சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 13)
அது ஒரு கொடுமையான தருணம்! சுதந்திர போராட்ட வீரர் தியாகி ராஜலிங்கத்திற்கும் அப்படித் தான் இருந்தது. முற்றிலுமாக உலகம் ஒதுக்கி விட்டது போல் உணர்ந்தார்.
தனக்கும் தன் தம்பிக்கும் உடன் பிறந்த சகோதரியே செய்த துரோகத்தை எண்ணி எண்ணி, மனதில் அசை போட்டவாறே தன் வீட்டை அடைந்தார்.
வீட்டின் நடுவில் தியாகி ராஜலிங்கத்தின் அப்பா ராமசாமி முதலியாரின் படம் பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தது. தியாகி ராஜலிங்கத்தின் அப்பா நெல்மண்டி ராமசாமி என்றால் தெரியாத ஆட்களே கிடையாது. அது அவருடைய சொந்த ஊரில் மட்டும் அல்ல, சுற்றியுள்ள கிராமங்களிலும்
ஏனெனில், புசிக்க உணவில்லை என்று யாரும் அவரிடம் வந்து கூறிவிடக் கூடாது. உடனே அள்ளிக் கொடுத்து விடுவார், அப்படி ஒரு வள்ளல்.
ராமசாமி முதலியாருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளை. முதலாவது சுந்தராம்பாள். இரண்டாவது ராஜலிங்கம் மற்றும் கடைக்குட்டி வடமலை ஆவார்
ராமசாமி தன் மகள் சுந்தராம்பாளை, வதிட்டக்குடியிலுள்ள மிராசுதார் சோமசுந்தரத்தின் மகன் ‘வடமலை’க்கு திருமணம் செய்து வைத்தார்.
ராஜலிங்கமோ! ‘அண்ணல் காந்தி’ அவர்களின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு அதற்காக ஐந்து வருடம் ‘பீகார்’ சிறையில் அடைக்கப்பட்டு பின் இந்தியா சுதந்திரம் அடைந்த போது விடுவிக்கப்பட்டார்.
ராமசாமியின் இளைய மகனாகிய வடமலை, தன் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.
இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ராஜலிங்கம், தன் அக்காவே தன்னையும் தன் தம்பியையும் ஏமாற்றுவார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை
இப்படியாக பல எண்ணங்கள் தியாகி ராஜலிங்கத்தின் மனதில் உருண்டோடிக் கொண்டிருக்கும் போது, கோயிலுக்கு சென்று வந்த அவரது மனைவி ‘அசலாம்பா’ளும் அவரது ஒரே மகன் ‘பாண்டிய’னும் வீட்டிற்குள் நுழைந்தனர்
“என்னங்க எப்போ வந்தீங்க? கை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றாள் அசலாம்பாள்.
“எனக்கு பசிக்கல சின்னப்புள்ள. நீயும், பாண்டியனும் சாப்பிடுங்க” என்று மெல்லிய குரலில் கூறினார் தியாகி ராஜலிங்கம். தன் மனைவியை ‘சின்னபுள்ள’ என்று அழைப்பதே தியாகி ராஜலிங்கத்தின் வழக்கம்.
“அப்பா ஏன் ஓரு மாதிரி இருக்கீங்க? உடம்பு கிடம்பு சரியில்லையா?” என தன் பங்கிற்கு பேச தொடங்கினான் தியாகி ராஜலிங்கத்தின் மகன் பாண்டியன்.
“பாண்டியா, உனக்கு ஒரு விஷயத்தை சொல்லணும், அதை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை” என்றவாறே நடந்தவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் தன் மகன் பாண்டியனிடம் சொல்லத் தொடங்கினார் தியாகி ராஜலிங்கம்.
“நானும், உன் சித்தப்பன் வடமலையும் வெயில் மழையினு கூட பாக்காம நெல்லு, கரும்பு,வாழைன்னு பயிர் செஞ்சோம். அப்படி கொஞ்ச கொஞ்சமா சேத்த காசுல நம்ம ஊர் மெயின் ரோட்ல இருக்கிற ரெண்டரை சென்ட் இடத்தை, உங்க அத்தை ‘சுந்தராம்பாள்’ மூலமாக அஞ்சு லட்சம் ரொக்கமா கொடுத்து முடிக்க சொன்னோம். உங்க அத்தையும் வடமலை பேருல வாங்கிட்டன்னு சொல்லுச்சு. நானும் அதைக் கேட்டு ரொம்ப சந்தோஷம்னு சொல்லிபுட்டு நீர் பாய்ச்சரத்துக்கு வயலுக்கு போயிட்டேன்”
“சரிப்பா… எல்லாம் நல்லா தானே நடந்திருக்கு. இப்ப என்ன பிரச்சனை?”என்று கேட்டான் தியாகி ராஜலிங்கத்தின் மகன் பாண்டியன்.
