in ,

வரம் தந்த பந்தமே ❤ (சிறுகதை) – ✍ வீரலட்சுமி, தூத்துக்குடி

வரம் தந்த பந்தமே ❤ (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 118)

யற்கை காற்றை சுவாசித்தபடி, அலையின் சீற்றத்தை ரசித்தபடி விழிகள்  இரண்டும் கடலின்  அழகில் மெய்மறந்து கடலோர மணலில் அமர்ந்திருந்தாள்  சுஜிதா

சுஜிதாவின் நினைவில் பழைய  ஞாபகங்கள் அவளின்  கண்முன்னே  அலைகள்  போல  அலையடித்துக் கொண்டே  வந்து சென்றது. எதை மறக்க வேண்டும் என்று  நினைத்தாளோ, அந்த நினைவுகளே கண்முன் தோன்றி  தோன்றி  மறைந்து போனது

கண்களை மூடி இரண்டு வருடங்களுக்குப் பின் சென்றாள்…

காலை சீக்கிரமாக எழுந்து பள்ளிக்குக் கிளம்பி கொண்டு இருந்தாள் சுஜிதா. பி. எஸ்.சி, பி.எட் கணிதம் முடித்திருந்தாள். அவளுடைய தகுதிக்கு ஏற்றாற் போல  உள்ளூரிலேயே வேலை  கிடைத்தது

வீட்டில் உள்ளவர்களும் சந்தோஷப்பட்டார்கள். பணியை முடித்து வீட்டுக்கு வந்ததும், அருகில் உள்ள குழந்தைகளுக்கும் மாலையில் பாடம் சொல்லி கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாள்

இப்படியே அவளுடைய வாழ்க்கை கடந்து கொண்டிருந்தது. எப்போதும்  பள்ளிக்கு அப்பா பாலகுமாரன் தான் பைக்கில் டிராப்  செய்வார்கள். ஆனால்  எதிர்பாராத  சூழ்நிலையில்  அவங்க  அப்பாவுக்கு அவசரமான  வேலை  வந்ததால்,  தன்  மகளை பஸ்  ஸ்டாப்பில் இறக்கி விட்டு சென்றார்

பேருந்திற்காக காத்திருந்த சுஜிதா, கையில் உள்ள வாட்ச்சை பார்த்தபடியே டென்ஷனில் இருந்தாள். ‘இன்னிக்குனு  பார்த்து இவ்வளவு நேரம் ஆகுதே, பள்ளிக்கூடத்தில் இன்ஸ்பெக்ஷன். நான் வகுப்பில்  இல்லையென்றால்  அவ்வளவு  தான்.. எப்படியாவது போகனும்’ என்று பலத்த  யோசனையில்  இருந்தாள்

அந்த சமயத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மழை வந்து விடுமோ என பயத்தோடு வானத்தையே பாரத்தபடி இருந்தாள். மழை வந்து விட்டது, மழையில் நனையாமல் பஸ் ஸ்டாப்பின் ஓரமாக நின்றிருந்தாள் சுஜிதா

காருக்குள்ளேயே இருந்த டிரைவருக்கு பாதை சரியாக புலப்படாததால் காரை நிறுத்த, “எதற்காக காரை  நிறுத்துனீங்க” என  வினவினான்  ஹரிஹரன்

“ஹரிஹரன் சார்… இதற்கு அப்புறம் எந்த வழியாக போகணும்னு  தெரியல, நீங்க சொல்லுங்களேன்” என  தயக்கத்துடன் கேட்டார்

“எனக்கும் சரியா தெரியல, அப்பாவிடம் கேட்கனும். ஆனா போன் சிக்னல் சரியா இல்ல, வேற யார்கிட்டயாச்சும் கேளுங்க ப்ளீஸ்”

“சார், மழை வேற பெய்ய ஆரம்பித்து விட்டது, யாரை சார் கேக்கறது, ஆள் நடமாட்டமே காணோம்”

“நல்லா பாருங்க, பஸ் ஸ்டாப்பில் யாராவது இருப்பாங்க” என்றான் ஹரி..

