“என்னங்க, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என வீட்டிற்குள் நுழையும் போதே தங்கமணி உற்சாகமாய் ஆரம்பிக்க
‘ஐய்யயோ என் பர்ஸுக்கு வந்த கேடு காலம் என்னவோ’ என பீதியுடன் பார்த்தார் ரங்கமணி
“என்னங்க நான் பேசிட்டே இருக்கேன். நீங்க இப்படி எதையோ பாத்து பயந்த மாதிரி முழிக்கறீங்க”
“நீ இருக்கறப்ப வேற எதை பாத்து நான் பயப்படப் போறேன் தங்கம்”
“என்ன கிண்டலா?” என தங்கமணி டென்ஷனாக
“சரி சரி, என்னமோ சொல்ல வந்தியே அதைச் சொல்லு”
“அது, என் பிரெண்ட் அகிலா இருக்கால்ல”
“யாரு? நம்ம கல்யாணத்துல ஒரு அம்பது ரூபா வால் கிளாக் ப்ரசண்ட் பண்ணி, அதுல நேரம் கூட பாக்க முடியாதபடி மொத்தமா மறைச்சு ‘பெஸ்ட் காம்ப்ளிமண்ட்ஸ் – அகிலா’னு ஒரு அடி நீளத்துக்கு எழுதி இருந்தாளே, அந்த அலட்டல் அகிலா தான”
“உங்களுக்கு என் பிரண்ட்ஸை பாத்தா எப்பவும் இளப்பம் தான்” என முகத்தை திருப்பினார் தங்ஸ்
“சரி சரி, அவளுக்கு என்ன இப்ப? அதைச் சொல்லு”
“அவ புதுசா கம்ப்யூட்டர் ட்ரெயினிங் சென்டர் ஆரம்பிச்சுருக்கா” என தங்கமணி பெருமையாய் கூற
“அடக்கொடுமையே, கம்பியூட்டருக்கு வந்த கஷ்டத்த பாரேன்” என கேலி செய்தார் ரங்ஸ், பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்
அதைக் கேட்டு கன்னா பின்னா டென்ஷன் ஆன தங்ஸ், “இப்ப நான் சொல்றத முழுசா கேக்கப் போறீங்களா இல்லையா?”
“சொல்லு சொல்லு, கேக்கலைனா மட்டும் விடவா போற?” என்றார் அனுபவ அறிவுடன்
“அது அந்த கம்ப்யூட்டர் சென்ட்டர்ல ஒரு மாச கிராஷ் கோர்ஸ் ஒண்ணு இருக்காம். இந்த ஆன்லைன்ல எழுதறது, படிக்கறது, வீடியோ போடறது, ஷாப்பிங், வெப் டிசைன் பண்றது இதெல்லாம் சொல்லித் தர்றாங்களாம். மத்தவங்களுக்குன்னா பீஸ் அஞ்சாயிரம் ரூபா, நான் அவ கிளோஸ் பிரெண்டுங்கறதால, ஜஸ்ட் 4999 தான். நம்ம அபார்ட்மெண்ட் ஏஞ்சல் கிளப்ல இருந்து கூட என் பிரெண்ட்ஸ் எல்லாம் சேரப் போறாங்க. நானும் சேரலாம்னு இருக்கேன்” என தங்கமணி முகமெல்லாம் சிரிப்பாய் தன் திட்டத்தைக் கூற
“அடக் கொடுமையே, நான் நெனச்ச மாதிரியே என் பர்ஸுக்கு வேட்டு வந்துடுச்சே” என டென்ஷனாய் ரங்கமணி தலையில் அடித்துக் கொள்ள
“ஏங்க தல வலிக்குதா?” என அக்கறையாய் கேட்டார் தங்கமணி
“அதான் கூடவே இருக்கே” என ரங்ஸ் முணுமுணுத்தது, நல்ல வேலையாய் தங்ஸ் காதில் விழவில்லை
“என்ன சொன்னீங்க?” எனவும்
“ஒண்ணுமில்ல” என சமாளித்தவர், “அந்த கிராஷ் கோர்ஸ் எல்லாம் தண்டம்மா. அத…” என ரங்ஸ் தான் சொல்ல வந்ததை முடிக்கும் முன்
