in ,

ஓட்டம் (சிறுகதை) – ✍ கல்யாண் சுந்தரம், சென்னை

ஓட்டம்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 14)

றக்கும் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் கூவம் ஆற்று கரையில் உள்ள ஓட்டு வீடு. நான்கு பேருக்கு மேல் அமர முடியாத அளவிலான ஒரு சிறிய பெட்டியை போன்ற அந்த வீட்டில் இரண்டு பை, பயனில்லாத அடுப்பு ஒன்று, சில பாத்திரங்கள், ஒரு குடம் மட்டுமே இருக்கிறது

முத்து மற்றும் சையத் அந்த வீட்டில் கடந்த மூன்று வருடங்களாக வசித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு வரை இருவரும் ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுனர்களாக இருந்தனர். இப்போது கொரோனா பெருந்தோற்றல் வேலை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள். 

எப்படியாவது சம்பாதித்து வாழ்வில் உயரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வந்தவர்கள். இன்று, எப்படியாவது சாப்பாட்டிற்கு பணம் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

கடந்த சில மாதங்களாக மூட்டை தூக்குவது, ஹோட்டலில் சர்வர் வேலை செய்வது என்று, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலை செய்து வருகிறார்கள். அந்த வேலையும் தினமும் கிடைப்பதில்லை. 

அதிகாலை ஐந்து மணி இரயிலின் சத்தம் கேட்டு விழித்தான் முத்து

“டேய், மச்சான்… சையது… எந்திரி டா… மணி அஞ்சு” 

“அஞ்சா!! ஐயையோ, இந்நேரம் மார்க்கெட்டுக்கு வண்டி வந்துருக்குமே. இன்னும் அரைமணி நேரத்தில் அங்க போகலைன்னா நமக்கு மூட்ட தூக்க இன்னைக்கு டோக்கன் கிடைக்காதே மச்சான்” 

“ஆமா டா, வா சீக்கிரம் போவோம்” 

இருவரும் குடத்தில் இருந்த தண்ணீரை குடித்து விட்டு புறப்படும் போது ஐந்து மணி பத்து நிமிடம் . அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து மார்க்கெட் பத்து கிலோ மீட்டர்.  

இருள் விலகாத நகரம், உடற்பயிற்சிக்காக சிலர் ஓடிக் கொண்டிருக்க, முத்துவும் சையதும் விடியலுக்காக ஓடிக் கொண்டிருந்தனர். வாழ்க்கையின்  தேடலின் போது ஓடும் தூரம் தெரிவதில்லை. 

மூச்சிரைக்க, நா வறண்டு இருவரும் மார்க்கெட் சென்று சேரும் போது ஐந்து மணி நாற்பது நிமிடம். ஆனால் அதற்குள் மூட்டை தூக்க டோக்கன் முடிந்து விட்டது

“சே, இவ்வளவு கஷ்டப்பட்டு ஓடி வந்து டோக்கன் போயிருச்சே மச்சான்” 

“சரி வா, என்கிட்ட இருபது ரூபா இருக்கு… போய் டீ குடிச்சிட்டு போவோம்.” 

“ஓடி வந்தது நாக்கு வறண்டு போச்சு மச்சான். முதல்ல தண்ணி குடிப்போம் வா” 

இருவரும் மார்க்கெட்டில் இருக்கும் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு, “ம்ம்ம், அப்போ இன்னைக்கு ஹோட்டல் தானா … அங்க போனா சாப்பாடு கிடைக்கும். அது போக நூறு ரூபா தான் தருவாரு. வெறும் சாப்பாட்டுக்குக்காக மட்டும் வேலை செய்றது ஒரு வாழ்க்கையா மச்சான்” 

“சரி என்ன பண்ண? வேற வழி இல்ல. அதுக்கே நாம இவ்வளவு ஓட வேண்டிருக்கு”  என இருவரும் பேசிக் கொண்டே, அவர்கள் வழக்கமாக வேலை செய்யும் ஹோட்டலுக்கு சென்றனர்

அந்த ஹோட்டலில் தேவைக்கேற்ப்ப ஒவ்வொரு நாளும் வேலைக்கு ஆட்கள் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அன்று அந்த ஹோட்டல் பூட்டப்பட்டிருந்தது.  