ஓரமாக ஒரு பெண் நின்றதைக் கவனித்தவர், மெதுவாக காரை அழுத்தி அந்த பெண் முன் காரை நிறுத்தினார்

சேலையை வைத்து முகத்தை மூடியிருந்தாள் சுஜிதா

“ஏம்மா…குலமங்கலம்  கிராமத்திற்கு எவ்வளவு தூரம் போகணும்?” என சுஜிதாவிடம் கேட்டார் டிரைவர்

“அண்ணா… இன்னும் கொஞ்சம் தூரம் போகணும். நீங்க போகிற  வழியில் தான் நான் இறங்குகிற பள்ளிக்கூடம் இருக்கு,  என்னை டிராப் பண்ணிடுவீங்களா, அப்படியே வழி சொல்லிடறேன். ப்ளீஸ்  முடியாதுனு மட்டும் சொல்லிடாதீங்க. மணி  வேற ஒன்பது ஆயிடுச்சு. நான் குலமங்கலம் ஊருல் உள்ள பள்ளியில தான் பணிபுரிகிறேன்”

உள்ளே இருந்த ஹரி, “யாரு இவ… நம்ம பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கிறேனு சொல்கிறாளே” என உள்ளே இருந்து அவளை நோக்கினான்

அவளது முகம் சேலையால் மூடியிருக்க, உள்ளேயிருந்த ஹரி அவளின் மேல் விழிகளைப் பதித்தான்

டிரைவரும் அந்த பெண்ணுக்காக உள்ளுக்குள்ளே அமர்ந்திருந்த ஹரி சாரிடம் பர்மிஷன் கேட்க, “சரி சரி… வரச் சொல்லுங்க” என்றதும் டிரைவர் காரைத் திறந்து விட சுஜிதா வண்டியில் ஏறினாள்

அப்போது தான் அவளை ஹரிஹரன் முதன்முதலாக பாரத்தான். மாநிறமாக இருந்தாலும், மிகவும் இலட்சணமாக இருந்தாள். அவள் பேசும் போது குரலும் இனிமையாக தான் இருந்தது. பிறகு ஹரிஹரன் மௌனமாய் கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கினான்

பின்னால் அமர்ந்திருந்தவரை முன்பக்கம்  உள்ள  கண்ணாடியில்  நோக்கினாள் சுஜிதா. ‘இளவயசு பையன் மாதிரி தான்  இருக்கிறார், ஆளும்  பார்க்க நல்லா தான் இருக்குறான்’ என  தனக்குத் தானே பேசிக் கொண்டாள்

‘ஆனாலும் கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டே புக் படிக்கறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு’ என புன்னகைத்தாள்

சுஜிதா சிரித்துக் கொண்டிருந்ததைக் கவனித்த டிரைவர், “ஏம்மா சிரிக்குற?” எனக் கேட்க

“அதெல்லாம் ஒன்னுமில்ல, நீங்க  கொஞ்சம்  சீக்கிரமாக போங்க எனக்கு லேட் ஆயிடுச்சு”

“நீ  எங்கம்மா போற? என்ன  வேலை  பார்க்குற? உனக்கு இந்த ஊரு தானா?”

“அண்ணா, பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கும்  இதே ஊரு தான், குலமங்கலத்தில்  போகிற வழியில் தான் பள்ளிக்கூடம் உள்ளது” என  சொல்லிக்கிட்டே வர அவள்  இறங்கும்  இடம்  வந்ததும்

“நிறுத்துங்க அண்ணா” என்றாள்

“என்னம்மா… அதுக்குள்ளேயும்  ஊர்  வந்துருச்சா?”

“இல்லைணா… பள்ளிக்கூடம் வந்துடுச்சு”

“பள்ளிக்கூடமா, அது எங்க இருக்குது மா?”

“அண்ணா… கொஞ்சம் வெளியே வந்து இடதுப்பக்கமாக பாருங்க தெரியும்” என்றாள்

“இருக்கட்டும் மா… எனக்கு லேட் ஆயிடுச்சு, இன்னொரு நாள்  பாரத்துக் கொள்கிறேன்” என்றார்

“ஓகே ரொம்ப நன்றி அண்ணா. நீங்க கேட்ட முகவரி நேராக போய்  இடதுப்பக்கம் திரும்பினால் ஒரு பெரிய அரசமரம் இருக்கும். அதுக்குப் பக்கத்தில் ஒரு  பஸ் ஸ்டாப்பைத் தாண்டி போங்க, அந்த  கிராமம்  வந்துடும்” என்று  சொன்னாள்

“நன்றி மா” என டிரைவர் கூற

பதிலுக்கு “வெல்கம் அண்ணா” என்று கூறி விடைபெற்றாள்

“சார், அந்த பெண் உங்களைப் பார்த்து தான் சிரிச்சா, அது உங்களுக்கு தெரியுமா?”