“அப்பவே நெனச்சேன் இப்படித் தான் சொல்லுவீங்கனு. நான் படிச்சு விசியம் தெரிஞ்சுக்கிட்டு, ஆன்லைன்ல பிளாக், யூடியூப் சேனல், பேஸ்புக் பேஜ் எல்லாம் ஆரம்பிச்சு, பேமஸ் ஆய்டுவேன்னு உங்களுக்கு பொறாமை. அதான் இப்படி ஆரம்பிக்கும் போதே அபசகுனமா பேசறீங்க?” என டென்ஷன் ஆனார் தங்கமணி
“ஐயோ அதில்ல தங்கம், அவ்ளோ காசு அதுக்கு தண்டம், அதுக்கு நானே உனக்கு…” வழக்கம் போல் அவர் சொல்ல வந்ததை முழுதாய் பேச விடவில்லை தங்கமணி
“ஆமா, நான் படிக்கணும்னா அது தண்டம். நீங்க மட்டும் போன வருஷம்… அதென்னவோ AP… ஆங்…SAPயோ என்ன எழவோ? அதைப் படிக்க ரெண்டு லட்சம் தண்டம் அழுதப்ப நான் ஏன்னு கேட்டனா?” என மனோகரா கண்ணாம்பாவே தோற்கும் விதமாய் நீள வசனம் பேசி, மூச்சு வாங்க நின்றார் தங்கமணி
“அடிப்பாவி, அது படிக்காம விட்டிருந்தா, இந்நேரம் வேலைய விட்டுத் தூக்கியிருப்பான் தெரியுமா”
“ஓ… நான் வீட்டுல தண்டமா இருக்கேன். எனக்கு எதுக்கு செலவு பண்ணனும்னு சொல்லாம சொல்றீங்க இல்ல?” என தங்ஸ் தனது கடைசி அஸ்திரத்தை பிரயோகித்தார்
“ச்சே ச்சே, அப்படி இல்ல தங்கம். கிராஷ் கோர்ஸ்ல பெருசா ஒண்ணும் இருக்காது. நானே உனக்கு சொல்லி தரேன்னு சொல்ல வந்தேன், சரியா?” என தாஜா செய்ய முயன்றார்
தாஜாவெல்லாம் தங்கமணியிடம் பலிக்குமா? இறுதியாக, தங்கமணி கம்ப்யூட்டர் கோர்ஸ் சேருவதென ஒரு மனதாய் (!!!) முடிவாகியது
தங்கமணி கம்ப்யூட்டர் க்ளாஸ் சேர்ந்து, ஒரு வாரமாகிய நிலையில் ஒரு நாள் காலை நேரம்
குழந்தையை பள்ளிக்கு தயார் செய்ய, ரங்கமணி அலுவலகம் கிளம்ப என, வீடே இரண்டுபட்டுக் கொண்டிருந்தது
“என்னங்க அனுவுக்கு யூனிபார்ம் போட்டு விடுங்க, ஸ்கூல் பஸ் வந்துடும். நான் கிரைண்டர்ல மாவு எடுத்துட்டு இருக்கேன்” என தங்கமணி கூற
“கிரைண்டர் எல்லாம் அப்புறமா பகல்ல போட்டா என்னவாம்?” என எரிச்சலானார் ரங்கமணி
“பகல்ல பாதி நேரம் கரண்ட் இருக்கறதில்ல. ஜெனரேட்டர் வாங்கி குடுங்க, நான் பகல்லயே போட்டுக்கறேன்”
“எது சொன்னாலும் ஒரு செலவு சொல்லி என் வாய மூட கத்து வெச்சுருக்க”
“ஹ்க்கும்… உண்மைய தான சொன்னேன், சரி சரி சீக்கரம் பாப்பாவுக்கு யூனிபார்ம் போடுங்க” என்றார் தங்கமணி
அதற்குள் செல்போன் அழைக்க, “என்னங்க, அப்படியே போன் எடுத்து ஸ்பீக்கர்ல போட்டு பேசிட்டே, பாப்பாவுக்கு யூனிபார்ம் போடுங்க” என அடுத்த ஆர்டர் வந்தது
“ஏன் நீ மாவு எடுத்துட்டே அதை செய்யேன்?” என எரிச்சலானார் ரங்கமணி
“அடிக்கறது உங்க போன், அது கூட தெரில. இந்த அழகுல ஆபீஸ்ல உங்களுக்கு கீழ ஒரு டீம் வேற… என்னத்த டேமேஜரோ என்னமோ…” என்ற தங்கமணியின் கேலியில் கடுப்பான ரங்ஸ்