“என்னடா பூட்டிருக்கு?” 

“தெரியலடா, போன வாரமே ஓனர் ஹோட்டல் சரியா போகலைன்னு சொல்லிட்டிருந்தார், ஒருவேள ஹோட்டல மூடிட்டு ஊருக்கு போயிட்டாரோ?” 

“ம்ம்ம்… இப்போ என்ன மச்சான் பண்ணுறது… இன்னைக்கு சாப்பாடு!!” 

இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் நடந்து ஒவ்வொரு ஹோட்டலாக வேலை கேட்டுச் சென்றனர்.

மணி பதினொன்று… கடைசியாக சாப்பிட்டு இருபத்தி நான்கு மணி நேரம் கடந்து விட்டது. வேலை கிடைக்காமல் காலையிலிருந்து நடந்து அலைந்ததில் கால்கள் அசந்து இருவரும் ஒரு பேருந்து நிலையத்தில் அமர்ந்தனர். 

வெகு நேரமாக இவர்கள் அங்கு அமர்ந்திருப்பதை பார்த்த நபர் ஒருவர் அவர்களிடம் வந்து தான் ஒரு மொபைல் கம்பெனியின் விற்பனை பிரதிநிதி என்றும் தன்னிடம் உள்ள மொபைல் விளம்பர துண்டு சீட்டுக்களை விநியோகித்து தந்தால் ஆளுக்கு இருநூறு ருபாய் தருவதாக கூறினார். 

அன்றைக்கான வேலை கிடைத்த மகிழ்ச்சியில் இருவரும் சரி என்று ஒப்புக்கொள்ள, இருவருக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட் தந்து நிற்பதற்கு ஒரு நிழற்குடையும் தந்தார்

நான்கு மணி நேரத்திற்கு மேலாக கால் கடுக்க நின்று ஒரு வழியாக மாலை ஆறு மணியளவில் அனைத்து துண்டு சீட்டுக்களையும் கொடுத்து முடித்துவிட்டு இருவரும் அந்த நபரிடம் வந்தனர். அவர் நிழற்குடைகளை தனது அலுவலகத்தில் வைத்துவிட்டு வந்து பணம் தருவதாக பைக்கில் ஏறி சென்றார். இருவரும் அவரை நம்பி சரி என்று தலையசைத்தனர்

அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் கடந்தும் அவர் திரும்பவில்லை. இருவரும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் அன்று சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கலங்கி நின்றனர். 

பசி மயக்கத்தால் தலை சுற்றியது. இரவு நேரமாகியதால் ஒவ்வொரு கடையாக மூட தொடங்கியது. சற்று நேரத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு அமைதியானது அந்த இடம். 

எந்த நேரத்தில் வேண்டுமானலும் கீழே விழும் நிலையில் நடக்க கூட தெம்பில்லாத நிலையில் இருவரும் அங்கிருந்த கடை வாசல் ஒன்றில் படுத்து விட்டனர். 

மார்கழி மாத குளிர், இவர்களையும் நம்பி வந்து கடிக்கும் கொசு, ஒரு நாளுக்கு மேலாக உணவை காணாத வயிறு, பணம் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்த மனம் எல்லாம் சேர்ந்து இருவரையும் தூங்க விடவில்லை. வேறு வழியின்றி அங்கேயே இரவு முழுவதும் படுத்துக் கிடந்தனர்.  

மறுநாள் காலை நான்கு மணிக்கு இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தனர். அருகில் குடிக்க தண்ணீர் இல்லாமல் அங்கிருந்த கடையில் கேட்ட போது, வாட்டர் பாட்டில் மட்டுமே இருப்பதாக கடைக்காரர் சொன்னார்.  