“ஆமாம் டிரைவர், நானும் கவனித்தேன்” என்றவன் ‘அவள் இந்த  பள்ளியில் தானே வேலை பார்க்கிறாள், நான் கவனித்துக் கொள்கிறேன்’ என மனதிற்குள்  நினைத்தான்

“முதலில் அப்பாவுக்குப் போன் செய்து சொல்லுங்க, நம்ம பள்ளிக்கூடத்தில் அருகில் தான் இருக்கிறோம் என்று” எனவும், அப்பா சோமுராஜ் எண்ணுக்கு அழைத்தான் ஹரிஹரன்

“நேராக பள்ளிக்கு வர வேண்டியது தானே”

“இல்ல ஐயா… அவங்க வீட்டுக்குச் சென்று ப்ரஷ் ஆகி விட்டு தான் வருவாராம்”

“சரிப்பா” என போனை துண்டித்தார்

“அப்பாடா… நம்ம வகுப்பிற்குள் வந்தாச்சு… இனி பயமில்லை” என்று பெருமூச்சு விட்டாள் சுஜிதா

மாணவர்கள் எல்லாரும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்

சுஜிதா, “கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்

உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடன் வகுப்பை ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் விரைவாய் ஓடி வகுப்பும் முடிந்து வெளியே வந்தாள்

“சுஜிதா…சுஜிதா…” என யாரோ அழைக்க, திரும்பி பார்த்தவள், அங்கு பத்மா வந்து கொண்டிருப்பதை பார்த்து நின்றாள்

“பத்மா… உடம்புக்கெல்லாம் பரவாயில்லயா? நீ எப்ப வந்த?”

“ம்ம்ம்… பரவாயில்லை. இன்னிக்கும் இன்ஸ்பெக்ஷ்னு சொன்னாங்க இல்ல”

“ஆமாம், நேற்று தான் சொன்னாங்க”

“அது தான் இல்லை, இன்று நம் தலைமையாசிரியர் மகன் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளாராம். நமது பள்ளியை இனி அவர் தான் வழி நடத்திச் செல்வாராம். ஆனா அவர் நம்ம தலைமை ஆசிரியரை விட விட ரொம்ப கறார் பேர்வழியாம்”

“உனக்கு இதெல்லாம் யாரு சொன்னாங்க பத்மா? இன்னும் உனக்கு ஒட்டு கேட்கற பழக்கம் போகலயா?” எனக் கிண்டலாக கேட்டாள் சுஜிதா

“ஹேய் சுஜி, நான் ஒட்டுக் கேட்கல, விசாரித்துட்டு வந்தேன். அதான் உன்கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். எனக்கு அடுத்த கிளாஸ் ஆரம்பமாகிடுச்சு, அப்புறம் பாரக்கலாம்” என விரைந்து சென்றாள் பத்மா

வீட்டிற்குச் சென்ற ஹரிஹரன், சுற்றி சுற்றி பார்த்தான். அவனுக்கும் அந்த இடம்  மிகவும் பிடித்திருந்தது

அந்த இயற்கையான காற்று, காற்றோட்டமான சூழல், அனைத்தும் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது 

‘பள்ளிக்குக் கிளம்புவோம், அப்பா நமக்காக காத்து கொண்டிருப்பார்’ என ஹரிஹரன் கிளம்பி வர, “தம்பி டிபன் ரெடி ஆயிடுச்சு, சாப்டுட்டு போங்க” என பணியாள் அழைக்க

“அப்பாவைப் பாத்துட்டு வரேன்” என  வாசலை  நெருங்கியவன், “அதற்குள் அப்பாவே  வந்து விட்டார்” என புன்னகையுடன் நின்றான்

“அப்பா” என கட்டி தழுவ

“ஹரி, மை டியர் சன். ஹவ்  ஆர் யூ?”

“ஐ யம் பைன் டாடி”

சிறிது நேர அரட்டைக்கு பின், “பள்ளிக்கூடத்தில் இப்போது நல்ல முன்னேற்றம் உள்ளது, ஆனாலும் பணிச்சுமை தான் அதிகமாக உள்ளது” என தந்தை கூற

“அப்பா, நான் தான் வந்துட்டனே, இனி நான் பாத்துக்கறேன்” என்றான் பிள்ளை 

நீண்ட நாட்கள் கழித்து, இருவரும் ஒன்றாக சாப்பிட்டார்கள்

“அப்பா, பள்ளிக்கு போவோம்மா?”

“போகலாம்” என கிளம்பினார்

பள்ளியை அடைந்ததும்  காரை விட்டு இறங்கிய ஹரிஹரன், இரு மாணவர்கள்  சண்டையிட்டுக் கொண்டதை கண்டு தடுக்க சென்றார். அதற்குள்ளேயும் சுஜிதா அந்த மாணவர்களின் அருகில் சென்றிருந்தாள்

நிறைய மாணவ மாணவர்களும் கூட்டம் கூடினர்

வேகமாக வந்த சுஜிதா, இருவருடைய கைகளைப் பிடித்து இழுத்து சமாதானப்படுத்த முயற்சித்தாள். ஆனாலும் இருவரும் சமாதானம் ஆகாமல் சண்டையிட்டுக் கொண்டே இருந்தார்கள்

