மாதப் போட்டிக்கான பதிவு – நவம்பர் 2021
அன்று திங்கள்கிழமை, ஆழ்ந்த தூக்கத்திலிருந்து சட்டென்று விழித்தாள் ராகவி
பாட்டியின் சாம்பார் மனத்தை வாசனை பிடித்தபடியே, சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். அது மணி எட்டு எனக் காட்ட, ஆபீஸ் செல்ல தயாரானாள்
பாட்டியின் செல்ல பேத்தி ராகவி. அப்பா அம்மா இல்லை, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவள். அது அவர்களின் சொந்த வீடு, வீட்டு வாசலில் பாட்டியின் இட்லி கடை
அரை மணி நேரத்தில் தயாராகி வந்தவள் , “பாட்டி நேரமாயிடுச்சு, நாலு இட்லி கட்டிக் கொடு, ஆபீஸ்ல போய் சாப்பிட்டுக்கறேன்” என்று சொல்ல, பாட்டியும் இட்லியை கட்டிக் கொடுத்தாள்
“ராகவி தங்கம், மத்தியானம் சாப்பாட்டுக்கு வா. மொச்சை கருவாட்டு குழம்பு”
“சரி சரி வரேன்” என்று சொல்லி, தனது சைக்கிளை எடுத்து பறந்தாள்.
திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பேக்கிங் செக்ஷனில் ராகவிக்கு வேலை. ஆபீஸில் நுழைந்தவுடன் அட்டனன்ஸ் மிஷினில் தனது விரல் ரேகையை பதிவு செய்தாள்
“ஹாய் ராகவி” என்ற அவளது ஒரே மற்றும் ஆருயிர் தோழி பானுமதி பதிலுக்கு “ஹாய் டா பானு” என்றாள்
“என்னை இன்னைக்கி ஏழு மணிக்கு பொண்ணு பாக்க வராங்கடி”
“மாப்பிள்ளை எந்த ஊருடி பானு”
“கோயம்புத்தூரில் ஒரு ஃபேக்டரியில் ஏதோ வெல்டிங் வேலையாம். நான் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டனா, எங்கே உன்னை பாக்கறது. நீயும் கல்யாணம் பண்ணிக்கலாமேடி, வயது ஆகிட்டே போகுது”
“உனக்கு கல்யாணம் பிடிச்சிருந்தா நீ பண்ணிக்கோ, என் நிலைமை தெரிந்தும் இப்படி பேசிட்டு இருக்குற” என கோபமாய் பேசி பானுவின் வாயை அடைத்தாள் ராகவி
உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு வந்த ராகவி, பாட்டி வைத்த கருவாடு மொச்சைக் குழம்பை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவர்களது உறவுக்கார பெரியவர் வந்தார்
“அடடே சுப்பு வா, வீட்ல எல்லாரும் சௌக்கியமா?” என்று கேட்டு “முதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம்” என்று அவருக்கும் ஒரு இலையைப் போட்டாள்
ராகவி சாப்பிட்டு மீண்டும் வேலைக்கு போகும் போது “ஆபீஸுக்கு போறேன் சுப்பு மாமா” என்று சொல்லி கிளம்பினாள்
பாட்டியிடம் சுப்பு, “ராகவிக்கு வயசு ஆகி கொண்டே போகுது, உன் காலத்துக்குள்ள அவளுக்கு ஒரு நல்லதை செய்ய வேண்டாமா?” எனக் கேட்க
“அவளோட அம்மாவும் அப்பாவும் போய் சேர்ந்து இருபது வருஷங்கள் ஆச்சு, அந்த சம்பவம் மட்டும் ஆகாமல் இருந்திருந்தால் இன்னிக்கி ராகவி இப்படியா இருந்திருப்பாள்” என்றாள் பாட்டி அழுதபடி
ராகவி ஐந்து வயதாய் இருக்கும் போது, சக பள்ளி மாணவன் ஒருவன் தான் வைத்திருந்த பென்சிலால் ராகவியின் ஒரு கண்ணை குத்தி விட்டதால் அவளுக்கு ஒரு கண் பார்வை பறி போனது
நீண்ட சிகிச்சைக்குப் பின் சிறிது பார்வை கிடைத்தது. அதை வைத்து தான் சமாளித்து வருகிறாள். சைக்கிள் கூட ஓட்டுமளவு முன்னேறி இருந்தாலும், திருமணம் என வரும் போது, அதை மாப்பிள்ளை விட்டார் குறையாகத் தான் பார்த்தனர்
மாற்று கண் பொருத்தினால் 50 சதவீதத்திற்கு மேல் பார்வை கிடைக்க வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்கு நிறைய செலவு ஆகும் என அதை செய்ய முடியாமல் விட்டு விட்டனர்
“இதெல்லாம் ஒன்னுமில்லை, நாம் தான் நல்லதை எடுத்துக் கூறி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும்” என்று கூறி விடை பெற்றார் சுப்பு