சுற்றி முற்றி பார்த்து வேறெங்கும் தண்ணீர் இல்லாததால் வேறு வழியின்றி, “சரி, வா மச்சான் … அப்படியே நடந்து மார்க்கெட் போய் தண்ணி குடிக்கலாம். சீக்கிரம் போனால் இன்னைக்காவது டோக்கன் வாங்கிடலாம்…” 

“மச்சான், இன்னைக்கு செவ்வாய் கிழமை … மார்க்கெட்டுக்கு லாரி எதுவும் வராது டா…” 

“கடவுளே… இன்னைக்கும் வேலை இல்லையா, என்ன பண்ண போறோம்ன்னு தெரியல…” என்று மனமுடைந்து அன்றைய நிலைமை எண்ணிக்கொண்டே மேலும் நடக்க பெசன்ட் நகர் கடற்கரை வந்தடைந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம் தண்ணீர் ஆனால் குடிக்க முடியாமல் இருவரும் அங்கேயே அமர்ந்தனர். 

“என்னால இனிமேல் முடியாது” என்று சையத் படுத்துவிட்டான். முத்துவும் அவன் அருகில் அமர்ந்தான்

சூரியன் மெல்ல உலகத்தை எட்டி பார்த்த நேரத்தில் ஒரு சொகுசு கார் வந்து நிற்க, அதிலிருந்து வாட்ட சாட்டமான இருவர் இறங்கி கடலை பார்த்தபடி நின்று பேசிக் கொண்டிருந்தனர். 

பின்பு ஒருவர் காரிலிருந்து பையை எடுத்து அதிலிருந்த ஷூவை மாட்டிவிட்டு கையில் வைத்திருந்த ஜூஸ் பாட்டிலை அந்த பையில் வைத்து காரின் மேல் வைத்தார். மறுபடியும் இருவரும் கடலை பார்த்து ஏதோ செய்கையில் பேசிக்கொண்டிருந்தனர். 

இதை பார்த்துக் கொண்டிருந்த முத்துவும் சையதும், “வேற வழியில்ல மச்சான்… அந்த ஜூஸ் பாட்டில அவங்களுக்கு தெரியாம எடுத்துருவோம்…” 

“சரி டா… தப்பு சரின்னு யோசிக்கிற நிலைமையில நாம இப்போ இல்லை…” சையதை அமரச் சொல்லிவிட்டு முத்து மெதுவாக சென்று அந்த காரின் பின்புறத்திலிருந்து மறைந்து சென்று அந்த பையில் கை வைத்த போது 

ஒருவர் எதார்த்தமாக திரும்பி பார்த்து, “டேய், யாருடா நீ? என்ன பண்ணுற?” என்று சத்தமிட்டு முத்துவை நோக்கி ஓடி வந்தார். 

பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் முத்து அந்த பையை எடுத்துக் கொண்டு ஓடினான். காரில் வந்த நபர்கள் இருவரும் முத்துவை  துரத்துகிறார்கள். முத்து ஒரு ஓட்ட பந்தய வீரர் போல் பறந்து செல்கிறான். 

அவனை துரத்துபவர்களும் முத்துவின் வேகத்திற்கு இணையாக விரட்டுகிறார்கள்.  கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கிறான் முத்து 

பின்னால் வருபவர்களும் சளைக்காமல் துரத்துகிறார்கள். வாழ்க்கை நம்மை துரத்தும் போது ஓடும் வேகம் தெரிவதில்லை

அவன் செய்த செயல் அவனுக்கே அவமானமாக இருந்தது, ‘சே … இப்படி சாப்பிடுறதுக்காக திருடுற நிலைமை வந்திருச்சே. என்ன இருந்தாலும் நான் செஞ்சது தப்பு தான். பேசாம நின்னு பைய அவங்ககிட்ட குடுத்துருவோமா… வேணாம் அது அசிங்கம்…’ என்று வேகத்தை அதிகப்படுத்தி ஓடினான். 

சாலையில் அனைவரும் இவர்கள் தூரத்துவதை பார்க்க முத்துவிற்கு மேலும் அழுகை வந்தது. ஆனாலும் ஓடிக் கொண்டிருந்தான்.  

மூன்று கிலோமீட்டருக்கு மேல் ஓடியிருப்பான். அதற்குமேல் அவனால் ஓட முடியாமல் நின்று விட்டான். பின்னால் திரும்பி பார்த்த போது துரத்தியவர்களை காணவில்லை. 