மீண்டும் இருவரிடமும் ஓங்கி குரல் கொடுக்க, சட்டென நிசப்தமானது அந்த இடம்       

சுஜிதா கோபமாக பேசியதை இதுவரை பார்த்திராத மாணவர்கள் விழித்து நிற்க, “வகுப்பறைக்கு  போங்க” எனக் கட்டளையிட்டாள் அவள் 

“நீங்க இரண்டு பேரும்  மட்டும் நில்லுங்க” என சண்டையிட்ட மாணவர்களை நிறுத்தினாள் 

“சீனு, கவின்… உங்க இரண்டு பேருக்கும் கால் வலிக்கிறதா?”

“எஸ் டீச்சர்”

“சீக்கிரம்  உஉக்காரணுமா வேண்டாம்மா?”

“டீச்சர்  இப்பவே  உக்காரணும்” என  கவின்  கூற

“உங்களிடம்  ஒரு கேள்வி கேட்பேன், அதற்கான  சரியான  பதில்  வரணும். அப்படி மட்டும் வரவில்லை என்றால்  நாளைக்கு வரும் போது உங்களுடைய பெற்றோர்களை அழைச்சுட்டு தான்  வரணும்” எனச் சொன்னதும்,  இருவரும் திடுக்கிட்டனர்

“எதுக்காக சண்டை போட்டீங்க?”

“டீச்சர், எப்போதும்  மதியம்  வகுப்பு ஆரம்பிக்கும் போது நான்  தான் ஆபிஸ் ரூமில்  போய்  ரிஜிஸ்டர்  எடுத்துட்டு வருவேன். ஆனா இன்னிக்கு இவன் போய்  எடுத்துட்டு வந்துட்டான்” எனக் கவின்  குறை கூற

“இல்லை டீச்சர், சண்டை அதுக்காக போடவில்லை, இவன்  என்னை  மரியாதை இல்லாமல் பேசி விட்டான். எனக்கு படிக்க தெரியாதாம், எனக்கு கணக்கு சரியாக வராதாம், நீ  முட்டை மார்க் எனச் சொல்லி சொல்லி கிண்டல் பண்றான். இவன்  நல்லா படிக்கிறதால தான்  எல்லா ஆசிரியர்களும் இவனிடம் பொறுப்பை  கொடுக்கிறாங்களாம்” என புகார் வாசித்தான் சீனு

சுஜிதா சற்று  யோசித்து, “இங்க பாருங்கடா, நீங்க ஒருவர் மேல்  ஒருவர்  பழி  போடுவதை விட்டுட்டு நம்ம எப்படி இருக்கிறோம்  என்பதை  சற்று சிந்தித்து பாருங்க” என்றாள்

“சீனு நீ  விளையாட்டில் முதல்  மாணவனாக இருக்கிறாய், கவின்  நீ  படிப்பினில்  முதல்  மாணவனாக உள்ளாய். இருவருக்கும் ஒவ்வொரு திறமையும் இருக்குது. படிப்பில் முதல் இடம் வரணும் என்ற  ஆசையும் உள்ளது, எதையும் முயற்சி செய்தா கண்டிப்பாக முடியும். உங்க  இரண்டு பேருக்கும்  பொறாமை இருக்க போய்  தான் தேவையில்லாத   கோபம்  சண்டைகள் வருது” என சுஜிதா அறிவுரை கூற, தவறை உணர்ந்து இருவரும் மன்னிப்பு கேட்டார்கள்

“சரி நேரமாச்சு, வகுப்புக்கு செல்லுங்கள்” என்றாள் 

இதையெல்லாம் பார்த்த ஹரி, கேள்வியாய் அப்பாவை பார்த்தான்

“டேய் மகனே, பொண்ணு எப்படி இருக்கறா? உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா?” எனக் கேட்க 

“அப்பா, நீங்க என்ன கேக்கறீங்க? எனக்கு ஒன்னும் புரியல, நாம எதுக்காக இங்க வந்திருக்கோம்?” என விழித்தான் ஹரிஹரன் 

“ஹரி, முதலில் உள்ளே  வா” என அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றார் 

“ஹரி, அப்பாவுக்கு வயதாகி கொண்டேபோகுது, உங்க அம்மா இருந்திருந்தால் எப்பவோ உனக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பாள். இந்நேரம்  பேரன், பேத்திகள் என  வீடே  கலகலப்பாக இருந்துருக்கும்

நீ  கிராமத்தில் உள்ள  பெண்ணை தான்  திருமணம் முடிப்பாய்  என  அன்று  சொன்ன  ஞாபகம் எனக்கு இருக்கு. உன்னை இங்க வரச் சொன்னதே சுஜிதாவை  திருமணன் செய்து வைக்கத் தான்,  அவள்  இந்த பள்ளியில்  நான்கு வருடங்களாக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்