“சரியா நடக்கல, எல்லாமே தப்பா போயிடிச்சு பாண்டியா, தப்பா போயிடிச்சு. உன் அத்தை மேல நானும் உன் சித்தப்பன் வடமலையும் வச்ச நம்பிக்கை எல்லாம் தப்புக் கணக்கா போயிடிச்சு. உன் அத்தை நமக்கு துரோகம் பண்ணிட்டா. உன் சித்தப்பன் ரா.வடமலை பேர்ல இடத்தை வாங்குறதுக்கு பதிலாக, தன் புருஷன் சோ.வடமலை பேர்ல இடத்தை வாங்கிட்டா”
தியாகி ராஜலிங்கத்தின் பேச்சைக் கேட்ட அவரது மனைவி அசலாம்பாளும், மற்றும் மகன் பாண்டியனும் ஆடிப் போய்விட்டனர்.
“அப்பா நீங்க பணம் கொடுக்கும் போது கூட யாராவது இருந்தாங்களா?” வக்கீல் கணக்காக பாண்டியன் கேள்வி கேட்டான்.
உண்மையில், தியாகி ராஜலிங்கத்தின் மகன் பாண்டியன், ‘சென்னை லயோலா கல்லூரியில் சட்டம் பயின்றவன். அதனாலே, தன் அப்பா பணம் கொடுத்ததற்கு ஏதாவது சாட்சி இருக்ககிறதா என்பதனை கேட்டு விட்டான்.
தியாகி ராஜலிங்கம் ‘இல்லை’ என்பது போல தலையசைத்தார். விதி இப்படித் தான் சிலர் வரையில் விளையாட தொடங்கிவிடும்.
தியாகி மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் பாண்டியன் ஆகிய மூவரையும் கவலை கவ்விக் கொண்டிருக்கையில், வெளியூர் சென்றிருந்த ராஜலிங்கத்திற்கு ஆசையான தம்பி வடமலையும் வீட்டிற்குள் நுழைந்தார்.
அண்ணன் ராஜலிங்கம் விஷயத்தை சொல்ல, வடமலை மௌனத்தில் ஆழ்ந்து வீட்டின் ஒரு மூலையில் படுத்து உறங்கிவிட்டார். வீட்டில் மௌனம் மட்டுமே பேசியது. இரவு மெல்ல மெல்ல இருட்டை விழுங்கிக் கொண்டிருந்தது.
மறுநாள் எப்பொழும் போலவே பொழுது புலர்ந்தது, ஆனால் ராஜலிங்கததின் வீடு மட்டும் இருண்டே இருந்தது. இரவு படுக்கையில் படுத்த வடமலை காலை எழுந்திருக்கவில்லை.
தியாகி ராஜலிங்கத்தின் தம்பி வடமலை திருமணம் செய்துக் கொள்ளாமலேயே தன் அண்ணன் குடும்பத்திற்காகவே மாடாக உழைத்த மா மனிதன்.
வற்றாத அருவி போல தியாகி ராஜலிங்கத்தின் கண்களில் கண்ணீர். அவரைச் சுற்றி அக்கம் பக்கத்தில் உள்ள அத்தனை பேருமே அமர்ந்து கொண்டிருந்தனர். அசலாம்பாள் ஒரு மூலையில் பெண்களோடு பெண்களாக மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள்.
பாண்டியனுக்கும் மனதில் கவலை இருந்தது இறந்தது தன் சித்தப்பாவாயிற்றே. இருப்பினும் அதனை வெளியேக் காட்டிக் கொள்ளாமல் பாண்டியன் மட்டுமே ஒரு தீர்க்கமான முடிவோடு நடக்க வேண்டியவைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் தியாகி ராஜலிங்கத்தின் சகோதரியான சுந்தராம்பாள்,அவள் கணவன் வடமலை மற்றும் இரண்டு மகன்கள் சுப்ரமணியம் மற்றும் ராஜேந்திரனுடனும்… ராஜலிங்கம் வீட்டிற்குள் வருவதற்காக தெருவில் வந்து கொண்டிருந்தனர்.