கண்கள் கலங்க, இதயம் நொறுங்கி கையிலிருந்த பையை திறந்துகூட பார்க்காமல் சாலையோரம் அமர்ந்து அழ ஆரம்பித்தான். அந்த வழியாக வந்து சென்றவர்கள் யாரும் அவன் அழுகையை கண்டுகொள்ளவில்லை. 

மதியம் பன்னிரண்டு மணி, கையில் பையுடன் குற்ற உணர்ச்சியில் மனம் நொந்து மெல்ல நடந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தான் முத்து. அவனுக்கு முன்பேசையத் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான். சையதை பார்த்தவுடன் மீண்டும் அழ தொடங்கிய முத்துவை ஒரு வழியாக சமாதானப்படுத்தினான்  

சற்று நேரத்திற்கு பின்பு, “மச்சான், நீ அந்த பைய எடுத்துட்டு ஓடுன, அவங்களும் பயங்கர வேகமா உன் பின்னாடி வந்தாங்க. ஷூ எல்லாம் போட்டு ஓடுனாங்க… நீ வேறும் காலோட ரெண்டு நாளா சாப்பிடாம ஓடுன… எங்க மாட்டிருவியோன்னு பயந்துட்டேன்… நல்ல வேளை நீ தப்பிச்சிட்ட… எங்க போன எப்படி தப்பிச்ச?” 

“எப்படி ஓடுனேன் எங்க ஓடுனேன்னு தெரியலடா … அவங்ககிட்ட மாட்டி அசிங்கப்பட கூடாதுன்னு ஓடுனேன்… கொஞ்சம் நேரத்துல அவங்கள காணோம்… ஆனா எனக்கே அசிங்கமா இருந்துச்சு… தப்பு பண்ணிட்டேன்.” 

“சரி விடு மச்சான்… நம்ம நிலைமை அப்படி பண்ண வச்சிருச்சு” என்று முத்துவை மீண்டும் சமாதானபடுத்திவிட்டு, பின்பு கடற்கரையில் நடந்ததை கூறினான் சையத்

“அவங்க ரெண்டு பேரும் எப்பிடியிருந்தாலும் கார் எடுக்க வருவாங்கன்னு அங்கேயே நின்னுக்கிட்டிருந்தேன். அவங்க வர்றதுக்குள்ள கூட்டம் கூடிருச்சு. போலீஸ் எல்லாம் வந்தாங்க. நானும் கூட்டத்துல போய் அவங்க என்ன பேசுறாங்கன்னு கேட்டேன். போலீஸ்கிட்ட ஒருத்தர் எப்படியாவது உன்ன புடுச்சு கூட்டிட்டு வர சொன்னார். பெரிய ஆளுங்க போல எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை உன்ன புடிக்க சொன்னார். இன்னொருத்தர் கம்ப்ளைன்ட் எல்லாம் வேண்டாம்ன்னு சொல்லி போலீஸ போக சொல்லிட்டார். அப்படி என்ன அந்த பையில இருக்கு மச்சான்?” 

“அந்த ஜூஸுக்காக தான் இது நடந்துச்சு. அதே எடுத்து குடுச்சிருக்க வேண்டியதுதானே டா?” 

“இல்ல மச்சான், நம்ம ரெண்டு பேரும் தான் பசியா இருந்தோம். உன்ன விட்டுட்டு எப்படி குடிக்கிறது. அதான்…” 

சையத் முத்துவை கட்டிப் பிடித்துக் கொண்டான். பின்பு இருவரும் அந்த பையை திறந்து பார்த்த போது, உள்ளே ஒரு பழைய ஷூ, ஒரு துண்டு மற்றும் ஜூஸ் பாட்டில் இருந்தது

அதை பார்த்த வியப்பில்,”இதுக்காகவா துரத்துனாங்க… நான் என் பசிக்காக ஓடுனேன் … அவங்க எதுக்கு அப்படி ஓடுனாங்க!!!” 