அன்பு, பொறுமை, நிதானம், மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வது, என அனைத்து விஷயங்களிலும்  நல்ல  பெண்ணாக இருக்கிறாள். அவளை  உனக்கு திருமணம் முடித்து வைத்தால் உன்னுடைய வாழ்க்கை  சிறப்பாக இருக்கும். அவளுக்கு இந்த விஷயத்தை பத்தி இன்னும்  சொல்ல வில்லை, எதையுமே எதிர்பார்க்காத ஒரு  குணமுடையவள். 

இன்னிக்கு இன்டெர்னல் இன்ஸ்பெக்ஷன்னு வேற சொல்லிட்டேன், அதுக்காக தான் அனைத்து ஆசிரியர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய பதிலைச் சொல்லுடா”

“அப்பா, என்னுடைய கல்யாணம்  உங்க விருப்பம் தான், அதில்  எந்தவொரு  மாற்றமில்லை. ஆனால்  நானும்  அவளும்  ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கணும். அவளுடைய மனசில் என்ன இருக்கிறதோ, அவளுக்கு வரப் போகிற கணவனைப் பற்றி என்னவெல்லாம் யோசித்து வைத்திருப்பாளோ”

“இல்லடா ஹரி.. அவளுடைய மனசில் எந்தவொரு  காதலும் இல்லை, அவங்க அப்பாவிடம் விசாரித்தேன்”

“ஓ… அனைத்தையும் நன்கு விசாரித்து விட்டு என்னிடம் சம்மதம் கேட்குறீங்க? சரிங்கப்பா உங்க விருப்பமே என் விருப்பம்” என்றவன்  அரவம் உணர்ந்து பின்னால்  திரும்பி பார்க்க, சுஜிதா உள்ளே நுழைந்து கொண்டிருக்க கண்டான் 

“சார், இன்னிக்கு எல்லாமே நல்லபடியா முடிஞ்சது, இன்ஸ்பெக்ஷன் மட்டும் நிறைவடையவில்லை”

“இதோ என்னுடைய மகன் தான்  வரப் போகிறான் இன்ஸ்பெக்சன் செய்ய, மாணவர்களைத் தயார்படுத்துங்கள்” என உத்தரவிட, சுஜிதா ஹரிஹரனை  ஓரக்கண்ணால் பார்த்தபடியே சென்றாள்

அதை உணர்ந்தும் உணராதவன் போல் இருந்தான் ஹரிஹரன் 

சோமுராஜ் தன் மகனை ஒவ்வொரு  வகுப்பிற்கும்  அழைத்துச் சென்று  அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு வகுப்பிலும்  எத்தனை  மாணவர்கள்  இருக்கிறார்கள் என்பதை கணக்கெடுத்த ஹரிஹரன், ஒருவர் கூட விடுமுறை எடுக்கவில்லை என்பதை அறிந்து வியந்தான் 

அனைத்து வகுப்புகளுக்கும் சென்று  ,அங்குள்ள மாணவர், மாணவியர்களோடு கலந்துரையாடி, தணிக்கை இனிதே முடிந்த திருப்தியில் ஆபிஸ் அறைக்குள்  வந்து பெருமூச்சு விட்டபடி அமர்ந்தார் சோமராஜ் 

மகனை  பள்ளி  வளாகத்தைக் கவனிக்கச் சொல்லி விட்டு,  சுஜிதாவின்  தந்தைக்கு அழைத்தார் 

பாலகுமாரனின்  கைப்பேசி ஒலிக்க,அவர் மனைவி ஜெயா அழைப்பை எடுத்து, “ஹலோ, யாருங்க பேசுறது? அவரு  குளிச்சுட்டு இருக்கிறாரு” எனவும் 

“நான் உங்க பொண்ணு  பணிபுரிகின்ற பள்ளியின் தலைமையாசிரியர் பேசுறேன்  மா”

“ஓ.. சார், நீங்களா, சொல்லுங்க” என கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பாலகுமாரனும் “யாரும்மா?” என  வினவியபடி வர, விவரம் கூறி பேசியை அவரிடம் கொடுத்தாள் ஜெயா 

மகன் சம்மதம் சொன்ன விவரத்தை சோமராஜ் பகிர, மகிழ்ச்சியோடு பேசி  அழைப்பை  துண்டித்தார் சுஜிதாவின் தந்தை பாலகுமாரன் 

மீண்டும் அறைக்குள் வந்த மகனிடம், “நாளை உனக்கும் சுஜிதாவுக்கும் நிச்சயம்” எனக் கூறினார் 

அங்கு சுஜிதாவின் வீட்டில்…

“என்னங்க, அவரு  எதுக்கு போன்  செய்தார்,  ஏதாவது முக்கியமான விஷயமா?”