வீட்டிற்கு வெளியே வந்து கொண்டிருந்த சுந்தராம்பாள், அவள் கணவன் வடமலை மற்றும் இரண்டு மகன்கள் சுப்ரமணியம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரைக் கண்டதும் மிகுந்த கோபத்தோடு பார்த்துக் கொண்டே இருந்த ராஜலிங்கம் பின்னர், வீட்டிற்குள் நுழைய முற்பட்ட சுந்தராம்பாளை, ராஜலிங்கம் “எங்க வந்த? வெளிய போ!” என்று கடும் கோபத்துடன் கூறினார்.
தியாகி ராஜலிங்கம் மற்றும் இறந்த அவரது தம்பி வடமலையின் அக்காவாகிய சுந்தராம்பாள், ஏதும் அறியாதவளைப் போல நீலிக் கண்ணீர் வடித்தாள்.
‘பணத்திற்கு பணமும் போச்சு, இப்போது தம்பியும் போய் விட்டானே. இந்தக் கொடுமையை யாரிடம் போய் சொல்லி அழுவது? ஐயோ… எல்லோரும் பணம் அஞ்சு லட்சம் கொடுத்ததற்கு என்ன அத்தாட்சி என்று கேட்பார்களே. பணம் கொடுக்கும் போது தானும், தன் தம்பி வடமலையும் அஞ்சு லட்சம் ரூபாயை தன் அக்காவிடம் கொடுத்தோம் என்று பதில் சொன்னால் அஞ்சு லட்சத்துக்கு ஒரு துண்டு சீட்டுக் கூடவா எழுதி வாங்கவில்லை என்பார்கள்
பணம் கொடுத்ததற்கு சாட்சியாக இருந்த தன் தம்பி வடமலையும் இப்போது இறந்து விட்டான்’ என்று ராஜலிங்கம் தன் மனதிற்குள் நினைத்து வருந்திக் கொண்டு இருந்தார். தன் தம்பி இறந்ததிலிருந்து இதனையே மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாக தியாகி ராஜலிங்கத்தின் தம்பி வடமலையின் இறப்பிற்கு வந்த ஊர்மக்கள் ஒன்று கூடி ராஜலிங்கம் மற்றும் அங்கிருந்த சுந்தராம்பாள் குடும்பத்தினரிடமும் ‘உங்க குடும்ப விஷயத்தை அப்புறம் பேசி முடிச்சுக்கோங்க. ஆயிரமே இருந்தாலும் இறந்து போன வடமலை சுந்தராம்பாளுக்கும் உடன்பிறந்த சகோதரன் தான், அதனால இப்போது நடக்க வேண்டியதை பாருங்க’ என்றனர்.
இறுதியாக இறுதி சடங்கும் நடந்து முடிந்தது. நாட்கள் கடந்தன.
சுந்தராம்பாள் வீடு…
“வீட்ல யாருங்க?” போஸ்ட்மேன் குரல் ஒலித்தது. சுந்தராம்பாள் வீட்டிற்கு வெளியே சென்று போஸ்ட்மேன் கொடுத்த கவரை வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றாள்.
“என்னம்மா கவர்?” என்று சுந்தராம்பாள் மகன் சுப்ரமணியன் கேட்டான். சுந்தராம்பாள் சுப்ரமணியத்திடம் கவரைக் கொடுத்து அதனை பிரித்து படிக்கச் சொன்னாள். பின்னர் சுந்தராம்பாள் கணவர் வடமலையும் மகன் ராஜேந்திரனும் படித்து முடித்தனர்.
அந்த கவரைப் பிரித்து படித்து முடித்ததும் யாவரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.
ஏனெனில் தியாகி ராஜலிங்கத்தின் மகன் வக்கீல் பாண்டியன், சுந்தராம்பாள் மீது வழக்கு தொடுத்திருந்தான். அதன் நிமித்தமாக கோர்ட்டிற்கு வருகின்ற திங்களன்று ஆஜராக சொல்லி வக்கீல் நோட்டீசும் நீதிமன்ற உத்தரவும் இருந்தது.
