சொறிந்து கொண்டே, “அப்டியெல்லாம் இல்லிங்க சாமி, எல்லாம் உங்க புண்ணியமுங்க” என்றான் மாரி

மொக்கை தேவர் ஊருக்குள் பெரிய வசதியான ஆள். தெக்குபட்டியைச் சுற்றியுள்ள முக்கால் வாசி தோட்டங்களுக்கு சொந்தக்காரன். இதில் அரசியில் வேறு. நல்ல குணமான ஆள் என்றாலும், அரசியலென வந்துவிட்டால் பித்தலாட்டம் தான்.

அறுபது வயசிலும் இரண்டு பெண்களை வைத்துச் சமாளிக்கிறார் என இளசுகள் இவரைக் கிண்டல் செய்வார்கள்

“அய்யா வெள்ளாமை வீணாப் போயிருங்களே?”

“யார்ரா இவன்… நல்ல காரியம் நடக்க போகுதுனு சந்தோசப்படுவியா? வெள்ளாமை மசுருனுட்டு இருக்க, அதெல்லாம் நான் பாத்து தரேன். நாளைக்கு பத்தரத்த எடுத்துட்டு வீட்டுக்கு வா” என்ற மொக்கை, தனது நரை மீசையில் எச்சில் தெறிக்க வெற்றிலையை துப்பியவாறே அவனை பார்த்தார்

“சரிங்க சாமி, எம்புட்டு தருவிங்க சாமி ?”

உடனே பக்கத்திலிருந்த தலையாரி, “எலே யார்ரா இவன், பெரிய மனுசே சொல்றாருல, குடுக்கிறத வாங்கிட்டு போடா. உன்னையெல்லாம் சம்சாரி ஆக்கி அழகு பாத்தாரு பாரு, அவரை நினைச்சு பெருமைபடுவியா… வந்துட்டான் வெண்ண”

தண்ணீரில் வாய் கொப்பளித்து விட்டு தலையாரியை முறைப்பது போல் பார்த்தார் மொக்கை. எதுவும் பேசாமல் கொஞ்சம் விலகி நின்றான் மாரி

“மாரி நீ சங்கட்டபடாதடா, உன் வெள்ளாமைல வர காசவிட கூடக்கொறையாவே நான் தாரேன், இவன் பேசறதெல்லாம் மனசுல வச்சுக்காத”

மொக்கை இவ்வளவு இறங்கி வந்து பேசும் போது மாரியால் எதுவும் பேச முடியவில்லை. மெல்ல அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். குத்தகை முடிய இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில் மொக்கை இப்படிச் செய்வது அவனுக்குச் சரியாய் படவில்லை.

இருந்தாலும் கோயில் விவகாரம் என்பதால் மாரியால் எதுவும் பேச முடியவில்லை. பிரச்சனை செய்தால் ஊரே எதிர்த்து வரும் என்ற அச்சம் அவனுக்கிருந்தது.

மீண்டும் வந்த பாதையில் கொஞ்ச தூரம்  நடக்க நடக்க, அவன் கால்கள் கனமாகிப் போனது. ஒவ்வொரு எட்டு வைப்பதும் ஒரு யுகத்தைக் கடப்பது போல அவனுக்குத் தோன்றியது.

முந்தா நாள் வாங்கிய புதுச்செருப்பை மீறியும் சரளி கற்கள்  கால்களில் குத்துவதாய் உணர்ந்தான். ஒரு மாதிரி மூச்சு அடைப்பது போலிருக்கவும், கருப்பசாமி கோயிலின் ஆலமரத்துத் திண்ணையில் அமர்ந்தான்

தொண்டையில் ஏதோ அடைப்பது போல் உணர்வு. அவன் சிறு வயதில் பார்த்த அதே ஆலமரம் இன்னும் அதன் வேர்களும், கிளைகளும் செழுமை குறையாமல் அப்படியே இருந்தது.

பால்யத்தில் அங்கே வந்து விளையாடிய தருணங்கள், அவனது எண்ண ஓட்டத்தில் ஊறியது

மாரி திரும்ப திரும்ப மண்ணுக்கு அடியில் வரும் வேர்களையும், பச்சை நிறைந்து பறந்து விரிந்து நிற்கும் உயரமான கிளைகளையும் அண்ணாந்து பார்த்தான். அப்போது ஒரு கண்ணீர்த் துளி மெல்லக் கன்னத்திலிருந்து ஊறி மாரியின் கையில் வந்து விழுந்தது.

உணர்வற்றவனைப் போல் வேரையும் கிளையையும் மாறி மாறி பார்த்தான் அவன். ஒரு தலைமுறைக்கான வடுக்கள் ஆலமரத்தின் வேர்களில் தெரிந்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஓட்டம் (சிறுகதை) – ✍ கல்யாண் சுந்தரம், சென்னை

    மாறுபட்ட, வித்தியாசமான, தனித்துவமான?…(சிறுகதை) – ✍ சத்யா GP, சென்னை