“ஒருவேள எதுவும் பழைய நியாபகமா வச்சிருப்பாங்க. அதான் ஒருத்தர் உன்ன எப்படியாவது பிடிக்க சொன்னார் போல” 

“ஆமா டா, எதும் ராசிக்காக கூட வச்சிருக்கலாம். எப்படியாவது அவங்கள தேடி கண்டுபிடிச்சு கொடுத்தரனும். அப்போ தான் எனக்கும் மனசு கேக்கும்” 

“சரி மச்சான் கண்டுபிடிச்சு குடுத்துருவோம், நீ குளிச்சிட்டு ரெஸ்ட் எடு… நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்”என்றான் சையத் ஐநூறு ரூபாய் பணத்தை எடுத்துக் காட்டினான். 

“ஏது டா காசு?” என்று ஆச்சர்யமாக கேட்டான் முத்து. 

“பீச்ல கூட்டம் போனவுடனே, நான் அப்படியே நடந்து அடையார் பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்துக்கிட்டிருந்தேன். அப்போ ஒரு பைக் என் பின்னாடி வந்து நின்னுச்சு. நேத்து நம்மள நோட்டீஸ் குடுக்க சொன்னாரே ஒருத்தர் அவர் தான். நேத்து அவர் போகும் போது வண்டி ரிப்பேர் ஆயிருச்சாம். அதான்  அவரால வர முடியாம போயிருச்சாம். இன்னைக்கு காலைலயிருந்து நம்மள தேடிட்டு இருந்துருக்கார். கடைசியா என்ன பாத்துட்டு வந்து காச கொடுத்து … எக்ஸ்ட்ரா நூறு கொடுத்தார். ரொம்ப சாரி சாரின்னு சொன்னார். அவர ஒண்ணும் சொல்ல முடியல. வேற என்ன பண்ண? நானும் சரின்னு சொல்லிட்டு வாங்கிட்டேன்” 

“ம்ம்ம்… நம்ம நேரம் அப்படி இருந்திருக்கு.” 

“சரி, இரு… நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்” என்று புறப்பட்டான் சையது. 

ஒரு வாரம் கழித்து, இருவரும் மார்க்கெட்டில் மூட்டை தூக்கி முடித்துவிட்டு வெளியே வந்துக் கொண்டிருந்தனர்.  

வெளியில் நின்றிருந்த வயதான பெண்மணி ஒருவர் கழுத்திலிருந்த சங்கிலியை இழுத்து அந்த பெண்மணியை தள்ளி விட்டு பைக்கில் ஒருவன் சென்றான். அதிக கூட்டம் உள்ள இடம் என்பதால் முப்பது முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் தான் அந்த திருடனின் வண்டி செல்ல முடிந்தது. 

இதை பார்த்தக் கொண்டிருந்த முத்துவும் சையதும், வேகமாக அந்த வண்டியை விரட்டிச் சென்றனர். புயல் போல் இருவரும் ஓட சுற்றி இருந்தவர்கள் அனைவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருவரும் முழு வலிமையை கொடுத்து ஓடி சென்று பாய்ந்து அந்த வண்டியை பிடித்தனர். சற்று நேரத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் அவனை அடிக்க முற்பட்டபோது, போலீஸ் ஒருவர் வந்து அவனை பிடித்து அந்த சங்கிலியை அந்த பெண்மணியிடம் ஒப்படைத்தார். 

கூட்டம் முழுவதும் கை தட்டி இருவரையும் பாராட்டினார்கள். போலீஸ் இருவரையும் பாராட்டி அந்த திருடனை இழுத்துச் சென்றார்.  

அந்த கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், “குட் ஜாப்… சூப்பர்… நல்ல மனசு தம்பி உங்களுக்கு… உங்க உயிர பத்தி கவலை படாம இப்படி ஓடி புடிச்சுடீங்க.. வெரி குட்… என்ன தம்பி பண்ணுறீங்க?” என்றார். 

“ட்ரைவர் சார்… இப்போ ட்ரைவிங் வேல இல்ல. அதான் இங்க மூட்ட தூக்குறோம்.” 

“ம்ம்ம், சரிப்பா … நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு நான் சொல்லுற இடத்துக்கு வாங்க… நான் உங்களுக்கு நல்ல வேல வாங்கி தர்றேன்”என்று ஒரு விசிட்டிங் கார்டை தந்தார்.  

இருவருக்கும் வேலை தேடி வருகிற சந்தோஷத்தில் அந்த நபருக்கு நன்றி சொல்லி புறப்பட்டு டீ குடிக்க சென்றனர். 