திங்கட்கிழமை…
கடலூர் கோர்ட்டில் ராஜலிங்கத்தின் குடும்பத்தினரும் மற்றும் ராஜலிங்கத்தின் அக்கா சுந்தராம்பாள் மற்றும் அவரது குடும்பத்தினரும் ‘கீரியும் பாம்பும்’ போல காட்சியளித்தனர்
தியாகி ராஜலிங்கத்தின் சார்பாக அவரது மகன் பாண்டியன் வக்கீலாக ஆஜராகி இருந்தான். தியாகி ராஜலிங்கத்தின் அக்கா சுந்தராம்பாள் எதிர்தரப்பு வாதத்திற்காக, சென்னையிலுள்ள பிரபலமான வக்கீல் ‘வெற்றி மாறனை’ தனக்காக வாதாட ஏற்பாடு செய்திருந்தாள்.
வழக்கு தொடங்கியது…
விசாரணை கூண்டில் நிற்கும் தியாகி ராஜலிங்கத்தை வெற்றி மாறன் கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.
“உங்க பேரு?”
“என் பேரு ராஜலிங்கம்.”
“என்ன வேலை செய்றீங்க?”
“நான் ஒரு சுதந்திர போராட்ட தியாகிங்க. மகாத்மா காந்தியோட அகிம்சை கொள்கையாள ஈர்க்கப்பட்டு, வெள்ளையர்களுக்கு எதிராக போராடினேன். அதன் நிமித்தமாக ஜெயிலில் அடைபட்டு கிடந்தேன். நம்ம நாடு சுதந்திரம் அடைந்ததும் என்னையும் விடுவிச்சுட்டாங்க. அதுக்கப்புறம் விவசாயம் பார்த்து பொழச்சிக்கிட்டு வரேங்க” என்றார்
“உங்களுக்கு சுந்தராம்பாள தெரியுமா?”
“தெரியுமுங்க, என் உடன்பிறந்த அக்காள். ஆனால் இப்போ எனக்கும், என் தம்பி வடமலைக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தை செஞ்சி எங்களுக்கு துரோகி ஆயிட்டா. என் தம்பி வடமலையும் அந்த ஏக்கத்துலேயே போய் சேந்துட்டான்”
“கடைசியாக உங்க அக்கா சுந்தராம்பாளை எங்க வச்சி பாத்தீங்க?”
“என் தம்பி வடமலை சாவுல”
“அதற்கு முன் எப்போ பாத்தீங்க?”
“நானும், என் தம்பி வடமலையும், தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம்,வதிட்டக்குடி வட்டம், வதிட்டக்குடி மெயின் ரோட்டுல இருக்கிற ஒரு இடத்தை பேசி முடிக்க சொல்லி எங்க அக்கா சுந்தராம்பாகிட்ட அஞ்சு லட்சம் ரூபாயை கொடுத்தோம். அதுதான் கடைசியா பார்த்தது.”
“ ‘மிஸ்டர்’ ராஜலிங்கம் நீங்க சொன்னதுல பாதி உண்மை ! பாதி பொய் !”
“என்ன பொய்யா?”
“ஆமா நீங்களும் உங்க தம்பியும், உங்க அக்காவை பார்க்க போனது உண்மை. நீங்க ரெண்டு பேரும் அஞ்சு லட்சம் கொடுத்ததாக சொல்றது பொய்”
“இது என்ன கொடுமை? சாமி சத்தியமா அஞ்சு லட்ச ரூபாய நானும், என் தம்பி வடமலையும் எங்க அக்கா சுந்தராம்பாகிட்ட கொடுத்தோம்”
“பொய்! பொய்! நீங்க சொல்றது அப்பட்டமான பொய். நீங்களும் உங்க தம்பியும் அந்த இடத்தை வாங்குறத்துக்கு, உங்க அக்காக்கிட்ட பணம் அஞ்சு லட்சம் கடனாக கேட்டுறிக்கீங்க. உங்க அக்கா பணம் இல்லைன்னு சொன்னதும், இப்போ அபாண்டமாக ‘பொய் வழக்கு’ போட்டு உங்க அக்காவையும், அவங்க குடும்பத்தையும் அவமானப்படுத்த நினைக்கிறீங்க.”
வக்கீல் வெற்றிமாறனின் வாதத்தைக் கேட்ட சுதந்திர போராட்ட தியாகி ராஜலிங்கத்தின் இதயத்தில் இடி விழுந்த மாதிரி இருந்துது.