“ஏற்கனவே  சொன்ன  விஷயம்  தான் ஜெயா. நம்ம  பொண்ணை அவங்க  மகனுக்குக் கேட்டாரே, நான்  கூட  கொஞ்சம்  நாள்  போகட்டும்னு சொன்னேன். நீ கூட  நல்ல சம்பந்தம் வரும் போது ஏன் தட்டிக் கழிக்கனும்னு  கேட்டியே” 

“ஆமாங்க, ஞாபகம் இருக்கு. நம்ம  பொண்ணு ஜாதகத்தை கொண்டு வரச் சொன்னாருனு போய் கொடுத்துட்டு வந்தீங்களே. அவரு கூட ஜாதகத்தைப் பார்த்துட்டு எல்லா பொருத்தமும்  சரியாக உள்ளது என்றாரே. அவங்க  மகன்  வெளிநாட்டில் இருந்து வந்து விட்டாரா?”

“வந்துட்டாங்களாம்… இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணத்தை வச்சிடலாம்னு  சொல்றாரு”

“என்னங்க, திடீரென்று இப்படி சொன்னால்எப்படி? நம் சொந்தக்காரங்களுக்குச் சொல்லனும், அதுக்கு முன்ன சுஜிதாவிடம்  விஷயத்தைச் சொல்லணும்” என ஜெயா சொல்லிக் கொண்டிருந்த வேளையில் வீட்டுக்குள்  நுழைந்தாள் சுஜிதா

“என்னம்மா என்கிட்ட என்ன சொல்லணும்?” என கேட்டாள் 

“உன்  கல்யாணத்தைப் பத்தி தான்”

“அம்மா, என்னோட  கல்யாணத்தைப் பத்தி உங்களிடம் ஒரே  ஒரு விஷயம்  மட்டும் பகிர்ந்து கொள்ளனும்  என  ஆசைப்படுகிறேன்” எனவும், பாலகுமாரனும், ஜெயாவும் சுஜிதா என்ன சொல்ல போகிறாளோ என அதிர்ச்சியாய் பார்த்தனர் 

“என்னை கல்யாணம் செய்து கொள்பவர் என்னை விட  கொஞ்சம் அதிகமாக படிச்சுருக்கணும்” என்றாள் 

“ஓ.. அவ்வளவு தானா? நாங்க என்னவோ ஏதோனு பயந்துட்டோம்” என்றனர் 

“என்னம்மா… வேற  யாரையாவது காதலிக்கிறேனு  நினைச்சுட்டீங்களா?”

“அப்படியெல்லாம்  இல்லம்மா” எனச் சமாளித்தாள் ஜெயா

“அம்மா எனக்கு தெரியாதா, எல்லா பெற்றோர்களுக்கும்  கண்டிப்பா சின்ன  சந்தேகம் இருக்கும். நான் யாரையும்  லவ்  பண்ணல, நீங்க எந்த பையனை  காட்டுறீங்களோ, அந்த பையனை தான்  காதலிப்பேன்”  என  வெளிப்படையாக பேசினாள்

சுஜிதா சந்தோஷமாக பேசியதைக் கவனித்த பாலகுமாரன், “உனக்கு ஒரு வரன் வந்திருக்கும்மா, நாளைக்கே  நிச்சயம் பண்ணிக்கலாம்னு   வாக்குறுதி  கொடுத்துட்டேன்” எனவும் 

“என்னப்பா சொல்றீங்க? மாப்பிள்ளை யாரு? என்ன  படிச்சு முடிச்சு இருக்காங்க? நமக்கு சொந்தமா அந்நியமா?”

 “சொந்தம் இல்லை… ஆனா உனக்கு தெரிஞ்சவங்க தான்”

“எனக்கு தெரிஞ்சவங்களா, யாருப்பா?”

“உங்க பள்ளி தலைமையாசிரியரோட மகனுக்கு தான்  உன்னை  கேட்டாங்க”

சற்று  குழப்பமான சுஜிதா, “அவங்க மகனுக்கு என்னை  எப்படிப்பா? அவர் வெளிநாட்டில் இருந்து படிச்சுட்டு வந்துருக்காங்க, என்னை திருமணம்  செய்து கொள்வதற்கு எப்படி சம்மதித்தார்கள்?”