“ச்சே… ஒரு மனுஷன் எத்தன வேல தான் செய்யறது ஒரே நேரத்துல” என அலுத்துக் கொண்டே செல்போனை எடுத்துப் பேசினார் ரங்கமணி
சற்று நேரத்தில் தங்கமணியிடம் ஓடி வந்த அவள் செல்ல மகள் அனு, “மம்மி, யூனிபார்ம டாடி திருப்பி போட்டுட்டார்” என அழவும்
“என்னங்க இது? டிரஸ் உள்பக்கம் வெளில வர்றாப்ல போட்டுருக்கீங்க, இது கூட சொல்லி தரணுமா உங்களுக்கு இந்த வயசுல” என டென்ஷன் ஆனார் தங்ஸ்
“போன் பேசிட்டே போட்டதுல ஏதோ மாறிடுச்சு, ஒரு மனுஷன் எத்தனை தான் செய்யறது” என ரங்கமணி கூற
“அகிலா சொன்னாப்ல நீங்கெல்லாம் DOS based system தான் இன்னும்” என சத்தமாய் சிரித்தாள் தங்கமணி
“என்னது? DOS based system ஆ? என்ன ஒளர்ற”
“நான் ஒண்ணும் ஒளரல, அது… ஹா ஹா ஹ” என தங்கமணி மீண்டும் அடக்க மாட்டாமல் சிரிக்க
“ஒண்ணு சொல்லிட்டு சிரி, இல்லேனா ரூம்குள்ள போய் ஒரு அரைமணி நேரம் சிரிச்சு முடிச்சுட்டு வந்து சொல்லு”என முறைத்தார் ரங்கமணி
“நேத்து அகிலா சொன்னது எவ்ளோ கரெக்ட்னு இன்னிக்கி நீங்க நிரூபிச்சுட்டீங்க, அதான் சிரிப்ப அடக்க முடியல”
“அந்த அலட்டல்காரி என்ன சொன்னா என்னை பத்தி? அதை கேட்டு நீ சிரிக்க வேற செய்ற, என்னமோ DOS based systemனு கொழப்பற”
“அகிலா சொன்னா… ஆண்கள் எல்லாம் DOS based system தானாம். அதாவது DOS ஒரு நேரத்துல ஒரு ரிக்வஸ்ட் தான் ப்ரோசஸ் பண்ணுமாம். அது போல உங்களால மல்டி-டாஸ்கிங் செய்யவே முடியாதாம். நாங்க லேடீஸ் எல்லாம் அட்வான்ஸ்ட் சிஸ்டம் விண்டோஸ் மாதிரியாம். ஒரே நேரத்துல எத்தன டாஸ்க் வேணும்னாலும் செய்வோம்னு சொன்னா” என மீண்டும் சிரிக்க
“அடிப்பாவிங்களா, கம்ப்யூட்டர் கிளாஸ் போறோம்னு, அங்கயும் எங்க மண்டைய தான் உருட்டரீங்களா?” என கடுப்பானார் ரங்கமணி
“அவ சொன்னது சரி தான? போன் பேசிட்டே யூனிபார்ம் கரெக்ட்டா போட முடியலியே உங்களால” என தங்கமணி மடக்க
“இதை தான் வம்பை விலைக்கு வாங்கறதுனு சொல்றது போல. கம்ப்யூட்டர் கிளாஸுக்கு காசு கட்றதுமில்லாம, புதுசு புதுசா நம்மள மடக்கரதுக்கு வேற கத்துட்டு வராங்க, ஹும்” அப்படின்னு சொல்லிட்டு (மனசுக்குள்ள தான்), அதுக்கு மேல அங்க நின்னா வம்பாய்டும்னு ரங்கமணி எஸ்கேப்…
சரி நாமளும் எஸ்கேப் ஆகலாம் வாங்க, ரங்கமணி அடுத்த பல்ப் வாங்கும் போது, மறுபடி வந்து ஜாலியா வேடிக்கை பாக்கலாம் சரியா😆😁😃
என்றும் வம்புடன்,
சஹானா கோவிந்த் 🤣
ஹாஹாஹாஹா, நம்மவருக்கும் எனக்கும் நடந்த பேச்சு வார்த்தையை ஒட்டுக் கேட்டு எழுதி இருப்பீங்க போலவே! இஃகி,இஃகி,இஃகி!
ஹா ஹா ஹா… வீட்டுக்கு வீடு வாசப்படி