தியாகி ராஜலிங்கத்திற்கு பணம் போனது கூட பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், பொய் சொன்னதாக சொன்னதும் ஏமாற்றப்பட்டதும் அவற்றின் உள்ளத்தை முள்ளாகக் குத்தியது.
ஒரு காசா…? இரு காசா…..?
அஞ்சு லட்சம் அல்லவா?
இவ்வளவு பெரிய தொகையை எந்த ஒரு ஆவணமும் இல்லாம தானும், தன் தம்பி வடமலையும் உடன்பிறந்த சகோதரியான சுந்தராம்பாளை நம்பி கொடுத்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று அப்போது தான் புரிந்தது தியாகி ராஜலிங்கத்திற்கு. என்ன செய்வது கலி காலத்தின் விதி.
உடனே வக்கீல் வெற்றி மாறனின் வாதத்தைக் கேட்ட தியாகி ராஜலிங்கம் “இவர் சொல்றது பொய் பொய்” என்றவாறு அலறத் தொடங்கினார்.
“மிஸ்டர் ராஜலிங்கம் நீங்க இங்க அழறதாலயோ அல்லது பொலம்பறதாலயோ ஒரு பிரையோஜனமும் இல்லை. நீங்க பணம் கொடுத்தது உண்மையாக இருந்தால்அதற்கு யார் அல்லது என்ன சாட்சி? எதன் அடிப்படையில் நீங்களும் உங்க தம்பியும் உங்க அக்காவிடம் பணத்தைக் கொடுத்தீங்க?” என்று நீதிபதி வெங்கடாசலம் நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி கேட்டார்.
“நான் பணம் கொடுத்ததற்கு ஒரே சாட்சி என் தம்பி வடமலை தான். எங்க அக்காவுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்திருந்தால் இவ்வளவு தூரம் கோர்ட் படியேற வேண்டிய அவசியமே இல்லை. இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்க” என்று சொல்லிவிட்டு ராஜலிங்கம் பார்வையாளர்கள் இடத்தில் அமர்ந்து விட்டார்.
தியாகி ராஜலிங்கத்தின் வாக்குமூலத்தை கேட்ட பிறகு, எதிர் தரப்பு வக்கீலான தியாகி ராஜலிங்கத்தின் மகனுமாகிய பாண்டியனை வாதாட நீதிபதி அழைத்தார்.
விசாரணைக் கூண்டில் நிற்கும் தன் தந்தை ராஜலிங்கத்தின் உடன்பிறந்த சகோதரியான சுந்தராம்பாளை கேள்வி கேட்கத் தொடங்கினான் வக்கீல் பாண்டியன்.
“உங்க பேரு?”
“சுந்தராம்பாள்”
“உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?”
“நான் அந்தக் காலத்து ஆறாங்கிளாஸ். எனக்கு தமிழ்ல நல்லா எழுதவும், படிக்கவும் தெரியும்.”
“நீங்க பொறந்த வீட்ல எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரியுமா?”
“எங்க அம்மா ‘வள்ளியம்மை’யைத் தவிர, எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரியும்”
பாண்டியன் சில பழைய காகிதங்களை காண்பித்து “இது யாரோட கையெழுத்து என்று தெரியுமா?” என்றான்.
“இது இது… எங்க ஐயா ராமசாமி கையெழுத்து.”
“கரெக்ட்”
தியாகி ராஜலிங்கத்தின் மகன் வக்கீல் பாண்டியனின் விசாரணையில் குறுக்கிட்ட வக்கீல் வெற்றி மாறன், “அப்ஜெச்ஷன் யுவர் ஹானர், எதிர் தரப்பு வக்கீல் பாண்டியன் வழக்கிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு என் கட்சிகாரரான சுந்தராம்பாளை குழப்புகிறார்” என்றார்.
“இல்லை யுவர் ஹானர், நான் கேட்கும் கேள்விகளுக்கும், வழக்கிற்கும் சம்பந்தம் உண்டு” என்று வக்கீல் பாண்டியன் கூறினான்.
அடுத்து ஒரு கையெழுத்தைக் காண்பித்து, “இது யாருடையது?” என்றான் வக்கீல் பாண்டியன்
“இது என் உடன்பிறந்த தம்பி வடமலையின் கையெழுத்து” என்றாள் சுந்தராம்பாள்
அடுத்து ஒரு காகிதத்தின் முக்கால்வாசி பகுதியை மடித்து விட்டு கடைசியாக இப்படிக்கு ரா.வடமலை என்று எழுதியிருந்த பகுதியை மட்டும் காண்பித்து “இது யார் கையெழுத்து?” என்றான் வக்கீல் பாண்டியன்.