“அவங்க  அப்பாவின்  பேச்சை மதிக்கிறவன் மா, என்ன  சொன்னாலும்  கேட்பாராம். உங்க இருவருக்கும் திருமணம் முடிந்த பிறகு பள்ளியின்  நிர்வாகத்தை மகனிடம் ஒப்படைத்து விடுவாராம்”

அப்பா சொல்வதை கேட்டதும், சுஜிதாவின்  மனசில்  அவ்வளவு  சந்தோஷம். நம்ம  ஆசைப்பட்ட மாதிரியே நல்ல  படிச்ச மாப்பிள்ளை தான் என 

“நீ  போய் ஓய்வெடு சுஜி, நாளைக்கு நிச்சயதார்த்தம் என்ற நினைப்பு மட்டும் இருக்கட்டும்” என்றாள் ஜெயா

மறுநாள் நிச்சயதார்த்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில், சோமுராஜின்  வீட்டில் வேலை பார்க்கும் ஒருவர் வந்து,  “மாப்பிள்ளைக்கு இந்த  நிச்சயதார்த்தம் பிடிக்கவில்லை என்று  சொல்ல சொன்னார்கள்”  என தகவலைச் சொன்னதும், வீட்டுக்கு வந்திருந்த.விருந்தாளிகள் வாய்க்கு வந்ததை பேசி, சுஜிதாவின்  மனசைக் காயப்படுத்தி சென்றார்கள்

பாலகுமாரன் சோமுராஜிக்கு  போன். போட்டார், ஆனால் பதிலே இருக்கவில்லை 

“இப்படி நம்ம பொண்ணு வாழ்க்கையே கேள்விக் குறியாக்கி விட்டார்களே, இப்படி நம்மளை அவமானப்படுத்துவதற்காகவா நிச்சய  ஏற்பாடு பண்ணச் சொன்னார்கள்”  என கோபத்தில் கனன்றார் பாலகுமாரன்

‘நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்து  நின்னு போச்சே’ என்ற கவலையில் முடங்கிப் போனாள் சுஜிதா. வேலையை  விட்டு விட்டு வீட்டிலேயே முடங்கி கிடந்தாள்

அதில் இருந்து மீண்டு வர அவளுக்கு பல மாதங்கள் ஆனது 

இரண்டு வருடங்களுக்கு முன்னான அந்த பழைய நினைவில் இருந்து மீண்டு கண்களைத் திறந்த சுஜிதா, பெருமூச்சுடன் எழுந்தாள் 

மனம் பாரமாய் இருக்க, வேகமாக எழுந்தவளின்  எதிரே வந்து  நின்றான் ஒருவன்

போகும்  பாதையை அவன் மறைத்து நிற்க, எரிச்சலான  சுஜிதா “யாருடா நீ? உனக்கென்ன வேணும், வழியை விடு” என்றாள் 

“உங்கள் பெயர்  சுஜிதாவா?”

“ஆமாம் உனக்கு எப்படி தெரியும்?”

“இந்தாங்க” என அவள் கையில்  ஒரு  டைரியோடு ரோஜா  பூவை வைத்து  “உங்களிடம் இத  கொடுக்கச் சொன்னாங்க” என அவள் கையில் திணித்தான் 

“யாருடா கொடுத்தா?” என தூக்கி வீசினாள். அதிலிருந்து இவளுடைய  புகைப்படம்  வெளியே வந்து விழுந்தது

அதை எடுத்த சுஜிதா, அவனருகில் சென்று, “யாரு நீ? இத யாரு கொடுக்கச் சென்னா? என் போட்டோ உன்னிடம் எப்படி? இந்த டைரியில் ஒன்னுமே புரியவில்லையே” என கேள்விக் கணைகளை வீசினாள் 

“அத  நான்  சொல்றேன்” என  அவள் பின்னிருந்து ஒரு குரல் கேட்க, திரும்பி பார்த்தாள் 

அங்கு நின்றிருந்தவனைக் கண்டதும், “நீயா? உன்னை  என் வாழ்க்கையில் பார்க்கவே கூடாதுனு நினைச்சேன். நீ  எதுக்காக இங்க வந்த?” என  படபடவென  வார்த்தைகளை அள்ளிக் கொட்டினாள்

“நீ என்ன வேணும்னாலும்  திட்டிக்கோ, அத  பத்தி கவலையே இல்லை. நான்  சொல்றதை  கேட்டுட்டு அப்புறம் திட்டு” என்றான் ஹரிஹரன் 

அவன் பேசியதை மதியாமல் சுஜிதா விலகி நடக்க, “சுஜிதா” என வேறொரு குரல் 

திரும்பி பார்க்க, அங்கு வீல் சேரில் இருந்தார் சோம்ராஜ் 

அதிர்ச்சியடைந்த சுஜிதா, அவர் அருகில் சென்று,  “என்னாச்சு சார் உங்களுக்கு?” என பதட்டமாய் கேட்க