ராகவி வேலை செய்யும் பக்கத்து கம்பெனியில், சூரஜ் என்ற வடமாநில இளைஞன் ஒரு வருடமாக வேலை செய்து கொண்டு இருக்கிறான். கம்பெனியில் அவனுக்கு தங்குமிடம் சாப்பாடு எல்லாம் கொடுத்திருந்தார்கள், ஆனாலும் காலை உணவிற்கு ராகவி பாட்டியின் கடையில் தான் சாப்பிடுவான்
பாட்டியின் கடைக்கு வருவதால், ராகவியை பலமுறை பார்த்து இருக்கிறான். அவனுடைய நண்பனும் ராகவியின் சினேகிதியுமான பானுவும் நண்பர்கள். ராகவியை திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாக அவன் நண்பன் மூலமாக பானுவிடம் தெரிவித்தான் சூரஜ்
ராகவி இல்லாத சமயத்தில் பாட்டியிடம் பானு, “ஏன் பாட்டி… எத்தனை நாளுக்குத் தான் ராகவிக்கு வாட்ச்மேன் வேலை பாப்ப?” என்று உரிமையுடன் கூற
“என்னடி பண்றது, கல்யாண பேச்சு எடுத்தாலே கோபப்படுறா, நீ தான் சொல்லிப் பாரேன்” என்றாள் பாட்டி
“அவளுக்கு ஒரு கண்ணு தெரியாததால இப்படி சொல்றளா என்னவோ… இதப் பாரு பாட்டி, எங்க பக்கத்து கம்பெனில ஒரு ஹிந்திக்கார பையன் ராகவியை கல்யாணம் பண்ணிக்க விரும்பறான். நானும் விசாரித்துட்டேன், பையன் நல்ல பையன் தான். ஒரு வருஷமா திருப்பூர்ல இருக்கான், கொஞ்சம் தமிழ் பேச வருது. அப்பா அம்மா இல்ல, அண்ணா அண்ணி தான் பாம்பேல இருக்காங்க. நம்மளை மாதிரி சாதாரணப்பட்ட குடும்பம் தான்” என்று சொல்லி முடிப்பதற்குள்
“பானு நீயே பேசி அவ மனச மாத்துடி” என்று கண்ணீருடன் கூறினாள் பாட்டி
அன்று ராகவியும் பானுவும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்க, “சூரஜுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, ஆம்புலன்ஸில் கொண்டு போயிருக்காங்க” என்ற தகவலை கூறினான் பானுவின் நண்பன்
உடனே பானு, “நீ வீட்டுக்கு போ ராகவி” என்று கூற
“யாரது சூரஜ்?” எனக் கேட்டாள்
“அது எல்லாம் அப்பறம் சொல்லுறேன்” என தனது நண்பனை கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள்
“சார் ஆக்சிடெண்ட்ல சூரஜ்னு ஒரு பையன்…”
“ஆமாம் அந்த பையனுக்கு நீங்க என்ன ஆகணும்?”
“பிரென்ட்”
“பையனை காப்பாற்ற முடியல ஸ்போட்லேயே அவுட்” என்று டாக்டர் சொல்ல, பானுவும் அவன் நண்பனும் மிகவும் வருந்தினார்
“அந்த பையனோட பேமிலி வரலியா?” என்று கேட்க
“அவங்க அண்ணா அண்ணி பாம்பேல இருக்காங்க” என்றாள் பானு
“இப்ப இது போலீஸ் கேஸ்மா, அந்த பையன் ஒர்க் பண்ற கம்பெனி ஓனரை உடனே இங்க வரச் சொல்லுங்க. சில பார்மலிடீஸ் எல்லாம் இருக்கு” என்றார் டாக்டர்
அதன்படி ஓனர் வந்தார், விவரம் கேட்டறிந்தார்.
டாக்டர் அவரிடம், “ஹெல்மெட் போட்டதால முகத்துல காயம் ஒன்னுமில்ல. பையனுக்கு ரொம்ப நல்ல மனசு, பர்ஸுல கண் தானத்திற்கான ஒப்புகை சீட்டு வைத்திருக்கிறான். அதன்படி அவன் கண்களை தானமாக எடுத்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.
கம்பெனி ஓனர் உணர்ச்சியில் கண் கலங்கினார், சரி என்று சொன்னார்
அதன்படி ‘சூரஜ்’ கண்கள், பானுவின் யோசனையில் ராகவிக்கு பொருத்தப்பட்டு, அவளுக்கு பார்வை கிடைத்தது
சூரஜ் அவன் கண்ணை கொடுத்து, ராகவியின் வாழ்வில் வெளிச்சம் பெற செய்தான்.
கடைசி வரை பானுவோ பாட்டியோ சூரஜ் அவளை விரும்பியதைப் பற்றி ராகவியிடம் தெரிவிக்கவில்லை. அது அவளுக்கு ஏதேனும் மன உளைச்சலை ஏற்படுத்துமோ என பயந்தவர்களாய் மௌனம் காத்தனர்
ராகவியுடன் வாழ நினைத்த சூரஜ், அவளின் கண்களாய் காலம் முழுதும் அவளுடேனே வாழ்வான் என, மனதை சமாதானம் செய்து கொண்டனர்
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
திரைக்கதை போல் இருந்தாலும் முடிவு நன்று.