சுந்தராம்பாள் சிரித்துக் கொண்டே, “இதுவும் என் தம்பி கையெழுத்து தான்” என்றும் அது மட்டுமல்லாமல் தெளிவாக “ரா. வடமலைன்னு என் தம்பி கையெழுத்தும் இருக்கு” என்றாள்
“சரி! நீங்க போகலாம்” என்று கூறிய வக்கீல் பாண்டியன் தன் தரப்பு வாதம் முடிந்ததாக கூறி, கடைசியாக சுந்தராம்பாளிடம் காண்பித்த காகிதத்தை நீதிபதியிடம் ஒப்படைத்தார்
நீதிபதியும் காகிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.
அன்புள்ள அண்ணன் ராஜலிங்கத்திற்கும் அக்கா சுந்தராம்பாளுக்கும் தம்பி வடமலை எழுதிக் கொண்டது
அக்கா நாம் மூவரும் எவ்வளவு அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்தோம்.
உன்னை அக்காவாக எண்ணியதை விட ‘அம்மாவாகவே’ எண்ணி வந்தேன். நீ இப்படியொரு துரோகத்தை செய்வாயென கனவிலும் நினைக்கவில்லை.
போனது போகட்டும்! நமக்குள் சண்டை சச்சரவு வேண்டாம். நானும் அண்ணனும் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேர்த்து வைத்திருந்த பணத்தை திரும்பக் கொடுத்து விடு. இல்லையேல், அந்த இடத்தையாவது அண்ணன் ராஜலிங்கத்தின் பெயரிலாவது மாற்றி எழுதி விடு.
அந்த பணத்தை வைத்து தான் நானும் அண்ணன் ராஜலிங்கத்தின் குடும்பமும் எங்கள் எதிர்காலத்தையும் தீர்மானித்துள்ளோம்.எங்களை ஏமாற்றி விடாதே, உன்னை நாங்கள் நம்பியதற்கு எங்களுக்கு தண்டனையை கொடுத்து விடாதே.
அண்ணா, என்னால் துக்கம் தாங்க முடியவில்லை. நம் அக்கா சுந்தராம்பாள் பணமாகவோ அல்லது இடமாகவோ திருப்பி கொடுத்தால் நல்லது.
அப்படி இல்லையேல், இந்தக் கடிதத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டு வழக்கை தொடுத்து விடுங்கள். இது துரோக பூமி! நம் உடன் பிறந்த அக்கா சுந்தராம்பாள் (இல்லையில்லை நம் உடன்பிறந்த அக்கா என்று சொல்வதற்கே என் மனம் வருந்துகிறது) செய்த துரோகத்தை எண்ணி எண்ணி என் இதயம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறது
நன்றி.
இப்படிக்கு. ரா. வடமலை.
இவ்வாறு இருந்த கடிதத்தை படித்து முடித்த நீதிபதி அவர்கள், வழக்கின் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட சுந்தராம்பாளுக்கு ஏழு வருட சிறை தண்டணை வழங்கியும் மேலும் தன் உடன்பிறந்த சகோதரனிடம் சுந்தராம்பாள் ஏமாற்றிப் பெற்ற நிலத்தை தியாகி ராஜலிங்கத்திடமே ஒப்படைக்கச் சொன்னார்.
தியாகி ராஜலிங்கத்திடம், “நீங்கள் நாட்டிற்காக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்று வந்தவர்.நல்லவர்கள் என்றுமே வாழ்வார்கள், அதனை யாராலும் தடுக்க முடியாது. நீதி ஒரு நாளும் தோற்று விடாது” என்று வாஞ்சையோடு கூறினார்.
அதுமட்டுமன்றி, இந்த வழக்கில் சிறப்பாக நீதிக்காக வாதாடிய சுதந்திர போராட்ட தியாகி ராஜலிங்கத்தின் மகனான வக்கீல் பாண்டியனையும் பாராட்டினார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கீதைப்படி, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆயினும் இறுதியில் தர்மமே வெல்லும்”
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads – Amazon Deals 👇
தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
Thanks
உள்ளதை உள்ள படி எழுதிய உங்களுக்கு மணமார்ந்த நன்றிகள்
மிக்க நன்றி இனிய நண்பரே