“உனக்கும் ஹரிக்கும் நிச்சயம் நடக்கறதுக்கு முந்தின நாள், மோதிரம் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தோம். வாங்கிட்டு வருகிற  வழியில் ஒரு விபத்து நடந்து போச்சும்மா. ஹரிக்கு அவ்வளவு காயமில்லை. எனக்கு தான்  பலத்த அடி

ஆக்ஸிடண்ட் விஷயம்  தெரிந்தால், கிராமத்தில் உள்ளவர்கள் உன்  ராசி சரியில்லைனு  வாய்க்கு வந்தபடி ஏதாவது பேசுவாங்கனு தான் பிடிக்கவில்லைனு பொய்யான தகவலை சொல்லி விட்டான் ஹரி. கிட்டத்தட்ட இரண்டு வருஷம் சுயநினைவை இழந்து இருந்தேன்” என சோமராஜ் நடந்ததை விவரித்து முடிக்க, மௌனமாய் அவளை பார்த்தான் ஹரிஹரன்  

தொடர்ந்து, “எங்களை மன்னிச்சுடும்மா, இப்ப என் மகனை  திருமணம்  செய்து கொள்வாயா? உனக்கு விருப்பமில்லை என்றால் நாங்க கிளம்பி விடுகிறோம்” என அவர் கூற 

“சார்,  உங்க மகனிடம் கொஞ்சம் தனியா பேசலாமா?” எனக் கேட்டாள் சுஜிதா 

“தாராளமா பேசுங்க” என்றவர், தன் உதவியாளரை அழைத்து தன்னை காருக்கு அழைத்துச் செல்லுமாறு பணித்தார் 

அவளுடைய முகத்தைப் பார்க்க முடியாமல் குனிந்து நின்றான் ஹரி 

“மிஸ்டர் ஹரி… இந்த டைரி நீங்க எழுதியது தானா?”

“ஆமா சுஜிதா, உன்னைப் பத்தி நினைக்காமல் இருந்ததே இல்லை. உன் நினைவு வரும் போதெல்லாம் மனதில் தோன்றுவதை எழுதுவேன்” என்றான் 

“ஓ… அப்ப நீங்களும் என்னை  கல்யாணம் செய்து கொள்ள  ஆசைப்படுறீங்க, அப்படியா?”

“உனக்கு இஷ்டமில்லைனா நான் கட்டாயப்படுத்த மாட்டேன்”

“ஹலோ… நான் அப்படி ஒண்ணும் சொல்லலியே” என கேலியாய் சிரித்தவள், “எம் மனசுல நீங்க மட்டும் தானே இருக்கீங்க. எப்ப அம்மாவும், அப்பாவும் நீங்க தான்  மாப்பிள்ளை எனச் சொன்னார்களோ, அன்றிலிருந்து நீங்கள் தான் என் மனதிலும். உங்களுக்கு என்னை  பிடிக்கவில்லை என்று நினைத்தேன், இப்போது புரிந்து விட்டது. கல்யாணம் பண்ணிக்கலாம், திரும்பவும் நிச்சயம் பண்ண வருவேன்னு சொல்லிடாதீங்க” என்றவள் புன்னகைக்க 

ஹரியும் அவளை  பார்த்து  புன்னகைத்தபடியே அருகில் வந்தான். பின் இருவரும் சேர்ந்து சோமராஜ் இருந்த காரின் அருகில் வந்தனர் 

“சார்… அப்பா அம்மா எப்படி சமாதானம் ஆகப் போறாங்கன்னு தெரியல” என சுஜிதா கூற 

“நீ  பதற்றபட வேண்டாம்மா, உங்க வீட்டுக்குப் போய்  உங்க அப்பாவிடம்  நடந்த விஷயத்தைச் சொல்லியாச்சு, அவங்களும் உன்னுடைய  பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ.. இன்னும்  என்னை  சார்.. சார்.. கூப்பிடுவதை முதலில் நிறுத்து” என்றார் உரிமையுடன் 

“சரிங்க மாமா” என உடனே சுஜிதா கூற 

“வெரி குட் மருமகளே” என சிரித்தார் சோமராஜ் 

ஹரியும், சுஜிதாவும் எந்தவொரு  எதிர்பார்ப்பு இல்லாமல் மறைத்து வைத்திருந்த காதல், கல்யாணத்தில் நிறைவடைந்தது. அனைவரும் மணமக்களை வாழ்த்தி மகிழ்ச்சியுற்றனர்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்ணுக்கு கண்ணாக (சிறுகதை) – ✍ ஜெ.அமர்நாத், கோவை

    விடியல் (சிறுகதை) – ✍ கௌசல்யா லட்சுமி, மலேசியா