டீ கடையில் அன்றைய பேப்பரை புரட்டிய போது, விளையாட்டு செய்திகளில், ‘தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் அகில இந்திய அளவில் நடந்த நூறு மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம்’ என்றிருந்தது. 

சையது ஆச்சர்யத்துடன், “டே, இது யாருன்னு தெரியுதா?” 

முத்துவும் திகைத்து நின்று, “எப்படி மறக்க முடியும் … இன்னும் அவர் முகம் என்னோட மனசுல ஓடுது… போன வாரம் இவரோட பைய தான எடுத்துட்டு ஓடுனேன்.” 

“பெரிய ஸ்போர்ட்ஸ் ஆளு போல டா… அதான் அந்த ஷூக்காக உன்ன துரத்திருக்கார்.” 

“ஆமா டா … எப்படியாவது அவரோட வீட கண்டுபிடிச்சு அவர் வீட்டுல அந்த பைய போட்டுட்டு வந்துருவோம்” என்றான் முத்து.  

“சரி டா … ஆனா பாரு பெரிய ஸ்போர்ட்ஸ் விளையாடுற அவராலயே உன்ன பிடிக்க முடியல… அப்போ நீ எவ்ளோ பாஸ்டா ஓடிருப்ப… நீ அந்த விளையாட்டு போட்டிக்கு போயிருந்தா முதல் பரிசு வாங்கிருப்ப…” 

“அட போடா, ஸ்கூல்ல படிக்கும் போது என்ன விட நீ பாஸ்டா ஓடுவ … நம்மள விட நம்ம கிரமத்துல எத்தனையோ பேர் வேகமா ஓடுவாங்க… அவங்களுக்கெல்லாம் ஓடுறது ஒரு விளையாட்டுன்னே தெரியாது. எல்லாருக்கும் விளையாட்ட பத்தி விழிப்புணர்வு வந்தா நம்ம நாடு விளையாட்டுல எங்கயோ போயிரும். ஆனா, அவங்கெல்லாம் படிப்புக்காக, வேலைக்காக, சாப்பாட்டுக்காக, குடும்பத்துக்காக தினம் ஓடிக்கிட்டு தான் இருக்காங்க. அது சரி, நமக்கு எதுக்கு அதெல்லாம்… வா, நாளைக்கு அந்த பெரியவர் சொன்ன வேலையில போய் சேருவோம்” 

மறுநாள் காலையில் இருவரும் அந்த பெரியவர் சொன்ன இடத்திற்கு சென்றனர். பெயர் பலகை ‘எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்றிருந்தது. இருவரும் உள்ளே சென்று அங்கிருந்த பெண்ணிடம் விசிட்டிங் கார்டை கொடுத்தனர்.  

“ஓகே… சார் நேத்தே போன் பண்ணி சொன்னார். சரி, நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கே உங்க ஐடி, டிரைவிங் லைசென்ஸ் குடுத்துட்டு ஜாயின் பண்ணிக்கோங்க. காலைல ஆறு மணிக்கு வரணும் மதியம் நாலு வரைக்கும் டூட்டி. டெய்லி நாலஞ்சு ட்ரிப் போகணும்” என்று கூறி இருவருக்கும் அவர்கள் ஓட்ட போகும் காரை காட்டினாள் அந்தப் பெண்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. “நன்றாகச் சாப்பாட்டின் ருசியினையும் , அருமையையும், பெருமையையும் தெரிந்தவனுக்குத்தான் அது பற்றி நன்கு தெரிந்திருக்கும் வாய்ப்புக்கள் அதிகம் . அவனுக்கு நன்கு ஓடவும் தெரிந்திருக்கும்.

    – ம.கி. சுப்ரமணியன்.”,
    ஜூலியட் கோர்ட் cul de saq,
    சேப்பல் ஹில்,
    வடக்குக் கரோலினா,
    யு.எஸ்.

தர்மம் வெல்லும்! (சிறுகதை) – ✍பெண்ணாகடம் பா.பிரதாப், கடலூர் மாவட்டம் 

வேர்கள் (சிறுகதை) – ✍ சிபி சரவணன், சென்னை